-மகா.இராஜராஜசோழன்
செருப்பில்லாமல் நடக்கையில் காலில் முள் தைக்கும் போது முனியாண்டியின் கண் முன் வந்து போகிறது.அழிந்துபோன ஓர் அடர்ந்த காடு.
“அடே முனியா இப்போதான்டா இது ஊரு, ஐம்பது வருசத்துக்கு முன்ன நான் உன் வயசுல இருந்தப்ப இந்த இடம் பெரிய காடுடா, நீயும் நானும் கால்வச்சு நிக்கற இந்த இடத்துல ஒரு பெரிய ஆலமரம் இருந்துதுனு நான் சொன்னா நீ நம்புவியா?”
“என்ன தாத்தா சொல்ற? இந்த இடத்துலயா?”
என்று கேட்டவாறு கீழே குனிந்து பூமியைப் பார்க்கிறான்.
ஆலமரம் இருந்ததற்கான எந்த அடையாளமும் அப்போது அங்கே இல்லை.
பூமி பார்த்து நிமிர்ந்தவனிடம் தாத்தா சொல்கிறார்.
“ஆமாம் முனியா. ஆதோ அந்த மூனாவது வீடு இருக்குல அந்தத் தூரம் வரையில இந்த ஆலமரத்தோட கிளைகள் பரவி நிற்கும்.
இதோ இந்தப் பக்கம் திரும்பி பாரேன்” என்று தாத்தா சொன்னதும் திரும்பிப் பார்க்கிறான்.
முனியன் திரும்பிப் பார்க்கும் திசையில் பெரிய குளம் நீரின்றி வெடித்து வறண்டு கிடக்கிறது.
தாத்தா குளத்தின் பக்கம் கை நீட்டிச் சொல்கிறார்.
“இந்தப் பக்கம் எவ்வளவு தூரம் நிழல்பரப்பி இருந்ததோ அதே அளவுக்கு இந்தக் குளத்துப்பக்கமும் தன்னோட கிளைகளைப் பரவவிட்டு நிழல் பரப்பி நின்னுச்சு. அதனோட விழுதுகள் மரத்த சுத்தித் தொங்கும். விழுதுகள் தொங்கறதப் பார்த்தா, பெரிய பாம்புகள் மரத்திலிருந்து குதிப்பது போல இருக்கும்” அந்த மரத்தின் விழுது ஒன்றுதான் இன்றைக்கும் குளக்கரையில் இருக்கற அந்தச் சின்ன ஆலமரம்.
வேகமாக குளத்துப்பக்கம் ஓடிய முனியாண்டியின் பின்னாலேயே தாத்தாவும் ஓடுகிறார்.
ஓடிய முனியன் சின்ன ஆலமரத்தின் விழுதைப் பிடித்துத் தொங்கி காலை நீட்டி பூமியில் முன்னாங்காலைப் பதித்து எதிர் திசையில் உடல் பாய உந்தி உடலை நகர்த்தினான். உடல் முன்னோக்கி குளத்தின் கரைத்தாண்டி குளத்திற்குள் உடல் போய் மீண்டும் திரும்பி அதே வேகத்தில் கரைக்குத் திரும்பியவனை, ஓடிய தாத்தா ‘முனியா’ என வாரி அணைத்துக்கொண்டார்.
முனியன் விழுதை விட்டு மூச்சு இரைக்க, முகம் சிவக்க தாத்தாவின் மடியில் விழுந்தான்.
விழுந்தவன் “தப்பிச்சேன் தாத்தா, நீங்க பிடிக்கலான திரும்பிப் போய் குளத்துக்குள்ள விழுந்து இருப்பேன்” என்றவன் விரல்களைப் பிரித்து உள்ளங்கையைக் காட்டுகிறான். விழுதை அழுத்திப் பிடித்து இருந்ததில் அவன் கை சிவந்து போய் இருந்தது. விழுதுகள் அவன் உள்ளங்கையில் பதித்து இருந்த தடத்தை தாத்தா வாயால் ஊதி தன் தோள் துண்டை உதறி துடைத்துக் கொண்டே
“என்னடா முனியா இப்படி பண்ணிட்ட, வலிக்குதாடா” என்று கேட்ட தாத்தாவின் முகத்தைப் பார்க்கிறான். தாத்தாவின் கண்கள் கலங்கிப் போய் கண்ணீர் முட்டி வழியத் தொடங்குகிறது.
“தாத்தா ஏன் தாத்தா அழற; அழாத தாத்தா. இதோ என் கையைப்பாரு ஒன்னும் ஆகல” என்று மீண்டும் விரல்களை நீட்டி உள்ளங்கையைத் தாத்தாவின் முகத்துக்கு நேரே நீட்டுகிறான். தாத்தாவின் கண்களில் கசிந்த கண்ணீர் அவன் உள்ளங்கையில் வீழ்கிறது. தாத்தாவின் கண்களைப் பார்க்கிறான். பேரன்பின் கண்ணீர் வழிந்தோடுகிறது.
“அழாத தாத்தா இதோ என் கை சரியா போச்சுப் பாரேன்” என்று கைகளைத் தாத்தாவின் முகத்திற்கு நேரே நீட்டிக் காட்டுகிறான்.
தாத்தா தன் கைகாளால் அவன் உள்ளங்கையைத் துடைத்துவிடுகிறார்.
தாத்தாவின் அழுத்தமான தடித்த தோல்களால் ஆன விரல்கள் பஞ்சுபோன்ற அவன் உள்ளங்கையை அழுத்துகிறது. தாத்தாவின் உழப்பு வலிமையை அவரின் காய்ப்புக்காய்த்த கைகளின் வழியாக உணர்ந்து கொண்ட முனியன்.
உழைப்பு எல்லாவற்றையும் மாற்றும் என்பது அவனது நம்பிக்கைக்கை. அந்த நம்பிக்கைக்கு எப்போதும் தாத்தாவின் உருவம் உள்ளத்தில் உயிர் கொடுத்துக் கொண்டே இருந்தது.
காடு உலக உயிர்களின் அரண் என்பதை முனியனிடம் தாத்தா சொல்லிக் கொண்டே இருப்பார்.
முனியனின் எதிர்கால திட்டமும் அதுவாகத்தான் இருந்தது.
“தாத்தா தாத்தா” இங்க பாரேன். தாத்தாவின் கவனம் முழுவதும் வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி வெற்றிலையின் மையத்தில் சீவலை வைத்து வெற்றிலையை மடித்துக் கொண்டு இருப்பதில் இருந்தது.
“தாத்தா தாத்தா” என வேகமாகக் கத்தியதும் திரும்பிப் பார்த்தார். வெற்றிலையின் மடிப்பு களையாமல் வாயைத் திறந்து உள்ளே தினித்துவிட்டு.
“சொல்லுடா முனியா? ஏன் இந்தக் கத்துக் கத்தற” எனக் கேட்டார்.
தாத்தா நான் கூப்பிட்டேன் உங்களுக்குத்தான் காதில் விழல அதான் சத்தமா கத்தினேன்” என்றான்.
இப்போது தாத்தா வெற்றிலையை மென்று அதன் வடிவத்தைக் கூழாக்கி இருந்தார். எச்சில் வாயிலிருந்து ஒழுகாமல் இருக்க தலையை மேலாக நிமிர்த்தி
“சொல்லுடா முனியா இப்போ தாத்தாவுக்குக் காது நல்லா கேக்குது சொல்லுடா?” எனப் பேசுகிறார், சொற்கள் எச்சில் கலந்த வெற்றிலைச் சாற்றில் சிக்கி நழுவி வி்ழுந்தது.
“தாத்தா நம்ம ஊரைச் சுத்தி் ஒரு காடு உருவாக்கனும் தாத்தா”
இருமிக்கொண்டே தாத்தா சிரிக்கிறார்.
என்ன தாத்தா சிரிக்கரீங்க? என்னால அது முடியாதா தாத்தா?
முடியும்டா முனியா?
முனியனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தோட்டத்தின் பக்கம் செல்கிறார்
இப்படித் தன் வாழ்நாள் முடிவதற்குள்ளாக யாரும் கேட்டுவிட மாட்டார்களா என எங்கித் தவித்த தாத்தாவிற்கு முனியன் இப்படிக் கேட்டது தன் மீது அருள் வந்து இறங்கியது போல உணர்ந்த தாத்தா முனியனின் கையை இறுகப் பற்றி நடக்கிறார்.
சின்ன மலைபோல போர்த்திக் கிடந்த இலை தழைகளை நீக்குகிறார். உருண்டை உருண்டையாகப் பந்துகள் குவிக்கப்பட்டுக் கிடக்கின்றன.
“ஐ ! எவ்வளோ பந்து”
மகிழ்ச்சியில் சத்தமிட்டுக் கொண்டே ஓடி எடுத்துத் தாத்தாவிடம் காட்டிக் கேட்கிறான்.
“தாத்தா இது என்ன பந்து தாத்தா. சாணியால இருக்கு?”
“முனியா இது விதைப்பந்து”
“அது என்ன தாத்தா புதுசா சொல்ற விதைப்பந்தா?”
“ஆமாம் முனிய இந்தச் சாணி் உருண்டைக்குள்ள விதை வைத்துப் பந்து போல உருட்டி வச்சுருக்கேன். இதோ இந்த முட்டுல மண்டும் லட்சக்கணக்கான விதைகளை விதைப்பந்தா உருட்டி வச்சுருக்கேன்.”
”தாத்தா இதை எல்லாம் என்ன தாத்தா செய்யனும்?”
“முனியா நீ விளையாட போகும் போ, பள்ளிக்கூடம் போகும்போ, நண்பனைப் பாக்க போகும்போன்னு எப்போ வீட்டைவிட்டு வெளியே போனாலும் இந்த விதைப்பந்துகள கைல அள்ளிட்டுப் போய் போற இடம் முழுதும் வீசு. இந்த விதைப்பந்துகுள்ள இருக்கற விதைகள் எல்லாம் முளைத்துக் கொஞ்ச வருடத்துல நீ விதைச்ச எடம்மெல்லாம் மரங்களா நிக்கும் காடு உருவாகும்”
”அப்படியா தாத்தா இந்த விதைப் பந்துக்குள்ள அவ்வளோ விதைகள் இருக்கா தாத்தா? நீங்க சொன்னது போலவே செய்றேன் தாத்தா” எனக் கூறிய முனியன் அப்போது இருந்தே விதைப்பந்துகளைத் தான் சென்ற இடங்களில் எல்லாம் வீசினான்.
இன்று முனியனின் ஊரைச் சுற்றி ஒரு பெருங்காடே உருவாகி நிற்கிறது.
ஒரு மரத்தின் அடியில் தாத்தா புதைக்கப்பட்டிருக்கிறார். அவர் புதைக்கப்பட்டதின் அடையாளமாக விதைப்பந்துகள் குவியலாக வைக்கப்பட்டிருக்கிறது.
விதையாகி, மரமாகி, காடாகி, நிழலாகி நிற்கிறார். எல்லா மரநிழலிலும் சிரிக்கிறார் தாத்தா.
00

மகா.இராஜராஜசோழன்
தமிழ் பயிற்றுநர்,
இயக்குநர், செம்மொழி தமிழ்க்கூடம், சீர்காழி.

