மா. அன்பரசு

“பாலம் காணாமல் போனதிலிருந்து நான்காவது நாள்.
உண்மையில் அது முதல் நாளிலேயே திருடப்பட்டுவிட்டது.”

கிராமத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தள்ளி ஓடியது காவேரி பாசனக் கால்வாய். அதன் மீது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருந்த இரும்புப் பாலம், அது பாளையம் கிராமத்தின் பெருமை அல்ல. அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தது.

விடியற்காலையில் விவசாயிகள் அதைக் கடந்து வயலுக்குச் செல்வார்கள். மாலையில் ஆடுகள், மாடுகள் அதன்மீது மெதுவாக நடந்தே வீடு திரும்பும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், மருத்துவமனைக்குச் செல்லும் முதியவர்கள், திருமண ஊர்வலங்கள், இறுதி ஊர்வலங்கள் என எல்லாவற்றுக்கும் அந்தப் பாலம்தான் வழி.

தேர்தல் வந்தால்தான் அந்தப் பாலத்திற்கு முக்கியத்துவம் வரும்.

“அடுத்த ஆட்சியில் இந்த இரும்புப் பாலத்துக்குப் பதிலா கான்கிரீட் பாலம்!”

ஒவ்வொரு தேர்தலிலும் அதே வாக்குறுதி.

ஒவ்வொரு ஆட்சியிலும் அதே பேச்சு.

மாறியது சுவரொட்டிகள்.

மாறியது கொடிகளின் நிறம்.

பாலத்தில் மட்டும் ஏறியது துரு.

தினமும் கண்முன்னே இருக்கும் சிலவற்றை மனிதன் கவனிப்பதில்லை. அந்தப் பாலமும் அப்படித்தான். அது இருப்பதை யாரும் வியக்கவில்லை. அது இல்லாமல் போகும் என்று யாரும் நினைக்கவில்லை.

அதுதான் திருடர்களின் முதல் வெற்றி.

ஒரு திங்கள் காலை.

இரண்டு வெள்ளை ஜீப்புகள் கால்வாய்க்கரையில் வந்து நின்றன. வெள்ளைத் தலைக்கவசம். கழுத்தில் அடையாள அட்டை. கையில் சிவப்பு ரிப்பன் கட்டிய அரசுக் கோப்புகள்.

“தமிழ்நாடு நீர்வளத் துறையிலிருந்து வந்திருக்கிறோம்.”

அந்த ஒரு வாக்கியம் போதுமானது.

நாட்டில் பலருக்கு சட்டத்தை விட முத்திரை போட்ட கோப்புகள்தான் அதிக நம்பிக்கையைத் தருகின்றன. அவர்கள் பாலத்தை அளந்தார்கள். புகைப்படங்கள் எடுத்தார்கள். சிவப்பு வண்ணத்தில் குறியிட்டார்கள்.

குறிப்புகள் எழுதினார்கள்.

அவர்களின் ஒவ்வொரு அசைவும் அரசுப் பணியைப் போலவே இருந்தது. உண்மையில் அவர்கள் நடித்துக் கொண்டிருந்தார்கள்.

“இந்தப் பாலம் ஆபத்தான நிலையில் இருக்கு.”

“சென்னையிலிருந்து அவசர உத்தரவு வந்திருக்கு.”

“இன்னொரு வெள்ளம் வந்தா முழுக்க இடிஞ்சு விழுந்துடும்.”

“புதிய பாலம் கட்ட ஒப்புதல் கிடைச்சிருக்கு.”

இந்த நான்கு வாக்கியங்கள், கிராமத்தின் நாற்பது ஆண்டுக் காத்திருப்பை ஒரே நொடியில் நம்பிக்கையாக மாற்றின.

தேநீர்க் கடையில் பேச்சு சூடுபிடித்தது.

“தேர்தல் வருது… அதனால்தான் இப்ப வேகம்!”

“எதுக்காக இருந்தாலும் பரவாயில்லை. வேலை நடந்தா போதும்.”

மூலையில் அமர்ந்திருந்த முதியவர் மெதுவாகச் சொன்னார்:

“நமக்கு வேலை நடக்கிறதுன்னு தெரிஞ்சா போதும். யார் செய்றாங்கன்னு யாரும் கேக்க மாட்டாங்க.” திருடர்களின் தலைவர் அந்த வார்த்தையைக் கேட்டதும் சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

மறுநாள்…

பொக்லைன் இயந்திரம் கர்ஜித்தது.

கேஸ் கட்டர்கள் தீப்பொறிகளைச் சிதறவிட்டன.

லாரிகள் வரிசையாக நின்றன.

“அந்தக் கம்பியை இங்கே கொண்டு வாங்க!”

“வழி விடுங்க!”

“இன்னொரு லாரி உள்ளே வரட்டும்!”

கிராம இளைஞர்கள் உதவினர்.

பெண்கள் குடிநீர் கொண்டு வந்தனர்.

தேநீர்க் கடைக்காரன் இலவசமாக தேநீர் கொடுத்தான்.

ஒரு விவசாயி பெருமையாகச் சொன்னார்:

“அரசு வேலைன்னா இப்படித்தான் இருக்கணும்!”

மூன்று நாட்கள்…

பாலம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது. ஆனால் யாருடைய மனதிலும் சந்தேகம் பிறக்கவில்லை. ஏனென்றால் அதிகாரத்தின் தோற்றம், மனிதனின் சிந்தனையை விட வேகமாக வேலை செய்கிறது.

நான்காம் நாள் காலை.

நான்கு நாட்கள் வெளியூரில் மகளின் வீட்டுக்குச் சென்றிருந்த எழுபது வயது சிவஞானம் பேருந்திலிருந்து இறங்கி வழக்கம்போல் கால்வாயை நோக்கி நடந்தார். தூரத்திலேயே  அவர் கால்கள் நின்றுவிட்டன.

இரண்டு கரைகளும் இருந்தன.

நடுவில் இருந்த பாலம் மட்டும் இல்லை.

முதலில் கண்களைத் துடைத்தார்.

பிறகு அருகிலிருந்த ஒருவனிடம் கேட்டார்.

“பாலம் எங்கே?”

அவன் சாதாரணமாகப் பதிலளித்தான்.

“பழைய பாலத்த எடுத்துட்டாங்க. புதிய பாலம் கட்டப் போறாங்க.”

சிவஞானம் அமைதியாகக் கேட்டார்.

“அறிவிப்பு இல்ல? அடிக்கல் நாட்டல… பாலத்தை எடுத்துட்டாங்களா?”

அந்த ஒரு கேள்வி கிராமம் முழுக்க ஓடியது.

மூன்று நாட்களாகத் தூங்கிக்கிடந்த சந்தேகம் அன்றுதான் விழித்தது.

ஊர் இளைஞன் நடராஜன் ஒன்றிய அலுவலகத்துக்குச் சென்றான்.

“பாளையம் பாலம் அகற்றிய கோப்பைப் பார்க்கணும்.”

அலுவலர் கணினியைத் திறந்தார்.

பதிவுகளைத் தேடினார்.

மீண்டும் தேடினார்.

“அப்படி எந்தத் திட்டமும் இல்லை…”

நடராஜனின் முகம் வெளிறியது.

“சார்… மூணு நாளா பாலத்தை வெட்டி லாரியில ஏத்தி எடுத்துட்டுப் போயிருக்காங்க…”

அலுவலர் உடனே மாவட்ட அலுவலகத்திற்கும், காவல்துறைக்கும் தகவல் கொடுத்தார்.

அப்போது தான் அனைவருக்கும் புரிந்தது. திருடப்பட்டது பாலம் மட்டும் அல்ல. அரசின் பெயரே ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது.

காவல்துறையின் விசாரணை வேகமெடுத்தது. அருகிலிருந்த இரும்புக் கழிவு கிடங்குகளில் சோதனை நடத்தப்பட்டபோது, பாலத்தின் இரும்புக் கட்டமைப்பின் சில பாகங்கள் மீட்கப்பட்டன. அவற்றை விற்க முயன்ற ஒருவன் பிடிபட்டான். அவனிடமிருந்து கிடைத்த தகவலால் முழுக் கும்பலும் கைது செய்யப்பட்டது.

விசாரணையில் இன்னொரு அதிர்ச்சியும் வெளிவந்தது.

பொதுப்பணித் துறையின் கீழ்மட்ட அலுவலகத்தில் இருந்த ஒரு அதிகாரி, பழைய பாலத்தின் வரைபடம், கட்டமைப்பு, சுமார் ஐநூறு டன் எடையுள்ள இரும்பின் தொழில்நுட்ப விவரங்கள் என அனைத்தையும் சில லட்ச ரூபாய்க்காக கும்பலிடம் கசியவிட்டிருந்தார். பாலத்தை வெட்டிய கைகள் வேறு. ஆனால் அந்தக் கால்களுக்குப் பாதை போட்டுக்கொடுத்தது இவருடையது.

நீதிமன்றத்தில் நீதிபதி கேட்டார்.

“ஒரு முழுப் பாலத்தை எப்படி திருட முடிந்தது?”

திருடர்களின் தலைவர் சிரித்தான்.

“நாங்க பாலத்தைத் திருடல, ஐயா.”

நீதிமன்றம் அமைதியானது.

“முதல்ல மக்களின் நம்பிக்கையைத் திருடினோம். அப்புறம் அரசாங்கத்தின் பெயரை வாடகைக்கு எடுத்தோம். கோப்புகளை யாரும் படிக்கல. அடையாள அட்டையை யாரும் சரிபார்க்கல. கேள்வி கேட்க யாருக்கும் நேரமில்லை. அதுக்கப்புறம் பாலம் எங்களோட லாரியில தானாகவே ஏறிடுச்சு.”

அந்த ஒரு வாக்கியம் நீதிமன்றத்தில் இருந்தவர்களை விட, செய்தியை மறுநாள் படித்தவர்களை அதிகமாக அமைதியாக்கியது. சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவழியாக புதிய கான்கிரீட் பாலம் கட்டப்பட்டது.

பெரிய மேடை. வண்ணக் கொடிகள். ஒலிபெருக்கிகளில் பாராட்டு.

அமைச்சர் ரிப்பன் வெட்டினார்.

அவருக்குப் பின்னால் நின்றவர்கள், முந்தைய தேர்தலிலும் இதே பாலத்தை உறுதியளித்தவர்கள்தான். கைத்தட்டல்கள் எழுந்தன. அந்தச் சத்தத்தில், ஒருகாலத்தில் வெட்டப்பட்ட இரும்பின் சத்தம் மட்டும் யாருக்கும் நினைவுக்கு வரவில்லை.

அதே இடத்தில் நின்றிருந்த சிவஞானம் தனது பேரனிடம் சொன்னார்

“பாலம் புதுசா கட்டலாம்… ஆனா நம்பிக்கை உடைஞ்சா அதுக்கு டெண்டர் கிடையாது.”

பேரன் கேட்டான் “தாத்தா… அந்தப் பாலத்தை யார் திருடினாங்க?”

சிவஞானம் சிறிது நேரம் கால்வாயைப் பார்த்துக்கொண்டே இருந்தார். “பாலத்தைத் திருடியது சில பேர்தான்…”

அவர் அங்கேயே நிறுத்திவிட்டார். பேரன் மீண்டும் கேட்டான்.

“அப்புறம்?” “கேள்வி கேட்காதவங்க… திருடர்களோட கூட்டாளிங்க.”

சிவஞானம் மெதுவாகச் சிரித்தார்.

கீழே காவேரி தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தது. புதிய பாலமும் மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். பழைய பாலத்தை யாரும் நினைக்கவில்லை.

ஏனென்றால்…

மனிதர்கள் மறந்த பிறகுதான் திருட்டுகள் முழுமை பெறுகின்றன.

00

மா. அன்பரசு

வேளாண் அறிவியலில் முனைவர் (Ph.D.) மற்றும் முதுமுனைவர் (PDF) பட்டம் பெற்றவர். உழவியல் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டு வருவதுடன், சிறுகதை, கவிதை, நாவல் உள்ளிட்ட படைப்பிலக்கியத் தளங்களிலும் தொடர்ந்து இயங்கி வருகிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *