“அம்மா.. வாம்மா வெளையாடலாம்…”
“க்ர்ர்ர்.. சும்மா இருக்க மாட்டே… பசிக்குதுன்னு சொன்னே… பால் குடிச்சே… சமர்த்தா போயி நீ மட்டும் தனியா வெளையாடுறா கண்ணா… அம்மாக்கு வேலையிருக்குல்ல…”
“போம்மா… தனியா எப்படிம்மா வெளையாடறது… போர் அடிக்கும்…”
“ம்.. சரி… பக்கத்து வீட்டுல கெஜா ஆன்ட்டியோட பாப்பா விக்னேஷியோட வெளையாடுறா செல்லம்…”
“யாரு… ? அதுவா…? நீ சொல்றது ஒன்னும் பாப்பா இல்லே.. மா..பீப்பா … ஹேஏஏ அம்மா.. கருப்பா குண்டா .. அவ மூக்கு ஏம்மா பாம்பு மாதிரி அவ்ளோ நீளமா இருக்கு… அவ காதும் , அவ சைசும் அவளும்… நான் கிட்ட போனா மிதிச்சே கொன்னுடுவாளே…”
“அப்படில்லாம் சொல்லக் கூடாதுடா செல்லம்.
அவ உன்னை விட சின்னவடா… அவளுக்கு இருக்கறது மூக்கு இல்ல … தும்பிக்கைன்னு பேரு…”
“ம்…என்ன விட சின்னவன்னா என்ன விடக் குட்டியாதானே இருக்கனும்… அவ ஏன் அவ்வளோ பெருசா இருக்காளாம்?”
“அதுவா…? அவங்கள்லாம் யானை இனத்தைச் சேர்ந்தவங்க… நம்மள ஒப்பிடும் போது பல மடங்கு பெரிய உருவம் யானைகளுக்கு … அதனாலதான் யானைக் குட்டிகளும் உருவத்துல பெருசா இருக்கும்… நீதான் கெஜா ஆன்ட்டிய பாத்திருக்கிறயே… மம்மிய விட எவ்ளோ பெருசா இருக்காங்க…?”
“ஆமாம் …அது சரி மம்மி…அவங்க யானை குடும்பம்னா … நாம எந்தக் குடும்பம்…?”
“நாம பூனை குடும்பம்.. ஆனா அதுல நாம ஸ்பெஷல் … நம்மள புலின்னு சொல்வாங்க…”
“அப்படியா.. ஹை.. நானு புலி .. நானு புலி …”
“இல்ல.. நீ… புலிக்குட்டி…”
“ஹை.. நானு புலிக்குட்டி… நானு புலிக்குட்டி… அம்மா… நம்ம குடும்பத்தைப் பத்தி எனக்கு சொல்லும்மா…”
“இப்ப மம்மிக்கு நெறைய வேலையிருக்கு.. நீ போயி வெளையாடிட்டு வா … நா அப்புறமா உனக்கு சொல்றேன்…”
“இல்ல மம்மி.. இப்பவே சொன்னாதான் ஆச்சு…”
“ப்த்ச் … க்ர்ர்…நான்தான் சொல்றேன்ல… மம்மிக்கு வேலையிருக்குன்னு… நீ பேச்சு கொடுத்து என்னோட வேலையெல்லாம் கெடுக்கறியே… நீ என்ன பண்ற… இப்ப போயி விக்னேஷியோட கொஞ்சம் நேரம் வெளையாடிட்டு வருவியாம்.. நான் அதுக்குள்ள எல்லா வேலையும் முடிச்சுடுவேனாம்… அப்புறமா நம்மள பத்தியும் நம்ம குடும்பத்தை பத்தியும் விபரமா சொல்லுவேனாம்… ஓ.கே..?”
“ம்… க்ர்ர்… சரி… மம்மி… நான் போயி வெளையாடிட்டு வரேன்… பை…”
“பார்த்து போடா… விக்னேஷிகிட்ட வெளையாடும் போது பாத்து வெளையாடு… அப்புறம்… ரொம்ப தூரம்லாம் போகக் கூடாது… குறிப்பா தண்ணிகிட்டலாம் போகக் கூடாது… புதுசா யாரையாவது பார்த்தா அவங்களோடலாம் அனாவசியமா பேச்சு வச்சுக்கக் கூடாது… தெரியுதா…?”
“ஸ்ஸ் அ…பா… என்ன மம்மி … ரொம்ப போரடிக்கறீங்க…? நீங்க சீக்கிரம் விட்டா தானே நான் போயி வெளையாடிட்டு சீக்கிரம் வர முடியும்…?”
“ஆமான்டா… நான் பேசறது உனக்கு போரடிக்கத்தான் செய்யும்… இப்பவே இப்படி சலிச்சுக்கறியே…அப்படியே உங்க அப்பன் புத்தி… வேட்டைக்கு கிளம்பினா ஒரேடியா பறப்பாரு.. அந்த புத்தி… அப்படியே … சரி..சரி.. போயிட்டு சீக்கிரம் வா…”
“பை மம்மி… “
துள்ளிக் குதிச்சு ஓடிச்சு ஸ்ட்ரைஃபான்..
தூரத்தில விக்னேஷி ஆடி அசைந்து வந்தச்சு.
“ஹாய் ஸ்ட்ரைஃபான்…”
“ஹாய் விக்கி …”
“என்னடா… வேலை இருக்குன்னு துரத்தி விட்டுட்டாங்களா உங்க மம்மி…?”
“ஆமான்டி… உங்க வீட்ல…?”
“எங்க வீட்லயும் அதே கததான்…”
“அப்படியா… ஏன் இந்த மம்மிங்கள்லாம் இப்படி இருக்காங்க… ? நாம ஏதாவது பேசினா .. அல்லது கேள்வி கேட்டா போய் வெளையாடுன்னு அனுப்பி வைச்சுடறாங்க…?”
“இந்த பெரியவங்களே இப்படிதான்… சரி..சரி… வா.. அப்படி தூரமா போய் வெளையாடலாம்… அதோ… அங்க ஆத்துல தண்ணி போவுது… அதுல போயி வெளையாடலாம்… நீச்சல் அடிக்கலாம்…”
“ஐயய்யோ.. நான் மாட்டேம்பா…. குகைய விட்டு வரும் போதே மம்மி சொல்லிட்டாங்க… ரொம்ப தூரம் போகக் கூடாது… தண்ணிகிட்டலாம் போகக் கூடாதுன்னு… நாம இங்கேயே வெளையாடலாம்…”
“அட… உங்க வீட்லயும் இப்படித்தானா… எங்க மம்மியும் இதேதான் சொல்லி அனுப்சாங்க… அவங்க அப்படிதான் சொல்லுவாங்க… ஆனா நாம்ப அதக் கேக்கனுமா என்ன…?”
“ஏய்… நீ மனுஷக் குட்டிங்க மாதிரியே பேசற … அவங்கதான் மம்மி , டாடியோட பேச்சை கேக்காம போய் ஏதாவது குறும்பு பண்ணி டேஞ்சர்ல மாட்டிப்பாங்களாம்… எங்க மம்மி கதை கதையா சொல்லுவாங்க… ஆனா நாம அனிமல்ஸ்டீ… அப்படியெல்லாம் செய்யக் கூடாது…”
“ஆமா… நீ சொன்னா சரிதான்… ஹை… அங்க பாரேன்… ஒரு பட்டாம்பூச்சி… கலர் கலரா … அழகா… வா போய் பிடிக்கலாம்…”
நிமிர்ந்து பார்த்தா அழகா தொடச்சு விட்ட மாதிரி நீலக்கலர்ல வானம்… அதுல அங்க அங்க வெள்ளை வெளேர்னு மிதந்துக்கிட்டு இருக்கற பஞ்சுப் பொதி மாதிரி மேகம்…
கண்ணுக்கு எட்டன தூரம் வரைக்கும் ஒரே பச்சைப் பசேல்னு பாக்கவே அழகா இருந்தச்சு அந்தப் பகுதி… புல்வெளி கிளிப் பச்சை..புதருங்கள்லாம் இலைப் பச்சை … மரங்களெல்லாம் அடர் பச்சை … தூரத்துல தெரியற மலைங்க எல்லாம்… நீலப் பச்சைன்னு… ஒரே பச்சைமயம்…
அந்த பச்சைப் பின்னணியில எங்க பார்த்தாலும் ஸ்ப்ரே செஞ்சு வச்ச மாதிரி மஞ்சக் கலர்ல , ஆரஞ்சு கலர்ல … ஊதா கலர்ல.. சிவப்பு கலர்ல… வெள்ளை கலர்லன்னு விதம் விதமா, சின்னதும் பெருசுமா நிறைய பூவுங்கள்லாம் பூத்து ரம்மியமா இருந்துச்சு காடு… அந்த பூவுங்கள்ல இருந்து வந்த வாசனை அந்த வனமெல்லாம் பரவி சுவாசிக்கறதுக்கே சுகமா இருந்துச்சு…
அந்த பூக்கள்ல சுரக்கற தேன ருசிக்கறதுக்காக நெறய தேனீக்களும் , பட்டாம் பூச்சிங்களும் இங்கயும் அங்கயுமா பறந்துக்கிட்டு இருந்துச்சுங்க.. அதுல ஒரு பட்டாம்பூச்சி மட்டும் கொஞ்சம் பெருசா.. விதம் விதமான கலர்ல வித்தியாசமா ரொம்ப அழகா இருந்துச்சு.. அதத்தான் நம்ம ஸ்ட்ரைஃபானும் , விக்னேஷியும் பார்த்ததுங்க…
உடனே ,இரண்டும் அந்தப் பட்டாம்பூச்சியை துரத்திக் கிட்டே போயி வெளையாட ஆரம்பிச்சதுங்களாம்..'” பூ பூ வா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா .. நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா…? ” ன்னு பாட்டுல்லாம் பாடிக் கிட்டே துள்ளிக் குதிச்சு போச்சுங்களாம்… இதுங்கள பார்த்ததும் அந்த பட்டாம்பூச்சிக்கும் ஒரே சந்தோஷமா இருந்துச்சு…
“என்ன.. ரெண்டு பேரும் என்ன பிடிக்கப் போறீங்களா ?”
“ஆமாம்… என்றனரெண்டும் கோரசாக…”
“எங்க… நான் பறக்கறேன் பிடிங்க பார்ப்போம்…”
அந்தப் பச்சைப் பின்னணியில பட்டாம்பூச்சி பூப் பூவா மாறி மாறி பறக்க… இதுங்க ரெண்டும் கல கலன்னு சிரிச்சுக்கிட்டே துரத்த… பட்டாம்பூச்சி இதுங்க கைக்கு கிடைக்கற மாதிரி கிட்ட பறந்து போயி ஒரு செடி மேல உக்காரும்.. இதுங்க கை நீட்டி பிடிக்கற நேரம் அப்படியே சொய்ங்குன்னு உயரப் பறந்து போக்கு காட்டும்.. இப்படியே ரொம்ப சந்தோஷமா உற்சாகமா ரெண்டும் ப்ளஸ் ஒன்னும் சேர்ந்து வெளையாடுச்சா… அப்படி வெளையாடுனதுல … நேரம் போனதே தெரியலயாம்… தூரம் போனதும் தெரியலயாம்…
வேலையெல்லாம் முடிச்ச பிறகு ஸ்ட்ரைஃப்பானோட அம்மா புலி எங்கடா வெளையாடப் போனவன ஆளக் காணோமேன்னு தேடிக்கிட்டு இவங்க ரெண்டு பேரும் வெளையாடிக்கிட்டு இருக்கற இடத்துக்கே வந்துடுச்சு…
“ஏய்.. ஸ்ட்ரைஃபான் பயலே… இவ்ளோ நேரமா விளையாடுவாங்க… நேரம் ஆகுதே… உனக்கு பசிக்கல…? ஏய் விக்னேஷி… உன்னய காணோம்னு உங்க அம்மா தேடுறாங்க … ம்.. வாங்க போகலாம்… ” னு சொல்லிட்டு முன்ன நடந்து போச்சு…
பாவம் … வெளையாடறத விட மனசேயில்லாம காத்து போன பலூன் கணக்கா மூஞ்சிய தொங்கப் போட்டுட்டு சோகமா பட்டாம்பூச்சி அக்காவுக்கு டாட்டா காட்டிட்டு கிசுகிசுப்பா ” நாளைக்கு வரோம்னு சொல்லிச்சாம் ” ஸ்ட்ரை ஃபான் … அந்த பட்டாம்பூச்சியும் றெக்கைய அசைச்சு பை பை சொல்லிச்சாம்…
புலிம்மா முன்னாடி போக பின்னாடியே இந்த ரெண்டும் போச்சுதுங்களாம்…
கொஞ்ச தூரம் போனதும் அம்மா புலி திரும்பிப் பாத்தச்சு… பின்னாடியே ரெண்டும் சைலன்டா வந்துச்சுங்க.
“என்னங்கடா அமைதியா வரீங்க… வெளையாட்ட கெடுத்துட்டனேன்னு கோபமா..? வெயில் ஏறுதுல்ல.. சீக்கிரம் நம்ம குகைக்கு போவோம்… விக்னேஷிய அவங்க அம்மாகிட்ட அனுப்புனதும் லஞ்ச்சுக்கு அப்புறம் நான் உனக்கு கதையெல்லாம் சொல்லுவனாம்..”
“ஐ… கதையா…! னு கத்திச்சுங்க இரண்டு குட்டிங்களும் கோரசா… கண்ணுல ஆர்வம் லைட் போட்டா மாதிரி மின்னுச்சு.”
“ஆமா..”
“அம்மா …அப்படீன்னா காலைல கேட்டனே… நம்ம புலி குடும்பத்தப் பத்தி .. நீங்க கூட வெளையாடிட்டு வந்த பிறகு சொல்றேன்னீங்களே … அத சொல்றீங்களா ?”
“ஆவட்டும்.. சீக்கிரம் நடங்க..”
“ஆன்ட்டி.. கதை கேட்க நானும் வரட்டுமா…?”
“ஓ.. தாராளமா… ஆனா உங்க மம்மி கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு வரனும்.. ஓ.கே..?”
“ஓ.கே… என்று மழலையா பிளிறிச்சு விக்னேஷி…”
இப்ப கதை கேக்கற ஆர்வத்துல புலிம்மாவையே முந்திக்கிட்டு வேகமாக நடக்க ஆரம்பிச்சதுங்க நம்ம ஸ்ட்ரைஃபானும், விக்னேஷியும்.
********
“ஏவ்… க்ர்ர்..”
பசி தீர்ந்த திருப்தியில மெல்லமா ஒரு ஏப்பம் விட்டுச்சு ஸ்ட்ரைஃபான்.
தன்னுடைய செல்லப் பிள்ளைய வாஞ்சையா நக்கிச்சு புலிம்மா..
அப்ப குகையோட வாசல்ல யாரோ வர்ர மாதிரி இருந்திச்சு.. விக்னேஷிதான்..
“வா.. விக்னேஷி .. சாப்டியா..”
“சாப்பிட்டேன் ஆன்டி.. நீங்க சொன்ன மாதிரி மம்மி கிட்ட பர்மிஷன் வாங்கிட்டும் வந்துட்டேன்..”
மெல்ல வந்து ஸ்ட்ரைஃபானின் பக்கத்து உக்காந்துச்சு விக்னேஷி.
ஸ்ட்ரைஃபான் விக்னேஷியப் பாத்து ,.
“கதை கேக்க தும்பிக்கைய ஆட்டிக்கிட்டு வந்துட்டா குண்டச்சி.. “
“பாருங்க ஆன்டி.. இவன … என்ன குண்டச்சின்னு கேலி பண்றான்…”
“பின்ன நீ என்னா ஒமப் பொடியா ?”
“க்ர்ர்… டேய்.. ஸ்ட்ரைஃபான்.. சும்மா இருக்க மாட்டே… நம்ம வீட்டுக்கு இவ கெஸ்ட்டா வந்திருக்கா… முதல்ல விருந்தாளிகள மதிக்க கத்துக்கனும்.. தெரியுதா…? அதிலும் அவ உன்னை விட சின்னவடா… உனக்கு பாப்பா மாதிரி…”
‘ஆமா.. பீப்பா மாதிரி… ‘தனக்குள் முணுமுணுத்தது ஸ்ட்ரைஃபான்..
“அவன் கிடக்கிறான். ஆன்ட்டி நீங்க சொல்லுங்க உங்க குடும்பத்தைப் பத்தி …”
“நாங்க புலி … ஆனா பூனையினத்தைச் சேர்ந்தவங்க..”
“அப்படியா ஆன்ட்டி…?”
“எங்களுக்கு மனுஷாளுங்க மத்தியில ரொம்பவும் பெருமையான இடம் உண்டு..”
“அப்படியாம்மா ? எப்படி அப்படிச் சொல்ற…”
“ஒரு விஷயத்துல சிறந்து விளங்கினாங்கன்னா அவங்களை அதுல புலி ன்னு சொல்லுவாங்க.. உதாரணத்துக்கு ஒருத்தன் கணக்கு நல்லா போட்டா இவரு கணக்குல பெரிய புலி ன்னு சொல்லுவாங்க…”
“ம் ம்.. அப்புறம்..”
“ரொம்ப வீரமா இருந்தாங்கனா சூரப்புலி ன்னு சொல்லுவாங்க..”
“ஓஹோ…”
“மகேந்திரவர்மர்னு ஒரு பல்லவ மன்னர் இருந்தாராம்.. அவரு நல்லா சித்திரம் வரைவாராம்.. அதனால அவர சித்திரகாரப் புலி ன்னு புகழ்ந்தாங்களாம்.”
“அம்மா சித்திரம்னா என்னாம்மா.?”
“சித்திரம்னா ஓவியம்னு அர்த்தம்..”
“ஓஹோ..!”
“அது மட்டும் இல்ல… இந்தியாவோட தேசிய மிருகமா நம்மளதான் அங்கீகரிச்சு இருக்காங்க…”
“ஹை…அம்மா… கேக்கவே பெருமையா இருக்கும்மா…”
“அது மட்டுமில்ல.. சோழர்கள்னு ஒரு வம்சம் இருந்ததாம் .. தமிழ்நாட்டுல… அவங்க தங்களோட சின்னமா நம்பளதான் வச்சிருந்தாங்க.. அவங்களோட கொடியில புலியாகிய நம்ம உருவத்தைதான் வரைஞ்சு வச்சிருந்தாங்க…”
“அப்படியா ஆன்ட்டி…?”
“ஆமான்டி செல்லம்.. அது மட்டுமில்ல… தெய்வங்களுக்கு கூட வாகனம் யாரு தெரியுமா… ? புலிகளாகிய நாங்கதான்… துர்கைக்கும் வாகனம் புலிதான் … ஐயப்பனுக்கும் வாகனம் புலிதான் …”
“ஹையா… நாங்க யாரு தெரியுதா… ? எங்க பெருமை புரியுதா… க்ர்ர்…க்ர்ர்… க்ர்ர்.. புலி… டா….! ” என்றபடி குத்தாட்டம் போட்டது ஸ்ட்ரைஃபான்.
” ரொம்ப பெருமை பீத்திக்காத … நீங்க கடவுளுக்கு வாகனம்தான்… ஆனா கடவுளுக்கே தலை கொடுத்தவங்க நாங்க…”
“என்னாது.. ? கடவுளுக்கே தலையா…?” பிரம்மிப்புடன் கேட்டது ஸ்ட்ரைஃபான்.
“ஆமா.. பிள்ளையாருக்கு யாருடைய தலை தெரியுமா…? யானைகளாகிய எங்க தலைதான்.. எவ்வளோ பெருமை…? நானே கம்னு இருக்கேன் …அதனால நீ அடங்கு…” என்றது விக்னேஷி அமர்த்தலாக …
“ஏன் மம்மி… அப்படியா..?”
“ஆமான்டா கண்ணு… அவ சொல்றது சரிதான்… வினாயகருக்கு யானை தலைதான் வச்சிருக்காங்க… எவ்வளவு பெருமை வந்தாலும் அடக்கமா இருக்கனும் நம்ம விக்னேஷி மாதிரி.. தெரியுதா…?”
“சரி மம்மி… நீ தொடர்ந்து சொல்லு…”
“இந்த தமிழர்கள் இருக்காங்களே… அவங்க பிடிவாத குணத்துக்கு நம்மள வச்சு ஒரு பழமொழியே சொல்வாங்க.”
“அப்படியா… என்ன பழமொழிம்மா அது..?”
“புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது…”
“ஹை.. ஆன்ட்டி.. எங்கள வச்சுக் கூட ஒரு பழமொழி இருக்கு .. சொல்லட்டா…?”
“உன்னைக் கேட்டாங்களா? ” குறுக்கே மறித்தது ஸ்ட்ரைஃபான்…
“அவன் கிடக்கிறான் நீ சொல்லும்மா…”
“யானை இருந்தாலும் ஆயிரம் பொன்.. இறந்தாலும் ஆயிரம் பொன்…”
“அப்படியா.. அப்ப நீ செத்துப் போ…”
“க்ர்ர்.. க்ர்ர்..டேய் நீ சும்மா இருக்க மாட்டே… புலிம்மா தன் மகனின் மண்டையில் மடேர் என்று ஒரு தட்டு தட்டிச்சு முன்னங்காலால … செல்லமாதான்…” ஸ்ட்ரைஃபானின் முகம் உம்மென்று மாறியது…
விக்னேஷியோ , ம்.. ம்..நல்லா வேணும்ங்கற மாதிரி தன்னோட தலையை மேலும் கீழுமா ஆட்டுச்சி…
” சரி… ஆன்ட்டி.. அவன திட்டாதீங்க.. நான் ஒன்னும் கோச்சுக்கல… நீங்க சொல்லுங்க.. உங்களப் பத்தி … எனக்கே ரொம்ப ஆர்வமா இருக்கு..”
“சொல்றேன் … கேளுங்க…நாங்க பூனைகள் இனத்தைச் சேர்ந்தவங்க .எங்க உடம்பு பழுப்பு கலந்த மஞ்சள் நிற தோலால ஆனது. உடம்பு முழுக்க கருப்பு கலர்ல பட்டை பட்டையா கோடுகள் வரைஞ்ச மாதிரி இருக்கும்…”
“அப்படியா… என்றபடி ஸ்ட்ரைஃபான் தன்னோட உடம்பை ஒரு முறை பார்த்துக் கிச்சு…அட… ஆமா..,!”
“அப்புறம் ..எங்க தோலைதான் சிவபெருமான் உடுத்தியிருக்காரு… அது மட்டுமில்ல.. சில முனிவர்கள் எங்க தோலை விரிச்சுப் போட்டுதான் தியானம் எல்லாம் பண்ணுவாங்க…”
“ஓஹோ…!”
“இந்த கோடுகள் மனிதர்ளோட கைரேகை மாதிரிதான். ஒரு புலிக்கு இருக்கற மாதிரி இன்னொரு புலிக்கு இருக்காது… இப்படி கோடுகள் இருக்கறதால எங்க உடம்ப புல்வெளியில மறைச்சுக்கிட்டு மத்த விலங்குகளை வேட்டையாடறதுக்கு உதவியா இருக்கு.”
“அப்படியா ஆன்ட்டி…?”
“ஆமா…எங்க உடம்போட அடிப்பகுதி வெள்ளை கலர்ல இருக்கும். எங்க முகத்தச் சுற்றி ஒரு வெள்ளை கலர்ல வளையம் மாதிரி ஒரு வடிவம் தெரியும்.. இது எங்களுக்கு ஒரு கம்பீரத்தை கொடுக்குது… “
“சரி மம்மி … நம்மள்ல மொத்தம் எத்தனை இனம் இருக்கோம் ?”
“ஆரம்பத்துல நம்ம இனத்துல மொத்தம் ஒன்பது வகை இனங்கள் இருந்துச்சாம்…”
“அப்படியா… என்ன என்ன வகை மம்மி ?”
“பெங்கால் புலி ,சைபீரியன் புலி , சுமத்ரன் புலி , இந்தோ சைனீஸ் புலி , மலையன் புலி , தெற்கு சீன புலி ,, காஸ்பியன் புலி , ஜாவன் புலி அப்புறம் பாலி புலி . இதுல கடைசி நான்கு இனங்கள் தற்போது இல்ல..”
“ஐயய்யோ… ஏன் ஆன்ட்டி…? “
“ம்…எல்லாம் அழிஞ்சு போச்சும்மா … காரணம் இந்த மனுஷனுங்கதான்… தன்னோட சுயநலத்துக்காக நம்மள எல்லாம் அழிக்கறான்… அதனால நாம அழிஞ்சுக்கிட்டு வர இனமாயிட்டு வரோம்…”
“ஆஹ்.. க்ர்ர்…க்ர்ர்… மம்மி… பழிக்குப் பழி… நான் பெருசா வளர்ந்ததும் அவங்களை நான் அழிச்சுடறேன்..”
“க்ர்ர்..டேய்… போதும்டா… பழிவாங்கறதுலாம் மனுஷங்களோட புத்தி.. அது அவங்களோட போகட்டும்.. நமக்கு வேணாம்… அது மட்டுமில்ல.. இயற்கையே பாத்துக்கும் அவங்கள … இப்ப கூட பாரு .. ஏதோ கொரோனான்னு ஒரு நோய் உலகம் முழுக்க மனுஷங்கள தாக்கி அழிக்குதாம்… பாவம் செத்து மடியறானுங்க…”
“நல்லா வேணும் ஆன்ட்டி… அவங்க ரொம்ப மோசம்… இப்ப கூட கொஞ்ச நாளுக்கு முன்னாடி எங்க அம்மாவோட சொந்தக்கார யானைக்கு யாரோ ஒரு ஆளு அன்னாசிப் பழத்துல பட்டாசு வெச்சுக் கொடுத்துட்டானாம்… அத சாப்ட உடனே வாயிக்குள்ள போயி வெடிச்சதாம்.. பாவம்.. வாயெல்லாம் ஒரே ரத்தமாம்… துடிதுடிச்சு செத்துப் போச்சாம்… அது மட்டுமில்ல ஆன்ட்டி.. அந்த யானம்மாவோட வயித்துல ஒரு குட்டி பாப்பா யானை வேற இருந்துச்சாம்.. அதுவுமே செத்துப் போச்சாம்.. எனக்கு ஒரே அழுகை அழுகையா வந்தச்சு தெரியுமா…? ” என்றபடி தன்னோட குட்டிக் குட்டிக் கண்களில் நீர் வழிய தேம்பிச்சாம் விக்னேஷி…
” சரி..சரி.. நீ அழுவத.. நீ அழுதா நானும் அழுவேன்… என்றபடி அதன் கண்களைத் துடைத்து விட்டது ஸ்ட்ரைஃபான்..”
“சரி.. சரி.. நீ கஷ்டப்படாத.. அதுக்குதான் இந்த மனுஷப் பயலுங்களோட அக்ரமம் தாங்காம ஆண்டவனாப் பார்த்து வச்சான் பாரு ஆப்பு… கொரோனா ரூபத்துல…”
“ஹை.. ஆப்பு… ஆப்பு…” என்று சிரித்தது ஸ்ட்ரைஃபான்…
“ஹஹ்ஹா.. ப்ரீட்ரீய்ங்க்ரீங்க.. “என்று சிரிச்சச்சா இல்ல பிளிற்சசான்னு சொல்ல முடியாதபடிக்கு நடுவாந்திரத்தில ஒரு சவுண்டு விட்டபடி கேட்டது விக்னேஷி…
“சரி ஆன்ட்டி… உங்க உணவுப் பழக்கத்தைப் பத்தி சொல்லுங்க … கேப்போம்…”
“ஏன்… நீ வாங்கி வந்து சப்ளை பண்ணப் போறியா… இலவசமா..?”
“என்னது இலவசமா… அப்படியே ஜனங்களோட புத்தி உனக்கு… ! ஏன் ஆன்ட்டி … இவன் நடுவுல காட்ட விட்டுட்டு நாட்டுப் பக்கம் ஏதாவது போயி வந்தானா…? அப்படியே மனுஷங்க வாடை அடிக்குது…?”
“மனுஷங்க வாடை யா..? எங்க ? எங்க ?”ன்னு கேட்டு ஸ்ட்ரைஃபான் பதறிச் சிதறிச்சு ..
அதனை அமர்த்தியபடி புலிம்மா சொல்லிச்சு…
“ஏன்டி… எம் புள்ளைக்கு என்னடி தலையெழுத்து? நாட்டுப் பக்கம் போக …?”
“அப்படிச் சொல்லு மம்மி…”
“இல்ல ஆன்ட்டி.. இவன்தான் இலவசம் புலி வேசம்னு ஒளறினான்.. அதான்…”
“சரி… சரி… நல்ல வேளை ஒன்னு மறந்துட்டேன்… நீ புலி வேசம்னு சொல்லி ஞாபகப்படுத்திட்டே…”
“என்ன ஆன்ட்டி அது?”
“இந்த மனுஷாளுங்க திருவிழா நேரத்துல நம்மள மாதிரி வேசம் கட்டி டான்சு ஆடுவாங்க…. அதுக்கு புலியாட்டம்னே பேரு…”
“ஐ.. அப்படியா மம்மி…?”
“சரி… இப்ப நான் நமக்கு பிடிச்ச மாதிரியான சாப்பாட்டு வகைகள் என்ன என்னன்னு சொல்லப் போறேன்…”
“சொல்லுங்க சொல்லுங்க…”
“ம்க்கும்… சொல்லுங்க ..சொல்லுங்க… சாப்பாட்டுராமி கேக்கறாங்க…”
“டேய்… சும்மா இரேண்டா.. அவள ஏதாவது சொல்லிட்டிடே தானே இருக்க… ? அவன் கிடக்கறான் விடு விக்னேஷி.. நான் சொல்றேன் இரு… ” என்றபடி தொடர்ந்தது…
“நாங்க பெரும்பாலும் மான்களைத்தான் விரும்பி சாப்பிடுவோம்.. அடுத்ததா , காட்டு பன்னி , நீர் எருமை, கொம்பு மான்களையெல்லாம் சாப்பிடுவோம் அது மட்டுமில்ல… இதோடு கரடிங்க , நாயிங்க ,, சிறுத்தைங்க ,முதலைங்க அவ்வளவு ஏன்…மலைபாம்புங்களையும் கூட விட்டு வைக்க மாட்டோம்… வேட்டையாடிப்புடுவோம் வேட்டையாடி … “
“ஆஹா… இதேவேலையாத்தான் திரியறீங்களா ? நல்ல வேளை… உங்க லிஸ்ட்ல நாங்க இல்ல… “
” ஓஹோ … இரு… இரு… மம்மி கிட்ட சொல்லி மெனுவுல உங்களையும் சேத்துக்கச் சொல்றேன்… மம்மி… முதல்ல அந்த லிஸ்ட்ல யானைங்கற பேரையும் சேர்த்துக்கோ மம்மி…”
“டேய் வாலு…சும்மா இருந்து தொலையேண்டா ஏண்டா.. திரும்பத் திரும்ப அவ வம்புக்கே போற…?”
“சரி ஆன்ட்டி.. விடுங்க… அவன் கிடக்கறான்… நீங்க நான் வெஜ் விலங்கு வகைன்னு தெரியுது… மீன் வகையெல்லாம் சாப்பிட மாட்டீங்களா…?”
“ஓ… நாங்க சூப்பரா நீந்துவோம்.. அதனால நீருக்குள்ளேயும் எங்க வேட்டை நடக்கும்… அது மட்டுமில்ல … மத்த விலங்குகள வேட்டையாடும்போது முதல்ல அதோட கழுத்துக்குத்தான் குறி வைப்போம்… இரை மேல பாய்ஞ்சு ஓங்கி ஒரு அறை இல்லாட்டி கழுத்துல ஒரு கடி… அவ்வளோதான் அந்த மிருகம் க்ளோஸ் …”
“பாத்தியா விக்கி .. எங்க கெத்த… ” என்று ஸ்ட்ரைஃபான் இல்லாத தன் காலரைத் தூக்கி விட்டபடி சொல்ல…
” ம்.. ம்.. கேக்கும்போதே கொஞ்சம் பயமாத்தான் இருக்குது… ” என்றது விக்னேஷி அச்சத்துடன் தன் கழுத்தைத் தடவியபடி…
“அது சரி … நீங்க இந்தக் காட்டுல மட்டும்தான் இருக்கீங்களா ஆன்ட்டி…?”
“இல்லடி கண்ணு… நாங்க உலகம் முழுக்கவே இருக்கோம்…’
“எங்களோட வாழ்விடம் துருக்கியில தொடங்கி தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா பகுதிகள் வரைக்கும் நீண்டுக்கிட்டே போகுது. ஆசியாக் கண்டத்தோட கடற்கரை பகுதிகளிலயும் நாங்க வாழ்ந்துக்கிட்டு இருந்தோம்.. இப்ப தெற்கு, தென்கிழக்கு ஆசியா பகுதிகள் அப்புறம் சீனா , ரஷ்யாவோட கிழக்கு பகுதிகளயும் புலிகள் நாங்க வாழ்ந்துக்கிட்டு வர்றோம்..”
“ஓஹோ.. ம்..”
“நாங்க எல்லா விதமான பருவநிலை காலங்களிலும் வாழக்கூடிய தன்மை கொண்டவங்க . செடி கொடிகள் அடர்ந்திருக்கிற புதர்க் காடுகள், மரங்கள் அடர்ந்திருக்கிற காடுகள், மாங்குரோவ் காடுகள், சதுப்பு நில காடுகள் அப்புறம் புல்வெளிகளிலும் வாழக்கூடிய தன்மை எங்களுக்கு இருக்கு ..”
“ம்.. ம்..”
“நம்பள இந்த ஜனங்க டி.வி. சேனல்ல பார்த்திருப்பாங்க … கொஞ்சம் பேரு மிருகக் காட்சி சாலைகள்ல பார்த்திருப்பாங்க … ஆனா நாம வசிக்கிற காடுகளிலேயோ புல்லுவெளிகளிலேயே நேரடியா பார்த்திருக்காங்களா.. பார்த்திருக்காங்களா?”
“ஏன் ஆன்டி… சிங்கம் சீரிஸ் படம் பார்த்தீங்களா…? சூர்யாவோட வசனத்தை ..சும்மா .. பின்றீங்களே…”
“ஏய்… க்ர்ர்.. எங்க மம்மியையே கலாய்க்கிறியா ?”
“ஹி…ஹி… சும்மா … தமாசு…”
“டேய் .. விடுறா… சின்ன பொண்ணுதான…”
“ஆமாம்மா… சின்ன டின்னு… எல்லாம் நீங்க கொடுக்கற எடம்…”
“சரி..சரி… விடு… முதல்லலாம் எங்க இனத்துல எவ்வளோ பேர் இருந்தோம் தெரியுமா…?”
“அப்படியா மம்மி…?”
“ஆமாண்டா என் செல்லக்குட்டி… ஆரம்பத்துல எங்க எண்ணிக்கை ரொம்பவே அதிகமா இருந்தச்சு… ஆனா படிப்படியா எங்க எண்ணிக்கை குறைஞ்சுக்கிட்டே வருது… உதாரணமா சொல்லனும்னா 1900-களில் எங்களோட எண்ணிக்கை எல்லா பகுதிகளையும் சேர்த்து 1 லட்சத்துக்கும் மேல இருந்தது… ஆனா இப்போ ரொம்பவே கொறைஞ்சு போயிட்டோம்…”
“ஐயய்யோ.. ஏன் ஆன்ட்டி இந்த நிலைமை…?”
“எல்லாம் இந்த வேட்டைக்காரனுங்களோட தொல்லதான்…”
“சரி இப்போ நாம எவ்வளவு பேருதான் இருக்கோம்… மம்மி ?”
“சொல்றேன் .. எங்க இனங்களின் எண்ணிக்க என்ன தெரியுமா…?இன வாரியாக..பெங்கால் வகையில 2000க்கும் கீழ , இந்தோ- சைனீஸ் வகையில ஒரு 1300 , சைபீரியன் வகையில சுமாரா ஒரு 450, சுமத்ரன் வகையில சுமாரா 400 ல இருந்து ஒரு 500 பேர் அப்புறம் .. இந்த மலையன் வகையில ஒரு 800 பேர் வரைக்கும் இருக்கறதா ஒரு முறை சொன்னாங்க… எங்கள கணக்கு எடுத்தவங்க…”
“ஓஹோ… நம்மள எல்லாம் கணக்கு எடுப்பாங்களா?”
“ஆமா… வன விலங்குத் துறை வன வாழ்விலங்குகளோட எண்ணிக்கைய கணக்கெடுப்பாங்க… அத வச்சு அழிஞ்சு வர இனங்கள பாதுகாக்க நடவடிக்கைலாம் எடுப்பாங்க…”
“ஓ… புள்ளையையும் கிள்ளி விடுவாங்க.. தொட்டிலையும் ஆட்டி விடுவாங்களாக்கும் …”
“ஹஹ்ஹ்ஹா..”
“இந்த மனுஷாளுங்க இருக்காங்களே.. அவங்க ஒரு காலத்தில நம்பளப் பார்த்து ரொம்பவே அஞ்சுவாங்க…. நம்மோட எடை எவ்வளோ இருக்கும் தெரியுமா? “
“எவ்வளோம்மா இருக்கும்?”
“சராசரியா 100 கிலோவிலிருந்து 300 கிலோ வரை இருக்கும். நம்ம உடம்போட நீளம் எவ்வளவு தெரியுமா? 8 அடியில இருந்து 13 அடி வரைக்கும் இருக்கும். அதனாலதான் இந்த மனுஷாளுங்க நம்மளப் பார்த்து அவ்வளோ பயந்தாங்க… “
“அப்படியா…?”
“ஆமா.. இப்போ எல்லாருக்கும் குளிர் விட்டுப் போச்சு… துப்பாக்கியெல்லாம் வச்சுக்கிட்டு டும் டும் முன்னுசுட்டுத் தள்ளிடறானுங்க… ஆனால் இந்த அரசு இருக்கே .. அது நம்மளக் காப்பாத்த நல்ல நல்ல முயற்சிலாம் எடுத்துக் கிட்டு வருது…”
“ஓ… பரவாயில்லையே…”
“ஆமா … புலிகள் பாதுகாப்புத் திட்டம்லாம் கொண்டு வந்திருக்காங்க… அது மூலமா வருஷா வருஷம் ஜூலை 29. ஆம் தேதி அன்னைக்கு சர்வதேசப் புலிகள் தினம் கொண்டாடி.. நம்ம இனத்தை அழியவிடாம இருக்க விழிப்புணர்வுலாம் கொடுக்கறாங்க. “
“ஓஹோ…”
“அது மட்டுமல்ல உலகத்துலயே அதிக மக்கள் தொகை இருக்கற நாடுகள்ல ஒன்னா இருக்கற இந்தியாதான், அதிக எண்ணிக்கையில புலிகள் இருக்கற நாடாவும் இருக்குதாம். புலிகள் பாதுகாப்புத் திட்டம் 1973-ம் ஆண்டு முதல் இந்தியாவுல செயல்படுத்தப்பட்டு வருது. இதுவரைக்கும் நமக்காக கிட்டத்தட்ட 25 புலிகள் சரணாலயத்தை உருவாக்கியிருக்கு இந்தியா.”
“அப்படியா…? இந்தியாவுல இருக்கற புலிகளோட எண்ணிக்கை என்ன ஆன்ட்டி…?”
“சொல்றேன்…2007 ஆவது வருஷம் ஒரு கணக்கெடுப்பு நடந்துச்சாம்… அதும் படி பார்த்தா, இந்தியாவோட வனங்கள்ல வசிக்கிற புலிகளோட எண்ணிக்கை தோராயமா 1,411 ஆ குறைஞ்சு போயிருக்குதாம். அந்த அறிக்கை புலிகளின் எண்ணிக்கை இவ்வளவு மோசமா குறைஞ்சு போனதுக்கு, சட்டவிரோதமா நடக்கற வேட்டைதான் காரணம்னு சொல்லுதாம்…”
“அப்படியா… ஆன்ட்டி…?”
“ஆமா.. இதோ இப்ப கூட சர்வதேச புலிகளின் தினத்தை வர்ர ஜூலை 29ம் தேதி அனுசரிக்கப் போறாங்க..”
“ஹை.. ஜாலி… ஜாலி…”
“இது மாதிரி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளால ஏதாவது பயன் இருக்கா ஆன்ட்டி…?”
“அது என்ன அப்படிக் கேட்டுட்ட ?
புலிகள் எண்ணிக்கை இந்தியாவில் 33 சதவீதம் அதிகரிச்சு இருக்கறதா சமீபத்தைய புள்ளி விபரங்கள் சொல்லுதாம்.. இத மத்திய சுற்றுசூழல் அமைச்சகம்தான் அறிவிச்சு இருக்காம்..”
“ஓஹோ… பரவாயில்லையே…”
“ஆமாம். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் இருக்குதுல்ல … அது சர்வதேச புலிகள் தினத்தை ஒட்டி இந்தியாவுல 2018 ஆம் வருஷத்துல நடந்த புலிகள் கணக்கெடுப் போட அறிக்கையை வெளியிட்டிருக்கு… அப்போ நடந்த புலிகள் தின சிறப்பு நிகழ்வுலதான் பிரதமர் நரேந்திர மோடி இந்த அறிக்கைய வெளியிட்டாராம் .. இந்தியாவில் புலிகளாகிய எங்க எண்ணிக்கை 2,967 ஆ உயர்ந்துள்ளதா இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்காம்..”
“அடேங்கப்பா… ஆஆஆ…”
“டேய்… என்னா அப்படி வாயப் பொளக்கற… ஈ , கொசு , வண்டு எல்லாம் ஒட்டுக்கா ஒண்ணா உள்ள போகுது பாரு… கேட்ட சாத்து…”
“சர்தான் போடி…நீ ஆடிக்கிட்டு இருக்கற உன்னோட தும்பிக்கைய முதல்ல சுருட்டிக்கிட்டு உக்காரு… வந்துட்டா பெருசா நொட்ட சொல்ல… நீ சொல்லு மம்மி… எத்தன வருஷத்துக்கு ஒரு முறை இந்த கணக்க எடுக்கறாங்க…?”
“2006 ஆவது வருஷத்துல இருந்து நாலு வருஷத்துக்கு ஒருமுறை இந்தியாவில புலிகள் கணக்கெடுப்பு நடந்துக்கிட்டு வருது..”
“ஓஹோ… சரி… இந்தியாவிலேயே எந்த மாநிலத்துல நாம அதிகமா இருக்கோம் மம்மி…?”
“இந்தியாவிலயே அதிகமான புலிகள் வாழும் மாநிலமா மத்தியபிரதேசம் இருக்காம். இங்க மட்டுமே 526 புலிகள் உள்ளதா தெரிவிச்சிருக்காங்க..இதத் தொடர்ந்து அதிக புலிகள் வாழும் இரண்டாவது மாநிலமா கர்நாடகா இருக்காம் .இங்க 524 புலிகள் இருக்குதாம்…”
“ஓ… அப்ப தமிழ் நாட்டுல ஆன்ட்டி…?”
“தமிழகத்துக்கு 5 ஆவது இடமாம்… தமிழகத்துல 264 புலிகள் இருக்குதாம்.. இதுக்கெல்லாம் காரணம் தமிழ்நாட்டோட வனத் துறைதான்.. “
“அப்படியா மம்மி…?”
“ஆமா…தமிழகத்துல களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம் , சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அப்படீன்னு நாலு புலிகள் காப்பகங்கள் இருக்குதாம்.. அதை இந்த வனத்துறைதான் நல்லா பராமரிச்சு வருதாம்…”
“ஓஹோ… சரிதான்…”
“சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சிறப்பா மேலாண்மை செய்யப்பட்ட புலிகள் காப்பகமாக தேர்ந்தெடுக்கப்பட்டு , தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் விழாவில பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் , சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கான விருதினைக் கூட வழங்கியிருக்காராம்..”
“சூப்பர் மம்மி..”
“இதுக்கே , தமிழகத்தோட நாலாவது புலிகள் காப்பகமா, 2013ம் ஆண்டுலதான் சத்தியமங்கலம் வனப்பகுதி அறிவிக்கப்பட்டதாம். இப்போ தமிழகத்திலயே அதிக பரப்பளவுள்ள புலிகள் காப்பகம் இதுதானாம். வறண்ட இலையுதிர் காடுகள், முட் புதர் காடுகள் , மலைப்பகுதி, ஆற்றோர படுகைனு வேறுபட்ட அடுக்குகளில அமைந்துள்ள இந்த சத்திய மங்கலம் வனப்பகுதி நாம் வாழறதுக்கு வாட்டமான பகுதியா இருக்கறதாலதான் இங்க நம்மோட எண்ணிக்கை ஒரே சீராக உயர்ந்து வருதாம்..”
“அது சரிம்மா.. நாம பூனையினம்னு சொன்னீங்க… அதப்பத்தி கொஞ்சம் சொல்லுங்கம்மா..”
“ம்… சமத்துக்குட்டி… நல்லா ஞாபகம் வச்சுக்கிட்டு கேக்கறியே… குட்… நாம பாந்தெரா தீகிரிஸ், அப்படீங்கிற பூனையினத்தைச் சேர்ந்தவங்க பாந்தெரா வகை பூனையினங்களில நாமதான் ரொம்பப் பெரியவங்க… நாமதான் உயர்நிலை ஊனுண்ணியா , ஆதிக்கமிக்க ஊனுண்ணியா இருக்கோம் .. ஆனா என்ன… பூனை மாதிரி நமக்கு மரம் மட்டும் சரியாக ஏறத் தெரியாது.. அவ்வளவுதான்..”
“ஓஹோ… பேஷ் …பேஷ்…”
“அப்புறம் காட்டுக்கே அரசன் சிங்கம்னுதான சொல்லுவாங்க…? ஆனா கிழக்காசிய நாடுகளப் பொறுத்தவரையிலும் நாமதான் வெயிட்டுள்.. நம்பளதான் காட்டோட அரசன்னு சொல்றாங்க… அது மட்டுமில்ல… நம்ம கிட்ட ஒரு ஸ்பெஷல் இருக்கு…”
“என்ன மம்மி அது…?”
“நம்மோட நெத்தியில 王 மாதிரி ஒரு அடையாளம் இருக்குது. இது சீன மொழியிலஅரசன் என்பதை குறிக்குதாம்…”
“ஹையா… சூப்பர்… மம்மி… நான் புலியினத்துல பிறந்ததுக்கு ரொம்பப் பெருமைப்படுறேன் மம்மி…”
“வனங்களில் சிங்கத்துக்கும் நமக்கும் நடுவுல நடக்கற சண்டைகளில நாமதான் அனேகமா ஜெயிப்போம்… நம்மோட சிறப்பு , கம்பீரம் இதையெல்லாம் மனசுல வச்சுதான் இந்திய அரசாங்கம் நம்பள தேசிய விலங்கா அறிவிச்சுக் கொண்டாடி வருது… இது நமக்கு ரொம்ப பெருமை … தெரிஞ்சுக்கோ…”
“சரிம்மா… ஏன் நம்ம குகையில நான் மட்டும் ஒரே குட்டிதான் இருக்கேன்…? பக்கத்து குகையில மஞ்சமுச்சான் அங்கிள் வீட்டுல என்னாட்டமே மூணு குட்டிப் பாப்பாங்க இருக்குதே…?”
“அதுவா..? நம்மோட இனப்பெருக்க காலம் சுமாரா 16 வாரங்கள் இருக்கும்.. ஒருமுறைக்கு 3-லிருந்து 4 குட்டிகள் வரைக்கும் போடும் ஒரு அம்மாப் புலி. ஆனா என்னமோ தெரியல.. இந்த முறை என் வயித்துல நீ மட்டும்தான் பொறந்த … குட்டிப் போட்ட 8 வாரங்கள் வரைக்கும்தான் உன்னாட்டம் புலிக் குட்டிங்க அம்மா புலிகள்கிட்ட இருக்கும். இருக்க முடியும்…”
“ஐய்யய்யோ.. அப்புறம் என்கதி…?”
“இரண்டரை வருஷத்துல தாய் புலியை குட்டிய விரட்டி விட்டு வெளியே துரத்திடும்ல..?.”
“ஹஹ்ஹஹ்.. ஹா… அப்ப இன்னும் கொஞ்ச நாளுல நம்ம ஸ்ட்ரைஃபானுக்கு ஆப்புன்னு சொல்லுங்க….”
“வெவ்வெவ்வே… சூப்புன்னு சொல்லுங்க… இருடி… உன் கால ஒடச்சி யானக் கால் சூப்பு செஞ்சு குடிக்கல… என் பேரு ஸ்ட்ரைஃபான் இல்லை…”
“ஆமா… ஸ்ட்ரைஃபான் இல்ல… ச்செக்குடான்னு மாத்திக்கோ… ஹஹ்ஹா… ஆன்ட்டி… எப்ப ஆன்ட்டி அவன வெளியத் துரத்துவீங்க…?”
“ம்.. என் செல்லத்த நான் ஏன்டி இப்ப தொரத்தப் போறேன்… அதுக்கெல்லாம் இன்னும் நிறைய நாள் இருக்கு… அவன் இன்னும் பால் குடியே மறக்கல… மான் கறி லாம் திங்க கத்துக்கனும் ,வேட்டையாடக் கத்துக்கனும்.. அதுக்கெல்லாம் நிறைய நாள் இருக்கு.. நீ கவலைப்படாம வெளையாடுடா செல்லம்…”
“ஹைய்யா… அப்படிச் சொல்லுங்க…. என் செல்ல மம்மி… சரி மம்மி.. ஒரு வேளை நம்மள எல்லாம் இந்த மனுஷாளுங்க வேட்டையாடிக் கொன்னுட்டா என்ன ஆகும்?”
“என்ன ஆகும்…? உணவுச் சங்கிலி அறுபடும்… சூழல் சமநிலை கெடும்… இயற்கை அழியும்.. இதுக்கெல்லாம் காரணமான மனுஷனும் சேர்ந்தே அழிய வேண்டியதுதான்… ஆனா மனுஷன் அந்த அளவுக்கு விட மாட்டான்.. அந்த இனத்துல கெட்டவங்க சில பேர் அறியாமையாலோ , கொழுப்பெடுத்தோ நம்மல அழிக்க நினைச்சாலும் நல்லவங்க சில பேர் இருக்காங்க … இயற்கை ஆர்வலர்களும் ,விலங்கு நேசர்களும் … இவங்க நிச்சயமா நம்மையும் காப்பாத்தி , இயற்கையையும் காப்பாத்தி , அவங்களையும் காப்பாத்தற அளவுக்கு விவேகம் உடையவங்க… அதனால நீ கவலைப்படாத…”
“ஓ… அப்படியா.. சரி… சரி…”
“சரி… சரி… கதை பேசிக்கிட்டே இருந்ததுல நேரம் போனதே தெரியல… இருட்டவே போகுது… அதோ கெஜா ஆன்ட்டியும் தேடிக்கிட்டு வந்துட்டாங்க பாரு… விக்னேஷிய இன்னும் காணோம்னு.. விக்னேஷி.. நீ கிளம்புடி செல்லம்…”
“ரொம்ப தேங்க்ஸ் ஆன்ட்டி…உங்கள பத்திய விவரமெல்லாம் ரொம்ப சூப்பரா சொன்னீங்க ஆன்ட்டி… நான் நெறைய தெரிஞ்சுக்கிட்டேன்…”
“நானும்தான் மம்மி… ரொம்பவே இன்ட்ரஸ்ட்டா இருந்தது மம்மி… நீங்க சொன்ன தகவல்லாம்..”
“ஓ.கே.. ஆன்ட்டி பை… பை டா … ஸ்ட்ரைஃபான்.. டாட்டா… ” தன் குட்டித் தும்பிக்கையையும் தலையும் ஆட்டியபடி துள்ளிக் குதித்து தன் தாயுடன் சென்றது விக்னேஷி…
” டாட்டா… பிர்லா … அம்பானி … அதானி …” தன் முன்னங்காலைத் தூக்கியபடி தனக்கே உரிய குறும்புடன் கூறியபடி க்ர்ர் க்ர்ர்.. எனச் சிரித்தது ஸ்ட்ரைஃபான்…
டேய் குசும்பா… வா வா… உள்ள வந்து பால் குடிச்சுட்டு தூங்குவியாம்… என்றபடி புலிம்மா உள் குகையை நோக்கி நடக்க அதனை செல்லமாக உரசியபடி , முகத்தையும் வாயையும் முகர்ந்து நக்கியபடி ,தன் அழகு வாலைத் தூக்கி அசைத்தபடி பின் தொடர்ந்து சென்றது ஸ்ட்ரைஃபான்..
…
ஸ்ட்ரை ஃப் – என்றால் கோடு.
புலியின் உடம்பில் கோடுகள் இருப்பதால் – காரணப் பெயர்.
விக்னேஷ் – பிள்ளையார் (யானை உருவக் கடவுள் ) – பெண்யானைக்குட்டி என்பதால் விக்னேஷி (விக்னேஷ்வரி போல – காரணப் பெயர்)
—
மாணவ நண்பன்.
இயற்பெயர் -முத்துக்குமரன் . அ. ஓவிய ஆசிரியர் . சாரண ஆசிரியரும் கூட.. பள்ளி நூலகப் பொறுப்பாளர். எனது மூன்றாவது படிக்கும் வயதிலிருந்து வாசிப்புப் பழக்கம் உடையவனாக இருப்பதால் , அதன் முக்கியத்துவம் உணர்ந்த நான் மாணவர்களை வாசிக்கச் செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டு அதற்கான செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறேன்..எங்கள் வீட்டில் தனியாக எனக்கென பிரத்தியேக நூலகம் ஒன்றும் உண்டு.
தற்போது பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணி புரிந்து வருகிறேன். மாணவ நண்பன் என்ற புனைபெயரில் எழுதி வருகிறேன். மன வண்ணங்கள் என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறேன். அத்துடன் மகாபாரதம் முழுவதையும் 108. பாடல்களாக எழுதி அதையும் ஒரு நூலாக்கி வெளியிட்டிருக்கிறேன். இரண்டு சாரண நூல்களை தொகுத்து வெளியிட்டு இருக்கிறேன்.
சிறுகதையில் எனது முதல் முயற்சி இது. இதை சிறு நூலாக்கி சிறார் கைகளில் தவழவிடும் எண்ணம் உண்டு. இருப்பினும் சூழல் காரணமாக அது நடக்கவில்லை.