குரங்கு வைத்தியர் குருசாமி மலர்வனத்தில் பேர்பெற்றவராக இருந்தார். மலர்வனத்தில் இருக்கும் அனைத்து விலங்குகளுமே தங்கள் உடல்நிலையில் எந்தக்கோளாறு ஏற்பட்டாலும் நேராக குருசாமி குரங்கிடம்தான் செல்வார்கள். குருசாமிக்குரங்கின் துணைவியார் செம்பருத்தி.
அவர்களுக்கு இரண்டு ஆண் குரங்குகளும், மூன்று பெண் குரங்குகளும் இருந்தன. ஆண்குரங்குகளான இரண்டும் விடிந்தால் போதும், அவைகள் குடும்பமாக தங்கியிருக்கும் நாவல்பழ மரத்திலிருந்து ஓடிவிடுவர். திரும்ப மாலையில் இருள் சூழும் நேரத்தில்தான் தாய் தந்தையின் இருப்பிடமான நாவல் மரத்திற்கு வந்து சேர்வர். இது அவர்கள் தினமும் செய்யும் செயல்தான்.
இப்படி ஆண்குரங்கள் இரண்டும் பொறுப்பில்லாமல் வனத்தில் பகலில் சுற்றுவது அம்மாவான செம்பருத்தி குரங்கிற்கு பிடிக்காதுதான் என்றாலும் பிள்ளைகளாயிற்றே! கூடவே இருக்கும் பெண் குரங்குகள் மூன்றும் தங்களின் தாய் தந்தையை விட்டு தூரமாய் செல்வதானால் அது மூலிகைத்தலைகளை பறித்து வருவதற்காக மட்டுமே.
இப்படியிருக்கையில் செம்பருத்திக்கு தன் கணவனான குருசாமி மீது எப்போதும் அளவு கடந்த கோபம் இருந்துகொண்டேதான் இருந்தது. குருசாமி வைத்தியர் தன்னைத்தேடிவரும் வியாதியஸ்த விலங்கினங்களை குணப்படுத்தி விடுவதில் கில்லாடி தான். ஆனால் அவர்களிடமிருந்து வைத்தியத்திற்கான செலவாக பழவகைகளோ, காய்கறி வகைகளையோ கொடுத்தால் மட்டுமே பெற்றுக்கொள்வார்.
அவர்களிடம் எதுவும் கைவசம் இல்லையென்றாலும் ‘சரி போயிட்டு வாங்க!’ என்று சொல்லி அனுப்பிவிடுவார். இதுதான் செம்பருத்தி குரங்கிற்கு பிடிப்பதில்லை. ஒருநாளில் எப்படியும் பத்து வியாதியஸ்தர்களேனும் காய்ச்சல் என்றோ, வயிற்றுவலி என்றோ, சளி என்றோ வந்துவிடுகிறார்கள்.
அதில் ஏழு வியாதியஸ்தர்கள் கையில் எதுவும் கொண்டுவராமல் வைத்தியம் பார்த்துவிட்டு குருசாமிக்கு ஒரு ‘சலாம்!’ போட்டுவிட்டு போய்விடுகிறார்கள். இங்கே குடும்பத்தில் இரண்டு ஆண்பிள்ளைகள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அவர்கள் வனத்தில் கிடைக்கும் எதையோ ஒன்றை சாப்பிட்டு பசியை போக்கிக்கொள்கிறார்கள். ஆனால் இங்கே ஐந்து வயிறுகள் இருக்கின்றனவே!
காலையில் ஒரு முயல் செரிமானக்கோளாறு என்று வைத்தியம் பார்க்க வந்தது. அதற்கான மருந்தை இடித்து தண்ணீரில் குழப்பி கொடுப்பதற்கே அரைமணி நேரமாகிவிட்டது. தண்ணீருக்காக அரை மைல் தூரம் சென்றுவர வேண்டியிருக்கிறது. விடிகாலையில் பெரிய பெண்குரங்கு பெரிய சொப்பை எடுத்துக்கொண்டு போய் கொண்டுவந்து விடுகிறது.
முயலானது குருசாமி கையிலிருந்த சின்னக்குடுவையை வாங்கி பல்லுப்படாமல் குடித்து விழுங்கிவிட்டு, ‘இதென்ன இப்பிடி கசப்பு? உலகக்கசப்பு வைத்தியரே! வாந்தி வந்திருமாட்ட இருக்கே!’ என்று வந்த வழியே ஓடிப்போய் அது கொண்டு வந்திருந்த நான்கு சக்கரைவள்ளி கிழங்கு வகையில் ஒன்றையெடுத்து ’நறுக் நறுக்’கென சாப்பிட்டு விட்டு, மீதம் மூன்று கிழங்கை வைத்தியம் பார்த்ததற்காக குருசாமி கையில் கொடுத்துவிட்டு ஓடிப்போய்விட்டது.
மூன்று கிழங்குகள் ஒரு வயிற்றுக்கே பத்தாது! இப்படியே அரைவயிறு நிரப்பிகொண்டு, சிரமப்பிழைப்பு பிழைக்க வேண்டியதாய் இருக்கிறதே! இப்படி வைத்தியம் செய்து கொண்டு எந்த குரங்குக்குடும்பம் இந்த மலர்வனத்தில் பிழைப்பு ஓட்டுகிறது? எல்லாமும் அததற்கான இடங்களில் ஒன்றுக்கொன்று ஜாலியாய் பேன் பார்த்துக்கொண்டும், பசித்த போது சீசனுக்கு எந்தப்பழம் பழுக்கிறதெனப்பார்த்து அந்தந்த மரங்களிலேயே தங்கி வாழ்ந்து, பிள்ளை குட்டி பெற்றும் வாழ்கின்றன.
எல்லா குரங்குக்கூட்டமும் குரங்கு வைத்தியர் குருசாமியைப்பற்றி மலர்வனம் முழுக்க கேவலம் பேசிக்கொண்டு திரிகின்றன. வைத்தியம் பார்க்க ஆரம்பித்த காலத்திலிருந்து ஒரு குரங்கேனும் ‘எனக்கு உடம்பு செரியில்ல குருசாமி.. பார்த்து செரி பண்ணி உடு!’ என்று கேட்டு நாவல் பழமரம் அருகில் வந்ததேயில்லையே!
குருசாமியின் தாத்தாவும் வைத்தியராம் மலர்வனத்தில் ஒருகாலத்தில். அவர் சிங்கராஜாவுக்கே வைத்தியம் பார்த்தவராம். குருசாமியின் தந்தையார் தான் முதலாக பறவையினங்களுக்கும் வைத்தியம் பார்க்க ஆரம்பித்தவராம். இப்படி பழம்பெருமை பேசினால் வயிறு நிரம்பவா போகிறது?
அன்று இரவில் நல்ல உறக்கத்தில் நாவல்பழ மரத்தில் வைத்தியக்குடும்பம் தூங்கிக்கொண்டிருக்கையில் மரத்தை யாரோ ’டொக் டொக்! டொக்!’ என்று தட்டுவதை கேட்டன. முதலாக வைத்தியர் குரங்கு சப்தம் கேட்டு விழித்தது. அடுத்து விழித்த செம்பருத்தி குரங்கு மரத்திலிருந்து சரசரவென நிதானமாய் இறங்கி அடிமரத்திற்கு வந்து நின்றது.
பார்த்தால் அதன் முன்னால் ஒரு கொம்பன் யானை நின்றிருந்தது பூதம் கணக்காய் இருளில். ‘வைத்தியர் இல்லியா மரத்துல?’ என்று யானையார் கேட்ட சமயத்தில் குருசாமி குரங்காரும் அடிமரத்திற்கு வந்து இறங்கினார்.
“நீ தான் வைத்தியனா?”
“ஆமாம்! டொக்கு டொக்குனு சத்தம் வந்துச்சே.. அதை எப்படி செஞ்சே?”
“அதுவா? இப்பிடித்தான்” என்று தனது தும்பிகையில் வைத்திருந்த கல்லை மீண்டும் மரத்தில் தட்டிக்காட்ட, ‘போதும்! கல்லை தூரமாய் எறி. மேலே எங்கள் பையன்களும், பொண்ணுங்களும் தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள்! அவர்கள் இரவு நேரத்தில் விழித்தால் பயப்படுவார்கள்!” என்றது குருசாமி குரங்கு.
“சரி இந்த இரவு நேரத்தில் எங்களை தேடி வந்திருக்கிறாயே.. வந்த விசயம் என்னவென்று சொல் யானையாரே!” என்று செம்பருத்தி குரங்கு கேட்டது.
“என்ன இப்பிடி கேக்குறே நீயி? வைத்தியர்கிட்ட எதுக்காக வருவாங்க? வைத்தியம் பார்க்கத்தான்”
“அதுக்குன்னு இந்த இரவு நேரத்திலயா? நாங்க நிம்மதியா தூங்க வேண்டாமா யானையாரே? வைத்தியம் பார்க்க நேரம் காலம்னு ஒன்னு இருக்குது! ராத்திரியில என்ன மருந்துன்னு உனக்கு என் வீட்டுக்காரர் குடுப்பாரு?”
“உன்னோட பேச்சு செரியில்லம்மா! மொதல்ல பேச்சைக்குறைச்சிக்க. இதுக்கும் முன்ன யாரும் ராத்திரியில வைத்தியம் பார்க்க வரவே இல்லையாட்ட இருக்குது! என்னால நிற்க முடியாம பேசிட்டு இருக்கேன்! எனக்கு காலையில இருந்து செரியான காய்ச்சல். உடம்பு தீ மாதிரி சுடுது. காலு நாலும் பயங்கர வலி. தும்பிக்கையை மேல வானம் பார்த்து தூக்கவே முடியல. என்னோட இருப்பிடத்துல நாள் முழுக்க முனகீட்டு கிடந்தேன்! இப்பிடியே கிடந்தா செத்து வச்சிருவேன்னு வைத்தியனை பார்க்க மெதுவா அன்னநடை போட்டு வந்து சேர்ந்திருக்கேன்!”
“உன்னோட குடும்பத்தோட நீயி இல்லியா?”
“என்னோட குடும்பத்தோட இருந்தா அவங்களே சரிபண்ண எதாச்சிம் குடுப்பாங்களே.. என்னைய அவங்க மூனு வருசத்துக்கும் முன்னாடி முடுக்கி உட்டுட்டாங்க! நான் தனியாத்தான் இந்த மலர்வனத்துல சுத்துறேன். நான் செத்துட்டா பொதைக்கறக்கு கூடசொந்தபந்தமில்ல. நான் அனாதை!”
“ஐயோ பாவமே! ஏனுங்க.. காய்ச்சலுக்கு மருந்து இருக்கா?”
“ஒரு குடுவைல கொஞ்சம் தான இருக்குது! அது இந்த யானையாருக்கு எப்பிடி போதுமானதாய் இருக்கும்? வந்ததுக்கு இன்னிக்கி அதை குடிச்சுட்டு போகட்டும். நாளைக்கி குடுவை நிரம்ப தயார் பண்ணி வச்சிடலாம்!” என்று குருசாமி சொல்லவும், அந்தக்குடுவை இருக்குமிடத்திற்கு செம்பருத்தி சென்றது. பின்பாக அதை எடுத்து வந்து யானையாருக்கு கொடுக்கவும்.. அதை தும்பிக்கையை நீட்டி வாங்கி வாயில் ஊற்றிக்கொண்டார் யானையார்.
“சரி நான் நாளைக்கி இதே நேரத்துக்கு வர்றேன்!” என்று யானையார் சொல்லிவிட்டு திரும்பினார்.
“பகல்ல வரமுடியாதா யானையாரே!” என்றது செம்பருத்தி குரங்கு.
“இல்ல.. எனக்கு ராத்திரியிலதான் கண்ணு நல்லா பளிச்சுனு தெரியும். வயசாயிடுச்சுல்ல!” என்று சொல்லிவிட்டு போய்விட்டார் யானையார். செம்பருத்திக்கு மீண்டும் கடுப்பாகியது. இத்தாப்பெரிய யானையார் வைத்தியம் பார்க்க வெறும் தும்பிக்கையை ஆட்டிக்கொண்டு வந்துவிட்டாரே சாமத்தில்? இந்த வைத்தியருக்கு வாயில் என்னதான் இருக்கிறது? நாளை வருகையில் கரும்புக்கட்டு ஒன்றோ இரண்டோ கொண்டு வா! அப்படின்னு சொல்லி அனுப்பவேண்டியது தானே! என்று நினைத்தபடி தலையில் அடித்துக்கொண்டு மரத்தில் ஏறியது செம்பருத்தி.
செம்பருத்தி அடுத்த நாள் இரவில் வரும் யானையின் காய்ச்சலுக்கான இலைகளை அரைத்து குடுவையில் வைத்துவிட்டது. அதே போல் அன்றைய இரவில் ‘டொக் டொக்’ கென சப்தம் வந்ததுமே செம்பருத்தி குரங்கு மரத்திலிருந்து கீழே இறங்கி வந்து தயாரித்து வைத்திருந்த மருந்தை எடுத்துக்கொடுத்தது யானையாருக்கு.
யானையாரும் அதைக்குடித்துமுடித்து பத்திரமாய் குடுவையை செம்பருத்தி கையில் கொடுத்துவிட்டு, ‘வைத்தியரு தூங்கிட்டாரா?’ என்று கேட்டது. ‘ஆமாம் யானையாரே! இந்த வைத்தியத்தில் இன்னமும் நான்கு நாட்கள் வந்து மருந்து சாப்பிடவேண்டி இருக்கும் நீங்கள். அப்போதுதான் பழையபடி உடலானது மாறும்! காய்ச்சல் குறைஞ்சிடுச்சுன்னு மருந்து குடிக்க வராமல் இருந்துவிடக்கூடாது யானையாரே!’ என்று சொன்னது.
“இன்னிக்கிம்கூட என்னால பகல்ல எழுந்திருக்கவே முடியல. நேத்து மாதிரியேதான் இருக்குது. காலெல்லாம் அதே வலி அப்படியே இருக்குது. இன்னிக்கி குடிச்ச மருந்தால நாளைக்கி எதோ கொஞ்சம் ஒடம்புக்கு பரவால்லன்னா கொஞ்சம் நம்பிக்கையா இருப்பேன்”
“அதெல்லாம் நிச்சயமா நாளைக்கி உங்களுக்கு உடம்பு தேவலைங்கறாப்லதான் இருக்கும்! வைத்தியத்தை நாங்க சும்மா இலவசமா பண்ணுறதேயில்ல இந்த மலர்வனத்துல! வர்ற விலங்குகள் எதோ அவங்களால முடிஞ்ச உதவிகளை எங்களுக்கு செய்வாங்க! அதையும் ஞாபகத்துல வெச்சிக்கங்க யானையாரே!” என்று போகிற போக்கில் விசயத்தை சொல்லிவிட்டது செம்பருத்தி குரங்கு.
அதைக்கேட்டதும் வந்ததே யானையாருக்கு கோபம்!
“யாரு கிட்ட என்ன பேச்சு பேசிட்டு இருக்கே நீயி? அப்பிடியே ஒரு மிதி வச்சேன்னா சட்னி ஆயிடுவே பார்த்துக்க! ஓ.. இப்பெல்லாம் கேட்டு வாங்கித்தின்னு பழகிட்டீங்களோ? நானே காய்ச்சல்ல கிடக்கேன்.. அனாதைப்பயலா.. இவிங்க திங்கறதுக்குவேற நான் தனியா கொண்டாந்து குடுக்கணுமாம். பிச்சிப்பிடுவேன் படுவா!” என்று சொல்லிக்கொண்டு யானையார் அங்கிருந்து சென்றார்.
அடுத்த நாள் செம்பருத்தி யானையாருக்கே தெரியாமல் இரவில் அவரை பின்தொடர்ந்து சென்றது. ’அப்பனே அப்பனே! புள்ளையார் அப்பனே.. போடவா தோப்புக்கரணம் போடவா? நான் பாடவா பாட்டுப்பாடி ஆடவா?’ என்று யானையார் அவர் பாட்டுக்கு தன்னப்போல பாடிக்கொண்டும், பேசிக்கொண்டும் மலர்வனத்தின் மத்தியப்பகுதிக்கு இருளில் சென்றுகொண்டே இருந்தார். செம்பருத்தி சந்தடியில்லாமல் பம்மிக்கொண்டே யானையாரின் பின்னால் அவரது இருப்பிடத்தை அறிய வேண்டுமென்ற ஆவலில் சென்றது.
இறுதியாக யானையார் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தார். அது நிலத்தோடு ஒட்டிய குகைபோன்ற வடிவில் இருந்தது. இந்தமாதிரி குகைகளில் கரடிகள் தானே வாழும்? அல்லது நரிகள் கூட்டமாய் வாழும். யானை எப்படி குகையில் வாழும்? ஓ! இது அனாதை யானையல்லவா.. போக இதற்கு காய்ச்சல் வேறு அடிக்கிறதே! அதனால் இப்போதைக்கி இந்த குகையில் எந்த விலங்கினம் வாழ்ந்திருந்தாலும் துரத்தி விட்டு விட்டு தங்கி இருக்கலாமென செம்பருத்தி நினைத்தது.
யானையாரின் இருப்பிடத்தை தெரிந்து கொண்ட செம்பருத்தி அடுத்த நாள் தன் மூத்த மகளையும், இளையமகளையும் அழைத்துக்கொண்டு இரவில் யானையாரின் குகைக்கே கூட்டிவந்துவிட்டது. யானையார் வைத்தியர் குருசாமியை பார்த்து மருந்து குடிக்க குகையிலிருந்து கிளம்பியபிறகு காத்திருந்த செம்பருத்தி தன் இரு மகள்களையும் அழைத்துக்கொண்டு குகையினுள் சென்றது. குகையினுள் பழவாசனை அவைகள் மூன்றுக்கும் மூக்கைத்துளைத்தது. ஆஹா!
இருளில் நுகர்ந்து கொண்டே குகையினுள் சென்றன மூன்றும். குகையின் ஒரு மூலையில் வாழைத்தார்கள் நான்கு பழுத்த நிலையில் சாய்த்து நிறுத்தப்பட்டிருந்தன. அவைகளிலிருந்துதான் வாசம் குகையெங்கும் வீசிக்கொண்டிருந்தது. குகைவாயிலில் நிலாவெளிச்சம் வீசியபடியிருந்தது. மூன்றும் ஆளுக்கு ஒரு தாரை எடுத்துக்கொண்டு குகை வாயிலுக்கு வந்தன.
செம்பருத்தி தான் கொண்டுவந்த தாரை குகை வாயிலில் வைத்துவிட்டு மீண்டும் உள்ளே சென்று மற்றொரு தாரை கொண்டு வந்தது. அதற்குள் மூத்தவளும் சின்னவளும் ஒரு தாரிலிருந்து பழங்களைப்பிய்த்து சாப்பிட ஆரம்பித்திருந்தார்கள்.
சரி ஒரு தாரை காலி செய்யாமல் விடமாட்டார்கள் என்று நினைத்த செம்பருத்தி அதே தாரிலிருந்து ஒரு சீப்பை பிய்த்து தானும் தின்ன ஆரம்பித்தது. இப்படியாக ஒரு தார் வாழைப்பழத்தை அவைகள் மூன்றும் தின்று முடித்த பிறகு, ஆளுக்கொரு தாரை தூக்கிக்கொண்டு நாவல்பழ மரம் நோக்கி வேறு பாதையில் பயணம் செய்தன. வந்த பாதையிலேயே திரும்பினால் எதிர்க்கே யானையார் வருவாரே!
அடுத்த நாள் வைத்தியக்குடும்பத்துக்கு பெரிய விருந்துதான். பெரிய பையனுக்கு செவ்வாழைப்பழங்களை வயிறு நிரம்ப சாப்பிட்டு வயிற்றுப்போக்கே ஏற்பட்டுவிட்டது. அதற்கும் மருந்து கொடுத்தார் குருசாமி குரங்கு. பெண்களுக்கு அவனைப்பார்த்தால் சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது. வயிற்றுப்போக்கினால் அவன் கண்கள் வெளியே பிதுங்கி வந்துவிடும் போல ஆகிட்டது.
அன்று இரவு யானையார் தெம்பாய் அவர்களைத்தேடி சற்று முன்னரே இரவில் வந்துசேர்ந்தார். அவருக்கு உடல்நிலை சரியாகிவிட்டது என்பதை அவரது நடையும் பேச்சுமே காட்டியது. அவர் வழக்கம்போல கல்வைத்து மரத்தை தட்டினார். குருசாமியும், செம்பருத்தியும் சரசரவென மரத்திலிருந்து கீழிறங்கி வந்தன.
“நான் இந்த வனத்துல மறுகடைசிக்கி இன்னிக்கி பிரயாணம் பண்ணுறதுன்னு முடிவு பண்ணிட்டேன் வைத்தியனே!.”
“ஏன் யானையாரே? இங்கே உனக்கான உணவு வகைகள் கிடைப்பதில்லையா?” என்றது செம்பருத்தி.
“இங்கே திருட்டுப்பயம் எனக்கு வந்துவிட்டது. வைத்தியனுக்கு இன்று கொடுக்கலாமென வாழைத்தார்கள் வைத்திருந்தேன் என் இருப்பிடத்தில். அதை யாரோ நேற்று இரவு திருடிக்கொண்டு போய்விட்டார்கள். ஒருமுறை வந்து திருடிப்போனவர்கள் மீண்டும் மீண்டும் அங்கேயே வருவார்கள். என் சேகரிப்புகள் எல்லாமே தினமும் திருடு போய்க்கொண்டே இருக்கும். நான் என் இருப்பிடத்திலேயே பொருள்களுக்கு காவல் காத்துக்கொண்டு இருக்கவும் முடியாது. ஆகவே வைத்தியனே.. என்றாவது ஒருநாள் உனக்கு எப்படியேனும் நான் உதவவே முயற்சிப்பேன்.”
“பரவாயில்லை யானையாரே!” என்றது குருசாமி குரங்கு.
“சரி எனக்கு நேரமாயிற்று! நான் புறப்படுகிறேன்!” என்று சொல்லிக்கொண்டு யானையார் வேறு பாதையில் சென்றார். செம்பருத்திக்குத்தான் கவலையாய் இருந்தது.
‘சே! நமக்கு கொடுப்பதற்குத்தான் வாழைத்தார்களை யானையார் தன் குகையில் வைத்திருந்திருக்கிறார். நமக்கு சிரமமில்லாமல் வந்து சேர வேண்டிய பொருளை நாம்தான் சிரமப்பட்டு திருடிக்கொண்டு வந்துள்ளோமே! ச்சே!’ என்று நினைத்தது! யானையார் மரங்களில் உரசியபடி செல்லும் சப்தம் அந்த இரவில் செம்பருத்தியின் காதுகளுக்கு தெளிவாய் கேட்டது.
+++

வா.மு.கோமு
வா.மு.கோமு என்ற பெயரில் எழுதிவரும் வா.மு.கோமகன் ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலைக்கும் மேற்கே 12 கிலோ மீட்டரில் இருக்கும் வாய்ப்பாடி என்கிற கிராமத்தை சேர்ந்தவர். 91ல் திருப்பூரிலிருந்து நடுகல் என்கிற சிற்றிதழை கொண்டு வந்தவர். சமீபமாக நடுகல் இதழ் மீண்டும் காலாண்டு இதழாக வெளிவந்து நின்று இணைய இதழாக வருகிறது. 91ல் இலக்கியகளம் இறங்கியவரின் சிறுகதைகள் பல்வேறு சிற்றிதழ்களில் வெளியாகத்துவங்கின. மனதில் நினைத்தவற்றை எழுத்தில் சொல்ல சிறிதும் தயக்கம் காட்டாத எழுத்தாளர் என்ற பெயரை கூடிய சீக்கிரமே பெற்றவர். கள்ளி, சாந்தாமணியும் இன்னபிற காதல் காதல் கதைகளும், எட்றா வண்டியெ, மங்கலத்து தேவதைகள், 57 சினேகிதிகள் சினேகித்த புதினம், மரப்பல்லி, சகுந்தலா வந்தாள், நாயுருவி, சயனம், ரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி, தானாவதி, ராட்சசி, குடும்ப நாவல். ஆட்டக்காவடி, நெருஞ்சி என்கிற நாவல்களை வெளியிட்டுள்ளார். கொங்கு வாழ்வியலை அப்பட்டமாக காட்டும் எழுத்துக்குச் சொந்தக்காரர். இவரது சிறார் புத்தகங்கள் பாரதி புத்தகாலயம் வாயிலாக வெளிவந்துள்ளன.