ஆர்,ஷண்முகசுந்தரம் எழுதிய காலகட்டம் இந்தியா சுதந்திரம் வாங்கும் முன்பான காலகட்டம். எப்போதும்போல் மழை என்கிற பிரச்சனை இந்த மண்ணுக்கு மற்ற இடங்களை விட குறைவாகவே பெய்யும் என்கிற விசயமெல்லாம் இவரது புத்தகங்கள் வாயிலாக அறிந்த நான் வெளியூர்களில் பெய்யும் மழை பற்றியான செய்திகளில் ஆச்சரியமே அடைவேன். இந்த மழைப்பிரச்சனை இந்த மண்ணில் வியாபார நோக்கோடு விற்பனையாகிக்கொண்டிருக்கிறது இப்போது. எங்கும் பனைமரங்கள் இப்போது இல்லை.

இவர் மண்ணான கிரனூரில் இவர் குறிப்பிட்ட கோவில்கள் இன்னமும் பக்தி மார்க்கத்தோடுதான் இருக்கின்றன. தேங்காய் களங்கள் இப்போது ஊரைச்சுற்றிலும் பெருகிவிட்டன. தேங்காய் உடைப்பு தீவிரமாய் ஓடுகிறது. சுற்றுப்பட்டு எங்கும் ஆஸ்பெட்டாஸ் சீட் போட்ட சின்னச்சின்ன அறைகளில் குடும்பம் சகிதமாய் ஒரு முழுத்தோட்ட அமைப்பில் வெய்யிலில் வாழ்கிறார்கள். இதே அறையொன்றில் மதிய வெய்யலில் ஒரு அறைக்குள் பத்து நிமிடம் கூட என்னால் அமர்ந்திருக்க முடியவில்லை. இதையெல்லாம் எழுதலாமே.. என்று பேசுகையில் நண்பர்கள் சொல்லியபோது.. என்னால் சோகங்களை எழுத்தில் கொண்டுவர இயலாது என்றே கூறினேன்.

ஆர்.ஷண்முகசுந்தரம் தன் எழுத்துக்களில் அக்காலத்திய கொங்கு கிராமிய வாழ்வை எழுதியிருக்கிறார். அவருக்கு எழுத்தில் அதீத ஈடுபாடு இருந்திருக்கிறது. அதற்கான தூண்டுகோளை யாரேனும் ஒருவர் உள்ளூரிலேயே சின்னவயதில் கொடுத்திருக்க வேண்டும். எழுதிய எழுத்தை ‘சூப்பரோ சூப்பர்’ என்று யாரேனும் எழுத்தாளனுக்கு சிறுவயதில் கூற வேண்டும். அப்படி யாரும் இல்லாமல் இருந்திருந்தால் அவர் எழுதியிருக்க வாய்ப்பிருக்காது.

பொதுவாகப்பார்த்தால் இவரது எழுத்துக்கள் அனைத்தும் ஒரு நாடகத்தன்மையை தன்னகத்தே தக்கவைத்திருக்கிறது. அது ஒவ்வொரு நாவலின் இறுதி அத்தியாயங்களில் வெளிப்படுவதை நாம் எளிதாகவே காணலாம். அவர் தன்னிச்சையாக எழுதியவர். அவர் கதைகளின் துவக்கம் எந்த நாவலிலும் அட்டகாசமாக இருக்கிறது. போகப்போக சூடு பிடிக்கிறது. எல்லாம் அவர் இஸ்டத்திற்கு நகருகிறது. இறுதியாக ஒரு நாவலை முடிக்க வேண்டிய நேரத்தில்.. அவரிடம் அதுவரை எழுதிய சிந்தனைகள் தான் வாசித்த பிற நாவல்களின் முடிவுகள் காரணமாக குழப்பத்தில் ஆழ்கிறார். வாசிப்பாளனுக்கு ஒரு நாவலின் முடிவை அவன் கேட்காமலேயே அவனுக்கான முடிவைத்தர திடீரென தீர்மானிக்கிறார். ஆர்.ஷண்முகசுந்தரத்தின் நாவல்கள் அனைத்துமே படிப்போருக்காக எழுதி முடிக்கப்பட்ட முடிவுகளாக நான் இப்போது முடிவுக்கு வருகிறேன். அதிலும் அவரின் அவசரம் ஏன்? என்று என்னால் விளங்கிக்கொள்ளவே முடியவில்லை.

இன்று தமிழ் இலக்கிய உலகில் தேடப்படும் எழுத்தாளராக அவர் இருப்பது ஒன்றும் ஆச்சரியமல்ல. தனக்கான எழுத்தை சுதந்திரமாக எழுதிய எழுத்தாளர்கள் அனைவருமே பிற்காலத்தில் தேடப்படுவார்கள். அண்ணாரது எழுத்தில் எவ்வித கவர்ச்சிகளுமில்லை. ஆனால் அதற்காகவும் தன் எழுத்துகளில் அவர் மெனக்கெட்டிருக்கிறார் என்பதை ‘மனநிழல்’ நாவலை வாசிக்கையில் நான் உணர்ந்தேன்.

சாதாரணமாக ஆரம்பிக்கும் நாயகனின் காதல் அவனை எவ்வளவு தூரம் இழுத்து வருகிறது மனக்குழப்பத்தினுள்? சொல்கிறார் சொல்கிறார் சொல்லிக்கொண்டே இருக்கிறார். குஞ்சாள் என்று அவர் வைக்கும் பெயர் அக்காலத்திய கொங்கின் தலைசிறந்த பெயர். ஒவ்வொரு ஊரிலும் குஞ்சாள்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள் அப்போது. இன்றும் எனக்குத்தெரிந்து ஒரு குஞ்சாள் கிழவியாய் இருக்கிறாள். அவ்வளவுதான். இனி குஞ்சாள்கள் கொங்குமண்ணில் பிறப்பெடுக்கப்போவதில்லை. ஒவ்வொரு குஞ்சாள்களுக்குள்ளும் ஒரு உணமைக்காதல் இருந்திருக்கலாம். கடைசி குஞ்சாளோடு இந்தமண் உண்மைக் காதலையும் மறந்துவிடும்!

மன நிழல் நாவல் ஆரம்ப அத்தியாயம் ஆடிக்காற்றில் காங்கயத்திலிருந்து (காங்கேயம்.. இப்படித்தான் எழுதணும் கோமு.. சொன்னவர் இன்றில்லை) பொடிநடையாய் காடுகாடுகாடாய் நடந்து (இட்டேறி வரவில்லை) கீரனூர் வந்துசேரும் நாயகன் வாயிலாக கதை நமக்கு அவ்வளவு நிதானமாக சொல்லப்படுகிறது. அம்மா மீதான கரிசனமும் அந்த அத்தியாயத்தில் நேர்த்தியாய் விவரிக்கப்படுகிறது. வாசிப்பாளனும் நிதானமாய் கீரனூர் என்கிற கோவில்கள் சூழந்த கிராமத்தினுள் நுழைந்துவிடுகிறான். நாயகனின் அப்பா பெண்கள் மீது ஆர்வமாய் இருந்தார் என்பதும் ஓரமாய் கதைக்கு இருக்கட்டுமே என்று சொல்கிறார். நாயகனின் தாய் போன்ற அம்மணிகள் இன்றும் இந்த மண்ணில் வாழ்கிறார்கள். பெற்றெடுத்த ஒரே பிள்ளைமீது எந்தத் தாயிற்குத்தான் பாசமிருக்காது?

உள்ளூர் பிரச்சனைகளை பஞ்சாயத்து என்று பெரிய மனிதர்கள் கோவில் திடலில் அமர்ந்து பேசி தீர்ப்பளிக்கும் வழக்கம் அப்போது நடைமுறையில் இருந்திருக்கிறது. கிட்டத்தட்ட என் ஊரில் கூட 1990 வரை அந்த வழக்கம் கோவிலில் நடந்தது. அதுவும் என்னாலே முடிவுக்கு வந்தது என்றே எனக்குத்தெரிகிறது. கிரிக்கெட் அப்போது மிகச்சிறந்த விளையாட்டு எங்களுக்கு. நான் அடித்த ஒரு பந்து உள்ளூர் நாவிதர் வீட்டு ஓட்டின் மீது போய் விழுந்து ஒரு ஓடு உடைந்துவிட்டது. அப்போது பிரச்சனை ஒன்றுமில்லை. கோவில் விஷேசத்தின் போது மறுபூஜை நடக்கும் வெள்ளிக்கிழமை இரவு கணக்கு வழக்கு பார்க்கும் சமயத்தில் இந்தப்பிரச்சனையை நாவிதர் சபையில் கொண்டு சென்றிருக்கிறார். எனக்கு முக்கியஸ்தரிடமிருந்து அழைப்பு வந்தது. ‘வர முடியாது.. நாவிதர் என்னிடம் நேராக பேசியிருந்தால் (இரு வாரம் முன்பாக) நானே கூரைமீதேறி ஓட்டை மாற்றிக் கொடுத்திருப்பேன். இதற்காக கோவிலுக்கு வந்து இதே பதிலை கையை கட்டிக்கொண்டு சொல்ல முடியாது’ என்று சொல்லிவிட்டேன். பிற்பாடு அப்படியான நாயங்கள், பஞ்சாயத்துகள் கோவிலில் இல்லை.

இந்தக்கதையில் பெரியபாப்பா உள்ளூர் ஆள் ஒருவனோடு சோடி போட்டு வந்து வாழ்கிறாள். அவளது நடவடிக்கை காரணமாக ஊரை விட்டு தாட்டி அனுப்பனும் என்பதே பொதுவான கருத்தாய் ஊருக்குள் நாயகன் வரும் சமயம் இருக்கிறது. நாயகனின் வீட்டிலேயே அடுத்த நாள் பஞ்சாயத்து நடக்கிறது. நாயகனின் வீட்டில் குஞ்சாள் என்கிற பெண் வெளியூரிலிருந்து 13 வயதில் கொண்டுவந்து சேர்க்கப்படுகிறாள் காப்பாற்ற யாருமில்லை என்று. அந்தபெண்ணிற்கு பெரியபாப்பாவை பிடித்துப்போகிறது. அவளோடுதான் எந்த நேரமும் இருக்கிறாளென கதை பிற்பாடும் நடக்கிறது. நாயகன் கருத்தாக பெரியபாப்பா ஊரில் இருந்து விட்டுப்போகட்டும் என்று சொல்லிவிடுகிறான். இதைத்தொட்டு நடைபெறும் கதை தான் நாவல்.

நாயகன் கோவையில் கல்லூரியில் படிக்கிறான். கதைக்காகவே அவன் படிக்கிறான் என்பது வாசிப்போருக்கு தெரியவரும். அவன் மனது குஞ்சாளிடம் இருக்கிறது, மனித மனம் அப்படித்தான் காலகாலமாய் இருக்கிறது. அவ்வளவு அழகாக புத்தகத்தின் பாதிவரை நகர்ந்த நாவல் நாடகம் நடத்தும் முதலாளி மூலமாகவே நாடகத்தன்மைக்கு மாறுபடுகிறது. வேறு வழியில்லை. நாம் வாசித்துத்தான் தீர வேண்டும். கதையின் கோர்வை நாடகக்கம்பெனி நடத்தும் மனிதரின் இயல்புகளை நாயகன் மூலம் சொல்ல ஆரம்பிக்கிறது,

மனநிழல் என்கிற தலைப்பிற்கேற்ப அவ்வப்போது நாயகனின் காதல் நினைவுகள் வந்துகொண்டேயிருக்கிறது. இந்த நாவலை நான் இப்போதுதான் வாசிக்கிறேன் என்பதால் முன்பே படித்த சில நாவல்கள் வாயிலாக இப்படித்தான் நாவல் பயணப்படும் என்று உள்ளத்தில் சொல்லிக்கொண்டே இருந்தது. பெரியபாப்பாவை ஊருக்குள் அழைத்துவந்த கேரக்டர் அடிக்கடி கோவையில் நாயகனை சந்தித்து வயிற்றெரிச்சலில் பல உள்ளூர் விசயங்களை சொல்வதாக அமைகிறது.

பெரிய பாப்பாவோடு குஞ்சாள் அடிக்கடி காங்கேயம் தியேட்டருக்கு சினிமா பார்க்கப்போகிறாள். நாடகம் பார்க்க போகிறாள். இவனோ கடிதம் வாயிலாக குஞ்சாளுக்கு பெரியபாப்பாவோடான தொடர்பை துண்டித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறான். எல்லாம் இவன் நினைப்பு போல நடந்தால் தானே!  யாருக்கு நடக்கிறது அவரவர் நினைப்பு போலவே? பெரியபாப்பாவோடு குஞ்சாள் நாய்கன் சொல்கிறானே என்று தொடர்பை விட்டுவிடவில்லை.

இறுதியாக பெரியபாப்பா சென்னிமலையில் குஞ்சாளை மனைவியை இழந்த 60 வயது பெரியவருக்கு மனைவியாக மாற்றுகிறாள். அடுத்த கொஞ்ச நேரத்திலேயே அவரது மகன்கள் மூலமாக தாலியை இழக்கிறாள் குஞ்சாள். இந்த விசயங்கள் நாவல் தகவலாகவே சொல்லப்படுகின்றது. எழுதியிருக்கலாம் என்றே நான் இப்போது யோசிக்கிறேன்.

குஞ்சாளைத்தேடி நாயகன் அலைகிறான். மனம் பித்துப்பிடித்ததை உணர்கிறான். நமக்கும் பித்து பிடிக்கிறது மெதுவாக! ஆனால் முடிவை நோக்கி வேகம் பிடித்த ஆர்.ஷண்முகசுந்தரம் நமக்கெல்லாம் ஒரு பித்தும் பிடிக்காதென வெகு விரைவாக நாவலையும் முடித்து வைக்கிறார்.

பஞ்சாயத்து நாயகனின் வீட்டில் நடக்க ஆரம்பமாகையில் முதல் வார்த்தையாக பஞ்சாயத்து பெரிய மனிதர் ஆரம்பிக்கும் வார்த்தை… “இந்த முண்டைக் கெரகம் புடிச்ச எழவுக்கெல்லாம் நான் போறதில்ல அப்புனு!’ வாசிக்கையில் இன்னமும் பெண் சம்பந்தமான பிரச்சனை என்றால் யாருமே முதலாக சொல்லும் வார்த்தை இந்த மண்ணில் இது தான்.

அண்ணார் என்னவிதமான முடிவுகளையும் வைத்துவிட்டுப்போகட்டும் அவர் நாவலில். அதெல்லாம் ஒரு பிரச்சனையல்ல தேர்ந்த வாசகனுக்கு என்றுமே! ஒரு கிராமம். அதில் வாழும் வெள்ளந்தியான மனிதர்கள். ஊரில் பொழுது போக்கிற்கென ஒரு பொது மேடைத்திண்டு, கோவில், கள்ளுக்கடை, தோட்டம் காடு.. அதில் விளையும் பருத்தி, சோளம் பற்றியான தகவல்கள், சொத்துப்பிரச்சனை, மனித மனங்கள் கோபதாபங்கள் கொண்டு நடத்தும் சூழ்ச்சிகள்.. இவைகளை அக்காலத்திலேயே கையிலெடுத்து அழகாககவும் நிதானமாகவும் தன் நாவல்களில் இடையிடையே பேசுகிறார் ஆர்.ஷண்முகசுந்தரம்.

இனி நாவலில் தட்டுப்பட்டவைகள் :-

’வேய்க்கானம்’ (அறிவு) என்கிற வார்த்தை இன்னும் அழியவில்லை. குஞ்சாளுக்கு அது சிறுவயதிலேயே இருப்பதாக நாயகன் சொல்கிறான். என்னவொரு அழகான கொங்கு வார்த்தை!

கண்ணில் வெள்ளைப்படலம் வயதாகையில் தோன்றுவது இயல்பு. அக்காலத்திய உணவுப் பழக்கவழக்கங்களை நாம் அறிவோம். இன்று கம்பு, ராகி, சிவப்பரிசி, கறுப்பரிசி, சோளம் என்று தேடிப்போய் விலை கொடுத்து குக்கரிலேனும் செய்து ‘நல்லது.. உடம்புக்கு நல்லது’ என்று சொல்லிக்கொண்டே ஊறுகாய் வைத்து உண்கிறார்கள்.

அப்போதும் கண் ஆப்ரேசனுக்கு இப்போது போலவே கோவைதான் நம்பிக்கையாய் சென்றிருக்கிறார்கள். ‘நாங்கூட கண்ணாடி மாட்டிக்கலாமுன்னு தான் நெனச்சேன்.. ஆனா ஆயுசு யோகத்தை அது பாதிச்சிருமாம்!’ பழங்காலத்திய நம்பிக்கையை நாம் இந்த வார்த்தை மூலமாக உணருகிறோம். கண்ணாடி பார்த்தால் ஆயுசு போயிரும் என்று இன்னமும் நம்பும் மனிதர்கள் போல! (போட்டா எடுத்தாலும்) ஆனால் அதிலும் உண்மையிருக்கிறது. இன்றைய சிறார்கள் அலைபேசியை எந்த நேரமும் கையில் வைத்து குனிந்தபடியேதான் இருக்கிறார்கள். அவர்கள் பவர் கண்ணாடிதான் கண்களுக்கு அணிந்திருக்கிறார்கள்.

பூப்பறிக்கும் பண்டிகை தமிழ்ப்பொங்கல் விழாச் சமயத்தில் நீர்நிலை தேடி பெண்களும் ஆண்களும் கையில் தீம்பண்டங்களை எடுத்துப்போய் குடும்பம் சகிதமாய் அமர்ந்து நாயம் பலபேசி பொழுதை போக்கடித்து வருவது. கும்மிப்பாடல்களும் இணைந்தே அங்கே ஆடிப்பாடி மகிழ்வர். பல காதல்கள் உற்பத்தியாகுமிடமும் அங்கேதான்.

‘பூப்பறிப்பதும் இன்னிக்குத்தான் பொங்கலிடுவதும் இன்னிக்குத்தான்’ என்று சிறுமிகள் பாடிக்கொண்டு நொய்யலை (ஆறு) நோக்கிச் செல்வார்கள்’ என்று அண்னார் குறிப்பிடுகிறார். உள்ளூரில் அந்த வழக்கம் என் இளமைப்பருவத்தில் இருந்தது. அங்கே அப்படியொரு காதலும் திடீரென முளைவிட்டது, கவனித்த உள்ளூர் பெண்கள் ‘கோமான் இனி உள்ளூரு கோயிலுக்கு மணியாட்ட போயிருவான்!’ என்றெல்லாம் பேசினார்கள். அவ்வளவு அழகாய் இருந்தது நாட்கள். நானாவது … !

இன்று அந்த வழக்கம் அழிந்தது! அலைபேசிகள் சில நோம்பிகளை தன்வசம் எடுத்துக்கொண்டன. இந்தப்பணியை முன்பாக தொலைக்காட்சிப் பெட்டிகள் எடுத்து விழாக்களுக்கு சாவுமணி அடிக்கத்துவங்கியது பழைய கதை.

அடுத்து-

“சென்னிமலை தேரிலே கவுண்டிச்சிக எத்தனை நகை போட்டுக்கிட்டு வந்திருந்தாங்க தெரியுமிங்களா? மொழங்கை வரைக்கும் வளையல்க, கழுத்திலே சங்கிலிகளாப் புரண்டு கொண்டிருந்துது. பெரியபாப்பா கூட சொன்னாங்க, ‘பொளச்சா இப்பிடிப் பொளைக்கோணும்;ன்னு வாய்மேல கை வெச்சுக்கிட்டு சொன்னாங்க!’ –இது நாயகனிடம் குஞ்சாள் சொல்லும் வசனம்.

இன்று இப்படியான ஒரு வரியை நான் எழுத மாட்டேன். தேவையுமில்லை. இலக்கியம் காலத்தின் கண்ணாடி என்பது இந்த வரிகளை வாசிக்கையில் தெரிகிறது. எழுதினவற்றையே திருத்தி வெளியிட்டுக்கொண்டு இருக்கிறேன். காலத்தின் கண்ணாடியாக சாதி இல்லாமல் போகட்டும். இங்கே சென்னிமலை தேர் என்கிற விழா சம்பவங்கள், அதன் வரலாற்றை கொஞ்சமேனும்.. ஊரையே கதைக்களமாக நான் நாவலில் எழுதியிருக்கிறேன். அண்ணார் போகிற போக்கில் சென்னிமலை தேரை சாதி கொண்டு ஒரு விளம்பரம் செய்திருக்கிறார்.

இன்று தேர்த்திருவிழா அங்கே அக்காலம் போல ஊர் ஊராய் வண்டிகட்டிப்போய் விடிய விடிய அமர்வதில்லை. காலமாற்றத்தில் கோவில்களில் சாமிகள் கண்களில் பாலோ, ரத்தமோ வடிந்தால் தான் கூட்டம் கூடுகிறது. இல்லையேல் இன்று சிறு கோவில்களில் அம்மாவாசை சமயங்களில் நடப்பது போல சோறு போடணும்! ‘கோயில்ல சோறு போடறாங்க! கேஸ் அடுப்பை இன்னிக்கு பத்த வைக்க வேணாம்.. போயி சாப்டுட்டு பாக்குமட்டையில வாங்கி ஊடு கொண்டாந்துடலாம்!’

பண்ணாடி இந்த நாவலில் அம்மாவை இழந்து இளைத்துப்போன நாயகனைப்பார்த்து.. ‘இங்கபாரு, நீ மேக்கே (கோவை) போயி படிச்சுட்டு வந்திருக்கறே. மனசிலிருக்கறதை முழுங்காதே! அங்கத்தவ எவளாச்சிம் ‘சிலுக்குப் புலு’க்கின்னு திரியறவளைக் கட்டிக்கிறதா இருந்தாலும் மகராசனாக் கட்டிக்கப்பா. நாலு நாளைக்கி வாரி வெளியில இழுத்து அடிச்சா சொல்ற சொல்லை இமுக்குப் பொடுக்கின்னு பேசாம கேக்கறாளா இல்லையா பாரு. ஒழவுலேயும் வண்டியிலேயும் பூட்டினா எந்தக்காளைதான் வளிக்கு வராதப்பா? நீயே பாத்துக்கோ மொளகு வேவிச்சுக் கொட்டறதென்னோ மொளகு அறைக்கிறதென்னோ அடுப்புக்குள்ளே சொளமாடற தென்னோ சிறுமைக் கூத்துத்தா போ. நீ சித்தே உட்டுட்டு வரமாட்டீப்பா. நம்மைப் பெலத்தவங்க வந்தாக்கூட ரண்டு பேரும் சோத்துச் சட்டி சாத்துச்சட்டிக்குள்ளே கை உட்டுக்கிட்டு ஒளப்பறதைப் பாத்து, ‘அட தண்ணி தெவிக்குதுப்பா, சித்தெ கொண்டாங்’கின்னாக்கூட உன்ற ஊட்டுக்காரிக்கும் உனக்கும் காதா கேக்கப் போவுது’ என்று கூறி சற்று நிறுத்தினார். மொழி! மொழி!

மொழி!

சூலூர் விமான நிலையத்திற்கு தீ வைத்தவர்கள் பிடிபடவில்லை.. ஆண்டு 1942. நாவலில் வரும் தகவல். நா 1969-ல தாம்லா பொறந்தேன்!

அண்ணார் சொல்கிறார் நாவலில், ‘எங்கள் வட்டாரம் வறட்சிக்கு பெயர் பெற்றது. கிணற்றையும் குனிந்து பார்த்தால் தலையில் கட்டியிருக்கும் உருமால் நழுவிப் பாழும் கிணற்றுக்குள் விழுந்து விடும், குருவி குடிக்கக்கூட சொட்டுத்தண்ணீர் இல்லாத கிணறுகளை ஆழப்படுத்துதல் மனதையே ஆழப்படுத்தியதற்குச் சமானம், பணம் பாழானதுதான் மிச்சமாகும்.’

உருமால் கட்டும் வழக்கமும் இப்போது போய் விட்டது. காட்டில் திரியும் ஒன்றிரண்டு பெருசுகள் கூட கிரிக்கெட் தொப்பி அணிந்திருக்கிறார்கள்!

அம்மாவின் அனுமதியின்றியே பக்கத்து வீட்டார் வீட்டில் வந்து உப்பு, புளி கேட்டால் குஞ்சாள் எடுத்து ‘குரியாப்பு’ கொடுத்துவிடுவாள். குரியாப்பு என்றால் என்ன? அம்மாவிடம் விசாரித்தேன். வழக்கம்போல ’பே’ என்று முழித்தது. எனக்கு தெரியலை. மின்சாரம் சாதாரணமாய்.. ‘கேக்கறவங்களுக்கு குடுக்குறது தானுங்கோவ்!’ என்றாள். ஜீ தமிழில் சின்னப்பிள்ளைகள் பாட்டுப்படிப்பதை அவ்வளவு கவனமாய் இருவரும் கேட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டுமிருக்கிறார்கள்!

000

மனநிழல் –ஆர். ஷண்முகசுந்தரம். வெளியீடு- கற்கை பதிப்பகம்.

தொடர்புக்கு – 88383 23170. வாட்சப்பில் உங்கள் முகவரியை பதிவிடுங்கள்.

விலை – 130. கொரியர் செலவுடன் 160.

மற்ற பதிவுகள்

One thought on “மனநிழல் -பாமரப்பார்வை

  1. விரிவான, மிகச் சிறப்பான பார்வை அண்ணா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *