எங்க குடும்பத்துல ராஜா கரையான் ராணி கரையான் அப்பறம் நான் தான் வேலையாள் கரையான். எங்க ராணிக்கும் ராஜாவுக்கும் வேற வேலையே கிடையாது எப்ப பார்த்தாலும் முட்டைய போட்டுக்கிட்டே இருக்க வேண்டியது. முட்டை பாதுக்காத்து கரையான உருவாக்குவது அப்பறம் திரும்ப முட்டைய போடுவது. ராணியமாக்கும் ராஜாவுக்கும் இதையே பொழப்பு.
நம்பலாம் அப்படி இருக்க முடியுமா? முடியாது. என்னா, நம்ப வேலையாள். நம்ப தலையெழுத்து அப்படி, இவங்களுக்கு வேண்டிய எல்லா வேலையும் நம்பள மாதிரி கரையான்கள் தான் செய்யனும். உணவு தேடி, உணவை எடுத்துட்டு வந்து ராஜாவுக்கும் ராணிக்கும் கொடுக்கனும். மழை காலத்தில உணவு பஞ்சம் வராம இருக்க தேவையான உணவ சேமிக்கவும் செய்யனும்.
விவசாயமே முதல் முதல நம்ப தான் செய்தோம். வரலாறு இருக்கு. உணவை தேடி வரிசையாக போயிக்கொண்டுயிருந்த மற்ற வேலையாள் கரையானிடம் மனக்குமுறலை கொட்டியது மூத்த வேலையாள் கரையான். வேண்டா வெறுப்புக்கு கேட்டுவிட்டு, எப்ப பார்த்தாலும் இந்த கதையே சொல்லுறதே பொழப்ப போயிருச்சி உனக்கு, வழியே மறித்து நேரத்தை வீனா ஆக்காதே வழிய விடு, கரையானை சபித்துவிட்டு எதிரே சென்றது.
தரை மட்டத்தில் இருந்து நாலு அடி உயரம் தரையில் இருந்து பனிரெண்டு அடி அழம் கொண்டது எங்கள் கோட்டை. சூரிய ஒளி காற்று உள்ளே வரதுக்கும் அங்கே அங்கே துளைகள் இருக்கும். ஒரு கோட்டைல ஐந்து இலட்சம் கரையான்கள் வாழ்கிறோம். இதலாம் சாதாரணமா வந்து கிடையாது எங்கள மாதிரி உழைப்பாளிகள் உழைச்சி உருவாக்குனது. பல தலைமுறையோட உழைப்பு தியாகம்.
வேலையாள் கரையான்கள் குழுவாக சேர்ந்து மரக்கூறு உணவை தேடி சேகரித்து உச்சி வெயில்ல ராஜாவுக்கும் ராணிக்கும் எடுத்துட்டு போவோம். ஆனா இவங்க ரெண்டு பேருக்கும் முட்டைய போட்டுகிட்டு இருக்குறது தான் வேலையே.
ராஜானா ராஜ வாழ்க்கை தான்.
வயல் அறுவடை முடிந்து முற்றுகளாக அடிகட்டுகள் இருக்கும் இடத்தில் உணவு தேடிக் கொண்டுயிருந்த கூட்டாளிகளிடம் தன் பெருமைகளை பற்றி மீண்டும் சொல்லி அந்த நாளுக்கான பொழுதை கழித்துக் கொண்டது.
கோட்டைக்குள் பரந்து விரிந்திருக்கும் அறைகளில் எங்கு பார்த்தாலும் கரையான்கள் கூட்ட கூட்டமாக திரிந்து கொண்டுயிருக்கும். ராஜா ராணி இருக்கும் அறைகளில் கரையான்களின் நடமாட்டம் குறைவாகதான் இருக்கும். நல்ல கொழுப்பா,குண்டா,பெருத்து போயி ராணி கிடக்கும். பக்கதுல ராஜாவும் படுத்து இருப்பார். அவர்களின் வேலையில் தோய்வு ஏற்படாமல் நடந்துட்டு இருக்கும், வேற என்ன வேலை முட்டை போடுறது தான். இதையலாம் நினைத்து கோட்டைக்கு நடையை கட்டினோம்
இரவின் நிலவு ஒளி துளை வழியாக கோட்டைக்குள் படர்ந்துயிருக்க கரையான்கள் தன் விஸ்வாசத்தை காட்ட அங்கும் இங்கும் இழைந்து கொண்டுயிருந்தது. நம்ப வாழ்க்கை ஒண்ணும் அப்படியே மகிழ்ச்சிய இருக்குறது கிடையாது, நானாம் எத்தனை எதிரிகள்யிட்ட சண்டை போட்டுயிருக்கேன் தெரியுமா? இப்ப நீங்க இருக்குற இடத்த பாதுகாக்க எவ்வளவு முன்னோர் கரையான்கள் ஊயிர விட்டுயிருக்காங்க தெரியுமா, அதலாம் தெரிஞ்சாத் தான் நம்ப வாழுற வாழ்க்கை என்னானு புரியும். உணர்ச்சி வயப்பட்டு கோட்டையில் பேசிய கரையானை, அங்கு இழைந்து கொண்டுயிருந்த கரையான்கள் குழுவாக கூடி கரையான் பேச்சை கேட்க ஆயத்தமாக இருந்தனர், சில கரையான்கள் வயசு ஆகிடுச்சில அப்படிதான் புலம்பிட்டு இருக்கும் அதலாம் கண்டுகாத.
வெளியே காவலில் இருந்த வேலையாள் கரையான் கூட்டம் உள்ளே இருந்த வேலையாள் கரையான்களிடம் பெரும் கூட்டமாக சண்டையிட கரையான்கள் வருகிறார்கள் என்று பதட்டமாக கூறியது. ராஜாவுக்கும் தகவல் தெரியப்படுத்தபட்டு,யுத்திகளை,வேலையாள் கரையான்களுக்கு ராணியோடு இருந்த ராஜா வெளியே வந்து தெரிவித்தார். சற்று நேரத்தில் பரபரப்பு கூடியது.
பதட்டத்தில் இருந்த புதிய தலைமுறை கரையான், -இப்ப எதுக்கு நம்பகிட்ட சண்டைக்கு வராங்க? அவங்களும் நம்பளும் ஒரே கரையான் தானே?
அவனுக்கு நம்ப இடமும் நம்ப சேமித்து பாதுகாத்த உணவு வேணும், நம்பள அழிச்சிட்டு ஆக்கிரமிக்க வராங்க. இது மாதிரி எவ்வளவு பார்த்துயிருப்பேன்! எல்லாம் ஆயத்தமா இருந்துக்கங்க எதிரியை வீழ்த்தி வெற்றி அடையனும்.
அனைத்து வேலையாள் கரையான்களும் முன்பக்க கொடுக்கை உயர்த்தி தயார் நிலையை தெரிவித்தனர்.
எதிரிகளும் முன்னோக்கி வெறியோடு கோட்டையை நோக்கி தாக்குவதற்கு விரைந்தனர். அவர்களின் வேகத்தை கட்டுப்படுத்த தடுப்புகளை கொண்டு தடுத்து நிறுத்த வயதான கரையான்களை முற்றுக் கொடுக்க வைத்தும் இளதலைமுறை கரையான்களை கூர்மையான கொடுக்குகளை வைத்து தாக்கி எதிரிகளை கொன்று எங்கள் வலிமையை காட்டி எதிரிகளுக்கும் அச்சத்தை ஏற்பட வைத்தோம். எதிரிகள் தங்கள் யுத்திகளை அடுத்து அடுத்து பயன்படுத்தி எங்களின் பெரும்பாலான கரையான்களை கொன்று வீழத்தினார்கள். எதிரிகள் தங்களின் வலுவான கரையான்களை இரண்டு மூன்று கரையான்களாக சேர்ந்து கூர்மையான கொடுக்கை கொண்டு கொன்றனர்.
இழப்புகள் எங்களுக்கு பெரிய அளவில் ஏற்பட்டிருந்தது. எதிரிகளின் அடி முன்னோக்கியே இருந்தது. கோட்டையின் உள்ளே வேகமாக முன்னேறினர்கள்.
ராஜாக்கும் ராணிக்கும் தன் கோட்டை பறி போயிவிடுமோ என்ற பிரம்மையும் ஏற்பட்டு தன் ராஜதந்திர மூலையை பயன்படுத்தி வேலையாள் கரையான்களுக்கு கட்டளைகளை ராஜா பிறப்பித்தார். கொடுக்குகளை இழந்து கரையான்கள் உயிரை எவ்வளவோ தாங்கி பிடித்தும் சண்டையிட்டு சில வினாடிகளில் உயிர் பிரிந்தும் போனது. எதிரிகளின் ஆதிக்கம் வலுவாக இருந்தது. பல கரையான்கள் ஒரு கொடுக்கு பறி போயி கோட்டையை காக்க ஒன்றை கொடுக்குடன் போராடி கொண்டுயிருந்தது.
எதிரிகளின் யுத்திகளை யுகித்த நாங்கள் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக முழு பலத்தை வெளிகாட்ட அவர்களை மேலும் நகரவிடாமல் தடுக்க திட்டம் தீட்டி எதிரிகளின் கால்களை தொடர்ந்து தாக்கி படுக்க வைத்து கூட்டமாக அவர்கள் மீது ஏறி உச்சி தலையில் கொடுக்குகளை வைத்து தாக்கி வீழ்த்தினோம். நிலைகுலைந்து எதிரி கரையான்கள் பின்னோக்கி நகர்தது.
வீழ்ந்தவர்களின் கொடுக்கை உடைத்து வலு அற்றவர்களாக ஆக்கி, உணவை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி, உணவு பாதுகாப்பு அறைகளில் பதுக்கி வைத்துயிருந்த இலட்ச கணக்கான வேலையாள் கரையான்களை உடனடியாக வர வைத்து அவர்களையும் சண்டையில் இறக்கி கடுமையாக தாக்கினோம். இதை துளியும் எதிர்பார்க்காத எதிரிகள் முதுகினை காட்டி வெளியே சொல்ல முற்பட்ட போது மாற்று வழியில் சென்று கரையான்கள், எதிரிகள் வெளியே வரும் வாயை தடுப்பு கொடுத்து வெளியே செல்ல விடாமல் எதிரிகள் அனைவரையும் சரமாரியாக தொடர்ந்து தாக்கி கோட்டைக்குள்ளே அனைவரையும் கொன்று எதிரிகளுக்கு பாடம் புகட்டி வெற்றி கண்டோம்.
அன்று சண்டையில் இறந்த கரையான்களை குழுக்களாக இழுத்து கொண்டு அப்புறபடுத்தினோம். பின் கோட்டையை பாதுகாத்த வேலையாள் கரையான்களின் உயிர் தியாகத்தின் மகத்துவத்தை ராஜா ராணி கரையான்கள் எண்ணி பெருமிதம் அடைந்தனர். சண்டையில் எதிரிகளை தாக்கிய யுக்திகளை இளைய தலைமுறை கரையான்கள் மாறி மாறி பெருமையாக சொல்லி புகழ்ச்சியில் திகழ்ந்தனர்
பல்வேறு அறைகளில் ராஜா கரையான்கள் தங்களின் பணியை தொடர்ந்து செய்ய தொடங்கினர்.
ராணி கரையான்கள் ஈட்டிய முட்டையை அதிகபட்சம் இருபத்தி ஆறு நாட்கள் பாதுகாத்து கரையானாக உருவாக்கியது.
கோட்டை சில நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பியது. மேகமூட்டமாக மழை வருவதற்கான முன்னோச்சரிக்கையாக சில்லென காற்று வீசியது.
இளைய கரையான் மூத்த வேலையாள் கரையானிடம் ஒரு கேள்வியை கேட்டது,
-தலைமுறை தலைமுறைய அவங்களுக்கும்னு ஒரு கோட்டை இருக்கும்ல அத விட்டுட்டு ஏன் இங்க சண்டைக்கு வந்தாங்க?
பதில் சொல்லாமல் கரையான் வானத்தை பார்க்க வானில் இருந்து வந்த இடியுடன் கூடிய ஒரு துளி மழை கோட்டை துளையின் வழியாக தலையில் விழுந்தது. பெரு மழை அடித்து வீசியது.மழை பெய்தால் சில துளிகள் துளையின் வாயிலாக கோட்டைக்குள் வரும். பெய்த மழையில் பூமி முழு குளுமையில் இருந்தது. கோட்டையின் வெளி மண் மட்டும் அரித்து அவற்றிக்கு பெரும் பாதிப்பு இல்லை.
மழை தரை குளிரும் அளவுக்கு பெய்ததால் பருவநிலை கரையான்கள் றெக்கை முளைத்து (ஈசல்) வெளியே பறந்து நிலத்தை ரிங்காரம் அடிக்க தொடங்கி, அன்றே சில ஈசல்கள் றெக்கை இழந்து உயிரையும் விட்டனர்.
உச்சி வெயிலில் உணவு தேடி அலைந்து அன்றாட வாழ்வுக்குள் மூழ்கினோம்.
ஒரு நாள் பகலில் கோட்டையிலிருக்கும் போது இளைய வேலையாள் கரையான் அன்று கேட்ட கேள்வியை மீண்டும் ஞாபகபடுத்தியது .பதிலை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருந்தது. நாங்கள் அன்று ஒய்வில் இருந்தோம். மற்ற கரையான்கள் உணவு தேட நில பகுதிக்கு பயணப்பட்டு கொண்டுயிருந்தது.
-அவங்க கோட்டை என்னாச்சி, எதுக்கு சண்டைக்கு வந்தாங்க?
பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தேன். மீண்டும் மீண்டும் அதே கேள்வியை அழுத்தி கேட்டுக் கொண்டே இருந்தது.
-கோட்டையை மனிதர்கள் உடைத்து இருப்பார்கள்.
ஏன் என்ற கேள்வியை எதிர்பார்த்தேன், ஒரு வேலை அதனால் யுகித்திருக்க முடியும்.
இருவரும் அமைதியின் ஆழத்தில் இருந்தோம்…
ஒரு கூர்மையான ஆயுதம் கோட்டையின் உள் பகுதிக்குள் வந்தது. ஐந்தாறு குத்தில் தலைமுறைகளாக உழைத்து உருவாக்கிய கோட்டை வினாடி பொழுதில் இடிந்து தரைமட்டம் ஆனது. சுவர் சரிந்து விழுந்ததில் ராணி உயிர் இழந்தது. அதிர்ச்சி தாங்க முடியாமல் வேலையாள் கரையான்கள் கூடி ராணியை மீட்டு இழுத்து வந்து இறந்த துயரத்தை பகிர்ந்து கேட்பாறற்ற நிலையில் அகதிகளாக இருந்தோம்.
கோட்டையின் மண் சுவர்களை தூக்கிக் கொண்டு ஒருவன் போவதை இயலாமையில் கரையான்கள் நாங்கள் பார்த்துக் கொண்டுயிருந்தோம்.
*******
என் பெயர் தமிழ் கணேஷ். தஞ்சையில் வகிக்கிறேன் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரிவில் பணிபுரிந்து வருகிறேன்.சிறுகதைகள் குறுங்கதைகள் எழுதி வருகிறேன்.இணைய இதழ் வாசகசாலை சொல்வனத்தில் வெளிவந்துயுள்ளது.சில குறுபடங்களும் சினிமாக்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.
12.12.2024 முதல் நடுகல் மின்னிதழ் வாசிக்க துவங்கினேன். முதல் வாசிப்பு கி. ச. திலீபன் எழுதி வரும் பயணக் கட்டுரை. அடுத்த பாகம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்புடன் நிறைவு பெறுகிறது…