நூற்றாண்டு பழமைவாய்ந்த சிதிலமடைந்த கட்டிடத்தைப் பற்றிய சில குறிப்புகள்

இலட்சுமண பிரகாசம்

மாநகரத்தின் இரைச்சல்களுக்கு மத்தியில் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த கைவிடப்பட்டு சிதிலமடைந்த ஆங்கிலேயரால் கட்டப்பட்ட கட்டிடத்தின் உச்சியில் அரச மரத்தின் கிளைகள் தளிரிலைகளுடன் காற்றில் அசைந்தும் அசையாதும் வளர்ந்திருந்தன.

கட்டிடத்தின் உள்பகுதியின் மூலையில் இடது கண்ணிழந்த மெலிந்து எழும்புகள் தெரிய சூம்பிய முலைக் காம்புகளுடன் குளிருக்கு அடக்கமாக வாலை சுருட்டி படுத்துக்கொண்டிருந்த நாயை விரட்டிவிட்டு தன்னிடத்தை தேர்வுசெய்து கொண்டான்.

நெடுநாள் உறக்கமற்றுச் சிவந்த அவனது கண்கள் தூக்கத்திற்கு ஆட்பட்டு ‘இமைகளை மூடிக்கொள், தூங்கு… தூங்கு.. நன்றாகத் தூங்கு என் செல்வமே’ என கேட்பது போலிருந்தது. எங்கிருந்து வருகிறான் என்று தெரியவில்லை. ஊரும் பெயரும் அற்றவன் நகரத்து வீதியில் மூத்திரம் பெய்து தனது கோடுகளில்லா பாதைகளில்லா வழிப்போக்கு வாழ்வை வாழ்கிறவன். சிதிலமடைந்த கட்டிடத்தின் சுவர்களின் ஓட்டை வழியே நுழைந்த காற்றின் சிலிர்ப்பு வழிப்போக்கு வாழ்வு வாழ்கிறவனை கட்டிடத்தின் தரை மடியிலேந்தி தாலாட்டிக் கொண்டிருந்தது.

பனிவிலகாத அதிகாலை தெளிந்து கொண்டிருந்த பொழுது வீதிகளை தூய்மைப்படுத்தும் தூய்மைப் பணியாள் பெண் தனது தூய்மைப் பணியை செய்துகொண்டிருந்தாள். நூற்றாண்டு பழமைவாய்ந்த சிதிலமடைந்த கட்டிடத்தை ஒட்டிச் செல்லும் வீதியில் மரங்களுதிர்த்த இலைதழைகளைக் கூட்டி அள்ளி குப்பைகளை சேகரித்துச் செல்லும் வாகனத்தில் கொட்டிவிட்டுச் செல்வதற்கு முன்னர் எப்போதும் தான் வழிபடும் பைரவ கடவுளுக்காக வீதியில் அலைந்து திரியும் வீடில்லா நாய்களுக்கு பிஸ்கோத்துகளை போட்டுவிட்டு தனது தூய்மைப் பணிணை மேற்கொள்வதை அன்றாட வழக்காமாகக் கொண்டிருந்தவள்.

‘தோ தோ.. ச்சூ.. தோ தோ..’ வென கையில் பிஸ்கோத்துகளுடன் கட்டிடத்தின் மூலையில் வாலை சுருட்டிப் படுத்திருக்கும் இடது கண்ணிழந்த நாயை அழைத்தாள். அவளது ஒரு குரலுக்கு வாலை ஆட்டியபடி வந்து அவளது மேனியை முகர்ந்து ஏதோ சொல்ல வருவது போல குழைவான முனகல் ஓசையை எழுப்பியபடி வந்து நிற்கும் முலைசூம்பிய காம்புகளைக் கொண்ட மெலிந்த எழும்பும் தோலுமான தோற்றம் கொண்ட அந்நாய் இரண்டு மூன்று கூப்பிட்ட குரலுக்கும் வந்து எட்டிப் பார்க்கவில்லை. அது தன்னிடத்திற்கு அத்துமீறி நுழைந்தவனை எதிர்க்கத் துணிவின்றி பம்மிப் பதுங்கி வெளியில் ஓடியது.

முலை சூம்பிய நாயின் இடத்தில் சடைபிடித்த தலைமுடியுடன் மழிக்கப்படாத அழுக்கேறிய அடர்ந்த தாடியும் கட்டுமீசையுடன் நாற்றமெடுக்கும் நைந்துபோய்க் கிழிந்த சட்டையுடனும் கட்டிடத்தின் மூலையில் கருத்த நெடிய ஓருருவம் கல்லென படுத்திருப்பது அவளுடைய பார்வைக்குத் தெரிந்தது. இது போன்று எத்தனையோ மனிதர்களை நகரத்து வீதிகளில் அவள் எதிர்கொள்வதும் அவர்களுடைய கைவிடப்பட்ட நிலையையும் தூய்மைப் பணிப்பென் அறிந்தவள் தான்.

அழுக்கேறிய நெடிய உருவத்தை நெருங்கி,

‘இந்தாப்பா….’

‘……………’

‘ஏய்! இந்தா …’

‘…………’

எவ்வித அசைவற்றும் கிடந்த கருத்த அந்நெடிய உருவம் காடுகளிலிருந்து வெளியேறிய தெய்வமோ பேயோ பிசாசோ வென அவள் சற்றுத் தடுமாறி அச்சத்தோடு அவனை உற்றுநோக்கினாள்.

அவளுடைய மெல்லிய குரலுக்கு செவிசாய்க்காத அழுக்கேறிய அந்நெடிய உருவம் அசைவற்றுக் கிடப்பது போலிருந்தது. மூச்சு இருக்கிறதாவென சந்தேகமெழ, அவனிடமிருந்து எழுந்த நெடுநாள் உடையில் அப்பிக் கிடந்த நாற்றம் அவனை நெருங்கவிடமால் வீச்சமாய் இருந்தது.

சற்றே பாதுகாப்பாக எட்டி நின்று,

‘யாரப்பா?’  இம்முறை குரலை சற்று தடித்துக் கொண்டு அவனை எழுப்ப முயற்சித்தாள்.

பூனை கண்விழித்து உச்சி வானத்தைப் பார்ப்பது போல கட்டிடத்தின் ஓட்டை வழியே வந்து செல்லும் வெளிச்சத்தைப் பார்த்தவாறு எழுந்து அமர முயற்சித்தான். அவனருகே நாவல் பழமேனியை ஒத்த நெற்றியில் பொட்டிட்டு காளியென தோற்றத்தில் உதரத்திலிருந்தெழும் பயபக்தி போல அவளுடைய தோற்றம் அவனுக்குள் தோன்றி மறைந்தது வெளிச்சம் கூசும் கண்களுக்கு.

இதற்கு முன்பு ஏதோ ஒரு ஊரின் காட்டுத்தெய்வங்கள் கற்சிலைகளாக வரிசையாக இருக்கும் அரசமரத்தடியில் தன் வசிப்பிடத்தைக் கொண்டிருந்தான். எங்கும் சேர்ந்தார் போல் மூன்று நாட்களுக்கு அல்லது ஐந்து நாட்களுக்கு மேல் தங்கியது கிடையாது.

கிராமங்களிலும், சிறுநகரங்களிலும் கைவிடப்பட்ட இடமோ அல்லது பேருந்து நிலையங்களின் பிளாட்பாரங்களின் பராமரிப்பற்ற ஒதுக்குப் புறமான குப்பைகள் தேங்கிய இடத்தை தனக்கென தேர்ந்துகொண்டு தனது வழிப்போக்கு வாழ்வை வாழ்கிறவன்.

இதற்கு முன்பு தனது வசிப்பிடத்தை நெடுஞ்சாலைத் துறை சாலைவிரிவாக்கத்திற்கு எடுத்துக்கொள்ள அங்கிருந்து துறத்தப்பட்டவன் போல் கிராமங்களை விழுங்கி எழும் நெடுசாலை வழியே சுற்றித் திரிந்தவன் நகரத்தின் கைவிடப்பட்ட நூற்றாண்டு பழமையான சிதிலமடைந்த ஆங்கிலேயர்களின் கட்டிடம் அடைக்கலம் புகுமிடமாக அவனை எவ்வித அதிகார எதிர்ப்பின்றி வரவேற்றது

எப்போது பசியாறினான் என்று தெரியாது. யாராவது வருவோர் போவோர் பாதசாரிகள் கொடுக்கும் உணவுப் பொட்டலங்கள் கிடைத்தால் கும்பி முழுதும் பரவியிருக்கும் பசி கொஞ்சம் தீரும்.

தூய்மைப் பணிப் பெண்ணின் குரலை பசியால் கேட்கும் திறன் மட்டுப் போன காதுகள் கிரகிக்கத் தயாராவது அவன் தலைசொறிந்தவாறு காதுகளையும், முகத்தையும் கைகளால் துடைத்துக் கொள்வதிலிருந்து அவள், அவன் பாதி சுயநினைவோடு இருப்பதாகத் தோன்றியதை அவளது உணர்வு நரம்புகள் உறுதிசெய்து கொண்டன.

ஒரு கணம் அவனை தன் பார்வையால் அவதானித்தாள். சடைசடையாக வளர்ந்த தலைமுடியும், மழிக்கப்படாத கட்டுகட்டாக வளர்ந்த அடர் மீசையும் தாடியும், புழுதியும் சாக்கடை நாற்றத்துடன் இரத்தச் சிவப்பென பொங்கி வழிவது போலான கண்களும் முதலில் அவளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. பிறகு அவன் தன்னளவில் ஏதோவொரு உலகத்தில் எல்லோராலும் கைவிடப்பட்ட பிறழ்மனநிலையில் வாழும் உயிரென அச்சம் நீங்கியவளாய் நெஞ்சில் பூத்துப் பூத்து எழும் கரிசனையோடு அவனை நெருங்கினாள்.

தலையை சொறிந்த படி எழுந்து அமர்ந்தவனிடம்,

“ பசிக்கு தா”

“………..”

“எதாவது சாப்டுறியா”

“…….”

“எங்கிருந்து வர”

“……….”

அவளுடைய கனிவான சொற்களுக்கு அவனிடமிருந்து உயிர்த்திருப்பதான உணர்வுகள் சிவந்த பார்வையை தலையை கட்டிடத்தின் உச்சியை நோக்கி நிலைநிறுத்தி இருப்பதிலிருந்து தெரிந்து கொண்டாள்.

மீண்டும் பசிக்குதாவென சைகையில் கேட்டுவிட்டுத் தன்னிடமிருந்த பிஸ்கோத்துகளையும், தன்னிடமிருந்த அரைகுறையான தண்ணீர் பாட்டிலையும் வைத்துவிட்டு அவனுடைய கண்ணசைவை கவனித்துவிட்டு மீண்டும் சைகைமொழியால் சாப்பிடுவென சொல்லிவிட்டு “யாரோ எவரோ?”வென மனசுக்குள் எண்ணிக் கொண்டு வழக்கமான தன் நகரத்தை தூய்மை செய்யும் பணிக்கு சிதிலமடைந்திருந்த அக்கட்டிடத்தை விட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள். அப்போதும் அவள் கண்கள் சூம்பிய முலைகளையுடை இடது கண்ணிழந்த நாயை வீதியின் கடைகோடி வரை தேடும். அது எங்கே சென்றிருக்கும்? நகரத்து சாக்கடைகளில் கொட்டப்பட்ட குப்பைகளின் ஈரத்திலிருந்து முடிச்சு போடப்பட்ட உணவு காகிதப் பொட்டலங்களை கிளறி முகர்ந்து கொண்டிருக்கும். ஏதாவது கிடைக்குமாவென.

                      ***

அன்றைய காலையில் தொண்டு நிறுவனமொன்றின் சார்பில் ஒரு நபர் வீடில்லா அநாதைகளுக்காகவும் வீதியில் வசிப்போருக்கும் காலைவேளையில் உணவு தந்துவிட்டுச் செல்லும் நபர் தூய்மைப் பணிப் பெண்ணின் மூலம் தகவல் தெரியவர நூற்றாண்டு பழமைவாய்ந்த சிதிலமடைந்த கட்டிடத்தின் மூலையில் ஈக்களுக்கும், எறும்புகளுக்கும் மத்தியில் நகரவாசிகள் மூத்திரம் பெய்துவிட்டுப் போகும் நாற்றங்களின் கெட்ட நெடியையும் தாண்டி கட்டிடத்தின் மூலையில் படுத்துக்கிடந்தவனின் அருகில் உணவுப் பொட்டலத்தை வைத்துவிட்டுச் சென்றார். அப்போது அவன் அருகே ஒரு சரசரத்து ஊர்ந்து செல்லும் நஞ்சில்லா குட்டி பாம்பொன்று கடந்து சென்றது.

நூற்றாண்டு பழமைவாய்ந்த கட்டிடம் இரவு வேளைகளில் கொடிய நஞ்சு உள்ள பூச்சிப் பொட்டுகளும் பிற உயிர்களும், இரவாடிகளும் அடைக்கலம் தேடி வரும் நாய்களுக்கும் உரியதாக மாறியிருந்த போதுதான் வழிப்போக்கன் தன் நடை சோர்ந்தது போன்ற உணர்வில் பிற உயிர்களைப் போல அக்கட்டிடத்திற்குள் அடைக்கலமாக நுழைந்தான்.

மனிதர்கள் வாசனை அவனுக்கு அலுத்துப் போய்விட்டது. முதல் நாளிலிருந்தே அப்பழைய கட்டிடத்தில் இருந்து எழும் ஓங் ஓங் ஓங்…. என்ற ஓசை அவன் காதுகளை நிரப்பியபடி இருந்ததை பற்றி அவன் மனவோட்டத்தில் இருள்கடலுள் துடுப்பில்லா தோணியொன்று மிதப்பது போல இருந்தது. பறவைகளும், நாய்களும் அவற்றின் உலகங்களும் அவனுக்கு தேவையென்பதைப் போல அவன் அவைகளோடு அக்கட்டிடத்தில் வாழத் தொடங்கினான். சிதிலமடைந்த கட்டித்தின் தூண்களில் சுவர்களில் உள்ள கிறுக்கல்கள் கோடுகள் அங்கு அவ்வப்போது யாரோ சிலரால் அது பயன்படுத்தப்படுவதை அக்கோடுகளும் கிறுக்கல்களும் காட்டின.

தூய்மைப் பணிப்பெண் தன்சுழற்சி வருகிற நாளில் அப்பழைய கட்டிடத்தில் படுத்துறங்கும் வழிப்போக்கனின் கைகளுக்கருகே பிஸ்கோத்துகளை வைத்துவிட்டுச் செல்வதை அவன் தனக்குப் பசியெடுக்கும் பொழுது தனக்கு முன் அப்பழைய கட்டிடத்தில் அடைக்கலம் புகுந்த இடது கண்ணிழந்த முலைசூம்பிய நாய்க்கு இரண்டு துண்டுகளை போட்டுவிட்டு அது தின்பதை எவ்விதச் சலனமுமின்றி வெறித்தபடி தானும் சில துண்டங்களை வாயில் போட்டுக் கொள்வான். அன்று அவன் தனக்கு ஒரு துண்டுகளையும் வாயில் போட்டுக் கொள்ளாமல் முழு பிஸ்கோத்து பொட்டலங்களையும் கொட்டிவிட்டு அது தின்கிற வரையில் பார்த்துக் கொண்டிருப்பதிலே அவனுடைய நேரம் கழிந்தது.

கடும் பகல்பொழுதில் பாழடைந்த கட்டிடத்தின் துளைகள் வழியே வெயில் இறங்கி நடனமிடும் அப்பொழுதில் இணை சேர்ந்து பிரியமுடியாமல் தவித்த நாய்களின் புணர்ச்சி ஓசை எழுப்ப காதுக்குள் பெரிய ஈக்களின் சத்தம் எழ தூக்கம் கலைந்தவன் எழுந்து நாய்களின் புணர்ச்சி நிலையை அழுக்கேறிய பற்கள் தெரிய அவற்றைப் பாரத்தபடி நாயைப் போலவே தன் உறுப்பசைவு குறியை அவைகளுக்குக் காட்டிச் சிரித்தபடி கீழே குனிந்தவன் கையில் கிடைத்த சிறுசிறு கற்களைப் பொறுக்கி அவற்றின் மீது எறிந்தான். அவனுடைய கல்லெறிதலில் கொலைவெறி கூடியிருந்தது. அடிபட்ட நாய்களின் உடலில் காயம்பட்டு புணர்ச்சிக் குறிகளை விலக்கிக் கொண்டு அவைகள் கம்மலோசையோடு எங்கோ ஓடிப் பதுங்கி மறைந்தன.

அன்றைய இரவில் இடது கண்ணிழந்த முலைசூம்பிய நாயை அவனது கண்கள் தேடின. அவனிடம் காலையில் தொண்டு நிறுவன ஊழியர் வைத்துவிட்டுச் சென்ற உணவுப் பொட்டலம் பிரிக்கப்படாமல் இருந்தது. இடது கண்ணிழந்த நாயின் தேவைக்காக அவன் எடுத்து வைத்திருக்க வேண்டும்.

 அருகிலிருக்கும் செங்கல் துண்டை எடுத்து சுவரின் பக்கங்களில் ஆண் பெண் இணை சேர்க்கைக் குறிகளை வரைந்துவிட்டு அதனருகே குத்துக்காலிட்டபடி அமர்ந்த நிலையில் பழைய கட்டிடத்தை கடந்து வரவும் போகவுமாய் இருந்த பெண்களை அவர்களது முலைகளை அவனது கண்கள் உற்றுப் பார்த்த்ததில் புணர்ச்சியில் பரவசம் அடைந்ததைப் போல எல்லா பெண்களையும் நோக்கிப் புரியாத சிரிப்பொன்றை மஞ்சள் படிவுகளான பற்களைக் காட்டிக் கொண்டிருந்தான்.

சிதிலமடைந்த கட்டிடத்தின் பின்பகுதியில் எழும் மனிதர்களின் சத்தங்களையும்  இரண்டு உடல்கள் நின்ற கோலத்தில் அவசரத்திற்கு புணர்வதை அவன் பார்க்க நேர்ந்த பின்பு அவன் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது.

அன்றிலிருந்து அவனுக்கு ஆண்கள் பெண்களின் உலகமும் அவர்களின் அன்றாட நடவடிக்கைகளும் விநோதமான ஒன்றாகவே அவனுக்குள் படிந்து போனது. வீதியில் அலையும் நாய்கள் மேற்கொள்ளும் புணர்ச்சியை பார்க்கிற பொழுதில் கல்லெறிந்து விரட்டுவதும் அவைகளை துன்புறுத்துவதிலும் சுவரில் தான் வரைந்து வைத்த ஆண் பெண் குறிகளின் மீது மூத்திரம் பெய்தும் தனது ஆத்திரத்தை தணித்துக் கொள்ளத் தொடங்கினான்.

                 ***

இப்போதெல்லாம் உறக்கமே வருவதில்லை.

இரவுநேரங்களில் நூற்றாண்டு பழமையான கட்டிடம் உயிர்பெற்று இயங்குவதை உருவமில்லா மனிதர்களின் ஓசைகள் அரசு எந்திரமொன்றின் சுழலலும் அவன் காதுகளில் விழுந்து அவனை அங்கிருந்து துரத்த முயன்று பெரும் அதிகாரக் குரல்களை எழுப்பி அவனை மருளச்செய்யும்.

வெயிலையும், மழையையும், பறவைகளையும் அதன் கீச்சொலிகளையும், தன்னோடு பாழடைந்த நூற்றாண்டுகள் கடந்த கட்டிடத்தின் மூலையின் ஒரு பகுதியைப் பகிர்ந்து கொள்ளும் இடது கண்ணிழந்த முலை சூம்பிய நாயோடு விளையாடுவதற்கு அவன் பழகிக் கொண்டான். இடது கண்ணிழந்த நாய் வழிப்போக்கனின் உடல் வாசனையை முகர்ந்து பார்த்து அவனோடு உறவாடியும் அவனது மென்மையான ஸ்பரிசத்திற்கும் அவன் காலடியருகே தலை வைத்து சாலையை வெறுமனே பார்த்தபடி படுத்திருக்க அதற்கு பழகிவிட்டது.

அதிகாலைப் பொழுதில் நகரத்தை தூய்மை செய்யும் பெண்ணை வழிப்போக்கன் பிஸ்கோத்துகளுக்காக எதிர்பார்த்த நாளன்று மாநகராட்சி நிர்வாகம் தெருவில் சுற்றித் திரியும் நாய்களைப் பிடித்துச் சென்று கருத்தடை செய்து நாய்களை காப்பகங்களில் அடைக்க உத்தரவுகளை பிறப்பித்தது. அந்நடவடிக்கையைத் தொடர்ந்து அடுத்தடுத்த சில நாட்களில் அதை மாநகரத்தின் எல்லா பகுதியிலும் தீவிரப்படுத்தியது நிர்வாகம். அன்றைய நாளில் தான் உணவு தேடி வெளியில் சுற்றித் திரிந்த இடது கண்ணிழந்த முலை சூம்பிய நாய் மாநகராட்சி நிர்வாகத்தினரால் பிடித்து கருத்தடை செய்யப்பட்டு காப்பகத்திற்கு அனுப்பப்பட்டது.

முலைசூம்பிய நாயை பிரியாணிப் பொட்டலங்களோடு எதிர்நோக்கி இருந்துவிட்டு அதிலொரு பங்கை அது சாப்பிடும் இடத்தில் கொட்டிவிட்டு எஞ்சிய பாகத்து உணவை கைகளில் அள்ளி உள்ளே திணித்துக் கொண்டான்.

                 ***

அன்றிரவு முதல் விழாக்கால பரபரப்புடன் நகரப் பேருந்துகள் மக்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. நூற்றாண்டுகள் பழமையான சிதிலமடைந்த அக்கட்டிடத்தின் எதிரில் கட்டப்பட்ட புனித தோமாவின் பெயரிலான தேவாலயம் மின் சரவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தது.

நற்செய்தி பரப்பும் குழு வீதி வீதியாகச் சென்று மக்கள் கூடியிருக்கும் கூட்டங்களுக்கு நடுவே சுவிசேஷங்களைப் பாடியும் சாண்ட்டாகிளாஸ் தாத்தாவோடும் யேசு கிறிஸ்துவின் துதிப்பாடல்களைப் பாடியபடி சென்று கொண்டிருந்தனர்.

அடைக்கலம் புகுந்த நாளிலிருந்து முதன் முறையாக நூற்றாண்டுகள் பழமையானதும் சிதிலமடைந்த கட்டிடத்திலிருந்தும் வெளியேறி வழிப்போக்கன் நகரத்தில் உயர்ந்த கோபுரங்களைக் கொண்ட தேவாலயத்தில் அரங்கேறிக் கொண்டிருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகளோடு தேவாலத்தின் கோபுரத்தில் அமைந்த சிலுவை மின்னொளியில் மிளிர்வதை கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்தான்.

சுவிசேஷம் பரப்புக் குழுவில் இருந்த இளம் பாதிரியார் மக்களுக்கு நடுவே கைகளில் ஏந்தியபடி பைபிள் வசனங்களை வாசித்தும் நற்செய்திகளைக் கூறியும் அங்கிருந்தவர்களுடைய நெற்றியில் சிலுவைக் குறியிட்டுக் கொண்டே நகர்ந்தபடி இருந்தார். கூட்டத்தையும் ஆரவாரத்தையும் பார்த்து மகிழ்ந்த வழிப்போக்கன் தூரத்திலிருந்தே இளம்பாதிரியாரின் சிலுவைக் குறியிடுதலை அவதானித்தபடி நின்றிருந்தவன் அக்கூட்டம் கடந்து சென்ற பின் தன் இடத்திற்கு வந்து செங்கலை எடுத்து சுவரின் மற்றொரு பகுதியில் சிலுவைக் குறியை வரைந்து விட்டு தூரத்தில் நின்று நெடுநேரம் பார்த்தபடியிருந்த போது வானத்திலிருந்து சில துளிகள் அவன் மீது தூரலாய் விழத்தொடங்கியது.

நகரக் காவல் ஆய்வாளர் ரோந்து பணிக்குச் சென்ற போது நூற்றாண்டுகள் பழமையான சிதிலமடைந்த கட்டிடத்தில் மர்ம நபர்கள் பதுங்கியிருப்பதாகத தகவல் கிடைத்ததையடுத்து போதைவஸ்துகளை விநியோகம் செய்துகொண்டிருந்தவர்களை கைது செய்து வண்டியிலேற்றிய அக்கணத்தில் மற்றொரு உருவம் கட்டிடத்தின் மூலையில் படுத்துறங்குவதாய் பிடிபட்டவர்கள் காவல் ஆய்வாளரிடம் தெரிவிக்க அவ்வழிப்போக்கனை குற்றச்சம்பவங்களில் தொடர்புடையவனெனப் பிடித்து அழைத்துச் சென்றனர். காவல்நிலையத்தில் விசாரணை மேற்கொள்ள முயன்றதில் அவர்கள் அவனிடமிருந்து எந்தவொரு வார்த்தையையும் பெறமுடியாமல் திணறி மனநலம் பாதிக்கப்பட்டவன் என உறுதி செய்து கொண்டு ஊரும், பெயரும் தெரியாதவனின் அங்க அடையாளங்களையும், தோற்றத்தையும் குத்துமதிப்பான வயதையும் ஒரு கோப்பில் பதிவுசெய்துகொண்டு மனநல காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

காப்பகம் அவனுக்கு மற்றொரு அடைக்கலம் புகுந்த இடமாகவே தோற்றமளித்தது. பழைய கட்டிடமொன்றில் வாடகைக்கு செயல்பட்டு வரும் அக்காப்பகத்தில் சேர்க்கப்படும் அனைவருக்கும் மொட்டையடிக்கப்பட்டு, முகத்தில் கோரமாக அடர்த்தியாக வளர்ந்த மீசையையும் தாடியையும் மழித்துவிட்டு மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான புதிய ஆடைகள் அணிவிக்கப்பட்டு சேர்த்துக் கொள்ளும் நடைமுறை அவனுக்கு புதிதாகவும் விநோதமாகவும் இருந்தது.

ஒவ்வொரு ஞாயிறும் மனநல காப்பகத்திற்கு ஜெப நிகழ்ச்சிக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில் புனித தோமா ஆலய பாதிரியார் வருகையின் போது காப்பகத்தில் சேர்க்கப்பட்டவர்கள் தங்களை அறியாமலே ‘தோத்திரம் பாதர்’ ‘தோத்திரம் பாதர்’ என அவரைச் சூழ்ந்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறநிலைக்கு அவர்களது மனநலம் முன்னேறி இருப்பதாகத் தோன்றும்.

காப்பகத்தில் சேர்க்கப்பட்ட வழிப்போக்கனின் சடைசடையாகப் பிடித்திருந்த தலைமுடியும், அடர்ந்தும் கட்டாகவும் வளர்ந்த மீசையும் தாடியும் மழிக்கப்பட்ட பொழுது அவனுடைய தோற்றம் நாற்பது வயது மதிக்கத்தக்க இளைஞன் என காட்டியது. புதுஉடை அணிவிக்கப்பட்டு ஜெப நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லும் போது அவனுடைய கழுத்தில் ஒரு சிலுவை அவன் மார்பில் தொங்கிக் கொண்டிருந்தது.

 மாநகரத்திற்குள் சுற்றித் திரிந்த பின் நடைசோர்ந்து அடைக்கலமாக புகுந்த நூற்றாண்டுகள் பழமையான அக்கட்டிடம் பாதுகாக்கப்பட்ட இடமென அறிவிக்கப்பட்டு தொல்லியல் துறையின் அறிவிப்போடு காட்சியளிக்கத் தொடங்கியது. அக்கட்டிடத்தில் பறவைகளின் வருகையும், நாய்களின் வருகையும், இரவு நேர கலாச்சாரம் கொண்டவர்களின் வருகையையும் அனுமதித்தபடி வந்து சென்றவர்களின் அடையாளமாகவும் தொல்லெச்சமாகவும் சுவர்களில் வரையப்பட்ட விநோதமான கிறுக்கல்கள், கரியாலும் செங்கலாலும் தீட்டப்பட்ட சித்திரங்களுடன் வெறுமைக் காற்று நிரம்பிய மயான அமைதியாக காட்சியளித்தது.

00

இலட்சுமண பிரகாசம்

சொந்த ஊர் : சேலம் மாவட்டம் தலைவாசல். தற்போது புவனகிரி அருகே அரசு பள்ளியில் முதுகலைப் பட்டதாரியாக பணியாற்றி வருகிறார். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என தொடர்ந்து எழுதியும், இலக்கிய கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.

2019 ம் ஆண்டு கஸல்களைப்பாடும் யாரோ ஒருவன் – இந்த நூலுக்காக கலை இலக்கிய மேடை விருது கிடைத்தது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *