-கு.ஜெயபிரகாஷ்
ஒரு காட்டுக்குள் நுழையும்போது முதலில் நம்மைச் சூழ்வது அமைதிதான். உயர்ந்து நிற்கும் மரங்கள், அசையாமல் விரிந்திருக்கும் கிளைகள், இலைகளின் மெதுவான அசைவு இவை அனைத்தும் சேர்ந்து, காடு பேசாத ஓர் உலகம் என்ற எண்ணத்தை நமக்குள் உருவாக்குகின்றன. ஆனால் அந்த அமைதியைச் சற்றுக் கூர்ந்து கேட்கத் தொடங்கினால், வேறொரு உலகம் நம் முன் திறக்கிறது.
மண்ணுக்குள் விரியும் வேர்கள். வேர்களோடு இணைந்து வாழும் பூஞ்சைகள். நீரும் ஊட்டச்சத்துக்களும் நகரும் நுண்ணிய பாதைகள். பூச்சிகளின் தாக்குதலை எதிர்கொள்ளும் தாவரங்களின் வேதியியல் பாதுகாப்புகள். சுற்றுச்சூழலின் மாற்றங்களுக்கு ஏற்ப தங்கள் உடலியக்கத்தை மாற்றிக் கொள்ளும் மரங்கள்.
ஜெர்மானிய வன அதிகாரியும் எழுத்தாளருமான பீட்டர் வோல்பென் (Peter Wohlleben) எழுதிய The Hidden Life of Trees: What They Feel, How They Communicate-Discoveries from a Secret World என்ற நூல், இந்தப் புலப்படாத உலகத்தை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறது.
இந்த நூலின் மையத்தில் இருக்கும் சிந்தனை எளிமையானது; ஆனால் அதன் தாக்கம் ஆழமானது:காடு என்பது தனித்தனி மரங்களின் தொகுப்பு அல்ல; ஒன்றோடொன்று தொடர்புடைய உயிர்களின் சிக்கலான உலகம்.
தொலைவில் இருந்து பார்க்கும்போது ஒவ்வொரு மரமும் தனித்தனி உயிராகவே தெரிகிறது. ஆனால் மண்ணுக்குள் அதன் வாழ்க்கை வேறுபட்டது. மரங்களின் வேர்களுடன் மைக்கோரிசா (mycorrhiza) எனப்படும் பூஞ்சைகள் நெருங்கிய உறவில் வாழ்கின்றன. இந்தப் பூஞ்சைகள் மரங்களிடமிருந்து கார்பன் சேர்மங்களைப் பெறுவதோடு, மண்ணிலிருந்து நீர் மற்றும் சில கனிம ஊட்டச்சத்துக்களைப் பெறுவதில் மரங்களுக்கு உதவுகின்றன.
இதனால் காடு என்பது மேலே தெரியும் தண்டுகள் மற்றும் கிளைகளால் மட்டும் உருவானது அல்ல. அதன் உண்மையான வாழ்க்கையின் ஒரு பெரும் பகுதி நம் கண்களுக்குப் புலப்படாத மண்ணுக்குக் கீழே நடைபெறுகிறது.
இந்த அடிநில உறவுகளைப் பற்றிய ஆய்வுகள், மரங்களும் பூஞ்சைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஒரு சிக்கலான உயிரியல் வலையமைப்பின் பகுதிகள் என்பதை வெளிப்படுத்தியுள்ளன. அதனால் ஒரு மரத்தைத் தனியாகப் பார்ப்பதைவிட, அது வாழும் முழு சூழலுடன் இணைத்துப் பார்ப்பதே பொருத்தமானது. இயற்கையைப் பற்றி நாம் பேசும்போது “வலிமையானது உயிர்வாழும்” என்ற போட்டியின் மொழி அடிக்கடி முன்னிலைக்கு வருகிறது. ஆனால் காடு அதைவிட நுட்பமானது.
மரங்கள் ஒளி, நீர், இடம் போன்ற வளங்களுக்காகப் போட்டியிடுவது உண்மை. அதே நேரத்தில், அவற்றுக்கிடையே ஒத்துழைப்பையும் ஆதரவையும் உள்ளடக்கிய உறவுகள் இருக்கக்கூடும். சில ஆய்வுகள், மைக்கோரிசா வலையமைப்புகள் வழியாக தாவரங்களுக்கிடையே கார்பன் மற்றும் பிற வளங்களின் பரிமாற்றம் நடைபெறக்கூடும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. இருப்பினும், இத்தகைய பரிமாற்றங்களின் அளவும் அவற்றின் சூழலியல் முக்கியத்துவமும் எல்லா சூழல்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று கூற முடியாது. இதில்தான் வோல்பென் முன்வைக்கும் பார்வை நம்மை ஈர்க்கிறது. காட்டை அவர் ஒரு உயிருள்ள சமூகத்தைப் போலக் காண்கிறார்.
அந்தச் சமூகத்தில் ஒவ்வொரு மரத்தின் வாழ்க்கையும் மற்ற உயிர்களின் வாழ்க்கையிலிருந்து முற்றிலும் பிரிக்கப்பட்டதல்ல. காட்டில் வயதான மரங்கள் வெறும் கடந்த காலத்தின் சாட்சிகள் அல்ல. அவை பல தலைமுறைகளாக அந்தச் சூழலை எதிர்கொண்டு வளர்ந்த உயிரினங்கள். வோல்பென் தனது நூலில் “mother trees” தாய்மரங்கள் என்ற கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். பெரிய, வயதான மரங்கள் அருகிலுள்ள இளம் மரங்களின் வளர்ச்சியைப் பல வழிகளில் ஆதரிக்கக்கூடும் என்ற எண்ணம் இதில் அடங்கியுள்ளது. ஆனால் “தாய்மரம்” என்பது அறிவியல் வகைப்பாட்டுச் சொல் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அது ஒரு சிக்கலான சூழலியல் உறவை மனிதர்களுக்குப் புரியும் மொழியில் விளக்கும் உருவகம். எனினும், வயதான மரங்களின் சூழலியல் முக்கியத்துவம் மறுக்க முடியாதது. அவை நிழல், வாழிடங்கள், கரிமப் பொருட்கள், மண்ணின் நிலைத்தன்மை போன்ற பல வழிகளில் காட்டின் அமைப்பில் பங்கு வகிக்கின்றன. ஒரு பழைய மரத்தை வெட்டுவது, ஒரு தனி உயிரினத்தை அகற்றுவது மட்டுமல்ல; அது பல ஆண்டுகளில் உருவான ஒரு சிறிய சூழலியல் உலகத்தை மாற்றக்கூடும்.
ஒரு மரத்தின் மீது பூச்சிகள் தாக்கும்போது அதன் உடலில் பல்வேறு பாதுகாப்பு மாற்றங்கள் நிகழ்கின்றன. சில தாவரங்கள் காற்றில் பரவும் வேதிப்பொருள் சமிக்ஞைகளை வெளியிடுகின்றன. இவை அருகிலுள்ள தாவரங்களின் பாதுகாப்பு எதிர்வினைகளைத் தூண்டக்கூடும். இங்கே “மரம் பேசுகிறது” என்ற சொற்றொடர் கவிதையாகத் தோன்றலாம். ஆனால் அந்தப் பேச்சு மனிதர்களின் மொழியைப் போன்றதல்ல. அது மூலக்கூறுகளின் மொழி. அது வேதியியல் மாற்றங்களின் மொழி. அது உயிரியல் எதிர்வினைகளின் மொழி. ஒரு மரத்தின் உடலில் நிகழும் மாற்றம், அதன் சுற்றுப்புறத்திலுள்ள பிற உயிரினங்களுக்கும் தகவலாக மாறக்கூடும். இயற்கையின் தகவல் பரிமாற்றம் எப்போதும் ஒலி அல்லது வார்த்தைகளின் வடிவில் இருக்க வேண்டியதில்லை என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது.
வோல்பென் நூலில் மரங்களின் “நினைவாற்றல்” பற்றியும் பேசுகிறார். இங்கேயும் மனித நினைவாற்றலுடன் நேரடி ஒப்பீடு செய்வது சரியானதல்ல. ஆனால் தாவரங்கள் தாங்கள் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு ஏற்ப தங்களுடைய உடலியல் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள முடியும். வறட்சி, குளிர், வெப்பம் போன்ற அழுத்தங்களுக்கு தாவரங்கள் பல்வேறு உடலியல் மற்றும் மூலக்கூறு அளவிலான எதிர்வினைகளை வெளிப்படுத்துகின்றன.
சில சந்தர்ப்பங்களில் முந்தைய சுற்றுச்சூழல் அனுபவங்கள் பின்னர் ஏற்படும் எதிர்வினைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதும் தாவர அறிவியலில் ஆராயப்பட்டு வருகிறது.
எனவே, “மரங்கள் மனிதர்களைப் போல நினைவுகளை நினைத்துக் கொண்டிருக்கின்றன” என்று கூறுவதைவிட, “மரங்களின் உடல், அது எதிர்கொண்ட சுற்றுச்சூழலின் தாக்கங்களைப் பதிவு செய்யும் வகையில் செயல்படுகிறது” என்று கூறுவது அறிவியல் ரீதியாக மிகவும் கவனமான அணுகுமுறையாகும்.
மனித வாழ்க்கையின் அளவுகோலில் ஒரு மரத்தின் வாழ்க்கையைப் பார்க்கும்போது அது மெதுவானதாகத் தெரிகிறது. ஒரு குழந்தை சில ஆண்டுகளில் வளர்கிறது. ஒரு மனிதன் சில பத்தாண்டுகளில் முதுமையை அடைகிறான். ஆனால் ஒரு மரம் பல தசாப்தங்களையும், சில நேரங்களில் பல நூற்றாண்டுகளையும் கடந்து நிற்கிறது. அதன் உலகில் “வேகம்” என்பது வேறொரு பொருளைக் கொண்டது. மரம் இன்று முளைத்ததற்காக நாளையே காடாக மாறுவதில்லை. காட்டின் அமைப்பு தலைமுறைகளின் மீது கட்டப்படுகிறது. இதனால்தான் The Hidden Life of Trees நம்முடைய கால உணர்வையே சற்றே மாற்றுகிறது. இயற்கையின் நேரத்தை மனிதனின் நேரத்தால் மட்டும் அளக்க முடியாது.
வோல்பென் முன்வைக்கும் மற்றொரு முக்கியமான கேள்வி, மனிதர்கள் காடுகளை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதுதான். ஒரே வயதுடைய மரங்களை ஒரே இடத்தில் நட்டு, அவற்றை குறிப்பிட்ட காலத்தில் வளர்த்து, பின்னர் வெட்டுவது பொருளாதார நோக்கில் பயனுள்ளதாக இருக்கலாம். ஆனால் அது இயற்கையான காட்டின் சிக்கலான இயக்கத்திலிருந்து வேறுபட்டது.
இயற்கையான காட்டில் வெவ்வேறு வயதுடைய மரங்கள் இருக்கலாம். அவற்றோடு புதர்கள், புற்கள், பூஞ்சைகள், பூச்சிகள், பறவைகள், விலங்குகள், நுண்ணுயிரிகள் என எண்ணற்ற உயிர்கள் இணைந்து வாழ்கின்றன. மண் வெறும் மரத்தைத் தாங்கும் பொருள் அல்ல. நீர் வெறும் வளர்ச்சிக்கான மூலப்பொருள் அல்ல. மரம் வெறும் மரப்பொருள் அல்ல. ஒவ்வொன்றும் மற்றொன்றின் வாழ்க்கையுடன் தொடர்புடையது. இதுவே ecosystem என்ற கருத்தின் உயிருள்ள வடிவம்.
நூலின் தலைப்பிலேயே What They Feel என்ற சொற்றொடர் வருகிறது. இது வாசகரின் கவனத்தை ஈர்க்கும் அழகான மொழி. ஆனால் இதை அறிவியல் கூற்றாக நேரடியாக எடுத்துக் கொள்வதில் எச்சரிக்கை தேவை. மரங்களுக்கு மனிதர்களைப் போன்ற உணர்ச்சி, சுய உணர்வு அல்லது சிந்தனை இருப்பதாக அறிவியல் நிரூபித்துவிட்டது என்று கூற முடியாது. அதே நேரத்தில், தாவரங்கள் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து, அவற்றுக்கு ஏற்ப மிகச் சிக்கலான உடலியல் மற்றும் வேதியியல் எதிர்வினைகளை வெளிப்படுத்துகின்றன என்பது உறுதியான அறிவியல் உண்மை. எனவே, வோல்பென் பயன்படுத்தும் மனிதமயமாக்கப்பட்ட மொழியை அறிவியல் உண்மையை அணுகுவதற்கான இலக்கியப் பாலமாக வாசிப்பதே சிறந்தது.
இந்த நூலின் அழகு, அது நமக்குத் தெரியாத ஒரு உலகத்தை வெறுமனே அறிமுகப்படுத்துவதில் இல்லை. அது நமக்குத் தெரிந்த உலகையே புதிதாகப் பார்க்கச் செய்கிறது. நேற்று வரை சாலையோரத்தில் நிழல் தந்த ஒரு மரம். இன்று அது பல ஆண்டுகளாக மண்ணோடு உறவாடி நிற்கும் ஒரு உயிராகத் தெரிகிறது. நேற்று வரை அமைதியாகத் தோன்றிய காடு. இன்று அது வேர்கள், பூஞ்சைகள், நீர், வேதிப்பொருட்கள், நுண்ணுயிரிகள், பூச்சிகள், பறவைகள், விலங்குகள் என எண்ணற்ற உயிர்களின் இடையறாத தொடர்பாகத் தெரிகிறது. இதுவே The Hidden Life of Trees நூலின் ஆழமான இலக்கிய அனுபவமாக நான் பார்க்கிறேன்.
காட்டின் அமைதியை அது உடைப்பதில்லை; அந்த அமைதிக்குள் ஏற்கெனவே ஒலித்துக் கொண்டிருக்கும் உயிர்மொழியை நமக்குக் கேட்கச் செய்கிறது. ஒரு மரத்தைப் பார்க்கும்போது அதன் தண்டையும் கிளைகளையும் இலைகளையும் மட்டுமே நாம் காண்கிறோம். ஆனால் அந்தக் காட்சியின் கீழே ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. மண்ணுக்குள் மறைந்திருக்கும் வேர்கள். அவற்றோடு இணைந்திருக்கும் பூஞ்சைகள். நீரையும் ஊட்டச்சத்துக்களையும் பகிர்ந்து கொள்ளும் உயிரியல் உறவுகள். ஆபத்தை எதிர்கொள்ளும் வேதியியல் பாதுகாப்புகள். பருவநிலையின் மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் உடலியல் அமைப்புகள். நூற்றாண்டுகளாகத் தொடரும் வளர்ச்சி. அதனால் ஒரு மரத்தைப் புரிந்துகொள்வது என்பது ஒரு தனி உயிரினத்தைப் புரிந்துகொள்வது மட்டுமல்ல. அது ஒரு காட்டைப் புரிந்துகொள்வது. ஒரு காட்டைப் புரிந்துகொள்வது என்பது, உயிர்கள் தனித்தனியாக அல்ல, உறவுகளின் வழியே வாழ்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது. இறுதியில், The Hidden Life of Trees நம்மிடம் கேட்கும் மிக அழகான கேள்வி இதுவாக இருக்கலாம்: “நாம் மரங்களைப் பார்க்கிறோமா, அல்லது மரங்களின் வழியாக ஒரு முழு உயிருலகத்தைப் பார்க்கத் தொடங்குகிறோமா?”
ஒரு மரம் இனி வெறும் மரமாகத் தெரியாத அந்தக் கணத்தில்தான், காட்டின் மறைந்திருக்கும் வாழ்க்கை நமக்குள் வெளிப்படத் தொடங்குகிறது. மரங்களைப் புரிந்துகொள்வது காட்டைப் புரிந்துகொள்வது; காட்டைப் புரிந்துகொள்வது நம்முடைய இயற்கை உறவைப் புரிந்துகொள்வது.
*****

கு.ஜெயபிரகாஷ்,
திருவண்ணாமலை மாவட்டம். “முனைவர்” “சா” என இரண்டு குறுநாவலும் “ஹீராபோரா” என்ற சிறுகதைத் தொகுப்பும் “மரமும் மண்ணுத்தாத்தா” என்ற குழந்தைகளுக்கான அறிவியல் கதைகளும் வெளிவந்திருக்கிறது. உயிரித்தொழில்நுட்பவியல் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறார். கல்விப்புலத்தில பல சர்வதேச அளவில் பல ஆய்வுக் கட்டுரைகளும் புத்தகங்களும் வெளிவந்துள்ளது. புழுதி என்ற இணைய இதழை நடத்திவருகிறார்.

