1

முழுநிலவை

நான் பார்த்துக்கொண்டிருந்தபோது

நினைவில் ஒளிர்ந்தது

உன் முகம்

வானத்தில்

ஒரு நிலவு இருக்கும் போது

பூமியில்

ஒரு நிலவு இருக்கக்கூடாதா?

இருக்கலாம்

இருக்கிறது.

2

அவரது வலதுகரம் அளிப்பதை

இடதுகரம் அறியாது என்று

வியந்தோதினார் ஒருவர்

அப்படியெனில்

இரண்டு கரங்களுமா

உணர்விழந்தவை…?

இயக்கத்தையே முடக்கிவிடுமே….

கவலையுடன் கேட்டார்

இன்னொருவர்

கரம் சிரம் புறம் நீட்டாதீர்.

3

ஒளியிழக்கும்

அந்திமக் காலத்தில்

நட்சத்திரங்கள்

ஒன்றிணையும் அற்புதம்

பூமியில் சாத்தியம்

விண்ணுலகம் அறிந்தால்

வியந்து நோக்கும்

கீழே.

4

ஓர் கூட்டில்

உயிர்த்தெழும்

இன்னொரு கூட்டில்

மடிந்துவிடும்

அது என்ன?

க ட் சி.

5

வெயில் ஏற ஏற

தீவிரமாகத் தேடப்படுகிறது

நிழல்

எல்லோருக்கும் கிடைக்குமா?

உத்திரவாதமில்லை

ஓர் ஊருக்கான நிழலில்

ஒற்றை மனிதன்

இளைப்பாறுகிறான்

அந்த ஒற்றை மனிதனாக

இருக்க வேண்டுமென்றே

பலரும் ஆசைப்படுகிறார்கள்

வெட்கத்திலிருந்து

வெட்டவெளி சுரண்டல்வரை

ஆசை ஏதுமறியாது.

6

சக்கரங்களை

முன்னோக்கி நகர்த்தும்

காலம் கரைந்து

பின்னோக்கிச் சுழற்றும்

காலம் மேலோங்கி வருகிறது

எல்லாம்

ஒரு சக்கரம்தான் என்கிறார்கள்

அது சரி

சக்கரம் என்றால்

முன்னே பின்னே

சுழலத்தானே செய்யும்.


சுகதேவ் –

மூத்த பத்திரிகையாளர். தினமணி நாளிதழில் – தினமணி கதிர் இதழாசிரியர் உள்பட வெவ்வேறு பொறுப்புகளில் 18 ஆண்டுகள் பணி. அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் ஊடக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஆதரவுடன் இலயோலா கல்லூரி வழங்கிய ஊடகச் சான்றிதழ் படிப்பின் திட்ட இயக்குநர் ஆகியவை பிற பணிகளில் அடங்கும். தினமணி கதிர் இதழில் நூறு வாரங்களுக்கு மேல் வெளியான பத்திக் கட்டுரைகள் மூன்று தொகுப்புகளாகவும், வணிகமணி இதழில் வெளியான பொருளாதாரக் கட்டுரைகள் தனித் தொகுப்பாகவும், தினமணி கதிர் மற்றும் சிறப்பிதழ்களில் வெளியான இலக்கிய நேர்காணல்கள், திரை ஆளுமைகளின் பேட்டிகள் தனித்தனி தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன. பல்வேறு துறை சார்ந்த 65 கருத்தாளர்கள், ஆளுமைகளுடன் நடத்திய விரிவான கலந்துரையாடல்களை குதிர் (@kudhirvirtual) யூ டியூப் தளத்தில் பதிவு செய்திருக்கிறார். திரை விமர்சனங்கள் உள்பட தெரிந்தெடுக்கப்பட்ட முகநூல் பதிவுகள் (@ElayaperumalSugadev) மையம் விரியும் காலம் என்ற தலைப்பில் அமேசான் கிண்டில் மின்னூலாக (2024) வெளியாகியிருக்கிறது. கவிதைத் தொகுதிகள்: ஒவ்வொரு கணமும் (2019) இன்னொரு திணை மயக்கம் (2024).

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *