மூக்கைத் துடைத்துக்கொண்டே நகரும்
சிறுபையனின் வேகத்திற்கு
ஈடுகொடுத்து நடக்க முடியவில்லை
வலியால் துடித்துக் கொண்டே நடக்க முடியாமல்
மெதுவாக வரும் முதியவரோடும் நடக்க முடியவில்லை
,
அவன் ஒன்னும் நிதானமாக நடக்கும்
நிதானப் பேர் வழியும் கிடையாது
அவன் ஒரு அவசரக்குடுக்கை
கொக்கைப் போல ஒற்றைக்காலில் நிற்க
அவனுக்கு தெரியும்
பொறுமையைப் பற்றியோ தெரியவே தெரியாது
,
காத்திருந்து இரை பிடிக்கத் தான்
ஒற்றைக்காலில் நிற்க வேண்டுமா என்ன?
அடம் பிடிக்கவும் செய்யலாம்
நீளம் கூடிய நாக்கினை வைத்து
முகம் முழுக்க நக்கவும் செய்யலாம்
இப்படி ஏதாவது ஒன்றைச் செய்யும் போது
பின்னங்கால்களில் வலதுகால் மடங்கி நிற்பது
மனதில் தட்டும்.
******
தண்ணீர் எடுக்கத்தான் தம்ளர்கள் இருக்கின்றன
திரவத்தின் தொடுதலே தம்ளர்களுக்கெல்லாம்
உச்சகட்ட இன்பம்
அந்த தொடுதலின் கணத்திற்காக காத்திருக்கும் தம்ளர்கள்
தண்ணீரை நோக்கி போகும் வழியிலேயே
உடைந்து நொறுங்குவதே வாடிக்கையான வினை
நொறுங்கி சிதறும் போதெல்லாம் தம்ளர்கள் அழுகின்றன
அழுகையில் சப்தம் மட்டுமே வருகிறது
கண்ணீர் வருவதில்லை
,
கண்ணீர் வர அவைகளுக்கு
கண்களும் இல்லை
நீரின் இருப்பும் இல்லை
அழும் சமயங்களில் நீர் பூக்க வேண்டுமாம்
,
நீரைத் தொடுவதற்கும்
தொட்டு சயனத்தில் ஆள்வதற்கும்
இத்தனை பாடுகளை சந்திக்க வேண்டியுள்ளது
தம்ளரின் ஆன்மா தண்ணீரைத் தொடாமல்
சாந்தியடையப் போவதில்லை
,
உடைதல் நிகழும் ஒவ்வொரு முறையும்
மற்றொரு புதுத் தம்ளரை நோக்கி
மௌனத்தோடு நகரும் ஆன்மா
மனிதனாக மாற்றுரு பெற்று
சட்டையை நனைக்கும் ஆசையில் எத்தனிக்கிறது
நொறுங்கும் போதெல்லாம் மனிதனுக்கு
அவன் சட்டையும்
சட்டைப்பையில் உள்ள பணத்தாள்களும்
மடித்துள்ள தாள்களுக்குள் ஒளிந்துள்ள படங்களும்
மீண்டும் மீண்டும் நனைவதில் கொஞ்சம் வருத்தம்
,
ஒருமுறையாவது வேறொரு சட்டையின் தோள்பட்டையில்
துளியளவு நீரை விழவைக்கவே
அவனுக்கு ஆசை
இயல்பான ஆன்மா நீரைத் தொடுவதே லட்சியமென
நனைந்திட்ட சட்டையைப் போட்டவன்
இடதுகையில் பிடித்துள்ள தம்ளருக்குள்
நிறைவேற காத்திருக்கும் ஒற்றை ஆசையோடு
ஐக்கியமானது
******
நான் வந்துவிட்டேன்
வந்ததை எனது புலன்கள்
திரும்ப திரும்ப நினைவூட்டுகின்றன
ஏன் எதற்கு எப்படி என்ற காரணங்கள் தேடப்படுகிறது
,
எதைப் பெறுவதற்கு வந்தேன்
எதுவாக வந்தேன்
எப்படி இருக்கிறேனென்று
எனக்கே தெரியவில்லை
,
நான் மட்டுமே எனக்கு என்ற மூன்று சொற்கள்
புலனாகாத எங்கோ ஓர் மூலையில்
இருமடங்கு வீரியத்துடன் பட்டுத் தெறிக்கிறது
,
நான் என்பது யார்?
எனக்கு என்பது எதற்கு? என்கிற தேடல்
ஒவ்வொரு மிடற்றின் முடிவிலும்
துவர்ப்பாக மீந்திருக்கிறது
,
இப்போது தான் தெரிகிறது
சிந்திக்கும் பேராற்றல் வழியே
என்னை நானே கண்டடையும்
சாத்தியங்கள் கிளைவிட்டு பிரிகின்றன
,
பெருமழையின் எண்ணற்ற சிறு துளிகள்
கணக்கற்று விழுந்த மண் குலைந்த சேறு
நானாக இருக்கலாம்
,
பெருமழை ஓய்ந்து
அதிராமல் அடிக்கும் காற்றின் தொடுதலில்
பிரக்ஞையற்று திரும்பி வரும் மனிதனது
காலில் ஒட்டிய சேற்றினை
நடக்கும் போதே பிய்த்துப் போடும்
கற்களின் கூட்டத்தில்
ஒரு கல்லாக நான் இருக்கலாம்
,
சேற்று மண்ணுக்கும்
கற்களுக்கும் சிந்திக்கத் தெரியுமோ என்னவோ?
எனக்குள் நானே சிந்திக்கிறேன்
,
சேற்றுக்கும் கல்லுக்கும் சிந்திக்கத் தெரிந்திருந்தால்
இந்த மழைக்காலத்தில்
நான் அவற்றில் ஒன்றாக இருக்கலாம்.
,
முந்தைய கோடைக்காலத்தில்,
அனலை ஏந்திப் பறந்து
அவசரமாக சூட்டின் வெம்மையைச்
சூடிச் சென்ற மனிதனின்
பார்வைப் புலனில் விழுந்த தூசியின் விசையில்
ஒரு பகுதியாக உயிரை உறுத்துகிறேன்
******
Sorry எனக் கேட்பதால் மட்டும்
சண்டைகள் முடிவதில்லை
சில சமயம் அங்கு தான் ஆரம்பமாகின்றன
இவ்வளவு பலமுள்ள வார்த்தை
வருத்தம் தெரிவிப்பதாகவே நிற்கிறது
வருத்தங்களும் சோகங்களும்
வந்து போகும் வழி இதுவென குறிப்பிட
எவரால் முடியும்
காற்றைப் போல மழையைப் போல
வந்து வீசி நனைத்து போகும்போது
உள்ளுக்குள் இருக்கும் ஆர்வமும் துடிப்பும்
இறங்கி குறையும் நேரம்
நீ என்னடா என ஓரோரத்தில்
தலைமுடியின் முன்பக்கத்தை
கைகளால் கோதிக் கொண்டிருப்பாய்
கன்னங்களிடம் கோதிய கைகள்
இரண்டும் ஒட்டிச் சேர்ந்திருக்கும்
கண்களுக்கு முன்
அழகாக நினைக்காத பொருள்
ஒன்று இருந்தாலும்
அதைத்தான் பார்த்துக்கொண்டிருப்பதாய்
அத்தனை பேருக்கும் தோன்றும்
உன் கண்களுக்கு அது தெரிந்தாலும்
அதன் பண்புகளோ நிறமோ
வடிவமோ வினையோ
மறக்கடிக்கப்பட்டு அப்படியே நிற்கும்
வேறொருவர்
அதை தூக்கிச் செல்லும் வரை
******
ஒன்றை இழந்து
இன்னொன்றை அடையாது
எல்லாவற்றையும் இழந்து
நிர்க்கதியாக நின்று
இழந்ததை எல்லாம்
திரும்பி பார்த்து
சிரித்திடவே விருப்பமாம்
,
ஆம் அந்த கரையில்
இலைகளின்றி வலுவாக நின்ற
ஒற்றை மரம்
என் கண்களிடமும்
கால்களிடமும் கீறல் மொழியில்
இதைத்தான் சொன்னது
******
அரா
அரா என்ற பெயரில் கவிதை எழுதி வரும் அழகுராஜ் இராசபாளையத்தைச் சேர்ந்தவர். தற்போது புதுவைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் படித்துக் கொண்டிருக்கிறார்.
சுதந்திரச் சிந்தனை இலக்கிய அமைப்பில் பயணிக்கும் இவர் கூதிர் மின்னிதழின் ஆசிரியர்களுள் ஒருவர்.