நகர இரவு: ஒரு பித்து வெளி
i
சிக்னல் விளக்குகள்
அணைந்த பின்னும்
என் கண்கள்
இன்னும் விழித்திருக்கின்றன—
முகமூடி அணிந்த
அந்தப் பிளாஸ்டிக்
பொம்மையைப் பார்த்தபடி.
தெருவிளக்குகளின் வெளிச்சத்தில்
சறுக்கும் நிழல்கள்,
மழைக்கால மின்னலைப் போல
உதிர்ந்து மறைகின்றன.
ii
ஒரு முத்த மயக்கத்தில்
கிடக்கிறாள் நகரம்.
அறிமுகமற்ற முகங்கள்
திடீரெனத் தங்களுக்குள்
விசித்திரமான பந்தத்தோடு
கடந்து செல்கின்றன.
,
தங்க நகைகள் ஜொலிக்கும்
ஆடம்பரக் கடை;
அதன் பக்கத்துச் சந்தில்
அழுகும் சாணிப்பொதி.
இரண்டும் ஒரே தெருவிளக்கின்
கீழ் சமமாகப் பளிச்சிடுகின்றன.
iii
பிச்சை கேட்டு கையேந்தும்
ஒரு யாசகன்
இரத்தக் களரியாய்
வீதியின் மையத்தில் வீழ்ந்தான்.
அவனைக் கடந்து சென்ற
மூன்று சொகுசு கார்கள்,
தங்கள் வேகத்தைக் குறைக்காமல்
ஹார்ன் ஒலிகளால் மட்டுமே
தங்கள் இருப்பைச் சாட்சியப்படுத்தின.
iv
மழையைக் கடந்து ஓடும்
ஒரு பெண்;
அவளது ஜீன்ஸ் ஆடையின்
கிழிசல்களுக்கு இடையே
ஒரு முழு நாவலின்
மௌனம் சிக்கிக்கொண்டிருக்கிறது.
v
நகர இரவு—
பித்து பிடித்த
ஒரு பேராற்றலைப் போல
ஒவ்வொரு தெருவிலும்
மஞ்சள் விளக்குகளால்
ஒரு யாகத்தை நடத்துகிறது.
,
பகலின் சூரியனைக் கண்டு
அஞ்சிய வானம்,
இரவில் தன்னைத் தானே
தூக்கிலிட்டுக்கொள்கிறது.
,
நகரம் பேசுவதில்லை;
ஆனால்,
அதன் தெருக்களில் நடக்கும்
ஒவ்வொரு பித்தாட்டமும்
ஒரு புதிய மெய்யியல்,
ஒரு கவிதை,
சரிந்து விழுந்த
மனிதநேயத்தின் இறுதி வடிவம்.
II
நகர வீதியில் தூங்கும் குரல்கள்
i
வீதியோரத்தில் படுத்திருக்கும்
குழந்தையின் கனவில்
ஒரு பள்ளிக்கூடக் கட்டிடம் முளைக்கிறது.
அதில் பெயர்ப்பலகை எதுவும் இல்லை,
அதன் வாசலில் “உனக்காக” என்ற
ஒற்றை வார்த்தை தவிர.
ii
சாலையோர நிழலில் சாய்ந்த
கிழவனின் மூச்சு,
பழைய கிராமபோன் தட்டின்
பின்னணிச் சத்தம் போல
வீணாகத் தேய்ந்துகொண்டே இருக்கிறது.
அவன் வாழவில்லை,
அவன் எதையும் தொலைக்கவுமில்லை;
அவன் அந்த இடத்தின் நிரந்தரக் குரல்.
iii
குப்பைமேட்டில் படுத்திருக்கும்
ஒரு பெண்,
தன் கிழிந்த அழுக்குத் துணியின் வழியே
தன் எஞ்சிய பெண்மையைப்
பாதுகாக்கப் போராடுகிறாள்.
அவள் கண்களில் தூக்கமில்லை,
தூக்கத்தை யாசிக்கும்
ஒரு தீராத தவிப்பு மட்டுமே உண்டு.
v
தெருவிளக்கின் வெளிச்சம்
உடல்களின் மீது
செங்குத்தாக விழும்போது,
அது ஒளியல்ல—
ஒரு மௌனக் கெமரா.
பதிவு செய்கிறது,
சிலவற்றை மறைக்கிறது,
மற்றும் சந்தையில் விலைபோகும்
எதையோ தேடுகிறது.
vi
நகரம் ஒருபோதும் தூங்குவதில்லை.
தூக்கம் என்பது இங்கே
மெத்தையும் அல்ல,
மூச்சும் அல்ல;
வெறும் புழுதி,
சத்தம்,
நிலையான ஓர் ஆவி போலத்
திரியும் குரல்கள்.
,
இவை வெறும் குரல்கள் அல்ல;
மனிதர்கள் தங்கள்
சொந்தப் பிணங்களோடு
ஒன்றாக வாழும் இடங்களின்
மரணச் சங்கீதம்.
நகரம் இவற்றை
நினைவில் வைத்திருப்பதில்லை,
ஏனெனில்…
இவைகளேதான்
நகரத்தின் நினைவுகள்.
00

பெயர் : ஏ.எச்.எம்.நவாஷ்
புனைப்பெயர் : ஈழக்கவி
சேவை : பேராதனைனைப் பல்கலைகழக மெய்யியல் துறை
முன்னாள் விரிவுரையாளர்,
ஓய்வுநிலை அதிபர்.
படைப்புத்துறை : கவிதை, விமர்சனம், ஆய்வு
நூல்கள் : 16 (வெளிவந்துள்ளன)

