-கலைவாணி இராஜேந்திரன்
என் அன்புள்ளம் கொண்ட என் கலைவாணிக்கு. எப்படியிருக்கிறாய் ? நலமா? இந்தக் கடிதம் உனக்காக. உனக்கே உனக்காக. உனக்காகவே இருக்கும் உனக்காகவும். எனக்காகவே இருக்கும் எனக்காகவும். உன்னால் எனக்காகவும் என்னால் உனக்காகவும் எழுதப்படுகின்றது.
ஆக இக்கடிதம் நமக்காக எழுதப்பட்டு. நம்மாலே வாசிக்கப்படுகின்றது.
ஏன் அழுகிறாய் கலைவாணி. என்ன நடந்துவிட்டது. மேற்கொண்டு என்னதான் நடந்துவிடப் போகிறது. நிதானமாகு. ஆழ்ந்து மூச்சுவிடு. கொஞ்சம் நேரம் கொடு. நீ நானும் நடந்துவந்த பாதையை திரும்பிப் பார்க்கலாம்.
இதுவொன்னும் சாதாரண வாழ்க்கை அல்லவே கலைவாணி. பற்பல சோதனைகளுக்கு பிறகு வேதனைகளுக்கு பிறகு உனக்கு கிடைத்த சாதனையல்ல இந்த வாழ்க்கை. உன் வலியும் உன் அவமானமும் உன் ஏமாற்றமும் உனக்கு பரிசளித்த உறுதியின் பாதையல்லா இது.
ஆனால் அத்தனை சோதனைகளை தாண்டி, இன்னும் நீ நின்று கொண்டிருப்பது அந்த உறுதியான பாதையில்தானே. நீயே உடைந்தால் உனக்காக யார்தான் அந்தப் பாதையில் நடப்பார். அது உன் வலிவேதனை உனக்கே கொடுத்த பரிசல்லவா. வேறு யார் அதில் நடப்பார் என எதிர்ப்பார்க்கிறாய்.
அதுதான் உன் வழி. அதுதன உன் வலிமை. நட. தொடங்கு. தொடர்.
அப்பா… மறக்க முடியாத முகம். அப்பா நீங்கள் எனக்கு அப்பா மட்டுமல்ல. என் வாழ்வின் முதல் நாயகன். என் வாழ்க்கையின் முதல் வழிகாட்டி.
ஆன்மீகம் என்றால் என்ன? சமயம் என்றால் என்ன? அரசியல் என்றால் என்ன? வாழ்க்கை நெறி என்றால் என்ன? எதிலும் உங்களுக்கு இருந்த ஆழ்ந்த பற்றும் புரிதலும் உங்கள் சொற்களின் வழி நீங்கள் கண்டடைந்ததின் வழி என்னையும் உருவாக்கியது. உங்கள் தேடுதலின் ஒவ்வொரு பதிலையும் சேர்த்து நீங்கள் என்னை வளர்த்தீர்கள்.
நீங்கள் எங்கே சென்றாலும் என்னையும் உங்களுடன் அழைத்துச் சென்றது உலகத்திடம் என்னைக் காட்ட அல்ல. என்னிடம் இந்த உலகத்தைக் காட்ட. இந்த உலகத்தை நானும் எப்படி பார்க்க வேண்டும் எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்று மெதுவாக கற்றுக் கொடுத்தீர்கள்.
என் வாழ்விற்கான அர்த்தம் உங்கள் வழியாக என்னை அடையும் முன்னமே நீங்கள் எங்களை விட்டு பிரிந்தீர்கள். ஏன் இவ்வளவு அவசரப்பட்டீர்கள்.
நீங்கள் இல்லாமல் போன பிறகு அந்த பாதையை முழுமையாகத் தொடர்ந்து நடக்க எனக்கு முடியவில்லை. பாடத்தை முழுமையாய் நடத்தி முடிக்காத மாணவனை பரிட்சைக்கு அழைத்தது போலானது என் வாழ்க்கை. எனக்கு நினைவிருக்கின்ற காலத்திலிருந்து “அப்பா” என்றால் நினைவுக்கு வருகிறது என் பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும், முதல் வாழ்த்து உங்களிடமிருந்தே வரும். அது ஒரு சாதாரண கொண்டாட்டமல்ல. பிறருடன் நம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் ஒரு வாய்ப்பாக மாற்றியிருந்தீர்கள்.
அன்று காலையில் எழுந்ததும் என் முழுப் பெயரைச் சொல்லி “பிறந்தநாள் வாழ்த்துகள் கலைவாணி” என்று அழைப்பீர்கள். என்னை கட்டியணைத்து முத்தமிட்டு அந்த நாளை தொடங்குவீர்கள். அந்த ஒரு அழைப்பே எனக்கு ஒரு தனி மகிழ்ச்சி. பிறந்தநாள் வந்தாலே, ஆசிரமத்துக்குச் சென்று பிரார்த்தனை செய்து, அங்கிருந்தவர்களுக்கு உணவு வழங்கி, அதற்குப் பிறகுதான் கேக் வெட்டி கொண்டாடுவீர்கள். “பிறந்தநாள் என்றால் அன்றே கொண்டாட வேண்டும். அதனை தனியாக கொண்டாடக்கூடாது.” என்ற உங்கள் வார்த்தையை இன்றும் நான் பின்பற்றுகிறேன்.
அப்பா, யார் கஷ்டப்பட்டாலும் உதவ வேண்டும் என்ற மனசு உங்களிடமிருந்து எனக்குள் வந்தது ஆனா சில நேரங்களில், அதே உதவி எனக்கே சிக்கலாகி விடுகிறது. அந்த நேரங்களில் என்னை நிலைநிறுத்தியது என் அம்மாதான்.
உங்களிடம் நான் ஏதாவது கேட்டால், அது கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. “இது தேவையா?” என்று கேட்பீர்கள். நான் பிடிவாதமாக “வேண்டும்” என்பேன். ஆனால் அந்த பிடிவாதம் கூட உங்களுக்கு பிடித்திருந்தது. உங்களுக்கு என் மேல் இருந்த அன்புதான் எவ்வளவு அதிகம்.
பெண் பிள்ளைகள் என்றாலே மகாலட்சுமி போல இருக்க வேண்டும். தங்கச் சங்கிலியும், தோடும் இருக்க வேண்டும் என்று நீங்கள் நம்பினீர்கள். நீங்கள் பெண்பிள்ளையை வளர்த்தாலும், அதை ஒரு குறையாக ஒருபோதும் நினைக்கவில்லை. பெண் பிள்ளைகளாகிய நாங்கள் ஆண் பிள்ளைகளுக்கு இணையான பொறுப்போடு வாழ்க்கையை தாங்கும் வலிமையோடு இருக்க வேண்டும்என்று நினைத்தீர்கள். அம்மாவுக்கு மட்டும் சில நேரங்களில் தனக்கு “ஆண் பிள்ளை இல்லை” என்ற ஒரு சிறிய கவலை இருந்தாலும், அதையும் தாண்டி எங்களை வலிமையாகவும் ஆளுமை மிக்கவர்களாகவும் வளர்த்தீர்கள்; அப்பா.
உங்களுடைய கடைசி காலக் கடமைகளையும் இந்தப் பெண் பிள்ளைகளே செய்ய வேண்டும் என்றது உங்கள் ஒரு பெரிய கொள்கை. அந்த நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றினோம். அதற்கு எத்தனையோ தடைகளும் குழப்பங்களும் வந்தாலும் எல்லாவற்றையும் சமாளித்து உங்கள் கொள்கையை நாங்கள் நிறைவேற்றினோம்.
நானும் என் தங்கைகளும் உங்களுக்கு செய்தது போலவே அம்மாவிற்கான கடைசி கடமையையும் செய்தோம். அதே அன்போடு அம்மாவுக்கும் எல்லா கடமைகளையும் செய்து முடித்தோம்.
அப்பா இருபத்து ஐந்து வயது வரைக்கும் நான் சமையல் பக்கம் செல்லவே இல்லையே. “எப்போதான் சமையல் கத்துகிட்டு அப்பாக்கு சமைச்சு கொடுக்கப்போற கலைவாணி?” என்று கேட்பீர்கள். ஆனால் நீங்கள் உயிர் விடுவதற்கு முந்தைய நாளில், நான் செய்த சைவக் குருமாவும்,
மீன் பொரியலும் நீங்கள் சாப்பிட்டு “ரொம்ப நல்லா இருக்கு” என்று சொன்னீர்கள்.
அது எனக்கு மறக்க முடியாத அங்கீகாரம் அப்பா. உங்கள் கடைசி பாராட்டும் அதுதான் அப்பா. நீங்கள் என்னை ஆசிரியராகப் பார்க்க வேண்டும் என்று நினைத்தீர்கள். ஆனா நான் கணக்கியல் துறையைத் தேர்வு செய்தேன். அந்த கணக்கியல் மீது வந்த பற்று கூட உங்களிடமிருந்துதான்.
ஆனால் சில விஷயங்களில்நான் உங்கள் பேச்சை கேட்காமல் என் திமிராலும், பிடிவாதத்தாலும் நடந்தேன். அதில் ஒன்றுமே எனக்குப் பயன் அளிக்கவில்லை. இப்போது நினைத்தால் என் கண்ணீர் மட்டுமே மிஞ்சுகிறது. அதை முழுமையாகப் புரிந்தது. உங்களுக்குப் பின் அம்மாதான் அதனை எனக்கு புரியவைத்தார். என்ன செய்வது அப்பா அறிவிற்கும் வயதிற்கு எப்போதுமே சண்டைதானே நடந்து கொண்டிருக்கிறது.
ஆனா இப்போது அம்மாவும் இல்லையே என்று நினைத்தால் என்னை யார் இவ்வளவு ஆழமாகப் புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை.
அம்மா; நீங்கள் மிகவும் கண்டிப்பானவர். ஆனால் அந்தக் கண்டிப்புக்குள் இருந்தது அளவில்லாத அன்பு பெண் பிள்ளைகள் இரவு நேரத்தில் வெளியே போவது உங்களுக்கு பிடிக்காது. மற்ற ஆண்களிடம் அளவுக்கு மீறி சிரித்து பேசுவதும் பிடிக்காது. வாய்விட்டு சிரிப்பதும் கூட உங்களுக்கு விருப்பமில்லை. நானும் என் தங்கைகளும் அப்படி நடந்த தருணங்களில், நீங்கள் ஒரு பார்வை பார்த்தாலே போதும், அந்த ஒரு பார்வையிலேயேநாங்கள் அடங்கி விடுவோம்.
அந்த பார்வைக்குள் இருந்த அர்த்தத்தைநான் சொல்லாமலே புரிந்து கொண்டுஉங்கள் முன் அமைதியாக நிற்பேன்.
கந்த சஷ்டி விரதம்; அதன் அர்த்தமும் அதன் புனிதமும் எல்லாம் நீங்கள் கற்றுக் கொடுத்தது. எல்லா வீட்களிலும் தீபாவளிக்கு முக்கியம் இருந்தாலும், நம்ம வீட்டில் கந்த சஷ்டிக்குத்தான் அதிக மதிப்பு. தீபாவளி கொண்டாடினாலும், கந்த சஷ்டி முடிந்த பிறகுதான் எங்களுக்கு உண்மையான தீபாவளி ஆரம்பம். அது அம்மாவின் கண்டிப்பான முடிவு.
அம்மா; நகைகள் சேகரிப்பதில் உங்களுக்கு ஒரு தனி ஆர்வம் இருந்தது. அதைப் பார்த்ததாலோ என்னவோ, அதே பழக்கம் என்னிடமும் வந்தது. ஆனால் அம்மா நகைகளை அடகு வைப்பது உங்களுக்கு ஒருபோதும் பிடிக்காது, “அது மகாலக்ஷ்மியை மதிக்காததுக்கு சமம்” என்று நீங்கள் சொல்லுவீர்கள்.
என்ன செய்வது அம்மா, அன்று நீங்கள் வாழ்ந்த சூழ்லும் இன்று நாங்கள் வாழும் சூழலும் ஒன்றல்லவே. என்னுடைய சில சூழ்நிலைகளின் காரணமாக, நான் அந்த செயலை செய்ய வேண்டியதாகிவிட்டது. மன்னித்துவிடுங்கள் அம்மா. ஆனால் நான் கொடுத்த வாக்குறுதியைக் கண்டிப்பாக காப்பாற்றுவேன். அந்த நகைகளை எல்லாம் மீண்டும் எடுத்து விடுவேன்.
அம்மா… அப்பா… யாரிடமும் கை நீட்டி கடன் வாங்குவது உங்களுக்கு ஒருபோதும் பிடிக்காது. சொல்லிச்சொல்லிதான் வளர்த்தீர்கள். “கஞ்சி குடித்தாவது காலத்தை ஓட்டு… ஆனா யாரிடமும் கை நீட்டி கடன் வாங்கி வாழாதே…” என்று நீங்கள் எப்போதும் சொல்லுவீர்கள். ஆனா வாழ்க்கையில் நானும் அந்த நிலைக்கு வந்தேன். வாழ்க்கையில் அடுத்து என்னதான் நடக்குமென யாரால்தான் யூகிக்க முடிகிறது.
கடன் வாங்கிவிட்டேன். அதில் ஏறத்தாழ எழுபத்தைந்து சதவீதம் நான் ஏற்கனவே அடைத்துவிட்டேன். இன்னும் கொஞ்சம் மட்டுமே இருக்கிறது. அதையும் இன்னும் ஒரு ஆண்டுக்குள் முழுவதும் அடைத்து முடித்து மீண்டும் நிமிர்ந்து நிற்பேன்.
அம்மா… அப்பா… நீங்கள் இருவரும் இந்த உலகத்தை விட்டு செல்லும் போது யாரிடமும் எந்தக் கடனும் இல்லாமல் சென்றது போலவே, என் கடைசி மூச்சு போகும் தருணத்திலும் ஒரு பத்து காசு கூட கடன் இல்லாமல் நிம்மதியாக நான் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காகவே நான் தினமும் முருகனையும், என் கடவுளாகக் கருதும் என் அம்மா அப்பாவையும் நினைத்து மனதாரப் பிரார்த்திக்கிறேன்.
கலைவாணி. உன் மனதில் இருப்பதையெல்லாம் எழுதிவிட்டாயா? மனதில் இருந்ததையெல்லாம் கொட்டிவிட்டாயா? நம் பெற்றோருக்கு நம்மை நன்றாகத் தெரியும். கவலைப்படவும் நம்மை நாமே நொந்து கொள்வதும் இனி தேவையில்லை. நாம் தனியாகா இருக்கிறோம். இல்லை. நமக்கு தங்கைகள் இருக்கிறார்கள். நாம் செல்லும் வழியில் அடுத்து வரப்போகிறவர்கள் அவர்கள்தானே. நீயே தடுமாறினால் எப்படி?
அதில் இருவர் தங்கள் வாழ்க்கையை முன்னே கொண்டு சென்றாலும், உன் கடைக்குட்டி இன்னும் இருக்கிறாள். அவளுக்குச் செய்ய வேண்டிய கடமையை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமா?
அம்மா அப்பா ஸ்தானத்தில் இருந்து, உன்னால் முடிந்த அளவில் எல்லாவற்றையும் நீதானே செய்ய வேண்டும்.
ஆமாம், நான் தான் செய்ய வேண்டும். கண்டிப்பாக செய்வேன். அது என் பொறுப்பு. நம் பொறுப்பு. அது நம் உறுதி. சோர்ந்து போகாதே கலைவாணி. ஒருநாள் நீ உன்னை நீயே பார்த்து பெருமைப்படுவாய். அதுவரை நீ ஒருத்தி அல்ல. உன்னாடுதான் அப்பா இருக்கிறார். உன்னோடுதான் அம்மா இருக்கிறார். உன்னோடுதான் நானுமே இருக்கிறேன். நாம்தான் நமக்கு துணை.
இப்படிக்கு உன்னைப்போலவே உன்னை முழுமையாய் நம்பும் நான். நாம். உன் கலைவாணி.
00

கலைவாணி இராஜேந்திரன் (மலேசியா)

