— பாலமுருகன் லோ
“ஏண்டி, மாரியம்மன் நோம்பின்னா சும்மாவா! ஊரே அல்லோலப்பட்டுப் போவுமில்ல,” என்றாள் மாரியாயி.
“இல்லக்கா. நம்ம ஊரு நோம்பிக்கு இன்னும் பத்து நாள்தான் இருக்கு. அதான் காலேஜுல படிக்கிற என் புள்ள மாரிமுத்துக்கு சேதி அனுப்பியிருந்தேன். பத்து நாளுதான்டா இருக்கு. கம்பம் நட்டாச்சுன்னா, ஊரிலுள்ள யாரும் வெளியூருக்குப் போகக் கூடாது. வெளியூர்ல இருக்கிறவங்க கம்பம் நட்ட பிறகு ஊருக்குள்ள வரக்கூடாதுன்னு ஐதீகம் இருக்கு. அதான் அவனிடம் முன்கூட்டியே சொன்னேன். ஆனா அவன் சரியா பிடிகொடுத்து பேசல. அதான் கொஞ்சம் மனசு என்னமோ போல இருக்கு,” என்றாள் மேகலா.
“ஏண்டி மேகலா, இதுக்காகவா கவலைப்படுற? எல்லாம் வரவேண்டிய நேரத்துல உன் புள்ள வந்துடுவான் பாரு.”
“என்னமோக்கா… இந்தக் காலத்துப் பிள்ளைகளை நம்பவே முடியல. ஏதேதோ காரணம் சொல்லுதுங்க, வராமல் இருப்பதற்கு. அவனைத் தவமிருந்து பெத்தோம். அந்த மாரியம்மன்தான் எங்களுக்கு ஒரு நல்ல வழியைக் காட்டினா. அதான் ‘மாரிமுத்து’ன்னு பேரு வச்சோம். ஆனா அவன் இங்கிருந்து வெளியே பட்டணத்துக்குப் போனப்பறகு பெயரை ‘மதன்’ என்று மாற்றிக்கொண்டான்.
ஏதோ சொல்லுறான். கெஜட்டிலயும் பெயரை மாத்திட்டானாமாம். இந்தப் பெயர்… அதான் ‘மாரிமுத்து’ன்னு இருப்பது பழைய பெயர் மாதிரி இருக்காம். அதனால அவன் இஷ்டத்துக்குப் பெயரை மாத்திக்கிட்டு, ஊரு பக்கமும் வருவதை குறைச்சுக்கிட்டான்.”
“அப்படியாடி மேகலா, சங்கதி! இப்ப அவனை ‘மதன்’ன்னுதான் கூப்பிடணுமா? ஏன்… ‘மாரிமுத்து’ன்னு கூப்பிட்டா பிடிக்காதா? வரட்டும், நான் அவன்கிட்ட கேட்கிறேன்.”
“ஏனுங்கக்கா, கம்பம் எப்ப நடுறாங்க?”
“மேகலா, வர பத்தாம் தேதி.”
“அப்படியா? அப்போ பத்தாம் தேதியிலிருந்து பதினேழு நாளு ஊரே திருவிழாதான் போங்க!”
“அதான்டி. நான் உன்கிட்ட முன்னமே சொன்னேன். சரி, மனசு போட்டு கொழப்பிக்காம இரு. உன் புள்ள வந்துருவான்.”
“சரி, நான் வாரேன்,” என்று மாரியாயி கூறிவிட்டு தன் பொழப்பைப் பார்க்கச் சென்றுவிட்டாள்.
மேகலாவும் வேலாயுதமும் திருமணமாகி, புள்ள பாக்கியமே இல்லாமல் ஒரு எட்டு வருஷமா எல்லா கோவிலுக்கும் நடையா நடந்து வந்தார்கள். அப்போ ஏதோ ஒரு கோவிலில் ஒரு வயதான அம்மா மேகலாவைக் கூப்பிட்டு, “என்னடிம்மா, வேண்டுதல் பலமா இருக்கு போல?” என்றாள்.
“ஆமாங்க ஆத்தா. எங்களுக்கு புள்ள வரம் கேட்டு நானும் என் புருஷனும் நடையா நடக்கிறோம் எல்லா கோவிலுக்கும்,” என்றாள் மேகலா..
அதற்கு அந்த வயதான அம்மா சொன்னாள்.:
“ஏண்டிம்மா, எல்லா கோவிலுக்கும் போறீங்க சரி… உங்க ஊர்ல இருக்கிற மாரியம்மனுக்கு மனமுருக ஒரு வேண்டுதலை வச்சீங்களா?”
கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அவர்களது மௌனமே சாட்சி; அவர்கள் மனமுருக அவுங்க ஊர் மாரியம்மனுக்கு வேண்டுதலை வைக்கவில்லையென்று.
“என்னடியம்மா பேசாம இருக்க? மனமுருக வேண்டிக்கவே இல்ல போல!” என்றார்.
“ஆமாம் ஆத்தா. எங்க ஊரு மாரியம்மனுக்கு நாங்க மனமுருக வேண்டிக் கேட்கல. இப்ப என்ன செய்யலாம் ஆத்தா?” என்றாள் மேகலா.
“ஏண்டி, மாரியம்மன் பக்தர்களிடம் என்ன பெருசா கேட்கப்போறா! மாரியம்மன் நோம்பி தொடங்கி முடியும் வரைக்கும் மாவிளக்கு போட்டு, உன்னோட கோரிக்கையையும் அவளிடம் வையு. அவள் பார்த்துக்கொள்வாள். இப்ப நீ போலாம்.”
அந்த வார்த்தைகளுக்குப் பிறகு, கணவனும் மனைவியும் நோம்பி தொடங்கி முடியும் வரை மாவிளக்கு போட்டு, மாரியம்மனிடம் தங்களது ஒரே ஒரு வேண்டுதலை வைத்தனர். திருவிழா முடிந்து ஒரு மாதத்தில் மேகலாவின் வயிற்றில் புள்ள உண்டாயிடுச்சு.
இந்தப் பழைய நினைவெல்லாம் மேகலாவுக்கு வந்துபோனது.
“நாம அவனிடம் என்ன கேட்டோம்? நோம்பிக்கு வாடான்னுதானே. ஏன் அவன் ரொம்ப யோசிக்கிறான்? இப்பெல்லாம் காலேஜு லீவாதானே இருக்கு. மே மாசம் எல்லாம் ஸ்கூலும் காலேஜும் பெரும்பாலும் பரீட்சை முடிந்து லீவு விட்டிருப்பாங்க. இவன் மட்டும் ஏன் வீட்டுக்கு வருவதற்கு இப்படி யோசிக்கிறான்?
கடவுளே… நீதான் அவனுக்கு ஒரு வழியைக் காட்ட வேண்டும். அவனை எப்படியாவது நம்ம ஊருக்கு வரவையு தாயே,” என்று மனமுருக வேண்டிக்கொண்டாள்.
மதன், தன் காலேஜு வாழ்க்கையை அங்குலம் அங்குலமாக ரசித்து, அவனது பட்டண வாழ்க்கையை வாழ்ந்துவந்தான். கிராமத்துப் பையனா இருந்தவன், இந்த மூன்று ஆண்டுகளில் பட்டணவாசியாக மாறிவிட்டான்.
கிராமத்துல லுங்கியும் அரைக்கால் டிராயரும் போட்டவன், இப்ப பேன்ட்டு, முக்கால் வரை டிராயர், பனியன், ஷூ, கண்ணுக்குக் கண்ணாடி, கைக்கு விலை உயர்ந்த வாட்சு… அப்பா அம்மா சிறுகச் சிறுக சேர்த்து அனுப்பிய பணத்தில், அவன் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்துவந்தான் பட்டணத்துல.
அவனுடைய காலேஜ்ல படிக்கிற பெண் தோழி கௌரியின் ஊரும் அவனுடைய ஊர்தான். ஒருநாள் காலேஜ்ல இவனைப் பார்த்து, “என்ன மாரிமுத்து?” என்றாள்.
அவன் அவள் பக்கம் திரும்பவில்லை.
அவள் மீண்டும், “மதன்,” என்றாள்.
அவன், “என்ன கௌரி?” என்றான்.
உடனே அவள், “நீ எப்ப ஊருக்குப் போகப்போற?” என்றாள்.
“ஏன்? எதுக்கு இப்ப ஊருக்கு?” என்றான்.
“ஏன்டா, நம்ம ஊருல மாரியம்மன் நோம்பின்னு உனக்குத் தெரியுமில்ல? பின்ன என்னடா தெரியாத மாதிரி நடிக்கிற?”
“இல்ல கௌரி. அம்மா கூப்பிட்டிருந்துச்சு… சொல்லுச்சு வரச்சொல்லி. நான்தான் ஒண்ணும் சொல்லல,” என்றான்.
“ஏன்டா ஒண்ணும் சொல்லல? ஏன், உனக்கு ஊருக்கு வர பிடிக்கலையா?”
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. என்னமோ தோணல,” என்றான்.
“சரி. நான் இன்னும் இரண்டு நாட்களில் கிளம்புறேன். நீ வேணும்னா சொல்லு; உனக்கு ஒரு டிக்கட்டு சேர்த்து போடறேன்.”
“என்ன சொன்ன, கௌரி? இரண்டு நாளா?”
“ஆமாம்.”
“சரி. அப்போ எனக்கும் ஒரு டிக்கட்டு போடு. யாருக்காகவும் இல்ல… அம்மா கோசரம். நான் ஒரு பத்து நாள் ஊருக்குப் போயிட்டுத்தான் வருவேன்,” என்றான்.
கௌரி வேற சொல்லிட்டா. அப்புறம் ஊருல போயி வேற ஏதாவது சொல்லிவச்சுற போறா. கௌரியோட சேர்ந்து ஊருக்குப் போறதுதான் நல்லது என்று முடிவெடுத்தான்.
எப்ப எப்ப என்று காத்திருந்த மேகலாவுக்கு, மாரிமுத்துவைப் பார்த்தவுடன் ஆனந்தமோ ஆனந்தம். அவளது கண்களிலிருந்து கண்ணீர் விடாமல் வழியத் தொடங்கியது.
“வாடா கண்ணு… எங்க வரமாட்டையோன்னு நினைச்சிருந்தேன். ஆனா என் நம்பிக்கை வீண் போகல. அந்த மாரியம்மன்தான் உன்ன இங்க வரவச்சுருக்கா,” என்றாள்.
“என்னம்மா… ஏதேதோ சொல்லுற? நானாத்தான் வந்தேன். எந்த மாரியம்மனும் என்னிடம் சொல்லல. அத முதல்ல புரிஞ்சுக்கோ,” என்றான்.
“சரிடா. அதெல்லாம் பிறகு பேசிக்கலாம். வர பத்தாம் தேதி கம்பம் நடுறாங்க. ஒரே திருவிழாதான் போ,” என்றாள்.
“ஊர்ல உள்ள மாரியம்மனுக்கு தினம் ஒரு அலங்காரம். அது பார்க்கிறதுக்கு இந்த இரண்டு கண்ணும் பத்தாதுடா,” என்றாள்.
“என்னம்மா, சும்மா மாரியம்மன் மாரியம்மன்னு வந்ததிலிருந்து அம்மன் புராணமே பிடிச்சுக்கிட்டு இருக்கிற. ஊரிலிருந்து வந்திருக்கேன். கோழி, கிடா எல்லாம் கிடையாதா?” என்றான்.
“என்ன… எல்லாம் மறந்து போச்சா? இந்த மாசம் அசைவம் கிடையாது. சைவம்தான். உனக்குத் தெரியாதா? ஊர்ல இல்லேனா எல்லாம் மறந்து போயிடுமா?” என்றாள்.
“டேய், பத்தாம் தேதிங்கிறது நாளைதான்டா. முதல் நாளே ரொம்ப விமரிசையாக இருக்கும். கம்பம் நடுவாங்க, வேப்பிலை சாத்துவாங்க, மஞ்சத்தண்ணி ஊத்துவாங்க. ஊர்ல உள்ளவங்களெல்லாம் கம்பத்துக்கு உப்பு சாத்துவாங்க. அந்த பதினேழு நாளும் மனமுருக வழிபடுவாங்க. பார்க்கவே ஆயிரம் கண்ணு வேணுமடா,” என்றாள்.
“ஏன்டா, உனக்குத் தெரியுமில்ல, அந்த வயசுல கூட திருவிழானா ஜாலியா இருப்பியே. இப்ப என்ன ஆச்சு?”
“யம்மா… நான் கொஞ்ச நேரம் மாடிக்கு போறேன்,” என்று சொல்லிவிட்டு விடுவிடுன்னு மாடிக்கு சென்றான். மேல்மாடிக்கு வந்தவன் அவனது கண்கள் வழியா இரவு நேர கிராம அழகைப் பார்த்தான். ஒரு நொடி அவனை மறந்து உள்ளூர ஒரு ஆனந்தம் வந்தது. ஏன்னா ஒவ்வொரு தெரு முக்கிலும் லவுட் ஸ்பீக்கர் வச்சிருக்காங்க. முக்கியமா, கோவில் முகப்புப் பகுதியிலிருந்து அந்தத் தெரு முகப்பு வரை பந்தல் போட்டிருக்காங்க. சீரியல் லைட்டெல்லாம் வெகு விமரிசையாக போட்டிருக்காங்க. நிறைய தெருவோரக் கடையெல்லாம் இருக்கு. இதை எல்லாம் பார்த்த பிறகு அவனுக்கு பத்தாவது வயசு ஞாபகம் வந்துபோனது.
இருந்தாலும் அவன் கீழே வந்து, “ஏம்மா, நான் என்ன இன்னும் குழந்தையின்னு நினைச்சிருக்கையா?”
“யம்மா… நீ வேணும்னா தினமும் போயி வேண்டிட்டு வா. எனக்கு தோணுச்சுனா நான் போயி வேண்டிக்கிறேன்,” என்றான் மதன்.
“என்னடா இப்படி சொல்லுற? இந்த வழிபாட்டின் மூலம் ஊர்ல உள்ள நோய்கள் நீங்கி, பசி பஞ்சம் தீர்ந்து, மழை பொழிந்து, மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. ஏன்டா, உனக்கு அந்த நம்பிக்கை இல்லையா?” என்றாள்.
“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லம்மா. இப்ப இருக்கிற நவீன யுகத்தில் போயி இன்னும் இதையெல்லாம் நம்பிக்கிட்டு…” என்றான்.
“டேய், இப்படியெல்லாம் பேசாதடா,” என்றாள்.
இப்படியே இரண்டு மூன்று நாட்கள் நகர்ந்தன. மேகலாவும் அவளது கணவனும் தினமும் கோவிலுக்குப் போயி மாரியம்மனை வேண்டிவந்தனர்.
நான்காம் நாள் மதனுக்கு லேசா ஜுரம். மேகலா என்ன என்று பார்த்தப்போ, அவன் உடம்பில் அம்மை முத்து முத்தாய் எழுந்திருந்தது.
அதப் பார்த்தவுடனே அவள் பதறினாள்.
“யம்மா ஆத்தா… அவன் தெரியாம பேசிட்டான்மா. உன் புள்ளையா அவனை நினைச்சுக்கோம்மா. அவனை தண்டிக்காதம்மா,” என்று வேண்டினாள்.
கோவிலுக்கு அழுதுகொண்டே ஓடினாள்.
மேகலா அழுவதை பார்த்து பூக்கடை வைத்திருக்கும் பெண், மேகலாவிடம் என்ன என்று கேட்டு விஷயத்தை அறிந்துகொண்டாள்.
“யம்மா, கவலைப்படாதே. அம்மனுக்கு மாவிளக்கு போடு. நல்லா வேண்டிக்கோ. கம்பம் ஆத்துக்கு போறப்போ அக்கினிச் சட்டி எடு. நீ அக்கினிச் சட்டி எடுக்கறேன்னு அந்த மாரியம்மனிடம் வேண்டிக்கோ. கட்டாயமாக உனக்கு ஒரு நல்ல வழியை காண்பிப்பா அந்த மாரியம்மன்,” என்றாள்.
மதன் நான்காம் நாளிலிருந்து மீதமிருந்த நாட்கள் எல்லாம் வேப்பிலையில்தான் படுத்திருந்தான். பத்திய ஆகாரம்தான் அவன் சாப்பாடு. தினமும் சுத்தபத்தமாக வீட்டை வைப்பதிலிருந்து, வீட்டையே ஒரு கோவிலாக மாற்றிவிட்டாள் அவனது தாய் மேகலா.
அவள் வேண்டிக் கொண்டதைப்போல், கடைசி நாளில் தன் மகனுக்காக அக்கினிச் சட்டி எடுத்தாள்.
இதையெல்லாம் கௌரியும் பார்த்து மதனிடம் சொல்ல, மதன் உள்ளூர ஒரு புரிதலுக்கு வந்தான்.
அந்த நேரத்தில், கோவிலிலிருந்து எழுந்த பக்திப் பாடல் வரிகள் அவனது காதுகளை வந்தடைந்தன. “செல்லாத்தா செல்ல மாரியாத்தா…” என்ற பாடல் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருக்க, அவனது பார்வை சுவரில் மாட்டியிருந்த அம்மன் திருவுருவப் படத்தின் மீது நிலைகுத்தி நின்றது.
அம்மாவின் நம்பிக்கை வீண் போகவில்லை என்ற எண்ணம் அவன் மனதில் எழுந்தது; அவனது கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது.
00

பாலமுருகன்.லோ
பிறந்த இடம் கரூர் மாவட்டம். பள்ளிப் படிப்பு அனைத்தும் கரூரில் முடித்த பிறகு. வேலை நிமித்தமாகச் சென்னைக்கு 1997-ல் வந்தவன் பல நிறுவனங்களில் பணிபுரிந்து தற்போது ஒரு ஜெர்மானிய நிறுவனத்துக்கு ஆஃப்டர் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் பிரிவில் வேலை செய்துவருகிறேன். சிறு வயதிலிருந்தே எனக்கு எழுதும் ஆர்வம் இருந்தது. ஆனால் வளர வளர படிப்பு, வேலை திருமணம், பிள்ளைகள் என்று வந்த பிறகு எழுதும் ஆர்வம் சற்று மங்கிக் காணப்பட்டது. ஆனால் என்னாலும் மீண்டும் எழுத முடியும் என்று என்னை நான் முழுமையாகக் கண்டுகொண்ட வருடம் 2020 என்று கூறலாம். 2019-ல் இருந்து தீவிரமாகக் கதை மற்றும் கவிதைகளை வாசித்து ஒரு வாசகராக என்னை முழுமையாக மாற்றி இருக்கிறது இந்தக் கலை இலக்கிய உலகம் .

