1

கல்லுக்குள் சுலபமாக நுழைய முடிகிற கடவுளுக்கு

மனிதனில் நுழைய முடியாதா

வா  கடவுளே என்னுள் இறங்கு

அங்கே பெரியார் இருப்பார்

அம்பேத்கார் இருப்பார்

அறிமுகம் செய்துகொள்

சேகுவாரா ஸ்டீபன் ஹாக்கிங் இருப்பார்கள்

அவர்களின்  கதையை  கேள்

வெளி நாட்டு  கடவுள்கள் பற்றி

பெர்ட்ரண்ட் ரசலிடம் தெரிந்துக்கொள்

உனக்கு போரடித்தால் கம்பனை எடுத்துப் படி

பக்கத்திலே கம்பரசம் எடுத்து பார்

அலமாரியில் மனு தர்மமும் பெண் ஏன் அடிமையானாள்

அடுத்தடுத்து இருக்கும்

இரண்டையும் படி

இந்திய அரசியலமைப்பு சட்டபுத்தகம் படித்து விட்டு

அம்பேத்காரிடம்

எப்படி சாத்தியமென்று தெரிந்துகொள்

உறங்கப்போகும்.முன்

உன்னை கேள்வி கேள்

புது விடை கிடைக்கும்

,

நீ விரும்பும் வரை

எனக்குள் இருக்கலாம்

உன்னை   நிரந்தரமாக இருக்கச்சொல்லி கட்டாயப்படுத்த மாட்டேன்

அதன் அவஸ்தை புரியும்

சுதந்திரத்தின் அருமை தெரியும்

,

2

,

வீட்டுக்குள் நுழையும் போது

செருப்பை கழட்டி விடுவதைப் போல

சில சொற்களை வெளியே

கழட்டி விட வேண்டும்

இல்லையெனில்

தவறுதலாக வெளிப்பட்ட ஒரு சொல்லால்

வீட்டின் தட்ப வெட்ப நிலை

பாதிப்புக்குள்ளாகும்

எதிர்பாராமல் சூறாவளி

கடும் மழை பலத்த சேதாரம்

உண்டாகலாம்

கட்டி வைத்த பாலம்

பெரு வெள்ளத்தில் அடித்து செல்லப்படலாம்

வாழ்க்கையின் சுவர்களில்

விரிசல்கள் விழலாம்

இரவு பகல்களின் பாதை குண்டும் குழியுமாக மாறி விடலாம்

நிழல் கொடுத்த மரம்

வேறொரு சாய்ந்து போகலாம்

வருமுன் காப்பது நலம்.

00

கோசின்ரா

கோ.ராசேந்திரன் என்ற இயற்பெயர் கொண்டவர் கவிஞர் கோசின்ரா. கடந்த பதினைந்து வருடங்களாக கவிதை எழுதி வருகிறார். இவருடைய அரசியல் கவிதைகள் பிரபலமானவை. சமூக எதார்த்தங்களின் மீது இவருடைய உக்கிரமான பார்வை கவிதைகளாகிறது. என் கடவுளும் என்னைப் போல கருப்பு என்பது இவரது முதல் கவிதைத் தொகுப்பு. “சமூகத்தில் பிரச்னைகள் எழுகிற போதெல்லாம் என்னுடைய விமர்சனங்கள் கவிதைகளாக வெளிவருகின்றன” என்கிறார் .இவருடைய இரண்டாம் தொகுப்பு “ பூனையின் கடவுள்:”புது எழுத்து வெளியீடு.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *