-சிபி சரவணன்

அந்த காவல் நிலையத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு பெரும்  இருட்டு குடி கொண்டிருந்தது. பாவம் செய்தவர்களும், பாவம் செய்ய தூண்டுபவர்களும் இருக்கும் போது அந்த இருட்டு அவசியமான ஒன்றாக தான் தெரிகிறது.

மரியாதைக்குரிய எனது பெயர் ராமர். இருந்தாலும் இந்த கீழ் நிலை மிகுந்த மனிதர்களிடம் நான் மரியாதையை எதிர்பார்ப்பது கொஞ்சம் முரணாகத்தான்  படுகிறது. நேற்று மதியம் முதல் போலீஸ்காரர்களின்  பூட்ஸ் கால் உதையில் என் தோள்கள் சிவந்து கிடக்கிறது. எனது ஆண்குறியிலுள்ள சிறுநீர் கழிக்கும் துளையில் ஊசியால் குத்துவது போல் பயங்கரமா வலிக்கிறது. மல்லாக்க விட்டத்தை பார்த்து படுத்திருக்கிறேன்.  உடலை அங்கிட்டும் , இங்கிட்டும் அசைக்க முடியவில்லை.  தொண்டை எழும்புகள் உடைந்திருப்பதால் செருமினால் கூட  வலிக்கிறது. உடலை லேசாக அசைத்து கொடுத்து ஜன்னல் கம்பி வழியாக யாராவது வருகிறார்களா என பார்த்தேன், யாரும் வர மாட்டார்கள் என தெரிந்தும், ஒரு அற்புத பிறவியை போல் துகள் அளவு நம்பிக்கையில் விழி பிதுங்கி கிடக்கிறேன்.

நான் பரம்பரை, பரம்பரையாக முடி திருத்தும் தொழில் செய்யும் வம்சத்திலிருந்து வந்தவன். என் தாத்தா அந்த கிராமத்திற்கு வலுக்கட்டாயமாக எங்கிருந்தோ கூட்டி வரப்பட்டார். இங்கே நான் என்ன இனம் என்பது பற்றி விளக்கத் தேவையில்லை என நினைக்கிறேன்.   ஊருக்கு ஒதுக்குப் புறமாக  குடிசை போட்டு வசித்து வந்த என்  தாத்தா கோமணத்தோடு ஊர் மக்களுக்கு முடிவெட்டி விட்டார். அப்பா சற்று முன்னேறி கந்தல் லுங்கியோடு சட்டையில்லாமல் முடிவெட்டிக் கொண்டே, என்னையும் டிப்ளோமா வரை படிக்க வைத்தார்.

லே.. அம்பெட்டையன் மகேன், அம்பெட்டையான்  மகேன் அப்படிங்கிற பேர் ஏன் அளவுல இருந்தது போதும்டா, வெக்காலி அங்கிட்டு போய் படிச்சு ஒழுங்கா பொழச்சுக்க…” என அப்பா என்னை ஒழுங்காய் படிக்க சொல்லி கெஞ்சுவார்.

நானும் அவர் பேச்சைக் கேட்டு ஊரை விட்டு போய் திருப்பூரில் இரண்டு ஆண்டு வேலை பார்த்தேன். போதிய வருமானமின்மையும், உடல் நலக் கோளாறும் என்னை துரத்த மீண்டும் ஊருக்கே வந்து விட்டேன்.  தொண்டையில் சுத்தியில் அடிப்பது போல் வலிக்கிறது, இருங்கள் கொஞ்சம் செருமி கொள்கிறேன். என் கதை அவ்வளவு இலக்கிய தரமான இருக்காது தான் இருந்தாலும் பரவாயில்லை. என் கதையை கேட்க அந்தச் சுவர்கள் இருக்கிறது என்ற நம்பிக்கையில் சொல்கிறேன்.  நான் திருப்பூரை விட்டு ஊருக்கு வந்ததும் அப்பாவுக்கு ஊருக்கு பொதுவான ஒரு இடத்தில் கல் சுவர் வீடும், பக்கத்தில் சிறிய கொட்டாய் போன்ற சலூன் கடையும் கட்டி கொள்ள ஊர் காரர்கள் இடமளித்தார்கள்.

சிறு வயது முதலே அப்பாவோடு சேர்ந்து, நானும் கொஞ்சம் கொஞ்சமா முடி திருத்தும் தொழிலை பழகிக் கொண்டே வந்தேன். இப்போதெல்லாம் அப்பா சிறுவர்களை என்னிடம் கொடுத்து விடுகிறார், நான் அவர்கள் தலையை சுவரோரமாக ஒட்டி அண்ட கொடுத்து முடி திருத்தி விடுவேன்.

எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல், அப்பாவை யாரும் இதுவரை மரியாதை குறைவாக அழைத்ததில்லை. சிறு வயது காரர்கள் கூட “அம்புட்டையா” என தான் கூப்பிடுவார்கள்.

“என்ன சாமி இன்னும் அதே 30,50 தா  தாறீக… காலம் அங்கியேவா கெடக்கு.. கொஞ்சம் கூட தான் தரது..”

“அதே ஒவ்வொரு எழவுக்கும் போடுவனம் தாரகல.. பிறகென்ன …” 

இந்த போடுவனம் என்பது எங்கள் கிராமத்தில் உள்ள பொதுவான வழக்கம்.  ஒரு நபர் இறக்கும்போது, ஊரிலுள்ள ஒவ்வொரு  குடும்பத்தின் சார்பாகவும், ஊரின் சார்பாகவும் பணம் செலுத்தப்பட்டு சுடுகாட்டில் வைத்து  ஒரு வெள்ளை  வேட்டியை விரித்து வைத்து காசு பிரித்து  வைக்கப்பட்டிருக்கும்.  அதில் முடி திருத்துபவருக்கும், குழி வெட்டுபவருக்கும், துணி துவைப்பவருக்கும், பணம் கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து தரப்படும்.  அதாவது இறந்த நபரின் நினைவாக அவர்களுக்கு செய்த சேவையை பொருட்டு  அந்த பணம் தரப்படும்.

வெளியூருக்கு போய் சக மாணவர்களோடு படித்தவன் என்ற முறையில் அப்பாவை ஊர்க்காரர்கள் இப்படி நடத்துவது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.  ஆனால் அப்பாவோ அது ஏதோ தன் பிறவி பேர் போல தன் வாழ்க்கை பழக்கிக் கொண்டு லேசாகிவிட்டார். ஒவ்வொரு முறையும் மூட்டை, மூட்டையாக முடியை சாக்கில் கட்டி வைத்திருப்பார். அதனை நான் தான் நகரத்தில் கொண்டு போய் விற்று காசாக்கி வருவேன் . அந்த காசில்தான் அப்பா எனக்கு பிடித்ததை வாங்கித் தருவார்.

படிச்ச படிப்புக்கு வேலைக்கு போடானா கேக்குறானா… உங்க ஆத்தாலுக்கும், எனக்கும் வகுத்துகுள்ள எம்புட்டு முடி ஒட்டி கிடக்கு தெரியுமா.. அதையெல்லாம் அல்ல முடியுமா? ஆகாது”

அப்பாவுக்கு நான் ஊரில் வந்து அவரோடு சேர்ந்து கடையில் நிற்பதில்  துளியும் உடன்பாடில்லை.  நான் ஊருக்கு  வந்ததிலிருந்து அவர் சரியாக என்னோடு பேசுவதில்லை.

லாக்கப் கதவு திறக்கும் சத்தம் கேட்டு லேசாக கண்ணை அசைத்து பார்த்தேன்.  கான்ஸ்டபிள் ஒரு துண்டை என் மீது தூக்கி போட்டார். என்னால் சுத்தமாக திரும்பி படுக்கவே இயலவில்லை. கொஞ்சம் லேட்டாக போனாலும் இன்னும் நாலு அடி சேர்த்து விடும் என்ற அச்சத்தில், உயிரிலிருந்து ஒரு பலத்தை கொடுத்து தவழ்ந்து வந்து லாக்கப் கம்பியை எட்டி பிடித்து எழ மீண்டும் தடுமாறி விழுந்தேன்.  மீண்டும்  ஆண் குறியில் சுண்டி இழுப்பது போல் ஒரு வலி. உடனே கான்ஸ்டபிள் ஒரு கம்பை எடுத்து வந்து என் கைகளுக்குள் சொருகி,  மெல்ல  தூக்கி விட்டார்.  நான் துண்டை கட்டிக் கொண்டு வெளியே வந்து இன்ஸ்பெக்டர் முன்னே நிறுத்தப்பட்டேன்.

“பேர் என்னடா?”

“ராமர் சார்”

“உனக்கெல்லாம் எவன்டா ராமர்னு பேர் வைச்சது”

“எங்கையா, நாங்களாம் அந்த பேர் வைக்க கூடாதா?”

“எவண்டயாவது  அடிபட்டு சாவு போ..உன்னைய கூட்டி போக ஆள் வந்திருக்கு பாரு”

என்றதும்  லேசாக திரும்பி பார்க்க, என் தாய் ஒரு வக்கீலுடன்  நின்று இருந்தாள். அவர்களோடு  மாமாவும் என்னை பரிதாபமாக பார்த்தார்.

“சார் எதுக்கு சார் இப்படி அடிச்சு இருக்கீங்க?’’ இன்ஸ்பெக்டர் எதுவும் பேசாமல் தொண்டையை செறுமி கொண்டார். அம்மா என்னை கை தாங்களாக பிடித்து கொண்டு போய் சுவரோரமாக உட்கார வைத்தாள்.

வக்கீல் போலீசாருடன் என்ன வாக்குவாதத்தில் இருந்தார் என சுத்தமாக கேட்கவில்லை. நினைவுகள் மெல்ல பின்னால் ஊர்ந்தது.

அன்று கடுமையான மழை இடியும், மின்னலும் எங்கள் வீட்டு தகரத்தை மிரட்டி கொண்டிருந்தது. நான் லேசாக குடித்திருந்தால் நல்ல போதையில் ஆழ்ந்து விட்டேன். அப்பா எப்போதும் வீட்டுக்கு முன்னால் இருக்கும் தாழ்வாரத்தில் தான் படுத்து இருப்பார்.  அதிகாலை நாலு மணி இருக்கும் நான் லேசாக விழித்து பார்த்தேன், என் வேட்டி முழுவதும் நனைந்து ஈரமாக இருந்தது. வீடு இடிந்து விழுந்ததில் அப்பா இறந்து போனார். இது சர்வசாதாரணமான நிகழ்வு இல்லை என்றாலும் கூட, அதை முழுதாக நினைவில் நிறுத்தாத அளவிற்கு பயங்கரமான இன்னொரு சம்பந்தமும் நடந்து விடுகிறது. அப்பா இறந்த பிறகு எங்கள் குடும்பத் தலைவனாக நான் பொறுப்பில் இருந்தேன்.

 இன்னொரு முறை எழுந்து விடாத அளவுக்கு வீட்டை நன்றாக கட்டி மேற்கூரையாக தகரத்தை போட்டேன். இந்த வீடு கட்டும்போது நாங்கள் மிகப்பெரிய தவறு செய்து விட்டதாக அக்கம் பக்கத்தினர் எங்களை கடித்துக் கொண்டனர். என் வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள் அவர்கள் வீட்டுக்கு எதிராக வாசல் வைத்ததில் ஆரம்பித்தது பிரச்சினை.

“ஏண்டா என் பொண்டாட்டி கோலம் போடுறப்பா  உங்க ஆத்தா வெளிய வருவாளா.. விடிய உங்க மூஞ்சியில முழுச்சா நாள் வெளங்குமாடா”

இப்படி தினமும் ஏதாவது சொல்லி எங்கள் வீட்டினரிடம் ஏதாவது வம்பு இழுத்து கொண்டே இருப்பார். கொஞ்சம் கொஞ்சமாக எங்களுக்குள் பகை உணர்வு வளர ஆரம்பித்தது. அவர் எங்கள் மூஞ்சியில் முழிக்க கூடாது என இரு வீட்டுக்கும் இடையே கிடுகு கட்டினார். ஆனாலும் அவருக்கு மனம் திருப்தி அடையவில்லை.

“முடி பூரா வீட்டுக்குள்ள காத்துக்கு வருது பீ திங்கற பயலுகளுகல கொண்டு வந்து வச்சுக்கிட்டு உசுர வாங்குறாங்க”

என  எதிர் வீட்டு காரன் பொண்டாட்டி காது என் காது பட திட்டினாள்.  அதையும் கூட என்னால் சுலபமாக பொறுத்துக் கொள்ள முடிந்தது. அவர் ஊர் தலைவரிடம் பேசி இவனை காலி செய்ய வைத்து காலனிக்கு அனுப்புங்கள் என புகார் கொடுத்தார். கடைக்கு வருவோரெல்லாம்  அப்பாவிடம் எதிர்பார்த்த அதே மரியாதையை  என்னிடம் எதிர்பார்த்தனர். 10 வயது சிறுவன் கூட “எலே ராமரு அட்டாக் கட்டிங் போட்டு விட்ரா”  என்பான்.

நான் அவன் பொடணியில் அடித்து

“உன் வயசு என்ன? என் வயசு என்ன? ஒழுங்கா அண்ணன்னு கூப்பிடுறா  என திட்டுவேன். இப்படியாக ஊருக்குள் என் மீதான வன்மங்கள் பெருக துவங்கின.  என் அப்பாவை போல் நான் இல்லை, கொஞ்சம் திமிர் அதிகாக இருப்பதாக கூட சொன்னார்கள்.

ஒரு நாள் அம்மா காப்பி தண்ணி வாங்க கடைக்கு போயிருந்தாள். திடீரென ஏதோ வீட்டுக்குள் சாணியின் வாசம் வீச ஆரம்பித்தது. நான் புரண்டு படுக்க என்னை சுற்றி சாணி நீர் வழிந்து ஓடியது. நான் எழுந்து பார்க்க மொக்கைசாமியின் மனைவி வேகமாக என் வீட்டை கடந்து ஓடினாள். எனக்கு அப்போது என்ன தோணியது என்று தெரியவில்லை.  வாசலில் இருந்த விளக்கமாற்றை எடுத்துக் கொண்டு போய் அந்த பொம்பளையை சரமாரியாக அடித்தேன். அந்த பெண் பயங்கரமாக கத்த ஆரம்பித்தாள். எனக்கு அவ்வளவு தான் ஞாபகம் இருக்கிறது,  எத்தனையோ குரல்கள் எத்தனையோ வசைகள் மொத்த ஊரும் எங்கள் வீட்டை சூழ்ந்து விட்டது. என் அம்மாவின் முந்தானையை இழுத்து போட்டு அவளை பாவாடையோடு உட்கார வைத்தார்கள். என்னை யாரெல்லாம் அடித்தார்கள் என்று நினைவில்லை. கண் விழித்து பார்க்க லாக் அப் கம்பிக்குள் கிடந்தேன். இந்த கதை  உங்களுக்கு கண்டிப்பாக சலிப்பை  தந்திருக்கும். ஆனாலும் கூட என் குரலை எழுப்ப வேண்டி இருக்கிறது.  அம்மா கொண்டு வந்த வேட்டி சட்டையை உடுத்திக் கொண்டு நாங்கள் வீட்டிற்கு திரும்பினோம். அது நள்ளிரவு என்பதால் ஊரே அமைதியாக இருந்தது. எங்கள் வீடு அடுத்து சுக்கு நூறாக  நொறுக்கப்பட்டிருந்தது. அம்மா உள்ளே சென்று கொஞ்சம் துணிமணிகளை அள்ளி பையில் போட்டுக் கொண்டு வந்தாள். என் கையை இறுகப்பற்றிக் கொண்ட அவள்,

“இந்த ஊர் வேணாண்டா ராமரு..” என  இழுத்து சென்றாள். நான் கையை உதறிவிட்டு சலூன் கடைக்குள் சென்றேன். கண்ணாடி சில்களை தாண்டி உள்ளே தலை மயிர்கள் திணித்து வைக்கப்பட்ட மூட்டை ஒன்று இருந்தது.

அதை தூக்கி வந்து தெருவுக்கு மத்தியில் போட்டு அவற்றைப் பற்ற வைத்தேன்வ முடி எரிந்து பட்டாசு வெடிப்பது போல் சத்தம் கேட்டது. நெருப்பை கனன்று ஏறிய தீ சுடர்கள் நெளிவதை பார்த்து அம்மா லேசாக சிரித்தாள். இந்த சிரிப்பை அம்மா இவ்வளவு நாள் எங்கே ஒளித்து வைத்திருந்தாள் என தோன்ற ஆரம்பித்தது. நானும் பதிலுக்கு அம்மாவை பார்த்து சிரித்தேன். முடிகள் எரிந்து பொறி பொறியாக வெடிக்க ஆரம்பித்தது.

00

சிபி சரவணன்,

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நான் திரைப்பட துறையில் உதவி இயக்குனராக பணி புரிகிறேன். அஞர், எச்சிலை என்ற இரு நூல்களை எழுதி உள்ளேன். தற்போது சென்னையில் வசித்து வருகிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *