“ட்ரிங்..டிரிங்” போன் ஒலித்தது. ராமின் மனைவி கலா, ‘என்னங்க! நான் அடுப்பு வேலையா இருக்கேன், போன் அடிச்சுக்கிட்டே இருக்கு. என்னன்னு தான் பாருங்களேன்’.

தனது அறையின் கதவை உள் பக்கமாகச் சாத்திக்கொண்டு ஃபைலைத் தேடிக்கொண்டிருந்தவனின் காதுகளில் சப்தமாக ஒலித்தது மனைவியின் குரல். அறையிலிருந்து அவசர அவசரமாக வந்து ரிஸீவரை எடுத்து ஹலோ! என்றான் ராம்.

“ஹலோ, நான் அசோக் பேசுகிறேன்”.

“சொல்லுங்க மிஸ்டர் அசோக்”.

“சார் ரியல் எஸ்டேட் கம்பெனியிலிருந்து பேசுறேன். வீட்டுமனை ஏதாவது பார்க்கிறீங்களா?’’

‘ஆம் பாத்துக்கிட்டிருக்கிறோம்’.

“இடம் ஒன்று விலைக்கு வருது.. முடித்துவிடலாமா?”

“எந்த ஏரியா?”

“அசோக் நகர் தெரியுமா?”

“தெரியும் சொல்லுங்கோ”

“அங்கு ஏழாவது அவன்யூல ஒரு கிரவுண்ட் விலைக்கு வருது”.

“எவ்வளவு சொல்றாங்க?”

“விலையெல்லாம் இடத்தைப் பார்த்தப் பிறகு பேசிக்கிலாமே?”

“சரி இடத்தோட லைவ் லொகேஷன் ஷேர் செய்ய முடியுமா!”

“இதோ உடனே அனுப்புகிறேன்”. போன் துண்டிக்கப்பட்டது.

கலா, “என்னங்க யாரு போன்ல?” என்று கூறிக்கொண்டே சமையலறையிலிருந்து கைகளைத் துடைத்தப்படியே ஹாலுக்கு வந்தாள்.

”நாம் இடம் பார்த்துக்கிட்டு இருக்கிறோம் என்று தெரிந்துகொண்டு, ரியல் எஸ்டேட் கம்பெனியிலிருந்து பேசினாங்க. அசோக் நகர் ஏழாவது அவன்யூல ஒரு கிரவுண்ட் விலைக்கு வருதாம். அதான் அவரிடம் லைவ் லொகேஷனை சேர் பண்ணச் சொல்லியிருக்கேன். உனக்கு எப்ப ஃபிரீனு சொல்லு. நாம போய் இடத்தைப் பார்க்கலாம்”.

“சனிக்கிழமை மத்தியானத்துக்கு மேல ஃபிரீதான்”.

“சரி அப்படின்னா இந்த வாரம் சனிக்கிழமை ஈவினிங் வர்றதா தகவல் கொடுத்திடறேன் அவரிடத்தில்”.

****

கார் உதிரி பாகம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் இன்ஜினியராகப் பணிபுரிகிறான் ராம். கலா சாப்ட்வேர் கம்பெனியில் புரோகிராமர்.

நல்ல வருமானம் இருவருக்கும். சுமார் வருடத்திற்கு ஏழு லட்சம் சி.டி.சி வாங்குறான் ராம். கலாவும் ஏறக்குறைய ராம் அளவிற்குத்தான் பெறுகிறாள்.

வருடத்திற்குப் பார்க்கப்போனால் இருவரது சம்பளமும் சேர்த்துப் பிடித்தம் போகச் சுமார் பன்னிரன்டு லட்சம் கைக்குக் கிடைக்கும். அதனாலேயே சொந்த வீடு கட்டிக்கொள்ள ஆசைப்பட்டு, இடமும் மும்முரமாகப் பார்த்து வந்தனர்.

தற்போது அடுக்குமாடி புடியிருப்பில் 500 சதுர அடி இடத்தில் குடியிருக்கிறார்கள். குழந்தைகள் பிறக்கும் முன் சொந்த வீட்டைக் கட்டிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருவரிடத்திலும் மேலோங்கியிருந்தது.

“கலா,கிளம்பியாச்சா?”

“என்னங்க சும்மா தொணதொணத்துக்கிட்டே இருந்தா எப்படி வெளியே வருவது, ஒரு ரெண்டு நிமஷத்துல வந்துடறேன்”

அவள் சொன்னபடி விரைவாக அறையிலிருந்து வெளியே வந்தாள். வெளியே வந்தவளை, ராம் அப்போதுதான் அவளைப் புதிதாகப் பார்ப்பதுபோல் பார்த்தான்.

“……….” சில வினாடிகள் மௌனம் நிலவியது அங்கு.

“சும்மா அப்படிக் குறு குறுனு பார்க்க வேண்டாம்.”

“சரி சரி உடனே மூக்கு மேல் கோபம் வந்துடுமே உனக்கு”.

சிரித்துகொண்டே கதவை தாழிட்டுச் சாத்திவிட்டு வெளியே வந்து ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தான் ராம். ஸ்கூட்டர் உதைத்தவுடன் ஸ்டார்ட் ஆகிவிட்டது. கலாவும் ஸ்கூட்டரின் பின் புறம் இருக்கும் இருக்கையில் அமர்ந்தாள்.

ஸ்கூட்டர் விரைந்தது லொகேஷனை நோக்கி. ஒரு மணி நேரம் பயணம் செய்து வேண்டிய இடத்தை அடைந்தனர் இருவரும்.

“ஹலோ சார்! ஹலோ மேடம்!”

“ஹலோ”

“நான் அசோக்”

“நான் ராம் இவங்க என் சம்சாரம்.” என்று சொல்லியபடியே அசோக்குடன் கை குலுக்கினான் ராம். அறிமுகமானவுடன். “இப்படி வாங்க, இதோ அந்தக் கிரவுண்ட் தான். மொத்தம் ஒரு கிரவுண்ட் விலைக்கு வருது. உங்களுக்கு வேணும்னா நீங்க அரைக் கிரவுண்ட எடுத்துக்கலாம். இதுல ஓர் அட்வான்டேஜ் கூட இருக்கு. முதலில் வாங்கறவங்களுக்கு முகப்பு பகுதியே கிடைக்கும். ரெண்டாவதா வாங்கினா பின் புறம் தான்”.

***

இவர்கள் இருவருக்கும், இடத்தைப் பார்த்தவுடனே பிடித்துப் போக! அசோகிடம் விலையைக் கேட்டனர்.

“சார் கிரவுண்ட் முழுமையா வாங்கினா ஒரு விலை, அரைக் க்ரவுண்ட் வாங்கினா வேறு விலை”.

“சரி அப்படின்னா முழுக் கிரவுண்ட் என்ன விலை?”

“சதுர அடி 6000 ரூபாய். உங்களுக்கு எத்தனை சதுர அடி தேவை?”

“எங்களுக்கு அரைக் கிரவுண்ட் தான் வேண்டும்”.

“அப்போ உங்களுக்கு 1200 சதுர அடி தேவை. ஆல்ரைட் முதலில் முழுக் கிரவுண்டை சப்-டிவிஷன் செய்ய வேண்டும். 1200 சதுர அடியா ரெண்டா பிரிக்க வேண்டும். ஓக்கே, டோக்கன் அட்வான்ஸ் கொடுத்தா நான் அடுத்த வேலையை ஆரம்பித்து விடுவேன்” என்றான் அசோக்.

இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டனர். ராம் கலாவிடம் கேட்டான் “என்ன கலா இடம் புடிச்சிருக்கா?” அவள் இவனிடத்தில் பதிலை கூறினாள். ’இவ்வளவு வருஷமா பார்த்ததுல இந்த இடம் கொஞ்சம் நல்லா இருக்கிற மாதிரி தெரியிது. அதனால பேசாம இந்த இடத்தை முடித்து விடுங்கள்’ என்றாள்.

உடனே ராம் கேட்டான்! ’முடிவா சதுர அடி ரேட்டை ஃபைனல் செய்யுங்க. நாங்க அந்த அரைக் கிரவுண்டை வாங்கலாமென்று முடிவெடுத்திருக்கிறோம்’ என்றான்.

“சார், நான் தான் முதலிலே சொன்ன மாதிரி சதுர அடி 6000 ரூபாய்”.

“ரொம்ப அதிகம்”.

“இதில் எங்களுக்கு ஒன்னும் லாபமில்ல. ஓனர் என்ன சொன்னாரோ அதைத்தான் நான் உங்களிடம் சொன்னேன்”.

“முடிவா எவ்வளவுன்னா கொடுப்பாரு”.

“சதுர அடி 5800 ரூபாய் என்றால் கொடுப்பார்”.

“நல்லா யோசித்த பிறகுதான் சொல்றேன். சதுர அடி 5500 ரூபாய் என்றால் உடனே இந்த இடத்தை வாங்கிக் கொள்கிறோம். வேண்டுமானால் போன் போட்டு ஓனரிடம் பேசி ஒரு நல்ல முடிவை எங்களுக்குச் சொல்லுங்க”.

***

போன் மூலம் தொடர்பு கொண்ட அசோக் இவர்களிடம் ஓனர் சதுர அடி 5500 ரூபாய் சம்மதம் சொல்லிவிட்டார் என்று கூறியவுடன். ராம் மற்றும் கலா இருவருக்கும் ஒரே மகிழ்ச்சி. இருந்திருந்து ஒரு நல்ல இடம் அமைய போகிறது என்று மனதில் ஓர் இனம் புரியாத ஆனந்தம்.

“சார் டோக்கன் அட்வான்ஸ் எவ்வளவு கொடுக்கிறீங்க?”

“உங்க ஜீ.பேவில் டோக்கன் அட்வான்ஸ் 5000 ரூபாய் உடனே செலுத்துகிறேன்”.

“நான் உங்களுக்குக் கம்பெனி ரூல்ஸ தொரிவிக்கிறேன். முதலில் சப்-டிவிஷன் செய்ய வேண்டும். அதற்குச் செலவாகும், அதை ஓனர் கொடுக்க மாட்டார். நீங்கள் தான் இந்தக் கிரவுண்ட் வாங்கும் பணத்திலிருந்து சப்-டிவிஷன் சார்ஜை செலுத்தவேண்டும்.

“சப்டிவிஷன் செய்வதற்குக் குறைந்தது எவ்வளவு செலவாகும்? அரசாங்க வேலை அல்லவா குறைந்தது ஒரு லட்சம் ஆகும். நீங்க எனக்கு ரெண்டு தவணையாகச் செலுத்துங்க. நான் மற்ற காரியங்களையெல்லாம் பார்க்கிறே”

‘’இல்லை முதலில் இடத்துடைய பத்திரத்தின் நகல் எங்களுக்கு வேண்டும். அதை நாங்கள் எங்கள் அட்வகேட் இடம் காண்பித்து, வில்லங்கம் ஏதேனும் உள்ளதா என்று சரி பார்த்த பிறகே! நீங்க கேட்ட தொகையைக் கொடுக்க முடியும்.”

“சரிதான் அப்போ! நான் இன்று சாயங்காலம் உங்களிடம் இந்த இடத்தின் பத்திரத்தின் நகலை தருகிறேன்” என்றான் அசோக்.

சாயங்காலம் அசோக் சொன்னபடி பத்திரத்தின் நகலை ராமிடம் கொடுக்க, அதை ராம் வாங்கிப்பார்த்தான். பிறகு அசோக் இடம் கூறினான், ’எங்களுக்குக் குறைந்தது மூன்று நாட்கள் அவகாசம் தேவை. முன்னதே சொல்லிய மாதிரி எங்கள் அட்வகேட் இடம் காண்பித்துச் சரிபார்த்த பிறகு நான் உங்களுக்குப் போன் போட்டுப் பேசுகிறேன் சரியா?’ என்றான்.

அடுத்த நாள் அட்வகேட் இடம் பத்திரத்தின் நகலை கொடுத்து சரி பார்க்க சொன்னான் ராம். அட்வகேட் பத்திரத்தின் நகலை வாங்கிப் பார்த்துவிட்டு. “உங்களுக்கு ஓரல் கன்சல்டேஸன் வேண்டுமா? அல்லது ரைட்டப்பில் வேண்டுமா? என்று கேட்டார்.

ராம் பதிலளித்தான், அவரிடத்தில். ’எங்களுக்குக் கிளியரன்ஸை ரைட்டப்பில் கொடுத்துடுங்க அதான் சரியாக இருக்கும்’.

“அப்போ! போயிட்டு ரெண்டு நாள் கழித்து வாங்க. என்னுடைய டீம் இதை அனைத்தையும் ஸ்கூர்டனைஸ் செய்து எனது பார்வைக்கு வைப்பார்கள். நான் அதை ஒரு தடவை பார்த்துவிட்டு உங்களுக்கு ரைட்டப்பில் கொடுத்துடுறேன்” என்றார்.

ரெண்டு நாள் முடிந்தவுடன் ராம் போன் போட்டு அட்வகேட் இடம் பேசினான். அவர் இன்னும் ரெண்டு நாள் வேண்டும் என்றார். இவனும் சரியென்று அவரிடம் கூறினான். இதற்கிடையில் அசோக் போன் போட்டு, “சார் என்ன ஆச்சு? என்றான். உடனே அவனிடத்தில் ’அட்வகேட் எங்களிடத்தில் இன்னும் ரெண்டு நாள் தவணை கேட்டிருக்கிறார்’ என்றான் ராம்.

மறு முனையில் அசோ கூறினான். “சார் பேப்பர் வரது வரட்டும். நீங்க கொடுக்க வேண்டிய அட்வான்ஸ் அமௌன்ட் கொடுத்தா நல்லா இருக்கும். நிறைய நபர்கள் வந்து இதே இடத்தைப் பார்த்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் டோக்கன் அட்வானஸா லட்ச கணக்கில் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். நான் தான் உங்களிடம் டோக்கன் அட்வான்ஸ் வாங்கியதால் ஒன்றும் பேசாமல் இருக்கிறேன்’’ என்றான்.

“எப்படிப் பேப்பர் வராமல் கொடுப்பது?”

“நீங்க என்னை நம்பி பணத்தைக் கொடுங்க, இந்த இடம் எந்த வில்லங்கமும் இல்லாத இடம். நான் உங்களுக்கு ரசிப்ட் தருகிறேன் என்றான் அசோக்.”

ராம் சிறிது நேரம் யோசித்துவிட்டு. ’சரி நான் உங்களுக்குப் பார்ட் பேமென்ட் தரறேன். அதற்கு ரிசிப்ட் கொடுங்க’ என்றான். எப்போதும் முடிவெடுக்கும் முன்னர்க் கலாவிடம் ஒரு வார்த்தை கேட்பான் ராம். ஆனால் இந்த முறை ஏனோ அவன் அவளிடத்தில் கேட்கவில்லை.

***

மறுநாள் காலை எழுந்தவுடன், கலாவிடம் ’நான் உன்னிடத்தில் கேட்காமலே அட்வான்ஸ் அமௌன்ட் கொடுப்பதாகச் சொல்லிவிட்டேன் அசோக்கிடம்’ என்றான். அவள் ஒரு வினாடி யோசித்தாள்.

“…….” மௌனம் நிலவியது அங்கு. அவளது மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி. ஏனெனில் அவளுக்கும் அந்த இடம் பிடித்திருந்தது.

குளித்து முடித்த பின்னர் காலை உணவை உண்ட பிறகு, ராம் நேரே லாக்கரில் உள்ள காசோலையை எடுத்து. அதில் அட்வான்ஸ் அமௌன்டை எழுதி தன் பையில் வைத்துக்கொண்டு அசோக்கை பார்க்க சென்றான்.

செல்லும் வழியில் அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. ஒரு முறை ஏன் நாம்! அட்வகேட் இடம் நேரே சென்று பார்க்கக்கூடாதென்று. முடிந்தால் அவர்களிடம் நேராக ஒபினியன் வாங்கிய பிறகு, அசோகிடம் போய் அட்வான்ஸ் அமௌன்டை கொடுக்கலாம் என்று மனதில் எண்ணியவுடன், நேரே ஸ்கூட்டரை அட்வகேட் இடத்திற்குச் செலுத்தினான்.’

அவர்களிடம் நேரே கேட்டான். பதில் சாதகமாகச் சொன்னார்.

அதாவது பத்திரத்தில் வில்லங்கம் ஏதும் இல்லை என்று. ’நாளை வாங்க ரைட்டப்பில் கொடுத்துவிடுகிறேன்’ என்று அட்வகேட் கூறினார் ராம் இடத்தில்.

உடனே காசோலையை எடுத்துக்கொண்டு அசோக்கை பார்க்க சென்றான் ராம். கிளம்பும் முன்னர் மறுபடியும் ‘ஒரு முறை அட்வகேட் இடம். சார், எல்லாம் சரி தானே? ஏனெனில் நான் அட்வான்ஸ் அமௌன்ட கொடுக்கப் போறேன்.’

“எவ்வளவு அட்வான்ஸ் அமௌன்ட கொடுக்கப் போறீங்க?”

“முதல் தவனையாய் 25000 ரூபாய் கொடுக்கப் போகிறேன், பிறகு படிப்படியாகப் பணத்தைக் கொடுத்துவிடுவேன்”.

“ஓக்கே, பணத்தைக் கொடுங்க பத்திரத்தில் வில்லங்கம் ஏதும் இல்லை, அதனால் நீங்க கொடுக்கலாம்”.

“நன்றி, நாளை வந்து ரைட்டப்பில் வாங்கிக்கொண்டு போகிறேன் என்றான் ராம்”.

ஸ்கூட்டரில் கிளம்பி நேரே அசோக் இருக்கும் இடத்திற்கு வந்தடைந்தான் ராம். தன் பையில் உள்ள காசோலையை எடுத்து அசோகிடம் கொடுக்க, அதை அசோக் முக மலர்சியுடன் பெற்றுக் கொண்டான். அசோக்கிடம் ’லோன் வாங்கித் தான் இந்த இடத்தை வாங்குறோம்’ என்றான் ராம்.

உடனே அசோக், ’நாங்கள் எங்களுக்குத் தெரிந்த வங்கியில் லோன் ஆர்கனைஸ் செய்திடுவோம். இல்லை எனக்குத் தெரிந்த நபர் இருக்கிறார். அவர் மூலம் நான் லோன் பெற்றுக் கொள்வேன்”. என்று கூறி அந்த இடத்தை விட்டுக் கிளம்பினான் ராம்.

போன் போட்டுத் தனக்குத் தெரிந்த லோன் கொடுக்கும் நபரிடம் அப்பாயின்மென்ட் கேட்டுப் பேசினான். அவர் ஒரு தேதி சொல்லி ராமை அவரிடத்திற்கு வரச் சொன்னார். இரண்டு மூன்று நாட்கள் அப்படியே சென்றது. மீண்டும் அட்வான்ஸ் அமௌன்டை கேட்டு அசோக் போன் போட்டு ராமிடம் கேட்க. இப்ப தான் கொடுத்தேன் அல்லவா என்று ராம் சொல்ல.

“உங்களிடம் நான் தான் அரசாங்க வேலை என்று ஏற்கனவே சொன்னேன் அல்லவா! பணம் இருந்தால் மட்டும் காரியம் நடக்கும் இல்லை என்றால் அப்படியே போட்டு விடுவார்கள்.”

“சரி, நாளை உங்களைப் பார்க்கிறேன். நான் உங்களைப் பார்க்கும் போது ஒரு பார்ட் பேமென்ட் செய்றேன்”. என்றான் ராம்.

***

அடுத்த நாள், காலை அலுவலகம் செல்லும் முன்னர் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து,ஒன்பதிலிருந்து பத்து மணிக்குள் அசோக் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான். அவன் முன்னரே சொல்லியிருந்த மாதிரி அவன் எடுத்து வந்த பணத்தை அசோக்கிடம் கொடுத்துவிட்டு. சப்டிவிஷன் பேப்பர் எப்போது கைக்கு வரும் என்று கேட்டு விவரம் அறிந்து கொண்டு,நம்பிக்கையுடன் அலுவலகம் கிளம்பும் சமயத்தில்!


“ட்ரிங்..ட்ரிங்” தொலைப்பேசி மணி அடித்தது. யார் என்று பார்க்கையில்,அந்தப் பக்கம் அவனது நண்பர். அவர்தான் வங்கி லோன் ஆர்கனைஸ் செய்து கொடுப்பவர் என்று அறிந்துகொண்டவுடன்.

“ஹலோ! சார், எப்படி இருக்கீங்க?”
“கடவுள் புண்ணியத்தில் நல்லா இருக்கிறேன் ராம்”

“நீங்க சிறிது நேரம் என்னுடைய ஆபீஸுக்கு வர முடியுமா?”
“அதற்கு என்ன, கட்டாயம் வருகிறேன். பக்கத்தில் தான் உள்ளது உங்க ஆபீஸு”.

நண்பரின் ஆபீஸுக்கு விரைந்தான் ராம். அங்கு அவரைப் பார்த்து லோன் சம்பந்தமாகச் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பும் சமயத்தில் ராமின் நண்பர்

“எந்த இடம் என்று சொன்னீர்கள்?”
“அதான், அசோக் நகர் 7வது அவின்யூ”, இதைக் கேட்ட பிறகு.. சிறிது நேரம் ராமுடைய நண்பர் மௌனமாக இருந்தார்’

மௌனத்தை உடைக்கும் வகையில் ராம் அவரிடம் ’ஏன் சார் மௌனம்?’ என்றான்.
“ஒன்னுமில்ல பத்திரத்தையெல்லாம் சரிவர அட்வகேட் இடம் கொடுத்துச் சரிபார்த்தாச்சா?”
“அதெல்லாம் அட்வகேட் வந்து வில்லங்கமெல்லாம் இல்லை என்று சொன்ன பிறகுதான் அட்வான்ஸ் அமௌன்ட் எல்லாம் கொடுத்திருக்கிறேன்.”

“சுமார் எவ்வளவு அட்வான்ஸ் கொடுத்திருக்கீங்க”.

“அது வந்து, வந்து”

“சும்மா சொல்லுங்க”

“சுமார் ஒரு லட்சம் கொடுத்திருக்கிறேன்”

“நான் சொல்றதை தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். நீங்க சொன்ன இடம் ஆர்க்கியாலஜி டிபார்ட்மென்ட் கீழே வரும் போல் தோன்றுகிறது. ஒரு முறை முனிசிபல் கார்ப்பரேஷன் சென்று அவர்களிடம் அந்த இடத்தைப் பற்றி விசாரிங்க முதலில்.பிறகு மற்ற ஃபார்மாலிடீஸ் எல்லாம் செய்யலாம்.

“என்ன பயமுறுத்துறீங்க”.

“பயப்பட வேண்டாம் முதலில் போய் விசாரிங்க, ஒரு வேளை அந்த இடம் ஆர்க்கியாலஜி டிபார்ட்மென்ட கீழ் வரவில்லை என்றால் நல்லதுதானே!”

“சரி, நான் முதலில் போய் விசாரிக்கிறேன்”.

அசோக்கிடம் கூறினான் ராம், ’எனக்கு இப்போதுதான் தெரியவந்தது நீங்க எங்களுக்குக் காண்பித்த இடம் ஆர்க்கியாலஜி டிபார்ட்மென்ட் கீழ் வருகிறதாமே?’.

“அப்படியா சார்”, அப்படி அஃது உண்மையா இருந்தால் நாங்க உங்களுக்கு என்.ஓ.சி வாங்கிக் கொடுத்திடுவோம்”

“யாரிடமிருந்து என்.ஓ.சி வாங்கிக் கொடுப்பீர்கள்”

“அரசாங்கத்திடமிருந்து தான்” என்றான் அசோக்.

குழப்பத்துடன் அலுவலகம் செல்லாமல் வீடு திரும்பினான் ராம்.

***

மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டிருந்தது இந்த விஷயம். ராம் யோசிக்கத் தொடங்கினான், எங்குக் கேட்பது, யாரை நாடுவது என்று இருக்கையில். அவனுக்கு ஒரு யோசனை உதித்தது. ‘ஏன் கூகிளில் தேடி பார்க்க கூடாது. அதில் ஆர்க்கியாலஜி டிபார்ட்மென்டைப் பற்றித் தகவலிருந்தால்!  ஏன் நாம் அதிலிருந்து எடுத்து அவர்களிடம் உதவி கேட்க கூடாது?

பெரிய போராட்டத்திற்குப் பிறகு தகுந்த நபரின் விவரங்களை எல்லாம் சேகரித்துக் கொண்டு. அவரிடம் மின் அஞ்சல் மூலம் தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தைக் கேட்டான் ராம்.’ இரண்டு தினங்களுக்குள் ஆர்க்கியாலஜி டிபார்ட்மென்டிலிருந்து பதில் வந்திருந்தது. பதிலை படித்தவுடனே கவலையில் ஆழ்ந்தான் ராம். ஏனெனில் பதில் அவனுக்குச் சாதகமாக இல்லை. இவர்கள் அட்வான்ஸ் கொடுத்து வாங்க போகும் இடம் சரியாக ஆர்க்கியாலஜி டிபார்ட்மென்ட் கீழ்தான் வருகிறது.

அந்த மின் அஞ்சலில் தாங்கள் இடத்தை வாங்க வேண்டாம், ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும் அரசாங்கம் நிலத்தைத் தோண்டி பார்க்க வாய்ப்பு உள்ளது என்று எழுதியிருந்தது.

அடுத்த நாள் காலை, அவன் முனிசிபல் கார்ப்பரேஷன் சென்று அங்கும் விசாரித்தான். அவர்களும் இடத்தை வாங்க வேண்டாம் என்று தான் சொன்னார்கள். பதற்றத்துடன் அட்வகேட் இடம் வந்து நிலவரத்தை சொன்னான்.

அதற்கு அட்வகேட்  ’நாங்க பத்திரத்தில் வில்லங்கம் ஏதேனும் உள்ளதா என்று தான் பார்ப்போம். மற்றது எல்லாம் நீங்க தான் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று கூறிவிட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் அசோக்கிடம் வந்து பணத்தைத் திருப்பித் தரும்படி சொன்னான்.

“சார் வேறு இடம் வேண்டுமானாலும் நான் காட்டுகிறேன்” என்று ராமிடம் சொல்ல.
வேறு வழியின்றி இரண்டு இடத்தைப் பார்வையிட்டனர். ஆனால் எதுவும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

பணத்தைத் திருப்பிக் கேட்டனர்.

“சப்டிவிஷன் செய்வதற்குக் கொடுத்து விட்டேன், இந்த நிலத்தை விற்றுதான் உங்களுக்குப் பணம்தர முடியும்” என்று கூறி விட்டான் அசோக்.
வருஷங்கள் உருண்டோடியது, ஒன்று, இரண்டு, மூன்று….. என வருடங்கள் சென்றது தான் மிச்சம்.

இவர்களது பணம் இவர்கள் கையில் திரும்பி வரவில்லை.
எப்ப அசோக்கிடம் கேட்டாலும் நிலத்தை விற்றுதான் பணத்தைத் தர முடியும் என்று ஒரே பதிலை கூறிக் கொண்டு வந்தான்.


எவ்வளவோ முயற்சி செய்து பார்த்த பின்பு கூட, இவர்களால் அசோக்கிடமிருந்து பணத்தை வாங்க முடியவில்லை. ராம் ஒரு கட்டத்தில் எண்ணினான் அசோக் பொய் மேல் பொய் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறான் என்று.

அவனிடத்திலிருந்து பணத்தைத் திருப்பிக் வாங்குவது என்பது முடியாத காரியம். எப்படி இவனிடமிருந்து இந்தப் பணத்தைத் திருப்பிப் பெற்றுக் கொள்வது. போலீஸிடம் செல்லலாமா?

இல்லை என்றால் கட்டப் பஞ்சாயத்து செய்யும் நபர்களைப் பார்க்கலாமா? மேலும் யோசித்தான்.

இவர்களிடம் சென்றால் நாம் அலைய வேண்டியது இருக்கும். அப்படி அவர்களிடம் செல்வதாக இருந்தால் முதல் வருடத்திலேயே போயிருந்திருக்கலாமே.’ என்ன செய்யலாம்? இந்த மூன்று வருஷங்களாக யோசித்துக் கொண்டிருந்த ராமுக்கு. கடைசியாக அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது!

ஏன் நாம் முகநூலில் அசோக் நம்மிடம் கொடுத்த ரிஸிப்ட் எல்லாத்தையும் சேர்த்து அவனுடைய போட்டோவையும் அதனுடன் இணைத்து, இந்த மாதிரி இவன் என்னை ஏமாற்றி விட்டான். அனைவரும் சற்று ஜாக்கிரதையாக இருங்கள்.

இந்த நபரிடம் பணம் கொடுக்கும் முன் ஒரு தடவைக்கு மேல் யோசித்து விட்டுப் பணத்தைக் கொடுங்க என்றெல்லாம் அதில் எழுதி முகநூலில் பகிரிந்தான் ராம்’.

மூன்று வருஷங்களாகப் போராடிய ராமுக்கு ஒரு மாதத்திற்குள் போன் வந்தது.

“சார், நான் அசோக் பேசுறேன்”

“என்ன அசோக் மூன்று வருஷமாக நாங்க தான் போன் போட்டு உன்னுடன் பேசுவோம். முதல் முறையாக நீ எங்களுக்குப் போன் போட்டு பேசிக் கொண்டிருக்கிறாய்” என்றான் ராம்.

“நான்தான் தருகிறேன் என்று சொல்றேன் அல்லவா பிறகு ஏன் முகநூலில் என்னைப்பற்றிப் பகிர்ந்தீர்கள்?”

“நாங்க ஒன்றும் பொய் சொல்லவில்லை. மூன்று வருஷங்களாகப் போராடி பார்த்தோம். ஆனால் உன்னிடமிருந்து ஒரு பைசா கூட வாங்க முடியவில்லை. அதான் எல்லா ஆதாரத்தையும் இணைத்து முகநூலில் பகிர்ந்தேன். என்னைப் போன்று வேறு யாரேனும் இது போன்று மாட்டிக் கொள்ளக் கூடாதுனு தான்.”

“முகநூலிலிருந்து அந்தப் பதிவை நீக்குங்கள். நான் உங்கள் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன். நீங்கள் போட்ட இந்தப் பதிவால் என் வேலை பறிபோனது எனது கம்பெனியிக்கு யாரும் வர மாட்டேங்கிறாங்க’’.
”சரி பணத்தைக் கொடு நான் பதிவை நீக்கி விடுகிறேன்”
இதற்குப் பிறகு ராம் மற்றும் கலாவிற்குச் சிறிய தெம்பு வந்தது.

அவர்களுடைய பணம் அவர்களிடம் திரும்பி வந்து விடுமென்று.

000

பாலமுருகன்.லோ

பிறந்த இடம் கரூர் மாவட்டம். பள்ளிப் படிப்பு அனைத்தும் கரூரில் முடித்த பிறகு. வேலை நிமித்தமாகச் சென்னைக்கு 1997-ல் வந்தவன் பல நிறுவனங்களில் பணிபுரிந்து தற்போது ஒரு ஜெர்மானிய நிறுவனத்துக்கு ஆஃப்டர் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் பிரிவில் வேலை செய்துவருகிறேன். சிறு வயதிலிருந்தே எனக்கு எழுதும் ஆர்வம் இருந்தது. ஆனால் வளர வளர படிப்பு, வேலை திருமணம், பிள்ளைகள் என்று வந்த பிறகு எழுதும் ஆர்வம் சற்று மங்கிக் காணப்பட்டது. ஆனால் என்னாலும் மீண்டும் எழுத முடியும் என்று என்னை நான் முழுமையாகக் கண்டுகொண்ட வருடம் 2020 என்று கூறலாம். 2019-ல் இருந்து தீவிரமாகக் கதை மற்றும் கவிதைகளை வாசித்து ஒரு வாசகராக என்னை முழுமையாக மாற்றி இருக்கிறது இந்தக் கலை இலக்கிய உலகம் .

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *