1.

ஆதாரத்தைத் தொலைத்துவிட்ட விமானப் பயணியென

வேரின் உறிஞ்சுதலை விரட்டிவிட்ட மண்ணென

வானப்பரப்பில் சிறகினை வெட்டிக்கொண்ட

பறவையாய் மணமற்று நிறமற்று

கிளையில் பூக்காது வாடும்

மொட்டாய்

வெற்றுத் தாள்களைத் தாங்கிப் பிடிக்கும்

வார்த்தையற்ற  நூலாய் விருட்சங்களற்றும்

விலங்குகளற்றும்

பாலையாய்க் கிடந்த

வனத்தினுள் பரிதவிக்கிறேன்.

0

2.

இருளுக்குள் ஒளிரும்

பூனையின் விழிகளாய்

மனதுக்குள் ஊற்றெடுக்கிறது நம்பிக்கைச் சுடர்

தொலைவானத்தின்

தொடு எல்லை போல நீள்கிறது வாய்ப்புகளின் ஊஞ்சல்.

அலைபுரளும் கடலுக்குள்

ஊசலாடும் படகினில்

தொங்கிடும் கயிராய் வளர்கிறது தேடல்களின் உலகம்.

நிலையாமை வாழ்வினில் நிலைக்கும் வரை

பேணுகிறேன் எழுத்துகளின் சங்கமத்தை.

0

3.

இதழுக்குள் ஊற்றெடுக்கிறது

அன்பின் அறுசுவை முத்தமென.

அடைபடும் விரல்களுக்குள் ஒட்டிக்கொள்கிறது

ப்ரியத்தின் வாசனை குருதியென.

நெருக்கத்தின் நினைவுகளில் புன்னகைக்கிறது

பயணத் தருணங்கள் மலரென.

இளைப்பாற்றும் தேநீரில் உணர்ச்சிகளின்

சொல்லாடல் ஒளிர்கிறது நறுமணமென.

சினத்தின் கரத்தினுள்

சிதைந்திடும் பொழுதினில்

எனை மீட்டெடுக்கும்

உன் மௌன வேள்வியின் கடவுள்களை வருக என்கிறேன்.

0

இளையவன் சிவா

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர்  அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய  இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை  ஏழைதாசன் தினத்தந்தி தினபூமி மனித நேயம் புதிய உறவு புதிய ஆசிரியன், உரத்த சிந்தனை போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. நூல் விமர்சனங்களில் நிறைய பரிசுகளைப் பெற்றுள்ளார். சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது)  அன்பு மொழி(2024) என   நான்கு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *