மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம்-6

மதிக்குமார் தாயுமானவனின்யாமக்கோடங்கி

பாவ மன்னிப்பு

கோவிலுக்குள்

அனுமதி மறுக்கப்பட்டவனின்

காலில் வந்து விழுகிறது

கோபுர நிழல்

சமூக ஊடகத்தில் எப்போதோ வாசித்த கவிதைகளில் ஒன்று. வாசித்ததும் அப்படியே மனதில் பதிந்துவிட்டது. வரிகளில் இருந்து காட்சிகளாக இந்தக் கவிதை மாறியிருந்தது. காட்சி பதிந்ததே தவிர கவிதை எழுதியவர் பெயர் பதியவில்லை.

சமீபத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த எழுத்தாளர் பாண்டித்துரை சிங்கப்பூர் எழுத்தாளர்களின் புத்தகங்களை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அந்தப் புத்தகங்களில் ஒவ்வொன்றையும் எடுத்து புரட்டி கொண்டிருக்கும் போது சட்டென காட்சிகளாய் மாறியிருந்த கவிதை கண்ணில் பட்டது.

மீண்டும் ஒருமுறை அந்தக் கவிதையை வாசித்து பார்த்தேன். முதற்தடவை எழுந்த எண்ணமே இப்போதும் எழுந்தது. உடனே அந்தக் கவிதைத் தொகுப்பை வாசிக்கத் தொடங்கினேன். அதற்கு முன்பாக கவிஞரின் பெயரை ஒருமுறைக்கு இருமுறை வாசித்தேன்.

‘யாமக்கோடங்கி’ கவிஞர் மதிக்குமார் தாயுமானவனின் முதல் கவிதைத் தொகுப்பு. இந்தக் கவிதைத் தொகுப்பை சால்ட் பதிப்பகம் நேர்த்தியாக  வெளியிட்டுள்ளார்கள்

இவர் சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் பிறந்தவர். தற்போது சிங்கப்பூரில் பொறியாளராகப் பணிபுரிகிறார். சிங்கப்பூரின் தேசிய கலைகள் மன்றம் நடத்திய தேசிய கவிதை விழாவிலும், தங்கமுனைப் பேனா கவிதைப் போட்டியிலும் அவரது கவிதைகள் சிறப்புப் பரிசுக்குத் தேர்வாயின.

ஒவ்வொரு கவிஞனும் அவனது பார்வையில் புதிய கோணத்தை எப்போதும் கொண்டிருப்பதைக் காணலாம். இன்று ஒரு கவிதை போலவே ஒரு கவிஞர் போலவே எழுதும் கவிஞர்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் எப்படி பின் தொடர்கிறார்கள் என்று யோசித்தால் கவிஞர் தன் பெயருக்கு பின்னால் வைக்கும் மூன்று புள்ளிகள் வரை அப்படியே பின் தொடர்ந்து எழுதுகிறார்கள். கவிதைகளைப் போலி செய்கிறார்கள் என்றால் கோவித்து கொள்கிறார்கள். அதனால்தான் பின் தொடர்கிறார்கள் என சொல்ல வேண்டியுள்ளது.

ஆனால் கவிஞர் மதிக்குமார் தாயுமானவனின் கவிதைகளில் அவருடைய தனித்தப் பார்வை தெரிகிறது. இன்னொரு கவிதையை நினைவுக்கு கொண்டுவராத கவிதைகளாகவே எழுதியிருக்கின்றார்.

இதற்கு உதாரணமாக ஒரு கவிதையைச் சொல்லலாம்.

முறையீடு

வேண்டுதலின் முடிவில்

நீங்கள் அடித்த

கோவில் மணிக்குள்

அப்பொழுததான்

உச்சத்தை எட்ட இருந்தது

பல்லிகளின் காம விளையாட்டு

சங்க இலக்கியத்திலும் சக்கரத்தில் சிக்கிய பல்லி பற்றிய பாடல் ஒன்று உண்டு. கவிஞர் அந்தக் கவிதை வாசிப்பைக் கடந்து இன்னொரு இடத்திற்கு வாசகர்களை அழைத்துச் செல்கிறார். இங்கு இருந்த பல்லிகளில் அல்ப ஆயுளில் போகவில்லை. தங்களின் தீராதா காமத்தை அனுபவிக்காமலே அல்லவா போய்விட்டன.

அன்பிற்கும் புறக்கணிப்பிற்கும் மத்தியில் சிக்கியபடி சிதையும் மனிதர்களின் வலி சொல்லி முடியாதது, அதனை கவிஞர் சொல்ல முயன்றிருக்கின்றார்.

இயங்குதலின் நியதி

புறக்கணிப்புச் சிறகு

ஒருபுறம்

அன்பின் சிறகு

மறுபுறம்

பறப்பதை நிறுத்துவதில்லை

நாம்.

வானம்தான்

நீளமாகிக் கொண்டே இருக்கிறது.

அன்பும் புறக்கணிப்புமே இரு சிறகுகள் என நம்மை பறக்க வைக்கின்றன என்பதில் இருக்கும் ஆறுதலை வாசிக்கையில் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது தானே.

ஏறக்குறைய இப்படியான இன்னொரு வகை ஆறுதலையும் கவிஞர் எழுதியிருக்கின்றார்.

இருப்பின் மேன்மை

ஒரு மலரைப் போலக் கிடக்கிறது

நதியின் வழியில் சிறு மணற்பரப்பு.

உரசிச் செல்லும் நதியால்

எப்பொழுதும் அரிக்கப்படுகின்றன

அதன் இதழ்கள்

மலர்ந்திருக்கிறதா உதிர்ந்திருக்கிறதா

தெரியவில்லை.

அலைகளால்

நனைந்து கொண்டிருக்கிறது

அது போதும்.

மலரைப் போல இருக்கும் மணற்பரப்பையும், நதியின் உரசலால் அரிக்கப்படும் அதன் இதழ்களையும் கவிஞர் எப்படி அடையாளம் கண்டிருப்பார் என்பதில் இருக்கிறது இந்தக் கவிதை இன்னும் எவ்வளவு தூரம் வாசகர்களை அழைத்துச் செல்லும் என்பதற்கான பதில்.

தீராக்கணக்கு

பசிக்கிளை உன்னில்

ஊர்ந்திருக்கும் பச்சைப்

பாம்பாய் என் காமம்.

உன்னில் நான் அசைவதும்

எனக்காய் நீ அசைவதும்

இப்பெருவாழ்வின் ஞானநிலை.

யாரையும் உறுத்துவதில்லை.

எதன் பொருட்டும் கவனமில்லை.

உன்னையும் என்னையும் கூடக்

கட்டாயப்படுத்தவில்லை.

ஒரு கலவிக்குப் பின்னும்

நிகழந்து கொண்டே இருக்கிறது

நம் காமம்.

காமம் என்பது கலவிக்கு மட்டும் சொந்தமல்ல என்கிறார் கவிஞர். உடலில் சிக்கி காதலைத் தொலைக்கும் மனிதர்களிடம் இருந்து தள்ளியிருந்தே இந்தக் கவிதையை வாசிக்க வேண்டியுள்ளது. ஏனெனில் உடல் தாண்டி நிகழும் காமத்திற்குத்தானே ஆயுள் அதிகம்.

கவிதைக்குள் கதையைச் சொல்லுவது ஒரு வித்தை. கொஞ்சம் பிசகினாலும் கதைகளை பிரித்து அடுக்கியதாய்த் தோன்றுமே தவிர கவிதையாகத் தோன்றாது. அந்த வித்தையை அழகாய் கவிதையில் காட்டியிருக்கிறார் கவிஞர். இப்படி கவிதைக்குள் கிடக்கும் கதைகளை வாசிக்க எனக்கு எப்போதும் பிடிக்கும். இந்தத் தொகுப்பில் எனக்கு பிடித்த கவிதைகளில் இதுவும் அடக்கம்.

தோலுரிக்கும் பகல்

தூக்கமற்ற இரவில்

இருபத்தொரு பந்தி

அறுபத்தொரு சேனை

தெய்வங்களையும்

வீட்டு வாசலில் நிறுத்தி

நம்பிக்கையைப்

பிச்சையிட்டுச் செல்பவர்

மறுபகலில் தனியே

வந்து நிற்கிறார்.

சில்லறைக் காசும்

கொஞ்சம் அரிசியும்

எடுத்து வெளியே வருகிறது

ஒரு தெய்வம்.

படியை விட்டு இறங்கிக்

கை படாம போட்டு

அனுப்புங்கஎன்கிறது

உள்ளிருந்து  ஓர் அசரீரி.

முன்னிரவை விடக்

கழுத்தை முறித்து முறித்துப்

பிளிறுகிறது

குடுகுடுப்பை.

இந்தக் கவிதையில் மூன்றே கதாப்பாத்திரங்கள்தான் ஆனால் அது சுமந்து நிற்கும் கீழ்மையின் வரலாறு பல ஆண்டுகளுக்கானது. இன்னமுமே அது உயிர்ப்போடுத்தான் இருக்கிறது.

இந்தத் தொகுப்பில் எனக்கு பிடித்த நான் பிரமித்த ஒரு கவிதை இருக்கிறது. அதே சமயம் அந்த பிரமிப்பை முழுதாய் என்னை அனுபவிக்க முடியாதபடிக்கு செய்த கவிஞர் மீது கோவமும் இருக்கிறது.

கவிதையில் தலைப்பு எதற்கு வைக்கப்படுகின்றது. கவிதையின் சூட்சுமத்தை புரிந்து கொள்வதற்குத்தானே. அதுவே கவிதையின் முழு சாரத்தையும் சொல்லிவிட்டால் வாசகனுக்கு என்ன வேலை. கவிதைகள் என்ன விடுகதையா? அது வாழ்வில் விடுபட்ட கதைகள் அல்லவா? ஒரு விடுகதையை வாசித்து கடைசியாய் அதன் விடையை வாசிக்கும் உணர்வை கொடுக்கும் கவிதைகள் வாசகர்களைக் குறைத்து மதிப்பிடுகின்றன.

மரிக்கொழுந்தால் நிறைந்திருந்த

அம்மனின் நெஞ்சில் இருந்த

மல்லிகைச் சரமொன்று நழுவிச்

சம்மணமிட்ட கணுக்காலில் வந்து

நிற்கிறது.

அர்ச்சனையைப் பாதியில் நிறுத்தி

இன்னொரு மல்லிகைச் சரம் எடுத்துத்

தொங்கிக் கொண்டிருந்த பாதத்தில்

சலங்கையாகச் சொருகும் குருக்கள்

குருக்கள் மட்டுமா?

எவ்வளவுக்கு கவித்துவமாக இருக்கிறது. அங்கு அந்தக் குருக்கள் ஒரு கவிஞன் போல ஏன் அந்த மகாகவி போல அல்லவா இருக்கிறார். ஆனால் இதனை வாசகர்கள்தானே முடிவு செய்ய வேண்டும். இந்தக் கவிதையை வாசித்து முடிக்கும்போதல்லவா அந்த பதிலை வாசகன் உணர்ந்து உள்ளம் பூரிக்க வேண்டும்.

நீங்கள் கவனித்தீர்களா? இந்தக் கவிதைக்கு அதன் தலைப்பை நான் எழுதவில்லை. அதனால்தான் உங்களுக்கு இந்தக் கவிதை வாசிப்பு கவித்துவமான அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது.

கவிஞர் இந்தக் கவிதைக்கு ‘நிச்சயம் ஒரு மகாகவி’ என்கிற தலைப்பை வைத்திருந்தார். அதனை வாசித்துவிட்டு இந்தக் கவிதைக்குள் நுழையும் வாசகனிடம் அங்கு ஏதோ ஒன்று நடக்கவுள்ளதாக முன்முடிவு செய்து விடுகிறது. அந்தக் கவித்துவமான இடத்டதை கடந்ததும் ‘ஓ இதைத்தான் சொன்னாரா?’ என கேட்பதோடு நின்றுவிடுகிறது.

தலைப்பை வாசிக்காமல் உள்ளே நுழையும் வாசகர்களுக்கு அந்தக் கவித்துவமான இடம் எந்தவொரு முன்னறிப்பு இன்றி நேரடியாக கிடைக்கிறது, “ஓ அற்புதம் அல்லவா…” என பூரிக்கவும் வைக்கிறது.

கவிதைக்கு நாம் வைக்கும் தலைப்பு அதன் கதவைத் திறந்து காட்ட வேண்டுமே தவிர கூரையை பிய்த்து உள்ளே இருப்பதைக் காட்டக்கூடாது என நினைக்கிறேன். வாசல் கதவின் வழியே மெல்ல மெல்ல வாசகன் ஒவ்வொரு இடமாக செல்லும் போதுதான் அவனுக்கான அக வாசலும் திறக்கிறது.

நம்மிடம் இருந்து ஒரு கள்ள புன்னகையையும் தன் கவிதைகள் வழி எடுத்துவிடுகிறார் கவிஞர். இது ஒரு கள்ளத்தந்தாம் ஆனால் கள்ளங்கபடம் அற்ற கள்ளத்தனம் என சொல்லவும் வைக்கிறது அடுத்த கவிதை;

பாவத்தின் எடையில் மேலும் நூறுகிராம்

பதினொன்னேகா ரூவாயும்

எலுமிச்சம் பழங்க ரெண்டும்

காணிக்கையா ஏத்துகிட்டுத்

தட்டிப்போற கல்யாணத்துக்குத்

தலைமுறைச் சாபம் காரணமுன்னு

குறி சொல்லத் தொடங்கையில்

மஞ்ச உடுப்புக்காரி மேல வந்து

ஆடு ஆடுன்னு ஆடிச்சு

பேரு சொல்லாச் சாமி

பரிகாரம் கேட்டவுக

ஈரக்குலை நடுக்கிறளவு

கைய முறிச்சி

முழிய உருட்டி

நாக்க மடக்கி

உடம்பு குலுங்கையில

விலகித்

தொலைச்சிருக்க வேணாம்

அவ மாராப்பு.

கவிஞர் இந்த உணர்விற்கு நேர்மாறான உணர்வைக் கொடுக்கும் கவிதையையும் இந்தத் தொகுப்பில் கொடுத்திருக்கின்றார்.

தெய்வத்தின் சலுகை

சவுக்கையில ஏறி

தொலைக்கிறது பத்தாதுன்னு

பட்டத்திக் கண்மாய்ல

தூரத்தோடவுல இறங்குதுக.

மகளிர் குழுகச் சீட்டை

மண்டகப்படில நடத்தறதும்,

நைட்டியோட புள்ளையாரச்

சுத்தறதும்

எந்தச் சாமிக்கு அடுக்குமோ..

இம்புட்டுச்

சாமிகுத்தம் நெரம்பின

ஊர்ல வந்த

உத்திரத் திருவிழாவுக்குக்

கொட்டகையப் பிரிக்கையில

தேருக்கடியில

கிடந்துச்சு

அம்புட்டுப்

பீராந்திப் போத்தலுக.

இந்தக் கவிஞரும் குழந்தைகள் பற்றி எழுதத் தவறவில்லை. காலப்பிழை, தாயுமானவன், வடியியலின் தந்தை, பொண்மானிவ ளன்றோ போன்ற கவிதைகள் சிறப்பாய் இருக்கின்றன.

‘யாமக்கோடங்கி’ கவிதைத் தொகுப்பில் இருந்து இன்னும் கூட பல கவிதைகளின் வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இன்னும் பேச வேண்டிய கவிதைகள் அவ்வளவு உள்ளன. ஆனால் அது அடுத்த வாசகரின் வாசிப்பனுபவத்திற்கு தடையாக இருக்க கூடாது என்பதால் இதனோடு முடிக்கின்றேன்.

நண்பர்களே  நமது இன்றைய ‘மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம் தொடர் 6-ல் சிங்கை எழுத்தாளர் மதிக்குமார் தாயுமானவனின் முதல் கவிதைத் தொகுப்பான ‘யாமக்கோடங்கி’ என்னும் கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகளின் வாசிப்பனுபவத்தை வாசித்தீர்கள்.

அடுத்த மாதம் மேலும் ஒரு சிங்கப்பூர் புத்தகத்தோடு உங்களைச் சந்திக்க வருகின்றேன்.

00

எழுத்தாளர் தயாஜி.

மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி  அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார்.  முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும்  ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார்.              ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *