அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை இருக்கும் என்று தொலைக் காட்சியில் வானிலை அறிவிப்பு சொல்லியது. ஐப்பசியில் அடைமழை காலமாக இருந்த நிலை எல்லாம் இப்போது மாறிவிட்டது. பல வெளியூர்களில் ஓரளவு இந்தக் காலத்தில் மழை இருக்கும். அதுவும் கடலோர மாவட்டங்களில் புயல் மழை இருக்கும். ஆனால், திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல ஆண்டுகளாக கன மழைக்கு வாய்ப்பே இல்லை. லேசான தூறல் மட்டுமே அப்போதைக்கு அப்போது இருந்து வருகிறது. இன்றும் அப்படித்தான் புயல் மழை தொடர்ந்து நச நச என்று பெய்து கொண்டே இருக்கிறது. கனமாக இல்லையென்றாலும் வெளியே போனால் நன்றாக நனைந்து விடும் அளவிற்குப் பெய்து கொண்டே இருக்கின்றது. வீட்டிற்குள் தொலைக்காட்சி முன்னால் அமர்ந்தபடி செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தார் சின்னச்சாமி. தொலைக்காட்சியில் எந்த நேரமும் மழை பற்றிய செய்தி மட்டுமே ஓடிக் கொண்டிருக்கின்றது.
“கார்த்திகை ஜோதி வரைக்கும் மழை இருக்கும். அதுக்கு அப்புறம் பனி வந்திடும். இதெல்லாம் அந்தக் காலத்தில. இப்போ என்னடான்னா எப்போ மழை வருது எப்போ புயல் அடிக்குதுன்னு யாருக்கும் தெரிய மாட்டிங்குது போ. அப்படித்தே புயலடிச்சாலும் வெயிலடிச்சாலும் நாம வீட்டுல இருக்க முடியுமா? வண்டில பால் கேன கட்டிட்டு ஓடிட்டே இருக்க வேண்டியதுதே” என்று தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்த சின்னச்சாமி தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்துவிட்டு மொப்பட்டில் பால் கேனைக் கட்ட ஆரம்பித்தார்.
உடம்பு முழுவதும் மறையக் கூடிய மழைக் கோட்டையும் ஹெல்மெட்டையும் எடுத்துப் போட்டுக் கொண்டார். சின்னச்சாமியின் மனைவி மலர் கட்டிலில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் புறப்படப் போகிறார் என்று தெரிந்து ”இருங்க டீ வைக்கறேன்” என்று சொல்லிக் கொண்டே அடுக்களைக்குள் ஓடினாள். புயல் மழை கொஞ்சம் ஓய்ந்திருந்தாலும் இன்னும் தூறிக் கொண்டே இருந்தது. இந்த மழைக்கெல்லாம் நாம் வீட்டில் முடங்கிவிட்டால் யார் போய் பால் கரந்து எல்லோருக்கும் கொடுப்பது? அதனால், உடனடியாகப் புறப்பட வேண்டியதுதான் என்று நினைத்த சின்னச்சாமி மலர் தேனீர் வைத்தால் குடித்துவிட்டுப் போகலாம் என்று சேரில் உட்கார்ந்தார்.
“ஏங்க… மழை இன்னும் விடலப்போல… சித்த நேரம் இருந்து பார்த்துட்டுப் போறது… இந்தாங்க டீ…” என்றாள் மலர்.
“இந்தக் கொசு மழைக்கெல்லாம் வீட்டுல சொகமா போத்தி படுத்திட்டு இருக்க முடியுமா? பால மடியில வச்சுகிட்டு எரும மாடெல்லாம் கத்திட்டு இருக்கும். அதுக்கு மேல நான் பாலக் கொண்டுட்டுப் போற வீட்டுல எல்லாம் பார்த்திட்டு இருப்பாங்க. கொழந்தைங்களும் பால் இல்லாம அழுதிட்டு இருக்கும்” என்று சொல்லிக் கொண்டே தேநீரை வாங்கிக் குடிக்க ஆரம்பித்தார் சின்னச்சாமி.
இந்தப் பால்க்காரர்கள் மழை வெயில் என்று பார்த்துக் கொண்டிருக்க முடியாது. சரியான நேரத்தில் சென்று பாலைக் கரந்துவிட வேண்டும். சரியான நேரத்தில் கொண்டுபோய் எல்லா வீடுகளுக்கும் பாலை ஊற்றிவிட வேண்டும். இல்லாவிட்டால் சில வீடுகளில் கடைக்குச் சென்று பாக்கெட் பாலை வாங்கிவிடுவார்கள். கடைகளில் பால் கிடைக்காதவர்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவை அழுது சோர்ந்துவிடும். அதனால் நேரம் காலம் பார்க்காமல் பால் கரக்கச் சென்றுவிட வேண்டும். நிறைய தோட்டங்களில் வயதானவர்களே ஆடு மாடுகளைக் கவனித்துக் கொண்டிருப்பதால் அவர்களால் எருமை மாடுகளில் பாலைக் கரக்க முடியாது.
அதனால் பால் கரக்கும் வேலையும் சின்னச்சாமியே செய்ய வேண்டி வந்துவிட்டது. கால்நடைகளை வளர்ப்பவர்கள் பாலைக் கரந்து வைத்து விட்டாலாவது சின்னச்சாமிக்கு கரக்கும் வேலை மிச்சமாகும். இப்போதெல்லாம் அதையும் இவரே செய்ய வேண்டி வந்துவிட்டது. எப்படியோ இந்த அலைச்சலான தொழிலில் இறங்கிவிட்டோம். இனி கால நேரத்தையும் பார்க்க முடியாது. வேறு தொழிலுக்கும் உடனடியாக மாற முடியாது. உடம்பில் தெம்பு இருக்கும் வரை இந்த பால் வியாபாரத்தைச் செய்ய வேண்டியதுதான் என்று சுறுசுறுப்பாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தார் சின்னச்சாமி.
ஒவ்வொரு வீட்டிற்கும் தினமும் காலையும் மாலையும் செல்ல வேண்டும். இதில் ஒரு நாளும்கூட மாற்றம் இருக்க முடியாது. ஏராளமான வீடுகளுக்கு பால் ஊற்ற வேண்டி இருப்பதால், சின்னச்சாமியிடம் பால் வாங்கும் எல்லோரும் நன்றாகப் பழகிவிட்டார்கள். அவர்களும் ஒரு சொந்தக் குடும்பத்தாரைப் போலவே சின்னச்சாமியை நேசிக்க ஆரம்பித்தனர். ஒவ்வொரு விட்டிலும் நல்லது கெட்டது என்று எது நடந்தாலும் எல்லா நிகழ்வுகளுக்கும் பெரியசாமி சென்று கொண்டிருந்தார். அந்த அளவிற்கு சின்னச்சாமி ஒரு சொந்தக்காரராகவே மாறிவிட்டார்.
அதையெல்லாம்விட இந்தப் பால்காரர் ஒரு தபால்காரராகவே மாறிவிட்டார் என்பதே சரி. அவர் குடியிருக்கும் ஊரில் நடக்கும் செய்திகளையும் அவர் பால் ஊற்றும் வீடுகளில் நடக்கும் செய்திகளையும் சம்பந்தப்பட்டவர்களிடம் செய்திகளை கொண்டு செல்லும் தபால்காரராகவே இருக்கிறார். என்னதான் தொலைபேசி இணைப்புகள் வந்துவிட்ட காலத்திலும் ஒருவரின் செய்தியை இன்னொருவருக்கு கடத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறார். அதைவிட, முக்கியமான செய்திகள் இல்லாத சூழலிலும் சின்னச்சாமியின் காதுக்கு எட்டிய செய்திகளை செய்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு கொண்டு செல்லாமல் விடுவதில்லை.
ஒரு வீட்டில் தினமும் பால் வாங்குபவர் ஒரு நாள் வராமல் தன் வீட்டில் இருக்கும் அடுத்தவரை அனுப்பி விடும்போதே சின்னச்சாமி காரணத்தை அறிந்து கொள்வார். தினமும் வரும் பெண்மணிக்கு உடம்புக்கு சரியில்லை என்பது தெரிந்துவிடும். அந்தச் செய்தியை அந்தப் பெண்மணிக்கு யார் யார் மிகவும் நெருங்கியவர்கள் இருக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் பால் ஊற்றும்போது செய்தியைச் சொல்லிவிடுவார். இந்தச் செய்தி அவ்வளவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த செய்தி இல்லையென்றாலும் தெரிந்து கொள்ளட்டுமே என்று சொல்லிவிடுவார்.
பால் வாங்குபவர்கள் தனக்கு வேண்டியவர்களிடம் சேர்க்க வேண்டிய சின்னச் சின்ன பொருட்களை சின்னச்சாமியிடமே கொடுத்து விடுவார்கள். அதே சமயம், உடம்புக்கு சரியில்லாதவர். தனது உடம்புக்கு சரியில்லை என்ற செய்தியை தனக்கு வேண்டியவர்களிடம் சொல்ல வேண்டிய முக்கியத்துவம் இருக்காது. அந்த அளவிற்கு அது பெரிய விஷயமும் இல்லை. ஆனால், பால்காரர் சொன்ன செய்தியைக் கேட்டவர்கள் ஒரு எட்டுப் போய்ப் பார்த்துவிட்டு வரலாமே என்று கிளம்பிவிடுவார்கள். அந்த அளவு உறவுப் பிணைப்புக்கு ஒரு ஏணியாக சின்னச்சாமி இன்றளவும் இருந்து வருகிறார். சின்னச்சாமியைப் பொறுத்தவரை நாம் உண்டு நம் வேலை உண்டு என்றிருப்பதில்லை. ஒரு பக்கம் இருக்கும் செய்தியை இன்னொரு பக்கம் கொண்டு சேர்ப்பதில் நமக்கு என்ன சேதாரம் வந்துவிடப் போகிறது என்று நினைப்பவர் சின்னச்சாமி.
யார்யாருக்கு என்னென்ன கொடுக்க வேண்டும்? யார்யாருக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று கடவுள் நினைப்போ என்னவோ? சின்னச்சாமிக்கு ஓய்வில்லாமல் இயங்கும் மன உறுதியினையும் உடல் வலிமையினையும் கடவுள் வரமாகக் கொடுத்து இருக்கிறார். அவ்வப்போது சின்னச் சின்னத் தொந்தரவுகள் வந்தால், அதைப் பொருட்படுத்தாமல் தனது கடமையைச் செய்து கொண்டே இருப்பார். உறவினர்கள் மத்தியில் ஏதாவது மிக முக்கியமான வேலைகள் இருந்தால் அந்த நாட்களில் மட்டுமே சின்னச்சாமி பால் கொண்டு செல்லமாட்டார். அன்றைய தினங்களில் பால் கொண்டு செல்லவில்லையென்றால் இவரிடம் பால் வாங்கும் எல்லோருக்குமே ஒரே ஏமாற்றமாகத்தான் இருக்கும். பாக்கெட் பால் வாங்க ஆயிரம் முறை யோசித்துத்தான் வேண்டா வெறுப்பாக வாங்கிப் பயன்படுத்துவார்கள்.
“என்ன சின்னச்சாமி… இன்னைக்கு கொஞ்ச நேரமாய்ட்டுதாட்ட இருக்கா. சாமக் கோழி கூவையில வந்திடுவே. இப்ப மணி அஞ்சாயிட்டுது. தூங்கிட்டியா?” பால் கரக்க வந்திருக்கும் சின்னச்சாமியிடம் பேச்சுக் கொடுத்தார் பெரியவர் பழனிச்சாமி.
“ஆமாங்கண்ணா. நேத்து ராத்திரி நல்ல குளுரு காத்தும் மழையும் இருந்ததால தூங்கறக்கு மணி பன்னண்டு ஆயிடுச்சுங்க. காலைல கண்ணு முழிச்சுப் பார்த்தாக்க மணி நாலே முக்கால் ஆயிடுச்சுங்க. அதான் விசுக்குனு கெளம்பி ஒடியாந்தேன். அப்பிடியும் நேரமாயிட்டுது”
பேசிக் கொண்டே சின்னச்சாமி ஒரு மாட்டின் மடியைக் கழுவி விட்டுவிட்டு போசியை தனது தொடையின் இடுக்கில் வைத்து குந்தலிட்டு உட்கார்ந்தபடி பாலைக் கரக்க ஆரம்பித்தார். இந்த மாட்டின் பாலைக் கரந்து முடித்தபின் இன்னொரு மாட்டின் பாலையும் கரக்க வேண்டும். பாலைக் கரக்கும்போது அந்த மாடு கொஞ்சம் ஆட்டம் போடும். அதன் மூக்கனாங் கயிறைப் பிடித்துக் கொள்ளவே பழனிச்சாமி வந்தார்.
“ஏஞ் சின்னச்சாமி… பால ஏவாரம் ஒரு பத்து வருசமா பாப்பியா?”
“பழனிச்சாமி அண்ணா… இந்த ஏவாரத்துக்கு வந்து இந்த தை பொங்கலோட இருபத்தி அஞ்சு வருசம் ஆச்சுங்கன்னா. ஏங்கணா கேக்கறீங்க?” பாலைக் கரந்து கொண்டே சின்னச்சாமி கேட்டார்.
“உனக்கும் கல்யாணம் ஆகி பேரன் பேத்தி எடுத்திட்டே. உங்க அப்பா காலத்தில இருந்து நீயும் பால் ஏவாரம் செய்யிரே. இனி உன்ர வயிசு ஆளுகெல்லாம் ஓய்வு எடுத்துட்டாங்க. நீ இன்னும் ஓடிட்டே இருக்கே” என்று சொல்லிக் கொண்டிருந்த பழனிச்சாமி புகையிலை எச்சிலைத் துப்பியபடியே தொடர்ந்து பேசினார்.
“அட சின்னச்சாமி… நீயும் பால் கரக்க வல்லீனு வச்சுக்கோ… நாங்க எதுக்கு இந்த மாட்டு வாலப் புடிச்சுட்டுத் திரியறோம். நீ பால் கரக்க வர்ற வரையிலும் நானும் இந்த மாடுகள வச்சிருப்போம். அப்புறம் வித்திட்டு கட்டல்ல காலாட்டிட்டு படுத்துக்கவோமப்பா” என்று சிரித்தபடியே பனிச்சாமி சொன்னார்.
“அலையறதுக்கும் ஒரு வயிசு இருக்கல்லங்ணா. இப்போ எனக்கும் அறுபத தொடப்போகுது. இந்த மாட்டுல கரந்தாச்சு. இனி அந்த அடங்காப் பிடாரி எருமைய பதனமா புடிச்சுக்குங்க. பால கேன்ல ஊத்திட்டு போசிய எடுத்திட்டு வர்றேனுங்க” என்று சொன்னார் சின்னச்சாமி.
இங்கு இரண்டு மாட்டின் பாலையும் ஒரு எருமையின் பாலையும் கரந்துவிட்டு அடுத்ததாக மேட்டாங்காட்டுக்குப் போக வேண்டும். அங்கு இரண்டு எருமைகளுக்கும் ஒரு பசு மாட்டிற்கும் பால் கரக்க வேண்டும். இப்போதெல்லாம் பசு மாடுகளும் குறைந்து விட்டன. எங்காவது ஒன்றிரண்டுதான் உண்டு, எல்லாத் தோட்டங்களிலும் வீடுகளிலும் ஜெர்சியும் காலேஜும் வந்துவிட்டன. இந்த மாடுகளில் ஒரு வேளைக்கு குறைந்தது பத்துப் பதினைஞ்சு லிட்டர்கள் கரக்கலாம். ஆனால், பசு மாடுகள் ஒரு வேளைக்கு மூன்று லிட்டர் மாட்டுமே கொடுக்கும். அதனால் எல்லோரும் பசு மாடுகளை வளர்க்க விரும்புவதில்லை.
பசு மாட்டுப் பால் மிக ஆரோக்கியத்தைக் கொடுப்பதுபோல் கலப்பின மாடுகள் கொடுப்பது இல்லை. என்றாலும், பால் அதிகம் கொடுக்கிறதே என்றும் அதனால் ஓருளவு வருமானம் வருகிறதே என்றும் மாடு வளர்ப்பவர்கள் எல்லோரும் கலப்பின மாடுகளையே வளர்க்க ஆரம்பித்துவிட்டனர். பசு மாடுகள் பால் கரவைக்கு மாட்டுமின்றி ஏர் உழுவதற்கும், கவலை ஓட்டுவதற்கும், வண்டி ஓட்டுவதற்கும் பயன்படும். இப்போது இந்த நவீன உலத்தில் மாடுகள் உழைக்கவே வழியில்லை. அதனால் பசு மாட்டிற்கும் வேலையில்லை. பால் குறைவாகக் கொடுக்கிறதே என்று யாரும் வளர்க்கவும் விரும்புவதில்லை. இருந்தாலும், இந்தப் பால் இல்லாவிட்டால் குழந்தைகள் பாடு மிகவும் மோசமாகிப் போய்விடும். இதனால் அந்த மாடுகளின் பாலையே சின்னச்சாமி எல்லோருக்கும் கொடுக்கிறார். குழந்தைகள் உள்ள ஒருசில வீடுகளுக்கு மட்டுமே பசு மாட்ட்ப் பாலை தனியாகக் கொண்டு சென்று கொடுப்பார்.

சின்னச்சாமியே நேரில் சென்று மாடுகளில் பாலைக் கரந்து கொடுப்பதால்தான் இவரிடம் பால் வாங்கும் எல்லோரும் நம்பிக்கையோடு வாங்குகிறார்கள். இவர் பால் வியாபாரம் மட்டும் பார்ப்பவர் என்று எல்லோரும் சொல்வதில்லை. அவர் பால் கொண்டுபோய் ஊற்றும் இடமெல்லாம் செய்திகளைக் கொண்டுபோகும் ஒரு தகவல் தொடர்பாளராகவும் இருந்தார். அதோடு மட்டுமில்லாமல் அஞ்சலகத்தில் வரும் தபால்கள் சிலவற்றை தபால்காரர் சின்னச்சாமியிடம் கொடுத்துவிடுவார். இவர்தான் சில காடு தோட்டங்களுக்கும் செல்பவர் என்பதால் இவரிடம் கொடுத்துவிடுவார். தபால்காரர், சின்னச்சாமியின் பக்கத்து வீட்டுக்காரர் என்பதால் சின்னச்சாமி போகும் இடங்களுக்கு வந்திருக்கும் தபால்களை அவரிடமே கொடுத்துவிடுவார். யார்யாருக்கு தபால்களை கொடுக்க வேண்டுமோ அங்கெல்லாம் பால் கரக்கச் செல்லும்போதும் பால் ஊற்றப் போகும்போதும் கொண்டுபோய் சேர்த்துவிடுவார். ஆகவே, பகுதி நேர தபால்காரராகவும் சின்னச்சாமி இருந்தார். சில பெரியவர்களுக்கு தபால்களைப் படிக்க முடியாது என்பதால் படித்துக் காட்டும் வேலையினையும் செய்வார்.
சின்னச்சாமியின் மகன் நன்றாகப் படித்து ஒரு அரசாங்க வேலையில் இருக்கிறான். அவனுக்குத் திருமணம் ஆகி ஒரு குழந்தையுடன் திருப்பூரில் தனியாக வசித்து வருகிறான். குழந்தை பள்ளிக்குச் செல்லும் வயது வந்துவிட்டால் அதை சின்னச்சாமி தனது ஊருக்கே கூட்டிவந்து இங்கிருக்கும் அரசாங்கப் பள்ளியில் சேர்த்து விடலாம் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள். சின்னச்சாமி மகனுக்கு மாதமானால் நல்ல வருமானம் வருகின்றது. கொஞ்சம் பணத்தை ஊரில் உள்ள அம்மாவின் கணக்கில் போட்டுவிடுவான். சின்னச்சாமியின் மனைவியும் வீட்டில் சாப்பாடு செய்து வைத்துவிட்டு சும்மா இருப்பதில்லை. நூறு நாள் வேலைக்குச் செல்வார். சாப்பாட்டிற்கும் செலவிற்கும் கவலை இல்லை என்ற போதிலும் இவர்கள் எல்லாம் ஏதாவது ஒரு வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறார்கள்.
“இந்த எரும நல்லா பாலு கொடுக்குதப்போவ். என்ன கொஞ்சம் மெரளி. மத்தபடி ஒரு பிரச்சனயும் கொடுக்கறதில்ல. நீ காங்கயம் சந்தையில வாங்கிக் கொடுத்த எருமதானப்பா இது” என்று ஒருவர் சொன்னது இப்போது சின்னச்சாமி நினைவிற்கு வந்தது. இப்படி எருமை மாடுகளை வாங்கிக் கொடுப்பதும் விற்றுக் கொடுப்பதும் சின்னச்சாமியின் கடினமான வேலைப்பாடுகளுக்கு இடையில் அதுவும் ஒரு வேலையாக இருந்தது. ஒரு காலத்தில் தனது தந்தை, விற்பனை செய்பவர்கள் அனுப்பும் ஆடு மாடுகள் எருமைகளை எல்லாம் திருப்பூர் சந்தைக்கு ஓட்டிச் செல்வார். அவற்றை எல்லாம் நல்ல விலைக்கு சின்னச்சாமி விற்றுக் கொடுப்பார். அப்படி விற்றுத் தருவதால் அவருக்கு ஒரு வருமானம் வரும். அதைக் கமிசன் என்று சொல்வார்கள். அந்தக் காலத்தில் சிறு வயதில் அவருடன் சின்னச்சாமியும் செல்வார்.
ஆகவே, சின்னச்சாமி சின்ன வயதில் இருந்து கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கின்றார். அந்த உழைப்பு இன்றைக்கு வரைக்கும் தொடர்கிறது. இதுவரை பாலைக் கட்டிக் கொண்டு அலைந்தது போதும். இனியாவது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று சின்னச்சாமி மனைவி மலரும் மகன் ராம்குமாரும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் சின்னச்சாமி காதுகொடுத்துக் கேட்கவேயில்லை. இப்போது இருந்து வீட்டில் ஓய்வெடுத்து உடம்பைக் கெடுத்துக் கொள்வதா என்று கேட்பார். அதனால் இன்றளவும் தொடர்ந்து பால் வியாபாரம் செய்து வருகிறார். மலரும் ராம்குமாரும் என்னமோ உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள் என்று விட்டுவிட்டார்கள். வீட்டில் இருந்து கொண்டோ அல்லது ஏதாவது ஒரு கடையில் இருந்து கொண்டோ செய்யும் தொழிலாக இருந்தால் தொல்லை இல்லை. எங்கும் அலைய வேண்டியதில்லை. ஆனால், இந்தப் பால் வியாபாரத் தொழில் ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும்.
ஒரு நாள் அல்லது ஒரு வேளையோ ஓய்வெடுத்து விட்டால் போதும். உடனே பால் கரக்கும் இடத்தில் இருந்தும் பால் வாங்குபவர்கள் இடத்தில் இருந்தும் கைபேசிக்கு அழைப்புகள் வந்து கொண்டே இருக்கும். ஏன் இன்னும் காணோம் என்று அழைத்துக் கொண்டே இருப்பார்கள். அதனால், சின்னச்சாமி முடிந்தவரைக்கும் உழைத்துக் கொண்டே இருந்தார். ஏதாவது ஒரு மிகமுக்கியமான தவிர்க்க முடியாத வேலை வந்துவிட்டால் மட்டுமே பால் கரவைக்கும் பால் கொண்டு போவதற்கும் செல்லமாட்டார். ஆனாலும் தனது தொழில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரிடத்திலும் கைபேசியில் அழைத்து விவரத்தைச் சொல்லிவிடுவார். அதனால், யாருக்கும் எந்தச் சிரமத்தையும் இதுவரை தேவையில்லாமல் கொடுத்தது இல்லை. ஒரு நாள் மதியம் வீட்டில் இருந்தபோது, இப்படிப்பட்ட தொழில் சம்பந்தப்பட்ட நிலையினை மலரிடம் சின்னச்சாமி பேசிக் கொண்டிருந்தார்.
“நீங்க எல்லோரும் இனி ஓய்வெடுத்துக்கச் சொல்றது எனக்கும் புரியாம இல்ல. சைக்கிள் ஓட்டக் கத்துக்கிட்ட நாள்ல இருந்து இன்னைக்கு மொபட் வந்த பெறகும் பால் கேன் கட்டியே காலம் போய்ட்டுது. ஒரு வயசுக்கு மேல அலைய முடியாதுனு நீங்க நெனைக்கிறது புரியுது. ஆனா, நான் இப்போ இருந்து வீட்டுல உக்காந்துட்டு ஊரச் சுத்த விரும்பல. அதில்லாம, வீட்டுல சும்மாவே இருந்தா அதுக்கு ஒரு நோவு வந்திடும். அப்புறம் அதுக்கு காசு செலவு செய்யோணும்” என்றார் சின்னச்சாமி.
“எங்களுக்கும் எல்லாம் புரியாம இல்ல. எனக்குத் தெரிஞ்சு ஒரு இருபத்தி அஞ்சு வருஷம் பால் கேன் கட்டிட்டு போறீங்க. அதில்லாம் இப்போ எல்லாம் திருப்பூர்ல வண்டி ஓட்டறதே ரொம்பச் சிரமம்னு சொல்லிக்கிறாங்க. உங்களாட்டம் பொறுமையா போரவங்கள்னால வண்டியே ஓட்ட முடியாதுன்னு ராம்குமாரும் சொல்றான். போற வழியில வர்ற வழியில நல்லபடியா போய்ட்டு வரோணுமுனுதான் எங்களோட கவல. இல்லாட்டி ஒன்னு செய்ங்க. எல்லா மாட்டுலயும் பாலக் கரந்து கொடுத்துட்டு அத சொசைட்டில ஊத்திடுங்க. வீடு வீடா போற வேற வேல மிச்சம் ஆகுதல்லோ” என்றார் மலர்.
“அடி போடி போக்கத்தவளே… உன்னோட யோசன நல்லாத்தா இருக்கு. பால மட்டும் கரந்தா போதும்னு வச்சுக்கோ. என்ன நம்பி திருப்பூர்ல இருக்கிற சனங்க என்ன நெனப்பாங்க. நல்ல பாலுக்கு எங்க போவாங்க. ஒரு வருஷம் வீட்டு ப்ரிஜ்ல வச்சிருந்தாலும் கெடாம இருக்கிற பாக்கெட் பாலத்தான் அவுங்க வாங்கி ஆகோணும். எங்கிட்ட நல்ல பால் மட்டும்… அதுவும் தண்ணி கலக்காத பால் கெடைக்கும்ணு எங்கிட்ட வாங்கிற சனங்க என்ன செய்வாங்க? எங்கதான் போய் வாங்குவாங்க? என்ன மாதிரியே நல்ல சுத்தமான பால் கொண்டாந்து ஊத்தற ஆள் ஒன்னு வரணும். அது எப்போ நடக்கும்ணு தெரியாது. அதனால, என்ர ஒடம்புல சக்தி இருக்கிற வரைக்கும் பால் கொண்டுபோய் வீடு வீடா உத்தரதுனு உறுதியா இருக்கேன் பாத்துக்க” என்று சொல்லிவிட்டு பெரிய பெருமூச்சு ஒன்றை விட்ட சின்னச்சாமி மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்.
“இன்னோரு விஷயம் தெரியுமா மலர்… நான் பால் கரக்க வருவேன்னு தெரிஞ்சுதான் நம்ம ஊர் தோட்டத்தில இருக்கிற பெருசுங்க சிலபேரு எருமை மாடுன்னு வளர்த்தறாங்க. நான் அந்தப் பக்கம் போகலேன்னு வச்சுக்க… அவுங்க அந்த பண்டங்கள வித்துடுவாங்க. அப்புறம் அவுங்க பொழப்பும் போய்டும். அதுபோக, எங்கிட்ட பால் வாங்கிறவங்கள பாக்கெட் பால் வாங்க ஏன் நாம் சிரமப் படுத்தணும்? நம்மால முடிஞ்ச வரைக்கும் பால் கேன் கட்ட வேண்டியதுதான்” என்றார் உறுதியாக.
இதையெல்லாம் வெளியில் நின்று கேட்டுக் கொண்டிருந்த பெரிய தோட்டத்து ராமசாமி விட்டிற்குள் வந்தார். அவர் சின்னச்சாமி பக்கத்தில் போனதும் கைகளைப் பிடித்துக் கொண்டார். ராமசாமியின் கண்கள் கலங்கி இருந்தன. அவரால் எதுவும் பேச முடியவில்லை.
“ராமசாமி மாமா ஏ இப்படி நிக்கிறீங்க. நாங்க ஏதும் தப்பாப் பேசிட்டமா?” என்றார் பதற்றத்துடன் மலர்.
“ஐய்யயோ… அப்படியெல்லாம் பேசாதே மலரு. சின்னச்சாமி பேசினதக் கேட்டுத்தான் நின்னிட்டு இருந்தேன். மொதல்ல ஏதோ காரசாரமா பேசிட்டு இருக்கீங்க. நாம ஏன் குறுக்கே போகணும்னு வெளில நின்னுட்டேன். அப்புறந்தான் பால் ஏவாரத்தப் பத்தி சின்னு பேசறான்னு தெரிஞ்சு உள்ளே வந்தேன். சின்னு எப்படியெல்லாம் எல்லார்த்துக்கும் உதவுறார்னு தெரிஞ்சுதான் நான் கண்ணு கலங்கிட்டேன்” என்றார் ராமசாமி. அவர் சின்னச்சாமியை சின்னு என்றுதான் அன்போடு அழைப்பார்.
“அத விடுங்க. பெரியப்பா. நானும் ஒரு தொழிலத்தானே செய்யறேன். உக்காருங்க அந்த பெஞ்சில. ஏ… மலரு… பெரியப்பாவுக்கு டீ போட்டுட்டு வா. எனக்கும் சேர்த்தி போடு. மணி மூனு ஆகுது. நானும் பால் கரக்கப் போகணும்” என்றார் சின்னச்சாமி.
“நீ இது ஒரு தொழில்தான்னு சாதாரணமா சொல்லிட்டே சின்னு. ஆனா, எல்லோரும் செய்யிற தொழில் லாபத்த அடிப்படையா வச்சது. நீ செய்யிற தொழில் அப்படியில்ல. பால் கொடுக்கிறவங்களும் பால் வாங்கிறவங்களும் ஒரு நல்ல வேலயச் செய்யிறே. நீ நெனச்சா பால்ல தண்ணிய கலந்து விக்கலாம். பவுடர் பால் பொடிய கலந்து கொடுக்கலாம். பால் கொடுக்கிறவங்ககிட்ட கரந்து கொடுன்னு சொல்லலாம். எல்லா வேலயும் நீயே எடுத்துச் செய்யறே. உனக்கு கடவுள் நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கட்டும் அப்பா. அதெல்லெத்தையும்விட ஒரு தொழிலச் செஞ்சாலும் அதுனால நாலு பேருக்கு நல்லது நடக்கணும்னு நெனச்சு செய்யறது இந்த உலகத்தில இப்ப இருக்கிற காலத்தில நடக்கவே நடக்காதப்பா. அந்தக் காலத்தில நேர்மையா உழைக்க மட்டுமே தெரிஞ்ச ஆளாட்டவே நீ இன்னும் இருக்கிற பாரு நீ ஒரு தெய்வப் பிறவியப்பா” என்ற ராமசாமி எழுந்துபோய் சின்னச்சாமியின் கைகளை மறுபடியும் பற்றிக் கொண்டார்.
இதை சற்றும் எதிர்பாராத சின்னச்சாமி பதறிப் போனார். சட்டென்று எழுந்து ”எல்லாம் பெரியவர்களின் ஆசி” என்று சொல்லிக் கொண்டே பெரியப்பாவின் காலில் விழுந்துவிட்டார். சிறிது நேர அமைதிக்குப் பிறகு மலர் கொடுத்த தேனீரை இருவரும் பருகினார்கள். மலரும் கீழே உட்கார்ந்து கொண்டு தேனீரைக் குடிக்க ஆரம்பித்தார். பெரிய மாமனார் முன்னால் சேரில் உட்கார்ந்தால் மரியாதை இருக்காதென்று கீழே அமர்ந்து கொண்டார்.
ஒரு நொடிக் கணக்கில் கெட்ட பெயரை எடுத்து விடலாம். ஆனால், நல்ல பெயரைச் சம்பாதிக்க காலமெல்லாம் காத்திருக்க வேண்டும். அதுபோகவும் நாம் மேற்கொண்டதொழில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் தேவைப்படுவது. நம் செய்யும் தொழிலால் இதுவரை யாருக்கும் எந்தவிதமான கெடுதலும் நடக்கவில்லை. எத்தனையொ தொழில்களில் எத்தனையோ பிரச்சனைகள் அவ்வப்போது வரக்கூடும். ஆனால், இத்தனை ஆண்டுகளாக நம்மால் எந்தப் பிரச்சனையும் யாருக்கும் ஏற்படவில்லை. அப்படியென்றால் நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையிலும் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறோம் என்பதுதானே உண்மை. இந்த அளவிற்கு நம்மால் முடிந்த உதவியினை நம்மைச் சார்ந்தவர்களுக்குச் செய்வது கடவுள் கொடுத்த வரமல்லவா!
இனிமேலும் நம்மால் முடிந்தவரைக்கும் இந்தத் தொழிலைச் செய்வோம். பிறகு நம் இடத்திற்கு யாரேனும் ஒரு ஆள் வராமலா போய்விடுவார்? என்ற நம்பிக்கையில் மிகவும் உற்சாகமான சின்னச்சாமி சுத்தம் செய்து காய்ந்து கொண்டிருக்கும் பால் கேனை எடுத்து மொப்பட்டில் கட்டப் போனார். பால் கேனை கட்டிக் கொண்டு புறப்பட்ட வேளையில் திடீரென்று ஒரு நினைவு வந்தது. அந்த நினைவு வந்தததும் மொபட்டை அப்படியே நிறுத்தி நின்று விட்டார். அந்த நினைவுகள்… மனதில் ஓட ஆரம்பித்தது.
“இறைவா… எனக்கு இந்த அளவுக்கு உடம்பில் தெம்பினையும் மனதில் தைரியத்தையும் கொடுத்ததிற்கு நன்றி. அதனால்தான் இத்தனை காலமும் ஓய்வில்லாமல் பால் வியாபாரம் செய்ய முடிந்தது. இந்த பால் வியாபாரமும் ஒரு தொழில்தான் என்ற போதிலும் அதில் ஒரு வருமானம் வருகிறது என்ற போதிலும் அதிக காசுக்காக அதிக ஆசைப்பட்டதில்லை. பால் வியாபாரம் செய்ய அலைவதற்கு ஒரு வருமானம் வருகிறது. அதுவே போதுமானது. இந்தக் குடும்பத்தை நன்றாகவே காப்பாற்றிக் கொண்டிருக்கின்றேன். என் தொழிலால் யாருக்கும் எந்தப் பாதிப்பையும் இது நாள் வரை தந்ததில்லை வருமானத்திற்காக அடுத்தவரை ஏமாற்றியதில்லை. என்னால் இதுவரைக்கும் யாருக்கும் எந்தத் தொந்தரவும் இருந்தது இல்லை. இனிமேலும் இருக்கப் போவதில்லை. ஆகவே, இறைவா… இன்னும் உழைக்க… முடியும் வரைக்கும் எனக்கு தேக ஆரோக்கியத்தையும் மனத் திடத்தையும் கொடு இறைவா…” என்று சின்னச்சாமி மனதில் ஒரு எண்ணம் தோன்றி அவரை மெய் சிலிர்க்க வைத்தது. அந்த எண்ணம் தனது தந்தை வழங்கியதுதான் என்று நினைத்துக் கொண்டே மொபட்டில் கிளம்ப ஆரம்பித்தார்.
வானம் இன்று சின்னச்சாமி மனதைப் போலவே சுத்தமாக பளிச்சென்று இருந்தது. அதைக் கவனித்த சின்னச்சாமி புன்முறுவலுடன் சாயுங்காலப் பாலைக் கரக்கப் புறப்பட்டார்.
000

ரத்தினமூர்த்தி
ஆவாரங்காடு, தாகநதி, குமரன் சாலை ஆகிய நாவல்களும், ஆத்மாவின் சுவாசங்கள், காட்டு மல்லி, அடர்வனம், விசாலம் ஆகிய கவிதை தொகுதிகளும், அப்பாச்வின் நிழல் என்கிற சிறுகதை தொகுப்பும் முன்பாக வெளியிட்டவர். திருப்பூரில் வசிக்கிறார்.