காலைப் பத்து மணிக்கு வெயில் தூங்கித் தூங்கி விழித்துக் கொண்டு இருந்தது. சின்னப்பிள்ளக மந்தையில நாடகம் பார்க்கக் காத்திருப்பது போல பங்குனி முன் கோடைக்காலம்.  வெயிலின் கடுமைச் சற்றுக் குறைவு.

G.V. பள்ளிக்குள் குழந்தைகள் வருவதும் போவதுமாக இருந்தார்கள்.  ஸ்பீக்கர் அதன் அளவில் ஒலித்துக் கொண்டு இருந்தது. சில குழந்தைகள் இடம்பிடித்து உட்கார்வதும், போவதுமாக இருந்தார்கள். பெற்றோர்கள் உடன் வந்த பிள்ளைகள் அமர்ந்தார்கள்.  சிறப்பு அழைப்பார்கள் இன்னும் வரவில்லை.

G.V. பள்ளியின் கரஸ்பாண்டன்ட், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் விழா குறித்துக் கலந்து பேசிக் கொண்டு இருந்தார்கள்.

அஞ்சு ஆறு பெண்பிள்ளைகளும் பையன்களும் பள்ளிக்குள் வரும் போதே, ‘நல்லப்பாம்பு சீறுவதைப்’ போல சீறிக் கொண்டு வந்தார்கள்.

ஆசிரியர் ஒருவர் எங்க பள்ளியின் பழைய மாணவர்கள் பக்கத்தில இருக்கிற டவுன்ல மேல் நிலைப் பள்ளியில் படிக்கிறார்கள் எனும் போதே முகத்தில் புன்னகை.

கரஸ்பாண்டன்ட் மாணவர்களின் வருகையை எண்ணி மகிழ்ந்தார்.

இவ்விழாவின் இன்னொரு சிறப்பு விருந்தினர் ‘முன்னாள் மாணவர்’ வந்து தலமையாசிரியர் அறையில் அமர்ந்தார். அப்போதே, தொழில் அதிபர் வீரபாண்டித் தென்னவனும் வந்துவிட்டார்.  இருவருக்கும் ஸ்வீட் காரம் டீ பரிமாறப்பட்டது.  டீ குடிச்சிட்டுப் பேசிக்கிட்டு இருந்தார்கள்.

இஞ்சினியர் சரணும், வீரபாண்டித் தென்னவனும் இந்த பள்ளியின் முன்னால் மாணவர்கள்… பேசிக் கொண்டே இருந்தார். இஞ்ஜினியர் அதிகம் பேசல, பேசலயாப் பேச விரும்பலயா? யாருக்குத் தெரியும்.

G.V. பள்ளியின் ஆசிரியர்கள் சீர் உடையில் அழகுக் கூட்டியிருந்தார்கள். மாணவர்கள் கேட்கவே வேண்டாம், சக்கரைப் பொங்கல் நெய்யும் முந்திரிப் பருப்பு கூட்டியிருந்தது போல இருந்தார்கள்.

மேடையில் ஆடப்பாட நடிக்க வேஷம் போட்டு, “லிப்டிக் போட்ட உதடு ஒட்டாமல்”, குரவ மீன் வாய்பிளந்து இருப்பது போல இருந்தார்கள் பிள்ளைகள்.

பெற்றோர்கள் பள்ளியின் திறமையைப் பார்க்கப் பள்ளியின் வாசல் கதவு திறந்து இருப்பது போல, கண்களைத் திறந்து காத்திருந்தார்கள்.

இன்னும் கவுன்சிலர் ஐயாயிரம் ஓட்டுல் வெற்றி பெற்ற செ. சரவணன் வரல. ஆனா இல்லாதவன் “செனை ஆட்டக் காட்டுன கதைதான்… இந்த அரசியல்வாதிகளைக் கூப்பிடுவது. வந்துவிடுவார்ன்னு பரிவாரங்கள் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். வந்த பாடக்காணாம்.

ஏரியா கவுன்சிலர் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு சிலர் கடிகாரத்தைப் பார்த்தார்கள். பலர் செல்போனில் உலகத்தை மறந்து தேடிக் கொண்டு இருந்தார்கள்.. என்ன தேடுகிறோம்ன்னு தெரியாமல் எது எப்படியே இன்னும் சில மணித்துளிகளில் விழாத் தொடங்கி விடும். ஒலி பெருக்கியில், யாரோ கவுன்சிலர் வந்துவிட்டார்ன்னு அளாவுன்ஸ் பண்ணா,

பெற்றோர்கள் வீட்டில் விட்டுவந்த நாய் ஒன்று உள்ளே வந்தது கம்பீரமாக. யாரும் விரட்டல. அது உறவினரைத் தேடிப் போனது.

இதுக்குள் கவுன்சிலர் செ. சரவணன் காரைவிட்டு இறங்கிப் பள்ளிக்குள் வர, கர்ஸ்பாண்டன்ட் பல் தெரிய சிரித்த முகத்துடன் வரவேற்றார்.

கரஸ்பாண்டன்ட் பள்ளியின் பழமையையும் பெருமையையும், நற்பெயரையும் பட்டியலிட்டார். இருவரும் மாறிமாறித் தலையை ஆட்டினார்கள். எங்கள் பள்ளியில் சாதி, மத, இன, மொழிப் பாகுபாடுயில்ல, அனைவருக்கும் சமமானக் கல்வி தர்றோம்.

எங்க அப்பா உடைநாதன் கட்டியப் பள்ளி தொன்னூறு ஆண்டுகளைக் கடந்துவிட்டது. பேசிக்கிட்டே மேடையை நோக்கி G.V. உயர்நிலைப் பள்ளியின் தொன்னூறாவது ஆண்டுவிழா மிகச் சீறும் சிறப்புமாக தொடங்கப் போகிறது.

மேடையின் திரைச் சபையில் இருந்து கண்ணி மரியாள் ஆரிர்வதித்துக் கொண்டுயிருந்தாள். “நாறும் காகிதப்பட்டமும் போல, கனவுக் காற்றில் எதிர்த்து ஏறிக் கொண்டே ஆசிரியர்களும் மாணவர்களும் மனதுக்குள் பறந்தார்கள்.

மழலைத்தமிழும் கொஞ்சும் தமிழும் கலந்து தொகுப்பாளர்… அனைவருக்கும் வணக்கம். வந்தவரை வரவேற்பது நம்மரபு. அதற்கு முன்பாக கடவுளை வணங்குவோம்.

தமிழ்த்தாய் வாழ்த்தும், கடவுள் வாழ்த்தும்… சேர்ந்து பாடுவோம்.

பிஞ்சுகளின் நாவில் தமிழ் அன்னை தவழ்ந்து வெளிவந்தாள்…  நீராரும் கடல் கொடுத்து……வாழ்த்துதுமே…

கடவுள்வாழ்த்து…

எதிரிகள் இல்லாத சிநேகம், நித்திய சிநேகம், தெய்வ சிநேகம்…  நான்கு வரிப்பாடல் முடிந்தது.

சின்ன சலசலப்பு கூட்டத்தில் முன்னே உட்கார்ந்தவர்களின் இடம் மாறிப் போனது, ஆசிரியர் பிரான்சிஸ் ஊடேபுகுந்து அமைதிப் படுத்தினார்.

வரவேற்புரை வழங்க நம்பள்ளியின் மூத்த தமிழாசிரியர் கிரேட் ஜுலியட் வருகிறார்.

அவர்களின் மொழியில் கனிவும் குலைவும் இனிமையும் கலந்து டீச்சர் ஒவ்வொருவருக்கும் அடைமொழியில் வரவேற்றார்.

மாணவர்களின் நண்பன், ஏழைகளின் காவலன் இன்னும் இன்னும் அவரின் கொடையுள்ளத்தைப் பாராட்டி வரவேற்றார்.

பாவம் வெல்கம் டான்ஸ் ஆடப் பிஞ்சுகள் மேடையின் ஓரத்தை காத்துக் கிடந்தார்கள்.

இப்போது எங்கள் சின்னத் தேவதைகளின் ‘வெல்கம் டான்ஸ்’…

அவ்வளவு தான் கூட்டத்தில் உற்சாகம், எதையோ கலந்தக் கலவைப்பாடல் போட்டார்கள். குழந்தைகள் ஆடினார்கள்.

அம்மாக்கள் எம்பிள்ள, எமூட்டு அழகா ஆடுதாப் பார்ண்ணு… சொல்ல, அப்பாக்கள் செல்போனில் படம்பிடித்தார்கள்.

பழைய மாணவர்கள் “சின்ன வெங்காயம்” விழுங்கிய கோழியாட்டம் இருந்தார்கள். மேடையில் அமர்ந்து இருக்கும் போது கவுன்சிலருக்கு போன் வந்ததும் எடுத்து எடுத்துப் பேசிக்கொண்டு இருந்தார்.

வேப்ப மரத்தில் இருந்து வேடிக்கைப் பார்த்துட்டு இருந்த காக்காவுக்கு… வயிறு சரியில்ல அவசரம் போல கக்காவை உதறிவிட்டது… வெள்ளப் பூச்சிப்போல பறந்து வந்து கீழே இருக்கிற நல்ல சிவப்பு கலர் ஆண்டியின் தோளில் பட்டுத் தெரித்தது.

காக்கா பேண்டுடுச்சுடின்னு சொல்லிச் சின்னச் சலசலப்பு, வேகமா ரெண்டு மாணவர்கள் மாடியில் ஏறி மரத்துல இருக்கக் காக்காவை விரட்டினார்கள்.

இஞ்சினியர் சுதாரித்துக் கொண்டு மேலே பார்த்தார். அப்பாடான்னு பெருமூச்சு விட்டார். மேடைக்கு மேலே “பச்சைக்கலர் நெட்” கட்டியிருந்தார்கள்.

தலமையாசிரியர் லிங்கேஸ்வரி ஆண்டறிக்கை வாசிப்பார்.

எல்லேரையும் மீண்டும் வரவேற்று வணங்கிட்டு கடவுளுக்கு நன்றி.  கரஸ்பாண்டன்ட்ட வணங்கி உரையை துவங்கினார்.

எங்கள் பள்ளியில் நாங்கள் அனைவரையும் சமமாகப் பார்கிறோம்.  அனைத்துத் தரப்பு மக்களின் பண்பாடுகள், விழாக்கள், சடங்குகள், வழிப்பாடுகளையும் ஒருங்கினைத்து கொள்கிறோம்.  எங்கள் பள்ளியில் எந்த பாகுபாடும் கிடையாது.

பக்கத்தில் இருக்கிற தேவ ஆலயத்தில் இருந்து காற்றின் கீதமாக “பரமபிதாவே உயிர்கள் மேல் கருணைக் கொண்டவரை இரச்சிப்பீராக!.. நேரம் சரியாக பதினொரு மணி

ஆமோன்.

தலைமையாசிரியர் பிள்ளைகளின் வீரத்தீரச் செயல்களை இன்னும் சற்று நேரத்தில் அரங்கத்தில் காணலாம். இப்பள்ளியில் இனப்பாகுபாடு, மொழிப்பாகுபாடு, மதப் பாகுபாடுயில்லா, எல்லாக் கடவுளின் வழிபாட்டுச் சடங்குகள் குறித்தும் சொல்லிக் கொடுக்கிறோம்.

சமூகத்தைப் பற்றிய புரிதல் கணிப்பொறி அறிவும், பொது அறிவும்… அடுக்கிக் கொண்டே போனார். பேச்சில் இருபது நிமிடம் ஓடியது. சிறப்பு விருந்தினர் மாணவர்களை வாழ்த்திப் பேசுவார்.

ஆரம்பித்தார்… மாணவர்களே, நல்லப் படிங்க அரசு உங்களுக்கு, காலை இலவச உணவு திட்டத்தை நம் பள்ளி வழங்கி இருக்கிறது.  ஆறாம் வார்டு கவுன்சிலர், அரசின் நலத்திட்டங்கள் எல்லாம் நம் பள்ளிக்கு கிடைக்கும், பெற்றோர்கள் பிள்ளைகளை ஒழுங்காப் பள்ளிக்கு அனுப்புங்கள். மாணவர்களே, கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு ஒழுக்கமா, பொய் பேசாம படிங்க, எதிர்காலத்தில் எங்களைப் போல பெரிய ஆளா வாங்க கடவுள் காப்பாத்துவார்… நன்றி…

முடித்துவிட்டார்… கைத்தட்டல்… சீக்கிரம் முடித்து விட்டாரேன்னு.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நடந்தது. இன்ஞ்னியர், கடிகாரத்தை பார்த்தார். கவுன்சிலர் நேரம் அதிகமாகுதுன்னவும்…

சிறப்பு விருந்தினருக்குப் பொன்னாடைப் போர்த்திக் கவுரவிக்கப்படுகிறது.

பாவம் ஆசிரியர்கள் ஆங்காங்கே மரங்களாக நின்றார்கள்.

இஞ்சினியர் முறை வந்ததும் கழுத்தை நீட்டி வாங்கிக்கொண்டார்.

எல்லா விழாக்களிலும் நாற்காலிகள் வேறுபடுத்தும். சிலரை வரவேற்கும் விதமே உடல் ஒளியே வேறுப்பட்டும், மாலையும் மரியாதையும் வேறுபடும்.

இங்கே ஆட்களை சால்வையும் துண்டு வேறுபடுத்த தொடங்கியது

பட்டுச் சால்வையில் தொடங்கி, ஒவ்வொருவரின் தகுதிக்கு ஏற்ப பால்மாட்டுக்கும், வற்றிய பால்மாட்டுக்கும் தவிடுப் பிண்ணாக்கு வேறுப்படுவதைப் போல, வண்டி மாட்டுக்கும் விருதா மாட்டுக்கும் “காளைத் தொட்டி” வேறுப்படுவதைப் போல ஒவ்வொருவரின் தகுதியையும் வேறுபடுத்தியது…

இப்போது வாகன ஓட்டுனர்களுக்கு கார் டிரைவருக்கு சாதாச் சால்வை, வேன் டிரைவர் கொஞ்சம் பெரிய துண்டும், ஆட்டோ டிரைவரக்கும் இன்னம் சிறிய துண்டு.

இதுவரை கரஸ்பாண்டன்ட் யாருக்கும் பொண்னாடை போர்த்தல… இப்போது எங்கள் பள்ளியின் கரஸ்பாண்டன்ட் அந்தோனிச்சாமி அவர்கள் பள்ளியின் தூய்மைப் பணியாளர்கள், முருகனுக்கும் காளியம்மாவுக்கும் பொண்னாடைப் போர்த்துவார்.

பெயர் சொன்னதும் இருவரின் முகத்தில் ஆயிரம் மகிழ்ச்சிப் புன்னகையுடன் வந்தார்கள்.

பொன்னாடைப் போர்த்தப்பட்டது, வணங்கிவிட்டு நகர்ந்தார்கள்.

இருவரின் தோளில் இருந்தத் துண்டு பள்ளி நிர்வாகத்தைப் பார்த்து வெட்கப்பட்டு தானே நழுவிக் கீழே விழுந்தது. அவர்கள் மலர்ந்த முகத்துடன் நடந்து போனார்கள். யாரோ துண்டு துண்டுண்ணு… சொல்லிக் கொண்டேப் போனார்கள்.

சாத்தான் குளத்தை மறக்காமல் இருக்கிறார் பரலோகத்தில் இருக்கும் பரமபிதா… ஆவண செய்யுங்களேன்.

000

சைவத்தைத் தமிழாகவும், தமிழைச் சைவமாகவும் ஆராதனை செய்கின்ற மதுரை தியாகராசர் கல்லூரியில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றுபவர் முனைவர் சு.காந்திதுரை அவர்கள். அறுபது வயதினை நெருங்கும் வேளையில் பதினாறு வயது இளைஞனாய்ச் சுறுசுறுப்பாய் இயங்குகிறார். தனது குழவிப்பருவம் தொடங்கி இன்னாள் வரையிலான நினைவுகளைத் தோண்டுகிறார். சமூகத்தினை நுண்மையாய் கவனிக்கிறார். படைப்பாக்குகிறார். இலக்கியக் கூட்டங்களில் தொடர்ச்சியாய் பங்கெடுக்கிறார். எவ்விதச் சமரசமும் இன்றி தனது கருத்தினை முன் வைக்கிறார். வட்டார வழக்கினை உயர்த்திப் பிடிக்கிறார். புதிய படைப்பாளர்களுக்குப் பாடமாகிறார்.
விதைகள், பூஞ்சிரிப்பு, புதுவாழ்க்கை, ஒற்றைவாளி, கருவறை, சாமி போன்ற சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *