-பாலமுருகன்.லோ
வணக்கம் அனைவருக்கும். என்னைப் பற்றி அதிகம் அறிமுகம் தேவையில்லை என்றாலும், தற்போது நமது குழுமத்தில் புதிதாகப் பலர் சேர்ந்துள்ளனர். அவர்களுக்காக…
கேஷவ் என்னும் நான், இந்தக் குழுமத்தின் நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவன். எனது கொள்ளுத் தாத்தா, தாத்தா, எனது அப்பா என்று தொடர்ந்து இந்தக் குழுமத்தை நிர்வகித்து வந்தனர். தற்போது நான், கேஷவ், இக்குழுமத்தைப் பராமரித்து வருகிறேன்.
குறிப்பாக, இந்தக் கூட்டம் ஏன் கூட்டப்பட்டது என்றால், இந்த மாதத்திற்கான உற்பத்தியை நாம் தடையின்றி செய்துள்ளோம். என்னைப் பொறுத்தவரை, இது கூட்டு முயற்சியே. நான் உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், இந்த மாதத்தைப் போலவே ஒவ்வொரு மாதமும் நாம் சரிவர உற்பத்தியைச் செய்தோமானால், இந்தக் குழுமமும் வளர்வது மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையில் இந்தக் குழுமத்தில் பணிபுரியும் ஒவ்வொருவரும் பயனடைவீர்கள் என்று இந்தப் பொன்னான தருணத்தில் தெரியப்படுத்த விரும்புகிறேன்.
இன்று கேண்டீனில் மதிய உணவுடன் ஸ்வீட் மற்றும் ஐஸ்கிரீம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல், இந்த மாதத்திற்கான உற்பத்தியைச் சரியாகச் செய்ததால், அனைவருக்கும் பரிசுக் கவர் வழங்கப்படும். இது ஊக்கத்தொகையே. இதுபோன்று ஒவ்வொரு மாதமும் நீங்கள் அனைவரும் பாடுபட்டு உற்பத்தியைக் கொடுத்தீர்கள் என்றால், பயனடையப் போவது குழுமம் மட்டுமல்ல; இக்குழுமத்தில் பணிபுரியும் ஒவ்வொருவரும்தான் என்பதை இத்தருணத்தில் தெரியப்படுத்துகிறேன்.
“இப்போது அனைவரும் கலைந்து போகலாம்,” என்று கேஷவ் கூறிய பிறகு, அனைவரும் ஒருவர் பின் ஒருவராக அவரவர் வேலை செய்யும் இடத்திற்குச் சென்றனர்.
கேஷவ், குழுமத்தின் முதல் தலைமை அதிகாரியாகப் பணிபுரியும் சங்கரனைப் பார்த்து,
“ஏம்பா சங்கரா, நீ உடனே என்னுடைய கேபினுக்கு வாப்பா. பேசணும்,” என்று சொல்லிவிட்டு, தனது கேபினுக்குச் சென்றார்.
சங்கரன் வேகவேகமாகத் தனது கேபினுக்குச் சென்று, நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு, கேஷவின் கேபினுக்குச் சென்று, அவரது அறைக் கதவைத் தட்டினான்.
“உள்ளே வரலாமா?” என்றதும்,
அறையினுள்ளிருந்து கேஷவ், “எஸ்… கம் இன், ப்ளீஸ்,” என்று கூற, சங்கரன் கேபினுக்குள் நுழைந்தான்.
“வாப்பா சங்கரா, வந்து இப்படி உட்காரு.”
“சார், என்ன விஷயம்? வரச் சொல்லியிருந்தீங்க.”
“அதுவாப்பா, இந்த மாதம் பெரிய போராட்டத்திற்குப் பிறகு உற்பத்தியைச் செய்துட்டோம். வரும் காலங்களில் எப்படிப்பா? உனக்குத் தெரியுமா? லாபத்துல ஒரு கணிசமான தொகையை எடுத்துத்தான் இந்த ஊக்கத்தொகையைக் கொடுத்திருக்கிறேன். கடந்த ஐந்து மாசமா பெருசா ஒண்ணும் லாபமில்லை. ஏன், உனக்கே தெரியும்.”
“சார், அதுவந்து, மிஷின் கொஞ்சம் பழுதாயிடுச்சு. அதனால ஒவ்வொரு ஞாயிறும் நாம் உற்பத்தி செய்ய வேண்டிய சூழ்நிலை ஆகிப்போச்சு.”
“ஏம்பா சங்கரா, இதற்கு நான்தான் காரணமா?”
“சார், இல்ல… வந்து…”
“என்னப்பா, வந்து, போயின்னு இழுக்கிற? நான் ஒண்ணும் சாரிட்டி வைத்து நடத்தல. எப்பப் பார்த்தாலும் நஷ்டத்தை மட்டும் ஏத்திக்கிட்டு இருக்கிறதுக்கு? நீ என்ன பண்ணுவையோ தெரியாது. யாருக்கிட்ட என்ன பேசுவையோ தெரியாது. அடுத்த மாதம் உற்பத்தி இந்த மாதம் மாதிரியே வரவேண்டும். அடுத்த மாதக் கடைசியில் என்கிட்ட வந்து எந்தச் சாக்கும் சொல்லக்கூடாது.”
“சார், கண்டிப்பா முயற்சி பண்ணுவோம்.”
“என்ன சங்கரா, ‘முயற்சி பண்ணுவோம்’னு சொல்லுற? ‘முடிச்சுடுவேன்னு’ சொல்லுப்பா.”
“கட்டாயம் சார்.”
“சரி, நீ இப்போ போலாம்.”
அறையை விட்டு வெளிவந்த சங்கரன், தன் கேபினுக்குச் சென்று, மேஜைமீது இருந்த தண்ணீர் டம்ளரில் இருந்த தண்ணீரை மடக் மடக்கென்று குடித்துவிட்டு, தனது நாற்காலியில் அமர்ந்தான்.
இந்த மாத அவுட்புட்டை மீண்டும் ஒருமுறை பார்வையிட்டுக்கொண்டிருந்த சங்கரனுக்கு, தொலைபேசி அழைப்பு வந்தது.
அது வேறு யாருமில்லை; மணி—புரொடக்ஷன் பிரிவின் தலைவன்.
“சார், சங்கரன் சார், கொஞ்சம் அவசரமா லைனுக்கு வர முடியுமா?”
“என்னப்பா மணி, இரண்டு மணி நேரம் முன்னர்தானே குழுமக் கூட்டத்துக்கு முன் நாம் பேசினோம். அதுக்குள்ள என்ன?”
“சார், நம்ம சேகரு இருக்கானுல்ல.”
“எந்த சேகரைப் பற்றிச் சொல்லுற?”
“அதான், கிரைண்டிங் மிஷின் ஓட்டுறானே, அவனேதான்.”
“அவனுக்கென்ன? இப்போ? என்ன ஆச்சு?”
“அவன் மயக்கம் போட்டு விழுந்துட்டான்.”
இயந்திரத்தின் சத்தத்துக்குள் சேகர் திடீருன்னு மார்பைப் பிடித்துக்கொண்டு. அவனது இருமலும் சளியும் முதலில் யாருக்கும் புதிதாகத் தெரியவில்லை. அடுத்த நொடி அவன் தரையில் சரிந்து விழுந்துட்டான்.
“மணி, இது உனக்கே நியாயமாப் படுதா? முதல்ல சேகரை கம்பெனி ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனியா? என்ன சொன்னார் டாக்டர்?”
டாக்டர் சேகரைப் பரிசோதித்துவிட்டு, அவனது நுரையீரலில் பிரச்சினை இருப்பதாகக் கூறினார். அவனிடம் எவ்வளவு நாளாக இந்தச் சளிப் பிரச்சினை இருக்கிறது என்று கேட்டார். அதற்கு, “கொஞ்ச காலமாகவே இருக்குது சார்,” என்று சொல்லிவிட்டான்.
”டாக்டர் ஸ்கேனுக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார். நாம சேகருக்கு ஸ்கேன் எடுக்கணும்”.
“சரிப்பா மணி, ஸ்கேன் எடுத்துட்டாப் போச்சு. என்ன ஃபார்மாலிட்டீஸுன்னு பார்த்து முடிச்சுட்டு, அப்புறம் வந்து என் கேபினில் வந்து பாரு. என்ன சொன்னது புரிஞ்சுதா?”
“சார், நல்லாவே புரிஞ்சுது. நான் இந்த வேலையை முடிச்சுட்டு, அப்புறம் வந்து உங்களைப் பார்க்கிறேன்.”
“மணி, இப்ப புரொடக்ஷனை யார் பார்வை பார்த்துட்டு இருக்கிறது?”
“சார், கிருபா புரொடக்ஷன் மேனேஜர்.”
“சரி, நான் அப்புறம் போய் லைனைப் பார்வையிடுகிறேன்,” என்று சொல்லி, தொலைபேசியில் வந்த அழைப்பைத் துண்டித்தான்.
மீண்டும் குழுமத்தின் தலைவர் கேஷவ் சொன்ன வார்த்தைகளே சங்கரனின் மனதில் ஓடிக்கொண்டிருந்தன.
அலுவலக வேலையில் மூழ்கியதால் நேரம் போனதே தெரியாமல், கம்பெனி ரெக்கார்டைப் பார்த்துக்கொண்டிருந்த சங்கரனுக்கு மணி ஐந்தானது தெரியவில்லை. சுவரில் மாட்டியிருந்த அந்தக் கடிகாரமே, சாயந்திர புரொடக்ஷன் மீட்டிங் இன்னும் சில வினாடிகளில் ஆரம்பிக்கப் போகிறது என்பதை அவனுக்கு நினைவூட்டியது.
கடிகாரம் ஐந்து முறை அடித்ததும், அதை ஒருமுறை பார்த்த சங்கரன், பார்த்துக்கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு, புரொடக்ஷன் லைனுக்கு வேகவேகமாக ஓடிப்போனான்.
அங்கு கூடியிருந்த நபர்களிடம் அன்றைய உற்பத்தி நிலவரத்தைக் கேட்டு அறிந்துகொண்டதுமட்டுமல்லாமல், இரண்டாம் ஷிஃப்ட்டுக்கு ஆட்கள் எல்லாம் சரியாக உள்ளனரா, ஏதாவது குறை இருக்கிறதா, எங்காவது ஏதாவது மிஷினரி பழுதடைந்து அதைச் சரிசெய்யாமல் உள்ளனரா என்று அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துகொண்டிருந்தான்.
சங்கரன் அங்கே நின்று நிலவரத்தைப் பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில், மணி லைனுக்கு வருவது தெரிந்தது.
“வாப்பா மணி, போன காரியமெல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா? சேகர் நல்லபடியா இருக்கானா? டாக்டர் என்னச் சொன்னாரு? சரி, சொல்லு.”
“சார், டாக்டர் ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்து, சேகருக்கு நுரையீரலில் பிரச்சினை இருக்குன்னு சொன்னாரு. சேகர் ஆரம்பத்திலேயே வந்திருந்தா, இவ்வளவு மோசமடையாமப் பார்த்திருக்கலாம் என்றார்.”
“ஏம்பா, என்ன காரணமுன்னு ஏதாவது சொன்னாரா டாக்டர்?”
“அவர் சந்தேகப்படுறது, இது ஒரு நாளுல வந்த மாதிரி இல்ல. பல வருஷங்களா கொஞ்சம் கொஞ்சமா சேகரின் சுவாசம் வழியா ஏதோ நச்சு வாயுவோ, அல்லது காற்றுல கலந்திருக்கிற தூசியோ, அதுவுமில்லேனா காற்றுல கண்ணுக்குத் தெரியாத புகையோ கொஞ்சம் கொஞ்சமா அவனது சுவாசக் குழாய் வழியா போயி, அவனது நுரையீரலில் போயித் தங்கி, நுரையீரலைச் சேதப்படுத்தியிருக்கலாம்னு சொன்னாரு.”
“நீ சொல்லறதை வச்சுப் பார்த்தா, அவன் நம்ம கம்பெனியிலதான் பாதி நேரம் இருக்கிறான். அப்படின்னா, கம்பெனியில ஏதோ ஒண்ணுதான் அவனுடைய நுரையீரல் பாதிப்புக்குக் காரணமா? ஏம்பா மணி, இது சாதாரண விஷயமல்லப்பா. உடனே கவனிக்கணும். இன்னைக்கு சேகருக்கு நடந்தது நாளைக்கு யாருக்கு வேணுமுனாலும் நடக்கும்.”
“சார், நானும் அதைத்தான் நினைச்சேன். நீங்க சொல்லிட்டீங்க.”
“நீ என்ன பண்ணு, நம்ம டாக்டரை இங்கே லைனுக்கு ஒரு முறை வரச்சொல்லுப்பா. நான் அவருடன் பேசணும்.”
“இப்பவேவா சார்?”
“ஆமாம். உடனே போன் போடு. நான் அவருடன் பேசியாகவேண்டும். நாம தாமதிக்கிற ஒவ்வொரு நிமிஷமும் இனி பாதிப்பு இரண்டு பக்கத்துக்கும் தான். என்ன, புரியுதா?”
“சார், நீங்க சொன்னது பாதி புரிஞ்சுது, பாதி புரியல.”
“நீ முதல்ல போன் போட்டு, கம்பெனி மருத்துவரை லைனுக்கு வரச்சொல்லு.”
மணி மருத்துவரைத் தொடர்புகொண்டு பேசியவுடன், அவர் பதினைந்து நிமிடங்களில் உற்பத்திப் பகுதிக்கு வந்தார்.
“ஹலோ, சங்கரன் சார். எப்படி இருக்கிறீங்க?”
“வாங்க டாக்டர், ஏதோ கடவுள் புண்ணியத்தில் நல்லா இருக்கிறேன்.”
“டாக்டர், நீங்க சொன்னதை மணி சொன்னான். அதனாலதான் நான் உங்களிடமும் கொஞ்ச நேரம் தனியா இதைப் பற்றிப் பேசலாம்னு உங்களை வரவழைச்சேன்.”
“பரவாயில்ல சார். உங்களுக்கு ஏதாவது டௌட்ஸ் இருக்கா?”
“டாக்டர், என்னைப் பொறுத்தவரை இது தனிப்பட்ட ஒரு மனிதனுடைய பிராப்ளமா பார்க்க முடியல…”
“அது வந்து… அச்சு… அச்சு…” என்று மருத்துவர் தும்ம ஆரம்பித்துவிட்டார்.
டாக்டர் மீண்டும் சங்கரனைப் பார்த்து,
“சார், சாரி… நாம நாளைக்குப் பேசலாமா?” என்றார்.
“சரிங்க டாக்டர், நாளைக்குப் பார்ப்போம்,” என்று கூறி, சங்கரனும் அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டான்.
அடுத்த நாள், எப்போதும்போல பரபரப்பாகத் தொடங்கியது. அன்றைய உற்பத்தியைக் கொடுக்க ஊழியர்கள் போராடிக்கொண்டிருந்தனர்.
சங்கரனும் தனது அன்றாட அலுவலில், லைனின் மையத்தில் உள்ள மீட்டிங் ஸ்பாட்டில் நின்று, மற்ற சகாக்களுடன் அன்றைய நிலவரத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான். அப்போது டாக்டர் அங்கு வந்தார்.
“ஹலோ டாக்டர், என்ன உடம்பு கிடம்பு சரியில்லையா? ஏன் மாஸ்க் அணிஞ்சிருக்கீங்க?”
“சங்கரன் சார், நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசணும்.”
“சொல்லுங்க டாக்டர். இவங்க எல்லாரும் நமக்கு வேண்டியவங்கதான். தாராளமா சொல்லலாம். அதுவும் தாண்டி நாம ஏதும் பர்சனலா பேசப்போறதில்லையே.”
“சரி, நேற்று உங்களிடம் பேசிக்கிட்டிருந்தேன்னுல்ல?”
“ஆமாம்.”
“நான் பொதுவா என்னுடைய அறையிலேயே நோயாளிகளுடன் இருப்பது வழக்கம். நீங்க நேற்று இங்க கூப்பிட்டதால நான் வந்தேன்.
“வந்த பிறகு சில மணி நேரத்திலேயே எனக்குத் தொண்டை கட்டிக்கிடுச்சு. அதுமட்டுமல்ல, ஒரே தும்மல் வேற. அதான் நாம நாளைக்குப் பேசிக்கலாம்னு சொல்லிட்டேன்.
“நான் என்ன நினைக்கிறேன்னா, இங்கு மிஷினில் பொருத்தப்பட்டிருக்கும் எக்ஸாஸ்ட் எல்லாம் சரியா வேலை செய்கிறதான்னு பார்க்கச் சொல்லுங்க. அதை ஏன் சொல்லுறேன்னா, ஒழுங்காக எக்ஸாஸ்ட் பொருத்தப்பட்ட மிஷினிலிருந்து வெளிவருற புகை, கம்பெனியைச் சுற்றி வராமல், வெளியில, அதுவும் குறிப்பிட்ட உயரத்தில் இணைக்கப்பட்டிருக்கும் எக்ஸாஸ்ட் மூலம் வெளியே சென்றுவிடும். அதான், குறிப்பாக நேற்று உணர்ந்ததால, இங்கு எந்தெந்த மிஷினரிஸ்ல எல்லாம் சரியா எக்ஸாஸ்ட் பொருத்தப்படல அல்லது பழுதாகியிருக்கிறது என்று ஆட்களை விட்டு குறிப்பு எடுக்கச் சொல்லுங்க. இது உடனே கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.”
“டாக்டர், அதான் நேற்றே உங்களை வரவழைச்சுப் பேசினேன். இப்ப இது ஊழியர்களோட வாழ்வும் சம்பந்தப்பட்டிருக்கு. இது நான் கேஷவ் சாரிடம் சொல்லியே ஆகணும்,” என்று சங்கரன் சொல்ல, அங்கு இருந்தவர்களும் டாக்டரும் அதை ஆமோதித்தனர்.
கூட்டம் கலைந்தது.
சங்கரன் வேகவேகமாக கேஷவின் கேபினுக்குச் சென்று, அறையின் கதவைத் தட்டினான். உள்ளிருந்து குரல் வந்தது.
“எஸ்… கம் இன்.”
“சார்…”
“என்ன சங்கரன், இந்த நேரத்துல? இன்னும் கொஞ்ச நேரத்துல நான் போர்டு மீட்டிங்குக்குப் போகணும். என்ன, ஏதாவது முக்கியமான விஷயமா? சங்கரா, உனக்கு பத்து நிமிஷம் தரேன். சொல்ல வந்ததைச் சொல்லிட்டு, உடனே திரும்பிப் போ. என்ன?”
“சார், நம்ம சேகரு…”
“ஆமாம், நான் நேற்று கேள்விப்பட்டேன். அவன் ஏதோ மயக்கம் போட்டு விழுந்துட்டானாமாம்! என்ன ஆச்சு? நம்ம மருத்துவர் பார்த்தாரா? என்ன சொன்னாரு?”
“அதான் சார், அவனோட நுரையீரல் பாதிச்சிருக்காம்.”
“எதனாலையாம்?”
“நம்ம மருத்துவர் லைனில் இருக்கிற மிஷின்களில் உள்ள எக்ஸாஸ்ட் சிஸ்டம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்கச் சொல்லியிருக்காரு.”
“என்ன சொல்லுற, சங்கரா? நம்ம கம்பெனியில கோளாறா? நம்ப முடியலையே! எல்லா சர்ட்டிஃபிகேட்டும் சரிவர வைத்திருக்குறீங்க. பிறகு என்னவாம்? எப்படி இந்தத் தப்பு நடந்தது? ஏம்பா, இது சாதாரண விஷயமல்லப்பா.”
“சார், அதான் நான் உங்ககிட்ட சொல்லணும்னு எடுத்துட்டு வந்திருக்கேன்.”
“இதுல சொல்லறதுக்கு என்ன இருக்கு? நேத்தே உன்னிடத்துல, நஷ்டத்தை மட்டும் இந்தக் குழுமம் சந்திக்கக் கூடாது; போன மாதம் மாதிரி லாபத்தையும் சந்திக்கணும்னு சொன்னேன்.
“ஆனா, அதுக்குள்ள நீ இப்போ இந்தப் பிரச்சினையை எடுத்துக்கிட்டு வந்திருக்க. உனக்கு என்ன சொல்லணும்னு நினைக்கிறே? என்ன பண்ணணும்னு தெரியுமுல்ல?”
“தெரியும் சார். முதல்ல முழுசா சர்வே எடுக்கிறேன். ரெண்டு தினங்களில் உங்களுக்கு ரிப்போர்ட் தர்றேன். உண்மை நிலைமையைக் கண்டறிஞ்சுட்டு.”
“நல்லது சங்கரா. எங்க பாட்டன், தாத்தா, அப்பான்னு கட்டிக்காத்த பெருமையெல்லாம் இந்த ஒரு விஷயத்துல வீணாப்போகக் கூடாது. நீ என்ன பண்ணுவையோ தெரியாது. இந்தப் பிரச்சினையை முதல்ல அட்ரஸ் பண்ணு. அப்புறம் மத்ததைப் பார்த்துக்கலாம்.
நான் சொன்னது உண்மைதான். நான் ஒண்ணும் சாரிட்டி வைத்து நடத்தல. அதனாலதான் என்னை மோசமானவன்னு நீயோ, இல்ல மத்தவங்களோ எண்ண வேண்டாம். என்றைக்குமே உழைக்கும் வர்க்கத்துடன்தான் இருப்பேன். அவங்களுக்கு ஒண்ணுன்னா சும்மா பார்த்துக்கிட்டு இருக்க மாட்டேன். எல்லா வசதியும், பணிக்கொடுத்து நமக்கு லாபம் வரலேன்னா, அப்புறம் அவங்ககிட்டயே போய்ச் சொல்லலாம்—நாம் ஒண்ணும் சாரிட்டி வைத்து நடத்தலன்னு. எல்லாத்தையும் சரி பண்ணு. எவ்வளவு செலவாகும்னும் ரெண்டு தினத்தில் வந்து சொல்லு. சரியா?” என்றார்.
சங்கரன் புன்னகையுடன் அந்த அறையை விட்டு வெளிவந்தான்.
00

பாலமுருகன்.லோ
பிறந்த இடம் கரூர் மாவட்டம். பள்ளிப் படிப்பு அனைத்தும் கரூரில் முடித்த பிறகு. வேலை நிமித்தமாகச் சென்னைக்கு 1997-ல் வந்தவன் பல நிறுவனங்களில் பணிபுரிந்து தற்போது ஒரு ஜெர்மானிய நிறுவனத்துக்கு ஆஃப்டர் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் பிரிவில் வேலை செய்துவருகிறேன். சிறு வயதிலிருந்தே எனக்கு எழுதும் ஆர்வம் இருந்தது. ஆனால் வளர வளர படிப்பு, வேலை திருமணம், பிள்ளைகள் என்று வந்த பிறகு எழுதும் ஆர்வம் சற்று மங்கிக் காணப்பட்டது. ஆனால் என்னாலும் மீண்டும் எழுத முடியும் என்று என்னை நான் முழுமையாகக் கண்டுகொண்ட வருடம் 2020 என்று கூறலாம். 2019-ல் இருந்து தீவிரமாகக் கதை மற்றும் கவிதைகளை வாசித்து ஒரு வாசகராக என்னை முழுமையாக மாற்றி இருக்கிறது இந்தக் கலை இலக்கிய உலகம் .

