விடியக்கருக்கல் சாணிப்பாலைக் கரைச்சு கோழிமடத்தை மொளுகிக் கொண்டிருந்தாள் மயிலாயி. வெடக்கோழி முட்டைக்கு கெக்கரித்த படியே அடுப்படிக்கும் பரணிக்கும் அலஞ்சது.

‘முட்டையிட எடமா இல்லா? போய் பரணியில, இட்டுத்தொல அவசாரிமுண்ட ஏய்ன் ஊரயே கூட்டுறனு;

மொனங்கிக்கிட்டு அடுப்படிக்குள்ள நொலைஞ்சா மயிலாயி.

வெள்ளையம்மா வேர்த்து விறுவிறுத்துப் போய் ஓடி வந்து மயிலாயி வீட்டுத்திண்ணையில ஒக்கார்ந்தா.

‘என்னடி சங்கதி? இப்புடி ஓடியாந்துருக்கு’,

‘தவிட்டுக்கெழவன் செத்துப் போனானாம்க்கா,’

“என்னடி சக்களத்தி சொல்லுற”

‘ஆமக்கா, வெளிக்கி இருந்துட்டு காலு கைகளை மறுகாத்தரையில அலம்பிருக்கா கெழவன் விக்கு விக்குன இழுவ மாதிரி வந்து விழுந்து செத்துப் போனான் நம்ம ஆளுக பூராம் மறுகாத்தரைக்கு ஓடிட்டாய்ங்க. ஊருக்குள்ள ஒருசனம் இல்லக்கா.’

‘ஆமா, இந்தக் கெழட்டுப்பயலுக்கு கோணாரு வீட்டுல போய் இட்லி தோசை திண்டாத்தேன் ஒறக்கம் வரும் போல’,

‘நெத்தம் கோணாரு வீட்டு வாசலத் தொட்டுட்டு வரும் தவிட்டுக்கெழவன் இன்னைக்கு மறுகாகிட்டு முடிச்சுக்கிட்டான் போல. அவன் போட்ட எழுத்து என்னைக்கு பார்த்துக் கூப்பிடுறானோ அன்னைக்கு போய் சேர வேண்டிய தான்’.

‘முன்ன போனா  நம்ம பின்ன போகவேண்டியதான்’னு பேசிக்கிட்டு மயிலாயும் வெள்ளையம்மாவும் மறுகாத்தரைக்கு வந்தனர்.

ஒப்பாரியும் அழுகையும் தெறித்து ஓடியது.

செம்பட்டையன் புளியமரத்தில ஏறி தேரு கம்பு வெட்டிச் செதுக்கி எடுத்து வந்தான்.

தவிட்டுக்கெழவனுக்கு வாயில தண்ணியும் நொரையும் வடிஞ்சு கொண்டிருந்தது.

செம்பட்டையன், செவனைய்யா, உழிமுண்டம், தூண்டிக்காரன் ஆளுக்கொரு கம்பை புடிச்சு தூக்கி தவிட்டுக்கெழவனை கண்மாய்க்கரை வழியே கொண்டாந்து வீட்ல போட்டனர்.

வெளாச்சேரிக்கு நையாண்டி மேளம், நரிக்கொறத்தி ஆட்டம் பேச மண்டையனை அனுப்பி வைத்தார்கள் ஊரார்கள். ஊரு ஊருக்கு ஒரு ஆளு மேனிக்கு எழவு சொல்ல ஆளுக சென்றனர்.

பூவு,தேர் சாமான் வாங்க முழியனும் பொட்டையனும் நடையைக் கட்டினர்.

பொம்பளங்க ஒப்பாரியில் ஊரே அதிர்ந்தது. மயிலாயி ஒப்பாரி பாட்டை மிஞ்சி வேற யாரும் பாட முடியாது. ஒப்பு வைக்கிறதுல “மயிலாயி” பேரு போனவ.

நையாண்டி மேளகாரர்கள், நரிக்கொறத்தி ஆட்டக்காரர்கள், தேர் சாமானோடு தவிட்டுக்கெழவன் வீட்டில் வந்திறங்கினர்.

மாடக்குளம், அவனியாபுரம்,ஆவியூரு, முக்குடி, கொட்டங்குளம், வெளாங்குடி, அனுப்பானடி, பாட்டம், விராட்டிபத்து, நாகமலை புதுக்கோட்டை , கீழடி, சீருகளோடு ஊர் மந்தை அலம்பி குலுங்கி நின்றது.

கோணாரு வீட்டுல இருந்து வந்த பெரியவர் , தவிட்டுக்கெழவனுக்கு நெறமாலை போட்டு அஞ்சலி செலுத்தினார்.

ஆட்டம் பாட்டத்தோடு தவிட்டுக் கெழவனை கிருதுமா கரையிலே அடக்கம் செய்தனர்.

மயிலாயி ஆளுகள தெரட்டிக்கொண்டு வெளாங்குடி நடவுக்குச் சென்றாள்.

நாற்று முடிகள் குத்துக்காலிட்டபடி கிடக்கின்றன. வெள்ளையம்மா பெரிய நாற்று முடியை வரப்புல வச்சுப்பிட்டு விபூதியையும் குமித்து வைத்து விட்டு நடுகைக்குள் எறங்கினாள்.

வரப்புல  ஆளுக தல தெரிஞ்சா போதும் மயிலாயி கொலவைச் சத்தம் ஊர் தெறிக்கும்.

செல்லையாக்குடும்பன் வரப்புல ஏறினான்.

“ஏக்கா மயிலாயக்கா” செல்லையாக்குடும்பன் வாராறு, “கொலவைய போடுக்கா “, என்றாள் வெள்ளையம்மா.

மயிலாயி கொலவை போட்டதும், செல்லையாக்குடும்பன் பத்து ரூபாய் புது நோட்டை நாற்று முடிக்கு பக்கத்தில போட்டுவிட்டு விபூதியை அள்ளி பூசிவிட்டுச் சென்றார்.

நடுகை முடிஞ்சு கொலவைக் காசை சரிபாதியாக பிரித்து வீடு வந்தனர்.

வெள்ளையம்மாவும் வெளங்குடியானும், ராத்திரில  கண்மாய்க்குள்ள போனதை சின்னச்சாமி சங்கஞ்செடிக்குள்ள  ஒழிஞ்சு  பார்த்திருக்கான்.

கோழி கூப்பிட வெள்ளையம்மா வீட்டுக்குள்ள இருந்து வெளாங்குடியான் வந்ததை மயிலாயி ஆட்டுக் கொட்டத்திலிருந்து பார்த்திருக்கா. பளாருனு விடிய,

“மயிலாயி “

“அடியே சக்களத்தி வெள்ளையம்மா  தேவிடியா முண்ட, என்னடி சோலி பாக்குற அவிசாரி முண்ட வெளங்குடியானுக்கு கோழி கூப்பிட ஓன் வீட்டுக்குள்ள என்னடி வேல?”

‘’இல்லக்கா, தவிட்டுக்கெழவனுக்கு நாளைக்கு கருமாதியாம். படப்புக்கு வெடக்கோழி கேட்டு வந்தாரு”

“உண்மையைச் சொல்லுடி அவுசாரி வெடக்கோழி கேட்டு வந்தானா வெத போடுறதுக்கு வந்தானா?”

சிரித்துக் கொண்டே வெள்ளையம்மா முந்தாங்கிச் சேலையில மொகத்தை மூடினாள்.

வெண்கலச்செம்பில் தண்ணியும் வேப்பங்கொப்பும் வச்சு மாரடித்தனர்.

மயிலாயி ஒப்புப் பாட்டு பாட  பின்னொட்டாக பதினேழு பொம்பளங்களும் பாடி வந்தனர்..

“ஏய் ஆத்தாடியோ”,

ஆத்தாடியோ!

ஏய் அம்மாடியோ,

அம்மாடியோ!

அப்புடி என்ன ரத,

பொன்ன ரத,

அப்புடி என்ன ரத

பொன்ன ரத!

அப்புடி தனிக்கூறும்,

ரெண்டும் பூட்டி!

அப்புடி ஏந்துங்கம்மா,

சீதேவிய,!

அப்புடி ஏந்துங்கம்மா

சிதேவிய!

‘போதும்டி அப்படியே அழுங்கடி‌ செத்தநேரம்னு’  மயிலாயி வெத்தலை பாக்கு போட்டு துப்பினாள்.

‘அழுகையை நிறுத்துங்கம்மா, போதும் போதும்!’  தண்ணிய தொளிச்சு எல்லாரு மடியிலும் பச்சை போட்டுவிட்டான் உழிமுண்டம்.

ஊரு முழுக்க நாறுகிறது வெள்ளையம்மா வெளாங்குடியான் சேதி.

வெளாங்குடியானுக்கு அடையாளப்பிள்ளையாக மூனு பொம்பளப் பிள்ளையை பெத்துப்போட்டா வெள்ளையம்மா.

நடுகையிலும், களையெடுப்பிலும் , கதிரறுப்பிலும்  அடையாளப் பிள்ளை பெத்தவனு அவச்சொல்லுக்கு ஆளானா வெள்ளையம்மா.

வெளங்குடியான வெள்ளையம்மா தாலி போட கூப்பிட வர மறுத்து விட்டான்.

அவசர அவசரமாக வீராண்டிச்சி கழுத்துல தாலிய கட்டி வீட்டுக்கு கூட்டியாந்துட்டான். ஊர் சனங்கள் வசவுகளை அள்ளி வீசினர். வெள்ளையம்மா நெலைமையை நெனைச்சு ஊரார்கள் கண் கலங்கினார்கள்.

மறுகாத்தரையில போயி அரளிக்காயை பிடுங்கி அரைச்சு குடிச்சு செத்துப் போன வெள்ளையம்மா.

வெள்ளையம்மாவின் வாழ்க்கையைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கினான் வெளாங்குடியான்.

வெள்ளையம்மா செத்த கதையை மூனு பிள்ளைகளிடம் மயிலாயி சொல்லிக்கொண்டிருந்தாள்.

பசுமலையிலிருந்து காற்றும் மழையும் சுழற்றியடிச்சு வந்தது.


அய்யனார் ஈடாடி

மதுரை மாவட்டம், மாடக்குளம் அருகிலிருக்கும் தானத்தவம் எனும் கிராமத்தைப்  பூர்வீகமாகக் கொண்டவர். வேதிப் பொறியியல் துறையில் பி.டெக்  பட்டம் பெற்றவர். தற்போது தொழில் முனைவோராக உள்ளார்.

கல்லூரிக் காலத்திலேயே படைப்புகளை எழுதத் தொடங்கியவர். வேளாண் தொழில் குடும்பப் பின்புலமும், தமிழின்  மீதான பற்றாலும், இயற்கையின் கொண்டிருக்கும் அதீதக் காதலாலும் கவிதைகளைப் படைப்புகளாக வடித்தெடுக்கிறார்.

ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி எனும் கவிதை நூலை 2022லும் , மதுரை வட்டார கிராமத்து எளிய மக்களின் பாடுகளையும் , வரலாற்று சரித்திரத்தையும்

எனதூர் சரித்திரம் எனும் சிறுகதை நூலாக தொகுத்து 2023ல் வெளியிட்டிருக்கிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *