எல்லா நாளும்
ஞாயிற்றுக்கிழமையாகிவிட்ட
எங்கள் கிராமத்தில்
வாரத்திற்கொன்று
ஏது ஓர் ஞாயிற்றுக்கிழமை
வாசலுக்கு வாசல் நெளியும்
கொரித்து திண்ணு வீசியெறிப்பட்ட
பசு மாட்டின் விலா எலும்பு
துண்டுகள் நூறு ,
*
மும்மாரி பொழிய வேணும்னு
முத்துமாரியம்மனுக்கு
மூணு தாவா கம்பு குத்தி
மூணு பானை வழிய
மூணு வேளையும் கூழ் ஊத்தி
பொங்க வச்சேன்
மூணு நாளா படுத்த
படுக்கையாய் கிடக்கும் ஆத்தாவுக்கு
தூக்கு வாளியில
கறிசோறு போக
கடைசி நாளான நேத்து
பாடையில உயிர் போக
கோழி குஞ்சு ஒன்றை கட்டி
ஆத்தாவுக்கு துணை அனுப்ப
அரை டவுசரே அழுது
புலம்பிக் கிடக்கும்
எனக்கே இப்பொழுது வயசோ
ஆறு பசியோ நூறு
நா வெறுக்க வெறுக்க பாக்க
கண்ணுக்கு தெரியிறதெல்லாம்
பால் குடித்த ஆத்தாவின்
முளை காம்பு இரண்டு ,
*
குழந்தைகளிடம்
பேசும் பொழுதெல்லாம்
நீ எம்மொழியை
உச்சரிக்கிறாய் என்று
கேட்கும் நண்பர்களிடமெல்லாம்
அன்பெனும்
என் தாய் மொழியை தான்
உச்சரிக்கிறேன் யென்று
கூறிவிட்டு நகருகிறேன்
நான்கு பக்கங்களிலிருந்தும்
என்னை சூழ்ந்து கொண்டு அணைத்துக்கொள்கிறது
கல்லம் கபடமற்ற
குழந்தைகளின் இதயங்கள் ,
*
பசியென பாடும்
அனாதைக்குழந்தைகள்
திறந்திருக்கும் தெருவுக்கு தெரு
உயர் ரக உணவகங்கள்
யார் பந்தியிடுவார்கள்
மனம் முழுக்க
முளைக்கத் தொடங்கியிருக்கிறது
சப்பாத்தி முட்கள்,
*
அவ்வளவு பெரியதாய்
ஒன்றும் இல்லை எங்கள் வீடு
பத்துக்கு பத்து அடி கொண்ட கூரை வீடு
ஆடு மாடுகள் நான்கு உண்டு
அதனோடு சேர்ந்து
நாங்கள் ஐந்து பேர்
கூழோ கஞ்சியோ குளித்துவிட்டு குடிப்போம்
டீவி இல்லை
செல்போன் இல்லை
நிறையவே இருக்கின்றன புத்தகங்கள்,
*
கறி என்றால் அவ்வளவு பிடிக்கும் அம்மாவுக்கு
அதிலும் மாட்டுக்கறி என்றால்
அவ்வளவு விருப்பம்
விருப்பு வெறுப்பின்றி
சமைப்பதில் வேகம் கூட்டுவாள்
இஞ்சி
பூண்டு
தக்காளி
கருவேப்பிலை என கொஞ்சம் கொஞ்சமென சேர்த்து
தன் அன்பை கூடுதலாய் சேர்ப்பாள்
பக்கத்து வீட்டுக்கே
பசியாற்றும் கை பக்குவத்தின்
குழம்பின் வாசம்
மூக்கை இழுக்கும்
யாவரும் ஒன்றாய் அமர்ந்து சாப்பிடுவோம்
இன்னும் கொஞ்சோன்டு குழம்பு ஊத்தென பாடும்
பக்கத்து ஐயர் வீட்டு பாட்டிக்கோ இப்பொழுது பல் விழுந்து
ஆறேழு நாளாச்சு,
*
காற்றில் பறக்கும்
மாட்டுக்கறிக்குழம்பின் வாசம்
நேரம் இரவு பத்து மணி
கால்கள் அற்று
ஊரிருக்குள் நுழைகிறது
சேரி மாடு,
*
நீண்ட நாட்களுக்கு பிறகு
கனவில் வந்தால் அம்மா
வந்ததும் தான் வந்தாய்
எதாவது வாங்கிட்டு
வந்திருக்கிறாயா என கேட்டேன்
கொண்டு வந்த
அந்த சிறிய பையிலிருந்து
எடுத்து எடுத்து
கொடுத்துக்கொண்டே இருந்தால்
நானும் வாங்கி வாங்கி அடுக்கிக்கொண்டே போனேன்
விடிந்தது கூட தெரியவில்லை
அன்புக்கு நேராவே அன்பு,
*
துரத்தும் மரண செய்திகள்
கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்
யாரையாவது காதலிக்க வேண்டும்
படிக்க வேண்டும்
பாட வேண்டும்
ஆட வேண்டும்
குடிக்க வேண்டும்
அதன் பிறகாவது நான் கொஞ்சம் வாழவேண்டும்
என்னை மன்னியுங்கள் கடவுளே
என்னிடம் ஏதும் இல்லை
எதுவுமற்ற இவ்வுலகில்
*
நான் அவர்களை போல அல்ல
கொஞ்சம் வித்தியாசமானவன்
சோகமென்றால் சிரிப்பேன்
சிரிக்க சொன்னால் அழுவேன்
ஆனால்
படி என்று சொன்னால்
புத்தகங்களோடு பேசுவேன்,
*

ச. சக்தி
அழகு பெருமாள் குப்பம், பண்ருட்டி

