அப்பனின் அழுக்கச் சட்டையை
துவைக்கும்போதெல்லாம்
இதையெல்லாம் மனுசி தொவைப்பாளா
என சலித்துக்கொண்டு
அழுக்கையலசும் அம்மாவின் கோபத்திலும்
அம்மா செய்த சாப்பாட்டை
இதெல்லாம் மனுசன் தின்பானா
என சிடுசிடுத்துக் கொண்டு
வயிற்றை நிரப்பும் அப்பனிடமும்
வேசமில்லாத அன்பிருந்ததேயன்றி
அதில் காதலென்று எதையுமேக் கண்டதில்லை
பாட்டனும் பாட்டியும் கூட
அவர்களின் அன்பினை
தீராத சண்டையில்தான்
வெளிப்படுத்திக்கொண்டார்களேத் தவிர
கெஞ்சலிலும் கொஞ்சலிலும்
அவர்கள் காதல் செய்ததாய் இப்போதும் நியாபகம் இல்லை!
அண்ணனுக்கு வந்த காதல் கடிதங்கள்தான்
என் வாழ்வில் காதலுக்கான
இலக்கணமென்றே சொல்ல வேண்டும்
அந்தளவுக்கு அண்ணனை அவள் காதலித்தாள்
அதில் அதீத அன்பு மட்டுமேயல்ல
காதலென்றால் உணர்வின் ததும்பல்
காதலென்றால் மனதில் விரியும் வானம்
காதலென்றால் ஒரு துளியில் ஆர்ப்பரிக்கும் பேரலை
என்றெல்லாம்கூட தெரிந்து கொண்டேன்
இறுதியாக உண்மைக் காதல்
சாதியை நிர்மூலமாக்கி
காதலித்தவர்களைக் கண்டதுண்டமாக்கும்
மீள முடியாத வடுவை
குடும்பத்திலும் சமூகத்திற்குள்ளாகவும்
ஏற்படுத்தும் என்பதையும் கூட
அவர்களின் காதலில்தான் தெரிந்துகொண்டேன்
இப்போது என்னையும் ஒருத்தி காதலிக்கிறாள்
அவளை நானும் காதலிக்கிறேன்
பிடிக்காதவர்கள் வேண்டுமானால் நாடகக் காதலெனத் தூற்றிக்கொள்ளுங்கள்.
++
எஸ்.உதயபாலா (1992)
திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்திலுள்ள கீரனூரில் சுப்பிரமணி கண்டியம்மாள் இணையருக்கு மூன்றாவது மகனாய் பிறந்தவர். கணிதவியலில் ஆசிரியர் பட்டப் படிப்பினை முடித்துவிட்டு தற்போது தென்னக ரயில்வேயில் தண்டவாளப் பராமரிப்பு பணியாளராக பணிசெய்துவருகிறார்.
பள்ளிக் கல்லூரி காலம் தொட்டே கவிதைகள் எழுதிவரும் இவர் நிலாச்சோறு, லப் டப், முற்றுப்புள்ளி, கீரனூர் சீமை, கருத்தீ ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.
குறும் படங்களுக்கு தொடர்ந்து பாடல் எழுதி வரும் இவர் வெள்ளித் திரையிலும் தனது பயணத்தைத் துவங்கியிருக்கிறார். இவர் எழுதிய முதல் பாடல் “யாமன்” என்ற திரைப்படத்தில் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.