ந.சிவநேசன்

        அவனுக்கு இருக்கும் பிரச்சினையை யாரும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. உண்மையில் அவனே கூட ஆரம்பத்தில் அதை பெரிதாக நினைத்ததில்லை. தனக்கு எந்த வயதிலிருந்து இந்த தொந்தரவு இருக்கிறதென யோசித்துப் பார்த்தான். அந்நிகழ்வு நினைவில் வந்து உறுத்தியது.  இப்படியும் கூட பிரச்சினை வருமா என சிலர் பரிதாபப்பட்டார்கள். சிலர் கேலி பேசினார்கள் குறிப்பாக நெருங்கிய  நண்பர்கள்.

‘கேமராவுல படம் புடிக்கிற மாதிரி புளிச் புளிச்னு அடிக்கிறான்யா மாப்ள..’ என சேட்டு மணி ஒரு விசேஷ வீட்டில் கிண்டல் செய்ய கூடியிருந்தவர்கள் சிரித்தபோது ரொம்பவும் அவமானமாக உணர்ந்தான். ஆனால் அந்த அவமானத்தை விடவும் அதை வெறுமனே நகைச்சுவையாக எடுத்துக் கொண்டதைப் போல சட்டெனத் தாக்கிய சொற்களின் அதிர்ச்சியை அமிழ்த்தி முகத்தை இயல்பாக வைத்து அவர்களுடன் சேர்ந்து சிரிப்பது இன்னும் துயர் மிகுந்ததாக இருந்தது.

‘எத்தனை வயதிலிருந்து உங்களுக்கு இந்த பிரச்சினை?’

‘சிறுவயதிலிருந்து சார். ஒரு பன்னிரெண்டு வயதிருக்கலாம்’

அவர் இடது கண்ணிலிருந்து நகர்ந்து வலது கண்ணுக்கு ஒளியைப் பாய்ச்சினார். பிறகு மருந்துச் சீட்டை எடுத்து எழுதிக் கொண்டே உரையாடினார்.

‘அவ்வளவு பெரிய பிரச்சினை இல்லை இது. வெறும் விட்டமின் குறைபாடு தான்’

மருந்தகத்தில் சீட்டைக் கொடுத்து மாத்திரை உறையைப் பெற்றுக் கொண்டான். போன் ஒலிக்க எடுத்துப் பார்த்தான். அவள் தான்.

‘முதன்முதலில் எப்போது உங்களுக்கு இந்த பிரச்சினை தொடங்கியது?’

அதே கேள்வி. அவன் அமைதியாக காஃபிக் கோப்பையைப் பார்த்தான். கொஞ்சம் தாழ்த்திப் பார்த்தால் சிமிட்டல் குறையக் கூடும்.

‘ஹலோ’

அவன் கவனம் கலைந்து மன்னிப்பு கோரினான்.

‘இல்லை. நீங்கள் கேஷுவலாக இருங்கள்’

அவளை முழுமையாக நிமிர்ந்து பார்த்தான். சாக்லெட் நிற தேகத்தில் கண்கள் தனியாக ஒளிர்ந்தன. வெளிச்சம் நோக்கி இழுக்கிற கண்கள். கண்களிலிருந்து நகர்ந்து மூக்குக்கு வந்தான். கண் ரப்பைகள் அதற்குள் நடுங்கத் தொடங்கியிருந்தன. இப்போது சிமிட்டாவிட்டால் கண்ணீர் கசியத் தொடங்கிவிடும். அவளிடமிருந்து சட்டெனப் பார்வையை விலக்கி வேறெங்கோ பார்ப்பது போல ஒரு சிமிட்டல் போட்டான். சிமிட்டல் என்றால் இயல்பானது இல்லை. கண்கள் இரண்டையும் சுருக்கி அழுத்தந்திருத்தமாக விழுகிற சிமிட்டல். உடனே இன்னொன்று. மறுபடியும் இன்னொன்று.

‘இந்த இனிய தினத்தில் இங்கே என் பேச்சைக் கேட்க வந்துள்ள ஊர்  பஞ்சாயத்துத் தலைவருக்கும், தலைமையாசிரியர் அவர்களுக்கும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும்……’

கூட்டம் அதிகமாக இருந்தது. சுற்றிலும் பொதுமக்கள் நின்றிருந்தார்கள். நடுவில் அமர்ந்தபடி மாணவ மாணவிகள். அவர்களில் பேசிக்கொண்டிருக்கும்போதே பார்வை அவனையறியாமல் முருகேசன் பக்கம் சென்றது. அவனருகில் வரதராஜு, செல்லையன்.

‘… எனது முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’

முருகேசன் அவன் பார்க்கக் காத்திருந்தது போல கண்ணருகில் காகிதக் கேமிராவைக் கொண்டு போய் ‘புளிச்’ என வாயசைத்தபடி அழுத்தினான். காகிதக் காமிரா அவனை படம் பிடித்தது. கண்கள் படபடத்து இரப்பைகள் இறங்கத் தொடங்கின.

‘நான் இப்போது பேச வந்தத் தலைப்பு….’

கண்களை சிமிட்டாமல் இருக்க கவனத்தைக் குவிக்கத் தொடங்கியவனின் வாய் குழறத் தொடங்கியது. கீழே குனிந்து, மேலே அண்ணாந்து, இடது புறம் திரும்பி உயரே பறக்கிற கொடிக் கம்பத்தைப் பார்த்து, தூரத்தில் ஆசையாய் நின்றிருக்கிற அம்மாவைப் பார்த்து ஏதேதோ செய்து கண்களை சிமிட்டாமல் இருக்க முயற்சி செய்தான். அடுத்தடுத்து கண்களை இமைகள் படக் படக்கென இறுக்கி மூடின.

‘….தமிழின் பெருமையை’

கண்களின் மீது குவிந்த கவனத்தில் சொற்கள் உறையை விட்டு வர மறுத்தன. மீண்டும் பார்வை முருகேசன் பக்கம் போனது. அவர்கள் மூன்று பேரும் அவன் செய்வது போலவே கண்களை இறுக்கி இறுக்கி மூடித்திறந்து அடக்கமுடியாமல் சிரித்தார்கள்.

‘கண்ணை இமைக் காப்பது போல தமிழை நாம்…..’

அவர்கள் சிரிப்பதைப் பார்த்து அருகிலிருந்த இன்னும் சில பையன்களும் சிரிக்கத் தொடங்கியிருந்தார்கள். அவன் கண்கள் அவனையறியாமல் பெண்கள் பக்கம் நகர்ந்தது. அவர்களில் யாரெல்லாம் சிரிக்கிறார்கள் என அமிழ்ந்து அமிழ்ந்து மூடுகிற கண்களால் பேச்சை மறந்து அளவெடுக்கத் தொடங்கினான்.

‘டேய்…’

மீரா டீச்சர் தோளைத் தொட்டு உலுக்க திடும்மென திரும்பிப் பார்த்தான். வலது கண்ணிலிருந்து சிதறிய நீர் அவர்களது புறங்கையில் பட்டது.

‘ஒண்ணும் பிரச்சினையில்லை. எழுதியதை பார்த்துக் கூட படிக்கலாம்’

மீரா டீச்சர் அவன் சட்டைப்பையில் மடித்து வைத்திருந்த காகிதத்தை காண்பித்தார். மேடையில் அமர்ந்திருந்த சிறப்பு விருந்தினர்களை நோக்கினான். அவர்களும் பார்த்தே படிக்கலாம் என்பது போல தலையசைத்தார்கள். கூட்டத்தைப் பார்த்தான். எந்தச் சலனமுமின்றி அமர்ந்திருந்த கூட்டம். மேடைக்கு கீழே அடுத்து நடைபெறவுள்ள பரதநாட்டிய நடனத்துக்காக தயார் நிலையில் நிற்கிற மாணவிகள்.

மீரா டீச்சர் சட்டைப்பைக்குள் கைவிட்டு அக்காகிதத்தை எடுத்து அவனிடம் தந்தார்.

பார்த்துப் படிப்பது ஆண்டுவிழா மேடையில் அவமானம். இத்தனை நேரம் மடித்து வைத்திருந்த காகிதத்தால் உயிர் பெறுகிற, உயிர் பெற்றது போல் நடிக்கிற குரலுக்கு

அது யாசகம்.

‘பார்த்தே படிடா கண்ணா’

அவரது சொற்களில் இருந்து பரிவு அவனது அழுகையை இன்னும் கூட்டியது. கண்ணா என எப்போதாவது தான் விளிப்பார். அவன் அவர் கையிலிருந்த காகிதத்தை வாங்காமல் முழுதாக வெடிப்பதற்குள் நகர்ந்து விடுகிற அவசரத்தில் மேடையிலிருந்து ஓடினான்.

முருகேசன் குழுவினர் கழிவறையை நோக்கி கத்திக் கொண்டே வந்தார்கள்.

‘தரமான அழகான புகைப்படங்களுக்கு வாங்குங்கள்.. கொடாக் காமிரா’

‘ஊஊஊஊஊஊ’

அவன் காத்திருந்தது போல திரும்பி முருகேசனைத் தாக்கினான். அவர்கள் சேர்ந்து அடித்து அவன் சட்டையைக் கிழித்தார்கள். தலைமையாசிரியர் அறைக்கு அழைத்துச் செல்லும்போது முருகேசன் வாயிலிருந்து இரத்தம் கசிந்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். ஆறுதலாக இருந்தது.

‘என்ன ஏதோ யோசித்துக் கொண்டே இருக்கிறீர்கள்?’

அவள் பக்கம் திரும்பி இயல்பாக இருப்பது போலச் சிரித்தான்.

‘இல்லை. எந்த வயதிலிருந்து இந்தப் பிரச்சினை எனக் கேட்டீர்கள் அல்லவா? அதில் மூழ்கிவிட்டேன்’

அவள் கொஞ்சம் முன்னே நகர்ந்து ஆதரவாக அவன் கைகளைப் பற்றினாள்.

‘எங்கள் குடும்பத்தார் சொன்னதை பெரிதாக மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். எனக்கு இது ஒரு பிரச்சினை இல்லை. இதற்காக நீங்கள் இவ்வளவு யோசிக்க வேண்டியதும் இல்லை’

குரங்கை நினைக்காதிருக்க முயல்கிற அரசன் கதையைப் போல அவன் மீண்டும் அந்த யோசனைக்குள்ளேயே விழுந்தான்.

முதலில் எல்லாம் வெகு இயல்பாகத்தான் நடந்தது. உபசரிப்புக்குப் பின் அவளுடைய குடும்பத்தினர் அவனை ஒவ்வொருவராக கூர்ந்து நோக்குவது தொடங்கியது. தன்னை மறந்த நிலையில் உணர்ச்சி மேலிடச் சிரித்தோ, சொடுங்கியோ இருக்கிற காலத்தில் அவன் தன் கண்களை தொலைத்துவிடுகிறான். யாரேனும் இப்படியாக உற்று பார்ப்பது தெரிந்தபிறகுதான் தன் இமைகள் இயல்பை மீறி சுருங்கி விரிந்து அவசரகதியில் அடித்துக் கொள்வதை உணரவே தொடங்குவான். அந்த நொடியில் அத்தனை உணர்வெழுச்சியும் சட்டென வடிந்துப் போய் அவற்றை நோக்கி கவனம் குவிந்து கட்டுப்படுத்தத் தொடங்குவான். பாறாங்கல் போன்ற பிரம்மாண்டமான விழிகளை தலைக்கு மேல் சுமந்து கொண்டு சுற்றியிருக்கும் சோலையின் மீது இரசனை கொள்ள நேரமின்றி  கையறு நிலையில் முட்பாதையில் கவனமாகக் காலூன்றி நடக்கிற வழிபோக்கன் ஆகிவிட்டவனாக அவன் தோற்றம் வெளிவாங்கும். இப்போதும் அதுதான் நடந்தது.

பெண் வீட்டாரின் மூதாட்டி ஒருவர் அவன் காதுபடப் பேசினார்.

‘நல்லவேளை.. மாப்பிள்ளை பையன் ரெண்டு கண்ணையும் அடிக்கிறாரு. ஒரு கண்ணு மட்டும் சிமிட்டுற வியாதியா இருந்துருந்தா இன்னும் கொடுமையா இருக்கும். பொட்டப்புள்ளைங்க படிக்கிற காலேஜ் பக்கம்லாம் தலைகாட்டுனா கூத்தாயிருக்கும்’

அவர்கள் அனைவருமே அந்த நகைச்சுவைக்கு கூச்சமில்லாமல் சிரித்தார்கள். பிறகு அவனை நினைவில் வைத்து ‘சும்மாயிரும்மா. வயசான காலத்துல ஏதாவது உளறிக்கிட்டு’ என பேருக்கு அதட்டினார்கள். அவன் அச்சிரிப்பை எதிர்கொள்ளத் தெரியாது இருக்கையில் நகர்ந்து அமர்வது போன்ற உடல்மொழியைக் கையாண்டுப் பார்த்தான். தேநீர் குவளையை மறுகைக்கு மாற்றிப் பார்த்தான். அக்கூட்டத்தில் இன்னொருவர் தன் அறிவியல் பார்வையை செலுத்தினார். அவனை நோக்கிக் கேட்பதுபோல பொதுவில் கருத்தை வைத்தார்.

‘இது பரவாயில்லை. ஆனால் பிறக்கப்போகிற குழந்தைகளுக்கும் இப்பிரச்சினை தொற்றிக் கொள்ளுமோ?’

அவன் கடைசி அரணாக பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த அம்மாவைப் பார்த்தான். அம்மா கிளம்பலாம் என்பது போலத் தயாராக எழுந்து நின்றிருந்தாள்.

‘ஊருல நாட்டுல எவனும் கண்ணடிக்கிறது இல்ல. நல்ல பையனா.. வீட்டுக்கு வரப் புள்ளைய வச்சி பாத்துக்குவானானுலாம் யோசனை இல்ல. வியாதியாம் வியாதி’

அம்மா வழிநெடுக மனக்குறையை முடிந்து சரம் தொடுத்துக் கொண்டே வந்தாள். வாகனம் முழுக்க இயலாமையின் நாற்றம்.

மீரா டீச்சரோடு இப்போது வரை தொடர்பில் இருக்கிறான். அவன் வீட்டுக்கு வருவதாக தகவல் தெரிவித்தாலே மீரா டீச்சர் சிரிப்பார். தேவையான அளவிலான ஆறுதல் மொழிகளை தேநீரோடு எடுத்து வைக்கச் சொல்கிறானென்று பொருள்.

வெறும் சொற்களால் மட்டுமின்றி பணி கிடைக்கவும் அவர் நிறைய உதவியிருக்கிறார். முதன்முதலில் நேர்முகக்காணலுக்குப் போன நிறுவனத்தில் தேர்வாகிய அனைத்து நிலைகளையும் கடந்த மகிழ்வோடு அவன் உள்ளே சென்று அமர்ந்தபோது அவர்கள் நிறைய பேசினார்கள்.

‘நீங்கள் எப்போதிருந்து இப்படி நொடிக்கொருதரம் கண்களை சிமிட்டுகிறீர்கள்? இதுவரை சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லையா?’

அவன் எல்லாவற்றுக்கும் பொறுமையாக இமைகளை சற்றுநேரம் தியானத்தில் நிறுத்தி, தாழ்ந்துவரும்போதெல்லாம் வேறெங்கோ பார்த்து அவசரமாக இமைத்து முடித்து இயல்பாக இருப்பதாகக் காட்டிக் கொண்டு பதிலளித்தான்.

‘அனைத்து நிலைகளிலும் தேர்வாகிவிட்டீர்கள் தான். ஆனால் இப்பணியில் தினசரி நிறைய வாடிக்கையாளர்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அவர்களை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்?’

அவன் புரிந்து கொண்டதும் தளர்வாக எழுந்து வெளியே வந்து மீரா டீச்சர் வீட்டுக்கு ஓடினான். அவர் தலைமீது கைவைத்து ஆசிர்வாதம் செய்தார்.

‘இங்கு எதுவுமே குறையில்லை பையா. அவரவர் தேவைக்கு தகுந்த மாதிரி குறைகளின் அளவீடு மாறுபடும். உனக்கு பணி மறுத்த அதே நிறுவனத்தார் தன் பிள்ளைகளின் பிறந்தநாளுக்கு தானம் தந்து எழுபிறப்பையும் மெய்ப்பிக்க வேண்டி குறைபாடு உடையவர்களைத் தேடிச் செல்வார்கள். இதையெல்லாம் கடக்கக் கற்றுக்கொள்’

அவன் இப்போது பணிபுரிகிற நிறுவனத்திலும் கூட்டங்களில் பேச  எழுவது இல்லை. அவனை உரை நிகழ்த்தச் சொல்லி யாரும் வற்புறுத்துவதுமில்லை. தனிமை சூழ்ந்திருக்கிற நிலைமைகளை சகஜமாக்கிக் கொள்ள பழகிக்கொண்டவனுக்கு திருமணம் செய்து கொள்கிற எண்ணம் வந்தபோது அவளை மிகவும் பிடித்திருந்தது.

அவள் மீண்டும் கேட்டாள்.

‘எத்தனை வயதிலிருந்து இந்தப் பிரச்சினை?’

சித்திரை மாதத்து பின் மதிய வெயிலில் அவர்கள் கருமாத்து ஓடையின் அலைநீரில் முங்கிக் கொண்டிருந்தார்கள். அவன் சுரைக்குடுவையின் தயவில் ஈரத்தின் களிப்பை ஆழ்ந்து தரிசித்துக் கொண்டிருந்தான். மஞ்சனத்தி மரத்தின் தாழ்ந்தக் கிளையில் அவர்களது உடைமைகள் தொங்கவிடப்பட்டிருந்தன.

அம்மா கரையில் அவனது சட்டையையும் கால்சிராயையும் துணி துவைக்க எடுத்து முன்னும் பின்னுமாக திருப்புவதை வாயில் குமிழிட்டுக் கொண்டே பார்த்தான். கால்சிராயின் பைக்குள்ளிருந்து அவள் விரல்கள் துழாவி எடுத்ததை உற்று கவனித்தான். இரண்டு பீடிகள். சட்டென அவளது வெறுப்பின் அனல் நீரின் குளுமையை அணைத்துப் பரவியதை ஒரு நொடியில் உணர்ந்தவன் செய்வதறியாது பக்கத்தில் நீந்திக் கொண்டிருந்த நண்பர்களைப் பார்த்தான். கயமையின் சாகசத்தை முழுமையாக ஈடேற்றிவிட்டு ஒன்றுமறியாதது போல ஒளிந்து கொண்ட முகத்தை அவனால் ஆடிக்களித்து நீராடுபவர்களில் கண்டறியவே முடியவில்லை.

அச்சம் பின்னிழுக்க வம்படியாக ஈரக்கால்களை முன்னோக்கி நகர்த்தி வீடடைந்தவனின் தொடையில் பழுக்கக் காய்ச்சிய பணியாரக்குச்சியால் மறுக்க மறுக்க சூடு இழுத்தவளின் முகம் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் கூட வால்நட்சத்திரத்தின் வேகத்தில் வந்து வந்து மறைகிறது.

அன்றைய நாளிலிருந்தே அம்மூதாட்டி சொன்னது போல கண்நோய் அவனை பீடித்துக் கொண்டது.

செய்யாத தவறுக்காக தண்டனை பெற்ற அதீத பயத்தின் விளைவாகவே இப்படபடப்பு கண் இமைகளில் ஏறிக்கொண்டதாக முழுக்க விசாரித்த ஆத்தூர் வைத்தியர் எடுத்துச் சொன்ன இரவில் அம்மாவும் அவனும் உறங்காமல் துயரின் இருளில் புரண்டு கொண்டிருந்தார்கள். இப்போது வரை அம்மா கண்களில் நீர் மல்க சோறூட்டத் தொடங்குகிறாள் என்றால் அந்நிகழ்வுக்கு மன்னிப்பு கோருகிறாள் என்று அர்த்தம்.

நிறைய இடங்களில் சென்று பார்த்தும் யோகா உள்ளிட்ட மனதை ஒருமுகப்படுத்தும் நிகழ்வுகளை தொடர்ச்சியாகவும் முறையாகவும் கையாண்டுமே  எந்த மாற்றமும் இல்லாத நாட்களின்மீது  அவன்  தனிமை சூழ பயணித்துக் கொண்டிருக்கிறான்.

‘நான் மீண்டும் சொல்கிறேன். எனக்கு இதுவெல்லாம் ஒரு பிரச்சினை இல்லை. உங்களைப் பிடித்திருக்கிறது’

ஆராதனைச் சொற்களைக் கேட்டது போல அவனுக்கு செவிகள் குளிர்ந்தன. மேசையிலிருந்த மிச்சத் தேநீரை ஆவலோடு அருந்தினான்.

‘நாம் இருவருமாக போய் மீரா டீச்சரைப் பார்த்துவிட்டு வரலாமா?’ என அழைத்தான். அவள் அவன் பைக்கின் பின்புறம் அமர்ந்துகொண்டாள். மீரா டீச்சர் வீட்டுக்குச் செல்கிற பயணம் முதன்முறையாக குழப்பமின்றி மகிழ்வு நிரம்பியதாக இருப்பதாக அவனுக்குப்பட்டது. அவளது தொடுகையும் வாசமும் மென்மையான சொற்களும் தனது தனிமையை ஆற்றுப்படுத்துகிற வேலையைத் தொடங்கிவிட்டதாகத் தோன்றியது.

வழக்கமாக வந்துசெல்கிற பாதைதான் எனினும் அவளது வினாக்களுக்கு ஒருபுறமாக கழுத்தைத் திருப்பி பதில் சொல்லிக் கொண்டே வந்தவன் சாலையோரம் பூக்களை வைத்தபடி நின்றிருந்த குழந்தையை கவனிக்கவில்லை. இறுதி நொடியில் யூகித்து சட்டென வண்டியைத் திருப்பியும் சாலையோரக் கல் இடறி இடதுப்புறக் கால் குழந்தையின் மீது மோதிவிட்டது. பெரிதாக காயமில்லாதபோதும் பதறியபடி வண்டியை நிறுத்திவிட்டு அருகில் ஓடினான். ஒன்றுமில்லை என்கிற நிம்மதியோடு சிறு சிராய்ப்புகளைத் துடைத்தபோது அவளும் அழுகிற குழந்தையை சமாதானம் செய்யத் தொடங்கினாள்.

அழுகுரல் கேட்டு வீட்டுக்குள்ளிருந்து ஓடிவந்தப் பெண்ணைப் பார்த்தான். தெரிந்த பெண்தான் எனும்போது ஆசுவாசமாக இருந்தது. அவள் நிலைமையைப் புரிந்துகொண்டு கேட்டாள்.

‘என்ன தம்பி ஆச்சு? வீட்டுக்குள்ளேயே பூட்டி வச்சாலும் இது இப்படியே தான் தினமும் பூப்பறிக்கிறேன்னு ரோட்டுக்கு வந்துடுது’ எனக் கத்தியவாறு அதன் முதுகில் இரண்டு வைத்தாள். அது இன்னும் சத்தமிட்டு கத்தத் தொடங்கியதில் அவன் பதறியபடி அவள் கைகளைத் தடுத்தான்.

‘இல்லக்கா. என் மேல தான் தப்பு. பாப்பா ஓரமா தான் நின்னுச்சு. நான்தான் கவனிக்காம வந்துட்டேன்’

சட்டென அங்கே ஒரு மௌனம் பரவியது.

அப்பெண் இப்போது அவனை வெறுப்பாகப் பார்த்தாள்.

‘சரியில்லாத கண்ண வச்சிக்கிட்டு எதுக்கு வண்டி ஓட்டணும்? வீட்டிலேயே கிடக்கலாமே?’

ஒருநொடியில் முற்றிலுமாக பிம்பமுடைத்துவிட்டாள். ஒட்டுமொத்த பழக்கத்தையும் புண்ணாக்குகிற சொற்களை அள்ளியெறிந்து குழந்தையோடு வீட்டுக்குள் சென்றவளை அங்கிருந்து கடந்தபிறகும் கனக்கிற நிமிடங்களிலிருந்து அப்புறப்படுத்த முடியாமல் திணறினான். வழியில் தென்பட்ட மாமரத்தின் நிழலில் வண்டியை நிறுத்தினான்.

‘நீங்கள் நினைத்திருந்தால் இச்சூழலை வெகு எளிமையாகக் கையாண்டிருக்க முடியும்’

அவன் கேள்வியோடு நிமிர்ந்தான்.

‘எளிமையாக என்றால் எப்படி?’

அவள் மரநிழலின் குளுமையில் ஆழ்ந்துகொண்டே பேசினாள்.

‘அது குழந்தை தானே.. நீங்கள் மௌனமாக இருந்திருக்கலாம் அல்லது அடிக்காதீர்கள் என்பதோடு நிறுத்தியிருக்கலாம். அந்த இரண்டு அடியோடு எல்லாம் முடிந்திருக்கும். அதுவுமில்லாமல் அக்குழந்தை ஏற்கனவே குறும்பு செய்கிற வழக்கமுடையது எனும்போது அந்த அடிகள் பத்தோடு பதினொன்றாகப் போயிருக்கும். பெரிய பாதிப்பு இல்லாத போதும் உண்மையைச் சொல்லி அக்குழந்தையை அடித்ததற்காக அப்பெண்ணின் குற்ற உணர்ச்சியைத் தூண்டியிருக்கிறீர்கள். அது மட்டுமின்றி உங்கள் மீதான இதுநாள் வரையிலான அவளது பார்வையும் மாறிவிட்டது. இனிமேலும் அவள் உங்களைச் சந்திக்கையில் நீங்கள் செய்த விபத்தை நினைக்காமல் எப்படிக் கடக்க முடியும்?’

அவன் சற்றுநேரம் அவள் சொன்னதையே யோசித்துக் கொண்டிருந்தான். கண்களை தற்காலிக மயக்கம் கவ்வுவது போலிருந்தது. அருகிலிருந்த கல்திட்டையில் சாய்ந்தமர்ந்து கண்களை மூடிக்கொண்டான். இப்போது தொடையிலிருந்த தழும்பு கட்டியாக உருவெடுத்து வெடித்தது. தழும்புக்குள்ளிருந்து வெளியேறிய சர்ப்பங்களில் சில நாகமணிகளைக் கக்கின. சில உடல் முழுக்கப் பரவி மண்டைக்குள் நுழைகிற கதவை இமைகள் துளைத்து கண்களில் தேடி அலைந்தன. அவற்றில் ஒன்றே ஒன்றின் வாயிலிருந்து மட்டும் பீடிப்புகை வெளியேறிக் கொண்டிருந்தது.

‘நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் அக்குழந்தையின் மீது இந்த விஷயத்தில் பிழையில்லையே. அது ஏன் தண்டனை பெற வேண்டும்?’

அவள் பைக்குக்கு அருகில் சென்று நின்று கொண்டு

‘நீங்கள் எப்படி இவ்வுலகில் பிழைத்திருக்கப் போகிறீர்கள்?’ எனக் கேட்டாள்.

‘இதே கண்களோடு தான்’ என சொல்ல நினைத்து அவன் சொல்லவில்லை.

00

பெயர் ந.சிவநேசன். ஊர் சேலம் மாவட்டம் ஆரியபாளையம் சிற்றூர். ஆசிரியர் பணி. கவிஞர் மற்றும் எழுத்தாளர். கவிதைகள் காலச்சுவடு, நடுகல், நீலம், ஆனந்தவிகடன், கணையாழி, நுட்பம், குமுதம் தீராநதி, தி இந்து உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன.

கானங்களின் மென்சிறை, ஃ வரைகிறது தேனீ, இதங்களால் நிரம்பியவளின் முத்தச் சர்க்கரை, மீன்காட்டி விரல் ஆகியவை கவிதை நூல்கள்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *