‘மழை நின்ற வீதி’யில் ஓர் ஹைக்கூ உலா
நானும் ஹைக்கூ எழுதுகிறேன் என, எழுதிய வாக்கியங்களை மூன்று அடுக்குகளில் ஒவ்வொன்றாக பிரித்து எழுதுகிறவர்கள் மத்தியில்தான், ஹைக்கூ என்பது அப்படியொன்றும் எளிதல்ல என அதனை ஓர் ஆரோக்கியமான இயக்கமாக கொண்டு இயங்கி கவனத்தை ஈர்க்கும் பலர் இருக்கிறார்கள்.
ஹைக்கூ கவிதைகளுக்கான போட்டி முதல் ஹைக்கூ கவிஞர்களின் சந்திப்பு உரையாடல் என உலக அரங்கில் தமிழ் ஹைக்கூ அதற்கான வாசகர்களை நோக்கி வந்தவண்ணமே இருக்கின்றது. இத்தகைய முன்னெடுப்புகள் செய்கிறவர்களை நாம் பாராட்டதான் வேண்டும்.
அந்த வகையில் மலேசியாவில் இருந்தும் பல புதிய குரல்கள் ஹைக்கூவைப் பாடியபடி முன்னேறி வருகின்றன. அத்தகைய புதிய குரல்களைக் கேட்கையில் மகிழ்ச்சியாக இருக்கின்றன. அதே சமயம் எந்தவொன்று அதிகம் கவனம் ஈர்க்கின்றதோ, அதையே போலியாகவும் செய்யக்கூடியவர்கள் இருப்பார்கள். ஹைக்கூக்களுக்கு மத்தியில் பொய்க்கூகளும் சேர்ந்து கொண்டு நிற்கத்தான் செய்கின்றன.
இங்கிருந்து புறப்படும் ஹைக்கூக்களில் எதுவெல்லாம் சுயமானது எதுவெல்லாம் போலியானது எதுவெல்லாம் செயற்கை நுண்ணறிவு செய்து கொடுத்தது என அதனை வாசிக்கின்றவர்களும் அதற்கேயுரிய தரமும் காலத்தால் முடிவு செய்து கொள்ளப்படும்.
இன்றைய நமது ‘மாதம் ஒரு மலேசிய புத்தகம் தொடர் 18-க்கு கவிஞர் மகேந்திரனின் ‘மழை நின்ற வீதி’ என்னும் ஹைக்கூ புத்தகத்தில் இருந்து எனது வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன். அதற்கு முன் கவிஞர் குறித்த சிறிய அறிமுகத்திற்கு செல்வோம்.
தனது பள்ளிப்பருவத்தில் இருந்தே கவிதைகள் மீது ஆர்வம் கொண்டிருதவர்; கவிதைகளையும் கதைகளையும் வாசிப்பதோடு அவற்றை எழுதவும் தொடங்கினார். இலக்கிய போட்டிகள் அவருக்கு மேலும் ஒரு தூண்டுதலாக அமைந்தன. மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்தின் பேரவைக் கதை போட்டிகள், தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் இலக்கியப் போட்டிகள் என பல போட்டிகளில் கலந்து பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.
2023-ஆம் ஆண்டு கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டியில் பரிசு பெற்றார். அது அவருக்குள் இருந்த ஹைக்கூ கவிஞனுக்கு கொடுத்த உற்சாகம்தான் அவரை அடுத்தடுத்த ஹைக்கூ கவிதைகளுக்கு இழுத்து சென்றிருக்கிறது.
2016-ஆம் ஆண்டு தமிழ்ச்சீலர் மா.செ.மாயதேவன் குறித்த கட்டுரை தொகுப்பு புத்தகம்தான் இவருக்கு முதல் புத்தகமாக அமைந்தது. 2021-ஆம் ஆண்டு ‘கடவுளின் துகள்’ என்னும் முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து அதே ஆண்டில் ‘ஒரு சொல் கேளீர்’ என்ற பள்ளி மாணவர்களின் மரபு கவிதைத் தொகுப்பின் தொகுப்பாசிரியராக இருந்து வெளியிட்டார்.
2025-ஆம் ஆண்டு ‘சிறகில் அசையும் பெருங்காடு’ என்னும் முதல் ஹைக்கூ தொகுப்பை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து 2026-ஆம் ஆண்டில் ‘மழை நின்ற வீதி’ என்னும் ஹைக்கூ தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
‘மழை நின்ற வீதி’ ஹைக்கூ தொகுப்பிற்கு தங்கம் மூர்த்தியும், மு.முருகேஷும் முன்னுரையைக் கொடுத்திருக்கின்றார்கள். இந்தப் புத்தகத்தை வாசிப்பதற்கு முன்பாக அவர்களின் முன்னுரைகளை வாசிப்பது இந்த ஹைக்கூ உலகிற்கு வாசகர்களைத் தயார் செய்வதாகவே இருக்கிறது.
பெரும்பாலான முன்னுரைகளில் முழு புத்தகத்தின் சாரத்தையே சுருக்கி சொல்லிடுவது போல அமைந்துவிடும் சங்கடமான சூழலில் இப்படி இதமாய் வாய்க்கும் முன்னுரைகள் வாசகர்களுக்கு முழு சுதந்திரத்தைக் கொடுக்கின்றன.
ஒரு வாசகனாக முழு சுதந்திரத்தைக் கொண்டு இக்கவிதைகள் எனக்கு கொடுத்திருக்கும் வாசிப்பனுபவத்தை எழுத அமர்கின்றேன்.
‘ஒவ்வொரு நாளும் பெய்யும் மழை புதியது போல, ஒவ்வொரு நாளும் காணும் வானம் புதியது போல நித்தம் புதிய அனுபவத்தைத் தந்து கொண்டேயிருக்கிறது ஹைக்கூ’ என்கிறார் கவிஞர் மகேந்திரன் நவமணி.
முதலில் என்னைக் கவர்ந்தது இந்தப் புத்தகத்தின் தலைப்புதான். அதுதான் உடனே இந்தப் புத்தகத்தைக் குறித்து எழுதவும் தூண்டியது. புத்தகம் தவிர்த்து கவிஞரின் பல ஹைக்கூ கவிதைகளை நான் வாசித்து வருகிறேன் என்பதும் ஒரு காரணம்.
‘மழை நின்ற வீதி’ இதுவொரு கவித்துவமான தலைப்புதான் அல்லவா?
மழையில்லாத தெருவிற்கும் மழையில் நனையும் தெருவுக்கும் மழை நின்ற தெருவுக்கும் பலவித கதைகள் இருக்கவே செய்கின்றன. அது ஒன்றோடு ஒன்று முரண்பட்டும் ஒன்றோடு ஒன்றோடு ஒன்று இணைபட்டும் என பலவேறு அனுபவங்களை நமக்கு கொடுக்க தவறுவதில்லை.
இந்த தெருவில் இப்போதுதான் மழை நின்றிருகிறது என்பதை நாம் எப்படி கண்டறிவோம். மழையின் ஈரத்தாலா, மண் வாசனையினாலா, மங்கிய வெளிச்சத்தாலா, சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரினாலா, மூடியிருக்கும் கடைகளினாலா, மெல்ல மெல்ல பரபரப்பாய் மாறும் மனிதர்களின் நடமாட்டத்தினாலா? என பல கேள்விகளை இந்தத் தலைப்பு சுமந்திருக்கிறது.
அதிலும் குறிப்பாக, மழை நின்ற வீதிக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் அங்கு நமக்கு என்ன இருக்கிறது. என்னதான் இருந்துவிடப் போகின்றது.
கவிஞர் மகேந்திரன் நவமணியின் ‘மழை நின்ற வீதி’ என்னும் ஐந்தாவது புத்தகத்திற்குள் நுழையப்போகின்றோம். இந்த வீதி நமக்கு என்னென்ன அனுபவங்களைக் கொடுக்க விதித்திருக்கின்றது என பார்க்கலாம்.
இப்புத்தகத்தில் மொத்தம் எழுபது ஹைக்கூ கவிதைகளும் அதற்கு ஏற்ற ஓவியங்களும் இருக்கின்றன. அனைத்து ஹைக்கூ கவிதைகளைக் குறித்தும் பேசுவதற்கு ஆசைதான் ஆனால், உங்களுக்கும் அதன் வாசிப்பு அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதால் எனக்கு பிடித்த கவிதைகளில் சில கவிதைகளின் வாசிப்பு அனுபவத்தை இந்தத் தொடரில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

குழந்தைகளின் மனதை எப்படியாவது தங்கள் படைப்புகளில் எழுதிவிடவே எல்லா படைப்பாளிகளும் விரும்புகிறார்கள். சிலருக்கு அது எளிதாக அமைந்துவிடுகிறது. சிலருக்கு அது அத்தனை எளிதாக அமைந்துவிடுவதில்லை.
கவிஞரும் அப்படி குழந்தை உலகத்தை தனது கவிதைகளில் படைத்து காட்டியிருக்கின்றார். இந்தத் தொகுப்பில் என்னை கவர்ந்த கவிதைகளில் இந்தக் குழந்தைகளைப் பாடும் கவிதைகள் மனதிற்கு நெருக்கமாக அமைந்துவிட்டன. தொடக்கமாக குழந்தைகள் வந்துபோகும் ஹைக்கூகளுக்குள் சென்றுவிட்டு வருவோமா.
காலடியில் துயிலும்
நாய்க்குட்டிக்கும் சேர்த்தே
யாசிக்கிறான் சிறுவன்.
தான் கேட்பது யாசகம் என்றாலும் கூட அந்த யாசகத்தில் தனது நாய்க்குட்டியின் பசியும் தீர வேண்டும் என நினைப்பது குழந்தைகளால் மட்டுமே முடியும்.
நட்சத்திரம் உதிர்வதாய்க்
குதூகலிக்கும் குழந்தையின்
கைகளில் மழைத்துளிகள்
மழையில் நனைத்த கைகளில் இருந்து விழும் மழைத்துளிகளையும் வானில் எட்டாத தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்களையும் ஒரு கோட்டில் கொண்டு வந்து நிறுத்துவதற்கு குழந்தை மனம் வேண்டும்தானே.
சுவரில் கிளையின் நிழல்
பூக்களை வரையும் சிறுமி
உதிர்க்கிறாள் புன்னகை
இந்தக் கவிதையை வாசித்து முடித்ததும் நம் கண் முன்னே ஒரு குழந்தை சிரித்து நிற்கிறது.
கிளிஞ்சல் சேகரிக்கும்
சிறுமியோடு வீடு சேர்கிறது
ஆர்ப்பரிக்கும் கடல்
குழந்தையைக் காண்பதும் குழந்தையாய் இருந்தும் காண்பதும் என்ன என்பதைச் சொல்லும் ஹைக்கூ. முதல் இரு வரிகளில் நாம் குழந்தையைக் காண்கின்றோம். கடைசி வரியில் அந்தக் குழந்தை காணும் உலகத்தை நாமும் குழந்தையாய் இருந்து காண்கின்றோம்.
தடுமாறும் மிதிவண்டி
விடாமல் மிதிக்கும் சிறுவன்
விழுந்து எழுகிறது நிழல்
மிதிவண்டி ஓட்டிப் பழகும் சிறுவர்கள் ஒருபோதும் முயற்சியைக் கைவிடுவதில்லை.
வந்தழைக்கும் மழை
காத்திருந்து பயணிக்கிறது
காகிதக்கப்பல்
என்னவொரு அழகான காட்சி. மழை வந்த பின் அந்தக் குழந்தை காகிதக் கப்பலை செய்யவில்லை. காகித கப்பல் செய்து காத்திருக்கும் சிறுமிக்காக வந்துவிடுகிறது மழை.
நட்சத்திரங்களைப் பார்க்கும்
குழந்தையின் வானில் பெருவெளிச்சம்
பின் எதுவுமற்றதாய்
எனக்குள் இந்தக் கவிதை எதையோ செய்கிறது. குழந்தைகள் எதையுமே ஒரு சுமையாக சுமந்து திரிவதும் இல்லை. எந்த காரணத்திற்காகவும் ஒரே இடத்தில் அவர்கள் நின்றுவிடுவதுமில்லை. அவர் எல்லாவற்றையும் ஒரு புத்தனின் மனநிலை போல இயல்பாக கடந்து செல்கிறார்கள். நாம்தான் என்னமோ ஏதோ எல்லாவற்றையும் மனதில் சுமந்து கொண்டு துன்பப்படுகின்றோம். எந்தப் பெருவெளிச்சமும் ஒரு நாள் ஏதுமற்றதாய் மாறித்தான் போகும் என்பதை வளர்ந்தவர்கள் நம்புவதில்லை.
கையில் பலூன்
வழியில் நின்று நகர்கிறது
மற்றொரு குழந்தை
இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே கவிதையில் சொல்லிவிட முடிகிறது கவிஞரால். வழியில் நின்று நகர்ந்த குழந்தையின் வலி வாசகர்களின் மனதில் ஏறிவிடுகிறது.
இன்னுமா விடியவில்லை
குழந்தை கேட்கிறது
பதுங்குக்குழியில்
இந்தக் கவிதையின் கடைசி வரியை வாசிக்கும் போது நமக்கு தூக்கிவாரிப்பொடுகின்றது. அதிகம் விளக்க அவசியமற்ற கவிதை இது. ஒரு முறை கண்களை மூடி அந்தக் குழந்தைகளுக்காக பிரார்த்திக்க மட்டுமே முடிகின்றது நம்மால்.
மழை நின்ற வீதி
ஓவியம் வரைகின்றது
குழந்தையின் பாதம்
இந்தக் கவிதையை இரு விதமாக வாசிக்கலாம். ஒன்று மழை நின்ற பின் குழந்தையொன்று ஓடி விளையாடுகின்றது அதன் காலடி பாதங்கள் ஆங்காங்கே பதிகின்றன. இன்னொன்று, மழை நின்ற வீதி அங்கும் இங்கும் ஓடி கொண்டிருக்கும் சிறு சிறு தற்காலிக நீரோடைகளில் குழந்தையின் காலடி பாதம் தெரிகிறது. அது எவ்வளவு குட்டியாக எவ்வளவு கவிதையாக இருந்துவிடுகிறது.
சிறுவிரலிடையே தீபம்
குழந்தையின் விழிகளில்
அதே சுடர்.
ஹப்பா! என்னவொரு கற்பனை இது. இந்தக் கவிதை குறித்து கட்டுரையில் இறுதி அத்தியாயத்தில் சொல்கிறேன்.
தனக்கு பசி எடுப்பது போலவே தனது பொம்மைகளுக்கு பசிக்கும் என நினைக்காத குழந்தைகளே இல்லையா என யோசிக்க வைக்கும் கவிதை அடுத்து;
வெறும் தட்டிலிருந்து
ஒரு பிடி சோறூட்டுகிறாள்
பசியாறுகிறது பொம்மை.
கவிதைகளில் குழந்தைகளைச் சொல்லித்தான் குழந்தை உலகத்திற்கு நுழைய வேண்டும் என்பதில்லை குழந்தைகள் இல்லாத போது வாசகர்களால குழந்தைகளின் உலகினுள் நுழைய முடிம் என நிரூபிக்கின்றார் கவிஞர்.
குழந்தைகளற்ற வீதி
வெயிலுடன் தனித்திருக்கிறது
ஒரு பொம்மை
குழந்தை விளையாடிய பொம்மை என்பதாலோ அதன் தனிமையின் வலி நமக்கு புரிகிறது.
நகரத்தின் இரைச்சல்
பயணத்தோடு ஒட்டிக் கொள்ளும்
குழந்தையின் அழுகை.
நகரம் மீதான விமர்சனங்களில் இதுவும் ஒன்று வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்கிற பரபரப்பில் இப்படித்தான் எல்லாமே இரைச்சலில் கரைந்து அடையாளம் இழந்துவிடுகிறது.
வெயிலில் குழந்தை
நிழலென விரிகிறது
அம்மாவின் புடவை
வாசித்ததும் மனக்காட்சியில் அம்மாவும் அவரது புடவையும் தோன்றிவிடுகிறது. சாதாரண காட்சிதான் ஆனால் அதனை கவிதையில் சொல்லும் போது அம்மாவின் புடவை நமக்கு நிழல் கொடுக்க தொடங்குகின்றது.
யாருமற்ற வீதி
தனித்திருக்கும் மழையிடம்
கைநீட்டும் குழந்தை.
என்ற கவிதை இருக்கிறது. ஆனால் இதில் கவித்துவமான தருணம் இன்னொன்றாக இருக்கிறது. யாருமற்ற வீதியில் தனித்திருக்கும் மழையிடம் குழந்தை கைநீட்டாமல், குழந்தையிடம் மழை கை நீட்டினால் எப்படி இருக்கும்?
எனது வாசக சுதந்திரத்தைப் பயன்படுத்தி இந்தக் கவிதையை இன்னொரு வடிவத்தில் எழுதுகிறேன் கவிஞர் கோவித்து கொள்ள வேண்டாம்
யாருமற்ற வீதி
தனித்திருக்கும் குழந்தையிடம்
கைநீட்டும் மழை
கவிஞரின் கவிதையில் குழந்தையின் தனிமை தெரிகிறது. ஆனால் அந்த இடத்தில் குழந்தைத் தனித்திருப்பது போலத்தானே மழையும் தனித்திருக்கிறது என்பதை யோசிக்கும் போதுதான் கவித்துவத்திற்கான வாசல் நமக்கு திறக்கப்படுகின்றது.
அதிகம் இல்லையென்றாலும் இந்தத் தொகுப்பில் சில கவிதைகளையாவது செறிவாக்கினால் மேலும் சிறப்பாக அது மாறும் வாய்ப்பும் உள்ளது.
கவிஞர் மகேந்திரன் நவமணியின் ‘மழை நின்ற வீதி’ ஹைக்கூ தொகுப்பில் இருந்து குழந்தைகள் உலகத்தைக் காட்டிய பதினாறு ஹைக்கூகளின் வாசிப்பு அனுபவத்தைப் பார்த்தோம்.
அவை தவிர்ந்து எனக்கு பிடித்த சில கவிதைகளையும் பார்ப்போம்.
மரணம் நிகழ்ந்த வீடு
வெகு இயல்பாய்
மலர்ந்திருக்கிறது ஒரு பூ
என்னும் கவிதை சொல்லும் செய்தியை எப்படியெல்லாம் மாற்றிமாற்றி சொல்லி கொண்டிருந்தாலும் அந்த எதார்த்ததை அவ்வளவு எளிதாக மனித மனம் ஏற்றுக்கொள்வதில்லை.
கடைசியாய் வீசப்பட்ட
நாற்காலியோடு வெளியேறுகிறார்
இறந்த தாத்தா
இன்றைய குடும்ப உறவுகளில் பெரியோர்களுக்கான இடம் குறிப்பாக வயதானவர்களின் இடம் என்னவாக இருக்கிறது என்பதை கேள்விக்குட்படுத்தும் கவிதை. உடலால் மரணிக்கும் முன் உணர்வால் மரணித்தவரின் கதை இது.
தனக்கே தனக்காய்க் கடைசியாய் எஞ்சி இருந்த நாற்காலி வீசப்படும் வரை அவர் உயரை எதற்கோ பிடித்து வைத்திருக்கிறார் என்பதுதான் முதியோர்க்கு இங்கு கொடுக்கப்படும் இடமா?
பாதங்களின் ஓசை
காதுயர்த்தி மீண்டும் படுக்கிறது
பசித்திருக்கும் நாய்
தனக்கானவர்கள் வரும் வரை எல்லோரும் காத்திருக்கத்தானே வேண்டும். பசிக்கு மட்டுமல்ல கலைக்கும் இது பொருந்தும்.
அம்மாவையும் குழந்தையின் பசியையும் சொல்லும் இரு கவிதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன.
இடுப்பில் குழந்தை
சுமந்திருக்கும் கற்களில்
பசியின் கனம்.
என தான் சுமக்கும் கற்களைவிட குழந்தையின் பசியின் கனம் அதிகம் என நினைக்கும் தாய் ஒரு பக்கம்.
கடைசி கவளம்
ஊட்டியதும் நிறைகிறது
அம்மாவின் வயிறு
என இன்னொரு கவிதையும் வருகிறது. இரண்டுமே குழந்தையின் பசி சொல்கிறது. அந்தப் பசியோடு அம்மாவையும் சொல்கிறது. அதுசரி அன்பிற்கு அம்மாவை சொல்லிவிட்டால் அடுத்தாய் உழைப்பிற்கு அப்பாவைச் சொல்வதுதானே உலக நியதி. கவிஞர் அந்த நியதிக்கு கட்டுபட்டிருக்கிறார்.
அசதியில் உறங்கும்
அப்பாவின் பாதங்களில்
எத்தனை வெடிப்புகள்.
‘மழை நின்ற வீதி’ ஹைக்கூ தொகுப்பில் இருந்து சில கவிதைகளின் வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டேன். நிறைவாக சிலவற்றை சொல்ல வேண்டியும் உள்ளது.
இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கவிதைக்கும் ஒவ்வொரு ஓவியம் இருக்கின்றது. இந்தத் தொகுப்பில் மட்டுமல்ல பெரும்பாலும்; குறிப்பாக சமீபத்தில் நான் வாசித்த ஹைக்கூ கவிதைத் தொகுப்புகளில் இப்படித்தான் கவிதைக்கு ஏற்ற ஓவியங்கள் இருக்கின்றன.
ஓவியங்களோடு ஹைக்கூ கவிதைகளை வாசிக்கும் போது; அதிலும் அந்தக் கவிதையில் சொல்லப்படுவதை அப்படியே ஓவியமாக பார்க்கும் போது அக்கவிதையை வாசிக்கும் வாசகனின் கற்பனை தடைபடுவதாக தோன்றுகிறது.
உதாரணத்திற்கு சிறுகதை எழுதும் போது அந்தக் கதையை அச்சிறுகதையின் தலைப்பில் நேரடியாக சொல்லக்கூடாது என்பதும் அதனை பூடகமாக சொல்லலாம் என்பது தொடக்க கால விதிகளில் ஒன்று.
ஏனெனின் தலைப்பில் கதையைச் சொல்லிவிட்ட பின்னர் எதற்கு மீண்டும் அந்த கதையை வாசிக்க வேண்டும் என்கிற கேள்வி வருகின்றது.
அதே போலத்தானே; ஒரு ஹைக்கூ கவிதை அதனை வாசிக்கின்றவர்களுக்கு திறந்து காட்ட வேண்டிய ஜன்னலை ஓவியங்கள் கொண்டு நிரப்பினால் ஜன்னலைத் தாண்டிய அனுபவம் வாசகனுக்கு எப்படி கிடைக்கும். வாசகனது பார்வை அந்த ஜன்னலோடு நின்று விடாதா. நவீன ஓவியமாக அது அமைந்தாலும் கூட பரவாயில்லை.
ஆனால் ஹைக்கூவில் சொல்லப்படுதை அப்படியே ஓவியமாக கொடுப்பது எந்த அளவிற்கு பயன் என தெரியவில்லை. அது கவிதை மீதான வாசகர்களின் சுதந்திரத்தைச் சுருக்கவே செய்கிறது.
உதாரணமாக ஒரு ஹைக்கூ ‘மடித்து வைத்த குடை/ வாசல் வரை வந்திருந்தது/ துளிதுளியாய் வானம்’ என இருக்கிறது. அதன் கீழ் ஓர் ஓவியம். விரிந்த குடையில் மழைத்துளிகள் சில கீழே கொட்டுகின்றன. அந்த ஓவியம் இல்லாமலிருந்தாலாவது வாசல் வரை வந்த துளிதுளி வானத்தை எண்ணிய வாசகர் வாசிப்பின் அடுத்த கட்டத்திற்கு இந்தக் கவிதையைக் கொண்டு சென்றிருப்பார். இப்போது அந்த ஓவியத்தைப் பார்த்ததும் இந்தக் கவிதையை வாசிக்கும் போதே அது குடையில் வழியும் மழைத்துளிதான் என முடிவாய்த் தெரிந்தபின் வாசகருக்கு அங்கு அடுத்தகட்ட நகர்வு இல்லாமல் ஆகிறது.
முற்றாக இது வேண்டவே வேண்டாம் எனவும் சொல்வதற்கில்லை. ‘சிறுவிரலிடையே தீபம்/ குழந்தையின் விழிகளில்/ அதே சுடர். இது ஓர் அற்புதமான காட்சி. இந்தக் கவிதைக்கு கீழ் ஒரு அகல்விளக்கில் தீபம் எரிகிறது. ஆனால் அதுவே ஒரு குழந்தையின் கண்ணில் தீபம் தெரிவது போன்ற ஓவியம் அமைந்திருந்தால் வாசக அனுபவத்திற்கு தடையாக வந்திருக்கும் அல்லவா.
இந்தக் கவிதையை வாசித்ததும் வாசகர் மனதில் ஒரு குழந்தை தோன்ற வேண்டும். அந்தக் குழந்தையின் கையில் அகல் விளக்கு இருக்க வேண்டும். அதன் தீபம் அந்தக் குழந்தையின் கண்களில் சுடராய் ஜொலிக்க வேண்டும். அந்த முழு காட்சியும் வாசகரின் மனதில் எழுவதும் அதிலிருந்து இக்கவிதை இன்னொரு இடத்திற்கும் நகர்வதுதானே கவித்துவமான அனுபவம். அதற்கு ஏற்றார் போல ஓவியங்கள் இருப்பது வாகர்களுக்கு தடையாக இல்லாமல் உதவியாக இருக்கும் எனவே நம்புகின்றேன்.
நமது இன்றைய மாதம் ஒரு மலேசிய புத்தகம் தொடர் 18-ல் மகேந்திரன் நவமணியின் ‘மழை நின்ற வீதி’ என்னும் ஹைக்கூ கவிதைகள் தொகுப்பை குறித்த வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டேன்.
மீண்டும் அடுத்த மாதம் இன்னொரு மலேசிய புத்தகத்தோடு சந்திப்போம்….
00

எழுத்தாளர் தயாஜி.
மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார். முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும் ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார். ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்.

