-பாலமுருகன். லோ

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த விமான நிலையத்தைப் பார்த்தபடி, தன் வாயைப் பிளந்தவாறே, வேணு தன் அக்காவுடன் தனது முதல் விமானப் பயணத்திற்காக விமான நிலையத்துக்கு வந்தடைந்தான். அன்று விமான நிலையமே பெருந்திரளான கூட்டத்தோடு காணப்பட்டது.

வேணு பள்ளியில் நன்மதிப்பைப் பெற்ற மாணவர்களில் ஒருவன். கலந்துரையாடலுக்காக வேறு பள்ளிக்குப் போய்ப் பேச வேண்டுமென்றால், வேணு அந்தக் குழுவில் இடம் பெற்றிருப்பான். படிப்பிலும், ஸ்கவுட்டிலும், விளையாட்டுகளிலும் அவன் பங்குகொள்வது வழக்கமாக இருந்தது.

நூலைப்போல சேலை; அம்மாவைப்போல பிள்ளை என்பார்களே. அது வேணுவின் விஷயத்தில் முற்றிலும் உண்மை. ஏனென்றால், வேணுவின் அம்மாவும் அதே பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருவதாலோ என்னவோ, பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தாலே போதும், வேணுவை மற்ற குழந்தைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டாமல், மற்றொரு மாணவனாகவே பார்த்துவிடுவாள் லீலா. எல்லாக் குழந்தைகளிடமும் எவ்வளவு அன்பும் பாசமும் செலுத்துவாளோ, அதே அளவுதான் தன் மகன் வேணுவின் மீதும் செலுத்தினாள்.

எந்தத் தனிப்பட்ட சலுகையும் அவனுக்கு கிடையாது. அவனுக்கு ஏதாவது பிரச்சினை என்றால், அவன் தானாகப் போய் அவனது வகுப்பாசிரியர்களிடம் அதை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். வேணுவின் அம்மா லீலா ஒருபோதும் அவனுக்காகப் பள்ளியிலோ அல்லது உடன் பணியாற்றும் மற்ற ஆசிரிய, ஆசிரியைப் பெருமக்களிடமோ வாதாட மாட்டாள்.

விமான நிலையத்தில் வேணுவை மற்ற பிள்ளைகளுடன் சேர்த்துவிட்டு, அவன் உள்ளே செல்லும் வரை அவளும் தன் மகளுடன் காத்திருந்தாள். குழந்தைகளுக்கே உரிய சந்தோஷமும் பூரிப்பும் வேணுவின் முகத்தில் காணப்பட்டது. வந்து இறங்கியவுடன், தன் நண்பர்கள் இருக்கும் இடத்தைத் தேடி ஓடிவிட்டான்.

லீலா தன் மகளைப் பார்த்து, “இந்தாடி, பார்த்தியா அவனை? வந்து இறங்கினதும் ஓடிட்டான்,” என்றாள்.

“ம்மா, அவன் எப்போதும் அப்படித்தானே? கொஞ்சம் என்தூசியாசம் அதிகம். அதுவும் இப்போ அவனை கேட்கவே வேண்டாம்,” என்றாள் விநோதினி.

“வாம்மா, நாமதான் அவன் இருக்கும் இடத்திற்குப் போக வேண்டும்,” என்றாள் விநோதினி.

“எல்லாருடைய பெயரையும் டீச்சர் ஒவ்வொருத்தரா வாசிப்பாங்க. அவரவர் பெயரை கூப்பிட்டவுடன் முன் வந்து அந்த உணவு பொட்டலத்தை வாங்கிக்கொண்டு போங்க,” என்றார் உடற்பயிற்சி ஆசிரியர் ராம்.

ஒவ்வொருவரின் பெயரும் வாசிக்கப்பட்டது. வேணுவின் பெயரும் வந்தவுடன், அவன் அவர்கள் கொடுத்த பொட்டலத்தைப் பெற்றுக்கொண்டான். அம்மாவும் மகளும் அவனை கவனித்துக்கொண்டே இருந்தனர். அவனது முகத்தில் அப்படியொரு ஆனந்தம்! முதல் முறை அல்லவா? அதுவும் தன் நண்பர்களுடன் கடல் கடந்து பயணம் என்பதால், அவனாலேயே தாங்க முடியாத மகிழ்ச்சி.

சிறிது நேரம் கழித்து, மற்ற நண்பர்களுடன் விமானத்திற்குள் நுழைந்தான் வேணு. லீலாவின் கண்களிலிருந்து லேசாகக் கண்ணீர் அரும்பியது; பாசத்தின் வெளிப்பாடாக. பசு தன் கன்றைப் பிரிந்த வாட்டத்தில் இருப்பதுபோல, வேணுவின் விமானம் ரன்வேயிலிருந்து மெதுவாகப் புறப்பட்டுச் சென்றதைப் பார்த்தாள். புறா தன் இறக்கைகளை அடித்துக்கொண்டு விண்ணை நோக்கிப் பறப்பதுபோல, அந்த விமானமும் தன் இராட்சத உடலை உயர்த்திக்கொண்டு மேலே பறந்தது. லீலாவும், விநோதினியும் அதைக் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு வீடு திரும்பினர்.

லீலாவும் குடும்பத்தினரும் ஆவலுடன் வேணுவின் தொலைபேசி வரும் என்று காத்திருந்தனர். ஆனால் முதல் நாள் வேணுவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரவில்லை.

“என்னடி, விநோ? இவன் ஏன் இப்படி பண்ணுறான்?” என்றாள் லீலா.

“ஏம்மா, அவனை ஃப்ரீயா இருக்க விடேன். நேரம் கிடைக்கும்போது அவனே கூப்பிடுவான்,” என்றாள் விநோ.

“இல்லடி, நான் அதுக்குச் சொல்லல. மனசு அடுச்சுக்குது.”

“நீ ஒண்ணும் பதட்டப்படாதே. அவனே கூப்பிடுவான். டயர்டா கூட இருக்கும். அப்புறம் அந்த செமினாருக்கு எல்லாம் தயார்ப் பண்ணணும். ஒருவேளை அதனால கூட அவன் கூப்பிடாமல் இருக்கலாமில்ல,” என்றாள் விநோதினி.

“சரிடி, ஏதோ சொல்லுற. நானும் கேட்டுக்கிறேன்,” என்றாள் லீலா.

மறுநாள் லீலா தன் மகனைப் பார்க்கத் தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்தாள். வீட்டில் உள்ள அனைவரும் ஆவலுடன் இருந்தனர். நேரம் மெதுவாக நகர்ந்தது; நிகழ்ச்சி ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்று வந்தது. வேணுவின் பகுதி வருவதற்காக வீட்டில் உள்ள அனைவரும் காத்திருந்தனர். இடையிடையே, “வேணு வந்தானா? டிவியில் வந்தானா?” என்று ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டனர். லீலா, “இன்னும் இல்லை,” என்று பதில் அளித்தாள்.

ஒருவழியாக, மாலை ஐந்து மணி அளவில் வேணுவும் அவனது நண்பர்களும் அந்தச் செமினாரில் சொற்பொழிவாற்றியது காணொளியில் காட்டப்பட்டது. அதைக் கண்டு குடும்பத்தினர் மகிழ்ந்தனர். அவன் பேசிய விதம், அவனது உடை, உடல் நளினம் ஆகிய அனைத்தையும் பார்த்து வீட்டில் உள்ளவர்கள் பூரித்தனர்.

அன்றைய மாலைப் பொழுது இனிதே நிறைவேறியது. இரவு உணவு முடிந்தவுடன் அனைவரும் படுக்கைக்குச் சென்றனர். லீலா மட்டும் படுக்கைக்குச் சென்ற பின்னும், அவளது மகனை நினைத்தவாறே இருந்தாள். அவளது மனதில், “இன்றாவது வேணு கூப்பிடுவானா?” என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. கடிகார மணி பத்து முறை அடித்தது. அவளது பார்வை கடிகாரத்தைப் பின்தொடர்ந்தது; ஆனால் எண்ணமோ வேணுவைப் பற்றி ஓடிக்கொண்டே இருந்தது. இப்போது அவன் இருந்திருந்தால், என்னிடம் வம்பு இழுத்துக்கொண்டிருப்பான் என்ற எண்ணம்தான் அவளது நினைவுகளில்.

“ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு” என்ற ரிங் டோன் அவளது கைப்பேசியில் ஒலிக்க, வேகமாக ஓடிப்போய் கைப்பேசியின் திரையைப் பார்த்தாள். அதில் “வேணு குட்டி” என்று எழுதியிருந்தது. ஆசையோடு திரையில் வந்த பெயரைப் பார்த்த பிறகு கைப்பேசியை ஆன் செய்து, “ஹலோ வேணு குட்டி,” என்றாள்.

ஆனால் மறுமுனையிலிருந்து பதில் வரவில்லை; மாறாக வேணுவின் அழுகைதான் கேட்டது. லீலாவின் நெஞ்சு ஒரு கணம் நின்று துடிக்க ஆரம்பித்தது. மனதில் ஏதேதோ ஓடத் தொடங்கியது.

“ஏண்டா குட்டி, ஏன் அழுவுற? என்னாச்சு? அம்மாகிட்ட சொல்லு முதல்ல. பக்கத்தில யாரு இருக்க? ஏதாவது சொல்லுடா. ஒண்ணும் பேசாம இருந்தா, அம்மாவுக்கு என்னனு நினைக்கத் தோணும்.”

“ம்மா… ம்மா… வந்து, வந்து…”

“அட சொல்லுடா!”

“ம்மா… எல்லாப் பசங்களும் அவங்க அவங்க நண்பர்களுடன் அறையில் இருக்கும்போது, என்னை மட்டும் என்னுடைய நண்பர்களுடன் இருக்கக் கூடாது என்று சொல்லி, என்னைக் காட்டிலும் சிறிய பசங்களுடன் போட்டுவிட்டனர்.

ஏற்கனவே செமினாருல எங்க டீமைக் கடைசியா பங்கேற்கச் செய்தாங்க. செமினாருல கூட்டமே இல்ல; எல்லாரும் எழுந்து வெளியே போயிட்டாங்க. ஒரு பத்து பேரு இருந்தா பெருசு. சரி, அதுதான் அப்படின்னா… அறைக்கு வந்த பிறகு ஆசிரியை அந்தச் சிறிய பசங்களோட என்னைத் தங்கச் சொல்லிட்டாங்க.

நான் எவ்வளவோ கேட்டு பார்த்தேன். ஆனா அவுங்க சொன்னதிலேதான் நின்னாங்க. மேலும், எல்லாரும் இருக்கும் போது நீ செஞ்சதுக்கு நான் ஸ்கூல்ல கம்ப்ளைன்ட் செய்வேன்னு சொல்றாங்க.

ஏம்மா, நான் என்ன அப்படி தப்பு பண்ணுனேன்? நேற்று இரவு செமினாருக்கு ரெடி செய்துட்டு இருந்தோம். நேரம் ஆனதே தெரியல. நான் செமினாருக்கு ரெடி பண்ணிட்டு போன போது என்னுடைய அறைக் கதவு சாத்தப்பட்டிருந்தது. அதனால நான் மீண்டும் எனது நண்பர்களுடன் அன்று இரவு தூங்கிவிட்டேன்.

ஏம்மா, இது தவறா? இதைப் பெரிய குத்தமா சொல்லி, அவங்க ஸ்கூல்ல கம்ப்ளைன்ட் செய்வேன்னு சொல்லுறாங்க. வேற என்ன செய்ய? அதான் அவங்ககிட்ட மன்னிப்பு கேட்டேன்,” என்றான்.

உள்ளூர லீலா எண்ணத் தொடங்கினாள்: ஏன் இந்தக் காமாட்சி இப்படி பண்ணுறா? யார் மேல இருக்கிற கோபத்தை யார் மேல காட்டுறா அவள்? என் மேல கோபம்னா அதை நேரா என்னைக்கிட்டே காட்ட வேண்டியதுதானே. இல்ல கேட்டா, நான் அதற்கு தகுந்த விளக்கத்தைத் தரப்போறேன். அதைவிட்டுட்டு ஏன் இப்படி சின்னப் பிள்ளையைத் தண்டிக்கிறா?

அவன் நல்லா பண்றது பிடிக்கல அவளுக்கு. ஸ்கூல் கூட எதற்கெடுத்தாலும் வேணு வேணு என்று தலைமையாசிரியர் முதல் எல்லா ஆசிரியரும் வேணு மீது ஒரு சாப்ட் கார்னர் வைத்திருக்கும் பட்சத்தில், இவளுக்கு மட்டும் ஏன் இவ்வளவு கோபம், வன்மம் எல்லாம்? குழந்தைகள் மீது இவ்வளவு இருக்கக்கூடாது என்று மனதில் நினைத்தவள்:

“கண்ணா வேணு, நீ ஒண்ணும் அழுவாத; தைரியமா இருடா. நீ வேற ஆசிரியர் கிட்ட சொன்னையா?”

“ஏம்மா, நான் சொன்னேன். அவரு கூட, ‘இதுல என்னடா இருக்கு? நீ போய் உன் நண்பர்களுடன் தங்கிக்கோ’ என்றுதான் சொன்னாரு. ஆனா இந்த டீச்சர் மட்டும்தான் மீண்டும் என்னை கூப்பிட்டு, நீ அந்தப் பசங்களோடதான் தங்கியாகணும்னு சொல்லிட்டாங்க,” என்றான்; அவனது அழுகை முடிந்து முடியாமலும்.

“ம்மா… நான் இப்போ போனை வைக்கிறேன்,” என்று கூறி வேணு தன் அழைப்பைத் துண்டித்தான்.

லீலா மற்றும் விநோதினி இருவராலும் இதைக் கேட்ட பிறகு அதை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. பசங்கள் கடல் கடந்து, பெற்றோரை விட்டு, பல்லாயிரம் மைல்கள் பயணித்து செல்லுகையில், அவர்களிடம் அன்பாகவும், அனுசரணையாகவும் இருக்க வேண்டுமே தவிர, இது போன்று நடக்கக்கூடாது என்று லீலா நினைத்தாள்.

வேணுவின் முதல் பயணமே அவனுக்கு மறக்க முடியாத ஒரு நிகழ்வாகிவிடுமோ! நல்ல நிகழ்வாக இருந்தால் கவலையில்லை; ஆனால் இதுவே அவன் மனம் புண்படும் சம்பவமாக இருக்குமேயானால், அதை அந்தப் பிஞ்சு மனசு எப்படி ஏற்றுக்கொள்ளும்? ஆசிரியையாய் இருந்துகொண்டு இது கூட தெரியாமலே இருக்கிறாளே இவள். இன்னும் மூன்று தினங்கள்தான் உள்ளது. நாம் இப்ப கூட பேசாமல் இருந்துவிட்டால், பெற்றோர் என்ற முறையில் நம் குழந்தைக்கு வேண்டியதைச் செய்யாத நபராக ஆகிவிடுவோம் என்று நினைத்தவள், தன் கைப்பேசியை எடுத்து அதன் திரையில் உதவி தலைமை ஆசிரியரின் நம்பரைத் தேடினாள். ஒரு பெற்றோராகத் தொடர்புகொண்டு, தன் கவலையையும், மகன் மீது உள்ள பாசத்தையும், நடந்த நிகழ்வையும் விளக்கினாள்; குரல் தழுதழுக்க.

லீலா உதவி தலைமை ஆசிரியரிடம் நடந்ததைத் தெளிவாகச் சொன்னதும், அவர் உடனே மற்றொரு ஆண் ஆசிரியரை அழைத்து வேணுவின் நிலையைச் சரிபார்க்கச் செய்தார். பின்னர், வேணுவை அவனுடைய நண்பர்களின் அறையிலேயே தங்க ஏற்பாடு செய்தார்.

அப்போது வேணுவுக்கு, இந்த மாற்றத்திற்கு காரணம் அம்மாதான் என்பது புரிந்தது. அந்த உணர்வு அவன் மனதில் புதிய தெம்பையும் உற்சாகத்தையும் எழுப்பியது.

வேணுவின் மனத்தின் ஆழத்தில், இறுதியில் உண்மையே வென்றது என்ற அமைதி பரவியது. முதல் பயணத்தில் ஏற்பட்ட அந்தச் சிறு வலி, நண்பர்களின் இனிய நினைவுகளில் கரைந்து மறைந்தது.

000

பாலமுருகன்.லோ

பிறந்த இடம் கரூர் மாவட்டம். பள்ளிப் படிப்பு அனைத்தும் கரூரில் முடித்த பிறகு. வேலை நிமித்தமாகச் சென்னைக்கு 1997-ல் வந்தவன் பல நிறுவனங்களில் பணிபுரிந்து தற்போது ஒரு ஜெர்மானிய நிறுவனத்துக்கு ஆஃப்டர் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் பிரிவில் வேலை செய்துவருகிறேன். சிறு வயதிலிருந்தே எனக்கு எழுதும் ஆர்வம் இருந்தது. ஆனால் வளர வளர படிப்பு, வேலை திருமணம், பிள்ளைகள் என்று வந்த பிறகு எழுதும் ஆர்வம் சற்று மங்கிக் காணப்பட்டது. ஆனால் என்னாலும் மீண்டும் எழுத முடியும் என்று என்னை நான் முழுமையாகக் கண்டுகொண்ட வருடம் 2020 என்று கூறலாம். 2019-ல் இருந்து தீவிரமாகக் கதை மற்றும் கவிதைகளை வாசித்து ஒரு வாசகராக என்னை முழுமையாக மாற்றி இருக்கிறது இந்தக் கலை இலக்கிய உலகம் .

மற்ற பதிவுகள்

One thought on “முதல் பயணமும் முதல் காயமும்

  1. முதல் பயணமும் முதல் காயமும் சிறுகதை ஒரு சிறு வயது மாணவனின் மனதில் ஏற்படுத்திய வலியை மிக நேர்த்தியாக அவனது மனதில் உள்ளதை உணர்ந்து எழுதியதுடன் அதற்கான ரிமெடியையும் தந்துள்ளது அருமை.நாளாக நாளாக எழுத்தாளரின் நடையில் மெருகு கூடி வருகிறது.மனமார்ந்த வாழ்த்துக்கள்.👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *