மிட்டாய்க்காரர்களின் கனவும் கழற்றிவீசும் கைலிகளும்

பெரிதாகத்தான் இருந்தது; அவரின் வரவேற்பு. அந்தத் தாத்தாவுடன் ஒரு பையனும் இருந்தான். அவனுக்கு என் வயதோ அல்லது குறைந்தோ இருக்கலாம். கடையில் சாமான்கள் நெரிசலாக அடுக்கப்பட்டிருந்ததன.  ஒருவர் நுழையும் போது இன்னொருவர் வழிவிடும் வகையில் கொஞ்சம் கூனிக்குறுகவே வேண்டும். பணம் கட்டும் இடத்திலும் நெரிசலாகத்தான் இருந்தது. மேஜை. தாத்தா. அவரது தலைக்கு மேலே ஊதுவர்த்தியும் பெயர் தெரியாத எழுத்துகளும் புகைப்படத்தில் எழுதியிருந்தன. கடையில் யாரும் இல்லை. வழி மறைத்து கிடந்த ரொட்டு வக்குலை சிரமப்பட்டு இழுத்து, நகர்த்தி உள்ளே நுழைந்தேன். அப்போதுதான் அதுவரையில் மேஜையின் கீழே எதையோ தேடிக்கொண்டிருந்த பையன் வெளிவந்தான்.

நாற்காலியில் அமர்ந்திருந்த தாத்தா அவனிடம்;

“டேய் பையா, போ…..போய்…. மின்னுக்கு ரொட்டி வைக்கிற இடத்தை சுத்தம் செய்யு…. ஒரு வேலைக்கு லாய்க்கு இல்ல…போ…போ.. அதையாச்சும் உருப்படியா செய்யி….?”

                அது அந்தப் பையனுக்கு அவமானமாக இருந்திருக்க வேண்டும். அவனும்  என்னை ஒருமாதிரி பார்த்துக் கொண்டே சிரித்தான். நானும் சிரித்து வைத்தேன். வாசலின் வெளியே சென்ற அந்தப் பையன், ரொட்டியை  வைத்திருந்த வக்குலை வாசலுக்கு இழுத்து வந்தான். உள்ளே செல்லும் வழியும் அதுதான் வெளியேறும் வழியும் அதுதான். மீண்டும் வழியை மறைத்துவிட்டான். வாசலில் உட்கார்ந்து ரொட்டி பாக்கேட்டுகளை துடைக்க ஆரம்பித்தான். தாத்தா அவனைச் சரியாகத்தான் திட்டியிருக்கிறார். இப்படி வழி மறைத்து வைத்தால் கடைக்குள் எப்படி ஆட்கள் வருவார்கள் போவார்கள்.

கல்லாபெட்டிக்கு அருகில் நிற்கிறேன்.. கடைக்காரத் தாத்தா கொஞ்ச நேரம் என்னை ஏறவும் இறங்கவும் பார்த்தார். தனது கைலியை சரி செய்தவாரே எழுந்து நின்றுக்கொண்டார். ரொம்பவும் கஷ்டப்பட்டவராகத்தான் எழுந்து நின்றார். மூச்சும் வாங்கியது.

“வா பையா என்ன வாங்க வந்த..… ”

“தாத்தா, கோதுமாவு வேணும் ஒரு கிலோவோட…”

“ஓ…. ஆமா தம்பி என்ன புதுசா இருக்கியே… யார் வீட்டுக்கு வந்திருக்க…?”

“எங்க மாமா இங்கதான் வீடு வாங்கியிருக்காரு…. அதான் லீவுக்கு வந்திருக்கேன்.. எங்க வீடு ‘சுங்கை லாலாங்கல’ இருக்கு….”

“அப்படியா பையா நல்லது… நல்லது… உன்னோட பேரு என்னா…”

“என் பேரு மணி”

“ஓ.. அதான் நீயும் மணி மாதிரியே இருக்க…”.

                அருகில் வந்தார். என் தலையில் கைவைத்து முடியை கோதிவிட்டார். இயல்பாகவே யாரும் என் தலைமுடியை கலைத்தால் எனக்கு கோவம் வந்துவிடும் . தாத்தா என் தலை முடியை கலைத்து நான் அவர் மீது கோவப்படுவதற்கு முன்பாகவே, என்னை அப்படியே முன்னுக்கு தள்ளியவர் என் பின்னால் சாய்ந்து என்னை அப்படியே இறுக்கினார்.

                அந்த வயதிலும் நான் உயரமாகத்தான் இருந்தேன். தாத்தாவின் இடுப்பும் எனது இடுப்பும் ஒரே அளவில்தான் இருந்தது. என்னை இறுக்கியவர் அப்படியே என் கண்ணங்களையும் காதுகளையும் கைகளால் தடவினார். அதுவரையில் நான் கேட்டிடாத விதமாய் அவரிடம் இருந்து ஏதோ முனகல்   சத்தம் வந்தது. காதில், கோழி இறகை வைத்து குடைகிறபோது ஏற்படும் சுகம்  போல இருந்து சட்டென  அசூயையாய் அது மாறியது. அப்படி குடையும் போது  அதன் நிறைவில் கண்களை மூடி ஒரு வகையான சுகத்தினை நாம் பெறலாம். தனியாய் இருந்து இப்படி குடையும் போது நம்மை அறியாமல் நாமே ஒரு வித சத்தம் கொடுப்போம். அதே சத்தம்தான் அந்த தாத்தாவிடம் இருந்து வந்திருக்க வேண்டும். ஆனால் தாத்தா இப்போது தனியாய் இல்லையே.

என் பின்னால் என்னமோ கடினமாய் ஒன்று அழுத்துவதை உணர்ந்தேன். எனக்கு சிரிப்பு வந்தது. காரணம் தெரியவில்லை. தாத்தா என்னை கிச்சுகிச்சு மூட்டிக்கொண்டிந்தார். அவரது கைகள் என்னை இறுக்கமாய் பிடித்திருந்தபடியே என் தோள்பட்டையை அழுத்தினார். அவரது தாடியும் மீசையும் என் கழுத்தில் மிக மோசமாக உரசிக்கொண்டிருந்தது.

“தாத்தா… தாத்தா…”

என கூப்பிட்டெனா கெஞ்சினேனா என தெரியவில்லை. அந்த தாத்தா மிக மும்முரமாக என் பின் புறத்தை அழுத்தி தேய்த்துக் கொண்டே இருந்தார். அவரது முனகல் வெவ்வேறான ஒலிகளால் முழுமையடைந்து கொண்டிருந்தது.

சட்டென வாசலில் இருந்து சத்தம் கேட்டது. தாத்தா ஸ்தம்பித்தார்.

“வாங்கண்ணே… இருங்க இதை நகர்த்திடறேன்” பையனின் குரல் கேட்டது. தாத்தா என்னை விடுவித்தார். அவரின் நாற்காலிக்கு போய் உட்கார்த்து மேஜைக்குள் தன் கால்களை மறைத்துக் கொண்டார். அமர்ந்தவாக்கில் கைலியை மீண்டும் சரிபடுத்திக்கொண்டார். முச்சு வாங்க ஆரம்பித்தது.

“டேய் பையா… இந்த தம்பிக்கு என்னமோ வேணுமா…? எடுத்துக் கொடு டா.. ரொட்டி பையை அப்பறமா துடைக்கலாம்… ஒரு வேளைக்கு லாய்க்கு இல்ல…. உருப்படியா ஒன்னும் செய்யத்தெரியல….”

கடை வாசலில் இருந்து ரொட்டி வக்குலை பையன் நகர்த்தி பழைய இடத்திலேயே வைத்தான். உள்ளே ஒருவர் நுழைத்து சிகிரெட்டுகளை ஒவ்வொன்றாக விலையை கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு பின்னாலேயே நுழைந்த அந்த பையன் , என்னிடம்;

“என்ன வேணும்..”

“கோதுமாவு”

“இங்க இருக்கு…”

“ம்”

                அந்த பையன் முன் போக, அவனது பின்னால் நானும் போனேன். வழக்கம் போல என்னால்  வேகமாக நடக்க முடியவில்லை; கால்களை வேகமாக எடுத்து வைப்பதில் சிரமமாக இருந்தது. இரு கால்களையும் அகலப்படுத்தியே என்னால் நடக்க முடிந்தது.

                 கோதுமாவை அந்த பையன் என்னிடம் கொடுத்தான். விலையை சொன்னவன் தொடர்ந்து;

“வலிக்குதா…?”

“ம்…?”

                  எனக்கு அந்த பையன் கேட்டது புரியவில்லை. ஏன் வலிக்க வேண்டும். யாரும் என்னை அடிக்கவில்லையே. தாத்தாவுக்கு என்னைப் பார்த்ததும் அவரது பேரனை போல இருந்ததால் கொஞ்சினார் அவ்வளவுதான். அதற்கு ஏன் வலிக்க வேண்டும். கால்களின் வழியே தொடைகளுக்கு மத்தியில் வலிப்பதற்கான காரணம் நிச்சயம் தாத்தா கொஞ்சியதாக இருந்திருக்காது. நேற்று பள்ளிக்கூடத்தில் விளையாடிய பந்துதான் காரணமாக இருக்க வேண்டும்.

“இல்ல வலிக்குதான்னு கேட்டேன்…?”

மீண்டும்  அந்த பையன். எதையோ என்னிடம் இருந்து எதிர்ப்பார்த்தான்.

“என்ன வலிக்குது…நேத்து பந்து விளையாடினதை பார்த்தியா..”

“அதை சொல்லல.. உங்களுக்கு பரவால… எனக்கு வாந்தியே வந்திருக்கு…”

“ஏன்…”

“நீங்க வர்ரதுக்கு முன்னதான் , தாத்தாவோட மேஜை கீழ நானு….” முடிப்பதற்குள்;

“டேய் பையா என்னடா கதை அங்க.. சாமானை எடுத்து கொடுக்க இவ்வளோ நேரமா…”

“கோதுமாவு, அலமாரி மேல இருக்குது அதான் ஏறி எடுத்தேன்… கொடுத்துட்டேன்…” என கத்தினான்.

                கோதுமாவுக்கான பணத்தைக் கொடுத்த பிறகு, அந்தத் தாத்தா என் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தமிட்டு கையில் இரண்டு மிட்டாய்களைக் கொடுத்தார். திரும்பி நான் நடக்கும் போது என் பின்னால் தட்டிவிட்டு சிரித்தார். கையில் கோதுமாவுடனும், இரண்டு மிட்டாய்களுடனும், கடைக்கு வெளியில் வந்து நடந்தேன். யாரோ கூப்பிடுவது போல இருந்தது. திரும்பி பார்த்தேன். அந்த பையன்தான் கடைக்கு வெளியில் நின்றுக்கொண்டிருந்தான். பார்த்தேன். பார்த்தான். தன் கையைக் காட்டினான். அவன் கையில் இரண்டுக்கும் அதிகமான மிட்டாய்கள் இருந்தன. தாத்தாவுக்கு ஏன் என் மீது பாசம் வந்திருக்க வேண்டும் என்ற குழப்பம் வீட்டிற்கு சென்றதும் பயமாக மாறியது.  இதயம் வேகமாக துடித்தது. நேற்று விளையாடிய பந்து விளையாட்டில் கூட இப்படி துடிக்காத இதயம் இப்போது துடிக்கிறது.

   அப்பாவிடமோ அம்மாவிடமோ சொல்லலாமா வேண்டாமா என்ற குழப்பம் என்   உடலில் நடுக்கத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே தேர்வில் தோல்வி காரணமாக யாரும் சரியாக பேசுவதில்லை.  இது வேறயா..? மூத்திரம் வேறு முட்டிகொண்டு நின்றது.  கழிவறைக்கு செல்வதற்கு முன் என் காதுகளை நானே தடவிக்கொண்டேன். சுகமாக இருந்தது. இது புறாக்களில் இறகில் கிடைக்காத ஒன்று என்று அப்போது புரிந்தது.  பிறகு திரும்ப மாமா வீட்டிற்கு போவதற்கான வாய்ப்பு இல்லாமலேயே போனது.

                படிப்பு விளையாட்டு வேலை என ஒவ்வொன்றாக மிக வேகமாகவே போய்க்கொண்டிருந்தன. அந்தத் தாத்தாவும் அவரின் அணைப்பும் அவ்வபோது கனவில் வந்துவந்துபோகும். அப்போதெல்லாம் என் உடல் முழுக்க விறைப்பாகவே உணர்ந்தேன். அந்த விறைப்பில் ஒரு சுகம் இருந்தது. தாத்தாவும் நானும் கடையில் இல்லாமல் கட்டிலில் இருந்தோம். தாத்தா கைலியை அவிழ்த்து தலைக்கு மேலே வீசி எறிகிறார். அந்த கைலி பறந்து வந்து என்னை சுற்றிலும் மூடி இறுக்குகிறது. கைலியால் மூடப்பட்ட;இறுக்கப்பட்ட மம்மி போல நான் கீழே படுத்துக் கிடக்கிறேன். தாத்தாவை காணவில்லை. நான் பழகியிருந்த பல பெண்கள்  ஒவ்வொருவராக வந்துக்கொண்டிருந்தார்கள்.

என்னைச் சுற்றி சிரித்தபடியே அவர்கள் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் முகபாவனைகள் ஒவ்வொரு விதமாக இருக்கின்றன. ஒரு பெண் சிரிக்கிறாள். இன்னொரு பெண் முறைக்கிறாள். ஒருத்தி கண்களைச் சுருக்கி உதட்டை சுழித்துப் பார்க்கிறாள். இன்னொருத்தி அவளது கைகளைக் கொண்டே அவள் உடலைத் தடவிக்கொடுத்தபடி என்னைப் பார்க்கிறாள். மெல்ல மெல்ல சுற்றியவர்கள் கொஞ்ச நேரத்தில் ரொம்பவும் வேகமாக சுற்ற ஆரம்பித்தார்கள். உருவங்கள் மறைந்து சிவப்பு நிற ஒளிக்கோடுகளாக அவர்கள் மாறிப்போனார்கள். எனக்கு தலை சுற்றத்தொடங்கியது. என்னால் என் கண்களை மூட முடியவில்லை. யாரோ ஒருவரின் கைகள் என் கண்களை மூடவிடாமல் பிடித்துக்கொண்டன.

அந்தக் கைகள் சுருக்கங்கள் நிறைந்து நகங்களில் அழுக்கு படிந்திருந்தன. முரண்டு பிடிக்கிறேன். முடியவில்லை. போதாக்குறைக்கு ஈரம் படிந்த ஏதோவொன்று என் காதுகளை நனைத்துக்கொண்டிருந்தன.

சிவப்பு ஒளிக்கோடுகளால் சுற்றியவர்கள் சட்டென ஸ்தம்பித்தார்கள். கோடுகளில் இருந்து மீண்டும் மனிதர்களானார்கள். எல்லோரும் என்னையே மூர்க்கமாகப் பார்க்கலானார்கள். அந்தக் கண்களுக்கு கொஞ்சமும் பொருந்தாதபடிக்கு புன்னகையை அந்த உதடுகள் காட்டுகின்றன.  அந்தக் கண்கள் காட்டிய மூர்க்கம் என் மீது அனல் காற்றாய் பாய்ந்தது. அந்தச் சூட்டை என்னால் தாங்கிகொள்ள முடியவில்லை.  என் உடல் அனல்தாங்காது சதைகள் உருகி கிழிகின்றன. கருந்சதைகளின் உள்ளே இருந்த செந்நிற மாமிச தூண்டுகளும் கருகின. அந்தத் துர்நாற்றத்தை முகர்ந்த மறுநொடியில்தான் தெரிந்தது என் மூக்கு முழுதும் உருகி வழிந்து இப்போது பெரிய துவாரங்கள் மட்டும் இருக்கின்றன. சூடு தாங்காது நான் முழுக்கவும்  உருக ஆரம்பிக்கிறேன். தலை வழிந்து ஒரு பக்கமும் கால்கள் வழிந்து ஒரு பக்கமும் வண்ண வண்ண நட்சத்திரங்களாக ஊர்ந்து சென்றன. கடைசியாய் ஆண்குறி மட்டும் தப்பித்தது.

ஏதோ ஒரு இராட்ச்சச கரங்கள், ஆண்குறியை அப்படியே துப்பாக்கி போல தூக்கிப்பிடிக்கிறது. அதுவரை சுருங்கி சூம்பியிருந்த  தோளும் சதையும் நடம்புகளும் புடைக்கத்தொடங்கின. உள்ளுக்குள் ஏதோ ஒன்று ஆக்ரோஷமாக சுழன்றது.

இராட்ச்சச துப்பாக்கி சுடுவதற்கு தயாரானது. சுற்றியிருந்த பெண்கள் மீது குண்டுகளைப் பாய்ச்சுகிறேன். எல்லோரும் அலறியபடி ஆளுக்கொரு பக்கமாய் ஓடுகின்றார்கள். யாரையும் விட்டு வைக்க எனக்கு மனமில்லை.

‘என்ன உனக்கு நிக்காதா….?’ என கேட்ட எந்த பெண்ணையும் இனி நான் விட விரும்பவில்லை. என்னால் எந்த அவமானத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. பணம் கொடுத்தவனுக்கு நின்றால் என்ன நிற்காவிட்டால் இவர்களுக்கு என்ன. பணத்திற்கு கொஞ்சம்கூட மரியாதைக் கொடுக்கத்தெரியாதவர்கள்.

நீதான் வேண்டுமென்று சொல்லி வந்தவளும் முழு இரவை என்னுடன் இரசிக்க முடியாமல் ஓடியே விட்டாள்.

இதோ கேளுங்கள்!!  எதை நீங்கள் ஏளனம் செய்தீர்களோ அதைக்கொண்டே உங்களைக் கொல்வதுதான் எனக்கு திருப்தி. அதோ அங்கொருத்தி ஓடுகின்றாளே அவள்தான் அவளேதான் அதனை முதன் முதலில் சொல்லி என்னைக் கூனிக்குறுக வைத்தவள். அவளைத்தான் முதலில் சுடவேண்டும். அன்று சிரித்த அவளின் சிரிப்பை என் வாழ்நாள் முழுக்க என்னால் மறக்கவே முடியாது.

அந்தச் சிரிப்பு தொற்றுநோய் போல என்னை சுற்று நடமாடும் எல்லா பெண்கள் முகத்திலும் தொற்றிக்கொண்டுவிட்டது. ஏதோ ஒரு கணத்தில் அந்தத் தொற்று என்னை நோக்கி சிரித்துவிடுகிறது. நானும் நிலைகுலைந்துவிடுகிறேன். எவ்வளவு தூரம்தான் நான் ஓடி ஒளியமுடியும். இனி என்னால் ஓட முடியாது. நீங்கள்தான் ஓடவேண்டும். ஓடுங்கள் ஓடுங்கள்.

                அதோ… அதோ… அதில் ஒருத்தியின் பெயர் மர்லின். சிறுவயதில் எனக்கு தோழியாய் சில வாரங்கள் வாய்த்தவள். வகுப்பிலேயே அவள்தான் சினிமாவில் வரும் குழந்தைகள் போல இருந்தாள். ஒரு மாத காலம்தான் அவள் எங்கள் வகுப்பில் படித்தாள். பிறகு வேறு பள்ளிக்கு மாற்றலாகிவிட்டாள். அதனால்தான் என்னவோ அவளை அந்தத் தொற்று அறிந்திருக்கவில்லை.

கனவில் அவள் எனக்கு அத்தனை அருகில் இருந்தாள். அவளில் உடல் மங்கிய மாதிரி தோன்றியது. ஆனாலும் அந்த சினிமா குழந்தைக்கான முகத்துடன் தான் இருந்தாள். இதுவரை  நான் சந்தித்தப் பெண்கள், சினிமா நடிகைகள் என ஒவ்வொரு இரவும் ஒவ்வொருவர் என் கனவில் வந்துப்போனார்கள். தாத்தாவின் கைலி என்னை இறுக்கமாக பிடித்திருந்ததால் என்னால்; வந்துப்போகும் எந்த பெண்ணையும் தொட்டுப்பார்க்க முடியவில்லை. ஆனால் சுட்டுக்கொல்ல முடிந்தது.

                இப்போது நான் வளர்ந்துவிட்டேன். என்னிடம் எழுந்த கேள்விகளுக்கு விடைகாண்பதே  என் லட்சியங்களில் ஒன்றானது என புரிந்துக் கொண்டேன். ஒவ்வொரு முடிச்சுகள் அவிழ்ப்பது அத்தனை சுவாரஸ்யம் கொண்டதாக இருந்தது. அவிழ்த்த முடிச்சுகளையே மீண்டும் மீண்டும் அவிழ்ப்பது அதிசுவாரஸ்யமானது. ஆனால் அவிழ்க்கமுடியாத முடிச்சொன்று ஆண்குறியில் சிக்கி கொண்டதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

                என்னைப்போலவே மனதில் பல கேள்விகளோடு அலைபவர்களை எளிதில் கண்டுகொள்ள என்னால் முடிந்தது. அவர்களின் பார்வையில் அவர்களின் பேச்சில் அவர்களின் நடையில் உடல் அசைவுகளில் இருந்தே அவர்களின் எதிர்ப்பார்ப்பைக் கண்டுக்கொண்டு எனது எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்துக் கொள்வேன். இந்தத் தொற்றுகளில் இருந்து தப்பிப்பதற்கான ஒரே வழி அதுதான்.

   ஆண்டுகள் பல கடந்து மீண்டும் ஒரு முறை அந்த கடைக்கு செல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இப்போது அந்த தாத்தாவின் நாற்காலியில் வேறொரு ஆள் இருந்தார்.   தாத்தாவின்   மகன் போலவே இருந்தார்.  அதே முகம். அதே முடி. அதே தடித்த மூக்கு. முன்பு மேஜைக்கு அடியில் இருந்து பையன்தான் இருக்கவில்லை.

                நான் வேண்டியதை கேட்டதும், அவர் யாரையோ கூப்பிட்டு மலாய் மொழியில் பேசினார். வெளி நாட்டு பெண் ஒருத்தி ஓடிவந்தாள். நான் கேட்டதை , அவரிடம் கொடுத்துவிட்டு சென்றாள்.  அவள் என்னை பார்த்து சிரித்ததும் அவளது கறைபடிந்த பற்கள் என்னை கிலியடைய செய்தன.   அதிக மிட்டாய்கள் கொடுத்திருக்கிறார்கள்  என என் உடல் ஒரு கணம் சிலிர்த்தது.

  இப்போதெல்லாம்  தாத்தாவிற்கு பதில் நான் தான் கைலியை கழற்றி என் தலையை சுற்றி வீசுகிறேன்; வேறொருவனின் கனவில்…

தயாஜி.

மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னால் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி  அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். முழு நேர எழுத்தாளரான இவர் புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை என்னும் இணைய புத்த அங்காடியையும்  வெள்ளைரோஜா பதிப்பகம் என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார்.

மற்ற பதிவுகள்

One thought on “மிட்டாய்க்காரர்களின் கனவும் கழற்றிவீசும் கைலிகளும்

  1. சிறுவர்கள் மீது திணிக்கப்படும் பாலியல் வன்மத்தையும் அதன் நெடியத் தாக்கத்தையும் இவ்வளவு நாசுக்காகச் சொல்லிவிட முடியாது. பாலியல் அடையாளத்தை உணரும் முன்னே, வலுக்கட்டாயமாக நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள், பாலியல் திரிபுகளைப் பின்னாளில் உருவாக்கி, தன்பால் ஈர்ப்பிற்கு அடிகோலுகிறது. இந்த அபத்தமான வக்கிரமான சுழற்சி நிறுத்தப்பட வேண்டும். பேசாப் பொருளைச் பேசுவதற்குத் திராணி வேண்டும். வாழ்த்துகள் தயா ஜி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *