1

உள் அரிகம்

,

பேசும் போது

ஒலி வெளியேறுவதில்லை;

நாக்கின் அடியில்

ஒரு தழல்

கரிந்து கொண்டே இருக்கிறது.

,

நினைவுகள் கண்ணாடியின்

பின்னணி அல்ல;

அவை உடைந்து

சிதறிய ஒளிப்படலங்கள்.

விழிகளுக்குள் சிக்கிய

ஒவ்வொரு நிழலும்

மறுக்க முடியாத

ஒரு சத்தியம்.

,

“உன்னைக் காண்கிறேன்” என்ற

உனது வாக்குறுதி

ஏக்கங்களின் மூன்றாம் பரிமாணம்;

அது உண்மையா? அல்லது

காலங்கடந்த

ஒரு பிம்பத்தின் பிரதியா?

,

இங்கு மொழி

ஒரு நீர்த்தடாகம்:

அது எதையும்

முழுமையாகப் பிரதிபலிப்பதில்லை.

நீரின் அலைவுகளில் தோன்றுவதும்

மறைவதுமாக ஒரு மாயாஜாலம்.

,

தூண்டப்பட்ட உணர்வுகள் யாவும்

பூமிக்குக் கீழே

ஓடும் அந்தரங்க ஆறுகள்;

அந்த நதியின் ஓசையையே

நாம் கவிதை என்று

பெயரிட்டு அழைக்கிறோம்.

,

சுழலும் படிமங்களின் மத்தியில்—

உணர்வு அங்கே இருக்கிறதா?

அல்லது நம் பார்வையின் வழியே

அது புனையப்படுகிறதா?

2

பிரதி

,

கண்ணாடிப் பூச்சியிலிருந்து வீழ்ந்த

ஓர் இழைமயக் கணத்தில்

காலப்புள்ளி ஒன்று ஒட்டப்பட்டது.

,

அது நான் அல்ல;

தன்னையே சிறு துண்டுகளாகப் பெயர்த்து

வெளியே எறிந்து கொள்ளும்

மௌனமான வேறொரு பிம்பம்.

,

தொட்டால் துளிர்க்கும் நினைவுகள்

மின்னலைப் போல

திசைகளைத் திருப்புகின்றன;

நீ நடந்த பாதையை

உனது நடைமுற்றமே

இப்போது மறுக்கிறது.

,

கண்ணாடி

என் மனதைப் பிரதிபலிக்கவில்லை;

ஒரு கணம்,

என் நிழலைத் தொட்டு

நானே கீழே விழுந்தேன்.

,

அங்கேதான் கவிதை கருக்கொண்டது—

பிம்பமாக அல்லாமல்,

புதைந்து உதிக்கும்

ஒரு தீரா உணர்வாக

மட்டும் எஞ்சுவதற்கு.

,

3

இரண்டாம் பரிணாமம்

,

கண்ணாடியின் மறுபுறம் நான்

ஒரு தவிர்க்க முடியாத சுவாசமாகிறேன்.

பார்க்கப்பட்ட ஒவ்வொரு முகமும்

வெவ்வேறு வலிகளின்,

மறைக்கப்பட்ட ஆசைகளின் உருமாற்றங்கள்.

,

நிழல்கள் ரகசியமாகப் பேசின:

“நீ எங்களின் பிரதி மட்டுமல்ல,

எங்களின் ஒரே கண்ணியம்.”

வெளிச்சத்தைத் துறந்த சில நிழல்கள்

இருளின் ஆழத்திலிருந்து

கவிதைகளை எழுதுகின்றன—

யாராலும் வாசிக்கப்படாத,

ஆனால் உயிர்ப்பு மிக்க கவிதைகள்.

,

வார்த்தைகள் யாவும்

மனதின் மீது அழுத்தப்படும்

இழைத் தடங்கள்.

விழித்த பிறகும் தொடரும்

ஒரு நீண்ட கனவின் எச்சங்கள்.

,

நான் எழுதுபவன் அல்ல;

வெறும் கண்ணாடி—

வாசிக்கப்படும் துயரங்களின்

மௌனத் திரைச்சீலை.

,

4

காலத்தின் திறப்பு

,

துருப்பிடித்த அந்த

நுழைவாயிலைத் திறக்கிறேன்

வாசல் வழியே கசிகிறது—

நாதம் அறுந்த இசைக்கருவிகளின்

நிசப்தமான இசை.

,

அலைகள் கரையில்

எழுதிச் செல்லும்

வாசகங்களை யாரும்

வாசிக்க முடியாது;

அவை நினைவுகளின்

வடிவமற்ற புதைகுழிகள்.

,

“மறைபொருளின் மரபுகள்,

காலத்தின் இறுதித்

துளியையும் மீட்டெடுக்கும்”

உமது வரிகளை

கடல் பாறைகளில்

வெட்டி எடுக்கிறேன்.

,

ஒரு பச்சை மீன்

என் மார்பில் ஊர்ந்து செல்கிறது.

அது தந்தையின் குரலில் கிசுகிசுக்கிறது:

“உன் இனத்தின் துயரை எழுது—

தோல்வியின் மொழியில் அல்ல,

ஆனந்தம் எனும் தீரா வேதனையில்.”

,

5

சுவாசத்தின் விளிம்பில் ஒரு நகரம்

,

நகரம் ஒரு சுவாசம்.

அது நுரையீரலுக்குள் புகும் முன்

ஈரமடைந்த சுவரிலிருந்து கசியும்

மணத்தைப் போல நினைவாகிறது.

,

நிலா மேகங்களைக்

கிழிக்கும் ஒளியாய்

அவளின் குரல் கேட்கிறது:

“நீ உன்னைத் துறக்கும் கணத்தில்

உண்மை பிறக்கிறது.”

,

புறநகரின் சிகரெட் புகையோடு கிளம்புகிறேன்.

அதன் சாம்பல் நிறப் புகை

உள்ளுணர்வின் கதவுகளைத் தட்டுகிறது.

,

மூளையின் இடுக்கிலிருந்து

பறந்த ஒரு பறவை,

வரலாற்றின் பக்கங்களைத்

துளைத்துச் செல்கிறது.

மெழுகில் அழுத்தும்

முத்திரையைப் போல வார்த்தைகள்

இருளைத் தின்னத் தொடங்குகின்றன.

,

நாம் உச்சரிக்காத சொற்களே

நமக்கு மரபாகின்றன—

காதலின் தடம்,

அழிவின் வாசல்,

பெயர்கள் துறந்த

மீண்டும் எழுதப்படும் கவிதைகள்.

00

பெயர்             : ஏ.எச்.எம்.நவாஷ்

புனைப்பெயர்       : ஈழக்கவி

சேவை            : பேராதனைனைப் பல்கலைகழக மெய்யியல் துறை

                   முன்னாள் விரிவுரையாளர்,

                   ஓய்வுநிலை அதிபர்.

படைப்புத்துறை    : கவிதை, விமர்சனம், ஆய்வு

நூல்கள்           : 16 (வெளிவந்துள்ளன)

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *