மனிதனாக இருக்க தகுதியற்றவன்

                                                   — ஓஸாமு தாசாய்

‘இந்த வாழ்க்கையில் இறப்பது எளிது,

வாழ்க்கையை உருவாக்குவது கடினம்”

                       -விளாடிமிர் மாயகோவ்ஸ்கி

கண்ணாடியில் பிரதிபலிக்கும் மனம் .

ஓஸாமு தாசாய் (Osamu Dazai) ஜப்பானிய இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். இயற்பெயர் ஷூஜி ட்சுஷ்மா (Shuji Tsushima). அதிகாரமட்டத்துடன் தொடர்புடைய,செல்வச் செழிப்புடன் கூடிய நிலச்சுவான்தார் குடும்பத்தில் பிறந்தவர். நோயாளியான தாய். தொழிலில், அரசியலில் மட்டுமே கவனம் செலுத்திய தந்தை. இதனால் குடும்ப ஊழியர்களால் வளர்க்கப்பட்டவர். அவர்களால் பெரும் மனநிலை பாதிப்பிற்கு ஆளானவர். அதனாலேயே தன் உண்மையான அகத்தை வெளிப்படுத்த இயலாமல் கோமாளித்தனமானவராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். இதனால் Dual personality disorderக்கு உள்ளானவர். புகைபிடித்தல், குடி, Morphine போதைக்கு அடிமையாகிப் போனார். அவரது படைப்புகளில் இந்த சிதைந்த மனக்கூறுகளைக் காணலாம். பல நாவல்களையும், சிறுகதை தொகுதிகளையும் படைத்திருப்பினும் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய படைப்புகளே அவருக்கு பெரும் வரவேற்பினையும் புகழையும் ஈட்டித் தந்தன. இடதுசாரி இயக்கங்கள் உடன் இணைந்து பணியாற்றியவர் ஒரு கட்டத்தில் அதிலிருந்து விலகினார். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய ஜப்பானியர்களின் மனநிலையை சிறப்பாக வெளிப்படுத்தியவை இவரது படைப்புகள். பெரும்பான்மையான ஜப்பானிய படைப்பாளிகளைப் போலவே இவரும் தற்கொலை செய்துக் கொண்டார்.

ஓஸாமு தாசாயின் “மனிதனாக இருக்க தகுதியற்றவன்” -NO LONGER HUMAN என்ற பெயரில் Donald Keene மொழிபெயர்ப்பில் வெளிவந்தது. (The literal translation of the original title “Ningen Shikkaku” is Disqualified as a Human Being. Tr. Donald Keene) அவரது முற்றுப் பெற்ற இறுதி நாவல். 1948ல் வெளிவந்து பெரும் புகழ் பெற்றது. அன்றாட வாழ்க்கையை முழுமையாகப் புரிந்துக் கொள்ள முடியாத ஒரு மனிதனின் கதை.

ஒரு வசதியான பெரிய குடும்பத்தில் வீட்டு ஊழியர்களால் வளர்க்கப்பட்ட குழந்தையின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள், எவ்வாறு பிற்கால வாழ்க்கையை பாதிக்கிறது என்பதை விவரிக்கிறது.

பெயரிடப்படாத நபர் ஒருவர் வெவ்வேறு காலகட்டத்தில் படம் பிடிக்கப்பட்ட ஒரே நபரின் மூன்று புகைப்படங்களைப் பார்க்கையில், புகைப்படத்தில் அந்நபர் தோன்றும் விதத்தைப் பார்த்து விவரிக்கும் விதமாக நாவல் எழுதப்பட்டுள்ளது.

ஓபோ யோஷோவின் குழந்தைப் பருவம் முதல் வயது முதிர்ந்த வாழ்க்கை வரையிலான குணாதிசியங்கள், நடத்தை, வாழ்க்கையை அவர் எதிர்கொள்ளும் விதம் பற்றி விரிவாக மூன்று குறிப்பேடுகள் மூலம் பதிவு செய்கிறது.

முதல் குறிப்பேடே “Mine has been a life of much shame” என்று தான் துவங்குகிறது. தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களை புரிந்துக் கொள்வதில் ஓபோ யோஷோ பெரும் குழப்பமடைகிறான். அதனால் தன்னை ஒரு கோமாளியாக காட்டிக் கொள்கிறான். அதன் மூலம் மனிதர்களுடன் பொருந்திப் போக இயலாத நிலையை மறைக்க முயலுகிறான். அதேசமயம் தன்னுடைய இந்த இரட்டை வேடத்தை யாரேனும் கண்டுபிடித்து வெளிப்படுத்தி விடுவார்களோ என்ற அச்சமும் அவனுள் நிலவுகிறது. 

இரண்டாம் குறிப்பேடு, யோஷோவின் பள்ளிக் காலத்தையும், கல்லூரிக் காலத்தையும் விவரிக்கிறது. அவனுக்கு விருப்பமான ஓவியராக வான்கோ உள்ளார். வான்கோவின் பிறழ்ந்த மனநிலையும், அதை வெளிப்படுத்தும் சுழல் வட்ட ஓவியங்களும் யோஷோவின் மனநிலைக்கு உகந்ததாக உள்ளது. அவன் ஓவியனாகவே விரும்புகிறான். அதற்கான பயிற்சிக் கூடத்தில் பயிலவும் செய்கிறான்.

ஓபோ யோஷோ கல்லூரி மாணவனாக இருக்கையில் போதைக்கு அடிமையாகி உடல்ரீதியாக மட்டுமின்றி மனரீதியாகவும் பாதிப்படைந்து சீர் குலைகிறான். குற்றச் செயல்கள், தற்கொலை முயற்சி, பாலியல் தொடர்புகள், மது, பெண்ணின் இறப்பிற்கு காரணமாக இருப்பது போன்ற நிழலான வாழ்க்கையில் வீழ்கிறான்.

முதல் நபர் கூற்றாக விவரணைகள் உள்ளதால் வாசகனுக்கு உளவியல் ஆழத்தையும், நெருக்கமான மனநிலையையும் தருகிறது.

தந்தையால் குடும்பத்தை விட்டு வெளியேற்றப்படுகிறான். அதனால் தினசரி வாழ்விற்கான பணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அண்ணன் மறைமுகமாக உதவினாலும் அத்தொகை போதாமல் பலவற்றையும் அடகு வைத்து குடிக்கிறான்.

மூன்றாம் குறிப்பேடு கல்லூரியிலிருந்து யோஷோ வெளியேற்றப்பட்ட பிறகான அவனின் வாழ்க்கை குறித்த பார்வைவை இரு பகுதிகளாகப் பதிவு செய்கிறது.

பத்திரிக்கைத் துறையில் பணிபுரியும் Shizuko என்ற பெண்னை திருமணம் செய்துக் கொள்கிறான். அவள் பணியாற்றும் பத்திரிக்கைக்கு கார்ட்டூன்கள் வரைந்து தனக்குத் தேவையான பணத்தை ஈட்டுகிறான். அதுவும் அவனது புகை, குடி பழக்கத்தினால் நீண்ட நாட்கள் நீடிப்பதில்லை. அவளை விட்டு நீங்குகிறான்.

மதுபான விடுதியிலேயே தங்கி ஃபோர்னோ கார்ட்டூன்கள் வரைந்து குடிக்கான பணத்தை சம்பாதிக்கிறான். அருகிலுள்ள கடைக்கு சிகரெட் வாங்கச் செல்கையில் அங்கிருக்கும் இளம் பெண்ணான யாஷிகோவுடன் பழக்கம் ஏற்படுகிறது. குடியை விட்டுவிடுவதாக உறுதியளித்து அவளுடன் புதிய வாழ்வைத் துவக்குகிறான். ஆனால் எப்போதும் போல் அதை மீறி Morphine பழக்கத்திற்கு அடிமையாகிறான். இறுதியில் அண்ணனால் மனநலகாப்பகத்தில் சேர்க்கப்படுகிறான்.

யோஷோ தனது எண்ணங்கள், அச்சங்கள், நம்பிக்கைகள், யோசனைகள் அனைத்தையும் நமக்குச் சொல்கிறான்.

தன்னைச் சுற்றியுள்ள அனைவரிடமிருந்தும் அவன் பெரிதும் அந்நியப்பட்டவனாக உணர்கிறான்.

“தூய்மையற்ற இருண்ட நிழலான கதாபாத்திரத்தின் நாற்றம் வீசும் ஏதோ ஒன்று எப்போதும் எனக்கு மேலே மிதக்கிறது” என்பதன் மூலம் தன் வாழ்வின் வெறுமையை உணர வைக்கிறான்.

வெறுமையை மறைக்கும் விதமாக மகிழ்ச்சியை, புத்திசாலிதனத்தை பிரதிபலிக்கும் கோமாளித்தனமான முகமூடியை அணிந்துக் கொள்கிறான். அவனது அன்றாட இருப்பு அவனுக்குச் சொந்தமில்லாதது. தனது உண்மையான சுயத்தை பிறருக்கு வெளிக்காட்ட முடியாமல் போவதும், உண்மையில் தான் யார் என்பதை தானே அறிய முடியாத நிலைக்கு தள்ளப்படுவதும் பெரும் வேதனைக்கு வித்திடுகிறது.

தாசாய் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதிய நாவல் இது. கிட்டத்தட்ட சுயசரிதை அம்சங்கள் நிறைந்த படைப்பு. தாசாயின் சொந்த வாழ்க்கையின் பெரும்பகுதியை முக்கிய கதாபாத்திரமான ஓபோ யோஷோவின் பார்வையில் சித்தரிக்கிறது. காதலில் அவர் அடைந்த தோல்வி முதல் கம்யூனிஸ்ட் கட்சியில் அவர் பங்கேற்பது வரை வெளிப்படுத்துகிறார். மனிதனாக இருப்பதற்கான வழியைத் தேடும்போது ஏற்படும் மனச்சோர்வு, அந்நியப்படுதல், போதைப் பழக்கத்தால் உண்டான மனச்சிதைவு. அதிலிருந்து மீள போராடும் ஒரு மனிதனின் மனநிலையை யதார்த்தமான பார்வையில் தாசாய் காட்டுகிறார்.

மனிதாபிமானமற்ற உணர்வுகள் பற்றிய யோஷோவின் விளக்கங்கள் நாவல் முழுவதும் விரவிக் கிடந்தாலும் மனநோயைப் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட நிகழ்வுகளாகத் தெரிவதில்லை. சமூகம், பணி, கலாச்சாரம் பற்றிய ஆய்வுகளுடன் சுவராஸ்யமாகவும், நெகிழ்ச்சியாகவும் பின்னிப் பிணைந்து சொல்லப்படுகிறது.

யோஷோ சிறிது காலத்திற்குள் தனக்கு உதவும் விஷயங்களைக் அடையாளம் காண்கிறான். எல்லாம் சரியாகிவிடும் என நம்புகிறான். ஆனால் மீண்டும் மனச்சோர்வடையும் நிலைக்கு தள்ளப்படுகிறான். அதற்கு மறைமுக காரணியாக இருப்பது மஷோ ஹோகிரி என்பவன் .

நாவலின் மற்றொரு சுவாரஸ்யமான கதாபாத்திரம் யோஷோ டோக்கியோவில் சந்திக்கும் நபரான மஷோ ஹோரிகி. யோஷோவை விட ஆறு வயது மூத்தவன். ஓவியன். ஆனால் ஓவியப் பள்ளிகள் மேல் நம்பிக்கையற்றவன். எண்ணைச்சாய ஓவியங்களை வரைவதற்கான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவன். அவர்களின் தற்செயலான சந்திப்பிற்குப் பிறகு, பல பகல்களையும், இரவுகளையும் நகரத்தை சுற்றிப் பார்ப்பதிலும், மதுபான விடுதிகளுக்கும், மலிவான விபச்சார விடுதிகளுக்கும் செல்வதிலும் கழிக்கிறார்கள். ஹோரிகி நகரத்தில் எளிதாக பணத்தை சம்பாதிக்கும் வழியை காட்டுகிறான். பல வழிகளில், ஹோரிகி யோஷோவின் தோளில் அமர்ந்திட்ட வேதாளமாக   செயல்படுகிறான், யோஷோ மிகவும் பலவீனமாக இருக்கும்போது தோன்றி, அவனை தவறான செயல்களில் ஈடுபடுத்தி, மோசமான வாழ்க்கைச் சூழலுக்குள் தள்ளுகிறான்.

நாவலின் பல நிகழ்வுகள் தாசாயின் சொந்த அனுபவங்களிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது என்பதை எளிதாக அடையாளம் காண முடியும்.

தாசாயின் மார்க்சியத்துடனான ஈடுபாடு, காதல், தற்கொலை முயற்சி, அவரது குடும்ப உறவுகள் அனைத்தும் நாவலில் உள்ளது.  யோஷோ தாசாய் இல்லை என்றாலும், அவரின் மிகவும் நெருக்கமான பிரதி எனலாம்.

பல சமகால வாசகர்கள் யோஷோ/தாசாயைப் பற்றி அனுதாபம் கொண்டனர். அவர் அவ்வளவு மோசமானவர் இல்லை. அவர் வாழ்கை எனும் பாதையில் தொலைந்துப் போனவர், தவறாக வழிநடத்தப்பட்டவர் என்று உணரத் தலைப்பட்டனர். நாவலில் வரும் பல பெண்கள் பகிர்ந்து கொள்ளும் பார்வையும் இதுதான், அவர்கள் அனைவரும் அவரைக் காப்பாற்ற அல்லது கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள்.

நாவலின் இறுதிப் பத்தியில் மதுபான விடுதியில் யோஷோவை அரவணைத்த பெண்மணி இறுதி வாக்கியமாக இவ்வாறு கூறுகிறார் “The Yazo we knew was so easy- going and amusing, and if only he hadn’t drunk— no, even though he did drink—he was a good boy, an angel”.

ஒரு தனிமையான பார்வையாளருக்கு, வாசகருக்கு இது ஒரு வழி தவறிப் போன பணக்கார குழந்தையின் கதை மட்டுமே. அவன் தனது வாழ்க்கைக்குப் பொறுப்பேற்க மறுத்து, தன்னுடன் பல பெண்களின் வாழ்க்கையையும் கேள்விக்கு உள்ளாக்குகிறான் .

தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களில் வருவதைப் போல் மைய பாத்திரங்கள் தங்கள் சொந்த இருண்ட எண்ணங்களில் முழுமையாக மூழ்கி, சமூகத்திலிருந்தும் தங்கள் உண்மையான சுயத்திலிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்கிறார்கள். அந்நியர்களின் உலகில் இணைத்துக் கொள்ள மதிப்புமிக்க எதையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

குற்றமும் தண்டனையும் நாவலில் வரும் ரஸ்கோலினிகோவ் போல் எல்லோருக்கும் அவர்களை காப்பாற்றிக் கொள்ள மென்மையான, தன்னலமற்ற, இனிமையான, தேவதைப் போன்ற சோனியாவைக் கண்டறிய இயலாது இல்லையா….

யோஷோ தாசாயைப் போலவே தனது படிப்பைப் புறக்கணித்து, பாலியல் தொழிலாளிகளுடன் உறவு, மது, Morphine போன்றவற்றில் தன்னை இழக்கிறான். இருவரும் வசதியான குடும்பங்களில் பிறந்தவர்கள், சமூகத்தில் பல சலுகைகளை பெற்றவர்கள். அதற்காக குற்ற உணர்ச்சியடைந்தவர்கள். யோஷோ திருமணமான பெண்ணுடன் ஓரிரவைக் கழித்தப் பின் அப்பெண்ணுடன்    காமகுராவில் உள்ள கடற்கரையில் மூழ்கி தற்கொலைக்கு முயல்கிறான். அப்பெண் இறந்துவிட யோஷோ உயிர் பிழைத்திடுகிறான். இந்நிகழ்வால் பெரும் குற்றவுணர்க்கு உள்ளாகும் யோஷோ வலி நிவாரணிகளின் போதைக்கு ஆட்படுகிறான்.

யோஷோ பலவீனமாக இருப்பதும், சுயவதைக்கு உட்படுத்திக் கொள்வதும், எல்லா தீமைகளுக்கும் அடிபணிவதும்  புறகாரணிகளால் மட்டுமல்ல. அவன் தொடர்ந்து தனக்குள் வாழ்க்கைப் பற்றி, மனிதனின் இருப்பைப் பற்றி கேள்வி எழுப்பிக் கொண்டேயிருக்கிறான். அதற்கான விடைகளை கண்டறிய அவன் தேர்ந்தெடுக்கும் வழிமுறை தவறானது. நல்லவராக இருப்பதும் உண்மையிலேயே நிறைவான வாழ்க்கையை உருவாக்குவதும் மிகவும் கடினம். நமக்கு ஒரே ஒரு வாழ்க்கைதான் இருப்பதால், வாழ்வதற்கு சரியான வழி எது என்பதை நாம் ஒருபோதும் அறிய முடியாது.

ஒருவேளை, யோஷோ தனது வாழ்க்கையில் மதிப்புமிக்க ஒன்றைக் கண்டறிந்திருந்தால், விஷயங்கள் வேறுவிதமாக மாறியிருக்கும்.

இருப்பினும், “மற்றவர்களைப் போல நான் இல்லை என்ற எண்ணத்தில் பயமும், திகிலும் மட்டுமே எனக்கு ஏற்படுகின்றது. மற்றவர்களுடன் உரையாடுவது எனக்கு கிட்டத்தட்ட சாத்தியமற்றது. நான் எதைப் பற்றி பேச வேண்டும், அதை எப்படிச் சொல்வது?’  எனக்குத் தெரியாது”.

மற்றவர்களுக்கு தனது உண்மையான சுயத்தை வெளிப்படுத்த முடியாது என்று கூறும்போது அவன் எப்படி உணருகிறான் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

‘அன்றிரவு நான் என் வாழ்வில் இதுவரை இல்லாதளவிற்கு  குடித்தேன்…மிக அதிகமாக குடித்தேன்… என் கண்கள் மதுவால் நிறைந்திருந்தது. ஒவ்வொரு முறையும் சுனேகோவும் நானும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டபோது, ஒரு மென்மையான, பரிதாபகரமான புன்னகையை பரிமாறிக் கொண்டோம். ஆம், ஹோரிகி சொன்னது போல், அவள் உண்மையில் வறுமையில் வாடும் பெண், அழகற்றவள் அதற்கு மேல் எதுவும் இல்லை. ஆனால் இந்த எண்ணமே மனவறுமையால் பாதிக்கப்பட்ட சக மனிதனுக்கான தோழமை உணர்வின் எழுச்சியுடன் இருந்தது.’

***

‘அவள் என் அருகில் படுத்தாள். விடியற்காலையில் அவள் முதல் முறையாக “மரணம்” என்ற வார்த்தையை உச்சரித்தாள். அவளும் ஒரு மனுஷியாக இருப்பதன் சுமையைத் தாங்க முடியாத அளவுக்கு சோர்வாக இருப்பது போல் தோன்றியது.

உலகத்தின் மீதான எனது பயத்தையும் அது ஏற்படுத்தும் நெருக்கடிகளையும், பணம், இயக்கம், பெண்கள், படிப்பு, இழிவானச் செயல்கள் ஆகியவற்றைப் பற்றி நான் யோசித்த போது, நான் இனிமேலும் மனிதனாக இருக்க தார்மீகமான எந்த உரிமையும் இல்லை என்றும்,நான் தொடர்ந்து வாழ்வதும் சாத்தியமில்லை என்றும்  தோன்றியது. அவளுடைய திட்டத்திற்கு நான் எளிதாக சம்மதித்தேன்.’

***

‘அன்றிரவு காமகுராவில் கடலில் நாங்கள் மூழ்கிட முயன்றோம். அவள் மதுபான விடுதியில் பணிபுரியும் தன் சக தோழியிடம் கடன் வாங்கி அணிந்திருந்த SASHயை அவிழ்த்து அதை ஒரு பாறையில் அழகாக மடித்து வைத்தாள். நான் என் கோட்டைக் கழற்றி அதே இடத்தில் வைத்தேன். நாங்கள் ஒன்றாகக் கடலுக்குள் இறங்கினோம். அவள் இறந்துவிட்டாள். நான் காப்பாற்றப்பட்டேன். அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.”.

*****

“மனதளவில் ஹோரிகி என்னை ஒரு மனிதனைப் போல நடத்தவில்லை. தற்கொலை செய்து கொள்ளப் போகும் ஒருவரின் உயிருள்ள சடலமாக, அவமானத்தில் இறந்த ஒரு நபராக, ஒரு முட்டாளாக மட்டுமே கருதியிருக்க வேண்டும்”.

***

ஒரு கட்டத்தில், யோஷோவும் அவரது நண்பனும் தஸ்தயேவ்ஸ்கியின் குற்றம் பற்றிய கருத்தைப் பற்றி விவாதிக்கத் தொடங்குகிறார்கள்:

‘குற்றத்தின் எதிர்ச்சொல் நமக்குத் தெரிந்திருந்தால், அதன் உண்மையான தன்மையை நாம் அறிவோம் என்று நினைக்கிறேன். கடவுள்… இரட்சிப்பு… அன்பு… ஒளி. ஆனால் கடவுளுக்கு எதிர்ச்சொல் சாத்தான், இரட்சிப்பு என்பது அழிவு, அன்பு என்பது வெறுப்பு, வெளிச்சத்திற்கு இருள், நன்மை, தீமை. குற்றமும் பிரார்த்தனையும்? குற்றமும் மனந்திரும்புதலும்? குற்றமும் ஒப்புதல் வாக்குமூலமும்? குற்றமும்… இல்லை, அவை அனைத்தும் ஒத்த சொற்கள். குற்றத்திற்கு எதிரானது என்ன?”

நாவலில் வரும் இந்தக் கூற்றுகள் எல்லாம் யோஷோவின் மனப்பாங்கினை அறிந்துக் கொள்ள உதவுகின்றன.

“யாஷிகோவின் மாசற்ற நம்பகத்தன்மை பச்சை இலைகளுக்கு இடையே ஒரு நீர்வீழ்ச்சியைப் போல சுத்தமாகவும் தூய்மையாகவும் தோன்றியது. இந்தத் தூய அருவியின் நீரை மஞ்சள் நிறமாகவும், சேறாகவும் மாற்ற ஒரு இரவு போதுமானதாக இருந்தது. அதன் பிறகு என் மீதான அவளது நம்பிக்கையில் கறைபடியத் துவங்கியது. யாஷிகோ அன்றிரவு முதல் என் ஒவ்வொரு முகபாவனையைப் பற்றியும் கவலைப்படத் தொடங்கினாள்”.

பல பெண்களை வஞ்சித்த யோஷோவால் யாஷிகோ அறியாமல் செய்த பிழையை மன்னிக்கத் தயாராக இல்லை. மனைவி என்பவள் தூய்மையானவளாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவனை அலைக்கழிக்கிறது. அங்கு அவன் ஆணாதிக்கத்தின் பிரதிநியாகத் தான் இருக்கிறான்.

முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை, யோஷோ தன்னைச் சுற்றியுள்ள அனைவரிடமிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்கிறான், மேலும் ‘மனிதனாக இருப்பதிலிருந்து விடுபடவே முயல்கிறான்’. அது தாங்க முடியாத சோகமாகத் தெரிகிறது, ‘மனிதர்கள்’ செய்த அனைத்து அருவருப்பான விஷயங்களையும், அவர்களின் அழுகிய மனதினைக் கொண்டு நிகழ்த்திய ‘மனிதாபிமானமற்ற செயல்களையும்’, அனைத்துப் போர்கள், சித்திரவதைகள், அநீதிகள், பாசாங்குத்தனங்களையும் தாங்க இயலாதவனாகிறான்.

‘மனிதகுலத்தின் முக்கியத்தும் பற்றி நீங்கள் நினைத்தால், தயவுசெய்து மனித நிலையிலிருந்து என்னை தகுதி நீக்கம் செய்யுங்கள், நான் ஒரு மனிதனாக இருக்க விரும்பவில்லை! நான் ஒரு பூவாக, ஒரு நட்சத்திரமாக, காற்றில் பறக்கும் ரோஜா இதழாக, ஏரியின் மேற்பரப்பில் மிதக்கும் சருகாக அல்லது ஒரு மழைத் துளியாக இருக்க விரும்புகிறேன்” என்கிறான்.

‘இப்போது நான் ஒரு பைத்தியக்காரனாக மாறிவிட்டேன். விடுவிக்கப்பட்டாலும், நான் என்றென்றும் “பைத்தியக்காரன்”.  முன் நெற்றியில் நிரந்தரமாக “பைத்தியக்காரன்” அல்லது “நிராகரி” என்ற வார்த்தையால் முத்திரை குத்தப்பட்டவன்.

“மகிழ்ச்சியற்ற மனிதர்கள், மகிழ்ச்சியற்ற சக மனிதர்களின் வலியை எளிதில் உணர்ந்துக் கொள்கிறார்கள்”.

மனிதனாக வாழத் தகுதியற்றவன்.நான் இப்போது மனிதனாக இருப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டேன்.’

“இப்போது எனக்கு மகிழ்ச்சியோ, மகிழ்ச்சியின்மையோ இல்லை,

எல்லாம் கடந்து செல்கிறது” என்பதே அவனின் இறுதிக் கூற்று .

இந்நாவல் ஒரு மகிழ்ச்சிகரமான, சந்தாஷமான வாசிப்பிற்கான ஒன்றல்ல. இது எளிதான புத்தகமும் அல்ல. இது மனச்சோர்வின் போது ஏற்படும் சிந்தனை அது செயல்படும் முறையை கிராஃபிக் போல விரிவாக விவரிக்கிறது.

இது கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தாலும், தாசாயின் மனநோயைப் பற்றிய பகுதி சுயசரிதை விவரிப்பு. மனச்சோர்வு மற்றும் பதட்டத்தின் நவீன சித்தரிப்புகளை எளிதில் நினைவூட்டுகிறது.

தாசாயின் நாவல் மறுக்க முடியாத நவீன கிளாசிக், அவரது கருப்பொருள் பிரபலமான ஜப்பானிய எழுத்தாளர்களிடமிருந்து மிகவும் வித்தியாசமானது. கவாபாட்டாவின் மனதத்துவ அழகியல் அல்லது தனிசாகியின் பாரம்பரிய தாக்கங்களிலிருந்து விலகியது.  அவரது கதை வாழ்க்கையின் மிகவும் வினோதமான பக்கங்களில் ஒன்றாகும். யோஷோவின் வார்த்தைகளில் மனிதனாக இருப்பதற்குப் பொருத்தமான ஒன்றைக் கண்டுபிடிப்பதற்கான தொடர்ச்சியான போராட்டம் அது.

யூகியோ மிஷிமா தாசாயின் நண்பர். தாசாயின் படைப்பைகளைப் பற்றி உயர்வான கருத்துக்களைக் கொண்டிருந்தார் எனினும் தாசாயின் கோமாளித்தனமான நடவடிக்கைகளை மிஷிமா ஏற்றுக் கொள்ளவில்லை. தாசாயின் உயர்தட்டுப் பின்னணிக்கு அது பொருந்தவில்லை என குற்றம் சாட்டினார்.

தாசாய் அவரது இடதுசாரி கொள்கையின் காரணமாக டோக்கியோ இம்பீரியல் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார். இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிய தாசாய் மதுபான விடுதியில் பணிபுரியும் பத்தொன்பதே வயதான இளமையான Shimeko Tanabe வுடன் காமகுரா கடலில் மூழ்கி தற்கொலைக்கு முயல்கிறார். Shimeko இறந்துவிட தாசாய் காப்பற்றப்படுகிறார். பலமுறை தற்கொலைக்கு முயன்றவர் ஓஸாமு தாசாய். இரண்டு முறை திருமணம் செய்து பின் விவாகரத்து செய்து விட்டார்.

மூன்றாவது மனைவி Shizuko Ota. இவரது நாட்குறிப்பின் அடிப்படையில் தாசாயின் புகழ் பெற்ற நூலான “The Setting Sun” படைக்கப்பட்டுள்ளது.

நான்காவது மனைவி அழகுக்கலை நிபுணரான Tomie Yamazaki.  அவரின் மேல் கொண்ட காதலின் காரணமாக தன் குடும்பத்தையும், குழந்தைகளையும் விட்டுவிட்டு டோக்கியோவிற்கு அருகே இடம் பெயர்கிறார் தாசாய். Tomie Yamazaki யின் முதல்கணவர் திருமணமான பத்தாம் நாளே இரண்டாம் உலகப் போரில் உயிர் இழந்தவர்.

தாசாய் அவரது 39ஆம் வயதில் 1948 ஜூன் 13 அன்று Tomie Yamazaki வுடன் தன் வீட்டருகே வெள்ளம் பாய்ந்தோடிக் கொண்டிருந்த Tamagawa கால்வாயில் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டார். அவர்களது உடல்கள் ஆறு நாட்களுக்குப் பின்னரே மீட்கப்பட்டன.

V. E. Schwab புத்தகங்களை, கதைகளை மனதின் கண்ணாடிகள் என்பார். இந்நாவல் விதிவிலக்கல்ல. நாயகனின் மனிதாபிமானமற்ற தன்மையால் மிகவும் ஈர்க்கப்பட்ட ஒரு நாவலில் நாம் உணர்வது சில சமயங்களில், நாம் பார்க்கத் தயாராக இல்லாத நம் சொந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பாகவும் இருப்பது.

கண்ணாடி வழியே பின்னோக்கிப் பார்த்து நம் மனநோயின் தீவிரத்தை எதிர்கொள்ளத் தயாராக உள்ள எவருக்கும் இந்நாவல் உவப்பாக இருக்கும்.

இவரது சிறுகதை ஒன்று தமிழில் “ஒரு வலசைப் பறவை” என்ற பெயரில் நரேனின் (ம.நரேந்திரன்) மொழிபெயர்ப்பில் கனலி ஜப்பானிய சிறப்பிதழில் வெளிவந்ததுள்ளது. 

இவரின் முக்கிய படைப்புகள்

The flowering of Buffoonery

The setting sun

No one know

A little beauty

Cherries

Declining years.

Handsome devils and cigarettes

Blue Bamboo

One hundred views of Mount Fuji.

நன்றி:

கனலி ஜப்பானிய சிறப்பிதழுக்கும்

ஓஸாமு தாசாய் இலக்கிய விருது வலை பக்கத்திற்கும்.

000

அ.முனவர் கான்

முனவர் கான் தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சேலத்தில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் ஆர்.சிவகுமாரின் மாணவர். அவரது வழிகாட்டுதலில் நவீன இலக்கிய படைப்புகளை வாசிக்கத் துவங்கியவர். 

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *