மலையாளம் : வி கே கே ரமேஷ்
தமிழாக்கம் : அரவிந்த் வடசேரி
குப்பைக் கூளங்களுக்கும் பழைய கட்டிடங்களுக்கும் நடுவே நீரற்ற நதிபோல நீள்கிறது தொடர்வண்டித் தடம். அதிர்ஷ்டவசமாக, நகர்ப்புற இரயிலில் மதியக்காற்றினை உள்ளே புக அனுமதிக்கக் கூடிய அளவு தாராள மனம் கொண்ட நெரிசல்தான் இருந்தது. பஞ்சுப் பொதி மேகங்கள்கூட இல்லாத வெளிறிய ஆகாயத்தைப் பார்த்தபடி விமல் அசைவற்று நின்றான். இப்படியான வசதியை இழக்க மனமின்றி, அகன்ற கதவு கொண்ட பெட்டியின் வாயிலிலேயே நீண்ட நேரமாக தொடர்கிறான். புறநகர் இரயிலின் மேற்குப் பாதையில்தான் பயணம். தொடக்கத்தில் மூச்சுமூட்டச் செய்த நெரிசல் போரிவலி தாண்டியதும் பொறுத்துக்கொள்ளக் கூடியதாக மாறியது. காரணம் தெரியவில்லை. முகத்தின் மீது சாய்வாக விழுந்த வெயில், பார்வைக்கு சுவராகத்தான் அமைந்தது. இருப்பினும் சூரிய ஒளி கட்டிட நிழல்களில் அக்கப்பட்டுக்கொள்ளும் இடைவெளிகளில் வலுவைத் திரட்டி வெளியே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் விமல். ஏதோ ஒரு பிடிவாதம் என்பது போல. கடல்காற்றினால் வெளிறிப்போன வண்ணச் சுவர்களைக் கொண்ட அடுக்குமாடிக் கட்டிடங்கள் ஓயாமல் பின்பக்கத்திற்கு பாய்ந்து கொண்டிருந்தன. யானைத் தூண்களின் மேலாக எழுப்பப்பட்டிருக்கும் ஆகாயப்பாலங்கள். அதனடியில், சாக்குமறைப்புகளின் கூடாரங்களில் அழுக்கைத் தொட்டு சாப்பிட்டு, அசதியில் உறங்குபவர்கள். முன்னே செல்லச்செல்ல ஆகாயத்தின் நிறமும் ஒளியும் மாறத்தொடங்கியது. கரை ஓரத்திலிருந்தே ஆழத்தைக் கொண்டிருக்கும் சுயம்புவான துறையின் வாடையும் இரைச்சலும் நெருங்கி வந்துக்கொண்டிருப்பதுபோலத் தெரிந்தது. பிரமையாக இருக்கலாம். படிப்படியாக இருள் பரவியது. அப்பொழுது, உறங்கா நகரம் தொலைவில், ஒளிநிரம்பிய பல்வேறு சதுரங்களாலான நட்சத்திரங்கள் நிரம்பிய இன்னொரு ஆகாயத்தைச் சமைக்கத் தொடங்கியது. வண்டி அதன் இறுதி நிறுத்தத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. ஐந்து நிமிடத்தில் அடைந்துவிடுமென்றது உருவிலி. விமல் கைபேசியை எடுத்தான்.
“வந்தாச்சா? நான் வெளியே இருக்கேன்” கைபேசியின் எதிர்முனையிலிருந்து செய்தி.
வெளியே வந்ததும் அருண் முன்னால் வந்தார். புலன தன்விபரப் படத்திலிருந்த அதே உருவம். சிறிய செவ்வகப் பற்களை பெருமையாகக் காட்டி தாராளமாகச் சிரித்தார் அருண். அதற்கு ஒரு சிறப்பான அழைப்பிதழின் வலு இருந்தது. பி எம் டபிள்யூ மூன்றாவது வரிசைக் கார். சாலைத் தென்றலை கோதி விலக்கி, அலையற்ற நீர்பரப்பின் மீது செல்வதைப் போன்று கார் நீந்திச் சென்றது.
“இது ஒரு வியப்பான சந்திப்பு”, அருண் சொன்னார். அபூர்வமானதொரு சிலிர்ப்பு அதனுள் தெளிவாகத் தெரிகிறது. திடீரென கைபேசி மின்னித் துடித்தது. ஜின்சியின் முகம். கைபேசியினை அணைத்து வைக்க மறந்ததற்கான குற்ற உணர்வில் அவனது முகம் ஒரு கணம் வெளிறியது.
“எனி ப்ராப்ளம்?”, எனக் கேட்டு அருணின் ஒரு பார்வை.
புன்னகைத்து வெளியேற முடிந்தது அதிர்ஷ்டம்.
கடற்கரைக்கு முகம் காட்டி நிற்கும் அடுக்குமாடியின் கார் நிறுத்தத்தில் வாகனம் நிற்கும் வரையிலும் மேலும் எதுவும் பேச இயலவில்லை. ஏழாவது மாடியில் இருந்தது அடுக்ககம். வியாபார பங்குதாரர்களுக்கும் விருந்தினர்களுக்குமாக அருண் செய்திருக்கும் ஏற்பாடு அது. குடும்பம் குடியிருப்பது போரிவல்லியில். இரண்டு குழந்தைகளும் மனைவியும் மட்டுமல்ல, அம்மா, அப்பா அனைவரும் உண்டு.
“சொல்லப்போனா, அப்பாவுக்கு தாத்தா மேல பெரிய மதிப்பெல்லாம் இல்லை. இப்படியொரு விஷயமா நீங்க வர இருப்பதாச் சொன்னபோது, நேர விரயம் எனத்தான் சொன்னார் அவர்.” அருண் மன்னிப்பு கோரும் குரலில் சொன்னார்.
அவ்வப்போது பயன்படுத்தப்படும் அடுக்ககம் ஆனால், பார்வைக்கு அப்படித் தெரியவில்லை. அவசியமானவை மட்டும் தேவைப்படும் இடங்களில் நிறுவப்பட்டிருந்தன. மீதமான வெளி விருந்தினர்களின் தனியுரிமைக்காக திறந்து விடப்பட்டிருக்கிறது. கதவற்ற சமையலறையில் ஃபிரிஜ்ஜும் ஓவனும் மிக்ஸியும் உள்ளது. பழக்கூடையில் பல்வகைப் பழங்கள் நிறைக்கப்பட்டுள்ளது. அத்தோடு ரொட்டியும் பக்கத்திலேயே திறக்கப்படாத ஒரு ‘பீ நட் பட்டர்’ குப்பியும் இருந்தது. தேநீர் தயாரிப்புக் கருவிகள் அலமாரியினுள் இருந்தன. அதைத் திறந்து காட்டினார்.
“எழாம் தேதி எனக்கொரு விருந்தினர் இருக்கிறார்” அருண் மன்னிப்புக் குரலில் நினைவூட்டினார்.

“அது பரவாயில்லை, அதற்குள் முடிந்துவிடும். எனக்கு அதையெல்லாம் ஒருமுறை பார்த்தால் போதும்,” விமல் சொன்னான்.
நினைவிற்கு வந்தவனாக அருண் அலமாரியைத் திறந்து பழமைவாய்ந்த நாட்குறிப்பு ஒன்றை எடுத்து மேஜையின் மீது வைத்தார்.
“சொன்னேனில்லையா, தாத்தாவின் இது போன்ற சேமிப்புகளை சும்மா ஒரு விருப்பத்துக்காக நான் சேர்த்து வைத்திருக்கிறேன். அதற்காக வீட்டிலிருந்து பலமுறை பழிக்கு ஆளாகியிருக்கிறேன்.”
சரிதான், இந்தக் காலத்தில், தோற்றவர்களின் கணக்குக் குறிப்பேடுகள் யாருக்கு வேண்டும்?
“சுமேஷைப் பார்க்க வேண்டாமா? சண்டே மதியம் வரைக்கும் ஃப்ரீ பண்ணிக்கறேன். அவனை இங்கே கூப்பிட்டுப் பாக்கலாம்,” அருண் சொன்னார்.
சுமேஷ் அழைப்பை ஏற்கவில்லை. பயல் வேலையாக இருப்பானாம். அவன் வழியாகத்தான் அருணின் அறிமுகம் கிடைத்தது. மும்பை போன்ற மிகப் பெரிய நகரத்தில் இருக்கும் ஒருவரை கண்டுபிடிப்பது கேரளாவில் இருக்கும் விமலுக்கு தனியொருவனாக இயலாதது. பெரிய தேடல் எதுவுமின்றியே சுமேஷிர்க்கு அருணை கண்டுபிடிக்க முடிந்தது அதிர்ஷ்டம். இயல்புபடி தன்னுடைய வேலை நெருக்கடிகளுக்கு மத்தியில் இதுபோன்ற வேலைகளுக்கெல்லாம் சுமேஷ் ஒத்துக்கொள்வதில்லை. படித்துக் கொண்டிருந்த நாட்களிலேயே அவனது இயல்பு அப்படித்தான்.
“டேய் விமல், படுத்துக் கிடக்கும் வியாபாரத்தை எப்படியாவது தூக்கி நிறுத்தப் பார்க்காமல் செத்துப்போன தாத்தா தோற்றதற்கான காரணம் தேடப்போகிறாயா? உனக்கு இது என்ன வகையான அரிப்பு!”
தொடக்கத்திலேயே அவன் சொன்னது இப்படித்தான். தவிர்க்க முனைந்தான் எனினும், நான்காவது நாள் அவன் அருணைக் கண்டுபிடித்தான்! மலையாளி சங்கக்காரர்களில் சில பழைய ஆட்களைச் சந்தித்து, அவர்களிடமிருந்து தலைமுறைகளின் இடைவெளியை நீக்கி அவன் மூன்றாவது தலைமுறையினைக் கண்டடைந்தான்! பெரிய ஆள்தான்! நிச்சயமாக, எனக்குப் பதிலாக இவனைப் போன்றவர்கள்தான் டாடிக்கு பிறந்திருக்க வேண்டியவர்கள்.
“விமல், உன் தாத்தாவின் வியாபாரக் கூட்டாளி வாசுதேவனின் பேரனை நான் கண்டுபிடித்து விட்டேன். அவன் நல்ல நிலைமையில் இருக்கிறான், உன்னை மாதிரி இல்லை.”
அருணின் புலன எண் அனுப்பியதும் எல்லாம் எளிதாகியது.
“நான் அச்சுதன் குட்டியின் கிரான்ட் சன். உங்களுடைய தாத்தா வாசுதேவனின் வியாபார பங்குதாரர் அல்லவா அச்சுதன்குட்டி.”
முதல் குரல்குறுஞ்செய்திக்கு வெறுமனே ஒரு வியப்புக்குறி மட்டுமே அருணின் பதிலாக இருந்தது. இதமற்றதாகத் தெரிந்தது. ஆனால், தான் ஒரு கூட்டத்தில் இருப்பதாகவும் திருப்பி அழைப்பதாகவும் தொடர்ந்த மறுமொழி வந்ததும் சந்தேகம் விலகியது. சொன்னதைப் போலவே சில மணிநேரங்களுக்குள் அழைப்பு வந்தது.
பம்பாயின் ஆதிகால மளிகைக் கடைகளில் ஒன்று தாத்தாவுடையது. சரியாகச் சொன்னால் ‘மக்களின் கடை’ எனத்தான் சுமேஷ் சொல்லியிருந்தான்.
“மும்பாதேவி ஸ்டோர், நான் கேள்விப்பட்டிருக்கிறேன்” அருண் சொன்னார்.
“அருண், என் தாத்தா தோற்றுப்போனதன் கதைகள் மட்டும்தான் வீட்டிலிருந்து கேட்டிருக்கிறேன். கேரளாவிலிருந்து ஒரு ஆள் பமபாய்க்கு வந்து ஒரு வணிக நிறுவனம் நடத்துமளவுக்கு வளர்ந்தார் எனில் அவர் எப்படி முட்டாளாக இருக்க முடியும்?” விமல் விளக்கினான்.
பதிலாக எதிர்முனையில் அருணின் சிரிப்பு ஒலித்தது.
“அது இருந்த இடத்தில் இப்போது மும்பை டிரேடிங் கம்பெனியின் கட்டிடம் இருக்கிறது,” அருண் சொன்னார்.
நேரில் வந்து தகவல்களைத் திரட்ட வேண்டுமென விமல் விருப்பம் தெரிவித்தான்.
அருணுக்கு கொஞ்சமும் தயக்கம் இருக்கவில்லை. தன்னிடம் தாத்தா வாசுதேவனுடையது எனச் சொல்லிக்கொள்ளும்படி ஒரே ஒரு டயரி மட்டும்தான் இருப்பதாக அவர் தெரிவித்தார். முன்னர் எப்போதோ ஒரு காலத்தில் அதைத் திறந்து பார்த்திருக்கிறார். இப்போது அலமாரிகளில் ஒன்றில் குளிர்முடங்கலில் உள்ளதாம். அதில் இருவரும் ஒன்றாக நிற்கும் புகைப்படம் உள்ளது. ஒரு ‘ஸ்டுடியோ பீஸ்’.
சிறு வயதில் பழைய பொருட்கள் போட்டு வைத்திருந்த பரண் மீது விளையாட ஏறியபோதுதான் விமலுக்கு தாத்தாவின் ஃபிரேம் போட்ட படம் கிடைத்தது. கோட்டும் டையும் அணிந்த ஒரு அழகன். பென்சில் மீசை. மெல்லிய இதழ்களுக்கு நடுவே முடிவிலியெனத் தோன்றும் புன்னகை. தனக்கு இருப்பதைப் போன்றே நெற்றியின் மீது புரளும் முடி. யாராக இருக்கும்? ஆர்வம் மேலிட்டது.
“மம்மீ, இது யாரு?”
விமல் படத்தை தூக்கிக் காட்டிக் கேட்டதும் அம்மா வெளிறினாள்,
“கடவுளே, யாரைக் கேட்டு இதை எடுத்தே? உங்க அப்பா பாத்தா, இது போதும்.”
அப்படித்தான் அது தாத்தாவின் படம் என்பது தெரிந்தது. தாத்தாவின் மீதான அப்பாவின் தீராத கோபம் குடும்பத்தில் ஒளிவு மறைவற்றது.
“விமல், குடிப்பீங்களா?” விடைபெறும் முன்னர் அருண் கேட்டார். “வேண்டுமென்றால் அலமாரியில் உள்ளது. விஸ்கி மட்டும்தான்.”
வேதனை கலந்த புன்சிரிப்புதான் விமலின் பதிலாக இருந்தது.
உணவு தருவிக்கும் ஆப்பின் லிங்க் அருண் ஷேர் செய்தார். ஏறக்குறைய அனைத்தும் சரியானதும் அருண் கிளம்ப ஆயத்தமானார்.
“பல அவசர வேலைகள்.” தீவிரத்தை மறைத்து விளையாட்டாக அருண் சொன்னார். “தொட்டால் கை நழுவிப் போவதுதானே மீன். அதன் ஏற்றுமதி வியாபாரமாக இருந்தால் தொடாமலே கூட நழுவிவிடும். “
கிளம்பும் முன் அருணை சுமேஷ் அழைத்தான். அது நல்லதுதான், தனக்கு அவனை அழைக்கவேண்டியது இல்லையே என விமல் ஆறுதலடைந்தான். கைபேசியைத் திறந்ததும் ஜின்சியின் அழைப்பு வரும். சுமேஷின் ஞாயிறை முதலிலேயே எங்களுக்காக பதிவு செய்த பிறகுதான் அருண் கைபேசியை விமலிடம் தந்தார். “உன் ஆளுகிட்டே கொடுக்கறேன்” என்றபடியே.
அலுவலக நெருக்கடிகள் காரணமாக விமல் வரமுடியாமல் போனதால் அருண் தானே என்னை கவனிக்க ஏற்றுக்கொண்டு விட்டாராம். குறைந்த சில நாட்களிலேயே அவர்கள் நெருங்கிய நண்பர்களாகி இருந்தனர்!
“டேய், உன்னோட அகழ்வாராய்ச்சி என்னைக்கு தீரும்” சுமேஷ் கேட்டான். நகைச்சுவையில் மறைத்த விருப்பமின்மை.
மனுஷன் இப்பவே ஒரு கண்ணை டயரியின் மீது வைத்து வேலையைத் தொடங்கிவிட்டார் எனச் சொன்னார் அருண். டயரி எனக் கேட்டதும் சுமேஷ் வாய்விட்டுச் சிரித்தான்.
“ஓ, அந்த வாழ்க்கையின் உள்ளாடை கிடைத்துவிட்டது அல்லவா, நல்லது! எப்படியும் பட்டறிவு மூத்திரத்தின் கடைசிச் சொட்டு உள்ளாடைக்கு உரியது அல்லவா.. சரி, சண்டே நேரில் சந்திப்போம்” எனச் சொல்லி அவன் பேச்சை முடித்தான். தேவையெனில் மெசேஜ் அனுப்பவும் சொன்னான்.
அருணும் உடனே கிளம்பினார்.
“சண்டே பாக்கலாம். ஏதாவது தேவைன்னா கூப்பிடுங்க.”
எல்லோரும் சென்றதும் விமல் தனியாள் ஆனான். வெளிப்புற காட்சிகளுக்காக கதவின் திரைச்சீலையை விலக்கியதும் அரபிக்கடல் முன்னால் வந்தது. ஏழு தீவுகளின் நகரம் பின்னால் ஒளி சிந்துவதற்கு நிகராக கடலும் மின்மினிகளைக்கொண்டு விளையாடியது. படகுகளாக இருக்கலாம்.
சிறிது நேரம் சென்ற பிறகு, கொண்டுவந்திருந்த பயணப்பையிலிருந்து துண்டும் சோப்பும் எடுத்து குளியலறைக்கு நடந்தான். ஷவரிலிருந்து தண்ணீரின் முன்களக் குழு பறந்து வந்ததும் முடி நெற்றிக்கு வந்தது. முகம் தாத்தாவின் முகமாயிற்று. பதின்பருவத்திற்கு வளர்ந்தபோதே நெற்றியின் மீது புரளும் கேசம் மட்டுமன்றி, உடலமைப்பும் தாத்தாவிடமிருந்து விமலுக்கு படியெடுத்து கிட்டியது.
“கிழம் எப்படி உள்ளே வருது பாரு, என்னை முடிக்க”, டாடி யாளியைப் போன்று காற்றில் கோபத்தை துப்பினார். விமல் அவரின் முன்னால் வர நேரும்போதெல்லாம் அவர் தன்னிலை இழந்தார்.
“நீ அழாதே கண்ணா, தாத்தாவைப்போல மோசமா போயிடக்கூடாதுன்னுதானே டாடி சொல்றாரு.” அம்மா ஆற்றுப்படுத்துவார்.
தாத்தா செய்தது ஏதோ ஒரு பெரிய கெடுதலாக இருக்கவேண்டும்.
சிறு வயதில் பம்பாயிலிருந்து அம்மாவுடன் இரயிலில் திரும்பிவந்த கதையினை டாடி மம்மியிடம் சொல்வதை அவன் ஒரு முறை மறைந்து நின்று கேட்டிருக்கிறான். தாத்தா சிறைக்கு போவதற்கும், பிறகு கடையை குஜராத்திகள் கையகப்படுத்துவதற்குமெல்லாம் சிறு வயதிலேயே சாட்சியாக நிற்க வேண்டியிருந்தது டாடிக்கு.
“குழந்தை பசியாக இருக்கும்போல.” ஊருக்கு கிளம்புவதற்கு முதல்நாள், குஜாராத்தி ஒருவர் அனுதாபத்துடன் சாப்பிட எதையோ எடுத்து நீட்டினாராம். இரயிலேறி ஊர் வந்து சேரும் வரையிலும் வேறு எதுவும் கிடைக்கவும் இல்லையாம். கட்டின புடவை மட்டுமாகத் திரும்பி வந்தபோது அம்மாவின் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டதே அதிர்ஷ்டம் எனலாம். அதன் பிறகு, டாடி தாததாவைப் பார்த்ததே இல்லை. சிறையிலிருந்து திரும்பி வந்த பிறகு அவர் எங்கே சென்றார் என்பது யாருக்கும் தெரியவில்லை.
“அம்மாவோட வாழ்க்கையையும் சேர்த்து அழிச்சுட்டான், அடி முட்டாள். தன்னோட வாழ்க்கையை மட்டும் பாத்துகிட்டு எங்கேயாவது சந்தோஷமா இருப்பானா இருக்கும், பாவி.”
“தாத்தாவுக்கு என்ன ஆச்சு?” விமல் அம்மாவிடம் ஒருமுறை கேட்டிருந்தான்.
அம்மா தனக்குத் தெரியாதென கைவிரித்தார். அவருக்கு தாத்தா என்றால் டாடியின் தீராத கோபம் மட்டும்தான்.
அதனால்தானோ என்னவோ அம்மா எச்சரித்தார் “அவரைப்பத்தி பேசாதே.”
ஆனால், சிறு வயதில் தோன்றிய ஆர்வமெல்லாம், காலம் கடந்ததும் காணாமல் போனது. பரணிலிருந்த படத்தை மறந்தான். உயர் கல்வி தொடங்கியதும் எப்போதும் நட்பாக இருந்த பலவிதமான தோல்விகளால்தான் நினைவுகள் அனைத்தும் மீண்டு வந்தன. தாத்தாவின் படத்தைக் காண ஆசை எழுந்தபோதும் இயலவில்லை. பரணிலிருந்த படம் மட்டுமல்ல பரண் முற்றிலுமாகவே கைவிடப்பட்டிருந்தது. நினைவில் தங்கியிருந்த உருவப்படத்தை எண்ணெய் போட்டு துலக்குவதைத் தவிர வேறொரு வழியும் இருக்கவில்லை. அது போதவில்லை எனும் எண்ணம் எழும்போது தன்னுடைய உடலிலேயே தாத்தாவை உருவாக்குவான். தலைமயிர் நெற்றியில் விழச் செய்தான். போதாதற்கு எழுபதுகளின் பெல்பாட்டம் கால்சட்டையும் டிஸ்கோ உருவமும். தாத்தாவிடமிருந்து இதையெல்லாம் ஏற்றுக்கொள்வதைப் போன்ற எண்ணத்தில் எழுந்த மகிழ்ச்சி பயங்கரமாக இருந்தது. எந்தத் தோல்வியையும் ஆற்றுப்படுத்த போதுமான ஊக்கமருந்து. சில மகிரிஷிகளைப் போன்று அப்பா சாபங்களை சரமாரியாகப் பொழிந்தபடி இருந்தார். குறிப்பாக விமல் கடந்துசெல்லும் பாதைகளில்.
“போதாமைகளை எதிர்ப்பு என்பதாக சித்தரிப்பதை கவனித்தாயல்லவா, இப்படித்தான் அவன் தாத்தாவும்.”
எங்களுக்கு நடுவே இழுவை இயந்திரத்தில் மாட்டிக்கொண்டது பாவம் அம்மாதான்.
“நம்ம ஜூவல்லரியிலேயே வேலை செய்யட்டும்.” எம் பி ஏ முடித்து வந்ததும் அப்பாவின் அறிவுறுத்தல் வந்தது. அம்மாவின் வழியாக அது விமலின் முன்னால் வந்தது. ஜூவல்லரியின் சூழல் பிரச்சனையற்றதாகத்தான் இருந்தது. கடலுக்கு மிதந்து செல்லும் கண்டங்களைப் போன்று பல வடிவங்களில் கீழே சென்றுக்கொண்டிருக்கும் நகைகளின் வடிவங்களைப் பார்த்துக் கொண்டிருப்பது வசீகரமானது. வடிவ நேர்த்தியைப் பார்த்துக் கொண்டிருந்தால் நேரம் போவது தெரியாது. கேபினுள் அவன் உட்கார்ந்து தூங்குகிறான் என்பதாக தொழிலாளர்கள் எண்ணினார்கள். நம்பிக்கையானவர்கள் அதை டாடியின் காதில் போட்டனர்.
“கோயமுத்தூர் எம் பி ஏ தானே? வேலைக்காகாதவன். என் ஆசைகளையெல்லாம் நாசமாக்கினவன். தாத்தாவைப் போலவேதான். தலையெழுத்து. ஜென்மத்தின் இரண்டு பக்கமும் துன்பம் எனக்கு!” டாடி தலையில் அறைந்துக்கொண்டார்.
மரணத்தை நெருங்கும்போதுதான் மனிதர்களுக்கு பிள்ளைகளை எண்ணி, பெரிய கவலை எழுகிறது. காலத்தை வெல்ல பிளவை சேர்த்து கட்ட பாரம்பரியம் எனும் கயிர் வேண்டும். சரடு அறுந்தால் வாழ்க்கை வெட்டவெளிக்குள் விழுந்து விடும், அதைத் தாங்கிக்கொள்ள யாரால் முடியும்?

ஒரு நாள், உடலின் இடது பக்கம் தளர்ந்து கீழே விழும்போது டாடி சீர்குலைந்த குரலில் அழைத்தது விமலைத்தான். சொன்னது எதுவுமே புரியவில்லை. தன்னுடைய நிறுவனங்கள் அனைத்தையும் அவனுடைய தோளில் ஏற்றித்தருவதாக ஒற்றைக் கையின் செய்கைகளிலிருந்து புரிந்தது. இறுதியாக முகத்தில் தெளிந்தது “நீ அனைத்தையும் அழித்து விடுவாயே” எனும் நலிந்த குரலின் அருவருப்பு.
சாதாரணமான ஒரு குளியிலறையினால் குளிர்விக்க முடியக்கூடியது அல்ல தனது வெக்கை. வெளியுடுப்பைத் தவிர்த்து வெறுமனே வேட்டி மட்டும் கட்டிக்கொண்டு டயரியின் முன்னால் வந்தான். குருட்டு தைரியத்திற்கு அறுபது மில்லி விஸ்கி. பட்டுப்போல அது குடலுக்கு சுழன்று இறங்கியபோது தலை மெல்ல மலர்ந்தது. புராதன தோல் டயரி அது. தன்னுடைய காலத்திற்கு பிறகும் வேறு பலருக்காகவும் அது நிலைத்திருக்க வேண்டும் என உரிமையாளருக்கு பிடிவாதம் இருந்ததென்பது உறுதி. அருண் சீராக பாராமரித்துமிருந்தார். யாருக்கும் தேவையானது அல்ல என்பது ஏறக்குறைய உறுதியான பிறகும் டயரி சேதமின்றி தொடர்ந்தது. வெளியே மாட்டியிருந்த சாவியின் கைவேலையில் கொஞ்சமும் பூசனம் பிடிக்கவில்லை. அவ்வப்போது சுத்தம் செய்வாராக இருக்கும். ஆனால், விரித்ததும் பழமையின் வாசம் பொங்கியது. தொள்ளாயிரத்து எழுபத்து ஐந்தின் தேசநெடி அது. மௌனத்தின், வெடிமருந்தின் நாற்றம். திறந்த டயரியின் சாவி மேஜையின் மீதிருந்து கீழே தொங்கிக்கொண்டிருந்தது. இரத்தக்கறை படிந்த சிறைக் கம்பிகளில் பிணத்துணி தொங்குவதைப் போல. பக்கங்கள் கையால் செய்த காகிதத் தாள்களாக இருந்தன. வெண்மை மங்கத் தொடங்கியிருந்தாலும் எழுத்துக்களின் வடிவம் சிதைநதிருக்கவில்லை. முதல் வாக்கியம் இப்படி இருந்தது:
“தேதிவாரியாக அல்ல.”
தினசரிக் குறிப்புகளல்ல என்பது தொடக்கத்திலேயே புரிந்துகொள்ள வேண்டும் எனும் கட்டாயம் இருப்பதைப் போல. நினைவுகளின் அழியாத கோடு போல அது தொடர்ந்தது. தொடரக்கூடிய பின்னணிகளையும் எதிர்பார்த்து :
“ஊரிலிருந்து அச்சுதன்குட்டி வந்தது குடும்பத்திலிருந்து கிடைத்த பங்கையும் எடுத்துக் கொண்டு. போதாதற்கு பட்டமும் உண்டு. ஆங்கிலம் பேசுவதைக் கேட்டால் எதிரிலிருப்பது துரையோ என நினைக்கச் செய்யும். வணிகம் செய்யும் கனவுகளுடன் வந்த நான், வெறும் கையுடன் வந்து சேர்ந்தவன். படிப்பிலும் மோசம். ஜுஹு பீச்சில் எதிர்பாராமல் சந்தித்து, நண்பர்களானவர்கள் நாங்கள். கடந்த நூற்றாண்டிலேயே புகழ் பெற்றிருந்த துரையின் பெயர் கொண்ட மார்க்கெட்டில் கடை போடவேண்டுமென்பது அவனுடைய கருத்துதான். ஒரு சாதாரண பெட்டிக்கடை அளவிற்கு கனவு காணும் திறன் மட்டுமே எனக்கு இருந்தது. ‘கேட்டுக்கோ, ஏழைகளுக்கு உதவியா இருக்கணும்’. அச்சுதன்குட்டி சொல்வான். அப்படியானதாக இருந்தது அவனுடைய நடைமுறைகள். அனைத்து வகையிலும் சேரி மக்களின் கடையாக இருந்தது அது. பெரும்பாலும் புத்தகத்தில் கணக்கு எழுதுவதுதான் வழக்கம். போகப்போக கடை படுத்து விட்டது.
அந்நேரம்தான் அவன் துறைமுகத்தில் ஏதேதோ வியாபாரங்கள் மேற்கொண்டான். அவை என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால், அதிலிருந்து கிடைத்த பெரும் இலாபத்திலிருந்துதான் கடை பிரச்சனையின்றி நடந்தது. பெரும்பாலும் நான்தான் கடையில் இருப்பேன். அநேகமாக எல்லா இரவுகளிலும் நான் திரைப்படம் பார்க்க போவேன், அவன் வரமாட்டான். சேரி மக்களிடம் தீர்ப்பு சொல்ல பல்வேறு பிரச்சனைகள் இருந்தன. அதற்கு பல நாட்களில் இரவு பகல் வேறுபாடுகூட இல்லை. அங்கேயேதான் அவனுடைய கல்யாணமும் நடந்தது. ஊரிலிருந்து தாலிகட்டிக் கொண்டுவந்த பெண்ணை சேரி மக்களின் முன்னிலையில் மீண்டும் கட்டினான். என்னுடையதும் இதன் நடுவே எப்போதே நிகழ்ந்தது. குடும்பமென்று ஆன பிறகும் அவன் நடவடிக்கைகள் மாறவில்லை. ஆனால் எனக்கு கயிறு விழுந்தது. ‘எப்போதும் இப்படியே இருந்தால் போதுமா?’ மனைவி என்னை குறை சொல்வாள். அப்படியிருக்கையில்தான் அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
போலீஸ் பூட்சுகளின் தொடர் சத்தங்கள் நிலாவை நோக்கி நிறுத்தாமல் கல்லெறிந்தன. இரவு சினிமாவுக்கு போகக் கூட பயம். நடப்பிலிருப்பது மிசா உட்பட்ட இரண்டு கருப்புச் சட்டங்கள். சந்தேகத்தின் பேரில் விசாரணையின்றி யாரையும் உள்ளே போடலாம், வதைத்துக் கொல்லலாம். பக்கத்திலேயே கடல் இருப்பதால் பிணமும் ஒரு பிரச்சனை அல்ல.
இதனாலெல்லாம் அச்சுதன்குட்டியின் சேரிப் பயணங்கள் மாறவில்லை. பல காரணங்களுக்காகவும் போலீசாரின் கண்காணிப்பில் இருந்தான் அவன். எனக்கு அது தெரியவர சிறிது தாமதம் ஆனது. அப்பொழுதுதான் அரசாங்கம் சேரிகளை காலி செய்யும் நடவடிக்கையினைத் தொடங்கியது. அத்தோடு அனைத்தும் வெட்டவெளிச்சமானது. அவனை வெளிப்படையாக தேடத்தொடங்கிய போலீசார் அடிக்கடி கடைக்கு வந்துபோவது வழக்கமாகியது. ‘பாத்து நடந்துக்கோ, உன் கடை மேல சில பேருக்கு கண்ணு இருக்கு. அது கைவிட்டுப் போயிடும், பாத்துக்கோ.’ சில
போலீஸ்காரர்கள் எச்சரித்தனர். ‘சீக்கிரமா கடையை உங்க பேருக்கு மாத்தற வழியைப் பாருங்க. அந்த மனுஷன் தன்னைத்தானே அழிக்கக் கிளம்பினவன். அதில தலையை சிக்க வெச்சுறாதீங்க.’ எனக்கு பார்யாளின் தாக்கீது நிரந்தரமானது. நேரில் பார்த்தால் அவனிடம் சொல்ல ஆயிரம் இருந்தது. ஆனால் அச்சுதன்குட்டி எங்கே என்பது அவன் மனைவிக்கே தெரியவில்லை. அவன் மனைவி சரியான நாட்டுப்புறம். பாம்பே என்னவென்றே அந்தப் பாவத்துக்கு தெரியாது. அப்புறம்தானே நாட்டுநடப்பு விவகாரம். மொழிகூட சரியாகப் பேசத் தெரியாது. மகனாகட்டும் சிறு குழந்தை. அச்சுதன்குட்டி இல்லையெனில் குடும்பத்தின் கதி அதோகதியாகிவிடும்.
ஒரு நாள் இரவு அவன் பார்க்க வந்தபோது குடும்பத்தை வீதிக்கு கொண்டுவந்து விடாதே என நான் கெஞ்சிக் கேட்டுக்கொண்டேன். மாறா நம்பிக்கையின் வழக்கமான வலுவில் அவன் வெறுமனே புன்சிரிக்க மட்டுமே செய்தான்.
வாழ்க்கையிலிருந்து தனது போதாமைகள் மேலெழுந்து வந்ததுபோல விமல் உணர்ந்தான். வேற்றுமை ஏதுமின்றி காலங்கள் சேர்ந்து ஒன்றானதுபோன்று. பயணத்தடங்களின் தவறுகள் செய்யத் தூண்டும் பொறிகள்தான் இந்தக் கால பல்லுருவ முதலாளிகளின் வலு. யாத்திரையே வீழ்ச்சிக்கு வழிகோலும்போது நிகழ்ந்தது தவறு என்றன்றி விழச்செய்தது பொறி என்பதைக்கூட பயணி அறிந்துகொள்ள இயலாது. தலை கனக்கிறது. டயரியினை மூடி வைத்து கண்மூடிக் கிடந்தான். பசியில்லாததால் அதற்கான வழிகள் எதையும் பார்க்க வேண்டியதில்லையே..
உறக்கம் முழுவதும் தாத்தா நிரம்பயிருந்தார். உறக்கம் எனச் சொல்வதற்கில்லை, விழித்திருக்கையில் இருந்த எண்ணங்கள் தொடர்வதுபோலத் தோன்றியது. எழுந்ததும் உறங்காமல் விழித்திருந்ததை விட இரண்டு மடங்கு அயர்ச்சி. தொலைதூரக் காட்சியின் மேற்கு வாசலைத் திறந்தான். கடல் பறவைகளின் கூட்டுக் கூக்குரல் காது துளைக்கிறது. விரவிய காற்றில் பரவலாக கடற்கரை வீச்சம். கதவைச் சாத்தி பின்வாங்கினான். டீ போட்டுக் குடித்தான். மேஜையின் மீது டயரி அதேபடிக்கு திறந்திருந்தது. குளியல் கட்டாயமில்லை என்பதால் பல் விளக்கி உணவுக்கு செயலி வழியாக உத்தரவிட்டான். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. சுமேஷைப் பார்க்கும்முன் வேலைகள் அனைத்தையும் முடிக்கவேண்டும். கொங்கண் கடற்கரையின் விரிந்த ஆகாயம் உப்புக்காற்றின் திரைச்சீலைக்கு மறுபக்கம் கடலுக்கு மேலாகத் தெரிகிறது. தானாகவே இரட்டிக்கும் வெப்பம். காலுக்கு கீழிருந்து எப்பொழுதும் பொங்கி வரும் புழுக்கம். எல்லாமாகச் சேர்ந்து பெரும் சலிப்பு தோன்றியது. பூமியில் தேவைக்கும் அதிகமாக தங்கியது போன்ற எண்ணம். நேர்ந்த தோல்விகளும் சுமந்துக் கொண்டிருந்த குற்ற உணர்வும் நகைப்பிற்குரிய தேடலும் எதுவும் இப்பொழுது அவ்வளவு முக்கியமானதாகத் தோன்றவில்லை. இருப்பினும் ஊருக்கு திரும்பவேண்டும் என எண்ணும்போது ஒரு வகை அழுகை வந்தது. அது எதற்கு! முழுமையான உண்மையே, சொல், அமைதியின் தேவதை குடியிருப்பது எங்கே? என்னால் முடியவில்லை. பிறந்ததற்கான தண்டனை என்பதைப்போல பட்டு தீர்த்துக் கொண்டிருக்கும் வாழ்க்கைச் சுமையை இறக்கி வைத்தால் போதும் என்றாகிவிட்டது. தாத்தாவின் தோல்வியின் காரணத்தை அறிந்துக் கொள்வதற்கான பயணம் இது. ஆமாம். ஆனால் அத்தோடு முடிந்து விடுமா வாழ்வின் அழல்?
கட்டவிழ்ந்து போகின்ற துயரத்தின் பசுக்கள் எல்லாம் இறுதியில் குற்ற உணர்வின் தொழுவத்திலேயே கட்டப்படுகின்றனவே! என்ன செய்வதென்று தெரியாத ஒரு பலவீன நிமிடத்தில் கைபேசியினை ஆன் செய்தான். பல விதமான அறிவிப்புகளை வீணே செலவு செய்து புலனம் பிடிவாதமாக நடுங்கி ஒலித்தது. பலமுறை அழைத்தமைக்கான அறிவிப்புச் செய்திகள். பெரும்பாலும் ஜின்சியிடமிருந்து. பலதடவைகள் பேசிப் பதிவிட்ட குரல் குறுஞ்செய்திகளால் நிறைந்திருந்தது புலனம். திறந்து கேட்கும் துணிவு வரவில்லை. இருப்பினும் நடுவிலிருந்த ஒன்றின் மீது விரலால் அழுத்தினான்.
“என் கண்ணா விமல், நீ எங்கேதான் போயிட்டே? எல்லாத்தையும் என் தலையில போட்டுட்டு விட்டுப்போக உனக்கு எந்த அதிகாரமுமில்லை. ரொம்பக் கஷ்டம் டா.”
அடுத்த செய்தி வேறொன்றைச் சொல்லிற்று:
“மம்மி ஒரு சொட்டு தண்ணி குடிக்கல. ஒரு நொடி கண் மூடல, தெரியுமா? டாடிக்கு சொல்லல. எனக்கு தெம்பில்லை. அப்புறம், என்னை உனக்கு வேண்டாம் தானே? நம்ம நல்ல நாட்கள் ஒன்று கூட உன் நினைவில் இல்லைன்னு தெரியுது. இருந்திருந்தா இப்படிச் செய்யமாட்டே. எவ்வளவு தடவை கூப்பிட்டேன். ஃபோன் எடுக்கலையே.. நீ யாருக்கிட்டே இருந்து தப்பிச்சு ஓடறே?”
அதற்கடுத்த செய்திகள் தொடாமலே திறந்தன:
“ஜூவெல்லரி உட்பட மூன்று நிறுவனங்களின் கடன்கள் எவ்வளவுன்னு தெரியுமா உனக்கு? வக்கீல் அங்கிள் கணக்கு சொன்னபோது எனக்கு நிஜமாவே தலை சுத்திச்சு. இவ்வளவு சீக்கிரம் எப்படி இப்படியாச்சு விமல்? இதை யார் கிட்டயும் சொல்லாமலிருக்க உனக்கு எப்படி மனசு வந்துச்சு? டாடி சொன்னதெல்லாம் சரிதான். நீ எல்லாத்தையும் அழிக்கப் பிறந்தவன். உன் தாத்தாவைப் போல. அவர் ஜெயிலுக்கு போயி தப்பிச்சாரு. நீ என்ன பண்ணப்போறே?”
சிறிது நேரம் சும்மா இருந்தான். முழுவதும் மரத்துப் போனால் வாழ்க்கை கடுமையானது அல்ல. பிற செய்திகளையும் கேட்போம். பல நேரங்களில் வந்து சேர்ந்தவை.
“எனக்கு பயமா இருக்கு விமல். எனக்கு இங்கே யாருமே இல்லைன்னு தெரிஞ்சது நீ போன பிறகுதான். எனக்கு நீ வேணும் விமல். நீ எங்கே இருக்கே?”
“நான் நிதின் அண்ணாவைக் கூப்பிட்டேன். உனக்குத் தெரியுமில்லையா? ‘ரா’ வில இருக்கார். என்னால தனியா இதெல்லாம் மேனேஜ் பண்ண முடியாது விமல். பல உடனடி முடிவுகளுக்கும் வக்கீல் அங்கிள் என்னோட சம்மதத்தைக் கேக்கறாரு. ஆனா எனக்கு பதில் சொல்ல துணிவு இல்லை. நீயே போதுமான அளவு பிரச்சனை பண்ணி வெச்சிருக்கே. நானும் ஏதாவது முட்டாள்தனம் பண்ணக்கூடாது.. அண்ணன் நாளைக்கு ஃப்ளைட்ல நெடும்பாசேரிக்கு வருவாரு. நீ மிஸ்ஸிங்னு நான் இன்னமும் சொல்லல. ப்ளீஸ், நீ எங்கே இருக்கேன்னாவது சொல்லு. அண்ணாகிட்டே இப்போதைக்கு நான் ஏதாவது சொல்லிக்கறேன். உண்மையெல்லாம் நீ வந்தபிறகு. சீக்கிரம் வா. அண்ணா நமக்கு சாதகமா விஷயங்களை நகத்துவாரு. இருந்தாலும், நீ இல்லாம என்னால முடியல விமல். நீ ஒரு வாட்டி கால் பணனேன்.”
உணவு அழைப்புமணி ஒலிக்கச் செய்தது. மொழி தெரியாதவனுக்கு தாராளமாக டிப்ஸ் கொடுத்து வழியனுப்பினான். சூடான தென்னிந்திய உணவு. இருந்தாலும் சாப்பிடத் தோணவில்லை. வயிறு நிரம்ப குற்ற உணர்வின் அமிலம்.
உணவுப் பொட்டலத்தைத் திறக்காமல் அப்படியே மேஜையின் மீது வைத்தான். கைபேசியை அணைத்து வைத்து, விமல் டயரிக்கு முன்னால் அமர்ந்தான். நேற்று வாசித்து வைத்ததிலிருந்து பல பக்கங்கள் காலியாக உள்ளன. வாழ்க்கைக் கதைகளுக்குகூட உள்ளன நடுவே பெரிய இடைவெளிகள். சிறிது நிம்மதியாக இருந்தது. அது ஏன்!
“துறைமுகத்தில்தான் அச்சுதன்குட்டியின் கைது நடைபெற்றது. அத்தோடு அங்கே சுற்றலில் இருந்த எங்களது முதலீடு ஒரே நொடியில் ஆவியானது. ஜெயிலுக்கு போகிறவர்களின் முடிவு சாவுதான் என்பதை அறியாதவர்கள் இல்லையல்லவா வியாபாரக் கூட்டாளிகள். அவர்களில் யாராவதுதான் போலீஸுகக்கு துப்பு கொடுத்திருக்க வேண்டும். பல நாட்களாக அச்சுதன்குட்டி வீட்டிற்கு வராமல் போனதும் அவனுடைய மனைவி கடைக்கு வந்தார். நான் அப்பொழுது இயன்ற வழிகள் அனைத்தும் மூடியதின் வருத்தத்தில் தனியாக உட்காரந்திருந்தேன். சரளமாக இந்தி பேசக்கூடத் தெரியாத அவரும் ஐந்து வயது மகனுமாக பல காவல்நிலையங்களுக்கும் போய்வருவதை என்னால் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று.
அனைத்து தீவினைகளும் அத்தோடு முடிந்துவிடும் என்பது எனது வெற்று நம்பிக்கை. அவனுடைய குடும்பத்தையும் சேர்த்து பராமரிக்க முடியும் எனும் நம்பிக்கை இருந்தது. அவசரநிலையெல்லாம் விரைவில் முடிந்து விடுமாம். முக்கியத் தலைவர்களெல்லாம் சிறையில் உள்ளனர். மக்களின் ஒத்துழையாமையில் ஒரு நாடும் வெகு நாட்கள் செயல்பட முடியாது. ஆட்சியின் முக்கிய எதிரி நீதிமன்றம்தான். நீதிபதிகளை இடம் மாற்றி விளையாடுவதாலெல்லாம் ஆட்சிக்கு நிரந்தரமாக நீதியைத் தாண்டி அரியணையைப் போட முடியாது. இந்திராகாந்திக்கு உறுதியாக பதவி பறிபோகும். அத்தோடு அனைத்து கரியமேகங்களும் பறந்தோடும். ஆகாயம் ஒளிரும். குளியலறையின் கையெழுத்திலிருந்து தொடங்கியதெல்லாம் இரத்தவெள்ளத்திலாவது அழிந்துவிடும். .
கருப்புச் சட்டங்களின் இருட்டிலிருக்கும் காவல் நிலையங்களுக்கு இருப்பவை வேறொருவகையான முடக்குக் கதவுகள். இரைகளுக்கு மட்டுமல்ல வேட்டைக்காரர்களுக்கும்கூட திறக்காதவை. மூட மட்டுமே தெரிந்த கதவுகள்! அச்சுதன்குட்டியின் மனைவிக்கு அவனை ஒரு முறை பார்க்கக்கூட முடியவில்லை. அவருடைய கண்ணீருக்கு ஒரு முடிவு இல்லாமலிருந்தது எனினும் துணைக்கு போனதற்காக என் மனைவியின் கண்களிலிருந்து நெருப்பு பறக்கத் தொடங்கியது. இறுதியில் அச்சுதன்குட்டியின் மனைவிக்குத் துணை தன் மகன் மட்டுமானான். தொடக்கப் பள்ளி மாணவனின் மொழி கொண்டுதான் அவர் தேடுதலைத் தொடர்ந்தார். அச்சுதன்குட்டியின் உதவி இல்லாமல் போனதும் என்னுடைய நிலைமையும் இக்கட்டிலானது. கணக்கு பார்க்கவும் கடிதம் எழுதவும் போதுமான படிப்பு இல்லையே. பலரிடமும் உதவிபெற வேண்டியிருந்தது. ஒருத்தருக்கு பதிலாக பலர். இருப்பினும் நான் சமாளித்துக் கொண்டிருந்தேன். அந்நேரம் வேறொரு பிரச்சனை வந்து சேர்ந்தது. கடையின் இரண்டு பக்கமும் பெரும் குஜராத்திகளின் வணிக நிறுவனங்கள் இருந்தன. அவர்களில் பிரபலமான ஒருவரின் எடுபிடி ஒருநாள் கடையை அவர்களுக்காகக் கேட்டான். நான் மலைத்துப் போனேன்.

அச்சுதன்குட்டியில்லாமல் தனியாக முடிவெடுக்க முடியாது என நான் சொன்னேன். அவன் சிரித்தான். காதுக்குள் அந்த ரகசியத்தைச் சொன்னான். ‘அந்த ஆள் இனி திரும்பி வரமாட்டான். அதற்கு முதலாளி உறுதி தருவார்.’ அதற்கு தேவையானதையெல்லாம் செய்துவிட்டுத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது. மனைவியிடம்கூட நான் இதையெல்லாம் சொல்லவில்லை. எதற்கும் அசராதவனைப் போல நம்பிக்கையுடன் நிலைகொண்டேன். பலனென்ன? கடைசியில் எனக்கு அதைச் செய்யவேண்டியதாயிற்று. கடையை குஜராத்திகள் எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் கையில் போட்ட சிறு நோட்டுக் கட்டின் ஒரு பங்கினை நான் மனைவியிடம் கொடுத்தேன். இன்னொரு பாதி அச்சுதன்குட்டியின் மனைவிக்கும் கொடுத்தேன். பிறகு தேக்கி வைத்திருந்த வருத்தத்தையெல்லாம் அழுகையாய் ஓடவிட்டேன்.
“இதற்கு மேலும் இங்கே இருக்கவேண்டாம், ஊருக்கு போய்விடுங்கள். அச்சுதன்குட்டியை வெளியே எடுக்க வேண்டியது என் பொறுப்பு. நான் அதைச் செய்வேன், என்னை நம்புங்கள்.”
இழந்த கடைக்கு அவர் முதல்நாள் போயிருந்தாராம். அங்கே புது உரிமையாளர்கள் தொடக்கவிழா நடத்திக் கொண்டிருப்பதைக் கண்டு அவர் அதிர்ந்தார். அனைவருக்கும் உணவிட்டுக் கொண்டிருந்தவர்கள் அவருக்கும் கொடுத்தனர். அழுதுக் கொண்டுதான் அவர் அதை மறுத்தார். ‘எதற்கு கடையை கைமாற்றினீர்கள்?’ என அவர் கேட்டார். நான் காரணம் சொல்லவில்லை. அவரிடம் மட்டுமல்ல எவரிடமும். ஒருவரது நம்பிக்கையின் மணிமுடியைக் கீழே தள்ளி விடுவது சரியில்லையே. விரைவிலேயே நான் அவரை ஊருக்கு இரயிலேற்றி அனுப்பி வைத்தேன். அச்சுதன்குட்டியின் கையைப் பற்றிக்கொண்டு அவர் வந்து இறங்கிய அதே இரயில் நிலையத்திலிருந்து மகனின் கையைப் பிடித்துக் கொண்டு அவர் இரயிலேறினார்.
பலரும் நினைப்பதைப் போலவும் சிலராவது குற்றம் சாட்டுவதைப் போலவும் விடுதலைக்குப் பிறகு அச்சுதன்குட்டி பொறுப்புகளையெல்லாம் உதறி எங்கோ ஒரு மறைவிடத்தில் தனியாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கவில்லை. அவன் உலகின் ஒரு மூலையில் யாருக்கும் தெரியாமல் வாழ்ந்துக் கொண்டிருப்பதாக நான் பலரிடமும் சொல்லியுள்ளேன். ஆனால் அதில்லை உண்மை. அச்சுதன்குட்டி சிறையிலிருந்து வெளியே வரவே இல்லை. அவனைப்பற்றிய எந்தவொரு விபரமும் அரசாங்கக் கோப்புகளில் இருக்காது. அச்சுதன்குட்டி கைது செய்யப்படவில்லை என்பது அவர்களின் தரப்பு. ஏதோ ஒரு முகாமில் அவன் உயிர் பிரிந்திருக்க வேண்டும். பதிவுகளில் இல்லாத அவனது பிணம் ஆழக்கடலுக்கு மூழ்கிப் போயிருக்கலாம். பகல்களுக்கும் இரவின் நிறமிருந்ததால் மறைப்பு நிரந்தர வசதியாக அப்போது இருந்ததே. காவலாள் படை அதையெல்லாம் சாமர்த்திகியமாக பயன்படுத்தும்..”
தொடர்ந்த தாள்கள் வெறுமையாக இருந்தன. பதிவு முடிந்ததைப் போன்று. நம்பிக்கையின்றி சும்மா புரட்டிப் பார்த்தபோது சரித்திரத்தின் மகரந்தங்கள் விரலில் ஓவியங்கள் தீட்டின.
காலம் விரிவான வெயில்மழைகளுடன் காற்றில் வரைந்துவைத்த பெரும் ஓவியங்களனைத்தும் தாள்களிலிருந்து விரல்களுக்கு இறங்கிக் கொண்டிருந்தன. ஆதரித்தவர்கள் மட்டுமல்ல பொறுத்துக் கொண்டவர்கள்கூட காப்பாற்றப்படும்போது ஊக்கமுடன் செயல்பட்டவர்கள் தண்டிக்கப்பட்ட விசித்திரமான காலம். மௌனப்பொறுமையின் நெடிய சலிப்பில் தட்டுத்தடுமாறி எழுதாப் பக்கங்கள் அனைத்தையும் தாண்டி புத்தகத்தின் கடைசிக்கு நகர்ந்தது. இறுதியில், எதிர்பாராத விதமாக வேறொரு வண்ணத்தில் எழுதப்பட்ட சிறுகுறிப்பு தீபச்சுடராக வந்து நின்றது. பிற்காலத்தில் எப்பொழுதாவது எழுதிச் சேர்த்திருக்கலாம். அனேகமாக முதிய வயதில். கையெழுத்து தளர்ந்துநடுங்குவது தெரிகிறது. அதையும் சொல்லி முடித்துவிடலாம் எனும் பின்யோசனை. உயிர் பிரியும் முன் வெளிப்படுத்திய இரகசியம்..
வாசித்து முடித்த டயரியை இருந்ததுபோன்றே கட்டி வைத்தான். படுக்கையைத் தட்டிப்போட்டான். சிறிது நேரம் கடலைப் பார்த்திருந்த கதவிற்கு முன்னால் உட்கார்ந்தான். தொடுவானம் நோக்கி பயணிக்கும் விந்தையான நடத்தை கொண்ட ஒரு துண்டு மேகம் ஆகாயத்தில் இருந்தது. எதிர்த்திசை பிடித்து கரையிலிருந்து அது ஆழக்கடலின் திசைக்கு நகர்ந்து போய்க்கொண்டிருந்தது. ஆழத்துக்கு இறங்குமா இல்லை முடிவின்மைக்கு பறந்து செல்லுமா? தெரியாது. முடிவில்லா நீரின் அசையும் முதுகிலேறி பறந்து போகும் மேகம், கப்பலின் கொடிமரம் போல தொடுவானில் மறைவது வரைக்கும் விமல் பார்த்துக்கொண்டிருந்தான். பயணத்தின் தொடக்கம் என்பதுபோல கைபேசியை எடுத்து நன்றியுடன் ஆரம்பிக்கும் ஒரு பயணச்செய்தியினை வரிவடிவச் செய்தியாக அருணின் புலன எண்ணிற்கு அனுப்பினான்.
சுமேஷுக்கானது அப்படி இருக்கவில்லை.
“சுமேஷ், எங்கள் இருவரின் தாத்தாக்களை தோற்கடித்தவர்கள் வேறு யாருமல்ல, இந்த தேசம்தான். கடைக்கு தினமும் போலீசார் வந்தனர். உடல் ரீதியான தாக்குதல் ஏதுமில்லை, வியாபாரத்திற்கு இடையூறும் செய்யமாட்டார்கள். ஆனால், திரும்பிச் செல்கையில் தராசை எடுத்துச் செல்வார்கள்.”
00

அரவிந்த் வடசேரி
கடந்த சில ஆண்டுகளாக இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருக்கும் இவர் ஆங்கிலம், தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் மொழிபெயரப்பிலும் தமிழில் சிறுகதைகளையும் எழுதி வருகிறார். ஆவநாழி மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் மற்றும் உன் கனவுகளை உரைப்பவன் என இரு சிறுகதைத் தொகுதிகள் தரு வெளியீடாக வந்துள்ளன. ஆவநாழி இதழில் துணை ஆசிரியராக பொறுப்பாற்றுவதோடு இலக்கியக் கூட்டங்களில் நூல் அறிமுக உரைகளையும் அவ்வபோது நிகழ்த்துகிறார். விரைவில் ஒரு நாவல் மொழிபெயர்க்க வேண்டும் எனும் ஆர்வம் கொண்டுள்ளார்.

