மாதம்ஒருமலேசியபுத்தகம்தொடர் 14 – ஊமைக்காயங்கள்

தயாஜி

     நடுகல்.காம் வாசகர்களுக்கு வணக்கம். நமது இன்றைய ‘மாதம் ஒரு மலேசிய புத்தகம் தொடர் 14-ல்’ ஒரு மாறுபட்ட புத்தகத்தைக் குறித்து தெரிந்து கொள்ளப்போகின்றோம். வழக்கமாக மலேசிய எழுத்தாளரின் நாவலையோ கவிதைத் தொகுப்பையோ சிறுகதைத் தொகுப்பைப் பற்றியோ தெரிந்து கொள்வோம்தானே. ஆனால்  இன்று ஒரு சிறுகதைத் தொகுப்பு குறித்து எழுதவுள்ளேன். அதுவும் 12 மலேசிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய ஒரு சிறுகதைத் தொகுப்பைக் குறித்து எழுதுகிறேன்.

இன்று எழுதுகின்றவர்களின் எழுத்துகளை வாசிக்கும் அதே சமயம்; நம் முன்னோடிகளின் எழுத்துகளை நாம் தவறாது வாசிக்க வேண்டும். எல்லாரையுமா என்று புருவத்தை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை. சிறந்ததாகச் சொல்லப்படும் படைப்புகளையாவது வாசித்துவிட வேண்டும். அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. சிறந்த படைப்பு என சொல்லப்பட்ட முன்னோடிகளின் படைப்பை; இன்றும் நாம் வாசிக்கும் போது அதை மீண்டும்  ‘சிறந்த படைப்பு’ என சொல்ல முடிகிறதா இல்லையா என்பது இலக்கியச் சூழனின் இன்றைய வளர்ச்சி எனலாம். அதனை தெரிந்து கொள்வதற்காவது வாசிக்கத்தான் வேண்டும்.

இன்றைய மலேசிய இலக்கிய சூழலில் ஓரளவு பிரபலமாக அறியப்படுகின்றவர்கள் எழுதுவதுதான் எழுத்து என்று வாசிக்கப்படுவதோடு குறிப்பிட்ட சிலரால் கொண்டாடப்படுவதும் நடக்கின்றது. புத்தகம் வெளியிடுவது ரொம்பவும் எளிதான காரியம் ஆகிவிட்டபடியால் சமூக ஊடகங்களில் தினம்  ஒரு கவிதை என எழுதி மறுமாதமே அதனை புத்தகமாக அச்சடித்துக் கொள்கிறார்கள். எழுதுவதும் எழுதியதை புத்தகமாக்குவதும் ரொம்ப எளிதாகிவிட்டதால் என்னவோ தரத்தில் ரொம்பவும் ஏளனப்படும்படி அமைந்துவிடுகிறது.

உடனே “நாங்கள் எல்லாம்  எழுதக்கூடாதா புத்தகம் போட கூடாதா….?” என சண்டைக்கு வந்துவிடாதீர்கள். புத்தகம் வந்த ஒரு மாதத்திலேயே அப்படியொன்று நடக்கவேயில்லை அப்படியொன்று வெளிவரவும் இல்லை அப்படியொன்றை வாசிக்கமில்லை என்கிற உணர்வைக் கொடுப்பதோடு இலக்கியச் சூழலில் எந்தவொரு சிறு சலனத்தையும் ஏற்படுத்தாத ஒரு புத்தகம் ஏன் எழுதப்படவேண்டும் என்கிற கேள்விக்கு அந்தந்த எழுத்தாளர்கள் ‘நான் ஏன் எழுதுகிறேன்?’  என்கிற கேள்விக்கு விடை கொடுத்தாலே போதுமானது.

இன்னொன்றையும் இங்கு சொல்லியாகவேண்டும், வெளிவந்த சமயத்தில் கண்டுகொள்ளாமல் இருந்த படைப்பு; எப்போதோ எங்கோ ஏதோ ஒரு வாசகனால் வாசிக்கப்பட்டு அது தன் இலக்கிய அங்கிகாரத்தை அடைந்துவிடுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் விதிவிலக்குகள் எப்போதும் விதிகளாக மாறுவதில்லையே.

நாம் ஏன் நமது முன்னோடி படைப்பாளிகளை வாசிக்க வேண்டும். நம்மைவிட அப்படியென்ன அவர்கள்  எழுதிவிட்டார்கள் என தெரிந்து கொள்வதற்கு அல்ல. அவர்களைவிட நம்மால் எவ்வளவு ஆழமாக எழுத முடியும் என்பதை தெரிந்து கொள்வதற்காகத்தான். இன்னும் சொல்லப்போனால் இங்கு பலரால் தாண்ட முடியாத இடத்தைக்கூட அன்றைய எழுத்தாளர்கள் தாண்டியபடி தங்களின் படைப்புகளைக் கொடுத்திருக்கவே செய்திருக்கிறார்கள்.

நாம் இயங்கும் தளத்தில் நமக்கு முன்னே இயங்கியவர்களையும்; நமக்கு முன்  நின்று இயங்குகிறவர்களையும் தெரிந்து கொள்வது நாம் இருக்கும் தளத்திற்கான மரியாதையைக் கொடுக்கக்கூடியது. ஏனேனில் அந்த மரியாதை நாம் இயங்கும் தளத்திற்கானது அல்ல; அத்தளத்தில் நம்மை இயக்கும் மனதிற்கானது.

தொடக்கத்தில் சொன்னது போலவே; இம்மாத ‘மாதம் ஒரு மலேசிய புத்தகம் தொடர் 14-ல்’ மாறுபட்ட சிறுகதைத் தொகுப்பைப் பார்க்கலாம்.

கெடா; மலேசிய நாட்டின் ஒரு மாநிலம். கடாரம் என்றும் பரவலாக அறியப்படும் மாநிலம். தமிழ் சார்ந்தும் பல வரலாற்று சிறப்புகள் கொண்ட மாநிலங்களில் இது முதன்மையானது என்றும் சொல்லலாம்.

‘கெடா மாநில எழுத்தாளர் வாசகர் இயக்கம்’, இந்தத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்கள். முதல் சிறுகதைத் தொகுப்பாக ‘பட்டினிக்குருவி’ என்ற சிறுகதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது. அதனையடுத்து ‘ஊமைக்காயங்கள்’ என்ற இரண்டாவது தொகுப்பை 1980-ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார்கள். அப்போது வ.முனியன்  இயத்தின் தலைவராக இருந்துள்ளார்.

இன்று ‘கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் இயக்கம்’ என்ற பெயரின் இவ்வியக்கம் தொடர்ந்து இயங்கியும் பல இலக்கிய முன்னெடுப்புகளைத் தொடர்ந்து செய்த வண்ணமும் இருக்கிறது.

இன்றிலிருந்து பார்த்தால் இந்தக் கதைகளுக்கு  46 வயது. சுவாரஸ்யத்திற்காக சொல்வதென்றால் என்னைவிடவும் அதிக வயதான கதைகள். இத்தொகுப்பில் கதையை எழுதிய சிலர் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள்., சிலரின் பெயர்கள் இப்போதுதான் அறிமுகமாகிறது.

இந்தக் கதைகளைக் குறித்து எழுதக் காரணம்; இன்றைய மலேசிய  எழுத்தாளர்கள் அங்கிருந்து எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என தெரிந்து கொள்வதற்காகத்தானே தவிர அவர்களை குறைத்து மதிப்பிடுவதல்ல. ஏனெனில் ஒரு காலக்கட்டத்தில் பாராட்டப்பட்ட கதைகள் இன்னொரு காலக்கட்டத்தில் காலாவதி கதைகளாகிவிடுகின்றன. பெரிதாக அறியப்படாத கதைகள் காலம் தாண்டி தனது இருப்பை தக்கவைத்து கொள்கின்றன.

மலேசிய எழுத்தாளர்கள் வரிசையில் நான், ஏறக்குறைய நான்காவது தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவன். நாளை நானும் என் கதைகளுக்காய் விமர்சிக்கப்படுவேன் என்ற தெளிவோடுதான் என் வாசிப்பையொட்டி இந்தக் கதைகளைக் குறித்து என் பார்வையைப் பகிர்கின்றேன்.

பிப்ரவரி முதல் நாள்; தைப்பூசம். அதற்கு ஏற்றார்ப்போலவே இத்தொகுப்பின் முதல் கதையும் தற்செயலாக அமைந்துவிட்டது.

‘முருகன் ஆட்டுவிக்கிறான்’ என்ற சிறுகதையை வ.முனியன் எழுதியிருக்கிறார். இந்தக் கதை, தைப்பூசத் தினத்தில் ஒருசிலர் செய்யும் ‘சேட்டைகளை’யும் இறைவன் தன் பக்தர்களிடம் அதனைக் கேட்கவில்லை எனவும் சொல்கிறது. இன்றும் தைப்பூசத் தினத்தில் பக்தியைக் கேலிக்கூத்துகளாக்கும் ஒரு சாரார் இருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்துக் கொண்டுததானே இருக்கின்றோம்.

மது குடித்துவிட்டு காவடியுடன் ஆடுவது. சினிமா பாடல்களுக்கு கூட்டமாக கூச்சலிட்டு கொண்டே ஆடுவது. ஊதியை ஊதிக்கொண்டே மற்றவர்களுக்கு தொல்லைக் கொடுப்பது. பந்துவிளையாட்டு குழுவின் கொடியை காவடியில் சேர்த்து காவடி எடுப்பது. அரைகுறை ஆடை; இப்படி பக்தர்களே முக சுழிக்கும் செயல்களை எந்தவொரு குற்றவுணர்ச்சியும் இல்லாமல் செய்துகொண்டு தன்னை ஒரு நாயகனாகவோ நாயகியாகவோ நினைக்கும் பலரை நாம் பார்த்திருப்போம். பக்தி கொண்டாட்டமாம மாறிவிட்டது இங்கு சிக்கலில்லை. ஆனால் அந்தக் கொண்டாட்டத்தை நாம் எப்படி கொண்டாடுகின்றோம் என்பதில்தான் நம் சமுதாயத்தின் மானம் இருக்கிறது.

வ.முனியனின் ‘முருகன் ஆட்டுவிக்கிறான்’ சிறுகதை தைப்பூசத்தில் நடக்கிறது. காவடி எடுக்க வரிசையில் நிற்கின்றவர்களுக்கு ஒருவர் பின் ஒருவராக அருள் வருகின்றது. அவர்கள் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்த முருகன் சந்நிதானத்துக்கு செல்கிறார்கள். கதையின் நாயகன் ரொம்ப நேரம் நின்றபடியிருக்க; அருள் வரவேயில்லை. நாயகனின் மனம் பதட்டமடைகிறது. எல்லோரும் தன்னைப்பற்றிதான் ஏதேதோ பேசுவதாக நினைக்கிறார். கடைசியில் அவரது எதிர்வீட்டுக்காரருக்கே அருள் வந்துவிடுகிறது. ஆனால் அவர் அப்படியொன்றும் உத்தமர் இல்லை என நாயகனுக்கு தெரியும்.

நேரம் ஆக ஆக, பூசாரியும் காவடியை எடுக்க சொல்லிவிட்டு அடுத்த பக்தருக்கு அருள் வரவைக்க சென்றுவிடுகிறார். அருள் வராத மன வேதனையில் தான் என்ன தப்பு செய்தேன் என்கிற கேள்வியோடே காவடியை எடுத்துக் கொண்டு நாயகன் புறப்படுகின்றார்.

செல்லும் வழியில் ‘விசிலடிச்சான் குஞ்சுகள்’ காவடிகளைச் சூழ்ந்துகொண்டு பறைகளை அடித்துக்கொண்டு அதன் படி ஆட்டம் ஆடுகின்றதை நாயகன் பார்க்கிறார்.

கோவிலை நெருங்கவும் ஓர் அறிவிப்பு கேட்கிறது. “பக்தர்களே தயவு செய்து உங்கள் ஆட்டத்தை நிறுத்திவிடுங்கள் முருகனுக்கு காவடி எடுங்கள், ஆனால் அமைதியாக எடுத்துச் செல்லுங்கள். பிறர் பார்த்து நம்மைக் கேலி செய்ய இடம் தராதீர்கள். பறை அடிப்பதையும் நிறுத்திவிடுங்கள், அது நம் சமயத்தில் இல்லாதது. இல்லாத ஒன்றை பாதியில் வந்த ஒன்றை பாதியிலேயே விட்டுவிடுவோம்” என இளைஞன் ஒருவன் ஒலிபெருக்கியில் பேசுகின்றான்.

அதனை பார்த்த நாயகனுக்கு குழப்பம், முருகனின் அருள் பெற்று ஆடுபவர்களை ஆடாதீர்கள் என சொல்வதற்கு இவர் என்ன பைத்தியமா என மனதில் கேட்டபடியே முருகனின் சந்நிதானத்தை அடகின்றார் நாயகன்.

பலரும் அருள் வந்து ஆடியபடி அங்கு நிற்க, அருள் வராத நாயகன் தன் மனக்குறையை முருகனிடம் கேட்கிறார். சட்டென முருகனின் முகத்தில் புன்சிரிப்பு தோன்றுகிறது. ஏதோ இனம் புரியாத உணர்ச்சி நாயகனுக்கு ஏற்படுகிறது. உடலும் சிலிர்க்கிறது.  தன்னை மறந்த நிலையில் ‘முருகா… முருகா..’ என சொல்லிறார் என்று கதையை முடிக்கிறார் எழுத்தாளர்.

கதையில் முடிவில் நாயகனுக்கு அருள் வந்ததாகவும் பொருள் கொள்ளலாம். அதுவெல்லாம் வேண்டாம் பக்தி கொண்ட மனமே முருகனுக்கு விருப்பம் என்பதாகவும் பொருள் கொள்ள சாத்தியங்கள் உள்ள சிறுகதை.

இச்சிறுகதையில் சொல்லியிருக்கும் சிக்கல் இன்றும் இருக்கிறது. இக்கதை எழுதப்பட்ட காலத்தில் இருந்து இன்றுவரை இச்சிக்கல் வளர்ந்து கொண்டு இன்னமும் பலமாக மாறியிருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. பல சமய அமைப்புகள் இருந்தும் இந்நிலை தொடரவே செய்கிறது. இந்தக் கதையை மீண்டும் வாசிப்பதில் வழி இன்றைய பக்தர்களுக்கும் ஏதோ ஒரு செய்தி இருக்கிறதுதானே.

இரண்டாவதாக ‘ஊமைக்காயங்கள்’ என்ற சிறுகதையை எம்.கே.ஞானசேகரன் எழுதியிருக்கிறார். இச்சிறுகதை கணவனின் இயலாமை அவனது மனத்தையும் குடும்பத்தையும் எப்படி சிதைக்கிறது என சொல்லும் அதே சமயம் கணவன் மனைவிக்கு இருக்கவேண்டிய காதல் எதன் பொருட்டு தொடர்ந்து இருக்கிறது எதன் பொருட்டு மெல்ல மெல்ல சிதைகிறது எனவும் சொல்லிச்செல்கிறது.

மூன்றாவதாக ‘சொந்த நிலம்’என்னும் சிறுகதையை மு.ப.மாசிலாமணி எழுதியிருக்கிறார். அழகப்பனின் அப்பா நிலம் வாங்குவதாக சொல்லி ஒருவரிடம் ஏமாந்துவிடுகின்றார். அவர் மட்டுமல்ல அப்படி பலரையும் அந்த நபர் ஏமாற்றியிருக்கிறார். தனது வருங்கால சேமிப்புகள் எல்லாவற்றையும் ஏமாந்த அப்பா, நோய்வாய்ப்பட்டு இறக்கிறார். இருபத்தேழு வயதில் மகளும், பதினெட்டு வயதில் மகனும் ஒரு கடைசி பெண் குழந்தையும் தந்தையை இழக்கின்றார்கள்.

அப்பாவின் இறுதி ஊற்வலத்தில் அப்பாவை ஏமாற்றிய நபர் யாரோ ஒருவருடன் காரில் அமர்ந்திருப்பதை மகன் பார்க்கிறான். அது யாரென அவனக்கு அடையாளம் தெரியவும் அந்தக் கார் அங்கிருந்து செல்லவும் சரியாக இருக்கிறது. ‘அழகப்பான் அந்தக் காரை திரும்பிப்பார்க்கவில்லை. என்று எழுத்தாளர் சொல்லும் இடத்தில் இச்சிறுகதை முடிந்திருக்க வேண்டும். அந்த நேரத்தில் ஒரு மனிதன் வேறென்ன செய்ய முடியும். சினிமாவில் காட்டுவது போல காரை நோக்கி ஓடவா முடியும். இனி என்ன செய்ய வேண்டும் என அழகப்பனுக்கு தெரிந்திருக்கிறது. அவனுக்கு அவன் பொறுப்பு புரிந்திருக்கிறது. அதனால்தான் என்னவோ அப்பாவை ஏமாற்றி அவர் இறப்பிற்கு காரணமாக இருந்த நபர் காரில் செல்லும் போது அந்தப் பக்கமே அவன் திரும்பிப் பார்க்கவில்லை.

ஆனால் எழுத்தாளர் இந்த இடத்தை தாண்டியும் சிலவற்றைச் சொல்கிறார். இச்சிறுகதையில்  இருந்த சில குறைகளைவிட இதுதான் பெருங்குறையாக வந்துவிட்டது. அப்பாவின் மரணத்திற்கு காரணமான நபரை பார்த்து செய்வதறியாது அந்த நபரை திரும்பவும் பார்க்காமல் இருந்ததோடு நில்லாமல், ‘இன்னும் எத்தனைப் பேருக்கு வைத்தியலிங்கம் சொந்த நிலம் வாங்கித்தரப் போகிறானோ?’ அழகப்பனின் முடிவில்லாத சிந்தனை அலைமோதுகிறது; என கதையை கூடுதலாகச் சொல்லி முடிக்கிறார் எழுத்தாளர். இது தேவையற்ற ஒன்றாகவே படுகிறது.

நான்காவது சிறுகதையாக; ‘மொட்டைக் கடிதம்’ என்ற சிறுகதையை பூங்கா சிவாஜி செல்வன் எழுதியிருக்கிறார். மொட்டைக் கடிதத்தால் கணவன் மனைவியை வீட்டை விட்டு துரத்தும் கதை.

மனைவி மீது சந்தேகப்பட்டு வீட்டை விட்டு துரத்துவதில் இருந்து கதையை ஆசிரியர் ஆரம்பிக்கின்றார். நமக்கும் அங்கிருந்துதான் கதை தெரிகிறது. அவ்வப்போது வீட்டிற்கு மொட்டைக்கடிதம் வருகிறது. மனைவி மீதான அவதூறுகள் அதில் இருக்கின்றன. முதலில் கணவன் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. யாரோ தனக்கு அழகான மனைவி கிடைத்துவிட்ட பொறாமையில் இப்படி செய்வதாக நினைக்கிறான். ஆனால் தொடர்ந்து கடிதங்கள் வந்தபடி இருக்க ஒரு கட்டம் அது கணவனின் மனதை குழுப்புகிறது. அவனுக்குள் சந்தேகம் எழுகின்றது. மெல்ல மெல்ல அந்த சந்தேகம் அவனது மனைவி மீது வெறுப்பை கொட்டுகிறது. ஒரு கட்டத்தில் அந்த மொட்டைக் கடிதத்தை முழுமையாக நம்பிய கணவன் மனைவியை வீட்டை விட்டே துரத்துகிறான். ஆனாலும் அவனுக்கு இது யாரோ செய்த சூழ்ச்சியாகவே தோன்றவும் செய்கிறது. அவன் சந்தேகம் யார்யார் மீதோ விழுகிறது.

தன் பிறந்த வீட்டிற்கு விரட்டப்பட்ட மனைவியோ அங்கு தன்  அப்பா அம்மா இல்லாத சமயத்தில் தன் காதலனுடன் சல்லாபிப்பதாக கதை முடிகிறது. இதுவரை வந்த மொட்டைக் கடிதத்தின் காரியமும் காரணமும் நமக்கு இறுதியில் புரிகிறது.

‘அட பிச்ச்டைக்கார நாய்களே’ என்ற ஐந்தாவது சிறுகதையை எஸ்.கமலா சங்கர் எழுதியிருக்கிறார். தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும் என பாடம் எடுக்கும் கதைகளில் ஒன்று. ஒரு கண்ணில் பார்வை இல்லாமல் மற்றவரின் உதவியை நாடும் நபருக்கு தான் நன்கொடை வாங்கி தருவதாக கூறி அவருக்கு சேரவேண்டியதை தன் குடும்பத்திற்கு பயன்படுத்தும் தோட்டப்புற தலைவரின் கதை.

‘பெரிய மணி’ என்னும் ஆறாவது சிறுகதையை பி.யூ.சுப்பன் எழுதியிருக்கிறார். சம்சு (சாராயம்) குடித்து இளைஞர்கள் மட்டுமல்ல வீட்டில் இருக்கும் வயோதிகர்களும் பாதிக்கப்படுவதால் சம்சு விற்கும் கடையை காவல் துறையிடம் காட்டிக்கொடுக்க நினைக்கிறான் நாயகன். அந்தக் கடையைப் பார்க்க செல்லும் போது அதே கடையில் சம்சுவை வாங்கிகொண்டு சீருடை அணியாத போலிஸ்காரர் வெளியேறுகிறார் என கதை முடிகிறது.

ச.வேணுகோபால், ‘பத்துகாசு’ என்னும் சிறுகதையை ஏழாவது சிறுகதையாக எழுதியிருக்கிறார். பட்டணத்தில் பிச்சையெடுக்கும் நபருக்கு வழக்கத்தைவிட கூடுதலாக காசு போடும் மனிதனை எங்கோ பார்த்த நினைவு வருகிறது. யோசிக்கையில்தான் தெரிகிறது பல ஆண்டுகளுக்கு முன் தன்னுடன் தோட்டத்தில் வாழந்த முனியாண்டிதான் அது. அப்போது ரொம்பவும் கஞ்சனாக இருந்தவன் அவன். அதோடு காலத்திற்குன் ஏற்றபடி ‘பங்குகள்’ வாங்கியும் கூட்டுறவு கழகத்தில் சேர்ந்தும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இன்று பெரும் பணக்காரராக இருப்பது தெரியவருகிறது. தான் முனியாண்டி போல பணத்தை சேமிக்காமல் இருந்ததை நினைத்து நாயகன் வருந்துகிறார்.

எட்டாவது சிறுகதையாக ‘சிறைப்படும் சிட்டுக்குருவிகள்’ என்னும் கதையை பெ.சந்தியாகு எழுதியிருக்கிறார். இதுவும் பிரச்சார கதைதான். சீரழியும் இளைஞனுக்கு நல்வழி காட்ட நாயகன் முயல்கிறான். அந்த இளைஞனோ கஞ்சா குடித்ததற்கு கைது செய்யப்பட்டது தெரியவருகிறது. உடனே போலீஸ் நிலையத்திற்கு நாயகன் புறப்படுகின்றான்.

ஒன்பதாவது சிறுகதையாக ‘விரிசல்’ சிறுகதையை த.ப.இலட்சுமணன் எழுதியிருக்கிறார். கணவன் மனைவி தங்களில் பழைய காதல் கதைகளை பேசிக்கொள்வதால் ஏற்படும் குடும்பச்சிக்கல்தான் கதை. தன் மனைவி காதலித்தவனை கல்யாணம் செய்யாமல் நாயகனை கல்யாணம் செய்கிறார். நாயகனுக்கும் அப்படியொரு கதை இருக்கிறது. ஒரு பெண்ணால் ஏமாற்றப்பட்டிருக்கிறார். அதனால் தனக்கு ஏற்பட்ட பாதிப்பு போலத்தான் தன் மனைவியின் முன்னால் காதலனுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என மனைவியை வெறுத்து உறவை முறித்துக்கொள்கிறார். அவ்வளவுதான் கதை.  ரொம்பவும் தீவிரமாக இரு மனங்களின் பாதிப்புகளை பதிந்திருந்தால் நல்ல கதையாக வந்திருக்கவேண்டிய கதைதான். ஆனால் வெறுமனே ஜனரஞ்சக கதையாக நின்றுவிட்டது.

‘ஒரு குடும்பம் தேய்கிறது’ என்னும் பத்தாவது சிறுகதையை பெ.க.நாராயணன் எழுதியிருக்கிறார். கணவனுக்கு தெரியாமல் மனைவி கடன் வாங்குகிறார். அதை ஈடுகட்ட கணவன் கொடுத்த வாடகை பணத்தை பயன்படுத்துகிறார். அது கணவனுக்க் தெரியவரவும் எதுவும் சொல்லாமல் கணவன் வீட்டை விட்டு வெளியேறுகிறார். ரொம்பவும் மேலோட்டமாக சொல்லி கடந்துவிட்ட கதை.

தமிழ்ப்பித்தன் பதினோறாவது சிறுகதையாக ‘விடுதலை’ சிறுகதையை எழுதியிருக்கிறார். குடிக்கு அடிமையான கணவனால் மனைவி இறக்கிறார். அதுதான் அந்தப் பெண்ணுக்கு விடுதலை என எழுத்தாளர் சொல்கிறார்.

குடிபோதையில் மனைவியை கணவன் அடிக்கின்றான். அவள் கீழே விழுந்து இறக்கின்றாள். மனைவியை எழுப்ப முயலும் மாமியார் அவள் இறந்துவிட்டதை தன் மகனிடம் சொல்லி அழுகின்றார். மெத்தையில் சென்று படுத்த கணவன் சட்டென எழுந்து வந்து இறந்த மனைவியில் உடலைக் கட்டிப்பிடித்து அழுவதோடு, “என்னுடைய அறியாமையால், என் குடிவெறியால் உன்னைக் கொன்னுட்டேனே” என கதறுகிறான் கணவன் உடனே எழுத்தாளர் உள்ளே நுழைந்து இனி எழுது என்ன பயன்? என கேட்கிறார். சினிமாவில் கூட குடித்து போதையில் இருக்கும் குடிகாரர்கள் இவ்வளவு வேகத்தில் தெளிவடையமாட்டார்கள். அப்போது எழுதிய கதைதான் என்றாலும் இன்றும் இப்படி கதாப்பாத்திரத்தின் தன்மையைப் புரிந்துகொள்ளாமல் வசனம் வசனமாக எழுதித்தள்ளும் எழுத்தாளர் இருக்கிறார்கள்தான்.

விடுதலை என்பதை தன் கருணை கொண்ட பார்வையாய் எழுத்தாளர் சொல்ல நினைத்து குடிகாரனின் மனைவி இறப்பதுதான் அவளுக்கான விடுதலை என சொல்ல நினைத்தாலும் அது எப்போதோ காலாவதியான ஒன்றுதான். மரணத்தை நியாயப்படுத்தக் கூடாதா என கேட்கிறீர்கள்தானே; அதற்கு முன்பாக நாம் எழுதும் கதைக்கு நாம் நியாயம்  செய்திருக்க வேண்டும். எது அந்த நியாயம் என்பதை சிறுகதைக்கு முந்தையன் நமது களப்பணியும் நம் வாசிப்பு நமக்கு எடுத்துச் சொல்லும்.

நிறைவாக பன்னிரெண்டாவது சிறுகதையை ‘ரப்பர் மரங்கள்’ என்ற தலைப்பில் எ.மு.சகா எழுதியிருக்கிறார். வழக்கமான பால்மரம் வெட்டும் நாயகனின் கதை, ஆனால் இக்கதையில் நாயகனைவிட அவன் வெட்டும் மரங்களில் ஒன்றுதான் அதிகம் பேசுகிறது. நாயகனின் அப்பா நட்டு பராமரித்த மரம் என்பதால் தன் நன்றியாக வழக்கமாக கொடுக்கும் ரப்பர் பாலைவிட ஒரு குவளை அதிகமாக நாயகனுக்கு கொடுக்கிறது. அதே போல கட்டியாக இல்லாமல் ரப்பர்பால் தண்ணிராக கண்ணீர்பாலை வடிக்கிறது. நன்றாக வந்திருக்க வேண்டிய கதைகளில் இதுவும் ஒன்று. 

மரத்திற்கும் மனிதனுக்குமான உறவை சொல்ல நினைத்து அதில் தீவிரம் இல்லாமல்,  தோட்டம் விற்கப்படுவதாகவும் இந்த இடத்தில் தொழிற்சாலை வரப்போவதாகவும் செய்தி கேட்டு மரம் கண்ணீர் வடிப்பதாகவும், தன்னை பத்திரமாக பார்த்துக்கொண்ட மனிதனுக்கு தன்னால் எதுவுமே கொடுக்க முடியவில்லையே என மரம் வருந்தவும் கதை முடிந்துவிடுகிறது.

எங்கிருந்து வந்திருக்கிறோம் என்பதை தெரிந்து கொண்டதோடு எப்படியெல்லாம் எழுதக்கூடாது எனவும் இக்கதைகள் நமக்கு சொல்லவும் செய்கின்றன. அன்று எழுதிய கதைகளை இன்று வாசிக்கும் போது இருக்கும் பலவீனங்கள்; நாம் எழுதும் இன்றைய கதைகளிலும் இருப்பது நம்முடைய பெரிய பலவீனம். அதை வாசிப்பின் வழி நாம்தான் மாற்ற வேண்டும்.

மீண்டும் அடுத்த மாதம்  மேலும் ஒரு மலேசிய புத்தகத்தோடு உங்களை சந்திக்கின்றேன்.

00

எழுத்தாளர் தயாஜி குறிப்புகள்

எழுத்தாளர் தயாஜி. மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி  அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார்.  முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும்  ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார். 

            ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *