கமதாதாசின் ‘என் கதை’ – மொழிபெயர்ப்பு நிர்மால்ய‌மணி

மொழிபெயர்ப்பாளர் நிர்மால்யமணியின் படைப்புலகம் குறித்து 8.9.2024 அன்று சென்னை கவிக்கோ அரங்கில் ஆகுதி ஒழுங்கமைத்த முழு நாள் நிகழ்வில், நிர்மால்ய மணி மொழிபெயர்த்த கமலதாசின் ‘என் கதை’ சுயசரிதை நூல் குறித்துப் பேசியது:

சுய சரிதை எழுதுவதில் உள்ள பல்வேறு சிக்கல்களை, ஆண் பெண் என இருபால் எழுத்தாளர்களுமே கடக்க வேண்டியிருக்கிறது. இது இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ளது. ஆகவே அவர்கள் மிகவும் நயமாக சுய சரிதையைவிட, புனைவு கலந்து சுய சரிதையை ஆட்டோ ஃபிக்ஷன் ஆக எழுதிவிடுகிறார்கள். இதில் புனைவு 80 சதவிகிதம், உண்மை நிகழ்வுகள் 20 சதவிகிதம் இருக்கும். அல்லது அப்படியே மாற்றி, புனைவு மிகக் குறைவான சதவிகிதமாகவும் இருக்கலாம். பண்டைக்காலத்து கற்பனையான பாலில் இருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும் அன்னப்பறவையால்கூட பிரிக்க முடியாதபடி ஊடுபாவாக ஒன்றோடு ஒன்று பிணைத்து எழுதி “இதில் எது புனைவு எது நிஜம்” என்று தெரிந்துகொள்ள முடியாதபடி வாசகர்களை உட்கார வைத்து விடுகிறார்கள். ஆனாலும் சில பேர் உள்பெட்டியிலோ தனித் தகவலிலோ நேரடியாகவோ “என்னிடம்மட்டும் சொல்லுங்களேன். இதில் எதெல்லாம் உண்மை நிகழ்வு?” என்று கேட்கும் வாய்ப்புள்ளது. அது தனிக் கதை.

தமிழில் இப்படிப் புனைவும் சுயசரிதையும் கலந்து எழுதப்பட்ட படைப்பாக எழுத்தாளர் பாமா எழுதிய கருக்கு நூலைச் சொல்லலாம்.

அதே போல, இஸ்மத் சுக்தாய் எழுதிய “வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை”  நூல். தமிழில் இதை நேர்த்தியாக மொழி பெயர்த்துள்ளார் சசிகலா பாபு. பத்து குழந்தைகள் நடுவில் பிறந்த இஸ்மத், பெண்கள் மீதான ஒடுக்குமுறை, மதம், ஜாதி வேறுபாடுகளுக்கு எதிரான சிந்தனைகளோடு சிறுவயதிலேயே கதைகள் எழுத ஆரம்பிக்கிறார். ஆபாசமாக ஒரு சிறுகதையை எழுதியதாகக் கூறி லாகூர் நீதிமன்றம் சம்மன் அனுப்புகிறது. மன்னிப்பு கேட்க மறுக்கிறார்.

இந்த நூலில் உள்ள “இந்துவாக்கப் பார்க்கிறார்கள், கிருத்துவராக்கப் பார்க்கிறார்கள் என்பதுபோல நீங்களும் என்னை இஸ்லாமியராக்கப் பார்க்கிறீர்கள்” எனும் வரிகளைக் குறிப்பிட்டு “அந்தக் காலத்திலேயே இதைச் சொல்ல இந்த எழுத்தாளருக்கு என்ன துணிச்சல் இருந்திருக்க வேண்டும்!” என்று விமர்சகர் திரு சரவணன் மாணிக்கவாசகம் ஃபேஸ்புக்கில் எழுதிய வரிகளை இங்கு நினைவு கூர விரும்புகிறேன்.

சில்வியா பிளாத் எழுதிய பெல் ஜார், மனநோய் தொடர்பான தன் சொந்த அனுபவத்தைப் புனைவுடன் இணைத்து எழுதியதே. இந்த நூல் அவருடைய சொந்த வாழ்க்கையை பிரதிபலித்தாலும், புனைவின் அழகியலோடும் தன் எழுத்தின் வீச்சோடும் அதை அவர் முன்வைத்ததில் சில அடையாளங்கள் அப்படியே வெளிப்படுத்தப்படாமல் சிறிது மறைபொருளாக இருக்க அனுமதித்தது. ஆனாலுமே அதை அமெரிக்காவில் வெளியிட அவருடைய பெற்றோரும் கணவரும் அனுமதிக்கவே இல்லை. இறுதியில், அவர் இறந்த பிறகுதான் பெல் ஜார் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.

சுயசரிதை புனைகதையாக  நிழலாடுகிற ஓர் எல்லைக்கோட்டைத் தொட்டு நின்றவாறு எழுதும் இன்னொருவர் சீன அமெரிக்க எழுத்தாளரான யியுன் லி. 2019 ஆம் ஆண்டு வெளிவந்த ‘வேர் ரீசன்ஸ் எண்ட்’, புனைவும் சுய சரிதையும் இணைந்த கலப்பு நிறைந்த ஓர் வெளியில் எழுதப்பட்டது. தனது டீன் ஏஜ் மகன் தற்கொலை செய்துகொண்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சில மாதங்களில் யியுன் லி இந்த நூலை எழுதத் தொடங்கினார். 

அவருடைய பல அற்புதமான சிறுகதைகளான ‘வென் வி வேர் ஹேப்பி  வி ஹாட் அதர் நேம்ஸ்’, ஆல் வில் பி வெல் அண்ட் ஹலோ, குட் பை  ஆகியவற்றிலும் இதுவே நிகழ்ந்தது. இதன்மூலம் தன் வாழ்க்கையின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பேசுகின்ற ஓர் எழுத்தாளராக யியுன் மாறினார். தன் துயரங்களை மௌனமாகக் கடப்பதையும், புன்னகைத்தபடி அனைத்தையும் தனக்குள் வைத்துக்கொண்டு உத்வேகத்துடன் மேற் செல்லுதலையும்கூட அவர் தன் நாவல்களில் வெளிப்படுத்தி அவற்றைச் சுய சரிதையாகவே எழுதியுள்ளார். ‘வேர் ரீசன்ஸ் எண்ட்’ நாவல் பற்றி, “மிகவும் இக்கட்டான தருணத்தில் எழுதினாலும், நான் அடிக்கடி சிரித்தேன். இது அநேகமாக நான் எழுதிய வேடிக்கையான புத்தகம், அதாவது, என் வாழ்க்கையின் சோகமான விஷயத்தைப் பற்றி.” என்று தன் மௌனத்தைக்கூட வெளிப்படையாகக் கூறியிருந்தார் யியுன் லி.

அதன் பிறகு 2022 ஆம் ஆண்டில் வெளியான இவருடைய நாவல் ‘தி புக் ஆஃப் கீஸ்’ புனைவுக்கான ஃபாக்னர் விருதை வென்றது. இந்த நூல் மற்றவர்கள் சுயநலத்துக்காக நாம் எப்படி சுரண்டப்படுகிறோம், எதிர்ப்புத் தெரிவிக்காமல் பல நேரங்களில் எப்படி நிறைய விஷயங்களை மௌனமாக ஏற்றுக்கொள்கிறோம், நம்முடைய தெளிவின்மைகள்,  நம் வாழ்க்கையை நாம் தேர்வு செய்கிறோமா அல்லது அது நம்மைத் தேர்ந்தெடுத்துள்ளதா என்பனவற்றைப் பற்றிப் பேசுகிற நேர்த்தியான அதே சமயம் வாசகரைப் பெரிதும் தொந்தரவு செய்யும் ஒரு நாவல்.

விவசாயப் பின்புலத்தைக் கொண்ட 13 வயதுடைய ஆக்னஸ், ஃபேபியன் எனும் இரண்டு சிறுமிகள் போருக்குப் பிந்தைய பிரான்சின் படுமோசமான உண்மைகளைப் பற்றி ஒரு நாவலை எழுத முடிவு செய்வதாக இந்த நாவலை எழுதியிருக்கிறார் குயின் லி. சிறுமிகள் அங்கிருந்த ஒரு தேவாலயத்தில், குளிரால் உறைந்து கிடக்கும் கல்லறைகள்மீது அமர்ந்து நாவலை எழுதி முடிக்கின்றனர்.

முடித்த பிறகு, நிறைய நூல்களை வாசிப்பவரும் அறிவு ஜீவியுமான  உள்ளூர் போஸ்ட் மாஸ்டர், டேவோவிடம் அதை வெளியிட உதவி கேட்டு நிற்கின்றனர். டேவோவை வற்புறுத்தி நைச்சியமாக ஏற்க வைப்பதற்காக ஆக்னஸ் சொல்லும் வரிகள், “அவர் நிச்சயமாக எதிலாவது தன்னை முழுக்க ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். மனைவியை இழந்த அனைவருக்கும் இது தேவை” என்று இதைத் தந்திரமாகக் கையாளுவது, தங்கள் சொந்தப் பயனுக்காக மற்றவரின் சிந்தனையை மடைமாற்றம் செய்யும் மனப்பாங்கு, நாவல் நெடுக வருகிறது. ‘பதிப்பாளர் யாரும் ஆக்னசை மயக்கித் தன் வசப்படுத்த முயற்சிக்கவில்லை’ போன்ற ஒன்றிரண்டு வரிகளை மட்டுமே இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

இறந்துபோன குழந்தைகளைப் பற்றி, மர்மமும் திகிலும் நிறைந்ததாக சிறுமிகளால் அந்த நாவல் எழுதப்படுகிறது. நாவலின் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் இருந்தாலும், அது மென்மையான தொனியில் தான் சொல்லப்பட்டிருக்கிறது. இறந்துபோன குழந்தைகளைப் பற்றிப் பேசும் இந்த நாவல் தன் இளம் மகனை இழந்த ஓர் தாயின் உள்மன ஓலத்தின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது. இதுவும் சுயசரிதை, ஆட்டோ ஃபிக்ஷன் ஆக மாறும் ஓர் இடம்.

இந்தியப் பெண்கள் எழுதிய சுயசரிதை என்று பார்த்தால் கமலா தாஸ்

மலையாளத்தில் எழுதிய ‘என்ட கதை’. இந்தி நாவலாசிரியர் பிரபா கைதான், இந்தியில் ‘அன்யா சே அனன்யா’ என்ற தலைப்பில் எழுதிய சுயசரிதை,  ஆங்கிலத்தில் ‘எ லைஃப் அபார்ட்’ என்று மொழிபெயர்ப்பானது. இந்த இரண்டு நூல்களில்தான் பெண்கள் தாம் சொல்ல விரும்பியதைத் தயங்காமல் சொல்லி இருக்கிறார்கள்.

‘என்ட கதை’ நூலை மொழிபெயர்ப்பாளர் நிர்மால்யா மணி மொழி பெயர்த்துள்ளதைப் படித்தபோது  எனக்குள் இருக்கிற மொழி பெயர்ப்பாளர் விழித்துக்கொண்டது இயல்பாக நடந்த ஒன்றுதான். வாசகராகவும் மொழி பெயர்ப்பாளராகவும் என இரண்டு நிலைகளிலும் அற்புதமான அனுபவத்தைத் தந்தது நிர்மால்யாவின் மொழிபெயர்ப்பு. வழமையாகப் பயன்படுத்தித் தேய்வழக்காகிவிட்ட “மூல மொழியில் படிப்பது போலவே இருக்கிறது. மொழிபெயர்ப்பு என்றே சொல்ல முடியவில்லை” என்பதைத்தான் கூற வேண்டியிருக்கிறது. எத்தனையோ வரிகளைக் கடந்து போகமுடியாமல் மீண்டும் மீண்டும் படித்திருக்கிறேன்.

இந்த செறிவான மொழி பெயர்ப்புக்காக நிர்மால்யாவுக்கு நன்றி கூறுகிறேன்.

இந்த சுய சரிதையின் ஒட்டுமொத்தக் குரலைக் காதல், காமம் என்றெல்லாம் பலவாறு பகுத்தாலும் எனக்குத் தெரிந்து இந்த நாவலில் பரவிக் கிடப்பது கமலாதாசின் ஏக்கம்தான். 

‘என் அப்பாவோ அம்மாவோ எனக்கு முத்தமே  தந்ததில்லை’ என்கிற சிறுமியின் ஏக்கம்.

சிகப்புத் தோலுக்கே முதலிடமும் மரியாதையும் தரப்பட்டு

கலை நிகழ்ச்சிகள் செய்யும் வாய்ப்பு கருப்புத் தோலால் மறுக்கப்பட்டதால் தன் நிறம் குறித்த ஏக்கம்,

அம்மும்மாவும் மற்ற‌ பாட்டிகளும் அகோரங்களைக் குறைக்கவும் தலைமுடியை வளர்க்கவும் உடலெங்கும் எண்ணையும் வேறு பல சிகிச்சைகளும் தந்ததால் ஏற்பட்ட அழகு குறித்த ஏக்கம்

அதன் பிறகு

தான் பிறந்த நாலப்பாட்டு வீட்டின் வாசனையைத்தான் எல்லா இடத்திலும் அவர் தேடியதாக நினைக்கிறேன்.‌ அரளிப் பூக்கள், நெல்லி, நாரத்தை, புங்கை, எட்டி, இலவு என எத்தனையோ மரங்கள், இலவில் படர்ந்த திப்பிலி, அங்கிருந்த குளம், அதன் படித்துறைகள், ரோஜாத் தோட்டம், மாமரம், புளியங்கன்று இவற்றையெல்லாம் இழந்து தொடர்ந்து வீடு மாறிக்கொண்டே இருக்கிற கமலாதாசிற்கு இந்தப் பசிய நீர்மைமிக்க சூழலின் மீதுள்ள ஏக்கம்,

கமலாதாஸ் கர்ப்பமாக இருக்கும்போது கவனித்துக்கொள்ள உடன் வந்த பணிப் பெண் நாலப்பாட்டு வீட்டில் இருந்த இள வயதுப் பெண்ணாக இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என்று நண்பனிடம் பேசுகிற கணவன், தன்மீது பிரியமாக இல்லை எனும் ஏக்கம்,

அடிக்கோடிட்ட ஏராளமான வரிகளில் மூன்றே மூன்றைமட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்

“பெண்மையுடன் தொடர்பு கொண்ட எல்லாக் குணக் கேடுகளும் என்னிடம் தாராளமாக இருந்தன. பாதுகாப்பைக் குறித்த அபரிதமான ஏக்கம், அழகுப் பொருட்களின்மீதும் நறுமணப் பொருட்களின்மீதும் உள்ள மோகம், குதூகலிப்பதற்கும் அகந்தை கொள்வதற்கான ஈடுபாடு, வீர புருஷர்களுடனான வழிபாட்டு மனோபாவம் இப்படியாக நீண்டு செல்லும் ஒரு பட்டியல்”

“சமுதாயம் என்கிற திருட்டுக் கிழவி உருவாக்கிய கசாப்புக் கூடமே ஒழுக்க நெறி.”

“பரிபூரண காதலாலும் காதலுக்கான தியாகத்தாலும் பத்தினித்தனத்திற்கு ஒருபோதும் ஊறு ஏற்படாது.”

புத்தக வாசிப்புப் போதையில் மூழ்கி இள வயதிலேயே ஏராளமாக வாசித்த கமலாதாஸ் பின்னாளில் ஒரு கட்டத்தில் தற்கொலை எண்ணம் வலுப் பெற்றபோது சட்டென மனம் மாறி படுக்கையறை விளக்கை ஏற்றி “தெளிந்த ஓர் எதிர்காலத்தைப்” பற்றிய கவிதை ஒன்றை எழுதி, அடுத்த நாள் காலை ஓர் பத்திரிகைக்கு அனுப்புகிறார். நான் இதைப் படித்தபோது  இதுதான் அவருடைய வாழ்க்கையின் போக்காகவும் இருந்திருக்கிறது என்று நினைக்கிறேன். ஷண சித்தம் ஷணப் பித்தம் என்பதாக இல்லை. நினைத்தவற்றை நினைத்த மாத்திரத்தில் செய்கிற ஓர் படைப்பு மனம் அது.

ஒழுக்க நெறிகளைப் போதித்தபடி இருக்கும் சமூகத்தில் தனக்கான பிரியத்தைத் தேடித் தேடிப் பயணித்து, கற்பனையும் யதார்த்தமும் குழம்பித் தவித்த நிலையிலும், தன் மனதில் தோன்றியவற்றை, தான் காதல் வயப்பட்ட அத்தனை நிகழ்வுகளையும், ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகப் பேசும் ஒருத்தியைப் பக்கத்தில் இருந்து பார்ப்பது மட்டுமல்ல அவளைப் பற்றிப் படிப்பதும் எளிதான ஒன்றல்ல. கமலாதாஸ்  பரிதவிப்புடன் தன் வாழ்க்கை முழுதும் தேடிய ஓர் அன்பான மனம் தேவை அதற்கு. இத்தனை வருடங்கள் கழித்து இப்போதும்கூட…

கயல் எஸ்

வேலூர், முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரியில் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் கயல், வணிகவியல், இதழியல், வணிக மேலாண்மையியல் ஆகிய மூன்று துறைகளில் முதுகலைப் படிப்பும், வணிகவியலில் எம்.ஃபில் பட்டமும், வணிகவியல், வணிக மேலாண்மையியல் ஆகிய இரண்டு துறைகளில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். தொழிலாளர் சட்டங்கள் குறித்த பட்டயப் படிப்பும், தகவல் தொழில் நுட்பத்தில் பட்டயப் படிப்பும் பயின்றுள்ளார்.

கல்லூஞ்சல்  (2015) மழைக் குருவி (2016) ஆரண்யம் (2018) ஆதிவாசிகள் நிலத்தில் போன்சாய் (2019) உயிரளபெடை (2020) ஆகிய ஐந்து கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன.


‘பழைய கடவுளரும் புதிய துர்தேவதைகளும்: சமகாலத் திபெத்தியச் சிறுகதைகள்’, ‘கனவு இல்லம்: அமெரிக்கச் சிறுகதைகள்’ ஆகிய இரண்டு மொழிபெயர்ப்புத் தொகுப்புகள் 2022 ஆம் வருடம் வெளிவந்துள்ளன. 

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *