பிரியா பாஸ்கரன்

அதிகாலை நான்கு மணி. புறநகரின் எல்லைகளில், நூற்றாண்டைக் கடந்த அந்தக் கல் வீடு நிசப்தத்தின் கனத்தை சுமந்து நின்றது. அந்த இடம், நகரின் ஒலியும், பரபரப்பும் சற்றே மௌனிக்கத் தொடங்கும் இறுதிப் புள்ளி. சுற்றிலும், இரும்புத் தகடுகளும், முட்செடிகளும் வேலியாக எழுப்பப்பட்டிருந்தன. இது வெளியுலகை விலக்கி வைக்கும் அவ்வீட்டில் வசிப்பவனின் பிடிவாதத்திற்கான முதல் கோடு. வீட்டுக்குள் நுழைவது என்பது, அதன் உரிமையாளனின் உளவியல் விலகல் கொண்ட மனதிற்குள் நுழைவதற்குச் சமம்.

அந்த வீடு அவனுக்கு ஒரு குடியிருப்பு அல்ல. அது ஒரு தற்காப்புக் கோட்டை. வீட்டின் சுவர்கள், சுமார் ஒன்றரை அடி கனம் கொண்டவை. அவை வெறும் செங்கற்கள் அல்ல. இளமையில் அவன் சுமந்த எளிய வாழ்வின் துயரங்களை, அவனது சிந்தனைகளால் மூடிமறைத்ததன் வடிவம். உணர்ச்சிப் பெருக்கின் தாக்கத்திலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள அவன் எழுப்பிய சுவர் அது.

வீட்டின் தளங்கள் கூட, வழவழப்பான கருங்கல் தரையால் மூடப்பட்டிருந்தன. எந்தவொரு கிராமத்து மண்ணின் வாசனையையும், நினைவையும் அவை அனுமதிக்கவில்லை. உணர்ச்சிப் பெருக்கின் நேரடித் தாக்கத்தையும், புற உலக சலனங்களையும் தடுத்து நிறுத்தும் பொருட்டே இந்தக் கல் வீடு கட்டப்பட்டதோ என்று தோன்றியது.

அறையின் கூரை, அவனது ரகசியங்களைப் போலவே, மிக உயரமாக இருந்தது. அங்குக் கோட்பாடுகளும், சிக்கலான விசாரணைகளும் மட்டுமே சுழலும். மனிதர்களின் எளிய உணர்ச்சிகளைத் தவிர்த்த, மேட்டிமை சிந்தனைகளுக்கான வெளி அது.


வீட்டின் உரிமையாளன்,அகிலன். நாற்பத்தைந்தை நெருங்கிய இலக்கிய விமர்சகன். கிராமத்து மண் வாசனையும், எளிய மக்களின் துயரங்களையும் இளமையில் அறிந்தவன். ஆனால், ஒரு மூத்த விமர்சகர் அவனது ஆரம்பகால எழுத்தை, இது வெறும் சமூக அறிக்கை, இலக்கியம் அல்ல, என்று நிராகரித்தபோது, எளிய வாழ்விலிருந்து தன்னை விலக்கிக் கொண்டான். அன்றிலிருந்து, அகிலனின் இலக்கியத் தேடல், வாழ்க்கையிலிருந்து விலகி நிற்கும் அழகியலை நோக்கிய பயணமாக மாறியது.

அவனது ஒரே பலம், அவனது எழுத்திலிருக்கும் கறார் தன்மை. அவனது விமர்சனக் கட்டுரைகள், எந்தவித சமரசத்திற்கும் இடமளிக்காத, கூர்மையான விஷயங்களைப் பேசுபவை. அந்தக் கறார் எழுத்துதான், அவன் குடிபோதையின் பிடியில் சிக்கித் தவிக்கும் சில நாட்களிலும், அவனது சிந்தனையின் தூணாக நின்று வந்தது.

அகிலன் வீட்டில் வீட்டு வேலை செய்து வரும் சரஸ்வதி அறுபது வயதை நெருங்கிய, அந்தக் கிராமத்து மூதாட்டி. சரஸ்வதியின் முகம், வெயிலில் உழைத்ததால் கருத்தும், கவலைகளால் சுருக்கங்கள் விழுந்தும் காணப்பட்டது. வெளுத்துப்போன ஒரு பருத்திச் சேலையை அணிந்திருந்தார். வயதாகி சதை தளர்ந்ததால், அவரது காதணி துளைகள் பெரிதாகி, அதுவே ஒரு பெரிய வளையம் போலத் தொங்கிக் கொண்டிருந்தது. சரஸ்வதி மட்டும் அவனிடம் எவ்வித சமரசமும் எதற்காவும் செய்யாத ஒரு நபர். அகிலனுக்கு, சரஸ்வதி தனது கொள்ளுப்பாட்டன் வேணுவின் மனைவி காசாம்பி பாட்டியை நினைவுபடுத்துபவள்.

கொள்ளுப்பாட்டன் வேணு, குடிப்பழக்கத்துக்கும், போன ஊரிலெல்லாம் இன்னொரு துணையை வைத்துக் கொள்வதற்கும் பெயர் போனவர். குடித்துவிட்டு வந்து சண்டையிடுவதும், வீட்டிலிருந்த பொருள்களை அடித்து நொறுக்குவதும் அவரது வழக்கம். தன் மீசையை முறுக்கிக்கொண்டு சண்டியனாகத் திரிந்தவர் அவர். அவரை ஊரில் யாருமே எதிர்க்கத் துணிய மாட்டார்கள்.

ஆனால், காசாம்பி பாட்டி மட்டும் வேணுவின் இந்த அட்டூழியங்களுக்குத் தன் கண்களாலோ, குரலாலோ கூடப் பயந்ததில்லை. வேணு ஆவேசமாக வரும்போது, பாட்டி அமைதியாக வாசலில் நின்றிருப்பாள். அவள் சண்டை பிடிக்க மாட்டாள், ஒரு வார்த்தைகூட பாட்டனிடம் பேச மாட்டாள். பாட்டனின் சண்டையும் கூச்சலும் உச்சத்தை எட்டும்போது, பாட்டி மெதுவாகத் தன் வெற்றிலைப் பெட்டியைத் திறந்து, சுண்ணாம்பு தடவி, வெற்றிலையைப் பாட்டன் கண் எதிரேயே மடக்கி வாயில் போட்டுக்கொள்வாள்.

அந்த மெளனமான ஆளுமை முன், கொள்ளுப்பாட்டனின் சண்டையும் ஆவேசமும் மெல்லப் பொட்டிப்பாம்பாக அடங்கும். பாட்டி சமைத்த உணவை மட்டும் சாப்பிட்டுவிட்டு, மறுநாள் காலை வேலைக்குச் சென்றுவிடுவார். அந்த மெளனத்தால் மட்டுமே, வேணுவைப் பலமுறை வீட்டைவிட்டு வெளியேறாமல் கட்டிப்போட்டவள் காசாம்பி பாட்டி.

பாட்டன் எவ்வளவுதான் பணம் கொண்டு வந்து வீட்டில் கொட்டினாலும், அதைத் தொடாமல், கூலி வேலை செய்து, தன் உழைப்பால் மட்டுமே அம்மா இல்லாத தன் அப்பனை வளர்த்தவள் காசாம்பி பாட்டி. எவ்வளவு பசி பட்டினியில் வாழ்ந்தாலும், எவரையும் அண்டாது தலை நிமிர்ந்து நின்றவள் பாட்டி.

காசாம்பி பாட்டி அடிக்கடி சொல்லும் ஒரு பழமொழி “வேணும்ங்கிற சோறு, வெயர்வையில தான் விளையணும். அடுத்தவன் காசில உப்புச் சேராது.”

இந்தப் பழமொழிதான், அகிலனின் மனசாட்சியை உலுக்கி அடிக்கும்  மணியாக இருந்தது. ஏனென்றால், பாட்டியின் உழைப்பு பசியிலிருந்து விடுபட வந்தது. ஆனால், அகிலன் இன்று தனது எழுத்தை, வெறும் சிந்தனைக்காக, உலகத்தின் பசியையும் வேதனையையும் புறக்கணித்து எழுதுகிறான். அவளது வாழ்வு உழைப்பில் உறுதியாக இருந்தது. அகிலனின் வாழ்வு கோட்பாடுகளில் ஒளிந்து கொண்டது. இந்த முரண்பாடுதான், அவன் தனிமையில் இருக்கும்போதெல்லாம் பாட்டியின் வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்க வைத்தது. அவள் என்றும் அகிலனுக்கு மரியாதைக்குரியவள்.

பாட்டி வெற்றிலை மென்று, வாய் முழுக்கச் சிவப்பேறிய நிலையில் இருப்பாள். அவள் சாதாரணமாக ஜாக்கெட் அணிய மாட்டாள், சேலையை மாராப்பாக இறக்கிக் கட்டியிருப்பாள். கழுத்தில் துளி தங்கம்கூட இல்லாத வெறும் மஞ்சள் கயிறு மட்டுமே மின்னும். அவளது கைகளில் உழைப்பின் ரேகைகள் ஆழப் பதிந்திருக்கும். அந்த எளிய, அலங்காரமற்ற தோற்றத்திலும், அவளிடம் ஓர் அடங்காத உறுதி இருக்கும்.

சரஸ்வதியின் கறாரான பேச்சு, தனது கொள்ளுப்பாட்டியின் நினைவை அகிலனுக்குள் உயிர்ப்பித்தது. அதனால், அகிலன் தன் முரட்டுப் போக்கிலும், சரஸ்வதியிடம் மட்டும் எப்போதும் மரியாதையையும், பாசத்தையும் வைத்திருந்தான்.

நேற்று இரவு பதினொரு மணி.

வாசலில் குப்பைகளைக் கிளறிய வயதான பெண்மணி ஒருத்தியின் மூட்டையைப் போதையில் வந்தவன் ஒருவன் பிடுங்க முயன்றான். தள்ளப்பட்டு, தரையில் விழுந்தபோது, அந்தப் பெண்மணி எழுப்பிய மெல்லிய, ஆனால் உள்ளத்தை உலுக்கும் ஒரு விசும்பல் சத்தம், அகிலனைச் சுற்றியிருந்த அனைத்துத் தடிமனான சுவர்களையும் உடைத்து, அவனது மனதிற்குள் ஊடுருவியது.

அந்தச் சத்தம் அவனது காதுகளை அடையவில்லை. அது நேரடியாக அவனது இருபது வருட ரகசியத்தை நோக்கிப் பாய்ந்தது. அது வெறும் விசும்பல் அல்ல. அது, இளமையில் பசி காரணமாக அவன் அடைந்திருந்த அதே தொண்டையடைப்பு. சிறுவனாக இருந்தபோது, அவனது தாயின் கண்கள் பசியால் காய்ந்துபோக, ஒருமுறைகூட சத்தமாக அழ முடியாமல், உள்ளுக்குள்ளேயே திரண்ட அந்த மௌனமான அழுகையின் அதிர்வை அந்தக் கிழவியின் சத்தம் மீண்டும் தூண்டியது.

அகிலன், தனது அறிவுப் பெருமிதத்தாலும், கலையின் மேன்மைக்கான ஆசையாலும் மூடிவைத்திருந்த பசியின் துயர ஒலி அது. அந்தக் கல் வீடு அவனுக்குப் பாதுகாப்பு அளித்தது. ஆனால், அந்தப் பாதுகாப்புக்குள் அவன் புதைத்து வைத்திருந்த உணர்ச்சிகள்,அந்தக் கிழவியின் சத்தத்தினால் மீண்டும் மேற்பரப்புக்குத் தள்ளப்பட்டன.

ஒரு கோப்பைக்குள் உறைந்த நீரைப் போல, அவன் தன் உணர்ச்சிகளைத் தன் விமர்சனக் கோட்பாடுகளுக்குள் இறுகி வைத்திருந்தான். இப்போது, அந்த விசும்பல் சத்தத்தின் அதிர்வு, அந்தக் கோப்பையை உடைத்து, உறைய வைத்த உணர்ச்சிகளைக் கரைக்கத் தொடங்கியது. ஒரு புறம், உலக இலக்கியத்தின் போக்கைப் பற்றி எழுதும் அவன், மறுபுறம், ஒரு வயதான பெண்மணியின் அடிப்படைத் துயரத்திற்குத் தனது கவனத்தை அளிக்க மறுக்கும் தன் போலித்தனத்தை உணர்ந்தான்.

அந்தச் சம்பவம் மனதில் ஆழப் பதிந்திருக்க, அகிலன் இன்று ஒரு முடிவெடுத்திருந்தான்.

அவன் தனது அலமாரியில், புத்தகங்களின் பின்புறம் மறைத்து வைத்திருந்த, பழுப்பு நிற விஸ்கி பாட்டிலை எடுத்தான். ஒருமுறை குடிக்கத் தொடங்கிவிட்டால், தன்னை மீட்டெடுக்கச் சில நாட்கள் ஆகும். அந்த நாட்களில், அவன் ஓர் உள்ளுணர் நிலைக்குள் இருப்பதைப்போல உணர்வான். உணர்வுகள் கலைந்து, உலகம் ஒரு குழம்பிய பிம்பமாக மாறி, அவனது எழுத்து மட்டும் இன்னும் தீர்க்கமாக, ஆழமான தளத்தில் இருந்து வெளிவரும்.

அவன் ஒரு முழுமையான கிளாஸை நிரப்பி, அதை ஒரே மடக்கில் குடித்தான். அந்த உஷ்ணம், அவன் இருபது வருடங்களாகப் பூட்டி வைத்திருந்த உணர்ச்சிக் கதவுகளை மெல்ல மெல்லத் திறக்கத் தொடங்கியது.

கிளாஸைக் கீழே வைத்தபோது, சமையலறையில் இருந்து வந்த சரஸ்வதி, அறையின் வாசல் அருகில் நின்றிருந்தார்.

ஏம்பா,என்று அவர் அழுத்தமான, ஆனால் உரிமையோடு கூடிய குரலில் அழைத்தார். நேத்து ராத்திரி வாசல்ல அழுத சத்தம் கேட்டது. அது ஒரு கிழவிவின் சத்தம். அவளுக்கு நம்ம வீட்டுக் காம்பவுண்டுல இருக்கிற பழைய இரும்புத் துண்டுகளை வித்தா தான் இன்னைக்கு சோறுன்னு சொல்லிட்டு இருந்தா. நீயோ உலகத்தோட பெரிய விஷயங்களைப் பத்தி எழுதுறனு தெரியும். ஆனா, வாசப்படியில ஒரு மனுஷி பசியில நிக்கிறதைக் கண்டுக்காம, கதவைச் சாத்திக்கிட்டு, இங்க உட்கார்ந்து எழுதுற உன் எழுத்துல என்ன ராசா உண்மை இருக்கும்?

சரஸ்வதியின் வார்த்தைகள், அவனது விமர்சனத்தின் வேரையே கேள்வி கேட்டிருந்தது. அகிலன் திகைத்து நின்றான். இந்தச் சம்பவம், இதுநாள் வரை அவனது எழுத்தைப் புறக்கணித்த எந்தவொரு புற உலக விமர்சனத்தை விடவும் ஆழமாக அவனது மனசாட்சியைத் தாக்கியது. சரஸ்வதி தன் வேலை முடிந்தது என எதுவும் பேசாமல், சமையலறைப் பக்கம் சென்றார்.

முதல் கிளாஸை முடித்து, சரஸ்வதியின் கேள்வியால் உலுக்கப்பட்டு நின்றிருந்தபோது, அகிலனுக்குத் தொலைபேசி ஒலித்தது. எதிர்ப்புறம், தமிழ் இலக்கிய உலகின் முடிசூடா மன்னரான, மூத்த எழுத்தாளர் வைரவன்.

வைரவனுக்கும் அகிலனுக்கும் உள்ள தொடர்பு, வெறுமனே விமர்சகர் எழுத்தாளர் என்ற எல்லைகளைத் தாண்டிச் சென்றது. வைரவன், அகிலனின் விமர்சனத்தின் துல்லியத்தை மிகவும் மதித்தவர். ஆனால், அந்த மதிப்பு பயத்தால் உருவானது. அகிலனை தன் எழுத்துலகச் சாம்ராஜ்யத்தில் தான் எதிர் கொள்ளும் மிகப் பெரிய சவால் என்று வைரவன் கருதியவர். இருவரும் அடிக்கடி மறைமுகமாக மோதிக்கொள்வார்கள். வைரவன் புகழ் பாடும் மேடைகளில் அகிலன் தனித்திருப்பதும், அகிலனின் விமர்சன மேடைகளில் வைரவன் பேசாதிருப்பதும் இலக்கிய உலகின் எழுதப்படாத விதியாயிற்று.

அகிலன், என் புதிய நாவல் உன் கைக்கு வந்துவிட்டதா? விமர்சனம் தயார் செய்யத் தொடங்கியிருப்பாய் என்று நினைக்கிறேன்,என்று வைரவன் அதிகாரம் தொனிக்கும் குரலில் கேட்டார். அகிலன் நாக்கு குழறாமல், தெளிவான உச்சரிப்பில் பதில் சொன்னான்.

ஐயா, நாவலின் ‘இருப்பியல் வெளிகள்’ குறித்த எனது ஆய்வு தயாராகி வருகிறது. ஆனால், நீங்கள் பயன்படுத்தியுள்ள கால வரிசைக் குழப்பம், ஒரு விவாதத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, கதை ஓட்டத்தையே சிதைக்கிறது என்று நான் உணர்கிறேன். என் விமர்சனத்தில், இந்தக் குறைபாடு அழுத்தமாகப் பதிவு செய்யப்படும். நீங்கள் மிகப்பெரிய ஆளுமை என்பதால், உண்மை மறைக்கப்படாது. வைரவன் திகைத்தார்.

உன் பேச்சு லேசாகக் குளறுகிறதே… நீ குடித்திருக்கிறாயா?

தன்னுடைய தனிப்பட்ட பழக்கங்களை எப்போதும் ரகசியமாக வைத்திருக்கும் அகிலன், அந்தக் கணத்தின் போதையிலோ அல்லது நேர்மையின் வேகத்திலோ, அதை மறுக்க விரும்பவில்லை. அவன், அது என் தனிப்பட்டத் தெரிவு, ஐயா. என் எழுத்து, எப்போதும் குடிக்காத நேர்மையுடன் இருக்கும் என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தான். ஆம், அவன் என்ன குடித்தாலும், தான் நம்பும் கருத்தில் அவன் ஒருபோதும் சமரசம் செய்ததில்லை.

அகிலன் போனை வைத்ததும், அவனது மனதில் வைரவனுடனான ஒரு பழைய சம்பவம், வலிமிகுந்த மோதல் நினைவுக்கு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன், இலக்கிய விழாவில் அகிலன் எழுதிய விமர்சனக் கட்டுரை ஒன்று, வைரவனின் நாவலைத் தகர்த்தது. அன்று வைரவன் பொது மேடையிலேயே, அகிலனை நோக்கி, உனக்கு மேடைப் பேச்சில் ஒரு இடம் வேண்டும் என்றால், என் படைப்பை நீ ஆதரித்து எழுது என்று சவால் விட்டார். விளைவு அவனுடைய தனித்தன்மை வாய்ந்த, கறாரான விமர்சனங்களைத் தாங்கி வந்த, மதிப்புமிக்க அவனது இலக்கிய இதழ், வைரவனின் அழுத்தத்தால் நிரந்தரமாக மூடப்பட்டது. அன்றுமுதல், அகிலன் மேடைப் பேச்சைத் தவிர்த்தான். தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு, வீட்டிலிருந்து மட்டுமே, விமர்சனங்களை மற்ற இலக்கிய இதழ்களுக்கு எழுதத் தொடங்கினான். அவனது எழுத்திற்காக அவன் கொடுத்த கள பலி அது.


இரண்டாவது கிளாஸை முடித்தபோது, போதை மெல்ல உச்சத்தை நோக்கி நகர்ந்தது. “Ignorance is bliss; when we built our fortress of knowledge, we lost the walls of reality,” என்ற நீட்சேயின் தொனி அவனது மனதில் எழுந்தது. அப்போது, வெளியே பழைய இரும்பு கேட்டருகே, நேற்று விசும்பிய கிழவியின் அதே சத்தம் மெலிதாகக் கேட்டது. “அஞ்சு ரூபா… பத்து ரூபா கூடச் சேரலையே ஆண்டவா… இன்னும் நாலு பாட்டில் சேகரித்தால் தான் இன்றைக்குச் சோறு,” என்று கிழவி முணுமுணுத்தது.

அகிலன், தனது மடிக்கணினியில் எழுதிக் கொண்டிருந்த கட்டுரையைப் பார்த்தான். “அப்பால் உள்ள இருப்பு, சமகாலக் கவிதையில் தொனியற்ற மௌனத்தின் சாத்தியங்கள்.” தடிமனான சுவர்கள் அந்த ஒலியைத் தடுத்தாலும், உள்ளே ஊடுருவிய விஸ்கியின் போதை, அந்தச் சுவர்களின் மீது நுண்ணிய விரிசலை உண்டாக்கியது. இந்த அறையின் உயரமான கூரை அவனது உயர்ந்த தத்துவங்களைச் சுழலச் செய்தாலும், வெளியே இருக்கும் கவிதை, வெறும் ‘அஞ்சு ரூபாயில்’ தான் இருக்கிறது என்பதை உணர்ந்தான்.

அவன் எழுந்து, எப்போதும் பூட்டியே இருக்கும் பிரதான ஜன்னலை அணுகினான். இரும்புச் சட்டம் துருப்பிடித்துப் போன அந்தப் பூட்டப்பட்ட ஜன்னல், அவன் தனது வேர்களை, எளிய வாழ்வின் நேரடி அனுபவத்தை மறுத்ததன் குறியீடு. போதையின் பிரமைக்குள், அந்த ஜன்னல் ஒரு மனிதனைப் போல அவனுடன் பேசியது. உனது விமர்சனத்தில் மட்டும் ஏன் அவ்வளவு கறார்? நீ துறந்த உனது கிராமத்துப் பசியும், வேதனையும்தான் உனது இந்தக் கோட்டையின் சுவர்கள்.

அகிலன், தனது பலவீனமான கைகளால், துருப்பிடித்த ஜன்னலை கோபத்துடன் உலுக்கினான். அப்போது, ஜன்னலின் மரச்சட்டத்தில் இருந்து ஒரு பழைய, மஞ்சள் நிற காகிதச் சுருள் தரையில் விழுந்தது. அது அவனது இளமைக் காலத்தில், முதன்முதலில் எழுதி நிராகரிக்கப்பட்ட, விவசாயிகளின் பட்டினிப் போராட்டத்தைப் பற்றிய ஒரு கவிதை. அவன், அந்தக் கல் வீட்டை கட்டியபோது, தன் கடந்த காலத்தை உள்ளே பூட்டிவைக்க, அந்தக் காகிதத்தை ஜன்னலுக்குள்ளேயே மறைத்திருந்தான்.

அவன் குனிந்து அதை எடுத்தான். காகிதத்தின் மேல் படிந்திருந்த இருபது வருடத் தூசியை, அவனது போதையின் நிஜம் ஊடுருவியது. காகிதத்தில் இருந்த, “காய்ந்துபோன நிலத்தின் கண்கள் கண்ணீரால் நிரப்பப்படட்டும்” என்ற வரிகள், வெளியே கேட்ட கிழவியின் “அஞ்சு ரூபா…” என்ற முணுமுணுப்பைப் போல, அவனது காதுகளில் பலத்த சத்தமாக ஒலித்தது.

விவசாயிகளின் பட்டினியைப் பேசும் அந்தக் கவிதையின் தீவிரமான உணர்வும், கிழவியின் அன்றாடப் போராட்டத்தின் ஒலியும் காலத்தைக் கடந்து ஒன்றிணைந்து, அவனது விமர்சனத்தின் மூலம் அவன் காப்பாற்றி வைத்திருந்த உண்மை, இவனது தனிப்பட்ட வாழ்வில் ஒரு தற்கொலை முயற்சி போல எழுந்து நின்றது. அவன் வீட்டைப் பூட்டிவைத்திருக்கவில்லை. அவனது விமர்சனக் கோட்பாடுகள் அவனைப் பூட்டிவிட்டன.

அவன் கீபோர்டுக்குத் திரும்பினான். போதை அவனது விரல்களில் ஒரு கனமான அழுத்தத்தைக் கொடுத்தது. சிந்தனைகள், இப்போது மேலும் கூர்மையாகவும், வலி மிகுந்ததாகவும் இருந்தன.

தலைப்பு: “விசும்பலின் இரத்தம் – பூட்டப்பட்ட ஜன்னலும் விமர்சகனின் போதை நிதர்சனமும்.”

அவன் முதல் வரியை எழுதினான். நான், அகிலன். என் எழுத்தின் கறார் தன்மை ஒரு தூண். ஆனால், அந்தத் தூண் நிற்கும்படி நான் கட்டிய வாழ்க்கை, தடிமனான சுவர்களாலும், உயரமான கூரையாலும், பூட்டப்பட்ட ஜன்னலாலும் ஆன ஒரு பொய். நான் குடிக்கத் தொடங்குகிறேன். ஏனென்றால், என் கலைக்கு உயிர் கொடுக்க, நான் எனது நரம்புகளை நீர்த்துப்போகச் செய்ய வேண்டும்.

அவன் எழுதினான். இப்போது அவனது எழுத்தில், கிழவியின் கண்ணீரின் உப்புச்சுவையும், விஸ்கியின் கசப்பும், பழைய கவிதையின் ஏமாற்றமும் கலந்திருந்தது. உள்ளுணர் போதையில் எழுதப்பட்ட அந்தக் காகிதம், ஒரு விமர்சனக் கட்டுரையை விட, அவனது ஆன்மாவின் ஆழமான, வலிமிகுந்த வாக்குமூலமாக இருந்தது. தனது முழுமையடையாத வாழ்க்கையை, அவன் ஓர் அடிப்படைவாத கலையாக மாற்றும் பணியில் தன்னை ஒப்புவித்தான்.

000

இதுவரை தமிழில் நான்கு கவிதைத் தொகுப்புகள், “நினைவில் துடிக்கும் இதயம்”, “காற்றின் மீதொரு நடனம்”, “சலனமின்றி மிதக்கும் இறகு” மற்றும் “யாம நுகர் யட்சி” தொகுப்புகள் வெளி வந்துள்ளன.  “சிறு வீ ஞாழல்” என்ற குறுந்தொகைப் பாடல்கள் கதை வடிவிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்க் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, “The Horizon Of Proximity” என்ற தொகுப்பும், “Ubiquity” என்ற ஆங்கில கவிதைத் தொகுப்பும் வெளி வந்துள்ளன.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *