– ஜெயபால் பழனியாண்டி
சில தினங்களாகவே ராஜன் அண்ணா கண்ணில் தென்படவில்லை. பெரும்பாலும் அந்த லவ்பேட்ஸ் கூண்டுக்கு எதிர்த்தாப்புல உட்காந்துருப்பாரு. நம்மள பார்த்தா.. உடனே சின்ன ஒரு சிரிப்போட “சரி சாமி.. சரி சாமி.. போயிட்டு வாங்க”.. அதே சிலநேரம் சார் “உங்கள பார்த்தே ரொம்ப நாளாச்சு.. நல்லா இருக்கீங்களா? நான் நெனச்சுட்டே இருந்தேன். சார பார்த்து ரொம்ப நாளாச்சு” என்பார். என்னை மட்டுமல்ல என்னைப்போன்று பழக்கமான மனிதர்களை அவர் அவ்வப்போது இப்படி சொல்லதுண்டு..
சிற்றுண்டிச்சாலையில் ஒருசில நாட்கள் தனியே தேநீர் அருந்திக்கொண்டிருக்கும் ராஜன் அண்ணா… நம்மைப் பார்த்த மாத்திரத்தில் “சார் டீ சாப்புடுங்க சார்” என்பார் அதே புன்னகையோடு..
“பரவாயில்லை நீங்க சாப்புடுங்க..” “இல்ல சார் வாங்க..” என்று கட்டாயப்படுத்துவதும் உண்டு. அவரின் பெருந்தன்மை அவரின் பார்வையில் வெளிப்படுவதுண்டு.
“ராஜன் அண்ணா டீக்கு நான் காசு குடுத்தறேன். நீங்க குடுக்க வேண்டாமென்றால்..”
வேண்டாம் சாரென்று.. மறுத்துவிடுவார்.
திரும்ப அவரைப் பார்த்தோமெனில் சற்று நேரத்திற்கு முன்பு நடந்த உரையாடலை எல்லாம் மறந்து தன் இயல்பிற்கு ஏற்ப டீயை ருசித்துக்கொண்டிருப்பார்.
சுப்பன்ணன் இருந்தவரை ராஜன் அண்ணாவை அடிக்கடி கல்லூரி வளாகத்தில் பார்க்க நேரிடும். இப்போதெல்லாம் அவ்வப்போதுதான் பார்க்கமுடிகின்றது. ராஜன் அண்ணாவுக்கு யாரும் வேலை சொல்லமாட்டார்கள். அவராகவே வளாகத்தைச் சுத்தம் செய்து கொண்டு மரத்தில் விழுந்த காய்ந்த சருகுகளையெல்லாம் ஒன்றுசேர்த்துக் கொண்டிருப்பார். ஒரு மனிதன் தனிமையை எப்படி கொண்டாட வேண்டுமென்று ராஜன் அண்ணாவிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
மரங்களுக்கும் காய்ந்த சருகுகளுக்கும் அவரின் உரையாடல் மொழி நிச்சயம் புரிந்திருக்கும். கார்கள் நிறுத்துமிடத்தில் தூண்களுக்குப் பின்னால் சுருள் நிறைந்த புகை மெல்ல வானைநோக்கி நகர்ந்து கொண்டிருக்கும்.
என்னடா… அங்கிருந்து புகை வருகிறது என்று பார்த்தால்… நம்ம ராஜன் அண்ணா தூணோடு தூணாக அமர்ந்து பீடியை ரசித்து புகைத்துக் கொண்டிருப்பார். அந்த நேரத்தில் அவரின் உடலின் மேல் சார்லி சாப்ளின் வந்துபோவார்.
ஒருவேளை சாப்ளினாகவே நான் அவரை ரசித்துவிட்டேனோ என்னவோ. கூர்ந்து பார்ப்பவர்களுக்கு சிலநேரம் நாகேஷ் போலக்கூடத் தோன்றலாம். மனிதர்களைப் படிப்பவர்களுக்கு இந்த கற்பனையெல்லாம் தோன்றுவதில் ஆச்சரியமில்லை.
அரைக்கால் டவுசர் தொளதொளவென்ற டீ-சர்ட்டோடு கல்லூரியைச் சுற்றி வலம்வரும் ராஜன் அண்ணாவிற்கு பெண் பேராசிரியர்கள் ஆங்கிலத்தில் வணக்கம் வைக்கும்பொழுது பதிலுக்கு அவரும் ஆங்கிலத்தில் வணக்கம் சொல்லி.. ஒருசில ஆங்கிலச் சொற்களையும் உச்சரிப்பதைப் பார்க்கமுடியும். வராண்டாவில் நடக்கும் பொழுது..
சுறுசுறுப்பாக வேலையில் மும்மரமாக திரியும் ராஜனையும்..
எதையோ வெறித்துப்பார்த்த படி அமர்ந்திருக்கும் ராஜனையும்.. சிலபொழுதுகள் வருவோர் போவோரைப் பார்த்து புன்னகைத்தும்.. சிலபொழுதுகள் ஞானம் அடைந்துவிட்ட புத்தனாகவும்.. கண்ணிற்குத் தெரிவதுண்டு.
ராஜன் அண்ணனுக்கு கல்லூரிதான் உலகம். அவர் குடியிருப்பது கல்லூரி வளாகத்தின் ஒரு மூலையில்.. கல்லூரி ஆரம்பித்த காலத்திலிருந்து அவர் இங்கு வசிப்பதாகவே அறிகிறேன். ராஜன் அண்ணாவைப் பார்க்கும் பொழுதெல்லாம் நான் பள்ளியில் படிக்கும்பொழுது அவரைப்போன்றே துப்புரவு பணி செய்த சுப்பையா என் நினைவுகளுக்கு வந்துபோகிறார்.
நிர்மலா சிஸ்டர் அடிக்கடி உச்சரிக்கும் பெயர் சுப்பா.. “என்ன சுப்பா.. வீட்டுல மனைவி மக்கள் நல்லாருக்காங்களா”.. சுப்பையா மீது நிர்மலா சிஸ்டருக்கு தனி கருணை உண்டு என்பதை அவரின் அன்பான விசாரிப்பு வெளிப்படுத்தும். தலையை ஆட்டி சிறு புன்னகையை விதைத்துவிட்டு கையில் முறத்தையும் விளக்குமாறையும் எடுத்துக்கொண்டு கழிவறை நோக்கிச் செல்லும் சுப்பையாவை.. மைதானத்தில் படிப்பதுபோல் பாசாங்கு செய்யும் மாணவர்கள் நோட்டமிடுவதுண்டு.. சுப்பையாவின் இன்னொரு வடிவம்தான் ராஜன் அண்ணாவா? என்று தோன்றும்..
ஆடி காற்றில் அசைந்தாடும் மரக்கிளைகளில் இருந்து தரையை நோக்கி ஒவ்வொன்றாக உதிர்ந்து கொண்டிருக்கின்றன காய்ந்த இலைகள். கும்பல் கும்பலாக காத்திருந்த சருகுகளெல்லாம் ஏமாற்றத்தைத் தழுவிய வண்ணமிருந்தன. வடமாநிலத்தவரின் வருகையால் ராஜனின் அன்றாட இடம் பறிபோனதோ என்னவோ தெரியவில்லை.
ஆம்.. சில தினங்களாவே ராஜன் அண்ணாவை எங்கும் காணவில்லை. கூண்டிலிருக்கும் பறவைகள் எழுப்பும் ஒலிகளில் அவ்வப்போது ராஜனின் பெயர் உச்சரிக்கப்படுகின்றது. அந்த பச்சை நிற பறவை சிறகை சற்று பலமாக அடித்துக்கொள்கிறது. செல்ஃபி எடுக்கும் மாணவர்களை அது பெரிதாக கண்டுகொண்டதாக தெரியவில்லை. காம்ப்பவுண்டு சுவரை ஒட்டிய தோட்டத்துச் செடிகள் ராஜனின் கண்ணத்தை வருடமுடியாமல் ஏக்கப்பார்வையால் தலைகவிழ்ந்தே பூத்திருந்தன. அருகில் வந்து நிற்கும் மாணவர்களைப் பார்த்து அவ்வப்போது சிரித்தும் கொண்டன.
இந்த ஜென்சி தலைமுறை வகுப்பில் ஒருவிதமாகவும்.. வெளியில் வேறுவிதமாகவும் நடந்துகொள்வது வியப்பாக உள்ளது. பல தலைமுறைகளுக்கிடையே ஏதோவொரு வகையில் தன்னை இருத்திக்கொண்ட ராஜன் அண்ணாவிற்கு.. ஜென்சி குறித்த புரிதலெல்லாம் அவசியமற்றுப் போனது. நாம் மட்டும்தான் ஜென்சியை அதிகமாக உச்சரித்துக் கொண்டிருக்கின்றோம். தலைமுறை இடைவெளி என்பது சில பாடங்களைக் கற்றுக்கொடுத்து கொண்டேதான் இருக்கும்.
எப்போதும் கற்றுக்கொள்ள வேண்டியதையும்.. விடுவித்துக்கொள்ள வேண்டியதையும்.. பிரித்துவைத்துக் கொண்டோமெனில் தலைமுறை இடைவெளி.. சருகுகளின் மலை குவியலாக நம் மனதில் வந்து நிற்கபோவதில்லை.
மூன்றாம் தளத்தின் ஜன்னல் வழியாக பார்வையை ஓடவிடுகிறேன். ராஜனின் வீட்டுத் திண்ணை. அதே சுருள் நிறைந்த புகை.. ராஜன் விரல் இடுக்கில் மாட்டிக் கொண்ட பீடி கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டிருக்கின்றது. எதைப் பற்றியும் யோசித்திராத ராஜனின் சிந்தனை.. சிறு தீப்பொறியாக காற்றில் மிதந்து என் மூளையில் சிறு பறவையாக அமர்ந்து கொள்கிறது.
திண்ணையின் ஒரு மூளையில் ஏற்கனவே அணைக்கப்பட்ட கறுப்புப் புள்ளியை ஒட்டி அணைக்கப்படாத அந்த கடைசி பீடி.. இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்கின்றது.
அடுத்த பாடவேளையை நோக்கிய எனது வேகமான பயணத்தில் மூளையில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டது அந்த பறவை…
நிதானமாக மூச்சுவிட்டுக் கொண்டிருக்கும் தூங்குமூஞ்சி மரத்தின் கிளையில் அமர்ந்து சற்று ஆசுவாசம் கொள்கிறது.
00


