-ஆர் சீனிவாசன்
ஜெர்மன் மொழியின் மிக முக்கியமான கவிஞர்களுள் ஹென்றிக் ஹைனெ (Heinrich Heine) ஒருவராகக் கருதப்படுகிறார். யூத வம்சாவளியில் வந்த இவரின் படைப்புகளை நாஜி இயக்கத்தினர் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. அசல் ஜெர்மன் மொழியில் அவர் கவிதைகளை வாசிக்கும்போது, எளிமையான லய வரிகள், இயைபு பாணியில் மெட்டுக்கு உகந்ததாக அமைவதோடு, கண்ணதாசனின் தத்துவப் பாடல்களை நினைவுபடுத்துகின்றன. பொதுவாக குறுகிய இரட்டை இயைபு வரிகளின் மூலம், லேசான எண்ணங்களையும், காதல், ஏமாற்றம், தத்துவம் போன்ற உணர்ச்சிகளையும், நான்கு அல்லது ஐந்து வரிகள் கொண்ட கவிதை படைப்புகளால் சொல்லியவர். அதற்கு ஒரு உதாரணம் ‘பசியடங்கா எலிகள்’ (Die Wanderratten) கவிதையின் ஆரம்ப வரிகள்,
‘Es gibt zwei Sorten Ratten:
Die hungrigen und satten
Die satten bleiben vergnügt zu Haus,
Die hungrigen aber wandern aus.’
பசியடங்கா எலிகள், எளிய எழுத்து பாணியில் அமைந்த சமூக, தத்துவ மற்றும் அரசியல் விமர்சனம்.
,
‘எலிகளில் இரண்டு வகை
பசித்தவை, பெருத்தவை
பெருத்தவை உறங்கும் வீட்டில்
பசித்தவை உலாவும் தெருவில்
,
வெகு தூரம் தொடரும் இப்பயணம்
இல்லை அதில் உறக்கம் தயக்கம்
உறுதியோடு செயல்படும் போது
மழை புயல் வெயில் பார்க்காது
,
உயர்ந்த சிகரங்களில் ஏறி
அகண்ட கடலில் நீந்தி
அதில் முண்டு மூழ்கி மாண்டு
விதிக்கு விட்டு நடக்கும் துணிவோடு
,
ஆந்தையின் பயங்கர அலகு
அதுவே அதற்கு அழகு
மழுங்க சரைத்த சிகை
எலிக் கொள்கை பெருந்தகை
,
ஒழுக்கம் அறியா சிகப்பிற்கு
துதிக்க தெய்வம் விதிவிலக்கு
திருமுழுக்கம் செய்யா இனத்திற்கு
பெண்ணினம்கூட பொது இருப்பு
,
பெருத்தவைக்கு உணவு பாணம்
கிடைக்குமிடமே சொர்க்கம்
உண்டு சுகிக்கையில் தோன்றாது
ஆன்மா என்றும் அழியாதென்று
,
பசித்த எலியாரைப் பொறுத்தவரை
நரகமும் பூனையும் பயமில்லை
சொந்த உடமை, செல்வம் இல்லாது
புதியதோர் உலகம் பொய்யாகாது
,
உஷார் உஷார் வருகிறது பெரும்படை
நெருங்கிவிட்டது பசித்தவையின் வீர நடை
திரளாக முன்னேறும் பெருமூச்சு
எனக்கு அளிக்கிறது புத்துணர்வு
,
அழிந்தோம்! துலைந்தோம்! வழியில்லை
வாயில்வரை வந்துவிட்டது முற்றுகை
குழம்பி நிற்கிறார் நகரத்தலை
முழித்து நிற்கிறது நகர அவை
,
நகரத்து மக்கள் வாள் எடுத்தனர்
பாதிரிகள் மணியடித்து ஊக்குவித்தனர்
கட்டிக்காத்த அனைத்தும் அபாயத்தில்
உடமை, சிந்திப்பு பனையத்தில்
,
காக்க இயலாது பிரார்த்தனைகள், மணியொலிகள்
ஆளும் அவையின் சூளுரைகள்
ஆயிரம் எடை பீரங்கி குண்டுகள்
அல்லது உங்கள் கண்மணிகள்
,
உதவாது ஒருதலை ராகங்கள், போதனைகள்
எலி பிடிக்க இயலாது வார்த்தை வலைகள்
கேள்விப் புனலால் எலி பிடிக்க முடியாது
கண்கட்டு வித்தைகள் பயனளிக்காது
,
பசித்த வயிற்றுக்கு ஒரே தேவை
கஞ்சி கூழ் நாவிற்கு சுவை
பெரும் பசிக்கு சோளப்பொறி
பொரியல், குழம்பு, கோசம்பரி
,
தூய வெண்ணெய் மீன் வறுவல்
நுகர்ந்தால் முகத்தில் பொன் முறுவல்
புரட்சி பேச்சை கேட்டு களிப்பதைவிட
புதியதோர் உலகின் வாக்கைவிட.’
,
ஹைனெ, மேற்கண்ட படைப்பின் மூலம் அக்கால ஜெர்மன் சமுதாயத்தை மறைமுகமாக விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறார். ஆளும் பிரபுத்துவ குடியினரின் சீரழிவோடு, கம்யூனிச இயக்கத்தினரையும் சாடுகிறார். பொதுவாக, ஹைனெவின் படைப்புகளில் ஆளும் குடியின்மேல் ஒருவித ஊமை வெறுப்பு காணக் கிடைக்கும் அதே சமயம், அவருடைய மெல்லிய மனிதாபிமான பார்வையோடு மட்டுமின்றி அவருக்கு ஜனநாயகக் கொள்கைகளின் மேல் இருந்த நம்பிக்கையும் வெளிப்படும். ஹைனெ ஒரு ஜனநாயக தேசியவாதி.
‘அழகிய தந்தையர் நாடு
ஒரு காலத்தில் இருந்ததுண்டு
ஓங்கி உயர்ந்த கருவேலி
மெல்லீதாய் வீசும் பூவொலி
அனைத்தும் கனவு, போலி
,
மறெதுவாக முத்தமிட்டு
ஜெர்மனில் சொன்னது
‘நான் உன்னை காதலிக்கிறேன்’
அனைத்தும் கனவு, போலி ‘
,
– Ich Hatte einst ein Vatherland
‘செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே’
என எழுதிய பாரதிக்கும் ஹைனெவிற்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை. அவர் படைப்புகளில் மெல்லிய உணர்வுகளின் இழைகள் தெரிவதோடு ஒரு வித புறமுக பார்வையும், நகைச்சுவை கலந்த நையாண்டித்தனமும் இருப்பது சிறப்பு.
‘உன்னை மறக்கமுடியவில்லை
என்னவளே, என்னுள் கலந்தவளே
உன்னை ஆட்கொண்டேனென
மெய்யாலும், உணர்வோடும்
உன் தேகம் மீண்டும் வேண்டும்…’
– Ich kann Es nicht Vergessen
என காதலிக்கு எழுதியவர்,
,
‘வாலிபம் மிகுந்த முன்னொரு நாள், (இப்போது)
மண வாழ்க்கையின் ஒவ்வொரு நாள்
அகல பாதாள துன்புறுத்தல் தீக்குளியல்
இல்லையே இதற்கொரு நிரந்தர விடியல்’
,
எனவும் நகைச்சுவை உணர்வோடும் எழுதியுள்ளார்.
00

