ஆங்கிலம்    : அம்ரிதா பிரீதம்

தமிழில்      : தி.இரா.மீனா

இரவு, ஒவ்வொரு நாளும் ஒரு மதத் துறவியைப் போல வருகிறது.

கடவுளின் பெயரைச் சொல்லி ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டிப்

பிச்சை கேட்கிறது. அல்லது நாடகங்களை நிஜமாக்கும் ஒரு வரத்தை

வேண்டுகிறது. யாராவது ஒருவர் இரக்கப்பட்டால் கூட அது

சந்தோஷப்படுகிறது. அதற்கு எதிராக ஒரு கதவு மூடப்பட்டால் அது

பணிந்து நிற்பதோ, அங்கேயே தங்கி விடுவதோ இல்லை. மாறாக

அந்த இடத்தை விட்டு நகர்ந்து போய் விடும். நான்கைந்து வருடங்களுக்கு

முன்னால் — ஒரு வீட்டின் வாசலில் நின்றிருந்த போது மறந்து தன்

கையில் வைத்திருந்த இருளின் கிண்ணத்தை அது அங்கேயே வைத்து

விட்டுப் போய் விட்டது.

அந்த அறைகளில் ஒன்றில் தங்கியிருந்த வித்யா பிரசவிக்கும் தருணத்தில் இருந்தாள். அதிலிருந்தே அந்தப் பாத்திரம் அங்கேதான் கிடக்கிறது. சூரிய உதயத்தின் போது அந்த அறையில் மென்மையான சூடு பரவும். அறை ஒரு சிலிர்ப்பு சிலிர்த்துத் தன் குளிரை உதறி விடும். அந்த வெப்பத்தை  உள்வாங்கியபடி இருட்டும் விலகத் தொடங்கும்.

ஒரு யாசகியைப் போலத் தன் கதவைத் தட்டும் இரவிடம் இருட்டு நிறைந்த கிண்ணத்தைத் திரும்பத் தந்து விட வேண்டுமென்று வித்யா பல சமயம் நினைத்திருக்கிறாள். ஆனால் அதற்குள் போட்டுத் தர எந்த விதக் கனவும் தன்னிடம் இல்லாதால் கிண்ணம் காலியாகவே இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னால் விட்டுச் சென்ற அந்தக் கிண்ணத்தில் தன் மகளின் மழலைப் பேச்சை ஒரு கைப்பிடி அளவில் போட்டு நிரப்ப   முடிவு செய்தாள்.

இன்றிரவா? இல்லை. அது நான்கைந்து ஆண்டுகளுக்கு முந்தைய இரவாக இருக்கலாம் இல்லை இன்றிரவுதான்..

ஒரு பெண் பிரசவிக்கும் தருணத்திலிருந்தாள். அந்தப் படுக்கையின் விளிம்பில் உட்கார்ந்து கொண்டு வலிக்கும் தன் அடி வயிற்றைத் தடவிக் கொண்டிருந்தாள்

படுத்துக் கொண்டு தான் வலியில் துடித்துக் கொண்டிருப்பதாகவும், படுக்கையின் விளிம்பில் உட்கார்ந்திருக்கும் பெண் மிஸ்.ராய், டாக்டர் ராயைத் தவர வேறு யாருமில்லை என்று வித்யா உணர்ந்தாள்.

பின்பு, தன் உடலில் எந்த வலியுமில்லை என்று அவளுக்குத் தெரிந்தது, படுக்கையின் விளிம்பில் அமைதியாகத் தான் உட்கார்ந்திருப்பதும், படுத்துக் கொண்டு வலியில் துடித்துக் கொண்டிருக்கும் பெண்மணி மிஸ். ராய் என்றும் தெரிந்தது.

அறையே சுற்றித் தலைகீழாக நின்றது.

இல்லை. அறை பழைய மாதிரியேதான் இருந்தது. படுக்கையும் அப்படியேதான் இருந்தது. முன்பு, படுக்கையில் வலியால் முனகிக் கொண்டிருந்த பெண்மணி இப்போது படுக்கையின் அருகில் நின்று கொண்டிருக்கிறாள். முன்பு, படுக்கையின் அருகில் நின்று கொண்டிருந்த பெண்மணி இப்போது படுக்கையில் கிடந்து ,வலியால் முனகிக் கொண்டிருக்கிறாள்.

ஒரு குழந்தையின் மெல்லிய அழுகுரல்.

வித்யா முன்பு ஒரு முறை கேட்ட அதே அழுகுரல்தான். அவள் அந்தக் குழந்தையைக் கனிவோடு பார்த்தாள். பிறந்த முதல் நாளில் எல்லா சிசுக்களின் முகமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் — கையிலிருந்து நழுவி விடுவது போன்ற சதையுடன். வித்யாவின் கண்கள் குழந்தை பையனா அல்லது பெண்ணா என்றறியத் துடித்தன .ஒவ்வொரு  பெண்ணிற்குமான துடிப்புத்தான் இது

ஆண்குழந்தை!

இல்லை. ஒரு பெண் குழந்தையாகத் தெரிந்தது.

கடந்து போன ஆண்டுகள் எங்கோ அருகிலேயே உட்கார்ந்திருந்தன. அவை மெதவாகப் புன்னகைத்தன. இருட்டுக் கிண்ணமும் சிரித்தது.

வித்யா ஆழ்ந்த சிந்தனையிலிருந்தாள்; ஆனால் அவளது உடல் உறுப்புக்கள் முழுவதுமான கட்டுப்பாட்டில் தெளிவாக இருந்தன. இன்னும் சொல்லப் போனால் தனக்கு முன்னாலிருந்த சூழலே அவளைக் கட்டுப்படுத்தியிருந்தது. அந்தத் தருணத்தில் மிஸ். ராய்க்கு அவளது உதவி தேவைப்பட்டது, அதனால், அவள் அங்கிருக்கிறாள்.

கடந்த காலத்தில் இது மாதிரியான ஒரு சூழலில் வித்யா தவித்த போது, மிஸ். ராய் உதவியாக உடனிருந்தாள். அம்மா, மாமியார், சகோதரி, நாத்தி என்ற எந்த ஸ்தானத்திலும்  இல்லாமல் ஒரு டாக்டராக உடனிருந்தாள். இப்போது வித்யா அவளின் அருகிலிருக்கிறாள். ஆனால் ஒரு டாக்டராக இல்லை — ஓர் அம்மா, சகோதரி, நாத்தி என்று. அல்லது ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு என்பதாக.

கண்ணால் பார்க்க முடியாத, அறிவுக்குப் புலப்படாத ஒரு பந்தம் அவர்கள் இருவரிடையேயும் இருந்தது. அதன் தொடக்கப் புள்ளியாக இருந்தது மிஸ். ராய்தான். ஆளரவமற்ற சாலையில், கைவிடப்பட்டவளாக நின்றிருந்த வித்யாவிற்கு கண்களை மூடிக்கொண்டு உதவி செய்தவள். தன்னோடு  தங்க வைத்து, அடிப்படை வசதிகளைத் தந்தவள். அவளுடைய பெண் குழந்தைக்கு விளையாட பொம்மைகளும், படிக்கப் புத்தகங்களும் தந்தாள். வித்யாவும் அதற்கேற்றவாற கைம்மாறு செய்தாள். வீட்டைச் சுத்தம் செய்யும் போது, யாரும் தன் உறவைப் பற்றி யோசித்துப் பார்க்கவோ, கேட்கவோ விரும்பாதபடி தன் உறவுகளையும் குப்பைத் தொட்டியில் எறிந்து விட்டாள்.

அவர்களிடையே இப்போது எந்த உறவுமில்லை. வலி குறைந்த பிறகு மிஸ். ராய் தொட்டியில் கிடந்த குழந்தையைப் பார்த்தாள். தன் பொருட்களைப் பையில் வைத்துக் கொண்டே வித்யாவைப் பார்த்தாள்.

“வித்யா, இந்த அறையில் அன்று… உனக்கு ஞாபகமிருக்கிறதா?” சிரித்துக் கொண்டே கேட்டாள்.

“மீட்டு பிறந்தாள்…”

“இந்த அறைக்கு பதிமூன்று நாட்கள் வாடகையை நீ தந்தாய். ”

இருவரும் எதிர்பார்ப்புடன் சிறிது நின்றனர்.

மிஸ். ராயின் பாதங்களுக்கு அடியில் வித்யா வெந்நீர் பாட்டிலை வைத்து அதன் மேல் கம்பளியைப் போட்டாள். “நான் பதிமூன்று நாட்கள் வாடகையை மட்டும்தான் தந்தேன்” என்று வித்யா சிரித்தாள். “ஆனால் நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதற்குமான வாடகையைச் செலுத்தி இருக்கிறீர்கள்.”

மீட்டு தூங்கிக் கொண்டிருந்த அறையின் கதவு திறந்தது. ஏதோ சத்தம் கேட்டு அவள் விழித்திருக்க வேண்டும். அல்லது அம்மாவின் படுக்கை காலியாக இருக்கிறதே என்று வந்திருக்க வேண்டும்..

“மீட்டோ, இங்கே வா, நான் உன் தம்பியைக் காட்டுகிறேன்.” வித்யா தன் துப்பட்டாவால் மீட்டோவின் முகத்தைத் துடைத்து விட்டு, தொட்டிலின் அருகே அழைத்துப் போனாள்.

தொட்டிலில் கிடந்த குழந்தையுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள மீட்டோவின் கண்கள் முயல்வது போல மிஸ். ராய்க்குத் தோன்ற, அதிர்வுடன் பார்த்தாள்.

“மீட்டோ, இங்கே வா, நான் உன் தம்பியைக் காட்டுகிறேன்.” என்று வித்யா எவ்வளவு சுலபமாகச் சொல்லி விட்டாள்.

அவன் மீட்டோவின் தம்பி என்று சொல்ல வேண்டாம் என வித்யாவிடம் கேட்டுக் கொள்ள வேண்டுமென்று மிஸ்.ராய் நினைத்திருந்தாள்.

மீட்டோவின் தம்பி. மிஸ்.ராய் தொட்டிலைப் பார்த்தாள். தொட்டிலில் படுத்துக் கிடந்த குழந்தை தன்னுடையதில்லை — அவன் உண்மையில் மீட்டோவின் தம்பிதான். அவன் மீட்டோவின் தம்பி என்று வித்யா சொல்வது ஒரு வேளை சரியாக இருக்கலாம்.

இன்று—ஒரு வேளை அவன் இங்கு இருந்திருந்தால் குழந்தையைத் தூக்கி அவன் மடியில் வைத்து, ’இந்தாருங்கள் ,உங்கள் குழந்தை’ என்று அவனிடம் தந்திருப்பாள்.

ஆனால் அவன் இங்கில்லை. அவன் எங்கேயிருந்தாலும், மீட்டோ அவனது மகள், அந்தக் குழந்தை அவன் மகன்.

நெற்றியிலிருந்து வியர்வை வழிந்தது.

“வித்யா என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?“

“ஒன்றுமில்லை.”

:இந்தக் குழந்தையின் சாயல்?”

“அவன் உங்களைப் போலவே இருக்கிறான்.”

“மீட்டோ?”

“அவள் என் சாயலில் இருக்கிறாள்.”

மிஸ். ராயின் முகத்தில் புன்னகை வெளிப்பட்டது. வித்யா அளந்தே பேசுவாள்/ அவள் பேசவது குறைவு என்பதற்காக அவள் சிந்திக்க மாட்டாள்  என்பதில்லை, ஒரு வேளை  யோசிப்பதற்குக் நேரம் எடுத்துக் கொள்ளாமலிருக்கலாம். பெண் அவள் சாயலில் இருப்பதாகவும், பையன் என் சாயலில் இருப்பதாகவும் எவ்வளவு சுலபமாகச் சொல்லி விட்டாள்.

குழந்தையைக் கம்பளியில் சுற்றி நாக்கில் ஒரு சொட்டுத் தேனை தடவி விட்டு விட்டு, “யோசித்துக் கொண்டிருக்காமல் சிறிது நேரம் தூங்குங்கள்.” என்று வித்யா சொன்னாள்.

சிந்தனையிலிருந்து விடுபட நினைத்து மிஸ். ராய் தூங்க முயற்சித்தாள். யோசிப்பது அவளுக்குப் புதிதில்லை என்றாலும் இந்த மாதிரியான சிந்தனைகள் முன்பு மனதைத் தொல்லைப்படுத்தியதில்லை. ஏன், அவளுக்கு என்ன ஆயிற்று? அந்த நகரத்தில் பல பெண் டாக்டர்கள் இருக்கிறார்கள். வித்யா ஏன் அவளிடம் வர வேண்டும்? நோயாளிகள் வருவார்கள், போவார்கள். ஆனால் இந்த வித்யா…. அவள் ஒரு நோயாளியாக வந்து ஒரு நோயாளியாகத் தான் போனாள். ஆனால் அவள் கணவனும் அவளுடன் வந்தான்—நோயாளியான மனைவிக்குத் துணையாக வரும் ஒரு கணவனைப் போல. அத்துடன் அது முடியவில்லை. சில சமயங்களில் குழந்தைக்கு மருந்து வாங்க, சில சமயங்களில்  அம்மாவுக்கு மருந்து வாங்க என்று தொடர்ந்து வந்தான்.

மிஸ்.ராய் துண்டால் தன் நெற்றியைத் துடைத்துக் கொண்டாள். தலையணை அருகே துண்டை வைத்த போது, உடம்பிலிருந்து இல்லதரசிக்கே உரிய மணம் வெளிப்பட்டது —வியர்வை, குழந்தை ,பால் என ஒரு கலவை மணம்.

அந்த வாசனயிலிருந்து அவன் வெளியேற விரும்பியிருக்கலாம். வித்யாவை விட்டு விலக அது காரணமாக இருந்திருக்கலாம். எதிர்பாராத விதமாக அவன் ஒருநாள் திரும்பி வந்தான். தொடர்ந்த இந்த நினைவுகளின் காரணமாக நெற்றியில் முத்துக்களாக வியர்வை நின்றது. மென்மையாகவும், நளினமாகவும் அவன் பேசினான். அந்த மெல்லிய இழைகள் ஒருபோதும் அறுபடவில்லை. ’வழுக்குப் பாதையில் நடந்த என் கால்கள் அந்த வலையில் சிக்கிக் கொண்டன.’

மீண்டு வர முடியாத, தவிர்க்க முடியாத வலையில் சிக்கிக் கொண்ட தன் கால்களை நினைத்து மிஸ். ராய்க்கு வருத்தம்தான். சோர்வான நிலையில் அவள் கண்களை மூடிக் கொண்டாலும், அவளது கண்கள் உள்மனதின் ஆழத்தை தீர்க்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தன. அது என்ன வகையான உறவு? ஒரு படுக்கை விரிப்பைப் போல விரித்தும், பின்பு சுருட்டியும் வைத்துக் கொண்டு ,ஒருநாள் ரயில் நிலையத்தில் அது எங்கோ தொலைந்து போய் விட்டது.

எல்லாம் தாறுமாறாக அவளுக்கு ஞாபகத்தில் வந்தன. அவளுடன் நீண்ட நாட்கள் அவன் தங்கியிருந்தான். அவனைத் திருமணம் செய்து கொண்டவள் போன்ற பாவனையில்தான் அவளிருந்தாள். அந்த நர்சிங்ஹோம் வீடு போல ஆக்கப்பட்டது. அவளிடம் வந்த தனிப்பட்ட நோயாளிகள் அவள் வேலை பார்த்து வந்த மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டனர். இரண்டு, இரண்டரை வருடங்கள். அவன் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிக் கொண்டிருந்தான். புத்தகங்களைத் திறந்தும், மூடியும் புத்தகப் பக்கங்களுக்கு உள்ளேயே வாழ்ந்தான். சில சமயங்களில் அவர்களிடையே உறவும் நிகழும்.

அவளுடைய உடல் வேர்வையில் தெப்பமாகியது. சட்டைப் பைக்குள் கை விட்டுப் பார்க்கும் போது அதிர்ச்சி தரும் வகையில் பையில் எதுவுமேயில்லை என்று ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருக்கும் ஒரு பயணி உணர்வது போல் அவள் உணர்ந்தாள். ஒரு நாள் காலை அவன் காணாமல் போனான்.

“வித்யா”

“என்ன?”

“அவன் மீட்டுவுடன் விளையாடி இருக்கிறானா?”

“இல்லை.”

“மீட்டு அவன் மகள் தானே?”

“என்னைப் பொறுத்த வரை ஆமாம். அவள் என்னுடைய மகள்தான். ஆனால் அவனுக்கு இல்லை.”

“அவனுக்குப் மகளோ அல்லது மகனோ தேவையில்லையா? நீ சொல்ல வருவது அவனுக்கு எதுவும் வேண்டாமென்றா?”

“ஆமாம், ஒன்றும் வேண்டாம்.”

வெளிநாட்டு முத்திரை குத்தப்பட்டு வந்த ஒரு குறிப்பிட்ட கடிதம் மிஸ். ராய்க்கு ஞாபகம் வந்தது. அதில் இரண்டு வரிகள் மட்டுமே.” நான் திரும்ப வருவேனா அல்லது மாட்டேனா என்று என்னால் சொல்ல முடியாது. எனக்காகக் காத்திருக்க வேணடாம்.”

நினைவுகளுக்குள் தான் மூழ்குவதாக மிஸ். ராய் உணர்ந்தாள். அவன் வித்யாவைக் கண்டு ஓடவில்லை. மீட்டோவின் முகத்தைப் பார்த்து ஓடியிருக்கலாம். பின் அவள் தம்பியின் முகம் அவனைத் தள்ளி வைத்தது.

“ஏன் எப்போதும் எதையாவது யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்?” வித்யா மென்மையான குரலால் குறுக்கிட்டாள்.

“அவன் உங்களை விட்டு விலகிய போது நீ கவலைப்படவில்லையா?” கேட்ட மிஸ்.ராயின் குரலில் ஒரு வித வருத்தம் தொனித்தது. முகத்தில்  சோர்வான புன்னகை வெளிப்பட்டது.

“நான் யோசித்தேன், ஆனால் அவனைப் பற்றியல்ல. ஓர் ஆணின் முகம் பற்றித் தான் நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.”

“ஓ..”

“என் தலைக்கு மேலான ஒரு கூரை பற்றியும், என் தட்டில் விழும் ரொட்டியைப் பற்றியுமே நான் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருந்தேன்.”

மீட்டோவின் தந்தை பற்றிய செய்தி கேள்விப்பட்டதும், அவனைத் தேடித் தன் வீட்டு வாசலுக்கு வந்த அந்த நாளிலான வித்யா மிஸ். ராய்க்கு இப்போது ஞாபகத்திற்கு வந்தாள். உண்மையில் அவனைத் தேடி வரவில்லை. இருக்க இடமும், சாப்பிட உணவும் தேடித்தான் அங்கு வந்தாள்.

“வித்யா “

“உம்.”

“உன் ஆள்— உன்னிடமிருந்து அவனை நான் பறித்துக் கொண்டதாக நீ நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.”

“ஆனால் என் ஆளை என்னிடம் திருப்பித் தந்து விட்டீர்கள்.”

“என்ன சொல்கிறாய்? நான் எப்படித் திருப்பி அனுப்பினேன்?”

“தலைக்கு மேல் ஒரு கூரையையும், தட்டில் ரொட்டியையும் தந்து விட்டீர்கள்.”

“என் பாவங்களின் சுமையைக் குறைக்கவும், அதற்கான பரிகாரம் தேடவுமே அதை நான் செய்தேன்.”

“பாவம் அவனுடையது– பரிகாரம் செய்ய வேண்டிய கட்டாயம் உங்களுக்கு இல்லாதிருந்தும் அதை நீங்கள் செய்தீர்கள்.”

மிஸ்.ராயின் ’பரிசு’அவரிடமிருந்து விலகிச் சற்றுத் தள்ளி நின்றது. படுக்கையிலிருந்து விலகி, தொட்டில் அருகே நின்று “இந்தப் பையனை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்?”

“நான் அவனை வளர்க்கிறேன்.”

“அப்புறம், நான்?”

“நீங்கள்? நீங்கள் இந்தக் குடும்பத்தின் தலைவர்.”

தினமும் யாசகம் கேட்டுப் போகும் ஒரு துறவியைப் போல, அந்த இரவு கதவைக் கடந்து சென்றிருந்தது. மிஸ். ராய் தூங்கிப் போயிருக்கலாம். பொழுது விடியப் போகிறதென்றாலும், இருட்டு நிரம்பிய கிண்ணம் முன்பைப் போலவே அந்த அறையில் தங்கிவிட்டது.

மீட்டோ அழுதபடியே தன் அறையிலிருந்து வெளியே வந்து, அடுத்த அறைக்குள் போனாள். தொட்டிலில் இருந்த குழந்தை பாலுக்காக அழுதது. வித்யா பாலைச் சுட வைக்கப் போனாள். இரண்டு குழந்தைகளும் இருட்டுக் கிண்ணத்திலிருந்து வெளியே வந்து, அந்த அறையில் அழ ஆரம்பித்திருப்பதாக மிஸ். ராய் உணர்ந்தாள்.

                   ——————————————————-

 நன்றி ; Internet Archive

A Slice Of Life  Selected Works — Amrita Pritam–  Vikas Publishing House

முற்போக்கு எழுத்தாளர் என்ற சிறப்பிற்குள்ளான அம்ரிதா பிரீதம் பஞ்சாபி, மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் கவிதை, சிறுகதை, நாவல் என்ற வரிசையில் நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளை உருவாக்கியவர். ஞானபீடம், சாகித்ய அகாதெமி, பஞ்சாப் ரத்தன் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *