நுண்கதை:01

வானத்தின் மஞ்சள் பார். அதி அற்புதம் என்கிறாய்; ஒவ்வொருவருக்கும் தனித்தனி வானம் என்கிறேன்.

0

நுண்கதை:02

விழுந்தேன். மறுமுறை விழுந்தேன். மீண்டும் விழுந்தேன். மீளமீள விழுந்தேன் விழுந்தேன் விழுந்தேன். இங்கு விழுதல் அல்ல – ரணங்களே சுகம்.

0

நுண்கதை:03

இசைஞன் தெருவில் நின்று இசைக்கிறான். ஆடு மாடு பறவை மானுடம் என அனைத்தும் மெய் மறக்க அத்தோடு காற்றும் தன்னை மறந்து இயக்கத்தை நிறுத்துகிறது. தன் கண்களை மூடியவாறு ‘இசையால் எல்லாவற்றையும் ஆண்டவன்’ உயிரற்று வீழும் உடல்களையும் ஆள்கிறான். இசை எல்லாவற்றையும் சமன் செய்கிறது.

0

நுண்கதை:04

‘எப்படி எல்லாவற்றையும் உனக்குச் சாதகமாக்கிக் கொள்கிறாய்’ எனக் கேட்கிறாய். அப்படியா! என்றவாறு என்னென்ன என்கிறேன். பட்டியலிடுகிறாய். உண்மையில் சிரிப்பாக இருக்கிறது. சிரிக்கிறேன். உதட்டைக் கோணிக்கொள்கிறாய். இதில் என்ன தவறு என்கிறேன். ‘ம்ம்ம் சுண்டைக்காய்’ என்றவாறு அகல்கிறாய். அற்புதத்தில்  சுண்டையென்ன வெண்டையென்ன?  அக்கினியில் குஞ்சென்ன மூப்பென்ன?.

0

நுண்கதை:05

முத்தமிடலையும் கட்டியணைத்தலையும் பற்றி திகட்ட திகட்ட எழுதிக் குவித்தவன் தலை வாழையில் பொறித்து அடுக்கப்பட்டுள்ள இறைச்சித் துண்டங்களின் முன் நாவில் ஊறும் உமிழ்நீரோடு அமர்ந்துள்ளான்.

அவன் அமர்ந்துள்ள அட்சதீர்க்க ரேகைப் புள்ளியின் எதிர்திசையில் அதே கணத்தில் குழந்தைகளின் மாமிசங்களை வல்லூறுகள் குதறியபடி இருக்கின்றன.

எதிர்த்த வீட்டின் இழவில் நமக்கென்ன பங்கு?

வா கூடலாம். ஆடலாம். ஓயலாம்.

0

நுண்கதை:06

எனக்காக என்ன செய்தாய் என்கிறாய்;

ஒன்றுமில்லை என்கிறேன்;

‘தூ’ என முகத்தில் உமிழ்கிறாய்;

‘காதலின் பொருளைக் கண்டடைகிறேன்’.

0

நுண்கதை:07

‘கற்பு என்றால் என்ன’ அம்மா என்கிறாள் நற்சொல். கற்பிதம் என்றால் புரியும் வயதல்ல அவளுக்கு, என்ன செய்யலாம் என்று யோசித்தவள் காறித் துப்புகிறாள். ‘நுரைக் குமிழ்களோடு எச்சில் தரையில் படர்கிறது.’ என்ன அம்மா என்கிறாள். மகளின் கன்னத்தில் முத்தமிடுகிறாள். கன்னத்தில் ஒட்டிய எச்சிலை சிணுங்கியவாறு புறங்கையால் துடைத்துக்கொள்கிறாள் நற்சொல். புன்னகைத்தவாறு ‘கற்பு என்பது நம் வசதிக்குத்தான். தேவையென்றால் வைத்துக்கொள்ளலாம் இல்லையென்றால் துப்பிவிடலாம்’ என்கிறாள் தாய். ‘அடப்போம்மா’ என்றவாறு நகர்கிறாள் நற்சொல்.

0

நுண்கதை:08

எல்லாவற்றிலும் பெரியது எது என்கிறாய்;

‘உன் அன்பு’ என்கிறேன். மறுகணம் சாத்தான் என் நாவை துண்டித்து வறுத்துக் கடவுளுக்குப் படையலிடுகிறான்.

0

நுண்கதை:09

விளக்குமாறு தான் குப்பைகளைச் சுத்தம் செய்வதாகவும் பூரான்களை அடித்துக் கொல்வதற்கும் பயன்படுவேன் என்றும் வீராவேசமாப் பேசியது. ஒட்டடைக்குச்சி உயரத்தில் நிற்கும் ஒட்டடைகளை சுத்தம் செய்வேன் என்றும் எட்டுக் கால் பூச்சிகளைக் கொல்வேன் என்றும் புளங்காகிதம் அடைந்தது.

இரண்டும் தங்கள் சாகசங்களை ஓயாது பேசி தங்களைத்தாங்களே மெச்சிக்கொண்டன.

முடிவில் ஒன்றையொன்று உரசியபடி கழிவறையின் ஓரத்தில் மல்லாந்துக் கிடக்கின்றன.

0

நுண்கதை:10

நிரம்பி வழியும் நகைக் கடையில் அமர்ந்தபடி ‘மக்களுக்கு இவ்வளவுப் பணம் ஏது? என்கிறான் நண்பன். அறியேன் நண்ப என்கிறேன். சொரசொரப்பான வெள்ளைத் தம்ளரில் பொன்னிற திரவம் வருகிறது. அவன் மறுக்க நான் பெற்றுக்கொள்கிறேன். ‘மக்களுக்கு ஏன் இதன் மீது இவ்வளவு பித்து’ என்கிறான். சுற்றம் தம்மீது நகைகளைப் பொருத்திப் பார்த்து குதூகலிக்க ‘இவற்றிற்கெல்லாம் நிறம்தான் காரணம்’ என்கிறேன். நெற்றிச் சுருங்க புரியவில்லை என்கிறான் நண்பன். அவன் காதருகே சென்று ‘பிறந்தது முதல் இறப்பது வரை பீ உடன் புழங்குகிறோம் அல்லவா; அதனால்தான் நம்மை அறியாமலே அந்நிறத்தின் மீது நம்மை இழந்துள்ளோம்’ என்கிறேன். உரக்கச் சிரிக்கிறான். யாரிந்தப் பைத்தியமென கடையே அவனைப் பார்வையால் சூழ்கிறது. நான் ‘அதே பொன்னிற திரவத்தின்’ குளுமையை இரசித்து அருந்திக்கொண்டுள்ளேன்.

000

சுஜித் லெனின்

திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவரான இவர் 2016 முதல் அச்சு மற்ரும் இணைய இதழ்களில் நுண்கதைகள் எழுதி வருகிறார். 2023 ஜனவரியில் ’பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்’ என்கிற சிறுகதை தொகுப்பு எதிர் வெளியீடு வாயிலாக வெளிவந்துள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *