பிரத்யட்சம் 

*************

ஒரு மலையின் பின்புறத்தை 

அறிவதுபோலத்தான்

ஒரு மனிதனின் அறியாத பக்கங்களை 

அவ்வளவு அரிதாக 

அறிய முடிகிறது.

,

அப்படியும்  அறிய முடிகிற 

அரிய தருணங்கள் 

தீடீரெனக் காட்சியளிக்கும் 

வரம் தரும் 

கடவுளர்களாகப் பரிமளிக்கின்றன.

,

அதிர்ச்சியூட்டும் 

அறியாத பக்கங்களுக்குக்

காலத்தால் பழக்கப்பட்ட பின்னர் 

ஒரு புன்னகையால் 

அந்த மனிதனைக்  கடந்து போகிறேன் 

அந்த மனிதனும் அப்படியே 

கடந்து போகிறான் .

0

கேள்வி பதில்

********************

0

நேற்று வரைக்கும் 

பூத்துக் குலுங்கும் மரம்போல

தலையில் அடர்த்தியாக முடி

வைத்திருந்தவர் 

இன்று ஒரு தொப்பி

அணிந்து வந்தார் 

0

வணக்கம் வைத்தபின் 

என்ன தொப்பி ?என்றேன் .

0

ஈரமண்ணில் அப்போதுதான் 

அரும்பியிருக்கும் சிறு புற்களைப் போல

மேலுதட்டுக்கு மேலே 

அரும்பியிருந்த மீசை மயிர்களைப் பார்த்து 

மீசையைக்கூட காணோம் 

என்ன திருப்பதியா ?பழனியா? என்றேன் .

0

அமைதியாக

தொப்பியைக் கழட்டியபடியே 

“அம்மா தவறிட்டாங்க சார்” என்றார் .

0

ரெஸ்ட்ரிக்ட் மோட்

******************

0

நீங்கள் கட்டுப்பாட்டுக்குட்பட்ட 

நிலையில் இருக்கும்போது

மற்றொருவர் கட்டுப்பாடற்ற 

நிலையில் இருக்கலாம்

அல்லது மற்றொருவர் கட்டுப்பாட்டுக்குட்பட்ட 

நிலையில் இருக்கலாம்

இன்னொருவரும்கூட அப்படியிருக்கக்கூடும்.

,

எனது அன்புக்குரியவர்களே,

இதை உணர்ந்துகொள்ளுங்கள்

‘கட்டுப்பாட்டுக்குட்பட்ட நிலை’ என்பது எப்போதும் தொடரக்கூடியதே.

0

பால்யகால தேவதைகள் 

************************

0

தேவதைகள் வானத்திலிருந்து 

இறங்குவதாய்ச் சொல்கிறார்கள்

அது உண்மையில்லை

நமது பால்யத்தின் இழைகளினூடே

தேவதைகள் நம்மோடே 

கூட வருகிறார்கள் 

நாம்தான் 

பார்க்கவும் பழகவும் 

பயந்தோ தாமதித்தோ 

விட்டு விட்டோம் அன்று

,

பால்யகால அதியற்புத தேவதைகளை 

இன்று வரை தேடிக்கொண்டேயிருக்கிறோம் 

,

ஆனால் தேவதைகள் 

அவர் போக்கில் வாழ்கிறார்கள் 

தம் அழகிய கண்களை விரித்துப் பார்த்தபடி 

,

-(பாலசுப்ரமணியன் பொன்ராஜுக்கு )

000

தாமரைபாரதி (பெ.அரவிந்தன் )

இதுவரை வெளிவந்துள்ள கவிதைத் தொகுப்புகள் 

தபுதாராவின் புன்னகை (2019)

உவர்மணல் சிறுநெருஞ்சி(2021)

காசினிக்காடு(2023)

இங்குலிகம் (2024)

தெறுகலம் (2024)

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த நான் தற்போது சென்னையில் வசிக்கிறேன் .

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *