கானல் மாலைக் குறிப்புகள்
1.
எல்லாக் கதவுகளையும்
மூடிவிட்ட வீடொன்று
ஒரே ஒரு
சன்னலை மட்டும்
திறந்தும் மூடியும்
வைத்திருக்கிறது
காற்று
உள்ளே வரவும்
வெளியே போகவும்.
2.
யாருக்காகவும் காத்திருக்காத
காலத்தில் காத்திருக்கிறோம்.
உனது காலம்
எனது கண் முன்னேயும்
எனது காலம்
உனது கண் முன்னேயும்
கடந்து போகிறதைக் கண்டு
நகைக்கிறது
கடந்து போன
நம் காலம்
3.
உயர்ந்த மலையிடுக்கிலிருந்து உன்னைத் தள்ளிவிட்டேன்
உனது நம்பிக்கையைத் தகர்த்து
,
கரடு முரடான பாறைகளில்
மோதி மோதி அடிபட்டு
துளி இரத்தமும் வராத
பறவைக்குஞ்சாக
கீழிறங்குகிறாய்
,
பின்னாலேயே தொடர்ந்து
பறந்து வந்து
உன்னைக் காக்கும்
தாய்ப் பறவையல்ல நான்
,
மாறாக
துரோகத்தின் இறக்கைகளை
உன் மனவெளியெங்கும்
படரவிட்ட பெரும்பாவியே
நான் .
4.
நீயற்ற இந்தப் பெரும்பொழுதினை
சிசிபஸ்ஸின் தொன்மமென
சுமந்து திரிந்து கடக்கிறேன்
,
வற்றிய ஏரிகளுக்குப் பறவைகள்
வராததைப்போல நீர்
வற்றிய கண்களுக்குள்
உன் பிம்பம்
ஒருபோதும்
வராதபடிக்குச் சபித்து விடு
,
இரத்த ஓட்டம் செல்லாத
உடலின் பகுதிகள்
மரத்துப் போகின்றன
உன்
நினைவு ஓட்டம் பாயாத
பகுதியாக என்
மனதை மாற்றும் வித்தையைக்
கற்றுக்கொண்டிருக்கிறேன்.
,
மூப்படைவதற்குக் கொஞ்ச காலம்தான் இருக்கிறது
அல்ஷைமரின் அணைப்புக்காகக் காத்திருக்கிறேன்.
,
முதுமையின் தனிமையில்
அலையடிக்கும் இந்நினைவகம் மட்டும்
செயல்பாடற்று இருந்தால் போதும்
வாழ்வேன்
மரணம் வரை
சற்று நிம்மதியாக.
00
தாமரைபாரதி (பெ.அரவிந்தன்)
இதுவரை தபுதாராவின் புன்னகை (2019), உவர்மணல் சிறுநெருஞ்சி (2021), காசினிக் காடு (2023),இங்குலிகம் ,தெறுகலம் (2024)ஆகிய ஐந்து கவிதை தொகுப்புகள் வெளியாகியுள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைப் பூர்வீகமாகக் கொண்டவர் தற்போது சென்னையில் வசிக்கிறார் .