ஃபெர்மியான்களும் போசான்களும்
1.
இக்காதல் வாழ்வில்
என் நிகர்
நிறை ஒத்த
நிழல் துகள்
நீ
,
இருக்கிறாயா
இல்லையா
நான்
இருக்கிறேன் .
2.
இருப்பதாக
எண்ணிக்கொண்டு
இருப்பதில்
என்ன
இருக்கிறது
ஒன்றுமில்லை
3.
மிக குறைந்த
மீச்சிறு
நிறையற்ற
நிழல் துகளொன்று
இருக்க முடியுமா?
,
உனதன்பில்லாத
நான் வாழவில்லையா?
,
இல்லை
,
நீதான் வாழ்ந்துகொண்டிருக்கவில்லையா?
4.
அன்பின் வளையங்கள்
நீள் வட்டப்பாதையில்
விரிவடைகையில்
கடைசி விளிம்பில்
கடைக்கோடியில் அமர்ந்து
உன்னைச் சுழலும்
கட்புலனாக
நிழல் துகள்
நான்.
,
ஈர்ப்பின் பொருண்மை மட்டும்
இழுத்துக்கொண்டு கிடக்கிறது
5.
இவ்வூடல் வாழ்வில்
கோடி கோடி
நிழல் துகள்கள்
உலவினும்
நாமிருவரும்
நிறை நிகர் நிழல்
துகள்களாயிருப்பினும்
சுழல்வதென்னவோ
எதிர் திசைகளில்தான்
குடிகார தேவதைகளின் குல சரித்திரம்
*****+**++***************************
1.
தேர்ந்த குடிகாரிகளிடம்
மிகுந்த எச்சரிக்கையோடு
நடந்து கொள்ள வேண்டுமென
கடிகார மிட்டாய் விற்பவன்
இரப்பர் ஒலிப்பான் மூலம்
சமிக்ஞை காட்டுவதை
தேர்ந்த குடிகாரிகள்
அறிந்தபொழுதில்
சினந்தெழுந்தனர்
,
நறவு செய்யும்
நாச வேலைக்கு
மிதிவண்டியில் சுழலும்
கடிகார மிட்டாயின்
காலச் சக்கரங்களும்
தப்புவதில்லை.
2.
குடிகாரிகளிடம்
குறி சுருங்கியோர்
எல்லை மீற
எத்தனிக்கையில்
பெருங்குரலெடுத்துச் சிரிக்கிறார்கள்
அழிந்துவரும்
விலங்கினங்களைப்போல
3.
அவமானத்தால்
முகம் சுருங்கிய
அரசர்களின் ஆடையவிழ்தலை
ஒரு நாடகமாகவே அரங்கேற்றி
ஆர்ப்பரிக்கிறார்கள்
ஆர்ப்பரிப்பின் கரவொலியில்
கைக் கண்ணாடி வளையல்களின்
குலுங்கலொலியில் பின்னனியில
மின்னுகின்றன
தேர்ந்த குடிகாரிகளின்
எகத்தாளங்கள்
3.
தொன்றுதொட்டுக் குடித்து வரும்
குடிகாரிகளின் வேட்டையாடலுக்குப்
பலியான கணவான்கள்
தம் வீடு திரும்பலை
மறந்த வேளை
அஸ்தமிக்கும் சூரியனின்
அகாலமாயிற்று
4.
பாணங்களுக்குப்
பல மணம்
பாணமருந்திய தேர்ந்த
குடிகாரிகளுக்குப்
பல மணம்
பல மனமும்
5.
நுரைத்துப் பொங்கும்
சிரிப்பலையால்
மனதைக் கரைத்துப்
பூசும் வல்லமை கொண்ட
குடிகாரிகள் குடியிருக்கும்
ஊரிலிருந்து வெகுதூரம்
வந்துவிட்டவன்
வாயில் நுரைதள்ளிச்
செத்துப் போயிருந்தான்
அ்ந்நுரை
வீச்சம் பாலாயிருந்தது.
6.
கை விடப்பட்ட
நகரங்களில்
கை விடப்பட்ட
வீடுகளின்
கல் சந்துகளில்
முளைத்தெழும்
ஆலவிழுதினைப்போல்
எப்போதாவதொரு
கைதேர்ந்த குடிகாரி
கைத்தாங்கலாக
எவனையாவது
அழைத்துச் செல்கிறாள்
7.
மயங்கியவர்களின் தலையை
விலகிய
சேலைத்தலைப்பால் மூடி
மார்பிலழுத்தி
மூச்சு முட்ட மதுவளிக்கும்
குடிகாரிகள் தேவதைகளாகிறார்கள்
குடிகார தேவதைக் கதைகளை
கசியுந் திரவ வழி அறிந்த
கணவான்களின் குடிவழி
வம்ச சரித்திரம்
வசியங்களுக்கப்பாற்பட்டதானது
8.
கள்ளும் சுட்ட
கருவாடும் கலந்துமக்குத் தரும்
பனந்தோப்புக் குடிகாரிகள்
பனம்பன்னாடைகளில்
வடிகட்டித்தருவது கள்ளையா ?
அவர்களதன்பையா?
9.
மாசுறை மனத்தின்
மயக்க யுக்தியில்
மூடுண்டு
மூழ்கியிருந்த
முதுகுடிப் பெரும்பாணனின்
பழம்பாடல்களில்
குடி கெடுத்த
தேர்ந்த குடிகாரிகளின்
இரகசிய காதல் வாச்சியங்களை
ஒளித்து வைத்து
இப்போது வாசிக்கும் நீங்கள்
வாயில்
இரத்தம் கக்கியோ
வேறேதும் கக்கியோ
செத்துப்போகக் கடவது .
00


