–அ.மனோஜ் குமார்
கனவாகத்தான் இருக்கும். நிஜமாக இருக்க வாய்ப்பில்லை என்று அவனுக்கு நிச்சயம் தெரியும். “அடுத்த முறை உன்ன பாக்க வரும்போது உன் கைய புடிச்சிக்கவா?” என்று கேட்டான். ”அந்த தொடுதலில் காதலும் காமமும் இருக்காது என்றால், என் கையை கொடுக்கிறேன் பிடித்துக் கொள்” என்றாள்.
அவன் தலையை கோதிக் கொண்டிருக்கும் அவள் விரல்களில் ஒரு சோகம். அவன் எதிர்பார்ப்பை நிராகரித்து விட்டதால் ஒரு அழுத்தம். “கோவமா?”. கேள்விக்கான பதில் கேட்கப்படுவதற்கு முன்பே அவன் விரல்கள் அவள் கால் விரல்களிடம் சொல்லிவிட்டன. தடவியபடி இருப்பவனை அனுமதித்தாள் ஆனால் நிகழ்வதற்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டது. அவன் அடைந்திருந்தாலும் அவனுக்கு அகம் நிறைந்து இருக்குமா? அவனுக்கே இக்கேள்வி புதிராகத்தான் இருந்தது. பார்த்தால் போதுமென்று தோன்றியது, ஒரு வருடமானது பார்க்க, பார்த்தும் போதவில்லை. நேரில் பார்த்து பேசினால் போதுமென்று தோன்றியது, ஒரு வருடமானது, பார்த்து பேசியும் போதவில்லை. மூன்றாவது வருடமான இன்று நிறுத்தப்பட்டது ஒருவேளை நிகழ்ந்திருந்தாலும் போதாமல் தான் போயிருக்குமோ! கால்களை தொங்கவிட்டபடி பஞ்சுமெத்தையில் அமர்ந்திருக்கும் அவளும், பஞ்சு மெத்தையில் சாய்ந்த படி தரையில் அமர்ந்திருக்கும் அவனும் மௌனத்தின் வழியாக எதை பரிமாறிக் கொள்கிறார்கள் என்பதுதான் காதலின் ரகசியமா? முதல் சந்திப்பிற்கு பின் எதுவும் சொல்லவில்லை. இரண்டாம் சந்திப்பிற்கு பின், “எல்லா பசங்க மாதிரி இல்ல… நீ நல்லவன்” என்றாள். அவனுக்கு மட்டும் தெரியும் அவன் எவ்வளவு பெரிய அயோக்கியன் என்பது. கவனித்ததில் அவனுக்கே ஆச்சரியம் அவளிடம் மட்டும் அவன் மாறுபட்டு இருந்திருக்கிறான். இன்றும் அவள் உரையாடலில் பொறுக்கி என்ற வார்த்தைக்கு பிரத்யேகமான இடமுண்டு. இதற்கு முன் நடந்த எல்லா சந்திப்புகளிலும் ஒரு அடி இடைவெளியை அவள் பின்பற்றி இருக்கிறாள். அந்த ஒரு அடி இடைவெளி தன்னை இழப்பதற்கு மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. இருவருக்குள்ளும் விலகுவதற்கான எண்ணங்கள் முன் வந்து கொண்டு தான் இருக்கின்றன. விலகவும் முடியவில்லை சேர்ந்து வாழவும் முடியாது, முடியவில்லை. முடியவில்லை எனும் போது தான் விதியின் மீது பழி போடுகிறோம், பழி போடுவதற்கு தானே விதி விதிக்கப்பட்டு இருக்கிறது. பயம் என்றோ இல்லை பெண்களுக்கான பயம் என்ற ஒரு வரையறைக்குள் கொண்டு வர இயலாது. அவள் அவனை விட தைரியசாலி, அவனைவிட அதிகம் காலம் கடந்தவள், உடல் வலிமையில் அவனை விட உயர்ந்தவள், இருந்தும் அவளிடம் அந்த சக்தி இல்லை அது மனம் சம்பந்தப்பட்டது. அறைக்குள் அடைக்கலம் கொண்டதும் காதலின் உச்சியை அடைந்து, அவளை பஞ்சு மெத்தையில் வீழ்த்தி அவளுக்குள் தன்னை புதைத்துக் கொள்ள முனைந்து கொண்டிருந்தவன் ஒரு நொடியில் அப்படியே நின்றான். விழிகளிலிருந்து வழிந்த கண்ணீர் பஞ்சு மெத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. “என்ன” என்பது போல தலையசைத்தான். அவளது கணவரின் பெயரை அவள் உச்சரித்தாள்.
கடினமான முயற்சிக்கு பின் கண்களை திறந்தான். காலை வேலைகளை எல்லாம் முடிந்து விட்டு சுவரில் சாய்ந்தபடி காலை நீட்டி, மடியில் சோற்று கிண்ணத்தை வைத்து சாப்பிட்டு கொண்டு இருந்தான். அவளிடம் இருந்து அழைப்பு வந்தது. மெல்ல அசைந்து அருகில் இருந்த கைபேசியை எடுத்து பேசினான்.
“சாப்டாச்சா?”
“ம்ம், நீ சாப்டியா?”
“இப்போதான் சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்”
“எப்போ என்ன பாக்க வர?”
“கட்டிக்கிறேன்னு சொல்லு வரேன்”
“நீ வராத”
“ப்ப்பே”
“பப்பே”
“அடுத்த ஜென்மத்துலயாவது என்ன கட்டிப்பியா”
“மாட்டேன், அடுத்த ஜென்மத்திலயும் அவர் தான் “
“ம்ம்” என்றான் புன்னகையுடன்.
00

அ.மனோஜ்குமார்
வயது:21
படிப்பு: பத்தாம் வகுப்பு
தொழில்: நெசவு தொழில்
ஊர்: பொந்திலியன் குட்டை, கல்பாரபட்டி, சேலம் மாவட்டம்

