மாதம் ஒரு சிங்கபூர் புத்தகம் -7

சித்ரா ரமேஷின் ‘வெண்மையின் நிறங்கள்’

-தயாஜி

நம் எழுத்தாளர்களிடம் ஒரு விசித்திர குணம் இருக்கிறது. அவர்களை ஒரு சம்பவம் பாதித்திருக்கும். அதனால் அவர்களின் படைப்பு மனம் அந்தச் சம்பவத்தில் இருந்து ஒரு கதையைக் கண்டறிய முயன்று ஒரு பொறியைத் தொடங்கியிருக்கும். அந்தப் பொறி மெல்ல மெல்ல தீ ஜுவாலையாக அசைந்து அசைந்து வளர்ந்து நிற்கும் அந்தக் கதகதப்பில் இருந்து ஒரு படைப்பிற்கான களமும் கதையும் தோன்றும்.

அப்படி தோன்றிய ஒரு கதையை அது குறுங்கதையா சிறுகதையாக நாவலா குறுநாவலா என எந்த வடிவத்திற்குள் பொருந்தும் என தெரிந்து கொள்ளாமல் அதனை அப்படியே ஒரு சிறுகதையாக எழுதிவிடுவார்கள். அது குறுங்கதையாக ‘சுருக்’காமலும் சிறுகதையாக சுருங்காமலும் நாவலாக விரியாமலும் நாவலில் இருந்து சுருங்கியும் சிறுகதையில் இருந்து பிதுங்கியும் அமைந்திருக்கும்.

அதே சமயம் சிறுகதையின் வடிவம் குறித்தும் அவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். அதன் தன்மை அதன் உள்ளடக்கம் என எல்லாமே தெரிந்திருக்கும் ஆனாலும் சுருங்கியும் பிதுங்கியும் முழுமையற்ற படைப்புகளைக் கொடுத்து வாசகர்களைச் சோதிப்பார்கள்.

நாம் தேர்ந்த எழுத்தாளர்களின் முப்பது பக்க படைப்புகளைக் கூட சிறுகதை என்ற குறிப்புடன் எந்த சிக்கலும் இல்லாமல் வாசித்துவிட முடிகிறது. ஆனால் சிலரின் சிறுகதைகளை, அவை நான்கு  பக்கங்களே இருந்தாலும் கூட அதனை வாசிக்க முடியாமல் மூச்சு முட்டுகிறது.

நூறு மீட்டர் ஓட்டத்திற்கு மரத்தான் ஓட்டம் போன்ற தொடக்கமும், மரத்தான் ஓட்டத்திற்கு நூறு மீட்டருக்கான தொடக்கமும் எப்படி ஓடுகின்றவர்களுக்கு பொருந்தாமல் மூச்சு வாங்குமோ அதே போலத்தான் வடிவச் சிக்கலில் எழுதப்படும் படைப்புகளால் வாசிக்கின்றவர்கள் மூச்சுத்திணறலுக்கு ஆலாகின்றார்கள்.

எழுதும் போதே எடிட்டர்களாக இருக்கும் எழுத்தாளர்களும் எழுதி முடித்தபின்னரும் எடிட்டிங் செய்யாத எழுத்தாளர்களுமே இதற்கான காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. ஒரு சிறுகதை எங்கே முடிகிறது என நாம்  வாசிப்பதற்குள் அந்தச் சிறுகதை எங்கே தொடங்கியது என்றே நமக்கு  தெரியாதபடிக்குத்தான் இங்கு பல சிறுகதைகள் வாசிக்க கிடைக்கின்றன.

நமது இம்மாத; மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம் தொடர் 7-லில் சித்ரா ரமேஷின் ‘வெண்மையின் நிறங்கள்’ சிறுகதைத் தொகுப்பு குறித்து பார்க்கவுள்ளோம்.

எழுத்தாளர் சித்ரா ரமேஷ், தமிழ் நாட்டில் நெய்வேலியில் பிறந்தவர். கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் வசித்து வருகின்றார். யுவபாரதி அனைத்துலகப்பள்ளியில் ஆசிரியையாகப் பணி புரிகிறார். அதோடு  வாசகர் வட்டம் என்ற இலக்கிய அமைப்பின் தலைவராகவும், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் செயலவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

இதுவறையில் ‘நகரத்தின் கதை’, ’ஆட்டோகிராப்’, ’நிழல் நாடகம்’, ’பறவைப்பூங்கா’, ‘ஒரு துளி சந்தோஷம்’, ‘ஒரு கோப்பை நிலா’, ‘வெண்மையின் நிறங்கள்’ என்ற புத்தகங்களை எழுதியிருக்கின்றார்.

அவற்றில் இவரது முதல் புத்தகமான ‘நகரத்தின் கதை’, 2014-ம் ஆண்டு ஜீவானந்தம் இலக்கியக் குழு வழங்கிய சிறந்த பெண் எழுத்தாளர்களின் படைப்புக்கான பரிசினை பெற்றது.

‘ஒரு துளி சந்தோஷம்’ என்கிற சிறுகதைத் தொகுப்பும் ‘ஆட்டோகிராப்’ என்ற கட்டுரைத் தொகுப்பும் 2018-ஆம் ஆண்டு சிங்கப்பூர் இலக்கியப் பரிசிற்காக தெரிவு செய்யப்பட்டது.

அதே போல, ‘ஒரு துளி சந்தோஷம்’ என்னும் சிறுகதை மற்றும் குறுநாவல் தொகுப்பு சிங்கப்பூர் இலக்கியப் பரிசை வென்றது.

அவ்வாறே 2005-ஆம் ஆண்டில் தங்கமுனை போட்டியில் சிறுகதைப்பிரிவில் மூன்றாம் பரிசினையும் பெற்றுள்ளார்.

டிசம்பர் 2023-ல் வெளிவந்த இவரது ‘வெண்மையின் சிறகுகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பினைக் குறித்து இனி பார்க்கலாம்.

பதினேழு சிறுகதைகள் கொண்ட தொகுப்பாக இத்தொகுப்பு வெளிவந்துள்ளது. அதிலிருந்து நான் வாசித்த சில சிறுகதைகளின் வாசிப்பு அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

வெண்மையின் நிறங்கள் சிறுகதையின் தொடக்கமே கதையினுள் இழுத்துவிடுகின்றது. ஒருவனை நல்லவனாகக் காட்டி பிறகு அவனும் அவன் குடும்பமும் போசமானவர்கள் என காட்டக்கூடிய கதை. கதையின் தொடக்கம் கொடுத்த ஆர்வத்தை கதையின் முடிவு கொடுக்கவில்லை. கதையாக வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை கதாப்பாத்திரத்தின் உரையாடலிலேயே தெரிந்து அதன் சுவாரஸ்யத்தைக் குறித்து “அட இவ்வளவுதானா…”  என கேட்க வைக்கிறது. அதுவே இந்தக் கதையின் பலவீனம் எனலாம்.

காதலின் சுவை என்றொரு கதை இருக்கின்றது. பெற்றோரின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்ட பணக்கார குடும்பப் பெண் தன் அம்மாவிற்கும் கடிதம் எழுதுகின்றார். கதையும் அந்தக் கடித பாணியிலேயே தொடங்கி முடிகின்றது. எனக்கு பிடித்த கதை இது. முக்கியமாக இதன் தலைப்பு. காதலின் சுவை. வெறும் சுவை என்று பொதுப்பெயரில் வைத்திருக்கின்றார். அது இனிப்பு சுவையா கசப்பு சுவையா என கதையை வாசிக்க வாசிக்க நம்மால் உணர முடியும். பணக்கார பெற்றோர் தன்னை வளர்த்தது சரியில்லை என எழுதும் கடிதத்தில் தான் எப்படி மெல்ல மெல்ல மாப்பிள்ளை வீட்டாரிடம் அடிபணிந்து போகிறேன் என புரியாமல் இருக்கும் மகளில் வாழ்க்கை நமக்கு பரிதாபமாக தெரிகிறது. பெற்றோர் வீட்டில் தன் விருப்பப்படி இருப்பதும் புகுந்த வீட்டில் தன் விருப்பப்படி இல்லாமல் இருப்பதுமே அந்தப் பெண்ணின் வாழ்க்கையை சீரழிக்கும் ஒன்றுதானே.

                பற்றுக பற்றினை!’ என்ற ஒரு கதை இருக்கிறது. இந்தக் கதையை வாசிக்க வாசிக்க எதுதான் கதை என்கிற குழப்பமே மேலோங்கியது. சிறுகதை என்பது ஒரு கருவை எடுத்துக் கொண்டு அதன் முடிவை நோக்கி போவது என புரிந்து கொண்டாலும் அப்படியான ஒரு கருவையோ ஒரு முடிவையோ நோக்கி போகாமல் இச்சிறுகதை திசை தெரியாமல் சுற்றுகிறது. இந்த ஒரே சிறுகதைக்குள் பல சிறுகதைகளுக்கான கருக்களை நாம் எடுக்கலாம்.

            1.கணவனை இழந்த பெண்ணின் தனித்த வாழ்க்கை. 2.தனித்து வாழும் பெண்ணுக்கு 3.சுனாமியின் போது ஒரு குழந்தை கிடைக்கிறது.  4. தனக்கு கிடைத்த குழந்தைக்காக தன் வாழ்நாளை கொடுக்கும் அம்மா. 5. தனது தத்துபிள்ளை தன் பேச்சை மீறி யாரையோ திருமணம் செய்து கொண்டு தன்னை வளர்த்த அம்மாவை விட்டுவிட்டு வெளியூருக்கு போகிறாள். 6. தன் மகள் தன்னை விட்டு பிரிந்தது குறித்து சாமியாரிடம் பேசும் அம்மாவிடம் எதிலும் பற்றில்லாமல் இருக்க சொல்கிறார் சாமியார். 7. எல்லோரும் சாமியாராக பார்க்கும் ஒரு மனிதர் முன் அவரது முன்னால் காதலியும் நடிகையுமான பெண்ணொருத்தி வந்து பேச சாமியாரும் தன் நிலை மறந்து வழிந்து பேச தொடங்குகின்றார். 8. தன்னை பெண் பார்க்க வந்தவன் என்ன காரணத்திற்காக தன்னை விட்டு விலகியிருப்பான். இப்படி குறைந்தது பத்து சிறுகதைகளுக்கான கதைக்கருக்களை ஒரே கதையில் கொட்டி தீர்த்திருக்கின்றார் எழுத்தாளர். எதை படிக்கின்றோம் யாருக்கு என்ன ஆனது ஏன் இதைபற்றி சொல்லவில்லை என பல கேள்விகளோடு இந்தக் கதையை வாசித்து முடிக்க ரொம்பவும் அசதியாகிவிட்டது. வாசித்த பின் இந்தக் கதை மனதில் நிற்கவுமில்லை. நிதானமாக ஒன்றின் பின் ஒன்றாக இக்கதையை நகர்த்தியிருக்கலாம் அல்லது அதன் பக்கங்களை அதிகப்படுத்தியிருக்கலாம்.

            கருப்பு வெள்ளை என்கிற சுவாரஸ்யமான கதை இருக்கிறது.  எழுத்தாளரின் வழக்கம் போல சுவாரஸ்யமான கதையின் தொடக்கம் இந்தக் கதையிலும் அமைந்திருக்கிறது. ஆனால் மீண்டும் அதே பலவீனம்தான். தான் கருப்பாக இருப்பதால் பிரச்சனைகளைச் சந்திக்கும் ஒரு பெண். அதே போல தான் வெள்ளையாக இருப்பதால் பிரச்சனைகளைச் சந்திக்கும் இன்னொரு பெண் என  இக்கதைச் சொல்லப்பட்டிருக்கும். இருவருக்கும் ஒரே மாதிரி உடையை அணிந்துதான் தங்களின் நிற பிரச்சனையைத் தீர்க்கிறார்கள். ஆனால் வெறும் கதைச் சுருக்கம் போல நம்மை எதிர்ப்பார்க்க வைத்து  ஏமாற்ற அடைய வைக்கும் பலவீனமாக சொல்லப்பட கதை.

தீங்கிரை என்னும் கதையில் அப்பா அம்மாவை விட்டு இன்னொரு பெண்ணுடன் செல்கிறார். அப்பா இல்லாததைம் மூன்றாம் ஆண்டு படிக்கும்  மகள் எப்படி புரிந்து கொள்கிறாள் அதற்கு எப்படி தயாராகிறாள் என சொல்ல முயலும் கதை. ஆனால் அதன் முழுமையை இக்கதை வாசகர்களுக்கு கொடுக்கவில்லை.

செம்புலப் பெயர் நீர் என்னும் சிறுகதையில் 1964-ஆம் ஆண்டு காலக்கட்டத்திலும் 2018-ஆம் ஆண்டு காலக்கட்டத்திலும் திருமணத்திற்கு ஜாதி மதம் பார்ப்பது எப்படி மாறியுள்ளது என மேலோட்டமாக சொல்லியிருக்கிறார்.

மொத்தம் பதினேழு சிறுகதைகள் கொண்ட இந்தத் தொகுப்பில் பத்து சிறுகதைகளை மட்டுமே என்னால் வாசிக்க முடிந்தது. வாசித்த வரையில் பத்து கதைகளிலுமே ஏறக்குறைய ஒரே மாதிரி சிக்கலைத்தான் என்னால் உணர முடிந்தது. இதிலிருந்து ஒரு கதையை தொகுப்பில் சிறந்த கதை என என் வாசிப்பில் இருந்து என்னால் எடுத்து வைக்க முடியவில்லை. ஒருவேளை நான் வாசிக்காத அந்த ஏழு கதைகளில் அப்படியொரு கதை இருக்கலாம்.

வாசித்த கதைகளில் ஆறு சிறுகதைகளின் வாசிப்பு அனுபவத்தை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொண்டேன்.

எழுத்தாளரின் ஒவ்வொரு சிறுகதையையும் வாசிக்கும் போது சுறா மீனை சிறிய கண்ணாடி தொட்டியில் வைத்து விளையாட்டு காட்டுவதாகவே தோன்றியது. அந்தச் சிறிய மீன்  தொட்டி சுறாவிற்கு பொருத்தமாக இருக்காது, சுறாவின் வளர்ச்சியையும் அது தடை செய்கிறது.

எழுத்தாளரின் பெரும்பாலான கதைகள் அப்படித்தான் அமைந்திருக்கின்றன. பெரிதாக சொல்லவேண்டிய வாழ்வை எளிமையாக சொல்கிறேன் என்  ரொம்பவும் குறுகலாக சொல்லிடுகின்றார். அத்தனை வேகமாக கதாப்பாத்திரங்களில் வாழ்வை நம்மால் உணர முடியவில்லை. ஏதோ குறுநாவலின் கதைச் சுருக்கத்தை கொஞ்ச நீளமாக வாசித்த அதிருப்திதான் தோன்றுகிறது.

இவரிடம் சொல்வதற்கு கதை இருக்கிறது. சக மனிதனின் வாழ்விற்குள் நுழையும் திறன் இருக்கிறது. ஆனால் அதனை ஆழமாக எடுத்து எழுதி நம்முன் வைக்கும் அளவிற்கு பொறுமை இல்லையா என தெரியவில்லை. விரிவாக தெளிவாக சொல்லாததாலேயே முக்கியமான கதைகளாக வரவேண்டியவை அதன் தீவிரத் தன்மையை இழந்துவிடுகிறது.

நாம் நாவலை வாசித்து கொண்டிருக்கும் போது மீண்டும் ஒருமுறை முதல் அத்தியாயத்தை வாசித்து பார்ப்பது அல்லது முந்தைய அத்தியாயத்தைப் பார்ப்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் சிறுகதை என்பது பாய்ச்சல் மிகுந்தது. அந்த பாய்ச்சலை ஒரே மூச்சில் நாம் வாசித்து விடலாம். சில நெடுங்கதைகளை வாசிக்கும் போதுகூட அந்தப் பாய்ச்சலை நம்மால் உணர முடியும். ஆனால் எழுத்தாளரின் சிறுகதைகளை வாசிக்கும் போது முதல்ல் பக்கத்தில் படித்தது கூட இரண்டாம் பக்கத்தில் மறந்துவிடுகிறது. யார் வந்தார்கள் என்ன ஆனது ஏன் அப்படி நடக்கின்றது இதற்கு முன் என்ன ஆனது போன்ற சந்தேகங்களும் குழப்பங்களுமே வாசகர்களைத் தொல்லைச் செய்கிறது.

இதையே புதிய எழுத்தாளர்கள் செய்யும் போது நிதானமாக எழுதவில்லை. அவசரமாக எழுதுகின்றார் என்று சொல்லி அவர்களுக்கு புரியவைக்கலாம். அதே சமயம் எழுத்தில் உள்ளவர்களிடம் இருந்தே இப்படியான படைப்புகள் வெளிவரும்போது அவர்களையும் நிதானமாக எழுதுங்கள் அவசரமாக எழுதாதீர்கள் இன்னும் இன்னும் ஆழமாக எழுதிச்செல்லுங்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது.

எழுத்தாளரின் கதைகளை அங்கொன்றும் இங்கொன்றும் வாசித்திருக்கின்றேன். இதுதான் நான் வாசித்த அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. நான் வாசித்த இந்தத் தொகுப்பை குறித்த என் வாசிப்பு அனுபவத்தைதான் எந்தவொரு ஒழிவுமறைவு இன்றி சொல்லியிருக்கிறேன். என் பார்வை தவறாகவும் இருக்கலாம். அதை நிரூபிக்க இந்தக் கதைகளை நீங்கள் வாசிக்க வேண்டும். அதன் பிறகுதான் நீங்களும் இப்படித்தான் பார்க்கிறீர்களா அல்லது உங்களிடம் மாற்றுப்பார்வை இருக்கிறதா என நாம் உரையாட முடியும்.

எழுத்தாளர் சித்ரா ரமேஷிடம் வாசகனாய்ச் சொல்வதற்கு ஒன்று உள்ளது, உங்கள் கதைகளில் அதிகம் எதிர்ப்பார்க்கிறோம். இப்போது கொடுக்கும் இந்த குறுகிய அனுபவம் எங்களுக்கு போதாது. அதே சமயம் உங்களுக்கு இது உதவாது. அதிகமா எழுதுங்கள் இன்னமும் ஆழமாக எழுதுங்கள் வாசிக்க நாங்கள் காத்திருக்கின்றோம்.

மீண்டும் அடுத்த மாதம் மேலும் ஒரு சிங்கப்பூர் புத்தகத்துடன் சந்திக்கலாம்.

00

எழுத்தாளர் தயாஜி.

மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி  அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார்.  முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும்  ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார்.              ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *