-அ.மனோஜ்குமார்
அவனது விலை உயர்ந்த மேலைநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மகிழுந்து கம்பத்தில் இருந்து சில அடி தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அவன் உச்சியை அடைந்தான்.
“இந்த வாழ்க்கையில என்ன செஞ்சும் எனக்கு ஒரு நிம்மதி கிடைக்கல. நானும் தேடிக்கிட்டே இருந்து சலிச்சு போச்சு” என்று தன் மனதிற்குள் சொல்லிவிட்டு சில வினாடிகள் மௌனம் ஆனான்.
“இந்த உலகம் பிடிக்கல, இந்த வாழ்க்கையும் பிடிக்கல” என்று முனகி விட்டு 150 அடி உயரத்தில் இருந்து குவித்து விட்டான். ரத்தம் ஓடிக்கொண்டிருக்கும் உடலை பார்த்தவாறு அருகில் இருக்கும் குன்றின் மீது அமர்ந்திருந்தான் சில வினாடிகளில் புகையாய் மறைந்தான்.
ஒரு தோட்டம் போல இருந்தது. நிறைய மரங்கள், பூச்செடிகள், காய், பழம் எல்லாம் விளைந்திருந்தன. யோசித்தபடி முழித்துக் கொண்டு இருந்தான். “நான் சொர்க்கத்துக்கு வந்துட்டனா” என்று.
“தம்பி” என்று குரல் கேட்டது.
இடது பக்கம் திரும்பினான், கையில் ஒருவர் கூடையுடன் நடந்து வந்து கொண்டிருந்தார். பார்ப்பதற்கு புத்துணர்ச்சியாக இருந்தது அவரது தோற்றம். அழுக்கில்லா ஆடை, பளபளப்பான முகம், வலிமையான உடல், அழகான குரல். பாசத்திற்குரிய பாவனையுடன், ” நீங்க வலது பக்கம் போகணும்” என்றார். இவன் ஆச்சரியமாய் தலையாட்டி விட்டு, ” இது சொர்க்கமா” என்றான்.
“இல்ல தம்பி. இது நரகம்”
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. கூடையிலிருந்து இரண்டு கொய்யா பழங்களை எடுத்து நீட்டி, “சாப்பிட்டுகிட்டே போங்க” என்றார். புன்னகையுடன் மறுதலித்து விட்டு வலது பக்கம் நோக்கி நடக்க ஆரம்பித்தான். நீரோடை, விலங்குகள் பறவைகள், பூச்சிகள் என வியந்து பார்த்துக் கொண்டே ஒற்றையடிப்பாதையில் நடந்து சென்றான். தென்றலின் வருடலில் களைப்பு தெரியாமல் வெகு தூரம் நடந்து வந்தான். வரிசையாக இருந்த மரங்களும் திறந்த வெளியும் தெரிந்தது. அங்கிருந்த ஒரு மரத்தின் அடியில் இரண்டு பேர் அமர்ந்து இருந்தார்கள் அவர்களை நோக்கி நடந்தான். அருகில் சென்றதும், “வாங்க வாங்க” என்று கையெடுத்து கும்பிட்டார் பெரிய நாற்காலையில் அமர்ந்திருந்தவர். நிறைய புத்தகங்களை அருகில் வைத்தபடி அமர்ந்திருந்த இன்னொருவரும்,”அங்க உட்காருங்க” என்றார்.அவனும் அங்கு போடப்பட்டிருந்த கல் திண்ணை மீது அமர்ந்தான். கண் கவரும் விதமாக இருவரும் இருந்தார்கள். பெரிய நாற்காலியில் அமர்ந்து இருந்தவர், ஏடுகளை புரட்டிக் கொண்டிருந்தவரிடம், “விவரம் சொல்லுங்க ஐயா” என்றார். ஒரு நிமிடத்திற்கு பிறகு ஒரு புத்தகத்தை கையில் பிடித்தபடி பார்த்துவிட்டு, “உனக்கு கொழுப்பு” என்றார் அவனை பார்த்து. பெரிய நாற்காலியில் இருந்தவரும் அவனும் ஒன்றும் புரியாமல் அவரைப் பார்க்க இவன் புகையாய் மறைந்தான்.
புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, துண்டை தோலில் போட்டுக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான் அஸ்தர். ஒரு நெகிழி பொட்டலத்தை பிரித்தான் இரண்டு பஞ்சுகள் கைக்கு அடக்கமான அளவில் இருந்தது. அதில் ஒன்று மட்டும் நெகிழி காகிதத்துக்குள் இருந்தது. அந்த நெகிழியையும் கிழித்து பஞ்சை எடுத்தான். ஈரப்பதமாக இருந்தது தனது உடல் முழுக்க தேய்த்தான் ஈரப்பதத்துடன் நல்ல மணமாகவும் இருந்தது. உடல் முழுக்க தேய்த்து விட்டு வெறும் கைகளால் உடலை தேய்த்தான். பின் இரண்டாவது பஞ்சை எடுத்து உடல் முழுக்க தேய்த்து எடுத்தான். எல்லா ஈரத்தையும் அந்த பஞ்சு உறிஞ்சி கொண்டது. பின் துண்டால் தனது உடலை துடைத்துக்கொண்டு குளியலறையை விட்டு வெளியே வந்து உடைமாற்றிக்கொண்டு முதுகு பையுடன் வீட்டை விட்டு வெளியேறினான். சாலையில் இறங்கி நடக்கலானான். பச்சை நிறத்தில் சாயம் கூட எங்கேயும் பூசப்பட்டு இருக்கவில்லை. வெயில் உடலை உருக்குவது போல இருந்தது. தெருமுனையிலிருந்த அரசு உணவகத்திற்கு வந்தான் நீண்ட வரிசை இருந்தது. முதுகு பையிலிருந்து உணவு அட்டையை எடுத்து காவலாளியிடம் காட்டி அவர் சோதித்த பிறகு வரிசையில் நின்றான். வரிசை வேகமாக நகர்ந்தது மூன்று மாவு உருண்டைகளை வழங்கப்பட்டது. வாங்கிக் கொண்டு அஸ்தர் நகர்ந்தான். உருண்டையை பத்திரமாக பையில் வைத்துக்கொண்டு நடந்தபடியே சென்று கொண்டிருந்தான் ஒரு மணி நேரம் நடந்த பிறகு அவனது அலுவலகம் வந்து சேர்ந்தான். அவனது மேஜைக்கு போய் அமர்ந்து தன் பணியை தொடங்கினான். நேற்று விடுபட்ட இடத்திலிருந்து படிவங்களை சரிபார்த்தபடி இருந்தான். நிமிடத்திற்கு ஒருமுறை இரண்டு மேஜை தள்ளி இருக்கும் அவளது மேஜையை கவனித்துக் கொண்டே இருந்தான். அவள் இன்னும் வரவில்லை. தினமும் இறந்தவர்களின் பட்டியல் அவனிடம் வரும் அதில் இருப்பவர்களை, உயிருடன் இருக்கும் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு அவர்களது படிவங்களை இடம் மாற்றும் வேலையை தான் அஸ்தர் செய்து வந்தான். இப்படி ஒவ்வொரு மேஜைக்கும் ஒவ்வொரு விதமான பணி பிரித்துக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இப்படி ஒவ்வொரு மேஜைக்கும் ஒவ்வொரு விதமான பணி பிரித்துக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இரவுக்கு ஒரு உருண்டை என எடுத்து வைத்துவிட்டு இரண்டு உருண்டைகளை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டபடி வேலை செய்தான். அன்று நாள் முழுக்க அவள் வரவில்லை சூறைக்காற்றில் மெல்ல நடந்து வீடு வந்து சேர்ந்தான். உடைமாற்றிக்கொண்டு காலையில் மூடி வைத்த புத்தகத்தை திறந்து எழுதியவரை ஒரு முறை வாசித்து விட்டு மீண்டும் எழுத தொடங்கினான்.
உயர் மின்னழுத்த கம்பத்திலிருந்து சற்று தூரத்தில் இருக்கும் ஒரு மேய்ச்சல் நிலத்தில் ஒரு இளைஞன் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தான். அந்த இளைஞன் மகிழுந்தை கவனித்து படி அங்கு வந்தான். அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கிருந்த மருத்துவர்களால் சென்ற உயிர் திரும்பி வந்தது.
அவன் பெற்றோர்கள் வந்து அவனை மீட்டு பன்னாட்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள். இரண்டு வருடங்கள் ஆனது அவன் எழுந்து நடக்க. அவனுக்கு எல்லாம் ஞாபகம் இருந்தது ஆனால் யாரிடமும் சொல்லவில்லை, சொல்லியிருந்தால் மனநல மருத்துவமனையில் சேர்த்து இருப்பார்கள். ” உனக்கு கொழுப்பு ” என்று ஏன் அவர் சொன்னார் என்ற கேள்வியும்,நான் யாருக்கும் கெடுதல் செய்யவில்லை ஏன் நரகத்திற்குச் சென்றேன் என்ற கேள்வியும் அவனுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. நாளாக நாளாக “உனக்கு கொழுப்பு” என்று சொன்னது மட்டும் அவன் மனதில் குடி கொண்டிருந்தது. தன் மகனுக்கு ஒரு பெண் பார்த்து கட்டி வைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என அவனது பெற்றோர்கள் வரண் பார்க்க ஆரம்பித்தார்கள். அவனுக்கு மட்டும்தான் தெரியும் பெண்ணால் அவனுக்கு நிறைவு கிடைக்காது என்று. பல பெண்களுடன் உறவில் இருந்து பிரிந்து வந்தவன் அவன். அவனாலையே அவனுக்கு என்ன பிரச்சனை என்று தெளிவாக சொல்லத் தெரியாது.
என்று எழுதி விட்டு நிறுத்திய அஸ்தர் அப்படியே தூங்கிவிட்டான். நடு சாமத்தில் எழுந்தான் தண்ணீர் தாகமாக இருந்தது தண்ணீர் மாத்திரை ஒன்றை முழுங்கி விட்டு ஜன்னலை திறந்தான் சூறைக்காற்று மணலை சேர்த்து வாரிக் கொண்டு வந்தது. சன்னலை மூடினான். காற்றுப்பட்டதால் குளிர்வது போல இருந்தது. நிலாவை பார்க்கலாம் என்ற ஜன்னலை திறந்தவன் பார்க்க முடியாமல் மீண்டும் படுக்கையில் சாய்ந்தான். அவளின் சுருட்டை முடி, கட்டையான குட்டையான அவளின் தேகம், வட்ட முகம், தேங்காய் சிரட்டை நிறத்தில் இருக்கும் உதடு, அவனின் உணர்வு பொங்கலில் கண் முன் அவளை கொண்டு வந்து நிறுத்தியது. அவள் அருகில் அவன் நிற்கிறான், மெல்ல அவள் வந்து படுக்கையில் சாய்கிறாள் அவளை இருகப் பிடித்து பிணைத்துக் கொண்டு உறங்கினான், தலையணையை கட்டிக்கொண்டு. விடிந்தது, எழுந்து புத்தகத்தை திறந்து என்ன செய்யலாம் என்று யோசித்தான் பின் எழுதினான்.
ஒரு மதத்துறவியை காண சென்றான். நடந்ததை கனவு போல சொன்னான். அது நரகம் என்பதால் நீ செய்த தவறுக்கு அப்படி சொல்லப்பட்டிருக்கும் என்று பிதற்றினார் துறவி. அவர் திடமான குரலில் அழுத்தம் திருத்தமாக சொல்லி இருந்தால் கூட அவன் நம்பியிருப்பான். பின் வேறு சில புகழ்பெற்ற கோவில்களுக்கு சென்று பார்த்தான் பொழுதுகள் தான் சென்றது.
கதை சலிப்பாவது போல இருந்ததால் எழுதுவதை நிறுத்திவிட்டு குளியல் அறைக்குள் சென்றான். வாரத்துக்கு ஒருமுறை மட்டும் குளிப்பவன் அவளது வருகைக்குப் பின் தினமும் குளிக்கிறான். அதுவும் உயர்தரமான குளியல் தான் அன்றாடம் செய்வது எல்லாம் செய்துவிட்டு அலுவலகம் வந்து சேர்ந்தான் அஸ்தர். அவள் அவனுக்கு முன்பே அலுவலகத்தில் அவளது மேஜையில் இருந்தாள். யாரும் யாரோடும் பேசிக்கொள்ளும் வழக்கம் அழிந்து இருந்த தலைமுறையில் அவள் தன்னை பார்த்து தலையசைக்க மாட்டாளா, சிரிக்க மாட்டாளா என்று ஏங்கினான். கண்களாலேயே அவளை கட்டி அணைத்தான். திருமணம் என்ற முறையெல்லாம் கிடையாது. குழந்தை வேண்டுமென்றால் அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டும். ஆணோ, பெண்ணோ உறவுக்கு தேவை என்றால் அதற்கும் பதிவு செய்ய வேண்டும். அரசு அதற்கான ஏற்பாடு செய்து கொடுக்கும். ஏற்கனவே ஒரு மாதம் சென்று விட்டது இன்று எப்படியாவது அவளிடம் பேசி விட வேண்டும் என்று முடிவோடு இருந்தான். அலுவலக பணி முடிந்து கிளம்பும்போது, ” ஒரு இரவு என் கூட இருக்க… பதிவு செய்யலாமா” என்று கேட்டான். மேலும் கீழும் பார்த்துவிட்டு பதில் சொல்லாமல் கடந்து போனாள். அதன்பிறகு இரண்டு வாரங்கள் அவன் கதையை தொடரவும் இல்லை, அவளிடம் சென்று பேசவும் இல்லை, அவளும் எதுவும் சொல்லவில்லை. அன்று பணி முடிந்து எல்லோரும் வீட்டிற்கு கிளம்பினார்கள். அஸ்தரும் கிளம்பினான். இயற்கையாக அவளும் அதே நேரத்தில் கிளம்பினாள் இருவரும் ஒரே வழியில் நடக்கிறார்கள். அவன் எதுவும் சொல்லாமல் அவள் பின் நடந்தான். அவள் என்ன நினைத்தாலோ தெரியவில்லை பாதி தூரம் வந்த பிறகு, “இன்னைக்கு உன் வீட்டுக்கு வரவா” என்று கேட்டாள். அதற்கு அதிர்ச்சி அடைந்தவன் வேறு என்ன சொல்வது என்று தெரியாமல் “ம்ம்” என்றான். இருவரும் நடக்க தொடங்கினார்கள். அஸ்தர் கேட்டான், “பதிவு பண்ணலயே”
“ஒரு இரவு தானே தேவையில்ல விடு” என்றாள். இருவரும் அஸ்தரின் வீட்டிற்கு நுழைந்தனர். அரை விளக்கை போட்டான் அஸ்தர். இறந்து சருகான பூச்செடி இருக்கும் பூந்தொட்டி, வரைய தெரியாமல் வரைந்த யாரோ ஒருவரின் உருவம் சுவரில், புத்தகங்கள், நெகிழி காகிதங்கள், வேறு எதுவும் புதிதாக இல்லாத அஸ்தரின் அறையை அவள் பார்த்தாள். புத்தகங்களுக்கு மேலே இருந்த அவன் எழுதிக் கொண்டிருக்கும் புத்தகத்தை எடுத்து பார்த்துவிட்டு,
“இன்னும் நீ கையிலதான் எழுதுறியா”
“அதுதான் எனக்கு பிடிச்சிருக்கு”
ஜன்னலை நோக்கி வந்தவள் ஜன்னலை திறந்த உடனே மூடினான். உருண்டையை இரண்டாக பிரித்து இருவரும் அமர்ந்து சாப்பிட்டார்கள்.
“அப்புறம் என்ன பண்ண போறோம்” என்றாள்.
“கொஞ்ச நேரம் பேசலாம் அப்புறம் தூங்கலாம்” என்றறான் அஸ்தர்.
“எத பத்தி பேசறது” என்றபடி அவள் அவனை நோக்க, அவன் அவளை நோக்க இருவரும் சிரித்தார்கள்.
“ம்ம்” என்று தலையாட்டினாள். அவளது கைகளை பிடித்து எழுப்பி நடனமாட தொடங்கினான். மென்மையான அசைவுகளில் இருவரும் ஆனந்தமாய் அசைந்தார்கள். சிரிப்பும், விளையாட்டும், பாட்டுமாய் கலைத்துப் போனார்கள். பின் இருவரும் படுக்கையில் சாய்ந்தார்கள். ரெடியோ ஒலித்து கொண்டே இருந்தது.விழிப்பு வந்து அஸ்தர் எழுந்தான் அவள் கட்டிலில் அமர்ந்து அஸ்தர் எழுதி வைத்திருந்த புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாள். அவளை பார்த்துவிட்டு தாகத்திற்கு தண்ணீர் மாத்திரை ஒன்றை விழுங்கி விட்டு, “உனக்கு வேணுமா” என்றான். வேண்டாம் என்பது போல தலையாட்டினாள். அவள் அருகில் வந்து அஸ்தர் அமர்ந்தான். அவள் புத்தகத்தை மூடினாள்.
“அவன் யார் கிட்ட போய் விளக்கம் கேட்டு தெரிஞ்சிப்பான்” என்று கேட்டாள்.
“அதுதான் எனக்கும் தெரியல ” என்று சிறிது நேரம் மௌனம். ” ஒரு போக்குல அதுவா வந்துச்சு இப்போ அடுத்து என்ன எழுதுறது னு தெரியல” என்றான் அஸ்தர்.
அவள், “ஏன் உன்ன மாதிரி ஒரு எழுத்தாளர பார்க்க கூடாது “
“எழுத்தாளரா…என்ன மாதிரியா… நான் எழுத்தாளன் லா இல்ல… எழுத்தாளனுக்கு என்ன தெரியும்” என்றான் அஸ்தர்.
“பைத்தியம்… அவன் ஒரு எழுத்தாளர பாக்க வை நல்லா இருக்கும்” என்றாள்.
‘அப்படியா சரிங்க…” என்றான். தலையிலயே லேசாக அடித்தாள். உதறி எறியப்பட்ட உடைகளுக்கு மத்தியில் இறுக்கமாய் அணைத்துக் கொண்டு கிட்டந்தார்கள்.காலையில் அவள் தான் அவனை எழுப்பினாள்.
“நான் கிளம்புறே”
எழுந்து அமர்ந்தவன் “ம்” என்றபடி அமைதியாக, அவன் முகம் வாடுவதை கவனித்தவள், “என்ன ஆச்சு” என்றாள்.
“ஏன் கல்யாணம் குடும்பம்னு இருக்க அரசு அனுமதிக்கிறது இல்ல” என்றான் வருத்தத்துடன் அஸ்தர்.
“இப்போ நாம தனியா இருக்கிற மாதிரி இருக்க முடியாது. குடும்பம்னு ஒன்னு இருந்தா பொறுப்புகளும் கடமைகளும் வந்துரும். தேவை அதிகமாகிடும், இந்த அரசோட நிர்வாகம் தாக்கு பிடிக்காது. குடும்பமா வாழ்ற அளவுக்கு இங்க என்ன இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா நாமலே செத்துகிட்டு தான இருக்கோம். உனக்கு ஆசையா இருந்தா குழந்தை வேணும்னு பதிவு பண்ணு. பெத்துக் கொடுக்க விருப்பம் னு யாராவது பதிவு பண்ணி இருந்தா அரசாங்கம் சொல்லும். பெத்து குடுப்பா வளத்திக்கோ” என்று சொல்லி முடித்தாள்.
அஸ்தர் உடனே, “உனக்கு அந்த விருப்பம் இருக்கா” என்றான்.
அவள், “சத்தியமா இல்ல. நான் ஏன் இந்த நரகத்துக்கு இன்னொரு உசுர கொண்டு வரணும்”
அஸ்தர் பதில் எதுவும் சொல்லவில்லை.
“அந்த கதை எனக்கு புடிச்சிருக்கு அதை எழுதி முடி… அவன் ஒரு எழுத்தாளர சந்திச்சா அவன் வாழ்க்கை நிச்சயம் மாறும்” என்று சொல்லிவிட்டு அவன் வீட்டை விட்டு வெளியேறினாள். அதன் பின் அவள் யாரோவாக, அவன் யாரோவாக இருந்தார்கள் அவளது பார்வை கூட அஸ்தரின் மீது படவில்லை, அஸ்தரும் அவளை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. பின் அஸ்தர் கதையை எழுதி முடித்தான்.
ஒரு நாள் இணைய தளத்தில் ஒரு பதிவை பார்த்தான்.அந்த ஆண்டிற்கான தேசிய விருது பெற்ற எழுத்தாளர் ஒருவரின் வாசகர்களுடனான உரையாடல் நிகழ்வின் அழைப்பிதழ் பதிவு அது. அவனும் அதில் கலந்து கொள்வதென முடிவு செய்து அங்கு போய் கலந்து கொண்டான். சிரிப்பு கலந்த அவரது பேச்சு அவனை ஈர்த்தது. ஒவ்வொருவரின் கேள்விகளுக்கும் பதில் சொல்லிக்கொண்டே வந்த எழுத்தாளரிடம் இவனும் ஒரு கேள்வி கேட்டான்,
“ஏதோ ஒரு நிறைவு இல்ல,எதோ ஒண்ணு தேடிக்கிட்டு இருக்குற மாதிரியே இருக்கு, மனசு நிம்மதியா இல்லாம ஒரு தேடலயே இருக்கு, அவனும் என்னென்னமோ பண்ணி பாக்குறான் எதை பண்ணியும் அவன் மனசு அமைதியாகவே இல்ல. இதை பத்தி என்ன நினைக்கிறீங்க, நீங்க இப்படி இருக்கிற ஆளுக்கு என்ன சொல்லுவீங்க” என்று யாரையோ குறிப்பிடுவது போல கேட்டான் அஸ்தர்.
“தேவையான அளவு பணம், நல்ல வீடு, நல்ல உணவு, நல்ல குடும்பம், நல்ல உடை, இதெல்லாம் இருந்தும் ஒருத்தன் மனதை தேடுறே, மன அமைதியை தேடுறேனு சொல்லிக்கிட்டு இருக்கிறானா அவனுக்கு கொழுப்பு”
என்றார் அந்த எழுத்தாளர்.
00

அ.மனோஜ்குமார்
வயது:21
படிப்பு: பத்தாம் வகுப்பு
தொழில்: நெசவு தொழில்
சேவம்பாளையம், கல்ப்பாரபட்டி, சேலம்

