பாலமுருகன். லோ
“முஜீபு, வேகமா நடடா, லேட்டாகுது!” என்றான் வைரமுத்து.
“ஏன்டா வைரம், நாம இப்ப வீட்டுக்குத்தானே போறோம்? அப்புறம் என்னடா அவசரம்?”
“அடேய் முஜீபு, நாம நேரா ஸ்கூல் விட்டு வீட்டுக்குப் போகலைடா. சினிமாவுக்குப் போகணும்னு ஸ்கூலைக் கட் அடிச்சுட்டு சினிமாவுக்குப் போயிட்டு, திரும்பி வீட்டுக்குப் போறோம். கொஞ்சம் சீக்கிரம் நடையைக் கட்டு. லேட்டா போனா அம்மாகிட்ட திட்டு வாங்க முடியாதுடா.”
“சரிடா, சீக்கிரம் நடப்போம்! வாடா வைரம், நீ சொல்றது கரெக்ட்டுடா.”
ரெண்டு பேரும் அவங்க அவங்க வீட்டுக்கு நடந்தாங்க. வைரம் வீடு வந்ததும், முஜீபுகிட்ட, “டேய், நாளைக்குப் பார்க்கலாம்டா,” என்று சொல்லியபடியே வீட்டுக்குள் நுழைந்தான்.
“ஏன்டா வைரம், ஸ்கூல் முடிஞ்சு எவ்வளவு நேரமாச்சு, நீ இப்பதான் வர்ற?” என்றாள் வைரத்தின் அம்மா சரோஜா.
“இல்லம்மா, ஸ்கூல்ல ஸ்பெஷல் கிளாஸ் வச்சாங்க, அதான் லேட்டு.”
“சரி, போயி புத்தகப் பையை ஒரு ஓரமா வெச்சுட்டு, கை கால் எல்லாம் சுத்தம் செஞ்சுட்டு வா. காபி வெச்சிருக்கேன், வந்து குடி.”
“ம்மா, இதோ உடனே போயிட்டு வந்துடுறேன்,” என்றான் வைரம்.
பத்து நிமிஷத்துல அம்மா சொன்ன வேலையெல்லாம் முடிச்சுட்டு, காபி குடிக்க அடுப்பங்கரைப் பக்கம் வந்தான் வைரம்.
“வாடா வைரம், இந்தா காபியைக் குடி. ஏன்டா, பரீட்சை எல்லாம் வெக்கிறாங்களா ஸ்கூல்ல?” என்றாள் சரோஜா.
“ஆமாம்மா, அதெல்லாம் சரியான நேரத்துக்கு வெக்கிறாங்க.”
“பிறகு ஏன்டா நீ பரீட்சை பேப்பரைக் கொண்டு வந்து காட்ட மாட்டேங்கிற? ஸ்கூல்ல பரீட்சை பேப்பரைத் திருத்திட்டாங்களா?”
“அதுவாம்மா, நாளைக்கு அல்லது மறுநாள் கொடுக்கிறேன்னு சொல்லியிருக்காங்க.”
“டேய், வீட்டுப் பாடம் இருந்தா அதை உடனே முடி. நான் கமலா அக்கா வீட்டுக்குப் போயிட்டு வந்துடுறேன். அந்த அக்கா இன்னைக்கு சாயந்தரம் வரச் சொல்லுச்சு. நான் போயி வீட்டு வேலையை முடிச்சுட்டு வந்துடுறேன். வந்து ராத்திரிக்குப் பொங்கிப் போடுறேன், சரியா? நீ நான் சொன்ன மாதிரி வீட்டுப் பாடமெல்லாம் முடிச்சிடு.”
“ம்மா, போயிட்டு சீக்கிரம் வாம்மா,” என்றான் வைரம்.
அம்மா வெளியே போனவுடன் வைரத்தின் மனம் பாடம் படிப்பதிலும் எழுதுவதிலும் லயிக்கவில்லை. தெருவில் மற்றப் பிள்ளைகளின் சத்தம்தான் அவன் காதுகளில் எட்டியது. உடனே அம்மா சொன்னதை மறந்து தெருவில் போய் பசங்களோடு பசங்களாக விளையாட ஆரம்பித்தான். மணி ஆனதே தெரியவில்லை அவனுக்கு.
சரோஜா வீட்டு வேலையெல்லாம் முடிச்சுட்டு ரெண்டு மணி நேரம் கழிச்சு வந்தாள். நேரே அடுப்பங்கரைக்கு போய், அடுப்பைப் பற்றவைத்து உலையைக் கொதிக்கவிட்டாள். உலை கொதித்துக்கொண்டிருக்கையில், அவள் வைரத்தைப் பற்றி எண்ணினாள். இன்னும் ஒரு வருஷத்துல அவன் கல்லூரிக்குப் போயிடுவான். அவனுக்குப் படிக்கிறதுக்குப் பணம் தேவைப்படுமே, என்ன செய்யலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கையில், “அம்மா, அம்மா” என்ற சத்தத்துடன் வைரம் தெருவிலிருந்து வீட்டுக்குள் நுழைந்தான்.
வைரத்தைப் பார்த்து, “என்னடா, எல்லா வீட்டுப் பாடத்தையும் முடிச்சுட்டியா?” என்றாள்.
“முடிச்சுட்டேன்ம்மா, அதான் பசங்களோட விளையாடினேன்,” என்று பதிலும் சொன்னான் வைரம்.
“பத்து நிமிஷத்துல சமைச்சுட்டு கூப்பிடுறேன், உடனே வா. கத்த வைக்காத, சரியா?”
“சரிம்மா, நீ கூப்பிடு, நான் உடனே சாப்பிட வந்துடுறேன்.”
சமையலை முடித்து வைரத்தைக் கூப்பிட்டாள் சரோஜா. அவளது குரல் கேட்டவுடனே அவனும் வந்துவிட்டான். இருவரும் இரவு உணவை முடித்துத் தூங்கச் சென்றனர்.
மறுநாள் பள்ளிக்கு போனவன், மத்தியானம் வரையில் ஸ்கூலில் இருந்தவன், பின் ஸ்கூலில் இருந்து காணாமல் போய்விட்டான். இந்த முறை அவன் வெளியே போகும் போது முஜீபைக் கூப்பிட்டான். ஆனால் முஜீபு பயந்துகொண்டு அவனிடம், “நான் வரலை, நீ வேணும்னா போ!” என்றான். இது கேட்டவுடன் இன்னும் வேகம் வந்தது வைரத்துக்கு. வேகவேகமாக, யாருக்கும் தெரியாமல் ஸ்கூலில் இருந்து நழுவி வெளியே போய்விட்டான்.
இவன் கிளாஸை கட் அடித்த சமயம் பார்த்து, கிளாஸ் டீச்சர் அவனுடைய வகுப்புக்கு வந்து காலாண்டு பேப்பரைக் கொடுக்கும் போது, ஒவ்வொருவராகக் கூப்பிட்டு திருத்திய பேப்பரைக் கொடுத்து வந்தார். அப்போது, “வைரம், வைரம்” என்று கூப்பிட, அவர் மற்றப் பிள்ளைகளிடம் கேட்டார். அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர். அவருக்கு கோபம் அதிகரித்தது.
“இதோ பாருங்கடா, நான் அவனைக் காலையில பார்த்தேன். இப்ப அவன் இல்லை. எங்கே போயிட்டான்? யாராவது சொல்லப் போறீங்களா இல்ல நானா கண்டுபிடிக்கட்டுமா?” என்றார். அனைவரும் முஜீபைப் பார்த்தனர்.
“ஏன்டா எல்லாரும் முஜீபைப் பார்க்கிறீங்க? அவனுக்கு உண்மை தெரியுமா? டேய் முஜீபு, ஒழுங்கா சொல்லு, வைரம் எங்கடா? நீ சொன்னாத்தான் பிழைச்ச, இல்லைன்னா நான் இன்னைக்கு உன்னை உண்டு இல்லைனு பண்ணிடுவேன். நீ அவன் எங்கே போயிருக்கான்னு சொல்லலைனா, நாளைக்கு வர்றப்ப உன்னோட அப்பா அம்மாவைக் கூட்டிட்டுதான் வரணும்.”
“சார், அது வந்து…”
“என்னடா ‘வந்து’, ‘போயி’ன்னு இழுத்துக்கிட்டு இருக்க? சொல்லுடா அவன் எங்கே போயிருக்கான்?”
“நான் சொல்றேன் சார், ஸ்கூலைக் கட் அடிச்சுட்டு வெளியே போயிருக்கான். அவன் எங்கே போயிருக்கான்னு தெரியாது.”
“டேய் முஜீபு, நீ என்ன பண்ணு, சாயந்திரம் ஸ்கூல் விட்டு வீட்டுக்குப் போகும் போது அவன் வீட்டுக்குப் போய், அவங்க வீட்டுல இவனைப் பத்தி சொல்லி, நாளைக்கு ஸ்கூலுக்கு வந்து என்னைப் பார்க்கச் சொல்லு.
என்ன, நீ போய் ஒழுங்கா அவங்க வீட்டுல சொல்வியா? இல்ல வேற யாரையாவது அனுப்பி அவங்களை வீட்டுல சொல்லச் சொல்லட்டுமா?”
“இல்லை சார், நானே போய் அவங்க வீட்டுல அவனுடைய அம்மாகிட்ட சொல்லிடுறேன்.”
“முஜீபு, உனக்கு வேற ஃபிரண்டு யாரும் இல்லையாடா? ஏன்டா அவனோட சேர்ந்து நீயும் கெட்டுப் போற? எவ்வளவு முறை நான் உங்க ரெண்டு பேரையும் ஒழுங்கா படியுங்க, படிச்சா மட்டும்தான் வாழ்க்கை, படிப்பு இல்லைன்னு சொன்னா வருங்காலமே சூனியம் ஆயிடும்னு சொன்னேன். இதை ஏன்டா ரெண்டு பேரும் புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க?”
“சார், நீங்க சொன்னதை நினைவில் வச்சுக்கிறேன். இனி நான் வைரத்துக்கிட்ட இருந்து சற்று விலகியே பழகுறேன்.”
“டேய், அவனையும் நீ திருத்தப் பாருடா. நான் இப்ப அவனுக்கு என்ன சொன்னாலும் அவன் தலையில ஏறாது. ‘இந்த வாத்தியார் என்னை எப்பவும் திட்டிட்டே இருக்காரு, அடிச்சிட்டே இருக்காரு, எப்பப் பார்த்தாலும் அட்வைஸ் கொடுத்துட்டே இருக்காரு’ன்னுதான் நினைப்பான். ஆனா, உன்னை மாதிரி அவனுடைய நண்பர்கள் அவன்கிட்ட சொல்லும்போது அவன் கொஞ்சம் யோசிப்பான். எப்பவும் பிள்ளைங்களுக்கு வாத்தியார் அட்வைஸ் கொடுத்தா பிடிக்காது. ‘என்னடா இவரு இப்படி தினமும் கழுத்தை அறுக்கிறாரு’ன்னுதான் யோசிப்பான். மறக்காம அவங்க அம்மாகிட்ட போய் சொல்லி, நாளைக்கு என்னை வந்து பார்க்கச் சொல்லு.”
“கட்டாயம் சார், நான் சாயந்திரம் அவங்க வீட்டுக்குப் போய் அவனுடைய அம்மாகிட்ட விஷயத்தைச் சொல்லி, நாளைக்கு உங்களை வந்து பார்க்கச் சொல்றேன்,” என்றான்.
அவன் சொன்ன மாதிரி ஸ்கூல் விட்டவுடன் வேகவேகமாகப் போய் வைரத்தின் வீட்டு வாசலில் நின்றான். அப்பொழுது வைரத்தின் அம்மா சீக்கிரம் வேலை முடிந்ததால் வீட்டிலிருந்தாள். இவனைப் பார்த்தவள், “வாடா முஜீபு. எங்கடா வைரம்?” என்றாள்.
“ம்மா… அவனைப் பத்தி ஒண்ணு உங்ககிட்ட சொல்லணும்.”
“சொல்லுப்பா முஜீபு, என்ன சொல்ல வந்த அவனைப் பத்தி? முதல்ல அவன் எங்கே?”
“ம்மா… அவன் நிறைய நாள் ஸ்கூலுக்கு மத்தியானம் வர்றதில்லை.”
“பிறகு அவன் எங்கே போறான், ஸ்கூலுக்குப் போகாம?”
“ம்மா… சில சமயம் அவன் சினிமாவுக்குப் போறான். வேறு சில நாட்கள், சேரக்கூடாத ஆட்களுடன் சேர்ந்து பீடி, சிகரெட் எல்லாம் பிடிக்கக் கத்துக்கிட்டான். ஒரு சில நாட்கள் நான் கூட அவனோட சினிமாவுக்குப் போயிருக்கேன். அங்கதான் அவன் பீடி, சிகரெட் எல்லாம் பிடிக்கிறதைப் பார்த்தேன். நான் கூடக் கேட்டேன், ‘ஏன்டா இந்தப் பழக்கமெல்லாம்னு?’ அதற்கு அவன், ‘சும்மா விடுடா,’ என்று சொல்லிவிட்டான். என்னையும் கூடக் கேட்டான், ‘டேய் உனக்கு ஒரு சிகரெட் வேண்டுமாடா?’ நான் அவனிடத்தில் வேண்டாம்னு தீர்மானமா சொல்லிட்டேன்.”
“ஏன்டா இதை முதல்லயே சொல்லலை? முன்னமே சொல்லியிருந்தா அவனை நான் கண்டிச்சிருப்பேனே. அப்பா இல்லாத பிள்ளைன்னு கொஞ்சம் செல்லம் கொடுத்து வளர்த்தா, அவன் இப்படி தறிகெட்டுப் போய்த் திரியுறான். அவனுக்கு என்னடா குறை வெச்சேன்? பத்து வீட்டுல பத்து பாத்திரம் தேய்ச்சுத் தேய்ச்சுக் கையெல்லாம் பொத்துப் போனதுதான் மிச்சம். இதெல்லாம் யாருக்காகடா செய்யுறேன்? அவனுக்காகத்தான். ஏன் அவன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறான்?
ஒரு நாளைக்குக் காலையில எழுந்தேன்னா, ராத்திரி பத்து மணி வரைக்கும் ஏதாச்சும் வேலை செஞ்சுகிட்டேதான் இருக்கேன். நான் உயிரோட இருக்கிறதே அவனுக்காகத்தான். அவனுடைய அப்பா இந்த உலகத்தை விட்டுப் போனப்பவே நானும் போயிடலாம்னுதான் நினைச்சேன். ஆனா, இவன் மூஞ்சியைப் பார்த்த பின் என் மனசை மாத்திக்கிட்டேன். இப்ப அவன் என்னடான்னா இப்படிப் பண்ணிக்கிட்டுத் திரியுறான்,” என்று முஜீபுடன் தன் ஆதங்கத்தையும், அழுகையையும் கலந்து புலம்பிக்கொண்டிருந்தாள்.
“ம்மா… கிளாஸ் டீச்சர் நாளைக்கு உங்களை ஸ்கூலுக்கு வரச் சொல்லியிருக்காரு. நீங்க வந்து அவரைப் பார்க்கணுமாம்.”
“சரிடா, நீ போ. நாளைக்கு வந்து நான் அவரைப் பார்க்கிறேன்,” என்றாள் சரோஜா.
முஜீபு போய் அரைமணி நேரத்திற்கெல்லாம் வைரம் வீட்டுக்கு வந்தான். சரோஜா அவனிடம் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. அமைதியாக இருந்தாள். வந்தவன், அவனது அன்றாட வீட்டு வேலையை முடித்த பின் சாப்பாட்டைச் சாப்பிட்டான். சாப்பிடும்போது அம்மாவிடம் கேட்டான்: “என்னம்மா, இன்னைக்குச் சீக்கிரம் வந்துட்ட?”
“ஆமாம்டா, வேலை முடிஞ்சிருச்சு. அதனால உடனே வந்துட்டேன்,” என்றாள் சரோஜா.
அன்று இரவு சரோஜா படுத்தவள் தூங்கவே இல்லை. அவளுக்கு ஏதேதோ நினைவுகள் எல்லாம் மனதில் அந்த மின்விசிறியைப் போல சுழன்றுகொண்டிருந்தது. அவளால் நினைவுகளிலிருந்து அகன்று வெளியே வர முடியவில்லை.
‘யாருக்காக கஷ்டப்பட்டு வேலை பார்க்கிறோம்? எல்லா இடமும் ஒன்று போலவா இருக்கு? ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு தினுசா இருக்கு, போராடித்தான் வேலையைப் பார்க்க வேண்டியதாய் இருக்கு. நாலு காசு சம்பாதிச்சு வீடு வந்து சேர்றதுக்குள்ள செத்து சுண்ணாம்பா போக வேண்டியிருக்கு. இவன் என்னடான்னா ஒண்ணும் புரிஞ்சுக்காம இப்படி சேரக்கூடாத சேர்க்கையெல்லாம் சேர்ந்து கெட்டுப் போறானே. இவனை எப்படி ஒழுங்கு பண்றது? ஒவ்வொரு வீட்டுல அப்பா இல்லைன்னா குடும்பச் சுமையை தாங்க பசங்களை வேலைக்கு அனுப்புறவங்க மத்தியில் நான் இவனைப் படிக்க அனுப்பினேன். ஆனா இவன் படிக்காம இப்படி வீணாப்போறானே,’ என்று யோசித்து யோசித்துப் புரண்டு புரண்டு படுத்தவளுக்கு விடிந்ததே தெரியவில்லை.
விடிந்த உடன் எழுந்தவள் தனது காலைக் கடன்களை முடித்தவுடன் காலை, மதிய உணவிற்குச் சமைக்க ஆரம்பித்தாள். சுமார் ஆறரை ஆனதும் வைரத்தை எழுப்பினாள். அவனும் எழுந்து ஸ்கூலுக்குக் கிளம்பத் தயாரானான். வைரம் ஸ்கூலுக்குச் சென்றான், சரோஜா அவளது வேலைக்குச் சென்றாள். வைரத்திற்குத் தெரியாது, இன்று அவனுடைய அம்மா ஸ்கூலுக்கு வரப்போகிறார் என்று.
எப்போதும் போல அவன் காலையில் ஸ்கூலுக்கு வந்துவிட்டான். மதிய உணவு இடைவேளையில் கொண்டுவந்த உணவைச் சாப்பிட்டுவிட்டு மறுபடியும் யாருக்கும் தெரியாமல் ஸ்கூலில் இருந்து நழுவினான். அவன் வெளியே போய் அரைமணி நேரம்க்குள் அவனுடைய அம்மா சரோஜா, அவனது ஆசிரியரைப் பார்ப்பதற்காக ஸ்கூலுக்கு வந்தாள்.
வந்தவள், அங்கு உள்ள செக்யூரிட்டியிடம் வைரத்தின் வகுப்பைப் பற்றி கேட்டு, அவர் சொன்ன வழியில் சென்று ஆசிரியரைப் பார்த்தாள். அவளிடம் ஆசிரியர் வைரத்தைப் பற்றி முழுவதுமாகச் சொன்னார். படிப்பில் அவனுக்குச் சுத்தமாகக் கவனம் இல்லை. ஒழுங்காகக் கிளாஸுக்கு வருவதில்லை. இப்ப அவன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறான். இப்படியே இருக்கிற நிலையைப் பார்த்தால், அவன் தேற மாட்டான் போலிருக்கு.
“ஏம்மா, வீட்டுல நீங்க கண்டிக்க மாட்டீங்களா?”
“சார், அவனுக்கு அப்பா இல்லை. அதனால கொஞ்சம் செல்லம் கொடுத்து வளர்த்தேன்.”
“அதுக்குன்னு இப்படியா ஓவராச் செல்லம் கொடுப்பது? பெற்றோர் ஒன்று புரிந்துகொள்ள வேண்டும். பிள்ளைகளிடம் எப்பக் கண்டிப்பா இருக்கணும், எப்பக் கொஞ்சணும், எப்பச் செல்லம் கொடுக்கணும் என்று தெரியணும். இல்லை என்றால் இது போலத்தான் வளர்ந்து வந்து நிற்பான்.
நான் ஒன்று உங்களிடம் சொல்லியே ஆகணும். அவன் இந்தக் கெட்ட பழக்கத்தை விட்டுட்டு, ஒழுங்காகப் பாடத்தில் கவனத்தைச் செலுத்தினா, ஏதோ இந்த ஆண்டு தேர்வில் பாஸ் ஆகிடுவான். இல்லை என்றால் மீண்டும் பன்னிரண்டாம் வகுப்புதான் படிக்கணும். நீங்க சாயந்தரமாப் போய் மகனுக்குச் சொல்லித் திருத்தப் பாருங்க,” என்றார்.
மேலும் இதையும் சரோஜாவிடம் நினைவூட்டினார்: “அவனை அடித்துச் சொல்லாதீங்க, அவன் கேட்கும் பக்குவத்தையெல்லாம் தாண்டிவிட்டான். அதனால பக்குவமா எடுத்துச் சொல்லுங்க. ஒருவேளை அம்மா சொன்னா பிள்ளைகள் கேட்க வாய்ப்பு அதிகம் உள்ளது.”
“சரி சார், நீங்கள் சொன்ன மாதிரி அவனைப் பக்குவமாகச் சொல்லித் திருத்துகிறேன்,” என்று கூறி அங்கிருந்து விடைபெற்றாள்.
வீட்டுக்கு வந்தவள் வைரத்திற்காகக் காத்திருந்தாள். இன்று எப்படியாவது அவனிடம் எல்லாவற்றையும் பேசிவிட வேண்டும் என்று எண்ணினாள்.
வைரம் புத்தக மூட்டையுடன் வீட்டுக்குள் நுழைந்தான். ஒன்றும் தெரியாதது மாதிரி, அவனிடம் அவளும், “என்னடா வழக்கத்துக்கு மாறாக சீக்கிரம் வந்துவிட்டாய்?” என்றாள்.
“ஏம்மா?” என்றான்.
“ஒன்றுமில்லை, உன்னிடம் கொஞ்சம் பேசணும்.”
“என்ன பேசணும் உனக்கு? சொல்லும்மா,” என்றான் வைரம்.
“ஏன்டா, நான் ஒற்றை ஆளாகப் பத்து வீட்டில் பாத்திரம் தேய்த்து உன்னைப் படிக்க வைக்கிறேன். என்னைக்காவது இதை நீ நினைச்சுப் பார்த்தியா?”
“ஏம்மா, அதான் எனக்குத் தெரியுமே, நீ கஷ்டப்பட்டுத்தான் சம்பாதிச்சுக் காசு கொண்டுவர்றாய் என்று.”
“உடம்பு முடியாமல்தான் தினமும் வேலைக்குப் போயிட்டு இருக்கேன். இதோ என் கையைப் பார், பாத்திரம் தேய்த்துத் தேய்த்துக் கையில் உள்ள ரேகையெல்லாம் அழிந்து போயிடுச்சு. இதெல்லாம் உனக்கு எப்படா புரியப்போகுது?”
“ஏம்மா, என்னென்னமோ பேசிக்கிட்டு இருக்க, என்ன ஆச்சு உனக்கு இன்னைக்கு?”
“இனி என்ன ஆகணும்டா? அதான், எனக்கு எல்லாம் உன் வாத்தியாரும், உன்னுடைய நண்பனும் சொல்லிட்டாங்களே. ஏன்டா இப்படி கெட்டு சீரழிந்து போறாய்? உனக்குத் தெரியுமாடா உன் அப்பா எப்படிச் செத்தார் என்று?”
“இல்லை, தெரியாது. ஏதோ நோய்வாய்ப்பட்டுச் செத்துப் போனார்.”
“புகை பிடித்துப் பிடித்துத் தன் வாழ்க்கையையும் குழிக்குள் தள்ளிவிட்டார். நம்மையும் இருட்டில் இருக்கிற மாதிரி ஆக்கிவிட்டுப் போய்விட்டார். வேண்டாம்டா இந்த வீணாப்போன புகை. இந்தச் சின்ன வயதில் இதைத் தொட்டுவிட்டால், பின்னால் இதை விட முடியாதுடா.
அம்மா சொல்கிறேன், தயவுசெய்து இந்தப் பழக்கத்தை விட்டுவிடுடா. புண்ணியமாகப் போகும். நான் உன்னை அடிக்க மாட்டேன், கோபிக்க மாட்டேன். நீ எனக்கு ஒரு சத்தியம் மட்டும் செய். இனி நீ இந்தக் கண்றாவியைத் தொடமாட்டேன்னு சொல்லு,” என்றாள்.
வைரத்தின் கண்கள் கலங்கின. அவன் எதிர்பார்க்கவில்லை, அம்மா இப்படிப் பேசுவாள் என்று. கேள்விப்பட்டதும் விளக்கமாற்றை எடுத்து அடிப்பார் என்றுதான் நினைத்திருந்தவனுக்கு, அவனது அம்மா ஆறுதலாகவும் பக்குவமாகவும் பேசியது புதிதாக இருந்தது.
சற்று சிந்தித்து, “அம்மா, நீ எனக்காக தினமும் ஓடுகிறாய். நீ நினைத்திருந்தால் உனக்கென இன்னொரு கணவனைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் நீ எனக்காகத்தான் வாழ ஆரம்பித்துவிட்டாய். நான் உனக்காக இந்தப் பழக்கத்தை விட மாட்டேனா? கட்டாயம் விட்டுவிடுகிறேன். மேலும், இனி ஸ்கூலுக்கு ஒழுங்காகப் போய், நன்றாகப் படித்து, கல்லூரிக்குப் போகும் வழியைப் பார்க்கிறேன்.
இனி உன் கண்ணில் நான் கண்ணீரைக் பார்க்கக் கூடாது,” என்று கூறி அவளிடம் சத்தியமும் செய்தான்.
00

பாலமுருகன்.லோ
பிறந்த இடம் கரூர் மாவட்டம். பள்ளிப் படிப்பு அனைத்தும் கரூரில் முடித்த பிறகு. வேலை நிமித்தமாகச் சென்னைக்கு 1997-ல் வந்தவன் பல நிறுவனங்களில் பணிபுரிந்து தற்போது ஒரு ஜெர்மானிய நிறுவனத்துக்கு ஆஃப்டர் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் பிரிவில் வேலை செய்துவருகிறேன். சிறு வயதிலிருந்தே எனக்கு எழுதும் ஆர்வம் இருந்தது. ஆனால் வளர வளர படிப்பு, வேலை திருமணம், பிள்ளைகள் என்று வந்த பிறகு எழுதும் ஆர்வம் சற்று மங்கிக் காணப்பட்டது. ஆனால் என்னாலும் மீண்டும் எழுத முடியும் என்று என்னை நான் முழுமையாகக் கண்டுகொண்ட வருடம் 2020 என்று கூறலாம். 2019-ல் இருந்து தீவிரமாகக் கதை மற்றும் கவிதைகளை வாசித்து ஒரு வாசகராக என்னை முழுமையாக மாற்றி இருக்கிறது இந்தக் கலை இலக்கிய உலகம் .

