’சார் நீங்க ஹைவேஸ் டிபார்ட்மெண்ட்டிலியா வேல செய்றீங்க?’ என்றார் காய்கறிக் கடைக்காரர். வழக்கமாக அவரிடம்தான் காய்கறிகள் சற்று பிரெஷ்ஷாக இருக்கும். அவரின் அப்பாவை அடிக்கடி பார்ப்பேன். வயதான காலத்திலும், கத்தரிக்காய் மூட்டையைக் கொண்டு வந்து மார்க்கட்டில் கொடுப்பார். இது வரை எனது வேலை சம்பந்தமாக அவர் எதுவும் கேட்டதில்லை. அவரின் இரண்டு மகன்களும், சேலத்தில் தனியார் கல்லூரியில் என்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்தார்கள். கல்லூரியில் எனது மகனை சேர்ப்பது குறித்து ஒரு முறை பேசியிருக்கிறேன். ஆனால் ஏன் திடீரென என் வேலை குறித்து விசாரிக்கிறார் எனப் புரியவில்லை. ‘இல்ல சார், எதுக்குக் கேட்கிறீங்க?’ என்றேன். ‘வேற ஒன்னுமில்ல சார், நேத்து ஒங்கள நங்கவள்ளி ரோட்டுல, ரோடு போடறவங்கவளோடப் பாத்தன், அதான் கேட்டேன் சார்’ என்றார். எனக்கு சற்றென்று இப்போது ஞாபகத்துக்கு வந்தது. ‘வீட்டுக்கு நல்ல தண்ணி விஷயமா, ஒருத்தரப் பார்க்கப் போயிருந்தேன் சார். நான் பெங்களூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்கிறேன் சார்’ என்றேன்.
நல்ல தண்ணீர் பின்னால் ஓடுவது இன்றுடன் இரண்டு ஆண்டுகளாகி விட்டது. வீட்டில் மேட்டூர் தண்ணீர் எப்போது வந்தது என்பதே மறந்து விட்டது. நல்ல தண்ணீர் தொட்டியும் சுத்தம் செய்யாமலேயே இருக்கிறது. ஏதோ போர் தண்ணீர் வற்றாமல் இருப்பதால் பிழைப்பு ஓடுகிறது. நல்ல தண்ணி ஸ்விட்ச்சைப் போட்டே பல வருடங்கள் ஆனது போலிருக்கிறது.
நன்றாகத்தான் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. எப்படியும் பத்து நாட்களுக்கு ஒரு முறை தான் நல்ல தண்ணி வரும். தொட்டியை நிரப்பிக் கொள்வோம். திடீரென ஒரு நாள், வீதி முனையில், குழாய் உடைந்து, தண்ணீர் ஒழுகியபடியே இருந்தது. எங்கள் தண்ணி இணைப்பு எங்கிருந்து வருகிறது என்று சரியாகத் தெரியவில்லை. எப்படியும் பத்து நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வருவதால், நாங்களும் அலட்சியமாக விட்டு விட்டோம். சில நாட்களில் குழாய் சரி செய்யப்பட்டது. பிறகுதான் தெரிந்தது, இணைப்பே அடைக்கப் பட்டது என்று. தண்ணீர் வருவது சுத்தமாக நின்று விட்டது.
அக்கம் பக்கம் விசாரித்ததில், பஞ்சாயத்து அலுவலகத்தில் புகாரளிக்க வேண்டுமெனத் தெரிந்தது. ஒரு வெள்ளைத் தாளில் எனக்குத் தெரிந்த வகையில் எழுதி, தண்ணீர் வரி கட்டிய ரசீதுடன் புகாரளிக்கச் சென்றேன். நேராக உள்ளறைக்குச் சென்றதில், இடது புறத்தில் இருந்த அறையை கவனிக்கவில்லை. ஏதோ கோப்பில் தலையைப் புதைந்திருந்த ஒருவரிடம், சார் ஒரு புகார் மனு கொடுக்க வேண்டும் என்றேன். ‘எங்கிட்டயே கொடுங்க, நான் பார்த்துக்கிறன்’ என்றார். மனு கொடுத்து விட்டு வெளியே வந்ததும், ஒரு பெரிய சாதனை செய்தது போலிருந்தது. ‘நம்ப பிரச்சினையெல்லாம் தீர்ந்திடுச்சு’ என்றேன் மனைவியிடம். அன்றிரவு கனவில், நல்ல தண்ணீர் தொட்டி நிரம்பி வழிந்தது. காலையில் எழுந்ததும் தான் ஞாபகம் வந்தது, புகார் மனுவுக்கு ஒரு ஜெராக்ஸ் எடுத்து வைக்க மறந்தது.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு, தண்ணீர் வராததால், மனைவியின் ஆலோசனையில் மீண்டும் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு படையெடுத்தேன். இந்த முறை, யாரைப் பார்க்க வேண்டும் என விசாரித்த பின்னர், சென்றேன். ஆபிசரின் அறை நுழைந்ததும், இடது புறத்தில் இருந்தது. சென்ற முறை நான் மனு அளித்தவரும், உள்ளே வந்து, ஆபிசருக்கு வணக்கம் வைத்தார். பிரச்சினையைக் காது கொடுத்துக் கேட்ட பின்னர், மனுவை வாங்கி கையெழுத்து இட்ட பின்னர், தண்ணீர் பிரிவைக் கவனிக்கும் யுவராஜை அழைத்து விசாரித்தார். ‘சார், கொஞ்ச நாளுக்கு முன்னால ரோட்டுல குழாய் ஒடஞ்சி தண்ணி ஒரு வாரம் ஒழுகிக்கிட்டே இருந்திச்சு. ஒவ்வொரு வீட்டிலும் சொன்னோம். யாரும் சொல்லாததால, குழாய மூடிட்டோம்’ என்றார். அவசரமாக நான் குறுக்கிட்டேன். ‘பத்து நாளுக்கு ஒரு முறை தான் நல்ல தண்ணி வரும் சார். அதுவுமில்லாம யாரும் வந்து சொல்லல சார்’. ஊழியர் மீண்டும் சொன்னார் ‘இல்ல சார், நாங்க சொன்னோம். இவங்க எங்க லைனுன்னு சொல்லல’. இப்போது ஆபிசரின் முறை: ‘என்ன சார், வந்து சொல்லியும் அலட்சியமா இருந்திட்டு இப்ப வந்து சொல்லுறீங்க’ என்றார். ‘சார், கொஞ்சம் உதவி பண்ணுங்க சார்’ என்றேன். ‘சரி சார், ரோட்ட ஒடச்சி தான் பார்த்தாவனும். ஹைவேஸ் ஆபிஸ் ஓமலூர்ல இருக்கு. ஒரு பர்மிஷன் வாங்கிடுங்க. பின்னாடி பிரச்சினை வரக்கூடாது’. குழாய் வாங்கற செலவக் குடுத்துடுங்க’ என்றார். ‘சரிங்க சார், பர்மிஷன் வாங்கிட்டு வந்தறன்’ என்றபடியே வெளியே வந்தேன்.
குழி எடுத்து இணைப்பு கொடுக்கும் பொட்டுவை அடுத்த நாள் கோவிலுக்கு செல்லும் வழியில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘சார், அலயாதிங்க. ஹைவேஸ் டிபார்ட்மெண்ட்டுல இருக்கும் கருப்பப் பாருங்க. அவரு எல்லாம் செஞ்சி குடுப்பார்’ என்றார். பொட்டு நம்பரை வாங்கி விட்டேன்.
அடுத்த நாள் காலையில், கருப்பை அழைத்தேன். ‘பத்து மணிக்கு, பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்திருங்க சார்’ என்றார். அலுவலகத்தில் அவரைப் பார்த்த பிறகு, சற்று நம்பிக்கை வந்தது. ‘ரோடு இன்ஸ்பெக்டர் நாளக்கி நங்கவள்ளி ரோட்டுல தான் இருப்பாரு, பத்து மணிக்கு வந்திருங்க’ என்றார். அடுத்த நாள், பஸ்ஸில் சென்று, அவர் சொன்ன இடத்தில் இறங்கினேன். கருப்பு இருந்தார். ‘இப்பதான் எங்கோ வெளியப் போனாரு. பத்து நிமிஷத்துல வந்திருவாரு ‘ என்றார்.
இரண்டு மணிநேரம் கழித்து, ரோடு இன்ஸ்பெக்டர் வந்து சேர்ந்தார். அவரிடம் முழு விவரம் சொன்ன பிறகு, ‘சீனியர் எஞ்ஜினியர் நாளக்கு இங்கயே வந்திருவாரு. ஓமலூருக்குப் போகத் தேவையில்ல. ஒரு பத்து மணிக்கு வந்திடுங்க’ என்றார்.
மீண்டும் அடுத்த நாள் காலை, பத்து மணிக்கு, அதே இடத்திற்குச் சென்றேன். ‘சார், பக்கத்தில விசிட்டுக்குப் போயிருக்கிறாரு. இப்ப வந்துடுவாரு’ என்றார் ரோடு இன்ஸ்பெக்டர். கருப்பும் உடனிருந்தார். பெரிய ரோடு ரோலரை அவ்வளவு அருகில் அப்போது தான் பார்த்தேன். காலில் மிகவும் தடிமனான கருப்பு நிற பூட்ஸ்களுடன், இருவர் தார் ஊற்றிக் கொண்டிருந்தார்கள். மற்றொரு வண்டியிலிருந்து, ஒரு குச்சி போன்ற இரும்பால், இதுவரை போட்ட சாலையை குத்திச் சோதித்துப் பார்த்தார் ரோடு இன்ஸ்பெக்டர். மதிய உணவு நேரம் நெருங்க நெருங்க, பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. ‘சார் வந்துடுவாரா?’ என்றேன். ‘கொஞ்சம் தூரத்தில சார் இருக்காரு. வண்டியிலியே போயிறலாம்’ என்றார் கருப்பு. அவரின் டிவிஎஸ் பிப்டியிலேயே பயணித்து அடுத்த பேருந்து நிலையத்திற்கு அருகில் சென்றோம். சீனியர் என்ஜினியர் போனில் பேசிக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் சென்றோம். ரோடு இன்ஸ்பெக்டர் என்னை அறிமுகம் செய்தார். பஞ்சாயத்து ஆபிசர் கையெழுத்திட்ட எனது புகார் மனுவை அவரிடம் கொடுத்து, சாலையை சற்று உடைக்க அவரின் அனுமதி வேண்டினேன். ‘சரி பாக்கலாம் சார். ஆனால் ரோடு உடைச்சா, எல்லோரும் பிரச்சினை பண்ணுவாங்க. உடனே சரி செஞ்சி குடுத்துடனும்’ என்றபடியே கையெழுத்து இட்டுக் கொடுத்தார்.
அவருக்கு நன்றி தெரிவித்த உடனே, ஒரு ஆட்டோ பிடித்து, பஞ்சாயத்து அலுவலகத்திற்குச் சென்றேன். ‘சார் இப்பதான் வெளியே போனாரு. நாளக்கி வாங்க’ என்றார் ஒருவர்.
மனம் தளராத விக்கிரமாதித்தனாக, அடுத்த நாள் காலை பத்து மணிக்கு பஞ்சாயத்து அலுவலகம் சென்றேன். நல்ல வேளையாக சார் இருந்தார். ‘சீனியர் எஞ்சினியர் கையெழுத்து வாங்கி விட்டேன் சார்’ என்று புகார் மனுவைக் கொடுத்தேன். மீண்டும் யுவராஜை அழைத்தார். ‘சாருக்கு வேண்டியத செஞ்சி குடுங்க. உடனே ரோட சரி பண்ணிடுங்க’ என்றார். ‘நாளக்கி நைட்டுப் பண்ணிக் குடுத்திரலாம் சார்’ என்றார் யுவராஜ்.
அடுத்த நாள் பகல் ஒரு யுகமாகக் கழிய, பொட்டு தனது அடிபொடிகளுடன் தயாரானார். இரவு பத்து மணியானதால், போக்குவரத்து மிகவும் குறைவாகவே இருந்தது. நானும் மனைவியும் அவ்விடத்திற்குச் சென்று, உத்தேசமாக எங்களின் தண்ணீர் இணைப்பின் இடத்தைக் காண்பிக்க, பொட்டு சாலையைத் தோண்ட ஆரம்பித்தார். இரண்டு மணிக்குப் பிறகும், அவரால் இணைப்பைக் கண்டுபிடிக்க இயலவில்லை. இதற்குள் எங்கள் தெரு முனையில் இருக்கும் மருத்துவரின் அக்கா வந்து பார்த்து விட்டு, ‘பார்த்துங்க, எங்க லைன ஒடச்சிடப் போறாங்க’ என்றார்.’ இல்லீங்க, எங்க லைனையே இன்னும் கண்டுபிடிக்க முடியல’ என்றேன் சற்றே காட்டமாக.
பொட்டு ஐம்பது வயதைக் கடந்தவர். நெற்றியில் எப்போதும் ஒரு பொட்டு இருப்பதே, அவரின் பெயர்க் காரணம் என யூகிக்க முடிந்தது. களைப்பாக அமர்ந்து, வெற்றிலையை எடுத்து, சுண்ணாம்பு தடவி, சுவாரஸ்யமாக மெல்ல ஆரம்பித்தார். இதற்குள் பக்கத்து வீட்டு மளிகைக் கடை மணியன், ‘சீக்கிரம் முடிக்காம ஒக்கார்ந்து வெத்தலை போட்டுக்கிட்டு இருந்தா, கடக்கி லோடு ஏத்த இறக்க வண்டி எப்பிடி வரும். சொட்டு புட்டுன்னு வேலைய முடி’ என்றான் மிரட்டலாக.
மேலும் ஒரு மணி நேரம் போராட்டத்தில், மின் கம்பத்தின் கீழே, ஒரு இணைப்பைக் கண்டு பிடித்து, ‘சார், இதுதான் ஒங்களுக்குப் போட்டதுன்னு நினைக்கிறேன். இதுக்கே ஜாயின் குடுத்திரலாம்’ என்றார். எனக்கும் மனைவிக்கும் வேறு வழி தெரியவில்லை. தலையை ஆட்டினோம். நள்ளிரவு தாண்டியும் வேலை நடந்தது. முடிவில், நல்ல தண்ணீர் இணைப்பு வழங்கப்பட்டது. ‘நாளக்கிக் காலையில டெஸ்ட் பண்ணிரலாம் சார். இவந்தான் தண்ணி தொறந்து உடற பையன்’ என வேறு ஒருவரை அறிமுகம் செய்தார் பொட்டு. உடைத்த சாலையை மண் போட்டு நிரவி போக்குவரத்துக்கு உகந்த அளவில் செய்தனர். அனைவருக்கும் பிஸ்கட் மற்றும் காபி வாங்கிக் கொடுத்து விட்டு, அனைவருக்கும் சேர்த்து ஒரு தொகையைக் கொடுத்து விட்டு, அதிகாலை வேளையில் படுக்கைக்குச் சென்றோம். அன்றும் கனவில் நல்ல தண்ணீர் தொட்டி நிரம்பி வழிந்தது.
காலையில் எழுந்ததும் முதல் வேளையாக, தண்ணீர் திறந்து விடும் இளைஞனிடம் பேசிய பின்னர், நல்ல தண்ணீர் தொட்டியில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர ஆரம்பித்தது. அன்றைய தினம் மிகுந்த சந்தோஷத்தில் கழிந்தது. பொட்டு மற்றும் கருப்புக்கு நன்றி சொல்ல, பஞ்சாயத்து அலுவலகம் சென்றபோது பங்கு பிரிப்பு நடந்து கொண்டிருந்தது. என்னை எதிர்பாராத அவர்களுக்கு சற்றே அதிர்ச்சி. நன்றி சொல்லி விட்டு உடனே அங்கிருந்து அகன்றேன்.
நான்கு நாட்களுக்குப்பின், தண்ணீர் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. தண்ணீர் திறந்து விடுபவனிடம் கேட்டபோது, ‘இது காளியம்மன் கோயில் இறக்கத்துக்குப் போயிட்டு மறுபடியும் மேட்டுக்கு வருது.சன்னமாதான் வரும்’ என்றான்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு, தண்ணீர் சுத்தமாக வருவது நின்று போனது. இதற்கிடையில் தாரமங்கலம் நகராட்சியாக உயர்த்தப்பட்டது. நகராட்சி கமிஷனர் நியமிக்கப்பட்டார். அவருக்கு ஒரு ஜீப் மற்றும் டிரைவர், காவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
மீண்டும் ஒரு சனிக்கிழமையன்று, பஞ்சாயத்து அலுவலகத்திற்குச் சென்றேன். உதவியாளரிடம், ‘சாரப் பாக்கனும்’ என்றேன். பதினைந்து நிமிடங்களுக்குப் பின்னர், இடது புற அறைக்கு அழைக்கப்பட்டேன். அதே புகார் மனு. ஆனால் இம்முறை எனக்கு ஒரு ஜெராக்ஸ் காப்பி எடுத்து வைக்க மறக்கவில்லை. புதிய நகராட்சி கமிஷனர் யுவராஜை அழைத்து,’என்னங்க பண்றீங்க. சார் மூணு வருஷமா நல்ல தண்ணி வரலைங்கிறாரு. பார்த்து சரி பண்ணிக் குடுங்க’ என்றார்.
’சார், கொஞ்ச நாளுக்கு முன்னால ரோட்டுல குழாய் ஒடஞ்சி தண்ணி ஒரு வாரம் ஒழுகிக்கிட்டே இருந்திச்சு. ஒவ்வொரு வீட்டிலும் சொன்னோம். யாரும் சொல்லாததால, குழாய மூடிட்டோம்’ என்றார்.அவசரமாக நான் குறுக்கிட்டேன். ‘பத்து நாளுக்கு ஒரு முறை தான் நல்ல தண்ணி வரும் சார். அதுவுமில்லாம யாரும் வந்து சொல்லல சார்’. ஊழியர் மீண்டும் சொன்னார் ‘இல்ல சார், நாங்க சொன்னோம். இவங்க எங்க லைனுன்னு சொல்லல’. எனக்கு மூன்று வருடங்கள் முன்பு பயணம் செய்தது போல இருந்தது. புகார் மனு பெறப்பட்டது.
அடுத்த நாள் காலையில், காலிங் பெல் அடிக்க, யுவராஜ் தான் பிரச்சனையை சரி செய்ய வந்து விட்டாரோ என்ற நப்பாசையில், கேட்டைத் திறந்தேன்.
நடுத்தர வயதுடைய ஒருவர், ‘சார், நான் பஞ்சாயத்து ஆபிலிருந்து வர்றேன். நீங்க இன்னும் தண்ணி பில்லு கட்டல. உடனே கட்டிருங்க சார்’ என்றார்.
000
கண்ணன்
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.