1
காத்திருத்தலின்
கடைசிக் கணம்
எப்படிப் பூக்கும்
அல்லது வெடிக்கும்?
பிடிபடவில்லை
படபடப்புடன்
காத்திருக்கிறேன்.
2
நேருக்கு நேரான
அந்தப் பார்வையின்
கண்ணிமைக்கும் தருணத்தில்
தரையில் விரிந்திருக்கும்
மெல்லிய வெள்ளைத் துணியை
நீர் தவழ்ந்து வந்து மெல்லத் தழுவுவது போல
ஒரு புன்னகை கலந்திருந்தது
குளிர்ந்த மனம் சாட்சி.
3
ஒரு மரணத்தின் தொடர்ச்சியாய்
அல்லது அதன் நெருக்கத்தை ஒட்டி
உணர்ச்சிக் கொந்தளிப்புகளுடன்
உறவுகளுக்கிடையே
சண்டைகள் நடப்பது
பெருந்துயரம்
அதனிலும் கொடியது
அப்படியான மோதல்களுக்கு
விடைபெற்றவரே
விதை போட்டுவிட்டுச் சென்றார்
என்ற உண்மையை
யாரும் உணராமலிருப்பதுதான்.
வாழும் காலத்திலேயே
தாங்கள் விரும்பாதவர்களுக்கு
குழி தோண்டி வைக்கிறார்கள்
அந்தக் குழிகளில்
அடுத்தடுத்து விழுபவர்களே
அவரை ஒரு குழியில் புதைக்க
ஏற்பாடு செய்வது நகை முரண்
அவர்களின் அடாத செயல்களை
இரத்தக் கறை படிந்த இடத்தை
ஆசிட் ஊற்றிக் கழுவுவது போல
மரணம் துடைத்தெறிகிறது.
ஆவிகளை விசாரிப்பதற்கு
நீதி முறைமைகள்
எங்கேனும் உண்டா?
4
கதவைத் தாழிட்டுவிட்டால்
ரகசியம் வெளியே போகாது
என்று நம்பவது போலன்றி
மூடத்தனம் வேறில்லை
காற்றின் அலைகளில்
ஏராளம்
உளவுக் கண்கள்
காற்று வீசும்
தவழும்
மோப்பமும் பிடிக்கும்.
5
எல்லாமும்
தங்கள் வழியாகவே
நடக்கவேண்டுமென்று
முட்டிமோதுகிறார்கள்
மனிதர்கள்
சொந்த மலமும் சிறுநீறும்
அவர்கள் வழியாக வெளியேறுவதற்கு
போராடும் நிலையில்கூட.
6
ஒரு தையல்காரனின் கடையில்
உருப்பெறுவதற்கு முன்பு
பிரிந்துகிடக்கும் துணிகளைப் போல
துண்டு துண்டாக
சிதறியிருக்கிறது மனம்
யார் ஒன்று சேர்ப்பது?
காதலி
குரு
கடவுள்
முதல் வாய்ப்பிலிருந்து
தொடங்குவதுதான்
முறையானது.
அனுபவத் திரட்சி மிகுந்த
நண்பர் சொல்கிறார:
குருவும் கடவுளும்கூட
கிடைத்துவிடுவார்கள்
காதலி…. என்று இழுக்கிறார்
மனம் இன்னும்
சிதறுகிறது.
7
எதற்கும் அதிராத
மனம் நாடினேன்
கடைசியில்
கிட்டியது என்னவோ
ஒரு தும்மலில்
திடுக்கிடும் மனம்
அடுத்த தும்மலை
நினைத்தாலே நடுங்குகிறது
இந்தப் பூவுலகில்
வாழத் தகுதியுள்ள
ஜீவராசியா நான்..?
00
சுகதேவ்.
மூத்த பத்திரிகையாளர். தினமணி நாளிதழில் – தினமணி கதிர் இதழாசிரியர் உள்பட வெவ்வேறு பொறுப்புகளில் 18 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் ஊடக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஆதரவுடன் இலயோலா கல்லூரி வழங்கிய ஊடகச் சான்றிதழ் படிப்பின் திட்ட இயக்குநர் ஆகியவை பிற பணிகளில் அடங்கும். தினமணி கதிர் இதழில் வெளியான கட்டுரைகள் மூன்று தொகுப்புகளாகவும், இலக்கிய நேர்காணல்கள், திரை ஆளுமைகளின் பேட்டிகள் தனித்தனி தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன. 2019-ல் வெளியான கவிதைத் தொகுப்பு “ஒவ்வொரு கணமும்”