அன்பின் துயரம்
உன்னோடு நான் கொண்ட அதீத அன்பு தான்
அளவிலா வெறுப்பையும் அளிக்கிறது
இனி எப்பொழுதும் சந்திக்கவே கூடாதென்ற
பிரார்த்தனையில் துயிலும் மனம்
நினைவடுக்குகளில் பதிந்துவிட்ட
உன் முகத்திலேயே விழிக்கிறது.
அலைபேசியில் உன் பெயரைக் கண்டதும்
என்னையறியாமல் நான் உதிர்க்கும் ஒற்றை புன்னகையில்
எட்டிப்பார்க்கிறது உன் மீதான மிச்ச அன்பு
இதை வரமென்பதா…
சாபமென்பதா…
சொல்லடி சகியே!
00
குளிர்மலை பிரதேசத்தின்
புலர்காலையில்
சிறு அடுக்களைப் புகைக்கூண்டில்
அப்போதைய குளிரை தணித்துக் கொள்ளும்
கூடற்ற பறவைபோல…,
உன் முந்தைய பிரியங்களை
தனிமையில் உழலும் துயர நேரங்களில்
கொஞ்சம் நினைத்துக் கொள்கிறேன்
எனக்கான உன் அணைப்பின் வெம்மையை
அவை அந்த பொழுதிற்கு தந்துவிடக்கூடும்…
00
கொன்றுவிட முடிவு செய்தபின்
கூர்மையான குருவாள் கொண்டு
ஒரே முயற்சியில் முடித்திருக்கலாம் தான்.
கூர் மழுங்கிய பழங்கத்தியெடுத்து
பலமுறை குத்துகிறாய்
என் குருதியின் வீச்சத்தை ரசித்தபடி…
ஒவ்வொரு உராய்விலும் கூராகிறது முனை
இத்தனை பிரயத்தனங்களை
இன்னல் தாங்கி செய்திட
உன்னை எத்தனை காயப்படுத்தியிருக்க வேண்டுமென
தகர்ந்து போகிறேன் மனவலியில்…
கலங்கிய என் கண்கள் கண்டு
இனி பாதியில் மனம் மாறிவிடாதே
அப்படியே என்னை விட்டுவிடாதே
உயிர்பிழைக்கும் நான்
உன்னை ஒன்றும் செய்யாமலிருக்க
என்னால் எதுவும் செய்ய இயலாது கண்மணி.
00

ராணி கணேஷ்
திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்து பின் பப்புவா நியுகினியாவில் பதினாறு வருடங்கள் இருந்தார். தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். பப்புவா நியு கினி தமிழ்சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர். தன்னார்வ பணிகளில் விருப்பம் மிகுந்த இவர் பப்புவா நியுகினி இந்திய சங்கத்தில் பல ஆண்டுகள் பெரும்பங்காற்றியுள்ளார். தமிழ்வெளி இலக்கிய இதழின் இணை ஆசிரியரும் ஆவார். ஆஸ்திரேலியாவில் தமிழ் கற்றுக் கொடுப்பதுடன் தன்னார்வ பணிகளிலும் ஈடுபடுகிறார்.
தமிழ் இலக்கியத்தில் தீராத ஆர்வம் கொண்ட இவர் தொடர்ந்து நூல்களை வாசிப்பதிலும் படைப்பு நுட்பங்களை, மொழியின் புதிய வண்ணங்களைக் கற்பதிலும் உற்சாகமாக ஈடுபடுகிறார். தற்போது கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், திரை மற்றும் நூல் விமர்சனங்கள் என தொடர்ந்து இலக்கிய இதழ்களில் எழுதி வருகிறார். இவரது சிறுகதைகள் கிராமத்து மண்ணின் வாழ்வியலையும், தொலைந்துவிட்ட பால்யத்தின் நினைவுகளையும் மீட்டுருவாக்கம் செய்பவை. இவரது திம்மராஜபுரத்துக் கதைகள் சிறுகதை தொகுப்பு தமிழ்வெளி வெளியீடாக வந்துள்ளது.

