1.திசை திருப்பம் 

*******************

அதிர்ச்சியூட்டும் எதிர்பாரா

நிகழ்வுகளால் இந்தக் காலம் நகர்கிறது

,

அதே நேரத்தில் 

குறுகிய நேர ஆச்சர்யங்களுக்கு 

உங்களைத் திசை திருப்பும் 

இரட்டை சம்பவங்களும் நிகழ்கின்றன

,

இதில் 

எதில் நீங்கள் 

மூழ்கி வெளியேறுகிறீர்கள்

2.அச்சமாக இருக்கிறது

***********************

எமது நிலத்தில் 

குண்டு வெடிப்புகள் இல்லை

துப்பாக்கி ரவைகள்

எங்கள் கட்டடங்களைத் 

துளைப்பது இல்லை 

இனப் படுகொலைகள் இல்லை

வித விதமான சித்ரவதைகள் செய்யும்

வதை முகாம்கள் இல்லை 

யாரும் கொத்து கொத்தாக 

விஷம் வைத்துக் கொல்லப்படவில்லை 

ஆயிரமாயிரமாயிரம் பேர் 

கான்கிரீட் குழிகளுக்குள் 

உயிரோடு சமாதியாக்கப்படவில்லை

இப்படியாக

அமைதி நிலவும் 

இந்த நிலத்தில்தான் 

எல்லா இடங்களிலும் 

அவதூறும் வெறுப்பும் 

புற்களைப்போல

விளைகின்றன

அமைதி நிலவும் 

இந்திலத்தில்தான் 

நசுக்கப்படும் மலர்கள்போல

பெண்கள் குழந்தைகள் 

அவதியுறுகிறார்கள்

இங்குதான் சமூக ஊடகங்கள்

பொய்களை உண்மையாக்குகிறார்கள் 

கருத்தியல் சிதைவும் 

சிந்தனைச் சிதைவும் 

இங்குதான் நிலவுகிறது 

பத்திரிக்கையாளர்கள் 

கேள்வி கேட்க மறந்துவிட்டார்கள் 

ஒரு “டாட்டூ”வை அழிப்பது போல

இந்நிலத்தின் மக்கள் 

தம் அடையாளங்களை 

அழித்தொழித்துக்கொண்டார்கள் 

மலையின் கொண்டை ஊசி வளைவுகளில் 

திரும்பும் வாகனங்கள் தவறி அதள பாதாளத்தில் விழுவதைப்போல

திசை திருப்பிகளால் 

கேட்ட கேள்விகளை மறந்து போயிருக்கிறார்கள்.

இந்நிலத்தில்

சாமான்யனொருவன் 

சக மனிதனோடு சேர்ந்து 

கோவிலுக்குள் கூட 

நுழைய முடியவில்லை 

அச்சமாக இருக்கிறது .

3. குற்றமும் குற்றவுணர்வும் 

****************************

1.

குற்றங்களை

இரகசியமாய்ச் செய்ய

உடன்படிக்கை செய்துகொண்டவர்கள் 

குற்றவுணர்வை இரகசியமாய்ப் பகிர்ந்து கொள்ள மறுக்கிறார்கள் 

,

குற்றத்தின் இரகசிய மாயக் குகையைத்

தாய்மடியெனக் கருதுபவர்கள் 

குற்றவுணர்வைத் தீமையின் ஆலயப் படிக்கட்டுகளெனக் கருதுகிறார்கள் 

2.

உன் குற்றம் 

எனக்குக் குற்றமற்றது

என் குற்றம் 

உனக்குக் குற்றமற்றது 

நம் குற்றம் 

அவர்களுக்குக் குற்றமற்றது 

அவர்கள் குற்றம்

வேறு யாருக்கோ குற்றமற்றது 

,

பொதுவான குற்றத்தைத் துவங்குபவர்கள் 

பாக்கியவான்கள் 

குற்றம் குறித்து குற்றவுணர்வற்றவர்களோ

பெரும் பாக்கியவான்கள் 

3.

குற்றவுணர்வைச் சுமந்து திரிபவர்கள் 

ஒருபோதும் 

விடுதலையின் பாதையைக் கண்டடைவதில்லை

விடுதலையின் பாடலைப் பாடுவதில்லை 

விடுதலையின் காற்றைச் சுவாசிப்பதில்லை 

துயருறாக் கணங்களில்

ஒருபோதும் வசிப்பதில்லை .

4.

எல்லாரும் அறிய ஒரு குற்றத்தைச் 

செய்வதற்கும் 

யாரும் அறியாது ஒரு குற்றத்தைச்

செய்வதற்கும் 

நிறைய வேறுபாடுள்ளதை 

தலையால் நடந்து செல்லும் 

சர்க்கஸ் கோமாளி 

உணர்த்திச் செல்கிறான் 

,

நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம் 

குற்ற உணர்வேயின்றி .

00

தாமரைபாரதி (பெ.அரவிந்தன் )

இதுவரை வெளிவந்துள்ள கவிதைத் தொகுப்புகள் 

தபுதாராவின் புன்னகை (2019)

உவர்மணல் சிறுநெருஞ்சி(2021)

காசினிக்காடு(2023)

இங்குலிகம் (2024)

தெறுகலம் (2024)

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த நான் தற்போது சென்னையில் வசிக்கிறேன் .

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *