-விஜயராணி மீனாட்சி
அதிருக்கும் பணியாரக் கிழவிக்கு ஒரு அறுபத்தியஞ்சு எழுபது வயசாவது.. தலைமுடியைக் கோடாலி முடிச்சிட்டு கிழவி நல்ல ஓங்குதாங்காக எழுபது வயதுகாரிபோல இல்லாமல் ஊழைச்சதையெல்லாம் இல்லாமல் கூன் எதுவும் போடாமல் நிமிர்ந்த உடல்வாகோடு கிண்ணென்று இருப்பாள்.
முப்பது வருஷத்துக்கு முன்பு தன் தாயோடும் கையில் இரண்டு பெட்டியோடும் சிலகட்டுப் பணத்தோடும் சேலத்துப் பக்கம் ஏதோ கிராமத்திலிருந்து வருவதாகவும், தங்களுக்கு யாருமே இல்லையென்றும், மகளின் புருஷன் அகால மரணமடைந்ததாகவும் சொல்லி இங்கே குடியிருக்க வீடு தேடி வந்தனர். அங்கே இருந்தால் மகள் போன புருஷனையே எண்ணிக் கவலைப்படுவதாகவும் அதனால் ஒரு இடமாறுதலுக்காக இங்கே வந்ததாகக் கூறிக்கொள்வார்கள்.
கிழவி வழக்கமாக இரவு பணியாரத்துக்கு ஊறவைத்த அரிசி பருப்பு வெந்தயத்தைக் கழுவி காலையில் வெளிமுற்றத்தில் இருந்த சிறிய ஆட்டுரலில் போட்டு பதவிசாக அரைத்து கரைத்து வைத்தாளானால் மாவு பொங்கி சீர் புளிப்பாக சாயங்கால வியாபாரத்துக்கு ஆகும்.
அன்று காலை தூங்கி எழுந்த கிழவி கலைந்த தலைமுடியை உதறித்தட்டி கோடாலி முடிச்சிட்டுவிட்டு படுக்கையை எடுத்துச் சுருட்டி ஓரமாக வைத்துவிட்டு வாசக்கதவு திறந்து ஆகாசத்தைப் பார்த்து தன் இரண்டு கைகளையும் குவித்து வணங்கிவிட்டு வாசத்தெளிச்சுக் கோலம் போட்டு பல்விளக்கி முடித்து உரலைக்கழுவி அரிசி பருப்பைப் போட்டு மடமடவென அரைத்துக் கரைத்து உரலுக்குப் பக்கத்து கல் திண்டில் வைத்தாள். காலை வெயில் அரைமணிப்பொழுது கல்லில் விழும். அதுல பாதி பொங்கத் தோதாகுமென்று வைப்பது வழக்கம். கோடையில் அப்படி வைக்கத் தேவையில்லை.
சாயங்காலப் பொழுதுகளில் தினந்தோறும் பணியாரம், எப்போதாவது அரிசி பருப்பு கடலைப்பருப்பு தேங்காய் சேர்த்த குணுக்கு, அவித்த கடலை, அவித்த சோளக்கருது, சீசனுக்கேத்த சீனிக்கிழங்கு, பனங்கிழங்கு, கரும்பு என்று பள்ளிவிட்டு வரும் பிள்ளைகள் வாங்கித்திங்கத் தோதான வியாபாரம் தான் கிழவிக்கு. சும்மா இல்லாம ஒரு பொழுதுபோக்காகவும் கைச் செலவுக்கு ஆகுமென்றும் அவள் அம்மா பழக்கிவிட்டுப் போன வியாபாரம் தான்.
அடுப்பைப் பற்றவைத்து பாலில்லாத கடுங்காப்பி போட்டு வட்டகை தம்ளரோடு வாசலுக்கு வந்து உட்கார்ந்தாள்.
காட்டுக்கு வேலைக்குக் கிளம்பிப் போகும் சன்னாசியும் கருப்பாயிக்கிழவியும் இவளைப்பார்த்துச் சிரித்துக் கொண்டே வேகுவேகென்று கடந்தனர்.
“என்ன கருப்பாயி காட்டுக்குக் கிளம்பியாச்சா? காப்பி குடிக்கீகளா? கருப்பட்டிக்காப்பி…. என்ன அவசரம்? ஒத்த வார்த்தகூடப் பேசாமப் போறீக புருஷனும் பொஞ்சாதியும்…வெரதங்கிரதம் புடிச்சிருக்கியா? பேசாம இருக்கதுக்கு”….
“இல்ல ஆத்தா. .. இன்னிக்கு தேரமே ஆச்சு. அதான் உன்னப் பார்த்தும் பேசாம சிரிச்சுப்போட்டுப் போறோம். வேலமுடிச்சு வந்து ரவைக்கிப் பேசிக்கிடுவோம். வரட்டா”…
சரி சரி … பார்த்துப் போ….
எதிர்திசையிலிருந்து “தோய்…. தோய்… தோய்…” என்ற குரல் கேட்டு நிமிர்ந்த கிழவி… அங்கே கால்நீட்டி மகனின் இரண்டு கால்களையும் விரித்தவாறு தன் காலில் உட்கார்த்தி வைத்திருந்தாள்.
ஏ.. மூக்குத்தாயி எப்பத்தா வந்த ஊர்லருந்து? அதிருக்கட்டும் இன்னும் என்ன பச்சப்பிள்ளையா ஒம்மவன்? தாய்ப்பால் குடுக்கத நிறுத்தி எம்புட்டு மாசமாச்சு… பால் பீயின்னுட்டு திங்கதுக்கு நாயக் கூப்புடுத? ஒம்மவேந்தான் சோறு காயி கறின்னு திங்காம்ல? வீச்சமெடுத்த பீயத்திங்க பைரவரக் கூப்புடுத… போ… உள்ள கூட்டுட்டுப் போயி கக்கூஸ்ல உக்காத்திப் பழக்கு…
எந்த பதிலும் சொல்லாமல் மூக்குத்தாயி தன் தோளில் ஒரு நொடி நொடித்துவிட்டு உள்ளே எழுந்து போனாள்.
அட… மூதி… நல்லதுக்கே காலமில்ல.
மாலை நேரம் வாசலில் அடுப்பு பற்ற வைத்து வியாபாத்துக்குத் தயாரான கிழவியைப் பார்த்து ஓடிவந்த வேணு,
“ஆயா ஆயா… எனக்கு ஒரு சந்தேகத்துக்கு வெட சொல்லணுமே! …
என்னய்யா சந்தேகம்?
நாங்கேப்பேன்… நீ சிரிக்கக்கூடாது. யார்ட்டயுஞ் சொல்லக்கூடாது.. ஆம்ம்மா..
சிரித்துக்கொண்டே… “சரி சிரிக்கல. சொல்லு என்னனன்ணுட்டு”…
“பார்த்தியா பார்த்தியா சொல்லியும் சிரிக்க பார்த்தியா…இப்டி இருந்தா நா எப்டிக் கேப்பேன்?”
பக்கத்து வீட்டு ராசம்மா மகன் தான் இந்த வேணு என்கிற வேணுகோபால்.. அம்மாட்டக்கூடச் சொல்லாத விஷயங்கள கிழவிகிட்டத்தான் சொல்லுவான் கிழவிமேல அம்புட்டுப்பிரியமும் நம்பிக்கையும். வேணுவுக்குப் பள்ளிக்கூடம் இருக்கும்போது வீட்ல எல்லாரும் ஊருக்குப் போய்ட்டா கிழவிகிட்டத்தான் விட்டுட்டுப் போவாக. வேணுவைத் தன் மகன் போலப் பார்த்துக்கொள்வாள்.
அதேபோல வருஷத்துக்கு ரெண்டுமுறை எங்கேயாவது நான்கு நாளைக்கு டூர் போல கிளம்பிப் போகும்போது சிறுபிள்ளயிலிருந்து வேணுவைத் தன்னோடு சேர்த்துக் கூட்டிக்கொண்டு போவது வழக்கம். அந்த நான்கு நாளும் வேணுவுக்கு அம்புட்டுச் சந்தோஷமாய் இருக்கும். குற்றாலம், திருச்செந்தூர், வேளாங்கண்ணி, இராமேஸ்வரம், ஊட்டி, கொடைக்கானல்னு இத்தன ஊரும் கிழவி தயவுல பார்த்தாச்சு…
“ஏ… ஆத்தா என்ன நாங்கேட்டுக்கிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு ஏதோ ரோசன பண்ணீட்டு இருக்க?”
நினைவு கலைந்து, “என்ன சொன்ன? ம்.. சொல்லு என்னன்னு…
இங்காரு நா மொதயே சொல்லீட்டேன். சிரிக்கப்படாது…
சரிய்யா…நீ சொல்லு. எனக்கு வேல கெடக்கு..
நானு நேத்து ராத்திரி தூங்கி எந்திரிச்சதும் நெஞ்சு லேசா வலிச்சுச்சு…
ஆத்தீ… என்ன சொல்லுத? என்று பதறினாள் கிழவி.
ஐயே… இரேன் இன்னும் முடிக்கல. நெஞ்சு வலின்னா பொம்பளப் பிள்ளைகளுக்கு வருமே அதில்லத்தா. நெஞ்சு… அதான் மார்ல வலி. காலைல பார்த்தா கொஞ்சூண்டு வீங்கிக்கெடக்கு. எங்க அம்மத்தாட்டக் கேட்டா சிரிச்சிட்டு… ம்.. நேத்தைக்கி கெழவீட்ட பணியாரம் வாங்கித் தின்னைல்ல. அதான் பணியாரம்மாரி வீங்கப் போதுன்னு சொல்லீட்டு போடா போக்கிரிப்பயலேன்னுட்டு போய்ட்டா. எதுக்காத்தா இப்டி?
இதைக்கேட்ட கிழவிக்கு வந்த சிரிப்பு அப்படியே நின்றதிர்ந்து போனது.
இங்க வா, இங்க பாரு நீ ஒண்ணும் பயந்துக்காத… என்ன? இதுபற்றி யார்ட்டயும் எதுவும் சொல்லாத சரியா?
இல்ல ஆயா நா பயப்புடல… ஆனா எனக்கு இப்பல்லாம் பொண்ணூங்க கூடத்தான் பேச இருக்கப் பிடிக்குது. பசங்களப் பார்த்தா பயம்மா வெக்கமா என்னன்னே சொல்லமுடியாத ஒரு மாதிரி வருது ஆயா. எதுக்கு ஆயா எனக்கு இப்டில்லாந் தோணுது?
வேணு தன் கண்ணெதிரிலேயே கொஞ்சநாளாகவே மெல்லமெல்ல பொண்ணா மாறிட்டு வர்ற மாயத்துயரம் கிழவியின் மனதை ரணமாக அறுத்தது.
கொஞ்ச நாள் பொறுத்துக்க. நானே உன்ன வெளியூர் ஆஸ்பத்திரிக்குக் கூட்டீட்டுப் போய் செக் பண்ணுதேன். அதுவரைக்கும் யார்ட்டயும் மூச்சுவிடக்கூடாது சரியா?
“ஏன் ஆயா எனக்கு எதுனா வியாதியா இல்ல நான் பொண்ணஞ்செட்டியா மாறீட்டு வர்றேனா?”…
கிழவி வேணுவை ஆவிசேர்த்துக் கட்டிக்கொண்டு வழிந்த கண்ணீரை அவனுக்குத் தெரியாமல் சேலை முந்தானையால் துடைத்தெடுத்தாள்.
“இல்ல ராசா… நாந்தாஞ் சொல்றேன்ல? ஆஸ்பத்திரிக்கிப் போய்ட்டு வந்து மத்ததப் பேசிக்குவோம். எதையாச்சும் ரோசன பண்ணக்கூடாது ஆமா…”
ஆயாவின் பிடியிலிருந்து மெல்ல தன்னை விடுவித்துக்கொண்டு தளர்ந்த நடையில் வீடு நோக்கிச் சென்ற வேணுவை கண்ணில் நீர் நிறையப் பார்த்துக்கொண்டிருந்தாள் கிழவி.
அடுத்து வந்த ஒரு சனிக்கிழமை விடுமுறையன்று வேணுவை அழைத்துக்கொண்டு டவுண் ஆஸ்பத்திரிக்கு போனாள் கிழவி. அங்கே மருத்துவரைப் பார்த்து வேணுவைப் பரிசோதிக்கச் சொல்லி எல்லாம் ஊர்ஜிதமானதை நம்பமுடியாமையிலும் வேதனையிலும் குமுறினாள்.
திரும்பத் திரும்ப தன்னைப்பற்றிக் கேட்ட வேணுவுக்கு எதுவும் சொல்லாமல் ஒனக்கு ஒண்ணுமில்ல ராசா… நீ பாட்டுக்கு கவனத்தச் செதறவுடாம படி. அடுத்த வருஷம் பத்தாப்பு…. என்று ஏதேதோ பேச்சை மாற்றினாள். ஆனால் அதேவேளை மனதுக்குள் ஒரு கணக்கு துல்லியமாய் ஓடிக் கொண்டிருந்தது.

இப்படியாக ஒரு சில வாரங்களில் வேணுவின் வீட்டில் பெருங்கூச்சலும் அடிதடி ரகளையுமாக தெருவே வேடிக்கை பார்க்குமளவு இருந்தது. வேணு அம்மாவின் சேலையை எடுத்துக் கட்டிப் பார்த்ததை வீட்டிலுள்ளவர்கள் பார்த்து அவனை அடித்ததுதான் காரணம்.
கிழவி அவசர அவசரமாக ஓடிப்போய்.. “எதா இருந்தாலும் புள்ளைய இப்டியா போட்டு அடிப்பீக? மாட்ட அடிக்காப்ல” என்று வேணுவை தன்பக்கமாக இழுத்து அணைத்துக் கொண்டாள்.
நீ விடு கிழவி அவன…
இப்ப எதுக்கு அவனப் போட்டு இந்த அடி அடிக்கீக?…
ஆமா இவஞ்செஞ்ச செயலுக்கு தூக்கி முத்தங்கொஞ்சுவாக… மானம் போகுது…
அட என்னான்னு சொன்னாத்தான தெரியும்?….
ஆத்தா … இவஞ் சேல கட்ற பொண்ணஞ்செட்டியா?
……….
அம்மா சேலயக் கட்றான்.. இவன் நடவடிக்கைய கொஞ்ச நாளா கவனிச்சுட்டுத்தான் வாரேன்… கொஞ்சங்கூடச் சரியில்ல.
அதுக்கு… இப்டி அடிக்கச் சொன்னாகளா?
குடும்ப கௌரவம் என்னாகுறது?
ஓ.. அவந்தான் கௌரவத்தக் கையில பிடிச்சிருக்கானாக்கும்?
இங்காரு…. இது எங்க குடும்பப் பிரச்சனை. ஊருல பரவங்குள்ள இந்த நாய அடிச்சுத்தொரத்தணும் இல்ல குழீல எறக்கீறணும். சொக்காரப்பயலுகள்லாம் என்னைய என்ன நெனெப்பாக…
“அடப் பாவிகளா… பெத்த புள்ளன்னுகூட நெனைக்கமாட்டீகளா?
அதுக்காக எல்லார்ட்டயும் அசிங்கப்படச் சொல்றியா?
இது அவந்தப்பொண்ணும் இல்லியே! இயற்கையா இப்டி ஆயிருச்சு. அவன் என்ன செய்வான். நீங்கதான் புள்ளைய விட்டுக்குடுக்காம நல்லபடிக்கு கொண்டுவரணும்…
“சரி சரி நாங்க பார்த்துக்கிடுதோம். நீ கெளம்பு மொத” என்றனர் வேணு வீட்டில் எல்லோரும் ஒன்று சேர்ந்துகொண்டு….
எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கமாட்டார்கள் போலத் தோன்றியதால் கிழவி ஒரு முடிவுக்கு வந்தாள்.
இரவு ஆளரவமற்ற நேரம் வேணு வீட்டுக் கதவை மெல்லத் திறந்து வெளியேறுவதைப் பார்த்து விட்டாள் கிழவி. சடாரென எதிரில் போய் நின்றாள்..
கட்டுப்படுத்த முடியாமல் வந்த அழுகையை புறங்கையால் துடைத்துக்கொண்டே… “ஆயா என்ன அடிச்செல்லாம் கொல்லல. பால்ல மாத்திரை போட்டு நீயா குடிச்சிருன்னு சொல்லியே குடுத்துட்டாக. நான் சாகமாட்டேன் ஆயா…. எங்கயாவது போயிர்றேன் ஆயா.. ..
ஏன் ராசா… நான் இருக்கேன் ஒனக்கு. வா நாம ரெண்டுபேருமே போவோம்.. என்று வீட்டுக்குள் சென்று தயாராக எடுத்து வைத்திருந்த பெட்டியை ஒருகையில் தூக்கிக்கொண்டு வேணுவை இன்னொரு கையால் ஆதுரமாக அணைத்துக் கொண்டு ஊரைவிட்டே சென்றனர். ஐம்பது வருடங்களுக்கு முன் தன்னையும் இதேபோல் வேறொரு ஊரிலிருந்து காப்பாற்றி அழைத்து வந்த சரவணன் என்கிற சரவணத்தம்மையை இப்போது நினைத்துக் கொண்டாள் பணியாரக்கிழவி.
00

விஜயராணி மீனாட்சி
இராஜபாளையம்
தனியார் பள்ளியில் முன்னாள் ஹிந்தி ஆசிரியர்
உள்ளூர் தொலைக்காட்சி நேரலை செய்தி வாசிப்பாளர்,
தனியார் நூலகத்தில் நூலகராக இரண்டு ஆண்டுகள்.
2016 லிருந்து இலக்கியம் தொடர்பான வாசிப்பு
2017 ல் கலை இலக்கியப் பெருமன்றத்தில் 3 ஆண்டுகள் நகரத் தலைவர்.
பகிர்வு அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினர் மற்றும் ஆலோசகர்.
கவியரங்களில் பங்கு பெறுதல்,
கவிதை , கதை, கட்டுரை ஆகியவை பல மின்னிதழ் , அச்சிதழ்களிலும் வெளியாகியுள்ளன.

